இருளும், ஒளியும், இன்பமும், துன்பமும் என்ற எதிர் எதிர் நிலைகள் தனிமனித, சமுதாய மற்றும் அரசியல் நிலைகளிலும் எப்போதும் உள்ளன. நன்மை செய்ய ஒரு சிலரும், தீமை செய்ய பலரும் உள்ளனர். இந்தத் தூயவர்களைத் தூக்கிப்பிடித்துப் பாராட்டிப் புகழ மிக மிகப் பலர் உள்ளனர்.
முன்னாள் முதல்வர்களான ஓமந்தூர் இராமசாமி ரெட்டியும், காமராசரும் ஆட்சி செய்த நாட்டில்தான் கருணாநிதியும், செயலலிதாவும் ஆட்சி செய்தனர். ஒளியும் இருளும்.
இந்த நாட்டில் ஒரே ஒரு மணிநேரம்கூட நான் சர்வாதிகாரியாக இருக்க வாய்ப்பு கிடைத்தாலும், நான் நாட்டில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் ஒரே ஒரு ரூபாய் கூட நட்டஈடு கொடுக்காமல் மூடிவிடுவேன் என்றும், மது தரும் மரம், செடி, கொடிகளையும் வெட்டி வீழ்த்திவிடுவேன் என்றும் காந்தியடிகள் கூறியுள்ளார்.
வெகுமக்கள் நன்மைக்கும் வளர்ச்சிக்கும் விரோத மாகச் செயல்பட்ட இராசாசிகூட கொட்டும் மழையிலும் முதல்வர் கருணாநிதி வீட்டிற்கே சென்று - கருணா நிதியைச் சந்தித்து-மதுக்கடைகளைத் திறக்க வேண்டா மென வேண்டினார். அதற்கு, “அரசின் திட்டச் செலவுக் குப் பணமில்லை” என கருணாநிதி கூறியதற்கும், பணம் வருவதற்கு விற்பனை வரிப் போட்டுப் பணம் திரட்ட முடியுமென்று வழிமுறைகளையும் இராசாசி கூறியுள்ளார். அரசுக்கு வருவாய் வந்தால் என்ன, வரா விட்டால் என்ன - கருணாநிதிக்கும் கட்சிக்காரனுக்கும் சொந்தமாகச் சாராய ஆலைகள், கடைகள், விற்பனை மூலம் வரும் கோடிக்கணக்கான ரூபாய், விற்பனை வரி மூலம் தனக்குச் சொந்தமாக வராது என்பதுகூட கருணாநிதிக்குத் தெரியாதா என்ன?
“வாழும் வள்ளுவர்” கருணாநிதிதான் 1971இல் தமிழ்நாட்டில் சாராயக் கடையை முதலில் திறந்து விட்டவர். தன்னை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய சமு தாயத்தின் அடித்தள மக்கள் சாராயத்தால் சின்னா பின்னமாகச் சீரழிவர் என்பதை நன்கு அறிந்தே கருணாநிதி சாராயக்கடைகளைத் திறந்தார். அவற்றை மேலும் வளர்த்த பெருமை எம்.ஜி.ஆர். புரட்சிக்கே உண்டு. அவற்றை எல்லையிலா அளவுக்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்த்த மாபெரும் சாதனை புரட்சித் தலைவரின் புரட்சித் தலைவியையே சாரும்!
இந்த மூன்று பெரும் தீயசக்திகளும், கட்சித் தொண்டர்களை, சட்டமன்ற உறுப்பினர்களை, பாராளு மன்ற உறுப்பினர்களைத் தலையாட்டும் பொம்மை களாக நடத்தியதில் நமக்கு அதிக வருத்தமில்லை. ஆனால், இந்தத் தீய சக்திகளை முதல்வர் என்ற உயர்ந்த இடத்திற்கு அனுப்பிய மக்களையும் அடிமைகள்போல நினைத்து நடத்தி தங்களின் சுயநலம், பணம், பணம் குவித்தல் ஒன்றையே கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தி யதை இந்த நாடு மட்டுமல்ல, உலகமே அதிர்ந்து வியந்தது!
இந்தக் காலகட்டத்தில்தான் டாஸ்மாக் ஒழிய பாடல் பாடிய “மக்கள் அதிகாரம்” கோவன் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கொடுங்கோல் அரசி செயலலிதாவால் கைது செய்யப்பட்டார். இதில் என்ன வெங்காய தேசப் பாது காப்புக்குப் பாழ் இருக்கிறது என்று கோவனை நீதி மன்றம் விடுதலை செய்தது! செயலலிதாவின் திடீர் மறைவு இன்றுவரை திரைக்கதை போல முடிவிலா மர்மமாகவே உள்ளது. அவர் மறைவும் “உண்மை யான” புரட்சியே. அவர் மறைவும், உயர் நீதிமன்ற உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளும் மக்கள் மூச்சு விடவும், தைரியத்தை வளர்த்துக்கொள்ளவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளன.
இந்த நல்ல சூழ்நிலையை மற்றயாரும் - எந்த அமைப்பும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நீருபூத்த நெருப்பாக இருந்தத் தமிழினத் தாய்மார்கள் தன்னெ ழுச்சியாக வீறுகொண்டெழுந்து சாதி, மத, கட்சிக் கட்டுப்பாடு பாராமல், சுய விளம்பரம் தேடாமல், காக்கிச் சட்டை களின் மிரட்டல்களுக்குப் பயப்படாமல், குண்டாந்தடிகளின் அடிகளுக்கும் அஞ்சாமல் போராடிப் போராடி வெற்றி மேல் வெற்றி குவிக்கும் தமிழினப் பெண் களுக்கு, வீராங்கனைகளுக்கு எங்கள் அன்பான செவ் வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் குவிக்கிறோம்.
உங்களின் இந்த வீர வெற்றிப் பயணம் ஊர், வட்டம் கடந்து மாவட்டம், மாநிலம் என்ற அளவு வரை யாவது தொடரட்டும்.
தமிழ்நாட்டிலேயே அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டத்தில் இருந்த மொத்த டாஸ்மாக் கடைகள் 8. மதுவின் கொடுமைகளை நன்குப் பட்டறிந்த செந்துறை வட்டப் பெண்கள் பலரும் ஒன்றுசேர்ந்து டாஸ்மாக் கடைகளை அடித்துநொறுக்கி 7 கடைகளை மூடச் செய்துள்ளனர். இறுதியாகப் பொன்பரப்பிக் குடிக் காட்டில் குடியிருப்புப் பகுதியில், போக்குவரத்துச் சாலையில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடையைத் திறக்க வந்த அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி மறியில் செய்து அந்தக் கடையையும் திறக்காமல் மூடச்செய் துள்ளனர். அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத் தில் இருந்த மொத்த டாஸ்மாக் கடைகளையும் தொய்வில்லாத வீரப்போராட்டத்தின் மூலம் மூடச் செய்த மாவீர வீராங்கனைகளுக்கு மக்கள் மறு மலர்ச்சி மன்றமும், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடை மைக் கட்சியும் நெஞ்சார்ந்த செவ்வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் குவிக்கின்றன.
தமிழகத்திற்கு மட்டுமல்லாது, இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ள இந்த மாபெரும் மக்கள் சக்திப் போராட்டத்தை அனைத்துப் பகுதிப் பெண்களும், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய, காந்திய மற்றும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைகோரும் அனைவரும் சாதி, மத, கட்சிப் பாகுபாடு பாராமல் ஒன்றாகப் போராட அன்புடன் வேண்டுகிறோம்.
தன்னெழுச்சியான இந்தப் பெண்ணிகளின் போராட்டத்தையும் நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடிடத் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன்.