வெள்ளைக்காரர்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது. அவர்கள் தோலின் நிற மயக்கத்தில் அல்ல; அவர்களின் ஆய்வில் உண்மை சொல்லும் தராசு நெஞ்சத்தின் வெள்ளை மனத்தின் அடிப்படையில்!

அண்மையில் அவர்கள் பழமையான பத்து மொழி களின் எழுத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்கள். அது முகநூலில் பதியப்பட்டு இருக்கிறது. ஒலி, ஒளி அடிப்படையில் காணக்கிடைக்கிறது.

‘லீனா டிராம்பர்’ என்ற மொழியியல் ஆய்வாளர் ஒரு பெண் என்பது சிறப்பு.

அவர்கள் ஆதாரபூர்வமாகப் பழமையான மொழிகளின் எழுத்துகளை ஆய்ந்து, எந்தெந்த ஆண்டுகளில் எந்த வரி வடிவம் தொடங்கித் தொடர்ந்தது என்று ஒப்பிட்டுக், காரண காரியத்தோடு அளிக்கிறார்கள்.

மொழித்தொன்மை - எழுத்து வடிவம் - ஆண்டு

1. இலத்தீன்  2016+75 = 2091

2. ஆர்மீனியன் மொழி  2016+450 = 2466

3. கொரியன் மொழி 2016+600 = 2616

4. ஹீப்ரு (ஏசுநாதர் பேசியது) 2016+1000 = 3016

5. அராபிக் (நபிகள் மொழி) 2016+1000  = 3016

6. சீனமொழி 2016+1200 = 3216

7. கிரேக்க மொழி (சாக்ரடீஸ்)  2016+1450 = 3466

8.  எகிப்து மொழி 2016+2600 = 4616

9. சமசுகிருத மொழி  2016+3000 = 5016

10. தமிழ்மொழி 2016+3484 = 5500

உலகின் தொன்மையான பத்து மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழ். ஏராளமான விரிந்த இலக்கியம், இலக் கணம் கண்டு செழித்த மொழி. 5,000 ஆண்டுகள் கடந்த மொழி தமிழ் என்று சொல்லியிருப்பவர் ஓர் ஆங்கிலேயர். அவரின் ஆங்கிலம் இந்த வரிசையில் இல்லை.

முதலில் தமிழ்; தொடர்ந்து சமசுகிருதம். அதற்குப் பின்னர் எகிப்து, கிரேக்கம், சீனம், அரபி, ஹீப்ரு, கொரியன், ஆர்மீனியன், இலத்தீன் மொழி என்று, வரிசை பின்நோக்கி நகர்கிறது.

இதில் தமிழ், சீனம் மட்டுமே மக்கள் பேசும் மொழியாகவும், எழுத்து மொழியாகவும் விளங்குகின்றன. பிற மொழிகளில் சிலர் கட்டமைக்க முயற்சி செய் கிறார்கள்.

எனவே, மொழி நிலைக்க வேண்டும் என்றால் - பேசும் மொழியின் எழுத்து நிற்க வேண்டும். எழுத்து நிற்க வேண்டும் என்றால் எளிமை இருக்க வேண்டும்.

இன்று தமிழுக்கு மிகப்பெரிய அறைகூவலே பிற மொழி யின் தாக்கம். குறிப்பாக ஆங்கிலம். தற்காலத்தில் தமிழ் பேசும் குடும்பத்து இளைய தலைமுறைகள் தமிழ் எழுத்தைக் கைவிட்டு, ஆங்கில எழுத் தில் தமிழ் மொழியை எழுதும் போக்கு நிலைத்து விட்டது. முகநூலில் தமிழ் பேசும் ஆங்கில எழுத்து கள்-விமர்சனம்-கருத் துகள்-தகவல்கள் மலிந்து விட்டன; பெரும் அதிர்ச்சி.

ஒரு பானைச் சோற் றுக்கு ஒரு சோறு பதம் என் பதைக் கொடுமை யான ஒரு மரணவாக்கு மூலம் சொல்லியது.

முகநூலில் தன்னுடைய படத்தை ஆபாசமாக மாறுதல் (மார்பிங்) செய்யப்பட்டு, வெளியிட்டதை அடுத்து, சேலத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் விணுப் பிரியா கடந்த சூன் 27ஆம் நாள் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு கண்ணீர்க் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கிறார். “நான் யாருக்கும் என் படத்தைக் கொடுக்கவில்லை; அனுப்பவில்லை. இப்படி எடுக்காத படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டதைச் சொன்னாலும் நம்பவில்லை. என்னைப் பெற்றவர்களே என்னை நம்பவில்லை. இனி நான் வாழ்வதிலே பொருள் இல்லை” என்று மனம் நொந்து எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்த தாய்க்கு எழுதியது தமிழ்மொழியில். ஆனால் எழுத்து தமிழில் இல்லை. ஆம்! தமிழ் எழுத்தில் இல்லை. ஆங்கில ரோமன் வடிவ எழுத்தில் எழுதியிருக்கிறார். அங்கே தமிழ் எழுத்து செத்துப்போய் விட்டது. ஆம்! 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது தமிழ் எழுத்துகள் என்று எந்த முகநூல் ஒப்பிட்டுக் காட்டியதோ, அந்தத் ‘தமிழ் எழுத்துகள்’ தமிழ் இளம் தலைமுறையிடம் செத்துப் போய்விட்டன. ஆம்! இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் என்ற தொன்மை மொழி எழுத்து வடிவம் காணாமல் போய் - பின் மொழியும் காணாமல் போய்விட்டது. அதேநிலை தமிழுக்கு வந்து கொண்டிருக்கிறது என் பதன் அடையாளம் தான் ‘விணுப்பிரியா’ ஆங்கில எழுத்தின் தமிழ்க் கடிதம்.

தமிழ் எழுத்தைக் காக்க என்ன வழி?

சீனம் 3,000 எழுத்துக்களைக் கொண்ட மொழி. ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு பயிற்சி, ஒரு பள்ளி உணர்வு ஆசிரியர் என்பதால் பழகப்பழகக் குழந்தைகளுக்கு எளிதாகப் படிக்க, எழுத, பேச இயல்பாக முடிகிறது.

தமிழ் 247 எழுத்துகள். இது அதிகமாக இருக்கிறது என் கிறார்கள் சில குழந்தைகள்.

தமிழில் அதிக மதிப்பெண் பெறுவதில்லைi. இதற்குக் காரணம் ஆசிரியர்கள் என்கிறார்கள் சிலர். எல்லாப் பாடங் களையும் கூட்டும்போது தமிழ் மதிப்பெண் கூட்டும்போது - பிற ‘பிரெஞ்சு’ போன்ற மொழிகளை எடுக்கும் மாணவர்கள் அள்ளிக்கொள்ளும் மதிப்பெண்களைவிடத் தமிழ் மதிப்பெண் குறைவு என்பதால் எங்கள் ‘மொத்த மதிப்பெண்’  குறைந்து விடுகிறது என்கிறார்கள் பள்ளி மாணவர்கள்.

தமிழ் படித்தால் என்ன பயன்? அரசு வேலையில் - 75 விழுக்காடு; அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு - 75 விழுக்காடு ஒதுக்கீடு செய்யட்டுமே? உயர் கல்வியில் மருத்து வம், பொறியியல் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் அரசுக் கல்லூரிகளில் என்று ஒதுக்கட்டுமே? 12ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிக் கல்வி ஏன்? தனியார் பள்ளி களில் அவர்கள் சேர்வதில்லை. அரசுப் பள்ளியில் படித்த ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் வழியில் படித்து வந்தால்-உயர்கல்வியியல் இடம் ஒதுக்குங்கள்.

இப்படிக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்கள் பல மாணவர்கள்.

5,000 ஆண்டுகளாகக் கற்றவர்கள் தமிழை உயர்த்தி னார்கள். தமிழ் மட்டுமே பேசியவர்கள் தமிழைக் காத்தார் கள் என்பதே மெய்.

இப்போது ஆங்கிலம் என்பது அறிவு - அதில் இரண்டு ‘சொல்’ பேசினாலே உயர்வு என்ற நிலையும் - உடனே ‘மாதம் உருவா இலட்சத்தில்’ வேலை என்ற ‘நம்பிக்கையும்’, ஆரம்ப அரசுப் பள்ளியிலேயே ‘ஆங்கில’ வழியில் படிப்பை நுழைத்துவிட்டது. எனவே ‘26’ எழுத்து ஆங்கிலம் எளிது. ‘247’ எழுத்து தமிழ் கடினம் என்று நம்ப வைக்கப்படுகிறது. இதை உடைக்க வேண்டும். இதை அறிவியல் - ஆர்வம் - ஆசிரியர் பயிற்சி மூலம் முன்னெடுக்க வேண்டும்.

எப்படி எழுத்தைச் சுருக்கலாம்?

தமிழ் எழுத்து உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18 = 30 எழுத்துகளே! அவற்றின் பெருக்கம் உயிர்மெய் எழுத்து 12 X 18 = 216. ஒரு ஆயுத எழுத்து. ஆக 247.

சில நாட்களுக்குமுன் மலேசியாவின் சரசுவதி அரி கிருஷ்ணன் என்ற அம்மையார் அவர்கள், இப்போது கனடா தமிழ் வானொலி நிகழ்ச்சி அமைப்பாளராக உள்ளவர் - தமிழ்நாட்டில் சென்னையில் நூல் வெளியீட்டுக்கு வந்தவர், என்னிடம் வானொலிப் பேட்டி எடுத்தார்.

அப்போது அவர் என்னிடம் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “நான் தமிழ் ஆசிரியராக, தமிழ்க் குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கிறேன். இப்போது தமிழ் எழுத்துகளைக் கணினி யில் பயன்படுத்துவது போல, குழந்தைகளுக்கு எளிதாகச் சொல்லித் தருகிறேன்” என்றார்.

நான் என் கணினிச் செயலியை எடுத்துக்காட்டி “நான் 247 எழுத்துகளைப் படித்தவன். அன்று 5ஆம் வகுப்பில் ஆங்கிலம் வரும். அதுவரை தமிழ் பழகும். இன்று 2 வயதிலேயே ஆங்கிலம். எனவே இந்தக் குழந்தைகளுக்கு கணினித் தமிழ் எழுத்து நடையில் சொல்லித் தந்தால் மிக எளிதாகப் பிடித்துக் கொள்ளும். பாராட்டுகள்” என்றேன்.

தமிழ் மிகவும் எளிய மொழி

கணினியில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என 12 உயிர் எழுத்துகள்; அடுத்து கசடதபற, யரலவழள, ஞஙணநமன 18 எழுத்துகள்-இவை மட்டும் இருக்கின்றன. மீதி இணைப்புக் குறியீடுகள் தனித்தனியாக மாட்டிக் கொள்ளலாம். குறியீடுகள் தனியே உள்ளன. இதன் எண்ணிக்கை 12 தான். ஆக மொத்தம் எழுத்து 30. குறியீடு 12 என 42க்குள் முடிந்து விட்டது.

மாணவர்கள், இனிபேசும் மொழியை எழுத்தில் படிக்கலாம்.

‘க’ என்பது குறில். ‘கா’ என்ற நெடில் இந்த ‘கி’ - ‘கீ’ - ‘கே’ - ‘கோ’ என்ற குறியீடுகளை ‘க’ என்ற ஒற்றை எழுத்து வைத்தே கோத்துவிடலாம். அதேபோல ‘ச’ - ‘த’ - ‘ம’ என்று எது வந்தாலும் - 1 : 12 குறியீட்டைக் கொண்டே சொல்லிக் கொடுத்துவிடலாம். மிக எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.

ஏற்கெனவே ‘பெரியார்’ எழுத்துச் சீர்திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது; நடைமுறையில் உள்ளது.

இப்போது ‘கணினி’ச் சீர்திருத்தம் எங்களைப் போன்ற வர்கள் பழகிக் கொண்டு வெற்றிகரமாக ‘செல்போன்’ கவிதை, கட்டுரைகள் படைக்கிறோம்.

பள்ளியில் ஆசிரியர்கள் பழகிக்கொண்டு-ஏற்றுச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினால், குழந்தைகள் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.

இதைத்தான் எழுத்தாளர் சரசுவதி அரிகிருஷ்ணன் அம்மையார் போன்றவர்கள் ‘மலேசியா-சிங்கப்பூர் குழந்தை களுக்குக் கற்பிக்கிறேன்! மிக அருமையாகக் கற்றுக்கொள் கிறார்கள்’ என்கிறார்.

தமிழ் எழுத்துகள் குறையவில்லை. ஆனால் தமிழ் எழுத்துகள் சில மாற்றங்களில் - குறைவாக இருப்பதாக மனத்தோற்றம் - மனப்பழக்கம் உருவாக்கப்படுகிறது.

எனவே ‘கணினி’ வடிவில் உள்ளவற்றை - புத்தக வடிவில் எடுத்து வந்துவிடுவதும் - பின்னர் இவர்கள் வருங் காலம் முழுவதும், இனி கையில் மூத்த தலைமுறை போல எழுதப்போவது இல்லை. கணினிப் பலகையில் தட்டித்தான் ‘தட்டச்சு’ செய்யப் போகிறார்கள். எனவே ‘கணினி’ வடிவம் மிகவும் எளிது. சுலபம்.

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு (குறள் 426)

என்கிறார், வள்ளுவர்.

உலகம் எப்படிப் புதுமையாக மாறுகிறதோ - அந்தப் புதுமையை ஏற்று - அதற்கேற்ப மாறி - மாற்றி நிலைப்பது தான் அறிவுடைமை என்கிறார், வள்ளுவர்.

மாற்றம் மனிதர்களுக்கு மட்டுமல்ல; நம் உயிரிலும் மேலான மொழிக்கும் அடங்கும்.

எனவே தமிழ் உணர்வாளர்களும் - ஆசிரியர்களும் - ஆட்சியாளர்களும்-கல்வியாளர்களும்-தொன்மைத் தமிழை இளம் குழந்தைகளுக்குக் கடத்த எந்த நவீன வழியையும் கடைப்பி  டிக்க வேண்டும். அதில் முதன்மை ‘கணினி’ வழி. எழுத்தை நிலைநிறுத்தும் வழி! இனத்தின் கடமை!

(நன்றி : “மீண்டும் கவிக்கொண்டல்”, 2016 சூலை)

Pin It