கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் 7.7.1859இல் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் என்று பெயரிட்டனர்.

தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப் பெயரையும் சேர்த்து எழுதி விட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.

கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும், சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி ஓடியது. அங்கு இதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறைதாண்டவமாடியது. அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர்.

இரட்டைமலை சீனிவாசன் 1939இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி “திவான் பகதூர் இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30 பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் அவருடைய இளமைக்காலம் குறித்தும் அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.

rettaimalai seenivasanகோயம்புத்தூரில் இவர் கல்வி பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில் 10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே பார்ப்பன மாணவர்கள் எனத் தன் வாழ்க்கைச் சுருக்கத்தில் அவரே எழுதி உள்ளார். வறுமை காரணமாகப் பள்ளிக் கல்வியோடு இவர் படிப்பை முடித்துக்கொண்டார். தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார்.

1887ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும், 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர்.

நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் கம்பெனியில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890இல் சென்னைக்கு வந்தார்.

1891இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 - 1900 வரை பறையன் என்ற திங்கள் இதழை நடத்தினார். பறையர் சாதி மக்களை ஒன்று திரட்டவும், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்விதழ் பெரிதும் பயன்பட்டது.

இதே காலக்கட்டத்தில்தான் 1.12.1891இல் பண்டித அயோத்தி தாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார்.1892இல் அதை ஆதி திராவிட மகாசனசபை எனப் பெயர் மாற்றம் செய்து பதிவும் செய்தார்.

அயோத்திதாசரின் முதல் மனைவி இறந்துவிட்டபிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார். ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காத அக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்புவரை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் முதன்முதலாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்தார். 1895 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள் சென்னை விக்டோரியா மண்டபத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை திரட்டி மாபெரும் கூட்டத்தை நடத்தினார். உயர் அலுவலர்கள் மற்றும் உயர்சாதியினரின் எதிர்ப்புகளை மீறிக் கூட்டத்தை நடத்தினார்.

இலண்டன் நகரில் நடைபெற்று வந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளை இந்தியாவிலும் நடத்த வேண்டும் என்ற காங்கிரசாரின் கோரிக்கையை எதிர்த்தார். அப்படி நடத்தினால் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தான் அரசின் உயர்பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் எங்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை, நடத்துவதில்லை மயிலாப்பூரில் பார்ப்பன நீதிபதி குடியிருந்த ஒரு தெருவின் முனையில் “பறையர்கள் இங்கு பிரவேசிக்கக் கூடாது. மீறினால் தண்டிக்கப்படுவார்கள்” என்று எச்சரிக்கை பலகை எழுதி வைத்திருந்ததை எடுத்துக்காட்டினார். மேலும் வெளிமாவட்டங்களில் மேல் சாதியினரின் பிள்ளைகள் படித்து வரும் கிராமப் பாடசாலைகளில் பறையரின் பிள்ளைகள் படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. உயர்ந்த சாதியார் குடியிருந்து வரும் கிராமங்களின் வீதிகளில் கிராமக் கால்நடைகள் நடமாடப் பாதை வழி இருந்தும் பறையர் நடமாடப் பாதை வழி கிடையாது. பிற சாதியினர் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் நீர் நிலைகளில் இவர்கள் தண்ணீர் எடுக்க அனுமதி இல்லை. கிராமக் குடிகள் இவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றனர். பச்சையப்பன் கல்லுரியில் ஒடுக்கபட்ட மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்பதையும் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார். சிவில் சர்வீஸ் தேர்வு இங்கு நடைபெற்றால், பார்ப்பனர்கள் அதிகாரப்பதிவுகளுக்கு வந்து விட்டால், பறையர்களுக்கு மேலும் தொல்லை கொடுப்பார்கள் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

1893 ஆம் ஆண்டு திசம்பர் 20 திசம்பர் திங்கள் 23ஆம் நாள் சென்னை வெஸ்லியன் பிஸின் கல்லூரியில் பறையர் மகாசன சபை சார்பில் ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டினார் 112 அடி உயரம் நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப்பங்களைப் பெற்று ஜெனரல் சார்ஜ் ஜியோ செஸ் மீ என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் இலண்டன் நாடாளுமன்றத்தில் முறையிட்டார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கோரிக்கையைத் திரும்பப் பெற்றனர். ஆங்கிலேயர்களே உயர்பதவிகளில் இருக்க வேண்டும், அப்போதுதான் எங்களுக்கு நீதி கிடைக்கும், சமத்துவம் கிடைக்கும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

1895 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் ஆறாம் நாள் எல்ஜின் பிரபு கவர்னர் ஜெனரல் சென்னைக்கு வந்தபோது சென்னை அண்ணா சாலையில் அப்போது மலைச்சாலை (மவுண்ட் ரோடு) குறுக்கே பறையர் மகாசபை தங்களை இனிதே வரவேற்கிறது என்ற மிகப்பெரிய பந்தல் அமைத்து எல்ஜின் பிரபு பெருமாட்டிக்கு வரவேற்புப் பதாகையை அமைத்திருந்தார்.

பறையர் என்றப் பெயரில் இதழ் நடத்தியதால், அவருடைய இதழில் வேறு ஒருவர் எழுதிய செய்திக்காகச் சிலர் அவர் மீது சென்னை உயர் நீதி மன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடுத்தனர். நீதி மன்றத்தில் தண்டத் தொகையைச் செலுத்தி விட்டு மனம் வருந்தினார். அதன் பிறகு வெளி நாடு செல்லத் திட்டமிட்டார்.

இரட்டைமலை சீனிவாசன் 1900ஆம் ஆண்டில் வேலை தேடித் தென் ஆப்பிரிக்கா சென்றார், அங்கு காந்தியடிகளுடன் பழக்கம் ஏற்பட்டுக் காந்திக்குத் தமிழையும், திருக்குறளையும் கற்றுக் கொடுத்தார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழி பெயர்த்துக் கூறும் (Interpreter) வேலை பார்த்தார்.

இவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனையொட்டி 1914 இல் அயோத்திதாசர் மறைவுக்குப்பின் செயல்பாடுகள் இல்லாமல் இருந்த ஆதித் திராவிட மகாசபை எம்.சி.ராசா போன்றவர்களால் 1917இல் புதுப்பிக்கப்பட்டது.

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டத்தின்படி 1920இல் நடைபெற்ற தேர்தலின்போது நீதிக்கட்சி போட்டியிட்டு வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. சென்னை மாகாணச் சட்டசபைக்குத் தாழ்த்தப்பட்டோரில் இருந்து 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். (1936 வரை ஓர் அவை மட்டுமே இருந்தது. 1935இல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டன.)

இரட்டை மலை சீனிவாசன் 1921இல்தான் தென்னாப்பிரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். அடுத்த இரண்டாவது பொதுத் தேர்தலின்போது, நீதிக்கட்சி ஆட்சி வெற்றி பெற்றது. 19.11.1923இல் இரட்டைமலை சீனிவாசன் எல்.சி.குருசாமி உள்ளிட்ட பத்துப் பேர் (தாழ்த்தப்பட்டோர்) சட்டசபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

1919 நிறைவேற்றப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டத்தின்படி இரட்டை ஆட்சி முறையில் 1920 முதல் 1936 வரை தாழ்த்தப்பட்டோர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவாய்ப்பு அளிக்கப்படவில்லை. எல்லா நிலைகளிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர். அண்ணல் அம்பேத்கர் அவர்களும் 1927 பம்பாய் மாகணத்தில் சட்ட மன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். 1935இல் இயற்றப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின்படி 1937முதல் நடைபெற்ற தேர்தல்களில் பட்டியல் வகுப்பினர் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.

22.8.1924இல் சட்டசபையில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத் தீர்மானம் 24.2.1925 கெசட்டில் (G.O. No. 2660 Saint Fort Gazetteer) வெளியிடப்பட்டது.

(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும், யாதொரு பட்டணம் அல்லது கிராமத்திலுள்ள எந்தப் பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லை என்பதும். (ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும். எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய்க்கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம்மட்டிலும், தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், அரசின் கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத் துறைகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது.” - சி.பி. காட்டோஸ்,அரசுச் செயலாளர்(சட்டசபை விவாதக் குறிப்புகள், தொகுதி 19. பக்கம் 822-830)

மேலும் இது விரிவு படுத்தப்பட்டு, வீரய்யன் கொண்டுவந்த தீர்மானத்தின்படி, ஆதித் திராவிடர்களைப் பொது இடங்களில், (பொதுக்கிணறு, பொதுச் சாலை, பொது அங்காடி,) தடுப்பவர்களுக்கு ரூ. 100 அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டது. அந்த ஆணை 24.12.1925 அரசிதழிலும் வெளியிடப்பட்டது. தண்டோரா மூலம் மாகாணம் முழுவதும் அறிவிக்கப்பட்டது.

இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல்1939இல் சட்டசபைக் கலைக்கப்படும்வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதித்திராவிட மக்களின் சிவில் உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.

20.1.1922இல் எம்.சி. இராசா சட்ட சபையில் கொண்டுவந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதித்திராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசாணை எண் 817, 25.3.1922இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதித்திராவிடர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.8.1924இல் சட்டசபையில் முறை­யிட்டார். (சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி 20 பக்கம் 280) உடனடியாக. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்அமைச்சர் பனகல் அரசர் பதிலளித்தார்.-

பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் சேரிகளுக்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் தாழ்த்தப்பட்டவர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்யவேண்டும் எனச் சட்ட சபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல்.சி.குருசாமியும் முன் வைத்தார்.(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி 20, பகுதி 2, பக்கம் 896).

இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்தான் நிறைவேறியது.

6.2.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், தெலுங்கு மொழி தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதிஆந்திரர் என்று அழைக்கும்போது, தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.

(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி 22, பகுதி 1, பக்கம் 351). ஆதித் திராவிடர்களின் மாகாண மாநாடு ஆதித் திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 29.1.1928இல் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது.இரட்டை மலை சீனிவாசன் அவர்களைத் தலைமை ஏற்கும்படி வி.ஜி.வசுதேவ பிள்ளை முன்மொழிந்து, வி. ஐ. முனிசாமி பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி.மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என்.சிவராஜ் சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதித் திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும்.

இம் மாநாட்டில் ஆதித் திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவர்க்கும் வாக்குரிமை அளிக்கப்படவேண்டும் என்றும், கல்வி, வேலை வாய்ப்புகளில் ஆதித் திராவிடர்களுக்கு உரிய பிரதிநி­தித்துவம் அளிக்கப்படவேண்டும். உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (குறிப்பு :1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. 1928இல்தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்குக் கதவு திறக்கப்பட்டது. மதுரை பிள்ளை வரவேற்புரையில் பச்சையப்பன் கல்விக்குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.)

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் உரையின்மீது உரையாற்றுவது வழக்கம்.அவரது முதல் பட்ஜெட் உரை 6.2.1925 அன்று தொடங்கியது.ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்துவார்.இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுவார்.எம்.சி.மதுரை பிள்ளை, சாமி சகஜானந்தம் ஆகிய இருவர் மட்டும் சட்ட சபையில் தமிழிலேயே பேசுவார்கள்.

இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கிய தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளைத் திறந்து வைத்திருந்தது.இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதைக் கண்டு மனம் வெதும்பினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாள்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.9.1929இல் சட்ட சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக் கொண்டது. (சட்டசபை விவாதக் குறிப்புகள், தொகுதி 50, பக்கம் 391-392)

1930-&32களில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் இவர், அண்ணல் அம்பேத்கருடன் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதி­நிதியாகச் சென்று கலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் இவருக்கு இருந்த நட்பைக் கொண்டு இலண்டனில் காந்தியுடன் இரண்டுமுறை நேரில் சந்தித்துப் பிரச்சனையைச் சுமூகமாக முடித்துவிட முயன்றார். ஆனால் பலன் இல்லை, அம்பேத்கருடன் இணைந்து காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். கடைசிவரையில் அண்ணல்அம்பேத்கருடனும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினருடனும் நட்புறவுடன் செயல்பட்டு வந்தார்.

இலண்டன் வட்ட மேசை மாநாட்டில் இரட்டை மலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்பக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். (வட்டமேசை மாநாட்டு கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, தொகுதி 3, பக்கம் 18. 19.)

இதே கோரிக்கையை வலியுறுத்தி அண்ணல் அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார். (வட்டமேசை மாநாட்டுக் கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, தொகுதி 3, பக்கம் 168-174) இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் தயாரித்துக் கொடுத்த ஆவணம், தாழ்த்தப்பட்ட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத் தருவதாக அமைந்திருந்தது.

டாக்டர் சுப்பராயன் 1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்ட சபையில் தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்றவேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசும்போது, பண்டைக் காலத்தில் இக்கோவில்களைத் தாழ்த்தப் பட்டவர்கள்தான் கட்டினார்கள் என்றார்.திருச்சி சாம்பவ சாம்பவன் கட்டிய கோவிலை இந்துக்கள் பிற்காலத்தில் ஜம்புகேசுவரர் என அழைத்தனர். தஞ்சாவூரில் சோழமன்னர் கட்டிய பிரகதீசுவரர் ஆலயம் என்பது விருவதை சாம்பவனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதியின்மீது கட்டப்பட்டது என்றும், ‘சோழ மதத்தில்’ குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் சான்று காட்டினார். அதுபோலவே திருவாரூரில் சோழ அரசரால் கட்டப்பட்ட கோவில் தாயக சாம்பவான் என்பவருடைய சமாதிமீது கட்டப்பட்டது. அக்கோயில் இன்று தியாகராசப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மராத்தியர்களும்,தென்னிந்தியாவிற்கு வந்த போது. சாம்பவர்களுடைய கோட்டைகளையும். கோவில்களையும் இடித்துவிட்டு அவ்விடங்களில் புதிய கோவில்களைக் கட்டினர். தஞ்சாவூரில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் திருவள்ளுவரின் சகோதரி மாரியம்மன் நினைவாகக் கட்டப்பட்டது என்று இரட்டைமலை சீனிவாசன் கூறினார். மேலும், இரட்டைமலை சீனிவாசன் பேசும்போது தாம் அக்கோவில்களைச் சாம்பவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளவில்லை என்றும், அக்கோயில்களில் அவர்கள் வழிபாடு செய்வதற்கு மட்டும் அரசாங்கத்தை வேண்டிக் கொள்வதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய ஏ.பி.பாத்ரோ தாழ்த்தப்பட்டவர்கள் ‘சுத்தி” குறைந்தவர்கள் என்றார். அதை மறுத்த இவர், சுத்தி குறைவாகக் கருதப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்துதான் திருவள்ளுவரும், அவ்வையும், மாரியம்மனும் தோன்றினர் என்றார்.அரசியல் முன்னேற்றமும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்போது சுத்தம் தானாகவே ஏற்படும் என்றும் அடித்துக் கூறினார்.

பலர் பேசிய பின்பு, இத்தீர்மானம் சட்ட சபையில் வாக் கெடுப்புக்கு விடப்பட்டது. 56 வாக்குகள் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19 பேர் நடுநிலையாகவும் இருந்தனர். எதிர்ப்பின்றி இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பார்ப்பனர்களின் முட்டுக்கட்டை காரணமாக கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளிக்காததால் இதைச் சட்டமாக்க முடியாமல் போய்விட்டது.

இரட்டைமலை சீனிவாசன் அவர்களை வட்டமேசை மாநாட்டிற்கு அழைத்துச் சென்று தம்மைப் புறக்கணித்து விட்டாரே என்ற கோபத்தில் இருந்த எம்.சி.இராசா, அண்ணல் அம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தின்போது இந்து மகாசபைத் தலைவருடன் செயல்பட்டுவந்தார். மூஞ்சேவுடன் சேர்ந்துகொண்டும், காந்திக்கு ஆதரவாகவும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு எதிராகவும் செயல் பட்டு வந்தார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1935இல் மதமாற்றம் பற்றி அறிவித்த போதுகூட இரட்டைமலை சீனிவாசன்.அம்பேத்கருடைய மனம் நோகாமல் மெதுவாக “நாம்தான் இந்து மதத்தில் இல்லையே(அவர்ணஸ்தர்); வருணம் அற்றவர்கள் ஆயிற்றே.நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்குத் தந்தி மூலமாகத் தன் கருத்தைத் தெரிவித்தார்.

அண்ணல் அம்பேத்கர் 1935இல் மத மாற்றம் பற்றி அறிவித்தபோது “நான் இந்துவாகப் பிறந்து விட்டேன். சாகும் போது ஓர் இந்துவாகச் சாகமாட்டேன்” என்று அறிவித்தார். எம்.சி.ராசா இதை எதிர்த்துப் பத்திரிகைகளில் அறிக்கை விட்டார். “நான் இந்துவாகப் பிறந்தேன். இந்துவாகத்தான் சாவேன்” இதற்குப் பதிலுரைத்த அம்பேத்கர், “எம்.சி.ராசா தான் பறையனாகப் பிறந்தேன். பறையனாகத்தான் சாவேன் என்று கூறுகிறார் அதற்கு நான் என்ன செய்யமுடியும்?” என்று கூறினார். எம்.சி.ராசா இறுதிவரையில் அம்பேத்கருக்கு எதிராகவே செயல்பட்டு வந்தார். இரட்டைமலை சீனிவாசன், என்.சிவராஜ் போன்றோர்கள் கடைசிவரை அம்பேத்கருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தனர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிவந்த தலைவர் இரட்டை மலை சீனிவாசன் 18.9.1945 அன்று மறைவுற்றார்.

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் மக்கள் சேவையைப் பாராட்டி ஆங்கில அரசு அவருக்கு 1.1.1926இல் ராவ் சாகிப் பட்டமும், 3.6.1930இல் ராவப் பகதூர் பட்டமும், 1.1.1936இல் திவான் பகதூர் பட்டமும் அளித்துச் சிறப்புச் செய்தது. இவ்வளவு சிறப்புப் பெற்றவரும், தாழ்த்தப்பட்டோரின் நலன்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கியவரும் ஆகிய இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டவேண்டும். சிலை வைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் பல்வேறு அமைப்புகளால் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

அதன் விளைவாக, அவருடைய 150 ஆவது பிறந்தநாளான 7.7.2009 அன்று தமிழக அரசின் சார்பில் ரூ.21 இலட்சம் செலவில் மணி மண்டபமும், சிலையும் அடையாறு காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது சற்றும் பொருத்தமற்றதாகும்.

கோரிக்கை நிறைவேறியது மகிழ்ச்சிதான் என்றாலும், அவர் தம் வாழ்நாளில் 1885இல் காங்கிரசுக் கட்சி தொடங்கும்போதே அதை உன்னிப்பாகக் கவனித்து. காங்கிரசு கட்சியால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என்பதைப் புரிந்து பறையர் மகா சன சபையைத் தொடங்கியவர்.

தம் வாழ்நாள் முழுவதும் காந்தியையும், காங்கிரசையும் எதிர்த்தவர். பல ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டாற்றிய அந்த மாமனிதருக்குத் தனியாக ஓர் இடத்தில் மணிமண்டபமும், சிலையும் நிறுவியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

- வாலாசா வல்லவன்