புரோகிதர் : ஓய், சுப்பிரமணிய முதலியாரே! நாளைக்கு 8ஆம் நாள் உங்கப்பாவுக்கு திதி வருகிறது. திதியை அதிகாலையிலேயே முடித்து விட்டால் நன் றாய் இருக்கும். ஏன் என்றால், நான் அன்று காலை 10 மணிக்கு நாயக்கர் வீட்டுக்குப் போக வேண்டும். அங்கு கர்ணபூஷண முகூர்த்தம். அல்லாமலும் அதிகாலையில் திதி செய்வது மிகவும் விசேஷமானது, முதலியார்!

சரி சுவாமி, அப்படியே ஆகட்டும். தாங்கள் மாத்திரம் அதிகாலையில் வந்துவிடுங்கள். நாங்கள் ஸ்நானம் செய்துவிட்டு சாமக்கிரியைகளோடு தயாராய் இருக் கிறோம் (முதலியார் தன் மனைவியை அழைக் கிறார்). அடீ!

அண்ணியார் : (பெரிய வீட்டுப் பெண்களை அண் ணியார் என்று தான் கூப்பிடுவது) ஏனுங்கோ?

முதலியார் : சாமி சொன்னதைக் கேட்டாயா?

அண்ணியார் : ஆமா, நானும் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன்.

முதலியார் : இன்னைக்கு எட்டாம் நாள் ஞாபக மிருக்கட்டும். காலமே நேரமே ஸ்நானம் செய்துவிட்டு சாமிக்குக் கொடுக்கும் சாமான்கள் எல்லாம் தாராளமாய் ரெடியாய் வைத்து இருக்க வேண்டும்.

தம்பி : (பக்கத்தில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த முதலியார் மகன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறவர்) என்னப்பா என்னமோ சொன்னீங்களே, என்னத்திற்குத் தாராளமாய் ரெடியாய் இருக்க வேண்டும்?

முதலியார் : உங்க தாத்தாவுக்கு எட்டாம் நாள் திதி. சாமி காலமே எங்கேயோ போகணுமாமா. அதற் காகக் காலையிலேயே எல்லாம் தயாராய் இருக்க வேண்டும் என்று சொன்னேன். காலம் பஞ்சகாலம். சாமிக்குத் தாராளமாய்க் கொடுப்பமே! அவர் ஒரு 2, 3 மாதத்துக்கு ஆவது சாப்பிடட்டும்.

தம்பி : அதற்கு ‘இந்த’ ஆசாமி (அய்யர்) என்னத் துக்கு வந்தாரு? எதற்காகக் கொடுக்கிறது? யாருக்குப் பஞ்சம்?

முதலியார் : அடே அவர் சாமிடா! அப்படி எல்லாம் சொல்லாதே! மரியாதையாய்ப் பேசு!

தம்பி : என்னப்பா கோவிலிலே இருக்கிறதும் சாமி! இந்தத் தடிராயனும் சாமியா? அப்படின்னாக்க கோயிலிலே இருக்கிற சாமிக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது? ஒரு நாயை முதலியாரே, முதலியாரே என்று கூப்பிட்டால் நமக்குக் கோபம் வராதாப்பா? அதுபோல் இந்தப் பிச்சை எடுக்கிற மனுஷனை சாமிண்ணு கூப்பிட்டால், கோயிலில் இருக்கிற சாமி கோபித்துக் கொள்ளாதா?

முதலியார் : என்னடா, அதிகப்பிரசங்கிப் பயலே? இப்படி ஆய்விட்டாயே. இதெல்லாம் எங்கடா படிச்சே? இந்த சுயமரியாதைக்காரப் பயல்களோட சேர்ந்து கெட்டுப் போய் விட்டாப்லே இருக்கிறதே. மட்டு மரியாதை, மனுஷாள் கினுஷாள் ஒண்ணும் இல்லாமேப் போச்சே. இனிமேல் இப்படியெல்லாம் பேசினால், பார்த்துக்கோ அப்புறம் என்ன நடக்கும் என்று!

(- “குடிஅரசு”, 27.11.1943. சித்திர புத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது)

Pin It