கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

19.9.2021 அன்று ‘தமிழ்த் தேச நடுவம்’ நடத்திய சென்னை கருத்தரங்கில் பெ. மணியரசன், சீமான் போன்ற ‘தமிழ்த்தேசிய’ உரிமையாளர்களாக வலம் வருவோரின் திராவிட எதிர்ப்பு கருத்துகளுக்கு வரலாற்றுத் தகவல்களோடு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தோழரும் பெரியாரிய ஆய்வாளருமான வாலாஜா வல்லவன் நிகழ்த்திய உரையின் கருத்தை கடந்த இதழில் வெளியிட்டோம். உரையின் இறுதிப் பகுதி இது.

periyar 414பெரியார் பேசிய திராவிட நாடு - எது? திராவிடம் பேசிய பெரியார், தமிழ்நாட்டுக்கு கேடு விளைவித்தார் என்று சில தமிழ் தேசியர்கள் கூறுவது சரியா?

• உண்மைக்கு மாறான புரட்டுவாதம். பெல்லாரி சிறையிலிருந்து விடுதலையான பெரியார், விடுதலையான பிறகு சென்னையிலுள்ள அண்ணாமலை (செட்டியார்) மாளிகையில் நீதிக்கட்சி நிர்வாகக் குழு கூடியது. பெரியார் கலந்து கொண்டார். சென்னை மாகாணத்திலிருந்த நீதிக்கட்சித் தலைவர்கள், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் வைத்தால் எங்களைப் போன்ற சென்னை மாகாணத்தில் அடங்கியுள்ள ஆந்திரா, கேரளாவைச் சார்ந்தவர்கள் நிலை என்னாவது என்ற கேள்வி எழுப்பினார்கள். நீதிக்கட்சி செயற்குழுவே, ‘திராவிட நாடு’ என்ற கோரிக்கையை முன் வைத்து தீர்மானம் நிறைவேற்றியது. இது நடந்தது 1939ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் அப்போது பிரிக்கப்படவில்லை.

• பிறகு 1949இல் ‘குடிஅரசு’ பத்திரிகையில் மே மாதம், திராவிட நாட்டுக்கான அரசியல் சட்டத்தை விளக்கி, பெரியார் 3 வாரம் தொடர் கட்டுரைகளை எழுதினார். அதில் திராவிட நாடு வடநாட்டிலிருந்து துண்டித்துக் கொள்ள வேண்டும். திராவிட நாட்டில் அடங்கியுள்ள நான்கு நாடுகளும் கூட்டாட்சியாக அமைத்துக் கொள்ள வேண்டும். பொது மொழியாக ஆங்கிலத்தை வைத்துக் கொள்ள வேண்டும். நான்கு நாடுகளில் எந்த நாடாவது பிரிந்து செல்ல விரும்பினால் பிரிந்து கொள்ளலாம் என்று திராவிட நாட்டுக்கான அரசியல் சட்டத்தை பெரியார் முன்மொழிந்தார்.

• 1956 நவம்பர் முதல் தேதி (1.11.1956), மொழி வழி மாநிலங்கள்உருவாகின்றன. அடுத்த நான்கு நாட்களிலேயே நவம்பர் 5ஆம் தேதி பெரியார், திருச்சியில் திராவிடர் கழக மத்தியக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, இனி திராவிட நாடு இல்லை; தமிழ்நாடு விடுதலை தான் என்று அறிவித்தார். தனித் தமிழ்நாடே நமது இலட்சியம் என்று அறிவித்து, கைகளில் பச்சைக் குத்திக் கொள்ளுங்கள் என்றார். 1956 முதல் அவர் 1973 டிசம்பரில் பேசிய தியாகராயர் நகர் வாழ்க்கை யின் கடைசி கூட்டம் வரை (19.12.1973) அவர் தமிழ்நாடு தமிழருக்கே என்று தான் பேசினார்.

• 1960இல் பெரியார் ‘சுதந்திர தமிழ்நாடு ஏன்?’ என்ற நூலையே எழுதி வெளியிட் டார். எந்தத் தமிழ்த் தேசியவாதியாவது இப்படி ஒரு நூலை இந்தத் தலைப்போடு வெளியிட்டது உண்டா?

மறைமலை அடிகள், ம.பொ.சி., அண்ணல் தங்கோ போன்ற தலைவர்கள் தான் தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்தவர்கள். பெரியார், தமிழ்த் தேசிய உணர்வை சிதைத்தார், திராவிடத்தைத் தூக்கிப் பிடித்தார் என்று மணியரசன், சீமான் போன்றவர்கள் உயர்த்திப் பிடிப்பது சரியா?

• 1925இல் பனகல் அரசர் முதல்வராக இருந்தபோது, தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்க குழு ஒன்றை அமைத்தார். அறநிலையத் துறைச் சட்டத்தை அவர் கடும் எதிர்ப்புக்கிடையே கொண்டு வந்தார். பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தனர். சட்டம் கொண்டு வந்தவுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூடுதலாக இருந்த ரூ.4.0 இலட்சம் ரூபாய் நிதியை எடுத்து மாகாண அரசு சார்பில் பாதி நிதியை ஒதுக்கீடு செய்து தெலுங்கு பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். தமிழ் மடாதிபதிகள், தமிழ் பல்கலைக்கழகத்துக்கு நிதி உதவி வழங்கினால் அரசு நிதியும் பங்களிப்புமாக வழங்கி தமிழ்ப் பல்கலைக்கழகத்தை உருவாக்க எதிர்பார்த்திருந்தார்; ஆனால் எவரும் முன் வரவில்லை. பனகல் அரசர் கொண்டு வந்த அறநிலையத் துறைச் சட்டத்துக்கு வரலாற்றிலே இல்லாத அளவுக்கு 800 திருத்தங்களைக் கொண்டு வந்தனர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி பார்ப்பனர் மட்டும் 425 திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1925இல் மூன்று ஆண்டு விவாதத்துக்குப் பிறகு தான் அறநிலையத் துறைச் சட்டம் நிறைவேறியது. 1928இல் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவை அமைந்த போதும் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைப்பதை எதிர்த்து, மறைமலை அடிகள் கடிதம் எழுதினார் என்பது வரலாறு. சென்னை பல்கலைக்கழகம் மட்டுமே போதும் என்று கூறினார். ‘மெயில்’ ஏடு வெளியயிட்ட அந்தக் கடிதத்தை நம்பியூரான் தனது ஆய்வில் பின் இணைப்பாக இணைத்துள்ளார். பெரியார் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெரியார் எதிர்ப்பு தெரிவித்திருந்தால், மணியரசன் போன்றவர்கள் பெரியாருக்கு எதிராக எப்படி துள்ளிக் குதித்திருப்பார்கள்? எப்படி நெருப்பைக் கக்கியிருப்பார்கள். ‘கன்னடர்’ என்பதால் எதிர்த்தார் என்று குற்றக் கூண்டில் நிறுத்தியிருப்பார்கள்.

• அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய மறைமலை அடிகளாரிடம், ஒரு மாணவர் திராவிடம் என்பது எது என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மறைமலையடிகள், இந்தியாவில் வடமேற்கு பகுதியிலுள்ள ‘ஆரியவர்த்தம்’ என்ற சிறு பகுதியைத் தவிர, இந்தியா முழுதுமே திராவிடம் தான் என்று பதிலளித்தார். மறைமலை அடிகளார் வரலாற்றை எழுதிய அவரது மகன் மறை. திருநாவுக்கரசு இதை அவரது நூலில் பதிவு செய்துள்ளார். இந்தியா முழுதுமே திராவிடம் தான் என்று மறைமலையடிகள் தன்னை ‘இந்து - சைவர்’ என்றே கூறிக் கொண்டார். ‘இந்து - இந்தியாவை’ எதிர்த்து ஒரு வரி கூட அவர் எழுதியதில்லை. இவர் தான் தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுத்ததாகக் கூறுகிறார்கள். பெரியாருக்கு எதிராக மறைமலையடிகளை நிறுத்தி, பெரியாரை சிறுமைப்படுத்துவதே அவரது நோக்கம்!

அயோத்திதாசர் பற்றிய தவறான தகவல்

அயோத்திதாசர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில தமிழர் என்றே பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதாக தவறான தகவலை பெ. மணியரசன் கூறி வருகிறார். தனது இறுதிக் காலமான 1914 வரை ‘ஆதி திராவிட மகாஜன சபை’யைத் தான் அயோத்திதாசர் நடத்தி வந்தார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ‘பூர்வீக திராவிடன்’ என்று பதிவு செய்ய வேண்டும் என்று தான் கூறினாரே தவிர, தமிழன் என்று பதிவு செய்யச் சொன்னதாக ‘பெ.ம.’ கூறுவது சுத்தப் பொய். அலோஷியஸ் தொகுத்த அயோத்திதாசர் எழுத்து தொகுப்பில் பக்.315, 316இல் இது பதிவாகியிருக்கிறது.

ம.பொ.சி. யார்?

தமிழ் தேசியர்கள் தூக்கிப் பிடிக்கும் ம.பொ.சி.யின் வரலாறு என்ன? அவர் நடத்திய வார இதழான ‘செங்கோல்’ பத்திரிகையின் 6000 பக்கங்களையும் நான் படித்து முடித்து விட்டேன்.

1. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்க தாம் ஏற்பாடு செய்வதாக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., ம.பொ.சி.யிடம் கேட்டபோது சந்திக்க மறுத்தவர் ம.பொ.சி. “நான் ஒரு காந்தியவாதி. உலகில் எந்த ஒரு இயக்கமும் வன்முறையில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. விடுதலப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம்” என்று ‘ஈழமும் நானும்’ என்ற நூலில் ம.பொ.சி.யே பதிவு செய்திருக்கிறார்.

2. ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், பெரியார் இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக பார்ப்பனர்களும் காங்கிரசாரும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு தான் 1946இல் உருவான அந்த அமைப்பு, 1954 வரை காங்கிரசுக்குள் தான் செயல்பட்டது. காங்கிரசுக்குள்ளேயே கடும் எதிர்ப்பு வந்ததால், அவர் வெளியேறினார். அப்போதுகூட நேருவிடம் சென்று தங்களை வெளியேற்ற வேண்டாம் என்று மன்றாடிப் பார்த்தார். பெ. மணியரசன் பார்வையில் இவர் உண்மையான தமிழ் தேசியவாதியாம்.

• மொழி வழி மாநிலப் பிரிவினைக் குழு பி.ஜி.கர் தலைமையில் 1956, ஜன.11இல் சாட்சியமளித்த ம.பொ.சி. என்ன கூறினார்?

இந்தியாவுக்கு இந்தியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். நிர்வாக மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் இந்தியே இருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்திலும் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும். இயன்றால் நாடாளுமன்றத்திலும் இந்தியைப் பயன்படுத்தலாம். உறுப்பினர்கள் பேசுவதற்கு மட்டும் தாய்மொழியை அனுமதித்தால் போதும். இது தான் ம.பொ.சி. அளித்த சாட்சியம். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக இந்தி இருக்கலாம் என்றார். 15.1.1956 ‘செங்கோல்’ இதழில் இந்தப் பதிவு உள்ளது.

நாவலர் சோமசுந்தர பாரதியார் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தவர். பெரியார் அதில் இடையில் வந்து இணைந்து கொண்டார் என்கிறார் பெ. மணியரசன்.

1. 1938இல் சென்னை கடற்கரையில் ஒன்றரை இலட்சம் மக்ககள் திரண்ட இந்தி எதிர்ப்பு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியார், பெரியாரிடம் மன்னிப்புக் கோரினார். சைவத்தின் பெயரால் தங்களுக்கு தொல்லைக் கொடுத்து விட்டேன். மன்னிக்க வேண்டும் என்று சொன்னவர். இப்போதும் ஒரு காங்கிரஸ்காரராகவே இந்தித் திணிப்பை எதிர்க்கிறேன் என்றார். 17.9.1938 ‘விடுதலை’யில் இது பதிவாகியிருக்கிறது. நாவலர் எம்.ஏ, பி.எல்., படித்து விட்டு, அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்த் துறை தலைவராக இருந்தவர். எட்டயபுரம் மன்னர் கொடையாக வழங்கிய 400 ஏக்கர் நிலத்தை ஏற்க மறுத்தவர். அவரது குடும்பத்தில் 6 பேர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர். பாரதியைத் தெரிந்த தமிழர்களுக்கு நாவலரின் இந்த தியாக வரலாறு தெரியுமா?

2. 1948இல் அவநாசிலிங்கம் (செட்டியார்), கல்வி அமைச்சராக இருந்தபோது இந்தியைத் திணித்தபோது பெரியார் எதிர்த்துப் போராடினார். அப்போது நாவலர் பாரதியாரையும் போராட்டக் களத்துக்கு அழைத்தபோது வரமறுத்து விட்டார். நாம் சுதந்திரம் பெற்று விட்டோம்; எனவே இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு விட்டேன்; இந்தித் திணிப்பைத்தான் நான் எதிர்த்தேன் என்று கூறி விட்டார்.

3. பெரியார் திராவிடம் என்று பெயர் சூட்டியதை எதிர்த்து தமிழர் கழகம் என்று பெயர் சூட்ட வலியுறுத்தினார் கி.ஆ.பெ. எனவே வெளியேறினார் என்று பெ.மணியரசன் கூற்று பச்சைப் பொய். ‘தமிழ்நாடு நீதிக் கட்சி’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்றே அவர் கேட்டதாக கி.ஆ.பெ.யை பேட்டி கண்டு, ‘எம்.ஃபில்.’ பட்டத்துக்கு ஆய்வு செய்த மணிமேகலை பதிவு செய்துள்ளார்; தமிழர் கழகம் என்று அப்போது கூறவில்லை; அதற்கு பல ஆண்டுகள் கழித்து ‘தமிழர் கழகம்’ உருவாக்கி, பிறகு ‘மூடு விழா’ நடத்தி விட்டார்.

4. ஒரு சில தமிழ்ச் தேசியர்கள் குற்றம் சாட்டுவதுபோல ‘திராவிடர் கழகம்’ என்ற பெயர் சூட்டல் ஒரே நாளில் எடுத்த முடிவு அல்ல; 1943ஆம் ஆண்டிலிருந்தே பல ஊர்களில் கழக அமைப்புகளோடு விவாதிக்கப்பட்டு எடுத்த முடிவு.

காலையில் தமிழர் கழகம் என்று பெயர் சூட்ட முடிவெடுத்து, மாலையில் பெரியார் முடிவை மாற்றிக் கெண்டார் என்பது பச்சைப் பொய்.

(நிறைவு)

தொகுப்பு: இராசேந்திரன்