ஒரு தடவைகூட சட்டமன்ற உறுப்பினராக இருந்திராத நரேந்திரமோடி ஆர்.எஸ்.எஸ். ஆதரவால் நேரடியாக 2001இல் குசராத் மாநிலத்தின் முதலமைச் சராக முடிசூட்டப்பட்டார். அதன்பின் நடந்த குசராத் சட்டப்பேரவையின் மூன்று பொதுத் தேர்தல்களிலும் பா.ச.க.வுக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தார். அதேபோல, தில்லி நாடாளுமன்றத்திற்குள் ஒருமுறை கூட நுழைந்து பார்க்காத நரேந்திர மோடி சங்பரி வாரங்களின் பேருதவியுடனும் பெருமுதலாளிகளின் பணவலிமையின் துணையுடனும் 2014 மே மாதம் இந்தியாவின் தலைமை அமைச்சராக ஆட்சி பீடம் ஏறினார்.

2014 ஆகத்து 15 அன்று செங்கோட்டையில் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிய பின் ஆற்றிய உரையில், “வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்பின் சப்பான் சென்ற போது, “உங்கள் அதிர்ஷ்டத்தை இந்தியாவில் வந்து சோதித்துப் பாருங் கள், இந்தியாவில் குறைந்த செலவில் பல அதிசயங்கள் நிகழும். எந்தத் தொழிலதிபருமே குறைந்த செலவி லான உற்பத்தியைத் தானே விரும்புவார்? இந்தியா வில் ஏராளமான உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். வாருங்கள்” என்று சப்பான் நாட்டு முதலாளிகளி டையே அவர் ஆற்றிய உரை, சுரண்டலுக்கான அப் பட்டமான அழைப்பாகும் (தி இந்து (தமிழ்), 5-10-14).

தில்லியில் 25.9.2014 அன்று இந்தியாவில் முன்னணியில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெரு முதலாளிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், ‘இந்தியா வில் உருவாக்குவோம்’ (Make in India) என்ற முழக் கத்தை முறைப்படி அறிவித்தார். உடல் முழுவதும் இயந்திரப் பாகங்கள் சுழலும் சிங்கத்தின் உடலில் ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ என்கிற முழக்கம் பொறிக்கப்பட்ட சின்னத்தை அதன் அடையாளக் குறி யீடாக வெளியிட்டார். அப்போது, மோடி ‘இது சிங்கம் எடுத்து வைக்கும் முதல் அடி’ என்று பெருமிதம் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, “‘இந்தியாவில் உற்பத்தி’ என்பது வெறும் முழக்கமோ, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அழைப்போ அல்ல. இதில் அரசியல் காரணங்களும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு உந்து தல் அளிப்பதே இதன் நோக்கம். முந்தைய ஆட்சிக் காலத்தின் போது, இங்கு தொழில் செய்துவந்த நிறு வனங்கள், தங்களது முதலீடுகளை எடுத்துக்கொண்டு வேறு நாடுகளுக்குச் செல்லலாமா என்று எண்ணிக் கொண்டிருந்த நிலை தற்போது இல்லை. என்னுடைய தலைமையிலான பா.ச.க. ஆட்சியில் கடந்த 100 நாள்களில் நிலைமை மாறிவிட்டது. இந்த அரசின் எளி மையான நிர்வாகம் முதலாளிகளை ஈர்க்கிறது. எனவே இனி தொழில் துறையில் உலக அளவில் சிங்கம் போல் வீறுநடை போடுவோம்” என்று முழங்கினார்.

எம்.ஜி.ஆர். நடித்த பல திரைப்படங்களில் அவர் தோன்றும் முதல் காட்சியில், ‘வெற்றி, வெற்றி, வெற்றி’ என்று சொல்லிக் கொண்டே ஓடிவருவார். அதுபோல தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, இந்திய அரசியல் திரைவானில் ஒப்பற்ற மாபெரும் நட்சத்திரமாகிவிட் டார். அதனால் அவர் கலந்துகொள்ளும் எல்லாக் கூட் டங்களிலும் ‘வளர்ச்சி (Development) வளர்ச்சி, வளர்ச்சி’ என்று முழங்குகிறார். இந்த வளர்ச்சிக்காகத்தான் ‘இந்தியாவில் உற்பத்தி’ என்கிற ‘மாபெரும் தத்துவத் தைக்’ கண்டுபிடித்திருக்கிறார். இந்தியாவில் உற்பத்தி என்பதில் எதை உற்பத்தி செய்யப் போகிறார்கள்? யாருக்காக உற்பத்தி செய்யப் போகிறார்கள்? இது வெகு மக்களுக்கான அரசா? பெருமுதலாளிகளுக்கான அரசா? என்பதை மோடியே தெளிவுபடுத்திவிட்டார் அந்த உரையில் :

“அரசின் கொள்கைகள் அவ்வப்போது மாற்றப்படு வதாலும் மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) விசாரணை எதிர்கொள்ள நேரிடுவதாலும் பல்வேறு காரணங்களாலும் பெருமுதலாளிகளிடையே அச்சம் எழுந்துள்ளது. நான் உங்கள் அச்சத்தை அகற்றவும், நம்பிக்கையை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளேன். இந்த நாடு உங்களுடையது. நமது நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக வேண்டும்” என்றார்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் (2ஜி) 1,76,000 கோடி உரூபா கொள்ளையடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் பணத்தை ஆ. இராசாவும், கனிமொழியும் மட்டுமே மூட்டைக்கட்டி எடுத்துக் கொண்டு வந்துவிட்டது போல முதலாளிய ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது. அலைக்கற்றை ஊழலுக்கு உந்துவிசையாக இருந்து, இக்கொள்ளையில் பெரும்பங்கு பெற்ற முதலாளிய நிறுவனங்களின் பெயர் பட்டியல் மக்கள் பார்வையில் படாமல் மறைக்கப்படுகிறது. இதேபோல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலிலும் முதலாளிகள் பெருங் கொள்ளையடித்தனர். கோதாவரி படுகையில் எண் ணெய் வயல்களில் முகேஷ் அம்பானி அரசை மிரட்டி யும், ஏமாற்றியும் கொள்ளையடித்து வருகிறார். ஆனால் நரேந்திர மோடி இந்த முதலாளிகளின் கொள்ளைக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறார். இம்முதலாளி களின் பணத்தால், ஆதரவால் தானே தலைமைய மைச்சரானார்! அதற்கு மோடி நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா?

செப்டம்பர் மாத இறுதியில் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றபோது, தன் ஆட்சியின் நோக்கத் தை இன்னும் வெளிப்படையாகப் பேசினார். “அரசாங்கம் தொழில்களில் ஈடுபடக்கூடாது. அதன் வேலை தொழில் களுக்குத் துணையாக இருப்பது மட்டுமே. சில சமயங் களில் அரசாங்கங்கள் புதிய சட்டங்களை இயற்ற விரும்புகின்றன. நான் அவ்வாறு செய்யமாட்டேன். விரைவில் ஒரு புதிய குழு ஒன்றை அமைக்கவிருக் கிறேன். அதன் பணி தேவையற்ற சட்டங்களை நீக்கு வது மட்டுமே. எனவே தொழில் தொடங்க இந்தியா வுக்கு வாருங்கள்” என்று அமெரிக்க முதலாளிகளுக் கும் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி முதலாளிகளுக்கும் அழைப்பு விடுத்தார் மோடி.

அமெரிக்கப் பயணத்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியதும், பெருமுதலாளிகளுக்கு அளித்த வாக் குறுதியை நிறைவேற்றுவதன் ஒரு பகுதியாக, 16.10.14 அன்று தில்லியில், நடுவண் அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் ‘ஷிரமேவ ஜெயதே’ (Shramev Jayate) என்கிற திட்டத்தைத் தொடக்கி வைத்தார். ‘ஷிரமேவ ஜெயதே’ என்பதற்கு ‘உழைப்பே வெல்லும்’ என்று பொருள். அரசியல் கட்சி களின் தலைவர்களுக்கும் - ஆட்சி அதிகாரத் தலைமை யில் இருப்பவர்களுக்கும் மக்களைத் திசைதிருப்பவும், ஏமாற்றவும் அவ்வப்போது கவர்ச்சியான முழக்கங்கள் தேவைப்படுகின்றன. 1971இல் இந்திரா காந்தி ‘வறு மையே வெளியேறு’ என்று முழங்கினார். இப்போது மோடி, - ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’, ‘தூய்மை இந்தியா’, ‘உழைப்பே வெல்லும்’ என்கிற முழக்கங் களை அடுத்தடுத்து அள்ளித்தந்து கொண்டிருக்கிறார்.

‘துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சம்’ என்பது போல தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் மேலும் சுரண்டுவதற்கு வழிவகை செய்யும் இத் திட்டத்திற்கு ‘உழைப்பே வெல்லும்’ என்று பெயர்ச் சூட்டப்பட்டிருக்கிறது.

இத்திட்டம் அமைப்புசார் நிறுவனங்களில் (Organised Sector) வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். 15 முதல் 60 அகவை வரையில் இருப்பவர்கள், ‘உழைக்கும் வயதில் உள்ளவர்கள் (Work Force)’ எனப்படுகின்றனர். தற்போது இந்தியாவில் உழைக்கும் வயதில் 72 கோடிப் பேர் இருக்கின்றனர். இவர்களுள் 7 விழுக்காட்டினர் மட்டுமே அமைப்புசார் தொழில் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். 93 விழுக்காட்டினர் அமைப்புசாரா தொழில்களில் ஈடு பட்டுள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்களில் 52 விழுக்காட்டினர் வேளாண்மையில் இருக்கின்றனர்.

1948ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டப்படி, மின்சார இணைப்பு வசதியுடன் பத்து பேருக்கு மேல் வேலை செய்யும் நிறுவனமும், மின்சார இணைப்பு வசதியில்லாமல் 20 பேருக்கு மேல் வேலை செய்யும் நிறுவனமும் அமைப்புசார் தொழில் நிறுவனமாகும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அமைப்புசார் நிறு வனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை ‘நீலச்சட்டையினர்’ (Blue-collared) என்று குறிப்பிடுவ துண்டு.

அமைப்புசார் தொழிலாளர்களுக்குப் பணிப் பாது காப்பு, முறைப்படுத்தப்பட்ட ஊதியம், போனஸ், மருத்துவ வசதி, தொழிலாளர் நல நிதி, ஊதியத்துடனான விடு முறை, பணியிடத்தில் பாதுகாப்பான சூழல் முதலான பலவகையான காப்பு ஏற்பாடுகள் தொழிலாளர் நலச் சட்டங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவை 93 விழுக்காட்டினராக உள்ள அமைப்புசார் தொழிலாளர்களுக்கு இல்லை. நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 50 விழுக்காடு பங்களிப்பு செய்யும் இவர்கள் அரசுகளால் தொடர்ந்து புறக்கணிக் கப்படுகின்றனர்.

அமைப்பு சார் தொழிலாளர்கள், தொழிலாளர் நல வைப்பு நிதிக்காகத் தங்கள் மாத ஊதியத்திலிருந்து ஒரு தொகையைத் தருகின்றனர். அவர்கள் பணி செய்யும் நிறுவனமும் ஒரு தொகையை அளிக்கிறது. ஒரு தொழி லாளி வேறொரு தொழிற்சாலையில் வேலையில் சேரும்போது, அத்தொழிலாளியின் பெயரில் உள்ள நல வைப்பு நிதியில் உள்ள பணம் புதிய நிறுவனத் துக்கு முறையாக மாற்றப்படுவதில்லை. அதனால் தொழிலாளர் நலநிதியில் இவ்வாறு 27 கோடி உரூபா கேட்பாரின்றி முடங்கிக் கிடக்கிறது. இதுபோன்ற குறை களைக் களைந்திட ‘ஆதார் அட்டை எண்’ வழங்கப் பட்டது போல அமைப்புசார் தொழிலாளர் ஒவ்வொரு வருக்கும் தனியான நலவைப்பு நிதி எண், ‘உழைப்பே வெல்லும்’ திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார். இதனால் 4.17 கோடி தொழி லாளர் பயன்பெறுவார்கள் எனப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்பதை மறுக்க முடியாது.

வண்டியில் பூட்டிய குதிரையின் முன்னால் வண்டிக் காரன் சிறிய புல்லுக்கட்டைக் காட்டுவது போன்றதே ‘உழைப்பே வெல்லும்’ எனும் திட்ட அறிவிப்பு. இத்திட் டத்தின் பெயரால் தொழிலாளர் வர்க்கம் நீண்டகாலம் போராடிப் பெற்ற உரிமைகளை முதலாளிகள் குழி தோண்டிப் புதைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 16 வகையான தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிற் சாலைகளில் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்துத் தனித்தனியான அறிக்கையைத் தொழிலாளர் நலத்துறைக்கு முதலாளிய நிறுவனங் கள் அனுப்ப வேண்டும். நிறுவனத்தின் நிருவாகத் துக்கு இது இடையூறாக இருக்கிறது என்ற மோடி கருதியதால், எளிமைப்படுத்தப்பட்ட ஒரே படிவத்தை நிரப்பி அனுப்பினால் போதும் என்று ‘உழைப்பே வெல்லும்’ திட்டம் கூறுகிறது. அதாவது முதலாளிகளே தங்களுக்கான நற்சான்றை வழங்கிக் கொள்ளலாம்.

1991 முதல் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்பது இந்திய அரசின், மாநில அரசுகளின் கொள் கையாக ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளைத் தாயகமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் மூலதனத்தை இடுவதற்கும், உற்பத்தி செய்வதற்கும் இருந்த கட்டுப்பாடுகள் கிட்டத் தட்ட முழுமையாக நீக்கப்பட்டுவிட்டன. அத்துடன் இம்முதலாளிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க நிலம், தடையற்ற மின்சாரம், நீர் வசதி, சாலை வசதி, பலவகையான வரி விடுமுறைகள் - விலக்குகள் முதலானவற்றை அரசு அளித்து வருகிறது. ஆனால் தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளி களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப திருத்தவில்லை; நீக்க வில்லை. நடப்பில் தொழிலாளர் நலச் சட்டங்கள் பலவாறாக முதலாளிய நிறுவனங்களால் மீறப்பட்டு வருகின்றன. ஆயினும் முதலாளிகள் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தினால்தான் மேலும் மூல தனத்தை இடமுடியும்; வேலைவாய்ப்புப் பெருகும்; நாட்டின் வளர்ச்சி அதிகமாகும் என்று இடைவிடாது கூப்பாடு போட்டு வருகின்றனர்.

 பன்னாட்டு நிறுவனங்களின் காவல் அரணாகச் செயல்படும் உலக வங்கி 2008ஆம் ஆண்டு வெளி யிட்ட அறிக்கையில், “உலகிலேயே இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டங்கள் சிக்கலானவையாக வும், தொழில் வளர்ச்சிக்குத் தடைகளை ஏற்படுத்து வனவாகவும் உள்ளன. அதனால் தொழில் துறையின் தற்போதைய உலகச் சூழலைப் பயன்படுத்தி வேக மாக வளர முடியாமல் தடுமாறுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் புதிய உழைக்கும் அகவையினராக (New Work Force) 8 கோடி இளைஞர்கள் நுழைய உள்ளனர். எனவே இந்திய அரசு இதைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் சட்டங்களைத் திருத்த வேண்டும்” என்று அறிவுரை வழங்கியுள்ளது. பெரு முதலாளிகளும் முதலாளிய அறிஞர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வந்தனர்.

நேரு தலைமை அமைச்சராக இருந்தபோது, இராசாசி சுதந்தராக் கட்சியை நிறுவி அதன் தலை வராக இருந்தார். நேருவின் போலியான சோசலிசக் கோட்பாடுகளைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாமல், இராசாசி, நேருவின் ஆட்சியை ‘பர்மிட்-லைசன்ஸ் ராஜ்’ என்று கூறினார். அதுபோல் மோடி ‘இன்ஸ்பெக்சன் ராஜ்’ (Inspection Raj) முறையை ‘உழைப்பே வெல்லும்’ திட்டம் மூலம் ஒழிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

தொழிலாளர் நலத் துறையின் அலுவலர்கள், தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப் படுகின்றனவா என்று ஆராய்வது என்ற பெயரில், முதலாளிகளுக்குப் பல வகையிலும் தொல்லைத் தருகின்றனர். இது ஊழலுக்கு வழிவகுப்பதுடன், தொழில் வளர்ச்சிக்குத் தடையாகவும் இருக்கிறது என்று மோடி அங்கலாய்த்துக் கொள்கிறார். ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்வது அப் பகுதிக்கென அமர்த்தப் பெறும் அரசு ஆய்வாளரின் பொறுப்பு என்று இருப்பதால்தான், முதலாளிகளுக்குத் தொல்லைகள் ஏற்படுகின்றன. எனவே இனி கணினி மூலம் சீட்டுக் குலுக்கி எடுப்பதுபோல் அலுவலர்களைப் பொறுக்கி எடுத்து, தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்யும் நடைமுறை பின்பற்றப்படும் என்று ‘உழைப்பே வெல்லும்’ திட்டத்தில் மோடி அறிவித்துள்ளார். மேலும் ஆய்வாளர் தன் ஆய்வு அறிக்கையை 72 மணிநேரத் திற்குள் கணினியில் பதிவேற்றம் செய்யவேண்டும். இந்த ஆய்வறிக்கைக் குறித்து மத்தியக் குழு ஆய்வு செய்யும். அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளில் உண்மை இருப்பின், அது தொடர்பான தொழில் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படும். நிறுவன முதலாளி அளிக்கும் விளக்கத்தை ஆய்வு செய்த பிறகு, தேவைப்படின் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்பது அப்பட்டமான முதலாளிய ஆதரவு நிலைப்பாடாகும். எனவே இனிமேல் முதலாளி கள் அரசின் ஆய்வாளர்களைக் கண்டு அஞ்ச வேண்டிய தில்லை என்று மோடி ஆறுதல் கூறுகிறார்.

ஆனால் உண்மை நிலை என்ன? இந்திய அரசின் தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட ஆண்டு அறிக்கை நூலில், 1986 முதல் 2008 வரையில் ஆண்டுவாரி யாக ஆய்வு செய்யப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக் கையும் அதன் விழுக்காடும் பட்டியலாகத் தரப்பட் டுள்ளது. அதன்படி 1986 இல் அரசின் பதிவுப் பட்டிய லில் 1,65,637 தொழிற் சாலைகள் இடம்பெற்றிருந்தன. இவற்றுள் 1,04,435 தொழிற்சாலைகள் அதாவது 63.05 விழுக்காடு மட்டுமே தொழிலாளர் நலத்துறை யின் அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டன. 2008 இல் மொத்தம் 1,49,506 தொழிற் சாலைகளில் 26,732 தொழிற்சாலைகள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன. அதாவது 17.88 விழுக்காடு தொழிற்சாலைகள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன (Economic and Political Weekly, July 28, 2014, P.65) ஆய்வாளர்களைக் கண்டு தொழிற்சாலை அதிபர்கள் அஞ்சுகிறார்கள் என்கிற மோடியின் கூற்றின் மோசடி யைப் பாருங்கள்.

குரங்கு தன் குட்டியின் கையை விட்டு நீரின் ஆழத்தைப் பார்ப்பது போல, பா.ச.க. வசுந்தரா ராஜே தலைமையிலான இராஜஸ்தான் மாநிலத்தில் 1.8.2014 அன்று, 1947ஆம் ஆண்டின் தொழில் தகராறு சட்டம், 1948ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டம், 1970ஆம் ஆண்டின் ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழித்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் ஆகியவற்றில் திருத் தங்களைச் செய்துள்ளது. புதிய வேலை வாய்ப்பு களை இச்சட்டத்திருத்தங்கள் உருவாக்கும் என்று முதலமைச்சர் வசுந்தரா கூறியுள்ளார்.

தொழிலாளர் சட்டங்கள் பொது அதிகாரப் பட்டிய லில் இருப்பதால், இதுகுறித்துப் புதிய சட்டங்கள் இயற்றவும், இருக்கின்ற சட்டங்களைத் திருத்தவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே நடைமுறைக்கு வரும்.

1947ஆம் ஆண்டின் தொழில் தகராறு சட்டத்தில் ‘வி-பி’ (V-B) பிரிவு விதியில், 100 பேருக்கு மேல் வேலை செய்யும் தொழில் நிறுவனங்களைக் கதவடைப் புச் செய்யவும், நிலையாக மூடவும், தொழிலாளர் களை வேலையிலிருந்து நீக்கவும் அரசின் முன் அனுமதியைத் தொழில் நிறுவனம் பெற்றாக வேண்டும். முதலாளிகள் இச்சட்டப் பிரிவை அடியோடு அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் அளித்து வருகின்றனர். அப்போதுதான் நிரந்தரத் தொழி லாளர் முறை என்பதை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, தங்கள் விருப்பம் போல் தற்காலிகமாகத் தொழிலாளர் களை வேலையில் சேர்க்கவும் நீக்கவுமான (Fire and Hire) உரிமையைப் பெறமுடியும் என்பது முதலாளி களின் நோக்கமாகும். இதன்மூலம் தொழிலாளர்கள் சங்கம் அமைத்துத் தங்கள் உரிமைகளுக்காகப் போராடு வதற்கான வாய்ப்பே இல்லாமல் செய்துவிட முடியும். குறைந்த கூலியில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த இலாபம் குவிக்க முடியும்.

தொழில் தகராறு சட்டத்தின் வி-பி பிரிவு நடப்பில் உள்ளபோதிலும் முதலாளிகள் பலவகையிலும் அதை மீறி நடப்பதை அரசுகள் கண்டுங்காணாமல் இருப்பது வழக்கமாகிவிட்டது. 1997-98 முதல் 2003-04 வரை யிலான காலத்தில் 7,30,000 நிரந்தரத் தொழிலாளர் கள் வேலை இழந்தனர். மேலும் நடுவண் அரசு ஒரு குறுக்கு வழியில் முதலாளிகளுக்கு ஆதரவாக 1946 ஆம் ஆண்டின் ‘வேலை வாய்ப்பு நிலை ஆணைகள்’ சட்டத்தில் 2003ஆம் ஆண்டு ஒரு திருத்தம் செய்தது. இதன்படி, தொழிலாளர்களுக்கு ‘ஒரு குறிப்பிட்ட காலத் திற்கு மட்டும் வேலை அளித்தல்’ (Fixed-term Employment) என்ற முறையைக் கொண்டுவந்தது. இதனால் அமைப்பு சார் தொழில் நிறுவனங்களிலும் தற்காலிக - ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர் எண்ணிக்கை அதிக மாயிற்று.

2003-04 முதல் 2009-10 வரையிலான காலத் தில் தற்காலிகத் தொழிலாளர் எண்ணிக்கை 10.5 விழுக்காட்டிலிருந்து 25.6 விழுக்காடாகக் உயர்ந்தது. நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை 68.3 விழுக் காட்டிலிருந்து 52.4 விழுக்காடாக் குறைந்தது. 2011-12ஆம் ஆண்டில் அமைப்புசார் தொழில் நிறுவனங் களில் உள்ள தொழிலாளர்களில் 77.5 விழுக்காட்டினர் எழுத்து வடிவிலான பணி ஆணையில்லாமலே - வாய்மொழி ஆணை மூலம் மட்டுமே வேலை செய் கின்றனர் என்பது எந்த அளவுக்குத் தொழிலாளர் களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்பதைப் புலப்படுத்துகிறது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் தொழிலாளர் ஊதியத்தின் பங்கு 1980இல் 30 விழுக்காடாக இருந்தது. இந்தப் பங்கின் அளவு 1990களில் 20 விழுக்காடாகவும், 2010இல் 9.5 விழுக் காடாகவும் குறைந்துவிட்டது. அதேசமயம் இதே காலத் தில் முதலாளிகளின் இலாபத்தின் அளவு 20 விழுக் காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

பா.ச.க. ஆளும் இராஜஸ்தான் மாநில அரசு நிறைவேற்றியுள்ள தொழிலாளர் சட்டத்திருத்தங்களின் படி, ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 20 பேருக்குமேல் வேலை செய்யும் தொழில் நிறுவனங்களுக்கே பொருந் தும் என்பதை 50 தொழிலாளர்களுக்கு மேல் என்று உயர்த்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்கிற உரிமை கோருவதற்கு மொத்தத் தொழிலாளர் களில் 15 விழுக்காட்டினர் உறுப்பினராக இருக்க வேண் டும் என்ற வரம்பை 30 விழுக்காட்டினராக உயர்த்தி, உண்மையாகத் தொழிலாளர் நலனுக்காகப் போராடும் தொழிற்சங்கங்கள் உருவாகவிடாமல் முடக்குகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களைச் செயல்படுத்த 100 தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்ற வரம்பை, 300 தொழிலாளர்களுக்குமேல் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கே பொருந்தும் என்று இராஜஸ்தான் அரசு உயர்த்தி இருக்கிறது. இதன்படி தற்போது இராஜஸ்தானில் உள்ள 7,622 தொழிற் சாலைகளில் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். 7,252 தொழிற்சாலைகளில் முதலாளிகள் தம் விருப்பம் போல் தொழிலாளர்களை ஆட்டிப்படைத்து ஒட்டச்சுரண்டும் உரிமை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் தரப்பட்டுள்ளது. குசராத் மாநில அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்திருத்தங்களைவிட இன்னும் கேடான திருத்தங்களை நடுவண் அரசில் கொண்டுவர மோடி ஆட்சி அணியமாகிக் கொண்டிருக்கிறது.

நடுவண் அரசும், மாநில அரசுகளும் தொழிலாளர் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவது போலவே உயர் நீதித்துறையும் முதலாளிகளுக்கு ஆதரவான தீர்ப்பு களையே தொடர்ந்து வழங்கி வருகிறது. 1997இல் கேரள உயர்நீதிமன்றம் தொழிற்சங்கங்கள் ‘பந்த்’ நடத்துவது சட்டத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளித் தது. 2003 இல் சென்னை உயர்நீதிமன்றம் வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள் 1.5 இலட்சம் பேரை ஒரே இரவில் பணிநீக்கம் செய்த செயலலிதாவின் செயலை நியாயப்படுத்தியது. 2006 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் பித்தளைப் பொருள் கழகம் தொடர் பான வழக்கில் உச்சநீதிமன்றம், “சோசலிசம் ஈர்ப்பான முழக்கமாக நம் நாட்டில் முன்பு இருந்தது. அரச மைப்புச்சட்ட முகப்புரையில் சோசலிசம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ஆனால் 1990 தொடக்கம் முதல் நடுவண் அரசு தாராளமயக் கொள்கையைப் பின்பற்று வதால், இந்தச் சமூகத்தில் சோசலிசக் கருத்துகள் மறைந்து வருகின்றன. இத்தகைய யதார்த்தமான பொருளாதார மாற்றச் சூழலைக் கருத்தில் கொண்டு தான் உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்திற்கு விளக்க மளிக்க முடியும்” என்று உழைக்கும் வர்க்கத்தின் மண்டையைக் கோடாரியால் பிளப்பது போன்ற கருத் தைக் கூறியுள்ளது. (EPW சூலை 26, 2014, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவின் கட்டுரை).

முதலாளிகள் கொழுத்த இலாபம் பெற, எப்போதும் வேலையில்லாதக் கூலிப்பட்டாளம் (reserved army) அதிக எண்ணிக்கையில் இருக்கவேண்டும் என்று காரல் மார்க்சு குறிப்பிடுவார். இத்தன்மையில் இந்தியா வில் உழைக்கும் வயதினருள், வேலை இல்லாமலும், வயிறார உண்பதற்குக்கூட உரிய வருவாய் தரும் வேலை இல்லாமலும் 22.69 கோடிப் பேர் இருக்கின்ற னர். இவர்களில் 95 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின-பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த வர்களேயாவர்.

எனவே உழைக்கும் மக்கள் சாதி, மத வேறுபாடுகளைத் துறந்து ஒரே வர்க்கமாக அணி திரண்டு கடுமையாகப் போராடுவதன் மூலமே ஆட்சியாளர்கள், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியோரின் ஆதிக்கக் கூட்டணியை முறியடித்துத் தங்கள் அடிப்படை உரிமைகளையும் வாழ்க்கைத் தேவைகளையும் பெறமுடியும்.

Pin It