தமிழ்நாட்டில் 26.4.2021 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு இடையூறு விளைவிக்க வேண்டும் என்றே நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.இரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக மாற்றியது மோடி தலைமையிலான பா.ச.க. அரசு. 18.9.2021 அன்று தமிழ்நாடு ஆளுநராகப் பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதலே மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களில் ஆளுநர் இரவி ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவு களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்தார்.
தமிழ்நாடு அரசின் மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர் என்ற முறையில் ஆளுநர் துணைவேந்தர் நியமனங்களில் ஆர்.எஸ்.எஸ். கொள்கை கொண்டவர்களை நியமிக்க பல்வேறு சட்டமீறல்களைச் செய்து வந்தார்.
ஆளுநரின் தவறான போக்குகளைக் கண்டித்தும் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆண்டுக் கணக்கில் காலம் கடத்தி வந்ததை எதிர்த்தும் தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜெ.பி. பர்த்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு 8.4.2025 அன்று மிகச் சிறப்பான தீர்ப்பை அளித்தது. ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த சட்ட வரைவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் இன்றியே அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 142 அய்ப் பயன்படுத்தி அந்த மசோதாக்கள் நிறைவேறியதாகத் தீர்ப்பு வழங்கினர்.
மேலும் ஆளுநர்கள் தங்களுக்கு அனுப்பப்படும் சட்ட வரைவுகளுக்கு மூன்று மாதத்திற்குள்ளும், குடிஅரசுத் தலைவர் ஆறு மாதத்திற்குள்ளும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். அரசமைப்புச் சட்டத்தின் கூறு 200இன்படி சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட வரைவுகளுக்கு நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு உரிமை இல்லை என்றும் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கினர். ஆளுநரின் செயல்பாடுகள் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது என்றும் தீர்ப்பு வழங்கினர். இது தமிழ்நாடு அரசின் மாநில உரிமையை நிலைநாட்டும் முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
குடிஅரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நாடாளுமன்றத்திற்கே உச்ச அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்று வெளிப்படையாகப் பேசினார். புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி கவாய் அவர்கள் எல்லாவற்றுக்கும் மேலானது அரசமைப்புச் சட்டம் தான் என்று பதிலளித்தார்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய பா.ச.க. அரசு குடிஅரசுத் தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க முடியுமா? என்பது உள்ளிட்ட 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டு குடி அரசுத் தலைவர் மூலமாக உச்சநீதிமன்றத்தை வினவி உள்ளது. இது மாநில உரிமைகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்பாடேயாகும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டு, சில பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் தேடுதல் குழுக்களை அமைத்தது.
இதை எதிர்த்து திருநெல்வேலி பா.ச.க. மாவட்டச் செயலாளர் கே.வெங்கிடாசலபதி தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இதை அவசர வழக்காக ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சாமிநாதன்-வி. இலட்சுமி நாராயணன் அமர்வு அவசர அவசரமாக விசாரித்து தமிழ்நாடு அரசு பதில் மனு அளிப்பதற்குக் கூட வாய்ப்பளிக்காமல் துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்க இடைக்காலத் தடை விதித்தது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மறுதலிக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென தெரிந்தும் வேண்டுமென்றே இப்படி ஒரு தீர்ப்பை 21.5.2025 அன்று வழங்கி உள்ளனர். பார்ப்பனர்களின் அதிகாரத் திமிரைக் காட்டியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில், உச்சநீதிமன்றத்தை குடிஅரசுத் தலைவர் நாடி இருப்பதும், சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக் காலத் தடை உத்தரவும் அமைந்துள்ளது. மக்கள்திரள் எழுச்சியின் மூலமாகவும் உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக வழக்காடி யும் மோடி அரசின் தடைகளைத் தகர்த்து மாநில உரிமையை மீட்போம்.
- வாலாசா வல்லவன்