இந்திஎதிர்ப் புப்போரில் சிறைக்குச் சென்றான்.
இளங்காளை நடராசன்; சென்னை வாசி;
அந்தமுறும் இலக்குமணன் அம்மாக் கண்ணாம்
அருந்தமிழர் பெற்றெடுத்த மருந்து போல்வான்!
செந்தமிழிற் பற்றுடையான்; உத்தி யோகச்
சிறுவாழ்வில் வெறுப்புடையான்; கைத்தொ ழில்மேல்
சிந்தைவைத்தான்; பயின்றுவந்தான்; திறமை யுள்ளான்.
1
தமிழ்நாட்டில் இந்தியினைக் கட்டா யத்தால்
சாரவிட்டால் தமிழ்சாகும் எனநி னைத்தான்.
அமுதொத்த தன்தமிழின் நிலைக்கு நொந்தான்!
அண்டைஅயற் பெரியார்பால் தனக்கேற் பட்ட
சமுசயத்தைத் தெரிவித்தான். உணவு நீத்தான்.
சதாகாலும் இதேநினைவாய் இருந்து வந்தான்.
தமிழகத்தார் எல்லார்க்கும் உணர்வு காட்டித்
தன்உருவம் காட்டிவிட்ட தமிழ்ப்பி ராட்டி! 2
நடராசன் எதிரேயும் வந்து நின்று,
நானில்லா விடில்நீயும் இல்லை என்று;
படபடத்த இதழாலும் துயர்க்கண் ணாலும்
பகர்ந்துசென்றாள். ‘வாழ்கதமிழ் வாழ்க வாழ்க
இடரான இந்திமொழி வீழ்க வீழ்க”
என்றுரைத்தான்; தமிழரிடம் தமிழ்நாட் டின்கண்!
அடாதசெயல் இதுஎன்றார் இந்திச் சர்க்கார்.
அழகியோன் தான்தன்னைச் சிறையிற் கண்டான். 3
நெஞ்சத்தில் வீற்றிருந்த தமிழ்த்தா யோடு
நெடுஞ்சிறையில் நடராசன் இருந்தான். அன்னோன்
கொஞ்சுமொழி தனைநினைத்துப் பெற்றோர் உற்றோர்,
கொடுஞ்சிறைக்கு வெளியினிலே இருந்தார், மற்ற
வஞ்சமில்லாத் தமிழரெலாம் நடரா சன்பேர்
வாழ்த்திக்கொண் டிருந்தார்கள் சிலநா ளின்பின்
வெஞ்சுரந்தான் கண்டதுவாம், அதுநாள் தோறும்
மேலோங்க லாயிற்றாம் மெலிவுற் றானாம். 3
சாக்காட்டின் ஒட்டினிலே தவிக்கும் போது,
தமிழ்நாட்டைத், தமிழர்களைப் பெற்றோர் தம்மைப்
பார்க்குமோர் ஆசைவந்து படுத்தும் போது,
பழியேற்க அஞ்சாத சிறைத்த லைவர்
ஆக்கினைஒன் றிட்டாராம்! நடரா சாநீ
அரசினரை மன்னிப்புக் கேட்டுக் கொண்டால்,
பாக்கியனாய் விடுதலையைப் பெறுவாய் என்றார்.
பைந்தமிழன் தன்நிலையை எண்ண லானான். 4
மன்னிப்புக் கேட்டிடுவாய்; தமிழர்க் குள்ள
மானத்தை இழந்திடுவாய் என்று கூறிச்
சின்னபுத்தி அதிகாரி கேட்டு நிற்கச்,
செந்தமிழ்த்தாய் உன்அன்பின் அடையா ளத்தை
இந்நிலையிற் காட்டுகநீ மைந்தா, மைந்தா
என்றேதன் தாமரைக்கை ஏந்தி நின்றாள்.
மன்னாதி மன்னர்களின் வழியில் வந்த
மாத்தமிழர் பழம்பெருமை பறிபோ காமே. 5
காக்கஎன்று நின்றிருந்தார் கூட்ட மாகக்
கண்ணாலும், சிரிப்பாலும் தனது காதற்
போக்குணர்த்தி வந்தஓர் இளைய நங்கை
பூமானை, அன்புதர வேண்டி நின்றாள்.
வாய்க்குமிவை அத்தனையும் நடரா சன்தன்
மனோலோக நடைமுறையாம். என்ன செய்வான்.
ஆர்க்கும்முர சம்போல்’மன் னிப்புக் கேளேன்’
அருங்சிறையில் சாதற்கும் அஞ்சேன் என்றான். 6
தனைத்தந்தான் எனக்கென்றாள் செந்த தமிழ்த்தாய்!
தகதகெனக் களியாட்டம் ஆடா நின்றாள்!
தனக்கென்று வாழாத தமிழா என்று
தமிழரெலாம் அவன்பேரைப் பாடா நின்றார்!
தனிப்புகழ்சேர் நடராசன் தன்னைப் பெற்றோர்
தமிழுக்குப் பெற்றோம்என் றகம கிழ்ந்தார்!
நனித்தநறுங் காதலிதான் தேம்பி நின்றாள்!
தமிழ்வீரன் நடராசன் இறந்து போனான். 7
அன்னவனின் புகழ்இந்தத் தமிழ்நாட் டின்கண்
ஆர்ந்ததற்குக் காரணத்தை அறிவிக்கின்றேன்.
சின்னதொரு கல்வியினால் தருக்குக் கொண்டு,
தீமையெலாம் மக்களுக்குச் செய்து கொண்டு,
தன்னலத்தை எண்ணி எண்ணித் தமிழர் நாட்டைத்
தரைமட்ட மாக்குகின்றார். அவர்போ லின்றி
இன்தமிழிற் கல்விகற்றான் நடரா சச்சேய்
எழில்பெற்றான் புகழ்பெற்றான் எல்லாம் பெற்றான். 8
- புகழ்மலர்கள், ப.75-76, 1978; தமிழரசு, 15.2.1939
- தொடரும்