என்னுடைய வாழ்நாளில் அரசாங்க மந்திரிகளில் பொப்பிலி அரசரைத் தவிர இன்றுவரை எந்த மந்திரிகளிடமும் நேரில் சென்றோ, எழுத்து மூலமாகவோ என் கழகத்துக்காவது, பொது நலத்திற்காவது எந்தவிதமான வேண்டுகோளும் செய்துகொண்டது இல்லை.

திருவாளர்கள் முத்தையா முதலியார், டாக்டர் சுப்பராயன் ஆகியவர்கள் மந்திரிகளாக இருந்த காலத்தில், அதாவது சுமார் 1928-29 ஆம் ஆண்டுகளில் அவர்களிடம் பொது விஷயங்களைப் பற்றி ஏதாவது கேட்டுக் கொண்டிருப்பேன். அவர்களும் 100க்கு 90க்கு மேற்பட்ட வேண்டுகோள்களை மதித்திருப்பார்கள். மற்றபடி, இதுவரை எந்த மந்திரிகளிடமும் என் சொந்த விஷயம் உள்பட எந்தக் காரியத்திற்கும் நெருங்கினது இருக்காது.

இப்பொழுது நான் மந்திரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துக் கொள்ள வேண்டியவனாய் இருக்கிறேன். அதாவது, தமிழ்நாட்டிலே பாமர மக்கள் மொழியாகிய தமிழ் மொழியை அரசியல், சமுதாய இயல் காரியங்களில் அரசாங்கம் சிறிதும் இலட்சியம் செய்வதில்லை. இது தவிர, இந்தியை நுழைத்துப் பள்ளிக்கூடங்களிலும், பரீட்சைகளுக்கும் பாடமாக ஏற்பாடு செய்து, படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் தொல்லைகள் ஒருபுறமிருக்க, உத்தியோகத் தகுதியைக் கொண்டுவந்து புகுத்திப் பெரும்பாலான தமிழ் மக்களை உத்தியோகத் தகுதி அற்றவர்களாக ஆக்குவது மற்றொரு புறமிருக்க, இவையெல்லாம் போதாது என்று கருதியோ என்னமோ, தமிழ் எழுதப் படிக்கப் பேசத் தெரியாத மலையாளிகளையும், கன்னடியர் (மங்களூர்க்காரர்)களையும் தமிழ்நாட்டிலே மாகாணத் தலைமை உத்தியோகம், ஜில்லா தலைமை உத்தியோகம் மற்றும் கெஜட் பதிவு அதிகாரிகள், கெஜட் பதிவு இல்லாத அதிகாரிகள், கமிஷனர்கள் முதலிய உத்தியோகங்களில் நியமிப்பது என்பது சர்வசாதாரணக் காரியமாக இருந்து வருகிறது.

ஜனநாயக நாடு, சுதந்திர நாடு, மக்கள் ஆட்சி என்கின்ற அலங்காரப் பெயர்களைச் சொல்லிக்கொண்டு நடைபெறுகிற ஆட்சியில் 100க்கு 80 பேர்களுக்கு மேற்பட்டுக் கல்வியறிவில்லாத பாமர மக்கள் நிறைந்திருக்கும் நாடு இது என்பதைச் சிறிதும் உணராமல், மேற்கண்ட மாதிரியான -நாட்டுமொழி தெரியாத அந்நிய மொழியாளர்களை அதிகாரிகளாக நியமிப்பதென்றால் குடிமக்கள் எந்த மொழியில் விண்ணப்பங்களையும் வேண்டுகோள்களையும் எழுத முடியும்?

பெயரளவிலே, நாட்டில், நாட்டு மொழியை வளர்க்கிறோம், வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அகராதி, கலைக் களஞ்சியம், பள்ளிப் பாடப்புத்தகங்கள் முதலியவைகளின் பேரால் தமிழை நாசப்படுத்தினது மாத்திரமில்லாமல், தமிழ் தெரியாத அதிகாரிகளைக் கொண்டுவந்து வைத்து, அவர்களிடம் நீதி, நிர்வாக அதிகாரங்களைக் கொடுத்து நிர்வாகம் செய்யச் செய்வது என்றால், எந்தவிதத்தில் இந்த நாட்டில் இந்த நாட்டுமொழியை அரசாங்கம் ஆதரிக்கிறது என்று சொல்லமுடியும்? இங்கு, கன்னடியர்களுக்குக் கன்னட ஜில்லா ஒன்று இருக்கிறது. மலையாளிகளுக்கு மலையாள ஜில்லா ஒன்று இருக்கிறது. ஆதலால், அவர்கள் எண்ணிக்கைக்குத் தகுந்த அளவில் உத்தியோகங்கள் கொடுத்து அவர்களை அந்தந்த ஜில்லாக்களில் உத்தியோகங்கள் போடுவதில் ஆட்சேபணை இல்லை. இப்படியிருக்க, இந்தக் கன்னடியர்களையும், மலையாளிகளையும் தமிழ்நாட்டிலே கொண்டுவந்து புகுத்துவதற்குக் காரணம் என்ன?

வெள்ளைக்காரன் ஆட்சியிலும், பார்ப்பனர்கள் ஆட்சியிலும் இதற்குக் காரணங்கள் இருக்கலாம். என்னவென்றால், பார்ப்பனர்களுடைய ஏகபோக ஆதிக்க நலத்திற்காகத் தங்களுக்குக் கிடைத்த உத்தியோகங்களைத் தவிர மீதி உத்தியோகங்களுக்குத் தமிழ், தமிழன்(திராவிட இன) உணர்ச்சி இல்லாதவர்களைப் போட்டால், தங்கள் நலனுக்கு எவ்விதக் குறைபாடும் ஏற்படாது என்று கருதி, அவர்கள் பெரிதும் தங்களுக்குக் கிடைக்காத இடங்களுக்கெல்லாம் கிறித்துவரையாவது, முசுலீம்களையாவது, அதுவும் முடியாவிட்டால் மலையாளிகளையாவது, கன்னடியர்களையாவது நியமிக்கச் செய்து வந்தார்கள். இவர்களுக்குத் தமிழர்(திராவிட) இன உணர்ச்சி ஏற்படு வதற்கு அவசியம் இல்லை. நியாயமும் இல்லை. ஆதலால், அந்தக் காலத்திற்கு அது அவர்களுக்கு நியாயமாகவும் சாத்தியமாகவும் இருக்கலாம்.

இப்பொழுது சென்னை அரசாங்க மந்திரி சபையில் ஒரே ஒரு கன்னட மந்திரியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் தமிழர்களாக - அதுவும் ஒரு ரெட்டி, ஒரு நாயுடு, ஒரு செட்டி கூட இல்லாத தனித்தமிழர்களாக இருக்கும்போது, இத்தனை மலையாளிகளும் இத்தனை கன்னடியர்களும் இந்த நாட்டில் எப்படி வரமுடிந்தது என்பது மிகவும் யோசிக்கத் தகுந்ததும் கண்டிக்கத் தகுந்ததும் ஆகும்.

முசுலீம்களும், கிறித்துவர்களும், பார்ப்பனர்களும் மந்திரி சபையில் இல்லை என்றாலும் அதனால் அவர்களுக்கு ஒன்றும் முழுகிப் போகவில்லை. ஏனென்றால், இவர்கள் எல்லாரும் தங்கள் விகிதத்திற்கு மேல் அதிகமான அளவு - அதுவும் கிறித்தவர்களை எடுத்துக்கொண்டால் தங்கள் விகிதத்துக்கு மேல் 2, 3 பங்கு அதிகமான அளவிலும்; பார்ப்பனர்களை எடுத்துக்கொண்டால் தங்கள் விகிதத்துக்குமேல் 5, 6 பங்கு அதிகமாகவும் பதவி முதலிய சலுகைகள் அனுபவிக்கிறார்கள். இவர்களுக்கு மந்திரி பதவி இல்லை என்றால் அது தனிப்பட்டவர்களுக்கு ஏமாற்றமாய் இருக்கலாமே தவிர, அந்த மதத்தார்க்கு எந்த விதத்திலும் குறைவில்லை. தமிழர்களுக்கு மந்திரி பதவி மாத்திரம் தாராளமாக இருந்தும், அவர்கள் இனத்துக்கு இவர்களால் நியாயம் செய்யப்பட்டது என்று சொல்லுவதற்கு இடமில்லாமல் இருக்கிறது.

நாட்டிலே இவ்வளவு தூரம் இன எழுச்சியும், நாட்டு எழுச்சியும், மொழி எழுச்சியும் ஏற்பட்ட காலத்திலும் இந்த மந்திரிகள் இவ்வளவு அலட்சியமாக இருந்து கொண்டு, தங்கள் வாழ்வின் வளப்பத்தையும், பெருமையையும் மாத்திரம் கவனித்துக்கொண்டு, தங்களுக்குச் சொந்தத்தில் வேண்டியவர்களுக்கு மாத்திரம் ஏதோ ஒருசில பதவியை அளித்துக்கொண்டு, காலம் தாழ்த்தி வருகிறார்கள் என்றால் - தமிழர் இனத்துக்கே இது அவமானமும் கேடும் ஆன காரியமாகும் அல்லவா? தமிழை வளர்க்கிற சர்க்கார், தமிழுக்கு நல்லது செய்யாவிட்டாலும் தமிழர்களுக்கு மொழித் துறையில் தொல்லையாவது கொடுக்காமல் இருக்க வேண்டாமா?

சிற்சில ஜில்லாக்களுக்கு, ஆட்சியில் தமிழை ஆட்சிமொழியாக ஆக்குவது என்று பரீட்சை பார்ப்பது என்று அனுமதித்து, உத்தியோகங்களுக்குக்கூட ஜில்லாக்களில் கூட மலையாளிகளையும், கன்னடியர்களையும் உத்தியோகங்களில் நியமிப்பதென்றால், இதைக் கவலை ஈனம் என்று சொல்லுவதா அல்லது சுயநல தாட்சண்யம் என்று சொல்லுவதா என்று புரியவில்லை. தமிழ்நாட்டில் தமிழன் பதவி வகிக்க வேண்டும் என்று கேட்பது ஒரு பெரிய காரியமாய் இருந்தால், எந்த விதத்தில் தமிழ் இராஜ்யம் தமிழர் ஆட்சியாய் இருக்கிறது என்று சொல்லமுடியும்?

உயர்திரு காமராசர் அவர்களை முதல்வராகக் கொண்ட சென்னை இராஜ்ய மந்திரி சபை இனியாவது இது விஷயத்தில் கவலை கொள்ளுவது பெருமைக்குரியதாகும். இது விஷயம் பற்றி எனது பிறந்தநாள் விழா அறிக்கையின்போது குறிப்பிட்டிருந்தேன். அதுமுதல் இதுவரையிலும் முன்னிருந்த நிலைமை வளர்ந்ததே தவிர, சிறிதாவது கவனித்ததாகக் கூடத் தெரியவில்லை.

குறிப்பு: கொச்சி இராஜ்யத்திற்கு திரு ஆர்.கே சண்முகம் செட்டியார் அவர்களை திவானாகப் போட்ட காலத்தில், கொச்சியில் உள்ள மலையாளிகள் எல்லோரும் ஒன்றுகூடி எதிர்த்தார்கள். அதே கொச்சி இராஜ்யத்தில் அநேகப் பார்ப் பனர்கள் திவான்களாய் இருந்த காலத்தில், யாதொரு பேச்சுமுச்சும் இல்லாமல் ஏற்றுப் பெருமை அடைவதாகக் காட்டிவந்தார்கள் என்பது யாவரும் அறிந்த விஷயம்.

விடுதலை அறிக்கை 22-04-1955

(ஆதாரம் - பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் - இரண்டாம் பதிப்பு

தொகுப்பாசிரியர்.வே.ஆனைமுத்து)

தொகுதி - 3, அரசியல் - 1 பக்கங்கள் : 1171-1174

Pin It