வே.ஆனைமுத்து ஆகிய நான் 21.6.2017 புதன் அன்று, 93ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். 95ஆம் அகவை வரை வாழ்ந்து, தந்தை பெரியாரின் விரிவான வரலாற்றைத் தமிழகத்துக்குத் தர ஆசைப்படுகிறேன்.

1973இல் நான் தமிழக அரசிடம் ரூபா 19000 கடன் பெற்று அச்சிடும் பொறிகளை வாங்கினேன். தந்தை பெரி யாரிடம் ரூபா 10,000/- எழுத்துமுறியின் பேரில் (புரோ நோட்டின் பேரில்) கடனாகப் பெற்று, அச்செழுத்துக்களை வாங்கினேன்.

17.8.1973இல் தந்தை பெரியார் அவர்களை அழைத்து திருச்சியில், “பாவேந்தர் அச்சகம்” திறப்பு விழா நடத்தினேன்.

தந்தை பெரியார் மறைவுக்குப்பின், 17.8.1974இல் “சிந்தனையாளன்” கிழமை இதழைச் சொந்தமாகத் தொடங்கினேன்.

போதிய வரவேற்பு இல்லாததால், 1000 படிகள் மட்டுமே கிழமைதோறும் அச்சிட்டு, 9.10.1982 முடிய கிழமை இதழாகவும், பிறை இதழாகவும் திருச்சியிலிருந்து என் சொந்தப் பொறுப்பில் வெளியிட்டேன். பெரும் இழப்புக்கு ஆளானேன். என் குழந்தைகள் வஞ்சனை இன்றி உழைத்தனர்.

8.8.1976இல் “பெரியார் சம உரிமைக் கழகம்” என்ற தனி அமைப்பு தொடங்கப்பட்டது.

“பெரியார் அச்சிடுவோர் - வெளியிடுவோர் குழுமம்” ஒன்றை உருவாக்கிப் பங்குகள் சேர்த்து, அவர்களுக்கு என் அச்சகத்தை விற்றேன். அரசுக் கடன்களையும் பெரியார் கடன்களையும் அடைத்துவிட்டு, சென்னை, திருவல்லிக் கேணிக்கு அச்சகத்தை மாற்றி, நானே அச்சக மேலாண்மை இயக்குநராக இருந்து, அச்சகத்தை நடத்தினேன்.

பேராவல் காரணமாக, குழுமத்தின் கிழமை இதழாக, 17.9.1983 முதல் “சிந்தனையாளன்” ஏட்டை, ஆறு மாத காலம் - சுவடி 7, ஏடு 42 வரை நடத்தினோம்.

முன்கூட்டியே உறுப்பினர்களைப் போதிய அளவில் சேர்க்காமல், கிழமைக்கு 5000 படிகள் அச்சிட்டு சென் னைக்கு 3000 படிகளும், வெளி மாவட்டங்களுக்கு 1000 படிகளும் விற்பனையாளர்களுக்கு அனுப்பினோம். உறுப்பி னர்கள் 1000 பேர்கள் மட்டுமே. எனவே 6 திங்களில் 40,000 ரூபா கைப்பொறுப்பு ஆயிற்று.

இழுபறியாக அச்சகத்தை நடத்திக் கொண்டு, 1987 முதல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் மாத இதழாக நடத்துகிறோம்.

சிந்தனையாளன் இதுவரையில் செய்துள்ள சாதனைகள் மனங்கொண்டு பாருங்கள்!

“சிந்தனையாளன்” இதழை வளர்த்தெடுக்க முன் வாருங்கள்! எனப் பணிவுடன் வேண்டுகிறேன்.

நம் சிந்தனையாளன் இதழ்தான் :

* பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய மத்திய அரசில் இட ஒதுக்கீடு கோரி, முதன்முதலாக 1975இல் எழுதியது.

* வடமாநிலங்களில், 1978 முதல் 2000 வரை மேற் கொண்ட இடஒதுக்கீடு பயணச் செய்தியைத் தமிழகத்தில் பரப்பியது; வகுப்புவாரி உரிமை நிலைபெற இன்னும் தொடர்ந்து எழுதி வருகிறது.

*  இந்திய மக்கள் தொகையில் 85 விழுக்காடு மக்களைக் கொண்ட பெருங்கூட்டமாக இருக்கிற ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை ஒன்றிணைத்து, இந்திய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கிற அரசியல் இலக்கை வென்றெடுத்திட, மார்க்சிய - பெரியாரிய - அம்பேத்கரிய நெறியில் நின்று, இந்தியாவில் உண்மை யான கூட்டாட்சி மலரப் பாடுபடுகிற மார்க்சியப் பெரி யாரியப் பொதுவுடைமைக் கட்சியின் செயல்பாடுகளைத் தமிழக மக்களிடம் கொண்டு செல்கிறது.

*  “மார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் என்பது ஏன்” என்பதைத் தமிழகத்தில் பரப்புரை செய்தது; செய்து வருகிறது.

* பெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக் கட்டளைப் பணிகளைத் தமிழக மக்களுக்குத் துலாம் பரமாக விளக்கி வருகிறது.

இத்தகைய மாபெரும் சாதனைகளைப் புரிந்த “சிந்த னையாளன்” திங்கள் இதழ், வரும் 1-7-2017 அன்று 41ஆம் ஆண்டைத் தொடங்குகிறது.

மா.பெ.பொ.க. தோழர்களும், ஆதரவாளர்களும் - தமிழ்ப் பெருமக்களையும் தாய்மார்களையும் நாடி நேரில், 1.6.2017 முதல் உறுப்பினர் சேர்க்கைக்கு அணுகுவார்கள்.

தமிழ்ப் பெரியோர்களும் தாய்மார்களும் தாங்கள் தாங்கள் பெரிய மனம் வைத்து, அவரவர் வசதிக்கேற்ற வகையில், மன மகிழ்ச்சியுடன் “சிந்தனையாளன்” உறுப் பினராகி உதவிடுங்கள் எனப் பணிவன்புடன் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

நல்லுதவியை நாடும்,

வே.ஆனைமுத்து