tha pandian3இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சிறுநீரகப் பாதிப்பால் சென்னை இராசீவ்காந்தி பொது மருத்துவமைனையில் மருத்துவம் பெற்று வந்த நிலையில் மருத்துவம் பலனின்றி நம்மைப் பிரிந்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி சிற்றூரில் தாவீது (டேவிட்) - நவமணி இணையருக்கு நான்காவது மகனாக 18.05.1932-இல் பிறந்தவர் தா.பாண்டியன்.

உசிலம்பட்டியில் பள்ளிப்படிப்பை முடித்து, காரைக்குடி அழகப்பா கல்லூரியில் உயர்கல்வி பயின்று, அதே கல்லூரியிலேயே ஆங்கிலத்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1953-இல், கல்லூரி மாணவராக இருந்த போதே பொதுவுடைமைக் கட்சி உறுப்பினரானார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளரான அவர், மக்கள் இயக்கத்திற்குக் கலை இலக்கியப் பங்களிப்பின் தேவையை நன்கு உணர்ந்தவர். கலை இலக்கியப் பெருமன்றத்தில் காத்திரமாகப் பணியாற்றி வந்தபோது, பல்வேறு அரசு நிருவாக நெருக்கடிகளுக்கு ஆளானதால், பேராசிரியப் பணியை விடுத்து, சென்னை சென்றார்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியரானார். ஜனசக்தி ஏட்டிலும் எழுதத் தொடங்கினார். இதே காலத்தில் சட்டமும் பயின்றார். ஜனசக்தி இதழின் ஆசிரியராக 16 ஆண்டுக் காலம் இருந்து பல அரிய கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார்.

1960-கள் வரை, பொதுவுடைமைக் கட்சியினர், தி.க-வைத் ‘திராவிடர் கலகம்’ என்று இழிவுபடுத்தியும், ‘வர்க்கப்பிளவு ஏற்படுத்துவோர்’ எனக் குற்றம்சாட்டியும் வந்த காலத்திலேயே தந்தை பெரியாரைப் புகழ்ந்தவர். ‘தந்தை பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி’ என்ற தலைப்பில் 18.03.1979-இல்,ஈரோட்டில், பெரியார் நூற்றாண்டு விழாவில் தா.பா பேசிய பேச்சை விரிவாக்கம் செய்து நூலாக வெளி யிட்டுள்ளார்.

ஒரு நேர்காணலில், “பிறப்பால் இழிவுபடுத்தப்பட்டு, சாதியச் சாக்கடையில் ஊறித்திளைத்த இந்தத் தமிழினத்தைத் தம் கைத்தடியால் அடியோதண்டமாக அடித்துத் துவைத்து மான உணர்ச்சிபெற வைத்தவர் பெரியார். நூற்றுக் கணக்கான ஏதிலிக் குழந்தைகளைத் தம் பராமரிப்பில் ‘தந்தை’ என்று தன் பெயரையே கொடுத்துப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்கவைத்த அவரைத் ‘தந்தை பெரியார்’ என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது? என்று சங்கிகளின் செவிப்பறை கிழிய ஓங்கி அறைந்தவர். இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரான தா.பா.-தான், 21.01.1991 அன்று திருப்பெரும்புதூரில் இராசீவ் காந்தி பேச வேண்டிய கூட்டத்திற்கும் மொழிபெயர்ப்பாளராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். அக் குண்டுவெடிப்பில் தா.பா-வும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தார்.

அன்று முதல் கடுமையான புலிகள் எதிர்ப்பாளராக இருந்தவர், 2009-இல் இந்திய அரசும் சிங்களப் பேரினவாதமும் கைகோர்த்து, தமிழர்களை இலக்கக்கணக்கில் கொன்றொழித்த ஈழப் போரின் கடைசி நாட்களில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அதுமுதல் ஈழ விடுதலைக்கும், ஏழு தமிழர் விடுதலைக்கும் இறுதிவரை குரல்கொடுத்தார்.

2005 முதல் மூன்று முறை தொடர்ச்சியாக இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலராக இருந்தார். அக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும் இருந்து செயல்பட்டார்.

மார்க்சியத்தில் தேர்ந்த ஞானம் உள்ளவர். அதன் அண்மைக்காலப் பரிமாணங்களைக் கூர்ந்து பயின்று, தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருந்தவர். திருக்குறளில் உள்ள பொதுமைச் சிந்தனைகளை எடுத்தியம்பி வந்தவர்.

பொதுவுடைமைச் சிந்தனையின் எதிர்காலம் குறித்துத் திறந்த மனத்துடன் விவாதித்து, மார்க்சியமும் பெரியாரியமும் இணைந்து செயலாற்ற வேண்டிய புள்ளிகளை அடையாளம் கண்டிருந்தவர்.

சாதியக் கொடுமை, தேசிய இனச்சிக்கல் இவற்றைப் பேசாமல், தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்திற்கு வேலையும் இல்லை; வளர்ச்சியும் இல்லை என்பதை நன்கு உணர்ந்து உரைத்தவர். இடஒதுக்கீட்டின் தேவையைப் பொதுவுடைமைக் கட்சியினர்க்கும் உணர்த்தியவர். அனைத்துக் கட்சித் தோழர்ளோடும் அன்பொழுகப் பேசி, அனைவராலும் கொண்டாடப்பட்ட பேரறிவாளர்.

சில ஆண்டுகளாகவே சிறுநீரகப் பாதிப்பால் தொடர் மருத்துவம் பார்த்துவந்த, தா.பா, 2018இல், சென்னை இராசீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனையில் உள்ளிருந்து மருத்துவம் பெற்றுவந்தபோது, தோழர் வே.ஆனைமுத்து தம் 93 வயதிலும் நேரில் மருத்துவமனைக்குச் சென்று தோழர் தா.பா-வைக் கண்டு நலம் உசாவியபோது, இருவருக்குமே அச்சந்திப்பு நெகிழ்ச்சியாக அமைந்தது.

பன்முக ஆளுமை மிக்கவராக இம்மண்ணை வலம்வந்த தா.பா, மீண்டும் உடல் நலிவுற்று, 26.02.2021 வெள்ளி காலை 10 மணிக்கு நம்மைப் பிரிந்தார் என்பது தமிழர்க்கும், இக்குமுகத்திலுள்ள மாந்தநேயப் பொதுமைச் சிந்தனையாளர் எல்லோருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. தம் இறுதிமூச்சை நிறுத்திக்கொள்கிற சில நொடிகளுக்கு முன்புகூட “என் சிவப்புத் துண்டை என் தோளில் போட்டு விடுங்கள்” என்று சொல்லி, செங்களத்தில் ஆழ உழுத செங்களப் பேருழவர் தோழர் தா.பா. -விற்குச் செவ்வணக்கம் செலுத்துகிறோம்.

வெள்ளை மலைப்பட்டி செங்களத்தில் விதைக்கப்பட்டுள்ள தோழர் தா.பா புகழ் ஓங்குக!

- முனைவர் முத்தமிழ்