(மே இதழ் தொடர்ச்சி...)

“நீதிபதி ம.பொ.சிக்கு 6 வார சிறைத்தண்டனை விதித்தார். அதுவரை எல்லைக்கிளர்ச்சியில் ஈடுபட்டவர் களுக்கு 2 வாரத்திற்கதிமாகத் தணிகையில் யாருக்கும் தண்டனை தரப்படவில்லை. எனக்குத்தான் அதிக தண்டனை”.... (மேற்கண்ட நூல் பக். 105)

ம.பொ.சி.யை வேலூர் சிறைக்கு அனுப்பவேண்டாம் என்று முதல்வர் கூறியதால், திருத்தணி சப்-ஜெயலில் ம.பொ.சி. தங்க வைக்கப்பட்டார். ஆமாம் அடைக்கப் படவில்லை. இதோ ம.பொ.சி.யே பேசுகிறார். “சப்-ஜெயிலில் வழக்கமான கைதிகளை அடைக்கும் காற்றோட்டம் இல்லாத இருட்டறையில் என்னை அடைக் காமல் சப்-இன்ஸ்பெக்டர் அலுவலகத்தைக் காலி செய்து அங்கு என்னை வைத்தனர். கட்டில், நாற்காலி, மின்விசிறி முதலியவற்றையும் கொண்டு வந்து வைத்தார்கள்”.

“சட்டத்திற்குட்பட்டு ம.பொ.சிக்கு எவ்வளவு வசதி களைச் செய்து தரமுடியுமோ, அவ்வளவையும் செய்து கொடுங்கள் என்று முதலமைச்சர் தங்களுக்குக் கட்டளையிட்டதாகப் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் கூறினர். இராசாசி என்னிடம் வைத்துள்ள அன்பை அறிந்து கொள்ள இந்த நேரம் எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.” (மேற்கண்ட நூல் பக். 104)

இதே இராசாசி 1938-இல் ஹிந்தி எதிர்ப்புப் போராளிகளுக்கு ஆறுமாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்படி கிரிமினல் சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்தார். பெரியாரை பெல்லாரி சிறையில் அடைத்தார். ம.பொ.சி. செல்லப்பிள்ளை என்பதால் அவருக்கு மட்டும் உபச்சாரம் செய்துள்ளார்.

பிரதமர் நேரு அவர்கள் சித்தூர் மாவட்டம் தகராறுக் குரிய பிரதேசம் என்பதனை ஒப்புக்கொண்டு அதற்காக விரைவில் எல்லைக்கமிஷன் அமைக்கப்படும் என்று, இன்று பகலில் செய்தி நிருபர்களிடம் கூறியுள்ளார். இதைத் தங்களிடம் தெரிவித்து தங்கள் கருத்தை அறிந்து உடனே தமக்குத் தகவல் தருமாறு முதலமைச்சர் இராசாசியைக் கேட்டுள்ளார் என்று வி.ஆர். இராசரத்தின முதலியார் மகிழ்ச்சியோடு கூறினார். (மேற்கண்ட நூல் பக். 106)

நேருவின் அறிக்கை தமக்கு மனநிறைவைத் தந்ததாகக் கூறி அதே நாளில் ம.பொ.சி. சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார். 6 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டாலும் 5 நாளில் வெளியே வந்துவிட்டார்.இது ம.பொ.சி.யும் இராசாசியும் நடத்திய கபட நாடகம்தான். எப்படி என்றால் இது நடைபெற்றது 1953 சூலையில். நேரு அதன் பிறகு நான்காண்டு காலம் எல்லைக் கமிஷனை அமைக்கவே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கவும்.

ம.பொ.சி. கைது செய்யப்பட்ட மறுநாளே விநாயகம் தடை உத்தரவை மீற இருந்தார். தலைவர் ம.பொ.சி. கேட்டுக் கொண்டதால் போராட்டம் அன்றே நிறுத்தப் பட்டது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் எந்தப் போராட்டமும் நடைபெறாமல் ம.பொ.சி. தடுத்துவிட்டார். சென்னை மாகாண அரசின் தடை உத்தரவை மீறிப் பல இடங்களிலும் ஊர்வலங்களும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன. சூன் 2-ஆம் தேதி அம்மையார்குப்பத்தில் 500 பேர், ஆர்.கே. பேட்டையில் 500 பேர் தடை உத்தரவை மீறி ஊர்வலம் நடத்தினர். சூன் 30-ஆம் தேதி நகரியில் சுமார் 4000 பேர் தண்டவாளத்தில் அமர்ந்து பம்பாய் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். திருவாலங் காட்டுக்கும் மணவூருக்கும் இடையே ஜனதா எக்ஸ்பிரஸ் இரயில் நிறுத்தப்பட்டது. சித்தூரிலும் இரயில் நிறுத்தம். (மேற்கண்ட நூல் பக். 118) வடக்கெல்லைப் போராட்டத்தின் வீச்சைக் குறைத்து இராசாசியைக் காப்பாற்றவே ம.பொ.சி. இப்படி நாடகம் ஆடினார்.

வடக்கெல்லைப் பாதுக்காப்புக் குழுவினர் 02.09.1953 அன்று கே.விநாயகம் தலைமையில் தில்லிக்குச் சென்று பிரதமர் நேருவைச் சந்தித்தனர். இந்தச் சமயத்தில் தில்லித் தமிழ்ச்சங்க விழாவில் கலந்து கொள்ள ம.பொ.சி.யும் தில்லி சென்றிருந்தார். அன்று ம.பொ.சி. தில்லியில் இருந்தபோதிலும், வடக்கு எல்லைப் போராட்டக்குழுவிற்குத் தலைவராக இருந்த போதிலும் நேருவைப் பார்க்கும் குழுவினருடன் அவர் உடன் செல்லவில்லை. (மேற்கண்ட நூல் பக். 121)

ம.பொ.சிக்கு வடக்கெல்லைப் போராட்டத்தில் எவ்வளவு அக்கறை இருந்தது! என்பது இதன் மூலம் தெரிகிறது. நேரு காங்கிரசை விட்டுத் தம்மை நீக்கி விடுவார் என்று பயந்து கொண்டுதான் ஒதுங்கிவிட்டார் என்பதே உண்மை. 1953 சூலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட எல்லைப்போரை மீண்டும் இரண்டு ஆண்டு கள் கழித்துத் திரு. கே. விநாயகத்தின் முயற்சியில்தான் மீண்டும் தொடர முடிவு செய்யப்பட்டது.

தமிழரசுக் கழக மாநாட்டில் பேசிய விநாயகம் “நாங்கள் இறுதி முடிவுக்கு வந்துவிட்டோம். அதாவது இரண்டு வருடங்கள் காத்திருந்தும் எல்லைக்கமிஷன் அமைக்கப்படாததால் தற்காலிகமாக நிறுத்தி வைத்த எல்லைப் போராட்டத்தை மீண்டும் துவக்குவதென்று தீர்மானித்துவிட்டோம்” (மேற்கண்ட நூல் பக். 152)

1955 ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 ஆம் தேதி முதல் சத்தியாகிரகம் நடைபெறவும், கே. விநாயகம் தளபதியாக வும் முடிவு செய்யப்பட்டது. அதற்குள் ம.பொ.சி. சென்னை மாநில நிதி அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 1955 டிசம்பருக்குள் எல்லைச் சிக்கல் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

“நான் கொடுத்த மூன்று நிபந்தனைகளையும் அரசாங்கம் ஒப்புக்கொண்டுவிட்டதால், எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் காலவரம்பு வைக்கப்பட்டு விட்டதால், நாளை நடக்கவிருந்த சத்தியாகிரகப் போராட்டத்தை இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை ஒத்தி வைத்து இருக்கிறேன்” என்று ம.பொ.சி. அறிவித்தார். (மேற்கண்ட நூல் பக். 158-159)

1955 டிசம்பர் இறுதிநாள் முடிந்தும் வடக்கெல்லைப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் எட்டப்படாததால் வடக்கெல்லைப் போராட்டக்குழுச் செயலாளராகிய நான் (இந்நூலாசிரியர்), திருத்தணி வன்னியர் குல சத்திரத்தில் 1956 சனவரி 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தைத் தொடங்கினேன். அதன் விளை வாகத் திருத்தணியில் கடைகள் அடைக்கப்பட்டன. ஊர்வலமும் நடத்தப்பட்டது. தலைவர் ம.பொ.சி.யிட மிருந்து கடிதம் வந்தது. அதில் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டாம் எனக் கூறியிருந்தார். (மேற்கண்ட நூல் பக். 165)

பெரியோர் பலரின் அறிவுரையை ஏற்று உண்ணா விரதத்தை மறுநாள் காலை 9 மணிக்கு முடித்துக் கொண்டேன்.

தமிழக வடக்கெல்லைப் போராட்டம் வெற்றிபெறும் பொருட்டு டிசம்பர் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை யன்று “வடக்கெல்லைப் பாதுக்காப்பு தினம்” கொண்டாடுமாறு தமிழ் மக்களை வடக்கெல்லைப் பாதுகாப்புக்குழு வேண்டிக் கொள்கிறது. சென்னையில் நடைபெறும் எல்லைப் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தொண்டர் படைக்குழு ஒன்று தணிகையிலிருந்து புறப்பட்டுச் சென்னை வரை கால்நடையாகவே செல்ல வேண்டும் என்றும், இப்படைக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல திரு. ஈ.எஸ். தியாகராஜன் அவர்களை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. (மேற்கண்ட நூல் பக். 176)

வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழுவினர் 1956 செப்டம்பர் 20ஆம் நாள் சுமார் 500 பேர் சென்னை யிலிருந்து புறப்பட்டனர். தளபதி கே. விநாயகம் வந்து கலந்துக் கொண்டார். 12 மைல் நடந்து வந்த கே. விநாயகம் பகலுணவுக்குப் பின் சிறிது நேரம் ஓய் வெடுத்து விட்டுச் சென்னை சென்று விட்டார். ம.பொ.சி. திருவள்ளூருக்கு வந்து நலம் விசாரித்துவிட்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.... செப்டம்பர் 23 ஆம் தேதி கோடம்பாக்கம் வந்தவுடன் தளபதி விநாயகம் இன்முகம் காட்டி வரவேற்றுக் காலை மற்றும் பகல் உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். வடபழனி கோவில் மண்டபத்தில் ஓய்வெடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு ம.பொ.சி. வந்து பார்த்தார்....

செப்டம்பர் 24 ஆம் தேதி தளபதி கே. விநாயகம் தலைமையில் 50 பேர் சட்டமன்றத்தை நோக்கி முழக்கங்கள் எழுப்பியவாறு (அப்போது சட்டமன்றம் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்தது) சென்றோம். அனைவரும் கைது செய்யப்பட்டனர். 25 ஆம் நாளும் மறியல் நடைபெற்றது. 26 ஆம் நாள் ம.பொ.சி. மறியலில் கலந்து கொண்டார். 29 ஆம் தேதி வரை மறியல் நடைபெற்றது. அனைவருக்கும் 15 நாள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. ஆனால் மறுநாள் 30 ஆம் தேதியே அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். இது எங்களுக்குச் சற்று ஏமாற்றமாகவே இருந்தது. ம.பொ.சி. அவர்கள் எங்களிடம் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். இது எங்களுக்கு ஓரளவு ஆறுதல் அளித்தது. (மேற்கண்ட நூல் பக். 180-181)

இதை எழுதியவர் வடக்கெல்லை போராட்டக்குழுவின் செயலாளர் திருத்தணி கோல்டன் திரையரங்க உரிமையாளர் கோல்டன் ந.சுப்பிரமணியம், நூல் ஞஞ “தணிகை மீட்பும் வடக்கெல்லைப் போராட்டமும்”.

ஒவ்வொரு முறையும் வடக்கெல்லைப் போராட்டக் குழுவினர் போராடும் போதெல்லாம் அதைத் தடுப்பதி லேயே ம.பொ.சி. குறியாக இருந்துள்ளார். வடகெல்லைப் பிரச்சினை தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் தான், ம.பொ.சி. க்கு அரசியல் கட்சி நடத்த ஆட்கள் இருப்பார்கள் என்ற காரணத்தினால் பிரச்சினை விரைவில் தீர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். 1956ல் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த போதும் தமிழகத்தின் வடக்கெல்லையைப் பற்றிய குறிப்பு எதுவும் பசல் அலி ஆணையத்தில் இல்லாமல் போனதற்கு ம.பொ.சி., - இராசாசி கூட்டுறவே காரணம். அதனால் 1960 வரை இப்பிரச்சினை இழுத்துக் கொண்டே சென்றது.

ஆந்திரப் பிரிவினை தொடர்பான மசோதா சென்னை சட்டமன்றத்தில் 14.07.1953 முதல் 27.07.1953 வரை 14 நாள்கள் நடைபெற்றது. அதில் பேசிய பெரும் பான்மையான தமிழகப் பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் இராசாசியின் ஆந்திர ஆதரவுப் போக்கை வன்மையாகக் கண்டித்துள்ளனர். சட்டமன்ற விவா தங்கள் 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. சென்னை சட்டமன்ற மேலவையிலும் 20.07.1953 முதல் 25.07.1953 வரை 5 நாட்கள் நடைபெற்றது. ம.பொ.சி. ஒருவரைத் தவிர வேறு யாரும் இந்த மசோதாவை வரவேற்கவில்லை. எண்பதுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த உண்மையை ம.பொ.சி.யோ, கோல்டன் சுப்பிரமணியமோ எழுதவில்லை.

தில்லி நாடாளுமன்றத்திலும், ஆந்திரப் பிரிவினை மசோதா 13.08.1953 முதல் 27.08.1953 வரை 15 நாட்கள் நடைபெற்றது. 18.08.1953 அன்று நாடாளு மன்றத்தில் பேசிய திருக்குறள் முனுசாமி “சென்னை மாகாண சட்ட மன்றத்தால் ஆந்திராவுக்குப் புதிய தலைநகரை உருவாக்க 2.30 கோடி கொடுக்க வேண்டும் என்ற விதி நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவில் அது சேர்க்கப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும் ஆந்திரா பிரிந்து எஞ்சிய சென்னை மாகாணத்திற்குத் திராவிடநாடு (அ) தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டவேண்டும்” என்று பேசினார். ஆந்திராவில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு எல்லை ஆணையம் (கமிஷன்) அமைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். (நாடாளுமன்ற விவாதங்கள் பக். 1030 - 1034 நாள் 18.08.1953)

தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான ஆர். வெங்கட்ராமன் “ஆந்திராவுக்குப் புதிய தலைநகரை உருவாக்கச் சென்னை மாகாண அரசு 2.30 கோடிக் கொடுக்க வேண்டும் என்ற விதியை நீக்கவேண்டும் (அ) அதை ஒரு கோடியாகக் குறைக்க வேண்டும்” என்று வாதிட்டார். (நாடாளுமன்ற விவாதக் குறிப்புகள் பக். 1630 நாள் 26.08.1953)

மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் தொண்டு வ. வீராசாமி, ஆந்திர உயர்நீதிமன்றத்தைச் சென்னை யில் இருந்து உடனே ஆந்திரப் பகுதிக்கு மாற்றவேண்டும் என்று பேசினார் நாடாளுமன்ற விவாதங்கள் பக். 1273 நாள் 22.08.1953)

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவினாசி லிங்கம் செட்டியார், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி. இராமசாமி, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் நடேசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர், தமிழகத்திற்கு ஆதரவாக வாதாடி உள்ளனர். ஆந்திரா பிரிவினை தொடர்பான நாடாளுமன்ற விவாதங் கள் 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. இதைப் பற்றியெல்லாம் ம.பொ.சி. ஒருவரிகூட எங்குமே எழுத வில்லை. கோல்டன் சுப்பிரமணியமும் எழுதவில்லை. ஆந்திரப் பிரிவினை வடக்கெல்லைப் பிரச்சினை என்பது கே. விநாயகம், ம.பொ.சி. இராசாசி, போன்றவர்களோடு முடிந்துவிட்டதைப் போல வரலாற்றை இவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

தமிழகத்தின் தெற்கெல்லைத் தொடர்பாகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற விவாதங்கள் 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. இன்று வரை எல்லைப் போராட்டங்களைப் பற்றி நூல் எழுதிய வர்கள் யாருமே முழுமையாக இவற்றை ஆராய்ந்து பார்த்து எழுத வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ம.பொ.சி. தனக்கு மட்டுமே பெருமை வரவேண்டும் என்ற வகையில் ‘எனது போராட்டத்தை’ எழுதி யுள்ளார்.

வடக்கெல்லைப் போராட்டத் தளபதி கே. விநாயகம் தான் அந்தப் பகுதி மக்களைத் திரட்டிப் போராட்டத் தளபதியாகத் திகழ்ந்தார். ம.பொ.சி. அவ்வப்போது, கூட்டத்தில் பேசுவதற்கு மட்டுமே சென்றார். வடக்கெல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. பெரிய தியாகம் எதுவும் செய்துவிட வில்லை என்பதே உண்மை.

- முற்றும்

Pin It