தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அண்ணாசிலை அருகில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கடந்த 25-03-2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.த.ம.பு.க கொள்கை பரப்பு செயலாளர் ஆறு.நீலகண்டன், மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

எவிடென்ஸ் கதிர் பேசுகையில்,

"உடுமலைப்பேட்டை  சங்கர் சாதிய ஆணவ படுகொலை வழக்கில் சங்கர் பலமுறை குற்றவாளிகளால் மிரட்டப்பட்டுள்ளார். இதில் "அப்படித்தான் மிரட்டுவார்கள். ஆனால் ஒன்றும் செய்யமாட்டார்கள்" என சங்கரிடம் சொன்னதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத குமரலிங்கம் காவல்துறையும் இவ்வழக்கில் குற்றவாளிகள் தான். எனவே நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை மீது எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.

    தென்மாவட்டங்களில் இளங்காதலர்கள் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆதிக்க சாதியினரால் கொத்துக் கொத்தாக ஆணவ படுகொலை செய்யப்படுகின்றனர். புள்ளிவிவர கணக்கெடுப்பின்படி ஆண்டுக்கு 1000 பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால் அதில்12 சதவீதம் காதல் சம்பந்தப்பட்ட படுகொலைகளாக உள்ளது. ஆண்டிற்கு 1000 தற்கொலைகள் என்றால் 20 சதவீதம் காதல் சம்பந்தப்பட்ட பிரச்சினை தான் காரணம் என அறிக்கை தெரிவிக்கிறது.

      சாதி ஆணவ கவுரவ கொலைகளை செய்வது பெரும்பாலும் அப்பா, அண்ணன், மாமன் என குடும்ப உறுப்பினர்களே என்பதால், கொலை வழக்கை யார் நடத்துவது. குடும்ப உறுப்பினர்கள் அக்கறை செலுத்தாத போது வழக்கை நடத்தும் காவல்துறையும் அக்கறையின்றி வழக்கை முடித்தால் போதும் என, வழக்கு நீர்த்துப்போகும் வகையில் செயல்படுவதால் குற்றவாளிகள் தண்டனை ஏதுமின்றி எளிதில் தப்பி விடுகின்றனர். 

         சாதிய ஆணவப் படுகொலையில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்ட தலித் இனத்து பெண்கள் தான். ஆனால் தலித் இளைஞர்கள் ஏமாற்றுவதாக சில சாதி கட்சி,அமைப்புகள் உண்மைக்கு புறம்பாக பேசி வருகின்றனர். திமுக, அதிமுக கட்சியினர் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டிப்பதில்லை. ஏனென்றால் இரண்டு கட்சியிலுமே சாதிய வெறியர்கள் உள்ளனர் என்பதே உண்மை. தமிழகத்தில் நடக்கும் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டிக்காத, தடுத்து நிறுத்த அக்கறையில்லாத, தமிழக அரசையும் குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். சாதிய ஆணவ படுகொலைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்" இவ்வாறு பேசினார்.

      ஆர்ப்பாட்டத்தில் எழுத்தாளர் துரை.குணா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மதுக்கூர் கபார், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜபருல்லாஹ், தமுமுக ஒன்றிய பொறுப்பாளர் நரியங்காடு சாகுல் ஹமீது மற்றும் இரா.மதியழகன், சுப.செயச்சந்திரன், அ.கோவிந்தன், தா.கலைச்செல்வன், கா.மதி, பி.மூர்த்தி, அ.சுப்பிரமணியன், பொன்னி வளவன், க.சிவா, இரா.காளிதாஸ், பெரியார் சித்தன், த.ஜேம்ஸ், ச.அப்துல் சலாம், நா.அப்துல்லா, வீரக்குடி ராசா, ஏக. கிருட்டிணமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Pin It