திசம்பர் ஆறு, அண்ணலின் நினைவுநாள்!
   தெரிந்தே இடித்தான் மசூதி
கசந்த அந்நாளின் ஒவ்வோர் ஆண்டும் உன்
   காவல் மிரட்டல் பெருஞ்சதி!
கேவலம்! பேருந்து இரயில்களில் எல்லாம்
   ‘அவிழ்த்துக் காட்டெனும்’ கெடுபிடி!
கோவணம் அவிழ்க்கும் டாடா பிர்லா
   கூட்டத்திற்கு நீ எடுபிடி!
உலகத் திருடன் ஒபாமா வந்தால்
   ‘ஒண்ணுக்கு’ அடக்கியும் பணிவாய்!
உள்ளூர்த் திருடன் அம்பானி முதுகை
   உட்கார வைத்தும் சொறிவாய்!
கடப்பாரைத் திருடன் அத்வானி யோடு
   கைகள் குலுக்குவாய் ஒருபுறம்!
துடித்துச் சீறும் காஷ்மீர் மக்களைத்
   துவைத்துப் போடுவாய் மறுபுறம்!
சேரிகள் தோறும் பீறிடும் ஓலம்
   கயர் லாஞ்சி களாய் நடுங்கும்!
தெரிந்தே இவைகள் நடந்தும் தேசச்
   சட்டங்கள் மயிர் பிடுங்கும்!
உத்தமர் இராகுல் ஒப்பனை யோடே
   உட்காருவார் தலித் வீட்டில்!
உத்த புரத்தின் சுவர்கள் உடைக்க
   ஒருத்தன் உண்டா நாட்டில்?
‘வெட்டப் படுபவை ஆடுகள் மட்டுமே, -இது
   வீரத் தலைவரின் முழக்கம்!
கட்டப்படும் நாளை, சாதிக்குக் கல்லறை - அது
   கள்ள உன் முகத்திரை கிழிக்கும்!

- தமிழேந்தி

Pin It