இந்திய-தமிழக இயற்கை வளங்களை அமெரிக்கருக்கும் அய்ரோப்பியருக்கும் விற்க-ஆயத்தம்

மீர்ஜாபரும், பூர்ணய்யாவும் ஆகிறார் பிரதமர் மோடி!

இந்தியா 1946 திசம்பர் முதல் இன்றுவரை, 68 ஆண்டுகளாக, இந்தியர்கள் என்கிற பேரால் பார்ப்பனர்களாலும், மற்ற மேல்சாதிக்காரர் களாலும், பணக்காரர்களாலுமே ஆளப்படுகிறது.

1952 முதல் 21 வயது உள்ள ஆண்களும், பெண்களுமே நாடாளுமன்ற மக்கள் அவையை யும்; மாநிலச் சட்டமன்றங்களுக்கான உறுப்பினர் களையும் தேர்ந்தெடுத்தார்கள். 1989க்குப் பிறகு 18 வயதுள்ள எல்லா இந்தியர்களும் இவர் களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படித் தேர்ந் தெடுக்கப்பட்டவர்களே சட்டங்களைச் செய்தார்கள்; செய்வார்கள்.

ஆனால் விலை மதிப்பற்ற வாக்குரிமையைப் பெற்ற வாக்காளர்களில் அதிகம் பேருக்கு நேற்றுவரை எழுத்தறிவு கொடுக்கப்படவில்லை. இன்றுள்ள 126 கோடி இந்தியர்களில் 30 கோடிப் பேருக்கு - எந்தக் கட்சி ஆட்சியும் எழுத்தறிவு தரத் திட்டம் தீட்டவில்லை. தமிழ்நாட்டிலுள்ள மக்களில் 100க்கு 18 பேருக்கு 2014லிலும் எழுத்தறிவு தரப்படவில்லை.

எழுத்தறிவில், இந்திய உழைக்கும் மக்கள் என்கிற கீழ்ச்சாதிக்காரர்கள் தொடர்ந்து அறிவுடைமை என்கிற சொத்து மறுக்கப்பட்டவர்களாகவே 1200 ஆண்டுக்கு மேலாக வைக்கப்பட்டுவிட்டார்கள். அதனால்தான் யார் தலைமை யில் - எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியின் கொள்கை என்ன? வேலைத் திட்டம் என்ன? அவற்றால் மக்களின் வாழ்க்கையில் என்ன முன் னேற்றம் ஏற்படும்? என்பது பற்றி வாக்காளர்களுக்குத் தெரிய வக்கு இல்லை.

பண்டித நேரு 17 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்தார். சோசலிச வீரர் - முடிசூடா மன்னர் என்று அவர் போற்றப்பட்டார். அவர் எல்லோருக்கும் கல்வி தர வழிவகுக்கவில்லை. எல்லா மதங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு மத்திய அரசிலும் இடஒதுக்கீடு தரமுடியாது; மாநில அரசுகளும் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று - 1961 மே மாதமும், 1961 ஆகஸ்டு மாதமும் முடிவெடுத்தார். வெகுமக்கள் கல்வி, வேலை பெறும் வாய்ப்பை மறுத்தார்.

பக்ராநங்கல் நீர்த்தேக்கம், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நாட்டுடைமை, நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலை, பாரத மிகுதிறன் கலத்தொழிற்சாலை இவற்றைப் பொதுத்துறை நிறுவனங்களாக அமைத்தார்.

இந்திராகாந்தி 1971இல் வங்கிகளைப் பொதுத்துறை நிறுவனங்களாக ஆக்கினார்.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் 247க்கு மேல் உருவாயின. அவை மத்திய அரசுப் பொதுத்துறை நிறுவனங்களாகவே 1989 வரையில் செயல்பட்டன. அவற்றில் நிர்வாகப் பொறுப்பில் - தலைவர்கள் என்கிற பதவி களில் மேல்சாதிக்காரர்களே 98 விழுக்காடு பதவிகளை வகித்தார்கள். 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் வேண்டுமென்றே உற்பத் தித் திறனற்றவையாக மாற்றப்பட்டன.

பி.வி.நரசிம்மராவ்-மன்மோகன் சிங்-ப.சிதம்பரம் என்கிற பணக்காரர்களின் கையாள்கள் அமெரிக்கருக் குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுப்பதிலேயே அதிக நாட்டம் செலுத்தினர்.

புதிய அய்ந்தாண்டுத் திட்டங்களுக்குப் போதிய முதலீட்டைப் பொதுமக்களிடமிருந்து பங்குகளாகப் பெற்று ஈடுபடுத்துவதற்கு மாறாகப் பொதுத் துறை நிறுவனங் களின் பகுதிப் பங்குகளைத் தனிப்பட்ட முதலாளி களுக்கு விற்றுவிட எல்லாம் செய்தனர்.

இதன்மூலம் இரண்டு மாங்காய்களை ஒரே கல்லில் அடித்தனர்.

1.            பொதுத்துறையை தோல்வி அடைந்த துறை என்று ஆக்கி, அதைத் தனியார் மயமாக்கிவருவது ஒன்று. அதனால் தொழிலாளர்கள் சங்கம் வைக்கும் உரிமைக் கான வலிமையை இழந்தனர்.

2.            பொதுத்துறை நிறுவனங்களில் 1970 முதல் பட்டி யல் வகுப்பினரும் பழங்குடியினரும்; 1994 முதல் பிற்படுத்தப்பட்டோரும் சிறிய, பெரிய வேலைகளில் இடஒதுக்கீடு மூலம் பெற்றுவந்த வாய்ப்புகளை மறுக்க ஒரு வழியை அமைத்தது இரண்டு.

“நடப்பு 2014-15 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூபா 43,425 கோடியும்; ஏற்கெனவே தனியா ருக்கு விற்கப்பட்ட மத்திய அரசு நிறுவனங்களின் எஞ்சியுள்ள பங்குகளை விற்பதன் மூலம் 15,000 கோடி ரூபாவையும் திரட்ட மத்திய அரசு திட்டமிட் டுள்ளது” என, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறி வித்துள்ளார்.

இன்றையப் பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புத் துறைக்கு வேண்டிய தளவாடங்களையும் கருவி களையும் உற்பத்தி செய்வது உள்நாட்டுச் சந்தை - உலகச் சந்தைகளில் இவற்றை விற்பது இவற்றில் 100க்கு 100 பங்கிலும் அயல்நாட்டு முதலீடு வர வேண்டும் என்று எடுத்த எடுப்பில், தம் அமெரிக்க நாட்டுப் பயணத்துக்கு முன்பே அறிவித்துவிட்டார்.

இவர் இந்திய வரலாற்றில் இரண்டாவது மீர்சாபரா கவும், இரண்டாவது பூர்ணய்யாவாகவும் ஆகி, அயல்நாட்டினர் இந்திய நீர்வளம், இந்தியக் கனிம வளங்கள், இந்தியர் பெற்றுள்ள அறிவுத் திறமைகள் எல்லாவற்றையும் 2019-க்குள் அமெரிக்கருக்கும் அய் ரோப்பியருக்கும் உரிமை உள்ளவையாக விற்றுவிட எல்லாம் செய்கிறார்.

நேற்று வரையில், ‘மானிட உரிமையைக் கொன்ற மோடி, அமெரிக்காவில் நுழைய அனுமதிக்க முடியாது’ என்று கூறிய அமெரிக்கக் கறுப்பர் ஒபாமா, 2014-இல் அதே மோடிக்கு மாபெரும் வரவேற்புக் கொடுத்து, இந்தியாவில் திறந்த வீட்டில் நாய் நுழைவது போல், அமெரிக்கரும் அய்ரோப்பியரும் பணப் படையெடுக்க - இயற்கை வளத்தைச் சுரண்ட - அறிவு வளத்தை மலிவான கூலிக்கு வாங்க வழிவகுத்துவிட்டார், மோடி.

அதாவது, தமது வெளிநாட்டின் பயணத்தின் விளை வாக, இந்தியப் பணத்தில் 6 இலட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள வெளிநாட்டு முதலீடு இந்தியாவில் தொழில்களைத் தொடங்குவதற்கு ஈடுபடுத்தப்பட எல்லா வாக்குறுதிகளையும் வழங்கிவிட்டார், மோடி.

இந்தியாவில் உள்ள 126 கோடி மக்களுக் கும், 16 வயதுக்கு மேற்பட்ட 85 கோடி இந்திய இளைஞர் முன்னேற்றத்துக்கும் பூட்டப்பட்ட புதிய அடிமை விலங்கு இது என்பதை ஒவ்வொரு வரும் உணரவேண்டும்.

அயல்நாடுகளில் கழிப்பறைகூடத் தூய்மையாக வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு படுத்துத் தூங்கும் அளவுக் குத் தூய்மையாக வைத்துள்ளனர். தூய்மையின் முதன்மை பற்றிக் கல்வியிலேயே அங்கு கற்பிக்கப்படு கிறது. மேலும் 100க்கு 99 பேர் ஒரே தரம் உள்ள எழுத் தறிவு, செய்முறைக்கல்வி அறிவு கற்பிக்கப்பட்டிருக் கிறார்கள்.

இந்தியாவில் சராசரி எழுத்தறிவு 74 விழுக்காடு; இந்தியரில் 30 கோடிப் பேருக்கு எழுத்தறிவு இன்றும் இல்லை.

“தூய்மை இந்தியா” என்பது பாரதிய சனதாக் கட்சி ஆட்சியின் ஓர் உயரிய கொள்கை என்று அறிவித்து, பிரதமர் நரேந்திர மோடியே விளக்குமாறு பிடித்துத் தெருவைக் கூட்டிக் காட்டினார். வாரந்தோறும் ஒவ் வொருவரும் 2 மணிநேரம் அவரவர் தெருவைக் கூட்ட முன்வர வேண்டும் என்று ஒரு வேண்டு கோளையும் விடுத்துள்ளார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் 2015 சூன் கல்வி ஆண்டில் தொடங்கி-உடம்பைத் தூய்மையாக வை, உடையைத் தூய்மையாகத் துவை, வீட்டைத் தூய்மையாக வை என்று பள்ளிக்கல்வியில் பாடமாகக் கற்பிக்கவும் - எல்லோருக்கும் இன்னும் அய்ந்தே ஆண்டுகளில் அப்படிப்பட்ட கல்வியை அளிக்கவும் போதிய பண ஒதுக்கீடு - நூல்கள் வெளியீடு - பாடத்திட்ட உருவாக் கம் - போதிய ஆசிரியர்கள் அமர்த்தம் என்கிற உருப் படியான பணியைத் திட்டமிட்டுச் செய்வதைவிட்டு விட்டு-பாமரத்தனம்மிக்க வெகுமக்களை ஏமாற்றிட, மோடி அவர்கள் விளக்குமாறு பிடிக்கும் வேடம் போடுவது ஒரு நல்ல ஏமாற்றும், கடைந்தெடுத்த அற்பத்தனமும் ஆகும்.

இந்த உண்மைகளை எல்லாத் தேசிய - அனைத்திந்திய வாக்குவேட்டை அரசியல் கட்சி களும், மாநிலக் கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு, புதிய விளக்கு மாறு பிடிக்கும் மோடியுடன் கூட்டணி அமைத்து, அதன்மூலம், இந்தியாவை-இந்தியாவின் இயற்கை வளங்களை - இந்தியர்களின் அறிவுத்திறனை - இந்தியாவின் அரசியல் ஆதிபத்திய உரிமையை விற்றுவிட முனைகிற மோடியுடன் கூட்டுச்சேர முண்டியடித்துக் கொண்டு எந்தக்கட்சி முயன்றா லும் - அது பச்சையான மக்கள் விரோத - நாட்டு விரோத நடப்பேயாகும். ஏன்?

பாரதிய சனதாவின் கொள்கை - அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையே ஆகும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை : இந்துத்து வம், இந்துமத அமைப்பு, இராமாயணம், அயோத்தி யில் இராமர் கோவில் அமைப்பு, கீதை, வைதிகம், சமூக-பொருளாதார இருப்பு நிலை இவை முனை முறியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான்.

இந்தக் கொள்கைகளுக்கு ஆக்கம் சேர்க்கும் தன் மையில், பட்டப் படிப்புப் படித்த ஆண்களையும், பெண் களையும் ஆயிரக்கணக்கில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பில் சேர்த்து, கன்னியாகுமரியில் விவேகானந்தர் நிறுவனம், நாகபுரியிலுள்ள தலைமை நிலையம், புதுதில்லி முதலான இடங்களில் நல்ல கொள்கைப் பயிற்சி, பல்துறை உடல் வளப் பயிற்சி எல்லாம் தந்து, இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பி வைக் கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 1948 பிப்பிரவரியில், நாக புரியில் கமுக்கமாகக்கூடி, இரண்டு முடிவுகளை எடுத்தனர்.

1.            அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்பு கள், மகளிர் அமைப்புகள், படைத்துறை, காவல் துறை, வணிகம், ஊடகத்துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் ஊடுருவ வேண்டும்.

2.            கி.பி.2000க்குள் எல்லா அதிகாரங்களையும் கொண்ட இந்திய ஆட்சியைக் கைப்பற்றி, இந்தியாவில் இராமராச்சியத்தை அமைத்தே தீர வேண்டும்.

இந்தக் கொள்கைகளைக் கற்றும் ஏற்றுக்கொண்டும் அதை நிறைவேற்றக் காங்கிரசு மூலம் முயன்றவர் பி.வி. நரசிம்மராவ்; பாரதிய சனதா மூலம் முயன்ற வர்கள் வாஜ்பேயி, எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி. இன்று பாரதிய சனதாக் கட்சியின் ஒற்றை ஆதிக்க ஆட்சி மூலம் முயல்பவர்கள் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, அமித்ஷா, மோகன் பகத் ஆகி யோர் ஆவர்.

நாம் மேலே கூறியுள்ள செய்திகள் நம் கற்பனை அல்ல.

ஆர்.எஸ்.எஸ். பொதுக்குழு 13.10.2014 முதல் 17 முடியவும், அதன் செயற்குழு 18, 19, 20 மூன்று நாள்களிலும் இலக்னோவில் நடைபெற்றன. அச்செயற் குழுவில், “பாரதிய சனதா தனது தேர்தல் அறிக்கை யில் கூறியுள்ளது போல், நரேந்திர மோடி அரசு இராமர் கோவில் கட்டுவதிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்கி, அயோத்தியில் இராமர் கோவில் கட்ட வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்துத்துவ வெறியர்களின் ஆட்சி, 2019க்குள் இதை நிறை வேற்றியே தீரும்.

இந்திய அரசைக் கைப்பற்றிடவென்று, 1952 முதல் தேர்தல்களில் போட்டியிட்டுவரும் பொதுவுடைமைக் கட்சியினர் 1967க்குப் பிறகும், 1984க்குப் பிறகும் பலப்பல பிரிவுகளாகப் பிரிந்து, பிரிந்து இன்று பத்துப் பதினோரு இடங்களை மட்டுமே மக்களவையில் கைப்பற்றுகிற ஈன நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

1945இல் தனிச் சுதந்தர நாடு கேட்ட திராவிடர் இயக்கம்; 1956 இறுதி முதல் 1973 இறுதிவரையில் தனிச் சுதந்தரத் தமிழ்நாடு கோரிய திராவிடர் கழகம் - இவை, அப்போது இணக்கமான முயற்சிகளை மேற் கொள்ளாமலும்; இப்போது அடியோடு அக்கொள்கை களைக் கைவிட்டுவிட்டும் பதவி, பணம், பவிசு இவற் றைத் தேடுவதற்கும் தக்க வைத்துக் கொள்ளவும் பாடுபடுகின்றன.

1948-இல், “உண்மையான அதிகாரம் தேங்கிக் கிடக்கும் இந்திய ஆட்சியைக் கைப்பற்றிட - பிற்படுத் தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் ஆகிய 85 விழுக்காட்டு மக்கள் ஒன்று சேருங்கள்” என அறைகூவல் விடுத்தார், மேதை அம்பேத்கர்.

இதை அறவே புறந்தள்ளிவிட்டு-இவர்களுள் முதன் மையான இந்து பிற்படுத்தப்பட்டோரும் (52 விழுக் காடு), பட்டியல் வகுப்பினரும் (17 விழுக்காடு) ஆன 69 விழுக்காடு பேர், எதிரும் புதிருமாக மாறி, வெறும் பதவி - பணத்துக்காக கண்டவர்களின் காலைப் பிடிக்கவே முயலுகிறார்கள். இனி, இவர்களில் பலரும் மோடியின் காலில் விழுந்தாவது இதற்காக மோசம் போகப் போகிறார்கள்.

மார்க்சு-பெரியார்-அம்பேத்கர்-லோகியாவின் பெயர்களைச் சொல்லிச் சொல்லி நாள்தோறும் தத்தம் மாலானவற்றைச் செய்கிற எல்லோரும், இவற்றை யெல்லாம் ஒருசேர எண்ணி ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும்.

இது, இன்று அகத்தியம்! அகத்தியம்! மிக அகத்தியம்!

- வே.ஆனைமுத்து

Pin It