தமிழகத்தின் 14வது சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடைபெற்றது. அந்த வாக்குகள் தேர்தல் நடந்த 1 மாதம் கழித்து கடந்த மே 13ம் தேதி எண்ணப்பட்டன. வாக்குப் பெட்டியிலிருந்து கிளம்பிய வாக்குச் சுனாமி திமுக கூட்டணிக் கட்சிகளை சிதறடித்து சின்னாபின்னமாக்கி விட்டது.

2001ல் அதிமுக அமைத்த மெகா கூட்டணி திமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்து விட்டது என்பதை உணர்ந்த கருணாநிதி மெல்ல காய் நகர்த்தி கூட்ட ணியை உடைத்து அந்தக் கட்சிகளை தன்னுடைய அணிக்கு கொண்டு வந்து அதிமுகவை தனிமைப்படுத்தினார்.

2006 சட்டமன்றத் தேர்தலை மெகா கூட்டணியோடு சந்தித்த திமுக, தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு தேர்தல் களத்தை பரபரப்பாக்கியது.

கூட்டணியும், இலவச அறிவிப்புகளும் திமுகவுக்கு தனிப் பெரும்பான்மையை பெற்றுத் தராவிட்டாலும் தனிப் பெருங்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவோடு திமுக அரியணை ஏரியது.

2009ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் இருந்த பாமக, கம்யூனிஸ்டுகள் மற்றும் மதிமுகவோடு இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் காங்கிரúஸôடு திமுக கூட்டணி கண்டது. தேமுதிக தனியாக போட்டியிட்டது.

கூட்டணி பலத்தின் காரணமாக அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெரும் என்று தொடர்ந்து கருத்துக் கணிப்புகள் வெளிவந்த காரணத்தால் கருணாநிதி பயத்துடனே தேர்தலை சந்தித்தார். கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி திமுக பெரும் வெற்றியைப் பெற்றது.

பாராளுமன்றத் தேர்தல் வெற்றி தந்த நம்பிக்கையோடு தனது ஆட்சியின் சாதனைகளும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட இலவசங்களும் தன்னை மீண்டும் அரியணையில் ஏற்றும் என்கிற எதிர்பார்ப்போடுதான் கலைஞர் 2011 சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார்.

2006 & 2009 ஆகிய தேர்தல்களின்போது திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அதிமுக கூட்ட ணிக்கும், தேமுதிகவிற்கும் பிரிந்த காரணத்தினால்தான் கருணாநியின் வெற்றி சாத்தியமானதை உணர்ந்த ஜெயலலிதா, தன்னுடைய ஈகோவை விட்டு தேமுதிகவை கூட்டணியில் இணைத்து திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தேமுதிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் இதர சிறிய கட்சிகளோடு கூட்டணி அமைத்த ஜெயலலிதா தென் மாவட்டங்களில் பலத்தை அதிகரிக்க புதிய தமிழகத்தையும், சமத்துவ மக்கள் கட்சியையும் கூட்டணியில் இணைத்தார்.

ஜெயலலிதாவின் கூட்டணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட மாவட்டங்களில் செல்வாக்கு படைத்த பாமக கட்சியையும், விடுதலை சிறுத்தை கட்சியையும் தன்னுடைய அணிக்கு கொண்டு வந்தார் கருணாநிதி. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த கொங்கு முன்னேற்றக் கழகத்தை கூட்டணிக்கு கொண்டு வந்தார். தென் மாவட்டங்களில் திமுக கூட்ட ணியை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை அறி முகப்படுத்திய அழகிரி வசம் ஒப்படைக்கப் பட்டது.

1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ், இலவச கலர் டி.வி., இலவச கேஸ் அடுப்பு விநியோகம், நகர்ப்புறங்களில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் போன்ற அரசின் சாதனைகள் தம்மை மீண்டும் அரியணையில் ஏற்றும் என்று கனவு கண்டார்.

ஆனால் இவை அனைத்தையும் மீறி ஜெயலலிதா அமைத்த கூட்டணி வியூகம், கருணாநிதி குடும்பத்தினரின் அரசியல் அராஜகம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மக்களை மிரட்டும் விலைவாசி உயர்வு, வரலாறு காணாத 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், கடுமையான மின் வெட்டு, மீனவர் பிரச்சினை, காங்கிரஸின் உள்ளடி வேலை, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட தனி இட ஒதுக்கீட்டில் குளறுபடி ஆகிய பிரச்சினைகள் திமுக கூட்டணியை உருட்டி புரட்டி எடுத்தது மட்டுமல்லாமல் ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்போம் என்று எதிர்பார்த்திருந்த கருணாநிதியின் கனவை தவிடு பொடியாக்கி விட்டது.

குறிப்பாக கருணாநிதி நடத்திய குடும்ப ஆட்சி மக்களை முகம் சுளிக்க வைத்து விட்டது. கருணாநிதியின் வாரிசுகள் செய்த அளப்பரைகள் வட மாவட்டத்திற்கு முதல்வராக ஸ்டாலினும், தென் மாவட்டத்திற்கு முதல் வராக அழகிரியும் உள்ளனரோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு மதுரையில் உள்ள வாரிசின் வீடு அதிகார மையமாக செயல்பட்டது.

கருணாநிதி குடும்பத்தினர் ரியல் எஸ்டேட், சின்னத்திரை, சினிமா என்று ஆரம்பித்து அனைத்து துறைகளிலும் கால் பதிப்பதும், பிறகு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக செய்த அடாவடிகளும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தின.

அதிகாரத்திற்காக கருணாநிதி குடும்பத்தினர் போட்டுக் கொண்ட சண்டைகள் திமுக ஆட்சியை நாறடித்தது. அதிகார போட்டியில் கருணாநிதியின் மகன்களுக்கும், பேரன்களுக்கும் நடந்த சண்டையில் மூன்று அப்பாவிகளின் உயிர் போனது மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

உச்சகட்டமாக குடும்பத் தகராறின் காரணமாக தொலைத் தொடர்புத்துறையில் நடந்த ஊழலை எதிர்க்கட்சிகளுக்கு பேரன் போட்டுக் கொடுத்தது கருணாநிதியின் ஆட்சிக்கு குழி பறிப்பதாக அமைந்து விட்டது.

அனைவரும் தேர்தல் பரபரப் பில் உலா வந்தபோது கருணாநி தியின் மனைவியும், மகளும் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தை சுற்றி வந்தது ஊழல் வழக்கில் கருணாநிதி குடும்பம் வசமாக சிக்கிவிட்டதை உறுதிப்படுத்தியது.

மந்திரி சபையில் இடம் கொடுக்காத ஆத்திரத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சி குறித்து தெரிவித்த ஏடாகூட கருத்துகள் சேம்சைடு கோல்களாக மாறி ஆட்சியை பதம் பார்த்தது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலின் சந்தேகத்திற்குரிய முக்கிய நபராக கருதப்பட்ட சாதிக் பாட்சாவின் மரணம் ஏற்படுத்திய சந்தேகங்கள் கருணாநிதியின் ஆட்சிக்கு மரண அடி கொடுத்தது.

காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு நடுத்தர மக்களின் வாக்குகளை அரசுக்கு எதிராக சடாரென மாற்றியது. 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி ரேஷன் கடைகளில் கிடைத்த போதும் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை எட்ட முடியாத உயரத்திற்கு சென்றது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகி விட்டது.

ஆற்காடு வீராச்சாமி மின் வழங்குதுறை அமைச்சராக பதவியேற்று மின்வெட்டு துறை அமைச்சராக ஐந்தாண்டு காலம் பணியாற்றியது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

மின் வெட்டு அமுலுக்கு வரும் கோடை காலத்தில் தேர்தல் நடைபெற்றது திமுகவை ஷாக்கடிக்கும் நிலைக்கு தள்ளி விட்டது. திமுகவின் ஓட்டு வங்கியாக இருந்து வரும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றிய காரணத்தால் முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் திமுகவிற்கு பெரும் ஆதரவு நிலவி வந்தது.

ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் நடைபெற்ற குளறுபடிகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை தோற்று வித்தது. இதனால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய பல்லாயிரக் கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோயின.

இந்தக் குளறுபடிகளை சரி செய்யுமாறு முஸ்லிம் அமைப்புகள் வைத்த கோரிக்கைகள், நடத்திய போராட்டங்கள் அத்த னையும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிப் போனது.

கருணாநிதி அரசு நிறைவேற்றிய கட்டாய திருமணப் பதிவு சட்டத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு பாதகமான பிரிவுகளை நீக்க வேண்டும், ஜமாஅத் பதிவுகளை அங்கீகரிக்க வேண்டும் என்கிற ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையும் விழலுக்கு இறைத்த நீராக மாறிப் போனது.

திமுக ஆட்சியின் பாராமுகத்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் வாக்குகள் திமுக ஆதரவிலிருந்து எதிரணிக்கு ஆதரவாக மாறி திமுகவின் அமோக தோல்விக்கு வழி வகுத்தது. அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதியாக பங்கேற்றிருந்த மைதீன்கான் பாளையங்கோட்டையில் இழுத்துக்கோ பறிச்சிக்கோ என்று வெற்றி பெறும் நிலைக்கு தள்ளி விட்டது.

கருணாநிதி ஆட்சி நிகழ்த்திய அவலங்கள், திமுக ஆட்சிக்கு பெரும் தோல்வியை பரிசாக தந்துள்ளது. அக்கட்சியின் முன்னணி அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தப்பிப் பிழைத் துள்ளனர்.

எப்போதும் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் துணை முதல்வர் ஸ்டாலின் வாக்கு எண்ணிக்கையில் சில நேரங்களில் பின் தங்கி கடைசி நேர கலாட்டாவில் கரை யேறியுள்ளார்.

கருணாநிதியின் ஆட்சியில் மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டு குடும்ப நலன் பேணப்பட்டது மட்டுமே சாட்சியாக நின்றதால் தற்போது காட்சிகள் மாறிப் போய் விட்டன. முதல்வர் பதவியிலிருந்து வெளியேறப்பட்டது மட்டுமல்லாமல் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தையும் விஜயகாந்திடம் பறிகொடுத்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டதுதான் மிகவும் பரிதாபம்.

- அபு சுபஹான்

பெட்டிச் செய்தி 1 : 1980ஐ நிலை நிறுத்திய 2011

காங்கிரஸ் கட்சி 1967ஆம் ஆண்டு தன்னுடைய ஆட்சியை திமுகவிடத்தில் பறி கொடுத்தது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழக அரசில் பங்கேற்க காங்கிரஸ் செய்து வரும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. கூட்டணியில் சேரும் திராவிடக் கட்சிகள் மத்திய அமைச்சரவையில் பங்கேற்கும்போது நம்மால் தமிழக அமைச்சரவையில் நுழைய முடியவில்லையே என்கிற ஆதங்கம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத காரணத்தால் திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து தேர்தலை சந்தித்து வருகிறது. கூட்டணியில் இருக்கும் திராவிடக் கட்சி சற்றே பலவீனப்படும்போது அதனை மிரட்டி அதிக அளவில் சீட்டு கேட்டு கூட்டணி அரசாக மாற்ற காங்கிரஸ் செய்த முயற்சி இரண்டாவது முறையாக பொய்த்துப் போனது.

1980ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை படுதோல்வியடையச் செய்தது. திமுக - காங்கிரஸ் இணைந்து கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை புரிந்து கொண்ட காங்கிரஸ் இரண்டாண்டு பதவிக்காலம் இருந்த நிலையில் எம்ஜிஆர் அரசு கலைக்கப்பட்டது.

அப்போது நடந்த தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தலின்போது திமுகவை நிர்ப்பந்தப்படுத்தி திமுகவிற்கு சமமாக 112 இடங்களைப் பெற்று போட்டியிட்டது காங்கிரஸ். ஆனால் எதிர்பார்ப்பை பொய்யாகி திமுக காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்து அதிமுக பெரும் வெற்றி பெற்று எம்ஜிஆர் முதல்வரானார்.

அதே போன்று தற்போதும் (2011) திமுகவை மிரட்டி திமுகவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத வகையில் 63 சீட்டுகளை வாங்கி கூட்டணி ஆட்சி கனவில் மூழ்கிய காங்கிரஸின் கனவு மீண்டும் நிறைவேறாத வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டது.

பெட்டிச் செய்தி 2 : வேதனையான சாதனைகள்

கடந்த 2006 தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போன்று பெரும்பாலான மக்களுக்கு கலர் டிவியையும், கேஸ் ஸ்டவ்வையும் திமுக அரசு விநியோகித்து சாதனை படைத்தது. இந்தச் சாதனைகள் தங்களை வெற்றியின் விளிம்புக்கு கொண்டு செல்லும் என்று திமுக எண்ணிக் கொண்டிருந்தது. ஆனால் சாதனைகள் வேதனைகளாகிப் போனதை தேர்தல் முடிவிற்குப் பிறகுதான் திமுக புரிந்து கொண்டது.

ஏற்கெனவே கேஸ் ஸ்டவ் வைத்திருப்பவர்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைப்பது தட்டுப்பாடாக இருந்த நிலையில்தான் இலவச கேஸ் ஸ்டவ்கள் வழங்கப்பட்டது. புதிதாக அரசின் கேஸ் ஸ்டவ் பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததால் தேவையான கால இடைவெளியில் கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பது அரிதாகிப் போனது.

இதனால் கேஸ் சிலிண்டர்களை அதிக விலை கொடுத்து கள்ள மார்க்கெட்டில் வாங்கும் நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டனர். மேலும் இலவச கேஸ் ஸ்டவ் கொடுக்கப்பட்டதால் இவ்வளவு காலம் இவர்களுக்கு ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெயும் நிறுத்தப்பட்டது. ஆக சவுகர்யத்தை ஏற்படுத்தும் என்று வழங்கப்பட்ட இலவச கேஸ் ஸ்டவ்கள் மக்களுக்கு சங்கடத்தைத்தான் ஏற்படுத்தின.

அடுத்தாக கலைஞர் அரசால் வழங்கப்பட்ட இலவச கலர் டிவிக்கள் போதிய தரமின்மையால் விரைவில் பழுதாகிப் போனது. மின் வெட்டு அதிகரித்ததால் பல இடங்களில் இலவச டி.விக்கள் பயன்பாடு அற்றுப் போய் காட்சிப் பொருளாக மாறிப் போனது.

அரசுப் பணத்தின் மூலமாக வழங்கப்படும் டி.வி.க்களுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுப்பதன் மூலமாக கிடைக்கும் வருமானம் முழுவதும் கலைஞர் குடும்பத்தினருக்கு சென்றடைகிறது என்று எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் வைத்த பிரச்சாரம் குடும்ப கொள்ளையை எளிதாக மக்களுக்குப் புரிய வைத்தது. இதுவும் திமுகவின் தோல்விக்கு காரணமானது.

பெட்டிச் செய்தி 3 : குடும்ப ஆட்சிக்கு முடிவுரையா?

கருணாநிதி அரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுவது அரசில் குடும்பத்தினரின் தலையீடுதான். கருணாநிதியின் மனைவிகளும், வாரிசுகளும் அதிகார மையங்களாக செயல்பட்டது ஆட்சிக்கு பெரும் அவப் பெயரை ஏற்படுத்தியது.

மத்திய அமைச்சரவையில் தங்களுக்கு வேண்டியவரை தொலைத் தொடர்புத் துறையில் அமைச்சராக நீரா ராடியாவுடன் கலைஞர் குடும்பத்தினர் நடத்திய உரையாடல்கள் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டியது. முதல்வரின் குடும்ப அரசியல் மாவட்டங்களிலும் பிரதிபலித்தது. அமைச்சர்க ளின் வாரிசுகள் துறை நடவடிக்கைகளில் தலையிட்டதும், குறுநில மன்னர்கள் போல் உலா வந்ததும் மக்களை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அதுபோல நிகழ்வுகள் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இடம் பெறக் கூடாது என்பதுதான் மக்கள் எதிர்பார்ப்பு. ஜெயலலிதாவிற்கு குடும்பம் இல்லாத காரணத்தால் ஆட்சியில் குடும்பத்தினர் தலையீட்டிற்கு வாய்ப்பு இல்லை என்ற போதிலும் முந்தைய வரலாறுகள், ஆட்சியில் தோழியின் குடும்பத்தின் தலையீடு ஓங்கி இருந்ததை நினைவுபடுத்துகிறது.

ஜெயலலிதாவின் சமீப கால நடவடிக்கைகளை உற்றுநோக்கும்போது அவரது நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிகிறது. இந்தப் போக்கு, அவரது ஐந்தாண்டு கால ஆட்சியிலும் நீடிக்க வேண்டும் ஆட்சியில் தோழியின் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம்; எதிர்பார்ப்பு; ஆசை.

பெட்டிச் செய்தி 4 : உன்னால நான் கெட்டேன்! என்னால நீ கெட்டாய்!!

இதுவரையில் எதிரெதிர் அணியில் போட்டி யிட்டு வந்த பாமகவும், விடுதலை சிறுத்தையும் ஒரே அணியில் அணி வகுத்தது அனைவரையும் ஆச்சர்யமாகப் பார்க்க வைத்தது.

ஆரம்பத்தில் இந்த இரண்டு தலைவர்களும் அன்பு வளையத்தில்தான் இருந்தார்கள். தென் மாவட்டத்தில் இயக்கம் நடத்திய திருமாவளவனை வட மாவட்டத்திற்கு அழைத்து வந்து ஆதரவு பாராட்டியவர் ராமதாஸ்.

குடிதாங்கி கிராமத்தில் தாழ்த் தப்பட்ட சகோதரர் இறந்தபோது அவ ரது பிணத்தை அடக்குவதில் பிரச்சினை வந்தது. அப்போது நேரடியாக அந்த இடத் திற்கே வந்து அடக்கம் செய்ய முனைப்பு காட்டி சாதித்ததால் ராமதாஸுக்கு தமிழ்க்குடிதாங்கி என்று பட்டமளித்து சிறப்பித்தவர் திருமாவளவன்.

இரு சமுதாயத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் இருவருக்கிடையே பிளவை ஏற்படுத்தி விட்டது. பாராட்டு பத்திரம் தந்த வாயாலே இராமதாஸை வீடு கொளுத்தி, சேரி கொளுத்தி என்று பேசும் அளவிற்கு பகைமை முற்றி விட்டது.

இதன் காரணமாக இரண்டு கட்சிகளும் எதிரெதிர் முகாம்களில் பங்கேற்பது வாடிக்கையாகிப் போனது. தங்களுடைய சமுதாய பிளவுகள் மற்றவர்களுக்கு ஆதாயமாகிப் போனதை உணர்ந்த இரண்டு தலைவர்களும், பிளவுகளை மறந்து மீண்டும் இணைந்தால் சாதிக்க முடியும் என்று எண்ணிப் பார்த்து இணைந்தனர்.

ஆனால் தலைவர்கள் இணைந்ததைப்போல பழைய பகையின் ஆறாத காயங்கள் இரண்டு சமுதாயத் தொண்டர்களையும் இணைப்பதில் வெற்றி பெறவில்லை. அதனுடைய விளைவு இரண்டு கட்சிகளும் தேர்தலில் பெருந்தோல்வியை சந்தித்து உள்ளன.

இந்தத் தலைவர்கள் தேர்தல் கூட்டையே ஆரம்பமாக வைத்து இரண்டு சமுதாயங்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்களா? அல்லது தேர்தல் தோல்வியை மனதில் வைத்துக் கொண்டு "சீ சீ இந்தப் பழம் புளிக்கும்'' என்று விலகிச் செல்வார்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

பெட்டிச் செய்தி 5 : இடைத் தேர்தல் வருமா?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 22 இடங்களை கைப்பற்றியதன் மூலமாக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தையும் இழந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது திமுக. சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற தேர்தலில் திமுக ஆளுங்கட்சியாக தேர்வு செய்யப்பட்டதால் மட்டுமே சட்டசபைக்கு சென்று தன்னுடைய ஜனநாயக கடமைகளை ஆற்றி உள்ளார்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு சென்று வந்ததெல்லாம் எம்ஜிஆர் காலத்தோடு சரி, இதன் பிறகு திமுக எதிர்க்கட்சியாக வந்தால் சட்டசபை லாபிவரை சென்று கையெழுத்து போட்டு சம்பளம் வாங்குவதோடு சரி.

1980ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றி, திமுக எதிர்கட்சியாக செயல்பட வேண்டுமென்ற நிலை ஏற்பட்டவுடன் சில நாட்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை காரணம் காட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கருணாநிதி.

1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்தித்து கலைஞர் மட்டுமே துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது சட்டசபைக்கு சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் சட்டசபையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது மக்கள் திமுகவிற்கு பிரதான எதிர்க்கட்சி என்கிற வாய்ப்பைக் கூடத் தராமல் தேமுதிகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்த்தை தந்து கலைஞருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அது மட்டுமின்றி 2001 முதல் 2006வரை சட்டசபையில் ஜனநாயகக் கடமை ஆற்றாமல் வெறுமனே சம்பளம் வாங்கியது அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை எழுப்பியது.

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து பேட்டி அளித்த கலைஞர், மக்கள் எனக்கு ஓய்வைத் தந்துள்ளனர் என்று கூறி இருப்பது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் நீடிக்க மாட்டார் என்பதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 50,000 ஓட்டு வித்தியாசத்தில் கலைஞரை வெற்றி பெற வைத்த திருவாரூர் மக்கள் இன்னொரு தேர்தலை சந்திப்பார்களா? என்பது சில நாட்களில் தெரிந்து விடும். 

பெட்டிச் செய்தி 6 : களத்தை கை விட்ட வைகோ

மதிமுக துவங்கப்பட்ட 1993ம் ஆண்டு முதல் தான் பங்கேற்றத் தேர்தல்களில் பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெறா விட்டாலும் கணிசமான ஓட்டு வங்கியைப் பெற்று அரசியலில் புறக்கணிக்க முடியாத சக்தி என்பதை நிலை நிறுத்தி வந்தது மதிமுக.

ஜெயலலிதாவின் அணுகுமுறையால் அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் விலகி திமுக எதிர்ப்பில் தீவிரம் குறைந்தபோது ஜெயலலிதாவின் போர் வாளாக செயல்பட்டு திமுக எதிர்ப்பில் தீவிரம் காட்டியவர். அதன் காரணமாக கூட்டணியில் இரண்டாம் இடம் மதிமுகவிற்குத்தான் என்று அனைவரும் எண்ணியிருந்த வேளையில் சீட் ஒதுக்கீடு வைகோவின் தலையில் இடியென இறங்கியது.

இடையில் வந்த தேமுதிகவிற்கும், இடதுசாரிகளுக்கும் தாராளமாக சீட்கள் கொடுக்கப்பட்டு ஒற்றை இலக்கத்தில் சீட்கள் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டபோது சோதனைகளில் கலங்காதவர் என்று கூறப்படும் வைகோ ஆடித்தான் போனார்.

அவமானத்திற்கு எதிராக குமுறி எழுந்து தேர்தல் பிரச்சாரக் களத்தில் ஜெயலலிதாவிற்கு எதிராக போர் பரணி பாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் களத்தை விட்டு வெளியேறி அமைதியானார்.

பரபரப்பான தேர்தல் களத்தில் பார்வையாளராக மாறிப் போனதால் மதிமுகவை மக்கள் மறந்து விட்டார்கள். அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது அந்த அணியின் வெற்றிக்கு எந்த குந்தகத்தையும் ஏற்படுத்தவில்லை.

"ஆவேசப்பட வேண்டிய நேரத்தில் அமைதி காத்தேன் ஆதரவு தா' என்று அன்புச் சகோதரியிடத்தில் அன்பு பாராட்டப் போகிறாரா? அல்லது சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று சோகத்தில் இருக்கும் கலைஞரிடம் சொந்தம் தேடிப் போகப் போகிறாரா? அல்லது கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று கூறி, தான் வளர்ந்த திராவிடக் கொள்கைகளை கை விட்டு அத்வானியிடம் அடைக்கலமாகப் போகிறாரா என்பதை சிறிது காலம் பொறுத்திருந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

ஐஎன்டிஜே செயற்குழு முடிவும் தமிழக மக்களின் தீர்ப்பும்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக் கான ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதற்காக கடந்த 15-03-2011 அன்று எழும்பூர் சிராஜ் மஹாலில் ஐஎன்டிஜேவின் மாநில செயற்குழு கூடியது.

இதற்கு முதல் நாள் மாலை மாநில நிர்வாகிகளின் கூட்டம் ஐஎன்டிஜே தலைமையகத்தில் நடைபெற்றபோது அதில் எந்தக் கட்சிக்கு ஆதரவு என்ற அரசியல் நிலைப்பாடு குறித்த விவாதத்தில் ஈடுபட்டனர் நிர்வாகிகள். அப்போது பெரும் பான்மை மாநில நிர்வாகிகளின் கருத்து திமுக ஆதரவு நிலையாக இருந்தது.

இச்சூழ்நிலையில் நடந்த மாநில செயற் குழு கூட்டத்தின்போது திமுகவின் சாதக - பாதகங்கள், அதிமுகவின் சாதக - பாதகங்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்த மாவட்ட நிர்வாகிகளான செயற்குழு உறுப்பினர்களின் முன்பு திறந்த மனதோடு அலசப்பட்டது.

திமுகவிற்கு ஆதரவாகத்தான் செயற்குழு முடிவு இருக்கும் என எண்ணியிருந்த மாநில நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழக மக்களின் மனநிலையை செயற்குழு உறுப்பினர்கள் பிரதிபலிக்கத் தொடங்கினர்.

கொலை, கொள்ளை, கடத்தல், ரௌடியிசம் என சீர்கெட்டுப் போயிருந்த தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு, மின் வெட்டு, ஊழல், குடும்ப ஆதிக்கம் போன்ற பிரச்சினைகளை முன் வைத்து திமுகவிற்கு எதிரான நிலைப் பாட்டை செயற்குழு உறுப்பினர்கள் எடுத்தனர்.

பொதுவாக இயக்கங்களின் செயற் குழு, பொதுக்குழு முடிவுகள் மாநில நிர் வாகக் குழுவின் முடிவுகளுக்கு ஏற்பவே அமையும். அப்படி அமையாத பட்சத்தில் உறுப்பினர்களின் மீது அம்முடிவுகள் திணிக்கப்படும். இதுதான் காலங்காலமாக இயக்கங்கள், கட்சிகள் கடைபிடித்து வரும் எழுதப்படாத சட்டமாக, மரபாக இருந்து வருகிறது. இந்த மரபை மாற்றி ஜனநாயகக் குரலை ஒலிக்கச் செய்தது ஐஎன்டிஜே.

செயற்குழு முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக செய்தியாளர்களோடு செய்தியாளர்களாக வந்திருந்த அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான தோழர் டி.எஸ்.எஸ். மணி, பப்ளிக் ரிலேஷன் ஆங்கில மாத இதழின் ஆசிரியர் வெங்கட்ராஜ் ஆகியோர், "இந்த செயற்குழு முடிவுகள் ஒரு இஸ்லாமிய அமைப்பு எடுக்கும் அரசியல் ஆதரவு என்கிற நிலையைக் கடந்து, தமிழக மக்களின் நலன் என்கிற பரந்துபட்ட பார்வையையும் உள்ளடக்கியிருப்பது உள்ளபடியே ஆச்சர்யத்தை அளிக்கிறது.

முஸ்லிம் சமுதாயம் என்கிற வட்டத்திற்குள் மட்டும் நிற்காமல் ஒட்டு மொத்த தமிழக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் செயற்குழு முடிவு வரவேற்கத்தக்கது...'' என நம்மிடம் தெரிவித்தது இத்தருணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், ஐஎன்டிஜே செயற்குழு உறுப்பினர்களின் மனநிலையைத்தான் 2011 சட்டமன்றத் தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. மக்களின் தீர்ப்பு தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

- அபு ஹிதாயா

Pin It