மத்திய இந்தியாவில் உள்ள தண்டகாரண்யா அகதிகளை சந்தித்த போது, மரிச்ஜாப்பி படுகொலை குறித்து உலகளவில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த இயலாத நிலையில் அம்மக்கள் இருப்பதைக் கண்ட பிறகுதான் நான் இதைப் பதிவு செய்ய முடிவு செய்தேன்.

இருப்பினும், ஜெனிவாவில் உள்ள அய்க்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையம், இப்படுகொலை தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் வந்ததாகவும், ஆனால் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதையும் என்னிடம் தெரிவித்தது. "அம்னஸ்டி இன்டர் நேஷனல்' என்னுடைய கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை. மனித உரிமைக் கண்காணிப்பகம் (ஏதட்ச்ண கீடிஞ்டtண் ஙிச்tஞிட) சில மாதிரிக் கடிதங்களை எனக்கு அனுப்பியிருந்தாலும், அவர்கள் என் கடிதத்தைப் படித்ததாக எந்த அறிகுறியும் எனக்கு தெரியவில்லை. லண்டனில் உள்ள "அம்னஸ்டி இன்டர்நேஷனல்' தலைமையகத்திற்கு சென்றிருந்த போது, ஓரினச் சேர்க்கையாளர் உரிமை ஆர்வலர்களின் உறுப்பினர் சேர்க்கை முறையில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இம்முறையைப் பின்பற்றும் நிலையில் தீண்டத்தகாத மக்களோ, மூன்றாம் உலகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களோ இல்லை.

வாஷிங்டனில் உள்ள ஒருவரின் முயற்சியால் எனக்கு மனித உரிமைக் கண்காணிப்பகத்திடமிருந்து தனிப்பட்ட பதில் கடிதம் வந்ததே தவிர, நான் அனுப்பிய தகவல்கள் குறித்து அவர்கள் படித்தார்களா? அல்லது நடவடிக்கை எடுத்தார்களா? என்பது பற்றி எந்த அறிகுறியும் இல்லை. கல்வி சார்ந்த பத்திரிகைகளுக்கு இப்பிரச்சனை குறித்து தெரிவித்தபோது, அவர்களிடமிருந்தும் எவ்வித மதிப்பீடோ மறுப்போ வரவில்லை. கல்வி சார்ந்த ஒரு முன்னணி ஏட்டின் ஆசிரியர் எனக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் : “இவ்வளவு நாட்கள் கழித்து உங்களுடைய கட்டுரை தொடர்பாக ஒரு மதிப்பீட்டு அறிக்கையைக் கூட இன்னும் நாங்கள் பெறவில்லை. நாங்கள் பல மதிப்பீட்டாளர்களோடு தொடர்பு கொண்டோம். அவர்களில் சிலர் இப்பணியை ஒப்புக் கொண்டனர். ஆனால், சில வாரங்கள் கழித்து அவர்களால் உறுதியளிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையைத் தர முடியவில்லை என்ற சுருக்கமான குறிப்போடு கட்டுரையைத் திருப்பி அனுப்பினர்.''

பல ஆண்டுகளுக்குப் பிறகு இம்மனித உரிமை மீறலை நேரடியாக அம்பலப்படுத்தும் முறையைத் தவிர்த்து, அதற்கு பதிலாக இப்பிரச்சனையை கல்வியாளர்களுக்கு பிடிக்கும் வகையில் ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து, மூன்று கட்டுரைகளை பல கல்வி சார்ந்த ஏடுகளுக்கு அனுப்பினேன். தீண்டத்தகாத இயக்கங்களைப் பற்றி ஆய்வு செய்த ஹார்வேர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரிடம், 14 கோடி தீண்டத்தகாத மக்கள், மனித இனத்தில் ஏறக்குறைய 3 சதவிகிதம் அங்கம் வகிக்கின்றனர்; அவர்களுக்கென ஓரிதழ் தொடங்கப்பட வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், "இதற்கான நிதியைக்கூட திரட்டி விட முடியும். ஆனால், தொடர்ச்சியாக இவ்விதழில் எழுது வதற்கு போதிய ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்' என்று பதிலளித்தார். புத்தகங்கள் வெளியிடுவது இன்னொரு வழியாக எனக்குத் தெரிந்தது. ஆனால் தீண்டத்தகாத மக்களின் வாழ்க்கைச் சுருக்கம் ஒன்றை வெளியிட, புத்தகத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 8 பேருக்கு நான் அனுப்பினேன். ஆனால், எவரும் இதை வெளியிடத் தயாராக இல்லை.

68.6 சதவிகித பல்கலைக் கழக நூல்கள், வெளியிலிருந்து பெறப்படும் நிதி மூலம் மானிய விலையில் வெளியிடப்படுகின்றன. அறிமுகப்படுத்தப்படாத கையெழுத்துப் பிரதிகளின் பதிப்பக அளவு, இரண்டு ஆய்வுகளின்படி, 0.38 சதவிகிதம் மற்றும் 0.57 சதவிகிதமாகும். ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கு ஒரு மரபு சாராத வட்டம் அல்லது ஒருங்கிணைப்பின் பரிந்துரை மிக அவசியமான தேவையாகும். தீண்டத்தகாத மக்களின் மனித உரிமைகள் தொடர்பான நூல்களை வெளியிட பல தடைகள் இருக்கின்றன. தீண்டாமை பற்றி பல கல்விமான்கள் எழுதக்கூடியவை போதிய அளவுக்கு நலன் அளிப்பதாகவோ, தீண்டத்தகாத மக்களின் நலன்களுக்கு பயன் அளிக்கக் கூடியதாகவோ இல்லை.

தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்வதில் தோல்வியடைந்த முயற்சிகள் முக்கியமானவை. ஏனெனில், அறிவுஜீவிகளிடமிருந்து நூல்கள் வெளிவருவதைவிட, பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் குறைதீர்க்கும் வேறு பல மன்றங்கள் இல்லாத சூழலில், கல்வி ரீதியான அமைப்புகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. மனித உரிமை மீறல்களைத் தண்டிப்பதிலோ, தடுப்பதிலோ பன்னாட்டு அமைப்புகள் பெருமளவில் வெற்றி பெறவில்லை என்பது தெரிந்ததே. இருப்பினும், குறைந்தபட்சம் பல மீறல்கள் பதிவு செய்யப்படுவதால், அவை ஓரளவுக்கு உலகின் கவனத்திற்கு வருகின்றன. தீண்டத்தகாத அகதிகளைப் போன்ற பிற விளிம்பு நிலை குழுக்களுக்கு, மேற்கத்திய நடுத்தர வர்க்கம் அவர்களின் பிரச்சனையை கையிலெடுக்காதவரை, சர்வதேச கவன ஈர்ப்பு வருவதில்லை. மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்வதற்காகவே இயங்கும் குழுக்களிடமிருந்துகூட இத்தகைய கவன ஈர்ப்பு கிடைப்பதில்லை.

தங்களுக்கு ஆய்வு வசதிகளை வழங்கும் ஆட்சிகளை விமர்சிக்கக் கூடாது என்பதில் கல்வியாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளர், இம்மாநிலத்தில் அவருடைய ஆய்வுகளுக்கு இந்திய அரசிடமிருந்து அனுமதிச் சீட்டு மட்டுமல்ல; ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்தும் அனுமதியைப் பெற்றாக வேண்டும் என்று குறிப்பிடுகிறார். "சாஸ்திரி – இந்தோ கனடிய கழகம்' கல்வி ஆய்வு மானிய விண்ணப்பதாரர்களை பின்வருமாறு எச்சரிக்கிறது : “தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விஷயங்களிலும், உணர்வைத் தூண்டக்கூடிய மாநில அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளிலும் இந்திய அரசு ஆய்வுகளை அனுமதிப்பதில்லை.'' "முற்போக்கான' ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களைக் கண்டு கொள்ளா மல் விட்டுவிடுவது என்பது சில அறிவுஜீவிகளின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் தீண்டத்தகாத அகதிகளின் பிரச்சினை மேற்கு வங்க பத்திரிகைகளில் வெளிவந்ததால், அறிவுஜீவிகள் இப்பிரச்சினை குறித்து அறியவில்லை என்று கூறுவதையும், இப்பிரச்சினையை எழுதாமல் விட் டதையும் மன்னிக்க முடியாது. கிராமப்புற தீண்டத்தகாத மக்கள் மீதான பாகுபாடும், ஒதுக்கி வைத்தலும் பெங்காலி இலக்கியங்களில் இடம்பெறுவதேயில்லை.

Marichjhapi_10நிலம் மறுபங்கீடு தொடர்பான புள்ளிவிவரங்களில் எத்தனை பேர் நிலத்தை இழந்தார்கள் என்பது பற்றி குறிப்பிடப்படுவதில்லை. மேற்கு வங்க அரசு மேற்கொண்ட மாதிரி ஆய்வு ஒன்றில் பெரும்பாலான பயனாளிகள் நிலங்களை இழந்ததாகவும், அதனால் நிலச்சீர்திருத்தம் என்பதே ஒரு ஏமாற்று என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இக்குறைபாடு கல்விமான்களுக்கு மிக வெளிப்படையாக தெரிந்திருப்பினும், அவர்கள் இத்தகைய விவரங்களை சேகரிப்பதில்லை. அவர்களின் கல்விப் பணிக்கு அது பயனுள்ளதாக இருந்தாலும் இதனால் அவர்களுடைய ஆய்வுக் கொள்கையின் செயலாக்க நோக்கங்களுக்குப் பயனில்லாமல் போகிறது. நிறுவனங்கள் லாபங்களை மட்டும் குறிப்பிட்டு இழப்புகளை குறிப்பிடவில்லை என்றால், அவர்களுடைய நம்பகத் தன்மையை இழந்து விடுவர். இந்த நிறுவனங்களின் நிலைப்பாடு அனுமதி வழங்கும் அரசுக்கு கோபமூட்டாது என்பதால், நிலச்சீர்திருத்த ஆய்வு நில இழப்புகளை கணக்கில் கொள்ளாமல் நிலம் பிரித்தளிப்பதை மட்டுமே ஆய்வு செய்கிறது.

மறுபுறம், விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்களால் கல்வியாளர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. ஏனெனில், ஆதிக்க அறிவுஜீவி மேல்தட்டு வர்க்கங்களைப் போல, அவர்களால் கல்விமான்களின் எழுத்தைப் படிக்க முடியாது. ஆகவே, வெளிப்படையான மதிப்பீடுகளை இத்துறையில் செய்ய முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளும் துணிவு வேண்டும். இக்கண்ணோட்டத்தை, ஒரு துறையில் கணிசமான முதலீட்டை செய்திருக்கும் கல்வியாளர்கள் தவிர்க்க விரும்புவார்கள். தனிப்பட்ட முறை யில் கூறப்படுவது வெகு வித்தியாசமாக அச்சிடப்படுவது சில பேருக்குதான் பொருந்தும் என்பதில்லை. இது, ஆய்வுகள் மாசுபடுத்தப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

மனித உரிமை மீறல்கள், கல்வி ஆய்வுகளுக்கு தொடர்பில்லாததாக இருக்கலாம். ஆனால், இம்மனித உரிமை மீறல்களைப் பற்றிய விழிப் புணர்வு இல்லை என்றால், கல்வி ரீதியான ஆய்வு சாத்தியப்படாது. நீதிமன்றங்கள் பெருமளவில் செயலிழந்துவிட்ட நிலையில், அநீதிகளை கல்வி சார்ந்த வகையில் வெளிப்படுத்துவது முக்கியப் பங்கை வகிக்கிறது. கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றுக்கு நீதி கிடைக்க வாய்ப்பேயில்லை. இதன் விளைவாக, கும்பல் கொலைகள் அதிகரிக்கும். மனித உரிமைகள் குறித்து ஆர்வமில்லாத அரசியல்வாதிகள் படுகொலைகளை செய்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றனர். மரிச்ஜாப்பி படுகொலை போஸ்னியா படுகொலைகளிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டதல்ல. ஆனால், குறைந்தபட்சம் அதை நிகழ்த்திய அரசியல்வாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் தலைமறைவாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், மேற்கு வங்க முதலமைச்சரோ மேற்குலக நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்கிறார். ஆனால், பொதுக்கூட்டங்களில் இப்படுகொலை தொடர்பாக அவரிடம் எந்தக் கேள்விகளும் எழுப்பப்படுவதில்லை. மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகள் படுகொலை அம்பலப்படுத்தப்படாததால், மே 1996 இல் ஜோதிபாசு இந்தியாவின் பிரதமராக முயற்சி செய்ய முடிந்தது. அதுவும் சி.பி.எம். மய்யக்குழு 35 வாக்குகளை எதிராகவும், 20 வாக்குகளை ஆதரவாகவும் வாக்களிக்கத்தால் – அவர்களாலேயே அது தடுக்கப்பட்டது. ஜோதிபாசு இதை ஒரு "வரலாற்றுப் பிழை' என்று குறிப்பிட்டார்.

இடதுசாரி தேசிய அரசு மீதான மதிப்பை சீர்குலைத்தது, இந்த அரசின் தொடக்க காலத்தில் நடைபெற்ற படுகொலைகள் அல்ல; மாறாக, ஊழல்கள்தான்! நீண்ட நாட்களாக ஆட்சியில் இருக்கும் எந்த அரசிற்கும் ஊழல்கள் தவிர்க்க இயலாத ஒன்றுதான். சக்திவாய்ந்த நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தினர் தாங்கள் செலுத்தும் வரி தவறாக பயன்படுத்தப்படாமலிருக்க வேண்டும் என்பதில் கவனமாகயிருப்பார்கள். எனவே, கீழ்த்தட்டு வர்க்கத்தினர் மீதான மனித உரிமை மீறல்களைக் காட்டிலும் மேல்தட்டு ஊழல்தான் அவர்கள் மீதான மதிப்பை மாற்றியது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் குடும்பத்தினர் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக விமர்சனம் செய்யப்பட்டதைப் போல, ஜோதி பாசுவின் மகனுடைய வணிக நலன்களை விமர்சித்ததற்காக கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் திரிபுரா முதலமைச்சருமான ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

பத்திரிகைகளின் புலனாய்வுகளின்படி, 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கம்யூனிஸ்ட் கட்சி சொந்த கணக்கில் கையகப்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அரசின் மானிய விலையில் வழங்கப்படும் குடியிருப்புகள் சட்டத்திற்குப் புறம்பாக, மிகக் குறைந்த விலையில் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் (Plot no.. FD 429, FD 434, GD 346, CL 16), முதலமைச்சரின் உறவினர்களுக்கும் (FD 452), அமைச்சர்களுக்கும் (IA 29, FE 145, AL 210, BH 97) மற்றும் ஆட்சியை ஆதரிக்கும் கல்விமான்கள், ஒரு பத்திரிகையாளர் மற்றும் அட்வகேட் ஜெனரல் மருமகனுக்கும் (Plot No. FE 14), ஜோதி பாசுவின் சுயசரிதையை எழுதியவரின் கணவருக்கும் (EE Block, Sector 2, Plot No.5) ஒதுக்கப்பட்டன.

சட்டத்திற்குப் புறம்பான தங்களின் நில ஆக்கிரமிப்பை பற்றி இவர்களே விசாரணை நடத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாதென்றாலும், தங்களுடைய அடித்தட்டு வர்க்கக் கொள்கையின் அடிப்படையில், தங்களது நிரூபிக்கப்பட்ட அரசு செல்வாக்கை செலுத்தி மரிச்ஜாப்பி நிலத்தை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி விசாரணை நடத்தியிருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் பரவலாக வெளிப்படுத்தி இருக்கலாம். இம்மாநிலத்தில் அரசியல் ரீதியாக அறியப்பட்ட ஒவ்வொரு அறிவுஜீவிக்கும் மரிச்ஜாப்பி படுகொலை பற்றி தெரிந்திருந்தது. ஆனால், இது அடித்தட்டு மக்கள் தொடர்பான இதழ்களிலோ, கல்வி ரீதியான வெளியீடுகளிலோ வெளிவரவேயில்லை. எதற்காக ஏழை மக்கள் கொல்லப்படுகிறார்களோ, இம்மேல்தட்டு வர்க்கத்தினரும் அதையே செய்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றனர். இது, மதச் சார்பற்ற அரசுகள் மீதும், அமைப்புகள் மீதும் வாக்காளர்களை நம்பிக்கை இழக்கச் செய்து – சாதி, மாநில மற்றும் மத ரீதியான கட்சிகள் வளர்ந்து, இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

சுதந்திர இந்தியாவின் தொடக்க ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியால் மட்டுமல்ல, எதிர்க் கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்தாலும் குறிக்கப்படுகின்றன. ஊழல்வயப்பட்ட அரசாட்சியை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. அதிகார வர்க்கத்தினர் அரசியல்வாதிகளை நீதிமன்றத்தில் நிறுத்த முயல்கின்றனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் மூத்த அதிகாரிகளிடமிருந்து மரிச்ஜாப்பி குறித்த தகவல்களை என்னால் பெற முடிந்தது.

மரிச்ஜாப்பி தீண்டத்தகாத மக்களின் இனப்படுகொலை பற்றி கல்வி ரீதியான இலக்கியத்தில் எந்த அறிக்கையும், குறிப்பும் இல்லாதது – சமூக நிகழ்வுகள் எவ்வாறு தவறாக சித்தரிக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இதுமட்டுமின்றி, இது கல்விச் சமூகத்தின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கிறது. தீண்டத்தகாத மக்களின் அரசியல் எழுச்சி பெருமளவில் கண்டனத்திற்குள்ளாகிறது. ஆனால், மதச்சார்பற்ற கட்சிகள் தீண்டத்தகாத மக்களை மனித உரிமை மீறல்கள் மூலமும், இனப்படுகொலைகள் மூலமும், ஊழல்கள் மூலமும் ஒடுக்கிய தாலேயே இது நிகழ்ந்தது என்ற புரிதல் இல்லாமல் – இந்தியாவில் மதச்சார்பற்ற அரசியலின் சரிவுக்கான காரணத்தை உணர முடியாது.

மரிச்ஜாப்பி படுகொலை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களைத் தவிர, ஏறக்குறைய எல்லோராலும் விரைவாக மறக்கப்பட்டுவிட்டது. காலனிய மற்றும் காங்கிரஸ் ஆட்சியாளர்களை அடையாளப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட முந்தைய படுகொலையைப் போலவே மரிச்ஜாப்பியும் கம்யூனிஸ்டுகளின் உரிமை மீறல்களையும், மதச்சார்பற்ற இந்திய அரசின் தோல்விகளையும் சாடுவதற்கு வெறும் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.

“தலித் மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், நாய்களையும் பூனைகளையும் ஏன் கற்களையும் வணங்குகின்றவர்கள் – பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளை வணங்குவதில் நேரத்தை இழந்துவிட மாட்டார்கள்'' என்றார் கான்ஷிராம் ("இந்தியா டுடே', 15.10.1995). இந்த விமர்சனம், மதசார்பற்ற கட்சிகளும் அரசுகளும் கல்வி சார்ந்த சமூகத்தின் முடிவுகளும் தலித் மக்களை பாரபட்சமாக நடத்தியதன் விளைவாகும். இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஜனநாயகப்படுத்துவதற்கான நடைமுறை, இதைப்போன்ற பல்வேறு எதிர்ப்புகளை வெளியில் கொண்டு வரும்.

அரசும் சமூகமும் ஒடுக்கப்படும் விளிம்பு நிலை மக்களுக்கு மனித உரிமைகளையும் வாழ்வதற்கான வாய்ப்புகளையும் வழங்காவிட்டால், ஜாதி ரீதியான சமத்துவம் வெற்றிகரமாக அமையாது. இதை நோக்கிய முதல்படியாக மரிச்ஜாப்பி தீண்டத்தகாத மக்களின் இனப்படுகொலையை விசாரித்து, இந்த இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்களை – உச்ச நீதிமன்றத்தின் முன்போ, சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் முன்போ நிறுத்தவேண்டும்.

ஆங்கிலத்தில் - ராஸ் மாலிக்

தமிழில் - இனியன் இளங்கோ

Pin It