இந்தியாவில் கோவிட் தடுப்பு மருந்து செப்டம்பர் வரை இருமுறை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 11.1 விழுக்காடாகவும், ஒரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 37 விழுக்காடாகவும் உள்ளது. இந்திய மருத்துவ ஆய்வு மன்றத்தின் (ICMR) மருத்துவர் சமிரான் பாண்டா, கோவிட் -19 தொற்றுநோயின் தீவிரமான இரண்டாவது அலையை எதிர்கொள்ளாத மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது என்றும் இது மூன்றாவது அலையின் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டுகிறது என்றும் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவானது கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அக்டோபரில் உச்சத்தை எட்டும் என்று கூறியுள்ளது. மூன்றாவது கோவிட் அலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நிதியமைச்சர் கூறிவருகிறார்.

nirmalal sitharaman 349கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சமூக தணிக்கை பிரிவுகளால் செய்யப்பட்ட தணிக்கைகளின் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் 935 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு தேவையைக் காட்டிலும் மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதிலும் இந்தளவுக்கு முறைகேடுகள் நிகழ்வது பாஜக அரசின் பொறுப்பற்ற நிர்வாகத்தையே சுட்டிக் காட்டுகிறது. இத்திட்டத்தின் பயனாளிகள் நூறு நாட்களுக்கு குறைவாகவே வேலை பெறுவதுடன் அவர்களுக்கான கூலி உரிய நேரத்தில் கொடுக்கப்படாமல் பெருமளவு நிலுவையில் உள்ளது.

ஜூன் மாதத்தில் இத்திட்டத்தின் கீழ் 45.2 கோடி தனியாள் நாட்களுக்கு வேலை வழங்கப்பட்ட நிலையில் ஜூலை மாதத்தில் அதை விட மிகக் குறைவாக 24.2 கோடி தனிநபர் நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. கோவிட் தாக்கத்தின் காரணமாக வேலை வாய்ப்பின்மை மேலும் அதிகரித்துள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படும் நிலையில் இத்திட்டத்தை நகர்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொருளாதார அறிஞர்களும், இடதுசாரி அமைப்புகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். ஆனால் பாஜக அரசு அக்கறையற்ற அலட்சியப் போக்கிலே செயல்படுகிறது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நீடித்த வேலைவாய்ப்பு மையத்தின் அறிக்கை கோவிட் இரண்டாவது அலை தாக்குவதற்கு முன் மார்ச் முதல் டிசம்பர் வரை வேலையை இழந்த பெண் தொழிலாளர்களில் 47 விழுக்காட்டினர் மீண்டும் வேலை பெற இயலாத நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜனவரி-மார்ச் காலகட்டத்தின் விகிதத்துடன் ஒப்பிடுகையில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக பொருளாதார வல்லுநர் ஹிமான்ஷு குறிப்பிட்டுள்ளார். 15 வயதிற்கு மேற்பட்டோரில் ஐந்தில் ஒருவருக்கு வேலை இல்லாமலும், 15-29 வயதுடையவர்களில் மூன்றில் ஒரு நபரும் வேலையில்லாமல் இருந்துள்ளனர். சாதாரண தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்களின் வேலை நேரம் 2019 அக்டோபர் காலாண்டில் 47.8 மணிநேரத்தில் இருந்தது, 2020 ஜூன் காலாண்டில் 37 மணி நேரமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முறை சாரா தொழிலாளர்கள் குறித்த தரவுகளைத் திரட்ட இ-ஷ்ரம் என்ற புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் முறைசாரா பணியாளர்களை பதிவு செய்து அவர்களுக்கென தனியாக 12 இலக்க எண் அடங்கிய அட்டை வழங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார். இந்தியாவில் முறை சாரா தொழிலாளர்கள் 38 கோடிக்கும் மேல் உள்ளனர். இதில் பதிவு செய்த அனைத்து பணியாளர்களுக்கும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு வசதி ஓராண்டுக்கு கிடைக்கும் என்றும், பணியின் போது உயிரிழப்பு நேர்ந்தால் ரூ.2 லட்சமும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முறைசாரா தொழிலாளர்களுக்கு அட்டை வழங்கி வெறும் காப்பீட்டுத் திட்டத்தை, அதுவும் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள ஒன்றை புதிய திட்டம் போல் அறிவிப்பதன் மூலமே அவர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைத்துவிடும் என்பது கேலிக்கூத்து.

கோவிட் தாக்கத்திற்குப் பிறகு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை சுமார் 9.7 கோடி அதிகரித்துள்ளது. ஐநாவின் உணவு, விவசாய அமைப்பு வெளியிட்ட உலக உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து நிலை குறித்த அறிக்கையின் தரவுகளின் படி (SOFI), இந்தியாவில் உணவுப் பாதுகாப்பின்மை 2018-20 இடைப்பட்ட பகுதியில் சுமார் 6.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. கேலப் உலக கணக்கெடுப்பின் மூலம் உணவு பாதுகாப்பின்மை அளவிடப்படுகிறது. ஆனால் பாஜக அரசு காலப் உலக கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவின் உணவு பாதுகாப்பின்மை குறித்த தகவல்களை வெளியிடுவதை அங்கீகரிக்கவில்லை. சுற்றடியான முறையில் இத்தரவுகளை வருவிக்கும் போது 2019ல் இந்தியாவில் சுமார் 43 கோடி பேர் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. கோவிட் தாக்கத்தின் விளைவாக இந்த எண்ணிக்கை 52 கோடியாக அதிகரித்துள்ளது. 2019ல் 31.6 விழுக்காடாக இருந்த உணவுப் பாதுகாப்பின்மை 2021ல் 38.4 விழுக்காடாக அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் வைசாலி பன்சால் தெரிவித்துள்ளார். சர்வதேச அமைப்புகளால் வெளியிடப்படும் அறிக்கைகளிலும் வெளிப்படைத் தன்மையற்ற நிலையை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது வெட்கக்கேடானது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களோ மத்திய அரசின் நடவடிக்கையால் கரோனா காலத்தில் பசியுடன் யாரும் உறங்கவில்லை என்று கூறியதுடன் சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை வறுமையை ஒழிப்பதற்கான வழிமுறையாகப் போற்றுகிறார்.

விவசாயக் காப்பீட்டுத் திட்டங்களுக்கு கடந்த காலங்களில் மத்திய, மாநில அரசுகள் தலா 49 விழுக்காடும், விவசாயிகள் 2 விழுக்காடும் காப்பீட்டுக்கான முன்தொகை செலுத்தி வந்தனர். இந்நிலையில், மத்திய அரசு தனது பங்களிப்பாக 33 விழுக்காடு மட்டுமே வழங்க முடியும் என பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளது. அதே நேரத்தில், மாநில அரசு தனது பங்களிப்பான 49 விழுக்காட்டை விட கூடுதலாக மேலும் 16 விழுக்காட்டை ஏற்க முடியாத நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு, 2021-2022-ம் ஆண்டில் நெல் மற்றும் தட்டைப் பயறைத் தவிர்த்து இதர பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய வங்கி வருடாந்திர கூட்டு நிதி சேர்க்கை(உள்ளிணைப்புக் குறியீட்டை (FI-Index) அறிமுகப்படுத்தியது. இக்குறியீட்டின் மதிப்பு சுழியமாக (0) இருக்கும் போது அது முழு நிதிவிலக்கத்தையும், 100 ஆக இருக்கும் போது முழு நிதிச் சேர்க்கையையும் குறிப்பிடுகிறது. இந்தக் குறியீட்டை மத்திய வங்கி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் வெளியிடும் என அறிவித்துள்ளது. உள்ளடக்கிய அணுகல், பெறப்படும் சேவைகளின் பயன்பாடு மற்றும் சேவைகளின் தரம், ஆகியவற்றை சுட்டும் 97 குறிகாட்டிகளைக் கொண்டு இந்தக் குறியீடு தயாரிக்கப்படுகிறது. மார்ச் 2021 வரை முடிவடைந்த காலத்திற்கு நிதிச் சேர்க்கைக் குறியீடு 53.9 ஆக உள்ளதாகவும், மார்ச் 2017 வரையிலான காலத்திற்கு இக்குறியீடு 43.4 ஆக உள்ளதாகவும் மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது.

இந்த நிதிக்குறியீடு நிதிச்சேவைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் காட்டியுள்ளது நடப்பு நிலையை பிரதிபலிப்பதாக இல்லை. ஏனேனில் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் சேவை தொடர்ந்து சரிவு நிலையில் உள்ளது நிதி விலக்கத்தையே சுட்டுகிறது.

பொதுத் துறை வங்கிகள் திறனற்றவை என்று வங்கிகளில் தனியார்மயப் போக்கைத் துரிதப்படுத்துகிறது பாஜக அரசு. பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார இடையூறுகள் இருந்தபோதிலும், பொதுத்துறை வங்கிகள் 31,816 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன.பொதுத்துறை வங்கிகள் மூலதன அடித்தளத்தை மேம்படுத்துவதற்காக கடன் மற்றும் பங்குகளின் மூலம் 2020-21ல் சந்தைகளில் இருந்து ரூ.58,700 கோடி திரட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த ஒரு மெய்நிகர் நிகழ்வில் பேசிய தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் வங்கி நொடிப்புநிலை சட்டம் (IBC) நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு நிலக்கிழாரியம் இருந்தது என்றும், பெருநிறுவன கடனாளிகள் தங்களது கட்டுப்பாட்டு ஆளுகையை தெய்வீக உரிமையாக கொண்டிருந்தனர், அந்த நாட்கள் கடந்து விட்டதாகவும் குறிப்பிடுகிறார். பெருமளவில் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அவற்றிலிருந்து மீட்கப்படும் தொகையும் மிகவும் குறைவாகவே உள்ளது. மார்ச் 2020 வரை 46 சதவிகிதத்திலிருந்த வங்கி நொடிப்பு நிலை சட்டத்தின் மீட்பு விகிதம் மார்ச் 2021 லிருந்து 39.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடன் தொகையில் 95 விழுக்காடு தள்ளுபடி செய்யும் போக்கும் காணப்படுகிறது என்பது நிதியமைப்புகளில் முதலாளிகளின் ஆளுகை அதிகமாக இருப்பதையே காட்டுகிறது, அவர் கூறிய படி நிலக்கிழாரியத்தின் ஆளுகை நேற்றையதாக மட்டும் இல்லை என்றபோதும் இன்று கள்ளக் கூட்டு முதலாளித்துவத்தின் ஆளுகையேக் காணப்படுகிறது.

ஐபிசியால் வங்கிகள் முக்கிய நிறுவன நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்களை மீட்க உதவ முடியவில்லை, அவர்கள் தண்டனையின்றி அந்த கடன் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு விட்டனர். வங்கிகளில் இருந்து பெருவணிகர்களுக்கு செல்வத்தை மாற்றுவதற்கான ஒரு கருவியாக இது செயல்படுகிறது. இந்த வங்கிகளில் பெரும்பாலானவை குடிமக்களுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகள் என பொருளியல் பேராசிரியர்கள் சி.பி.சந்திரசேகர், ஜெயதி கோஷ் தங்களது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

தொழில் வணிகங்களுக்கு வரி விதிப்பதன் மூலம் கோவிட் தொற்று நோய் நிதியளிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். கோவிட் வரிவிதிப்பு மூலம் நிதியளிக்கப்படவில்லை. தொற்றுநோயை நிர்வகிக்க எந்தவொரு தனிநபரிடமோ அல்லது தொழில்துறையிடமோ கூடுதலாக ஒரு பைசா கேட்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அது தானே பிரச்சினை, வரிவிதிப்பு எங்கு செய்ய வேண்டுமோ அங்கு செய்யாமல் எங்கு செய்யக்கூடாதோ அங்கு செய்யப்பட்டது. செல்வந்தர்கள், பெரு நிறுவனங்களின் மீதான வரியை அதிகப்படுத்தாமல் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை அதிகரித்து விலைவாசி உயர்வாலும், நிதி நெருக்கடியாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள எளிய மக்களின் துயரை மேலும் அதிகரித்துள்ளது பாஜக அரசு.

ஆகஸ்டில் சமையல் எரிவாயு (LPG) உருளையின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் சமையல் எரிவாயு உருளையின் விலை 265 ரூபாய் அதிகரித்துள்ளது, இது 44 விழுக்காடு உயர்வைக் குறிப்பிடும்.

நவீன தாராளமயத்தின் ஊதுகுழலான நிட்டி ஆயோக் ஒரு புதிய பரிந்துரையை முன்வைத்துள்ளது. நிட்டி ஆயோக் ஒன்றிய அரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சனைகளை அதிகப்படுத்தாமல், பெட்ரோல், டீசல், மின்சாரம் மூன்றையும் ஒரே நேரத்தில் சரக்கு சேவை வரி அமைப்பின் (GST) கீழ் கொண்டு வருவதற்கான ஒரு சூத்திரத்தை முன்மொழிந்துள்ளது. மின்சாரத்தின் மீதான வரி தற்போது மாநிலங்களால் வசூலிக்கப்படுகிறது. மின்சாரத்தை சரக்கு சேவை வரிக்குள் கொண்டுவருவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளை ஈடு செய்வதற்கான நிதி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு மாநிலங்களுக்கு சுமார் ஆறு ஆண்டுகளுக்கு அளிக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் மீது சரக்கு சேவை வரிவிதிப்பு முறையை கொண்டு வருவதன் மூலம், அதிலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 விழுக்காட்டை மாநிலங்கள் பெற வழிவகை செய்யப்படும். தற்போது பெட்ரோல் டீசல் மீதான வரி வருவாயில் 6 விழுக்காடு மட்டுமே பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று நிட்டி ஆயோக் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசலின் மீது 28 விழுக்காடு சரக்கு சேவை வரியையும், 50 விழுக்காடு அல்லது அதற்கும் அதிகமாக கூடுதல் கட்டணங்களை விதிப்பதன் மூலம், மாநிலங்களுக்கு மின்சாரத்திற்கான சரக்கு சேவை வரி இழப்பீட்டுத் தொகையை வழங்கமுடியும். மாநிலங்களுக்கான மின் கட்டண வருவாய் இழப்புகளை ஈடுகட்டுவதற்கான மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் 20 விழுக்காடு குறைக்கப்படலாம். இழப்பீட்டை படிப்படியாக குறைப்பதன் மூலம் கூடுதல் கட்டண வருவாயில் அதிக விகிதத்தை மத்திய அரசு பெற்றுக்கொள்ள முடியும் என நிட்டி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

சரக்கு சேவை அமைப்பில் மாநிலங்கள் இணைவதன் மூலம் அவற்றின் வரி வருவாயில் 14 விழுக்காடு வளர்ச்சிக்கு நிதி இழப்பீடுகள் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படும் என பாஜக அரசு வாக்குறுதி அளித்தது. அதை நம்பி சரக்கு சேவை அமைப்பை ஏற்றுக்கொண்ட மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் சரியாக வழங்கப்படவில்லை. அவற்றின் வரி வருவாய் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் குறைந்துள்ளது. சரக்கு சேவை வரியால் நிதி இறையாண்மையை முற்றிலும் இழந்த மாநிலங்களுக்கு எஞ்சியுள்ள மின்சாரத்தின் மீதான வரியுரிமையையும் பறிக்கும் விதமாக, கூட்டுறவுக் கூட்டாண்மைத் தத்துவத்திற்குப் புறம்பான பரிந்துரையையே நிட்டி ஆயோக் அளித்துள்ளது.

2021ல் ஹுருன் குளோபல் 500 எனப்படும் உலகின் மிகவும் மதிப்புமிக்க 500 தனியார் நிறுவனங்களின் பட்டியலில் 12 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்திய நிறுவனங்களின் பட்டியலில் 18800 கோடி அமெரிக்க டாலர் சந்தை மூலதனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

பங்குச் சந்தையின் தற்போதைய ஏற்றத்திற்கும் உண்மையான பொருளாதாரத்திற்கும் இடையே இணைப்பில்லாத தன்மை காணப்படுகிறது என்று மத்திய வங்கி ஆளுநர் உட்பட பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். ராஜ்ய சபாவில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது தான் அத்தகையக் கருத்துடன் உடன்படவில்லை. இந்த உயர்வு 2020 ஆண்டிலும் இரண்டாவது அலையிலும் நீடித்தது என்பதால் தற்காலிகமானது அல்ல என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மார்ச் 2020 முதல் சந்தை ஏற்ற இறக்கம் அதிகரித்துள்ளது ஆனால் நிதியமைச்சர் அதைத் தலைகீழாக்கி மார்ச் 2020 முதல் சந்தை ஏற்ற இறக்கம் குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். பங்குச் சந்தைகள் இந்திய பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை பிரதிபலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அரசின் தூண்டுதல் நடவடிக்கைகளால் ஏற்படவுள்ள பொருளாதார மறுமலர்ச்சியை முன்னோக்கி இந்தியாவின் பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். மலிவு பணக் கொள்கையால் நிதியளிக்கப்பட்டு பெருகியுள்ள ஊகமுதலீடுகளால் இயக்கப்படும் பங்குச் சந்தையின் ஏற்றத்தை பொருளாதார வளர்ச்சியாகப் பார்ப்பது பொருளாதார அறிவின்மையையே வெளிப்படுத்தப்படுகிறது.

அந்நியச் செலாவணிக் கையிருப்புத் தொகையானது நடப்புக் கணக்கு உபரியல்ல. இன்னமும் நாம் நடப்புக் கணக்கு பற்றாக்குறை நிலையில்தான் உள்ளோம் என்று தலைமை வங்கி ஆளுநர் சக்திக் காந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நிதியமைச்சரோ 620 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி இருப்பு பொருளாதார வளர்ச்சியின் ஒரு நல்ல குறிகாட்டி எனக் கூறியுள்ளார்.

பணவீக்கம்:

மொத்த விலை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 11.16 விழுக்காடாக உயர்ந்துள்ளது, எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 26.02 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் அளவு 6.73 விழுக்காடு அதிகரித்துள்ளது, உணவுப் பொருட்களின் விலைவாசி 9.27 விழுக்காடு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 7.75 விழுக்காடு குறைந்துள்ளது. பழங்களின் விலைவாசி 8.91 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 9.04 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின் விலை. 20.82 விழுக்காடு உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 32.53 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின் விலைவாசி 8.33 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஜூன் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி ஜூன் மாதத்தில் உற்பத்தி 13.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறை, செய்பொருளாக்கத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றில் உற்பத்தி முறையே 23.1, 13.0, 8.3 விழுக்காடு உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் பொதுமுடக்கத்தின் தாக்கத்தால் உற்பத்தி சரிவடைந்ததன் அடிப்படையில் இந்த உயர்வை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். முதன்மை பொருட்கள், மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், உற்பத்தி அளவுகள் முறையே 12.0, 25.7, 22.6, 19.1 விழுக்காடு உயர்ந்துள்ளன. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 30.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 4.5 விழுக்காடு குறைந்துள்ளது.

ஜூலையில் தொழில்துறை வளர்ச்சி:

இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக்குறியீடு ஜூலையில் 9.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு ஜூலை மாத உற்பத்தி அளவோடு ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 18.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 3.2 விழுக்காடு குறைந்துள்ளது, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 6.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 0.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 18.9 விழுக்காடும், எஃகு உற்பத்தி 9.3 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 21.8 விழுக்காடும், மின்சார உற்பத்தி 9.0 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

2021-22 (ஏப்ரல்-ஜூன்) முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு பொருளாக்க மதிப்பீடு:

2021-2022 நிதியாண்டின் முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) இந்தியாவின் மொத்த பொருளாக்க மதிப்பு 332.38 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது, 2020-21 முதல் காலாண்டில் பொதுமுடக்கத்தால் மொத்த பொருளாக்க மதிப்பு 26.95 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து வளர்ச்சிவிகிதம் 24.4 விழுக்காடு குறுக்கமடைந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 20.1 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையான வளர்ச்சியைக் குறிப்பிடவில்லை. பொருளாதாரம் கொரோனா தாக்கத்திற்கு முந்தைய நிலையை அடையவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது. முதல் காலாண்டில் மதிப்புக் கூட்டலின் மதிப்பு 18.8 விழுக்காடு உயர்ந்துள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி 4.5 விழுக்காடும், சுரங்கத் தொழில்களின் வளர்ச்சி விகிதம் 18.6 விழுக்காடாகவும், உற்பத்தித் துறையின் வளர்ச்சி 49.6 விழுக்காடாகவும், மின்சாரம், நீர் வழங்கல், பிற சேவைகளின் வளர்ச்சியானது 14.3 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளன. வர்த்தகம், போக்குவரத்து, ஹோட்டல், தகவல் தொடர்புதுறைகளின் வளர்ச்சி 34.3 விழுக்காடாகவும், நிதி, வீட்டுமனை, தொழில் சேவைத் துறைகளின் வளர்ச்சி 3.7 விழுக்காடாகவும், பொது நிர்வாகம், பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி 5.8 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளன. தனியார் நுகர்வு செலவினம் 55.1 விழுக்காடும், அரசு நுகர்வு செலவினம் 13 விழுக்காடும், மொத்த நிலை மூலதன உருவாக்கத்தின் மதிப்பு 31.6 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

உள்கட்டமைப்பு சொத்துக்களை பணமாக்கி உள்கட்டமைப்பை மேம்படுத்துவோம் என்று கூறுவதில் ஏதேனும் தர்க்கப் பொருத்தம் உள்ளதா. சாலைகள், ரயில்வே தடங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை பணமாக்கி புதிய சாலைகள், ரயில்வே தடங்கள் அமைக்கப்படுமாம். இத்திட்டம் பொருளாதார மீட்சிக்கு தேவையான ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். தேசிய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதித்திட்டம் 100 லட்சம் கோடிக்கு மேலான முதலீட்டின் மூலம் அரசு-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என பிரதமரும், நிதியமைச்சரும் அறிவித்திருந்தனர். இதன் கீழ் ரூ.6லட்சம் கோடி சொத்து பணமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசு சொத்துக்கள் தனியார்மயமாக்கப்படாது, விற்கப்படாது என்றும் அரசு தற்போதுள்ள உள்கட்டமைப்பு சொத்துக்களை தனியார் துறையுடனான ஒப்பந்தக் கூட்டாண்மை மூலம் வருவாய் பகிர்வு மாதிரியின் கீழ் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் பணமாக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வரியல்லா வருவாய் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

நான்கு ஆண்டுகளின் முடிவில் ஏட்டளவில் வேண்டுமானால் சொத்துக்களுக்கு அரசு உரிமைதாரராக இருக்கலாம். அரசே தனியாருக்கு விலை போனபின் அரசின் சொத்துக்கள் தனியார்வசமாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இத்தகைய திட்டம் ஆஸ்திரேலியாவில் செயல்படுத்தப்பட்டு தோல்வியடைந்துள்ளது எனும் போது எவ்வாறு இத்திட்டத்தால் பொருளாதார மீட்சிக்கு உதவமுடியும்?. ஆஸ்திரேலியாவிடமிருந்து பாடம் பெறாமல் கண்மூடித்தனமாக இத்திட்டத்தை செயல்படுத்துவது பாஜக அரசின் பிடிவாதமான நவீன தாராளமயப் போக்கையும், பொறுப்பின்மையையுமே சுட்டிக் காட்டுகிறது.

6 லட்சம் கோடி நிதித் திரட்டவே இந்த கதி என்றால், எந்த அடிப்படையில் 100 லட்சம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என வாய்ச் சவடால் அடிக்கிறது பாஜக அரசு? தனியார் துறையிடம் அரசு சொத்துக்களை ஒப்படைப்பது முற்றிலும் ஜனநாயகத்துக்கு புறம்பானது. இந்தியாவில் 2016ல் சொத்து வரிவிதிப்பு நீக்கப்பட்டது. உலக வங்கி மதிப்பீடுகள் இந்தியாவில் அமெரிக்காவை விட வருவாய் சமமின்மை அதிகமாக உள்ளதாகக் குறிப்பிடுகிறது. 2019ல் பெருநிறுவனங்களின் மீதான வரியும் குறைக்கப்பட்டது. இத்தகைய கேடுகெட்ட பணமாக்கல் திட்டத்திற்கு பதிலாக பெருநிறுவனங்களின் மீதான வரியை அதிகரித்து, சொத்துவரியை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் பெறப்படும் நிதியை பொதுத்துறை முதலீடுகளுக்காகவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தமுடியும். அதற்காக அனைத்து அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும்.

சமந்தா

Pin It