கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

(சென்ற இதழ் தொடர்ச்சி)

கிராஸ் செய்ய பெரியார் மறுப்பு

ஈ.வெ.ரா. சாட்சியை ஒன்றும் கேள்வி கேட்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

நீதி :- உங்கள் பேரில் கிரிமினல் குற்றம் சாட்டப் பட்டிருக்கின்றதாகையால், வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட ஸ்டேட்மெண்டைத்தான் கொடுக்க வேண்டும். சம்பந்தப் படாத வெளி விஷயங்களை நான் ஏற்கமாட்டேன்.

ஈ.வெ.ரா. :- நான் சட்ட நிபுணனல்ல. சாட்சியங் களைக் காதில் கேட்டேன்; பார்த்தேன்; பதில் கூறு கிறேன். எனக்கு பதில் கூற உரிமையுண்டு. இயன் றால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், தள்ளி விடுங்கள். நான் வழக்கிற்குச் சம்பந்தப்பட்டவை களையே கூறுகின்றேன்.

பின்னர் பெரியார் தமது நீண்ட வாக்குமூலத்தைப் படித்து நீதிபதியிடம் கொடுத்தார். படிக்கும்போது நடுவில் நீதிபதி சரி சரியெனத் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார்.

பின்னர் கிரவுன் பிராசிக்கூட்டர் எழுந்து தங்களுக்கு இவ்வழக்கில் தண்டனையளிக்க வசதியாயிருக்கும் பொருட்டு எதிரியின் பேச்சுகளில் ஆட்சேபகரமான வற்றை சிகப்பு மையினால் மார்க் செய்கிறேன் என்று கூறி, மார்க் செய்து அப்பகுதிகளைக் கோர்ட்டில் வாசித்துக் காண்பித்தார்.

அதன்பின் நீதிபதி குற்றப் பத்திரிகை வாசித்தார்.

தீர்ப்புக்கூற ஒத்தி வைப்பு

பெரியார் தான் குற்றவாளியல்லவென்றார்.

மணி 1.30 ஆனமையால் தீர்ப்புக்கூற வழக்கை மாலை 2.00 மணிக்கு ஒத்திவைத்தார், நீதிபதி.

வழக்கைக் கவனிக்க வந்திருந்த முக்கிய பெரியார் கள் சர். எ.டி. பன்னீர்செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம், டி. சுந்தரராவ் நாயுடு, பி.ஏ., பி.எல்., டி. சண்முகம் பிள்ளை, பாரிஸ்டர் கே.சி. சுப்பிரமணியம் செட்டியார், எம். தாமோதரம் நாயுடு, பி.ஏ., பி.எல்., ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.ஏ.வி. நாதன், சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி. பாலசுப்பிரமணியம், டி.ஆர். கோதண்டராம முதலியார், சாமி அருணகிரி நாதர், கடலூர் தெய்வசிகாமணி முதலியார், சேலம் சித்தையன், சர்வாதிகாரி எஸ். சம்பந்தம், எர்னஸ்ட் காவேரிப்பாக்கம் சம்பந்தம் முதலிய பல பெரியார் களாகும்.

தண்டனை

சரியாக மாலை 3.25 மணி க்கு நீதிபதி வந்து தீர்ப்பை வாசித் தார்.

“இரண்டு பேச்சுகளும் 2 குற்றங்களாகின்றன. ஒரு குற் றத்திற்கு 1 வருஷம் கடுங்காவ லும் 1000 ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் 6 மாதம் கடுங்காவலும் விதிக்கிறேன்” என்றார். ஆக இரண்டு குற்றங்கட்கு 2 வருடம் 2000 ரூபாய் அபராதம். அல் லது மேலும் 1 வருஷம் ஆக 3 வருஷம் கடுங்காவல் தண்டனையாகும்.

இரண்டு தண்டனைகளையும் ஒன்றாக அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி கூறினார்.

பெரியார் அபராதம் கட்ட மறுத்து 3 வருஷம் கடுங் காவல் தண்டனையைப் பெருமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

ஸர். பன்னீர்செல்வம் கண்ணீர்

தண்டனை பெற்ற பெரியாரை சர். எ.டி. பன்னீர் செல்வம் அவர்கள் கோர்ட்டிலேயே கட்டித் தழுவிக் கண்ணீர் விட்டார்.

பெரியார் அவர்கள் தான் இனி ஒரு கைதி (Prisoner) என சிரித்துக் கொண்டே கூறினார்கள்.

பின்னர் கோர்ட்டிற்கு வந்திருந்த எல்லாப் பெரியார் களும் வக்கீல்களும் தோழர்களும் பெரியார் ஈ.வெ.ரா. பாதத்தைத் தொட்டு இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு வணக்கம் தெரிவித்தனர்.

சிறைக்குப் புறப்பாடு

காலையிலேயே பெரியார் படுக்கை பெட்டியுடன் வந்திருந்தார். அவைகளை எடுத்துக்கொண்டு மாலை 3.45 மணிக்கு ‘மோட்டார் வேனில்’ ஏறும் போது வெளியே ஆவலாகக் காத்து நின்றிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ‘பெரியார் வாழ்க’ என்று ஆரவாரித்துக் கரகோஷம் செய்தனர். பெரியாருக்கு மாலைகளிடப்பட்டன. பெரியார் ‘ஈ.வெ.ரா. வாழ்க’ என்ற வானளாவிய ஒலியி னிடை பெரியார் ஏறியிருந்த கார் புகுந்து சென்றது. வழக்கைக் கவனிக்க காலை 10.00 மணிக்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை 4.00 மணிக்கு வழக்கு முடியும் வரை மத்தியானம் சாப்பிடக்கூடப் போகாமல் காத்து நின்றனர். பெரியார் தண்டிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்ட வுடன் மக்களிடையே ஏற்பட்ட உணர்ச்சி கரை கொள்ளாததாயிற்று.

சென்னை நகரத்தார் துயரம்

இச்செய்தியைக் கேட்டு சென்னைத் தமிழர்கள னைவரும் எல்லையில்லாத் துயரமடைகின்றனர். இச்செய்தி சிறிது நேரத்திற்கெல்லாம் காட்டுத்தீ போல் நகரெங்கும் பரவிவிட்டது. வழக்கைக் கவனிக்க ஏராள மான பார்ப்பன வக்கீல்களும் கோர்ட்டிற்கு வந்திருந்தனர்.

பெரியார் வாக்குமூலம்

பெரியார் கொடுத்த வாக்குமூலம் வருமாறு :-

நான் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி யானது காங்கிரசிற்கு விரோதமானது என்றும், காங்கிரஸ் கட்சியினரைக் கவிழ்ப்பதற்காக என்றும், பார்ப்பன துவேஷம் கொண்டதென்றும் கனம் முதல் மந்திரியாரே சட்டசபையிலும் பொதுக்கூட்டங்களிலும் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கோர்ட்டு காங்கிரஸ் மந்திரிகள் நிர்வாகத் திற்கு உட்பட்டது.

அடக்குமுறைக்காலத்து நியாயமேது?

தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவை தவிர இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டுமென்பதில் காங்கிரஸ் மந்திரிகள் அதிதீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விஷயத்தில் நியாயம், அநியாயம் பார்க்க வேண்டியதில்லை என்றும் கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டும் என்றும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி யைத் திடீரென்று வந்து புகுந்த திருடர்கட்கு ஒப்பிட்டு கனம் முதல் மந்திரியார் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரிகள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்கு முறையே என்பது எனது கருத்து. அடக்குமுறை காலத் தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியாயம் எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

ஆதலால் இந்தக் கோர்ட்டு நியாயத்தில் இந்த வழக் கில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்று நடக்கும் வழக்கு விசாரணையில் நான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன்.

பொது மக்களுக்கு அறிக்கை

பொது மக்கள் தவறுதலாய்க் கருதாமல் இருப்பதற் கும், தப்பு வழியில் செல்லாமலிருப்பதற்கும், நான் நிரபராதி என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும் ஒரு அறிக்கை எழுத்து மூலமாகச் சமர்ப்பிக்கிறேன். அதனை வழக்கு ஆதாரங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டிக் கொள்ளுகிறேன்.

நான் இந்த வழக்கு விசாரணைச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. வக்கீல் வைக்கவில்லை.

சர்க்கார் கட்சி வக்கீல் ஆங்கிலத்தில் பேசினார். நான் எட்டி இருந்ததனாலும் ஆங்கிலம் சரியாய்த் தெரியாததனாலும் அவர்கள் பேசினதும் சில சாட்சியங் கள் சொன்னதும் சரியாய்ப் புரியவில்லை. ஆனால் பின்னால் நடந்த சங்கதிகளைக் கவனித்தேன். ஒரு அளவுக்குப் புரிந்தது.

இவற்றுள் பிராதில், முதலாவதாக 21.4.1938இல் கவர்ன்மெண்ட்டார் இந்தி கட்டாயமாய்ப் படிப்பிப்பதை அமலுக்குக் கொண்டுவர உத்தரவு பிறப்புவித்தார்கள் என்றும், அதற்குப் பிறகு சில சுயநலக்காரர்களால் தாங்களே இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிப் பிரசாரகர் என்று பெயர் சூட்டிக் கொண்டு கனம் முதல் மந்திரியாரை நிர்ப்பந்தப்படுத்திஅந்த உத்தரவைக் கேன்சல் செய்யச் செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தோடு கனம் மந்திரியாரின் உரிமையைத் தடைப்படுத்தினார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தி எதிர்ப்புத் தோன்றியது எப்பொழுது?

இது முழுவதும் உண்மைக்கு நேர் மாறானதாகும். மந்திரியார் ஜி.ஒ. 21.4.1938இல் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், கிளர்ச்சி ஸ்தாபனமும் அதற்கு முன்பே ஏற்பட்டதாகும். 1930இல் நடந்த நன்னிலம் சுயமரியாதை மகாநாட்டில் இந்தி புகுத்தும் நோக்கத்தையும், இந்தி புகுத்துவதால் ஏற்படும் கெடுதியையும் பற்றி இன் றைய காங்கிரஸ் விளம்பர மந்திரியார் கனம் ராமநாதன் அவர்களே தீர்மானம் கொண்டு வந்து கண்டித்துப் பேசி அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தியை எதிர்ப்போர்

தமிழ்ப் பண்டிதரும், தமிழ்ப் பாஷை, கலைகள் ஆகியவற்றில் நிபுணருமான சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் இந்தி பொதுமொழியா குமா? என்று கண்டித்து எழுதியிருக்கிறார்கள்.

அண்ணாமலை சர்வகலா சாலைப் புரபசர் எஸ். சோமசுந்தர பாரதிப் பெரியார் அவர்களும் 1937ஆம் வருஷத்திலேயே இந்தியைக் கண்டித்து கனம் முதல் மந்திரியாருக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

1937 டிசம்பரில் மாகாணத் தமிழர் மகாநாடு கூடி சென்னை மாகாண கவர்னர் பிரபு அவர்களிடம் தூதுசென்று இந்திக் கட்டாயத்தை மாற்றும்படிக் கேட்டுக் கொள்ளத் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பல பெரியார்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதன்பின் 1938 பிப்ரவரி வாக்கில் காஞ்சிபுரத்தில் ஒரு தமிழர் மகாநாடு சர் கே.வி. ரெட்டி நாயுடு அவர் கள் தலைமையில் கூடி, காலம் சென்ற சர்.எம்.கிருஷ் ணன் நாயரால் திறக்கப்பட்டுப் பல பெரியார்கள் முன்னி லையில் பல தீர்மானங்கள் இந்தியைக் கட்டாயப் பாடமாய்ப் புகுத்துவதைக் கண்டித்துத் தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆதலால் கனம் முதல் மந்திரியாருடையவோ, சர்க்காருடையவோ ஜி.ஒ.வுக்குப் பிறகு சுயநலக் காரர்கள் கூடிக் கிளர்ச்சி செய்கிறார்கள் என்பது தவறு.

எதிர்ப்பின் நோக்கம்

கனம் முதல் மந்திரியார் இந்த வேண்டுகோள் களையும் பொதுஜன அபிலாஷைகளையும் லக்ஷ்யம் செய்யாமல் இவற்றை அலக்ஷியப்படுத்துவதற்குச் சாக்காக “இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி (அவரது) நண்பர் ஒரு இராமசாமி நாயக்கர் தான் செய்கிறாரே தவிர, இது பொதுஜனக் கிளர்ச்சி அல்ல” என்று சட்ட சபையிலேயே சொல்லிவிட்டதால், பொதுஜனங்கள், இதைப் பொது ஜனங்களது கிளர்ச்சியென்று கனம் முதல் மந்தியாரும், கவர்னர் பிரபுவும் அறியவேண்டும் என்பதற்காகவே, இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் (Demonstration) ஆகச் செய்யப்பட்டு வருகிறதே ஒழிய, அதில் எவ்வித நிர்ப்பந் தப்படுத்தும் கருத்தும் இல்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

காரியக் கமிட்டித் தீர்மானம்

அன்றியும் இந்தியைப் பொது பாஷையாக்கக் கூடா தென்றும், பள்ளியில் வைப்பது முதலிய இந்திப் பிரச்சாரம் செய்வது வகுப்புக் கலவரத்தை உண்டாக்குகின்ற தென்றும், காங்கிரஸ் கூட்ட நடவடிக்கைகளுக்கு இந்தி தெரிந்துகொள்ளும்படிச் செய்தால் போதுமென்றும், காங்கிரஸ் காரியக்கமிட்டி தீர்மானித்திருக்கிறது.

சென்னை மாகாணத்தில் நடக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி இந்தி மீதுள்ள அபிப்பிராய பேதத்தால் நடை பெறுவதாகவும் அதை விளக்கிக் காட்டிச் சரிசெய்யும் படிக் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர் களைக் கேட்டுக் கொண்டுமிருக்கிறது. ஆகவே இந்தக் கிளர்ச்சி காங்கிரஸ் துவேஷத்தால் செய்யப்படுவதும் அல்ல என்பதற்கு இதுவே ஆதாரம் போதுமென நினைக் கிறேன்.

1938 ஜூன் மாதம் முதல் தேதி கனம் முதல் மந்திரியார் வீட்டிற்குமுன் செய்யப்பட்டதாகச் சொல்லப் படும் நடவடிக்கைகளுக்கும் எனக்குமாவது இந்தி எதிர்ப் புக் கிளர்ச்சி ஸ்தாபனத்திற்காவது யாதொரு சம்பந்தமு மில்லை.

எதிர்ப்பாளர் கொள்கை

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஸ்தாபனத்தின் கொள்கை களில் சட்டம் மீறக் கூடாதென்பது முக்கிய காரியமாகும்.

முதன் மந்திரியார் வீட்டிற்குமுன் தொண்டர்கள் எந்தக் காரியத்தை முன்னிட்டும் போகக்கூடாதென்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத் திருக்கிறேன். அந்த வேண்டுகோள் பொது ஜனங்களாலும், தொண்டர்களாலும் மதிக்கப்பட்டு, அது முதல் முதன் மந்திரியார் வீட்டின் முன் தொண்டர்கள் செல்லவில்லை. அதற்குப் பிறகு, பள்ளிக்கூடத்திற்குமுன் நடந்ததாகச் சொல்லப்படும் காரியங்களும் சரியல்ல. அங்கு தொண் டர்கள் செல்வது உபாத்தியாயர்களையும், பிள்ளை களையும் தடுப்பதற்காகவல்ல; இந்தியைப் பொது ஜனங்கள் ஏற்கவில்லை என்பதைக் காட்டுவதற்காக வேயாகும்.

எந்த உபாத்தியாயரும் எந்தப் பிள்ளை களும் தங்களைத் தடுத்ததாகவோ, அல்லது இந்தக் காரியத்தால் தங்கட்குப் பள்ளிக்கூடத்திற்குப் போகமுடி யாமல் போயிற்றென்றோ, இனியும் உபாத்தியாயரோ, மாணாக்கரோ இதனால் ஒருநாளாவது ‘ஆப்சென்ட்’ ஆனதாகவோ சொல்லப்படவோ இல்லை; ருசுக்களோ இல்லை. பிராதில் குறிப்பிட்ட விஷயங்கள் சரியல்ல. சட்டத்திற் கண்டபடி, குற்றமாவதற்கு ஜோடித்தவை களேயாகும். நான் பேசியிருப்பதாய்ச் சொல்லப்படும் 2 பேச்சுகளிலும் சட்டம் மீறும்படி நான் யாரையும் தூண்ட வேண்டுமென்றோ, தூண்டும் படியான கருத்துக் கொண்டோ பேசவில்லை.

அந்தக் கருத்துகள் கொண்ட வாக்கியம் பேசியதாகக் குறிப்பிட்டிருப்பது உண்மை யல்ல. ஏனெனில் நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கமும், தமிழரியக்கமும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், ஜஸ்டிஸ் இயக்கமும் எதுவும் சட்டப் படி, சட்டத்திற்கு உட்பட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிற கொள்கை கொண்டதேயாகும். இதுவரை அக்கொள்கை மாற்றப்படவேயில்லை. என்னுடைய பேச்சு பூராவையும் படித்துப் பார்த் தால் இது விளங்கும்.

மற்றும் அப்பேச்சுகளில் சட்டம் மீறக்கூடாது; யாருக் கும் எவ்விதத் தடையும், சங்கடமும், மனநோவும் உண்டாக்கக் கூடாது; துவேஷ உணர்ச்சி, கட்டுப்பாட் டிற்கு விரோதமான உணர்ச்சி கூடாதென்றெல்லாம் வியக்தமாய்ப் பேசியிருப்பதை அதில் காணலாம்.

பெண்கள் மகாநாட்டுத் தீர்மானம்

என் பேச்சிற்குப் பிறகே பெண்கள் பள்ளிக்கு முன்போய் நின்றார்கள் என்று சொல்வதும் சரியல்ல. நான் பேசுவதற்கு முன்பேயே மகாநாட்டில் தீர்மானம் ஆகியிருக்கிறது. அதையும் என் பேச்சிலேயே காண லாம்.

பெண்களும் எவ்விதத் தடங்கலான காரியம் செய்தார்களென்றும் எவ்விதக் குற்றமான காரியங்கள் செய்தார்களென்றும் எப்போதம் ருசு செய்யப்படவில்லை. ஏதாவது ஒரு கிளர்ச்சி நடக்க வேண்டுமென்றால், ஒருமுறை கொண்டுதான் நடத்த வேண்டும். அம் முறையால் குற்றம், தடை, பலாத்காரம், துவேஷம் உண்டாகும்படி இருக்கக்கூடாது என்பதில் நான் எப் போதும் கவலை கொண்டிருக்கிறேன்.

குற்றச்சாட்டு சரியானதல்ல

நான் சம்பந்தப்பட்ட எந்தஸ்தாபனத்திலும் இவ்வித தப்பான கொள்கைகட்கு இடம்கொடுக்கவேயில்லை. காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் மந்திரிகள் ஆதிக்கத்தில் உள்ள காலத்தில் பல தடையான காரியங்கள்-அதாவது கிராமப்புற மறியல் முதற்கொண்டு பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறாமல் தடை, குழப்பம், பலாத்காரம் முதலியன நடத்துவது வரையில் நடந்த காரியங்கள் குற்றமாகக் கருதப்படவில்லை.

காங்கிரஸ் சர்க்காரும் அவை கூடா தென்று உத்தரவு போட்டதில்லை. தவிரவும் என்மீது சுமத்தப்பட்ட இந்த சட்டப்பிரிவும் கொஞ்சமும் சரியான தல்ல. இது ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாபாரம் செய்கை ஆகியவைகளைத் தடுப்பதற்கு என்பதும், அதையும் பொது மக்களும் குறிப்பாகக் காங்கிரஸ்காரர்களும் வெறுத்துக் குறைகூறிக் கண்டித்ததென்பதும் பொது மக்கள் அறிந்ததேயாகும். அப்படியிருக்க அந்தச் சட் டத்தை ஒரு நியாயமான உரிமையுள்ள காரியத்தைச் செய்ய தடுப்பதற்கு உபயோகப்படுத்துவது அந்தச் சட்டத்தின் தத்துவத்திற்கே முரண்பட்டதாகும்.

சாட்சி சுயமரியாதை இயக்கம் பார்ப்பனருக்கு விரோதமான உணர்ச்சி ஊட்டக் கூடியது என்று சொன்னார். தோழர் வக்கீலும் அந்த உணர்ச்சி இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலுமிருப்பதாகக் கருதும்படிச் செய்யப் பிரயத்தனப்பட்டார். அந்தக் கருத்து சம்பந்தப் பட்ட விஷயங்கள் என் இரண்டாவது பேச்சாகக் கோர்ட் டில் ஒப்புவிக்கப்பட்ட சர்க்கார் ஆதாரத்திலேயே இருக்கிறது.

அறிக்கை வெளியிட்டதின் நோக்கம்

ஆகவே, இந்த விஷயங்களைத் தங்கள் கவனத் திற்கு என்றே நான் சமர்ப்பிக்கவில்லை. தங்களால் காங்கிரஸ் மந்திரிகள் இஷ்டத்திற்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது. பொது ஜனங்களுக்கு விஷயம்  தெரி யட்டும் என்றும், நான் சட்டம் மீறனேனென்றும் மற்றவர்கள் கருதி அதைச் செய்யத் துணிந்துவிடக்கூடாது என்பதற்கும், இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் என்னுடைய எவ்வித முயற்சியும் செயலையும் இன்று வரை யிலும்கூடச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டதென்றும், துவேஷம், குரோதம், பலாத்காரம் சிறிதும் சம்பந்தப்பட்டதல்ல வென்றும் தெரிவிப்பதற்காகவேயாகும். ஆகவே, கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தியடையும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனையைக் கொடுக்க முடியுமோ அவைகளையும், பழிவாங்கும்  உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

இலட்சியத்துக்கு விலை

மற்றும் வழக்கை வக்கீல் முடித்துவிட்ட பிறகும் சட்டப்படிக் குற்றம் ஏற்படத் தகுந்த மாதிரி, வக்கீல் சாட்சியை மிரட்டி வாக்குமூலம் வாங்கி சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறதென்பதாகவும் எழுதிக் கொடுத்தார்.

எவ்வளவு நியாயமான இலட்சியத்தை அடைய வேண்டுமானாலும் அதற்காகக் கஷ்ட நஷ்டங்கள டைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமாத லால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன்.

(ஒப்பம்) ஈ.வெ. ராமசாமி

- தொடரும்