புதிதாக அமைந்துள்ள மோடி அரசு, அரசுக் கல்வி பணிகளில் இடஒதுக்கீடு பெறாத (பொதுப் போட்டி) வகுப்புகளில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் ஒன்றிய அரசும் பா.ச.க. தலைமையிலான மாநில அரசுகளும் எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு அரசு உயர்கல்வி நிலையங்களில் ஆயிரக்கணக்கில் புதிய பணியிடங்கள், பல்லாயிரக்கணக்கில் மாணவர் சேர்க்கைக்கான புதிய இடங்கள், கல்வி நிலையங்களில் அடிப்படைக் கட்டமைப்புக்களைப் புதிதாக உருவாக்குதல் எனவும் 2019 பொதுத் தேர்தலுக்கு முன்பே சென்ற 2018-19 நிதியாண்டிலிருந்து ஒன்றிய அரசு, மாநில அரசுகள் ஏற்கெனவே அரசுப் பணிகளில் பல்லாயிரக்கணக்காக உருவாக்கப்பட்டிருந்த பணியிடங்கள் இவற்றிற்கான செலவுகளை மேற்கொள்ள ஏற்றவாறு பலப்பல ஆயிரங்கோடிகளில் நிதி ஒதுக்கீடு என நாளும் அரசு ஆணைகள் பறந்து கொண்டிருப்பதின் ஊடே சென்ற சூன் 19-இல் அரசுக் கல்வி நிலையங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் இன்னும் ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மோடி பெருமையுடன் அறிவிக்கின்றார்.

parliament 600இதில் தில்லிப் பல்கலைக் கழகத்திற்கு மட்டும் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இவையெல்லாம் 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராகப் பல வழக்குகள் மாநில மாநில உயர் அறமன்றங்களில், உச்ச அறமன்றத்தில் தொடுக்கப்பட்டு அவையெல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு உச்ச அறமன்றத்தின் நிலுவையில் இருக்கின்றபோதே எவ்வித தயக்கமு மின்றி அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதில் மோடி அரசு மாநில பா.ச.க. அரசுகள் சங்க பரிவாரக் கூட்டத்தின் சனாதனக் கோட்பாடுகள் கொள் கைகளின் மீதான பற்றுக் கோட்டின்படி சட்டம், அறம், நேர்மை எதைப் பற்றியும் பொருட்படுத்தாமல் செயல் படுவது உச்சமாகும். ஆனால் அவர்கள், நலனைப் பேணுவதிலும் காப்பதிலும் கடமையுணர்வோடு செயல் படுகின்றனர். ஆனால் நாம்?

இந்தப் 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டம் 2019-இன் தொடக்கத்தில் மோடி அரசுக் காலம் முடிவடைய இருந்த நிலையில் அவசர அவசரமாக 36 மணிநேரத் தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அரசமைப்புச் சட்ட விதி 46-ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த அரசமைப்புச் சட்ட திருத்தச் சட்டம் விதிகள் 15-இலும், 16-இலும் புதிய துணை விதிகளைச் சேர்த்து நடை முறைக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆனால் விதி 46-ஐப் பார்த்த மாத்திரத்திலேயே இது நலிந்த பிரிவினருக்கு இன்னும் குறிப்பாகச் சமூக நிலையிலும், கல்வியிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக் குடைய நலன்கள் பேணிக் காப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றுதான் சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இது எவ்வகை யிலும் ஒடுக்கப்பட்டோரல்லாத சமூகத்தின் மேல்தட்டில் உள்ள 15 விழுக்காடு மக்களுள் நலிந்தோர் என்ற பொருளில் இல்லை என்பதை சட்ட அறிவும் நாணயமும் இல்லாத எவரும் படித்துப் பார்த்தவுடனேயே புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால் அதை மேற்சொன்ன 15 விழுக்காடு மக்களுக்கானது என்று சுருக்கிக் கொண்டு அவர்களுக்காக அரசுக் கல்வி, பணிகளில் அவர்களுக்கு மட்டும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திடும் வகை யில் விதி 46-ஐ திரிபு செய்து விதிகள் 15, 16-இல் திருத்தம் செய்து துணைவிதிகள் சேர்க்கப்பட்டுவிட்டன.

அதாவது கல்வியிலும், சமூக நிலையிலும் எவ்வகையிலும் சமூக வரலாற்றில் ஒடுக்கப்படாதவர்களான மேல்தட்டு மக்களில் நலிவானவரின் வறுமையைப் போக்கிட எனப் போக்குக்காட்டி பார்ப்பன சனாதனத் சிந்தையில் காவிக் கும்பல் மட்டும் அல்ல முற்போக்கு, சமய சார்பற்ற கூட்டம் எனச் சொல்லிக் கொள்ளும் கூட்டங்களும் ஒருங்கிணைந்தே 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை மனமறிந்தே கயமை எண் ணத்துடன் அரங்கேற்றிவிட்டன. உண்மையில் இவர் கள் அனைவரும் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைவரின் ஒருமித்த கருத்து ‘ஒதுக்கீடு’ என்பது வறுமையை ஒழிப்பதற்கான வழிமுறையல்ல என்றும் அது சமூக நீதியைக் காப்பதற்கான ஒரு கூறு மட்டுமே என்றும் மனமறிந்தே அரசமைப்புச் சட்டத்தை வஞ்சனையாகத் திருத்திவிட்டனர்.

ஆனால் அரசு மற்றும் மாநில அரசு களிலும் 85 விழுக்காடு மக்களான ஒடுக்கப்பட்ட மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி சமூக நிலையில் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுதலை பெறுவதற்குச் சமூக நீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் அவர்களுக்குப் பங்கீடு (representation) அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ‘ஒதுக்கீடு’ கொள்கை வகுக்கப் பட்டது என்று மேற்சொன்ன கூட்டத்திற்கு நன்றே தெரியும். இதுதான் இந்திய ஒன்றியத்தின் மேல்தட்டு மக்களின் வஞ்சகமான மனநிலை. இதற்கெல்லாம் மேலாக இவர்கள் உள்ளார்ந்த வஞ்சக நோக்கம் ‘இட ஒதுக்கீட்டுக் கொள்கை’ படிப்படியாகக் கைவிடப்பட்டு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு அவர்களின் முற்றுரிமை ஆதிக்கம் பரந்து விரிந்து எல்லா நிலையிலும் நிலைத் துக் காக்கப்பட வேண்டும் என்பதுதான்.

மேலும் 15(4), 16(4) விதிகளில், சமூக-கல்வி நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு அரசுக் கல்வி பணிகளில் போதுமான அளவு பங்கீடு கிடைக்கப் பெறாதவர்கள் என்று அரசு கருதும் நிலையில் எந்தச் சிறப்பான வகையிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு இவ்விதிகளின் துணை விதிகள் தடையாக இரா என்று தெளிவாக வரையறுக் கின்றது. இதன்படி பார்த்தால் இந்த 15 விழுக்காடு மக்கள் முதலில் எக்காலத்திலும் எந்த நிலையிலும் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் அல்ல என்பது மட்டுமின்றி, இவர்கள் அரசுக் கல்வி பணிகளில் அவர்களுடைய மக்கள் தொகைக்கேற்ப பங்குபெற்றவர்களாக இல்லாத நிலை வரலாற்றில் இந்திய ஒன்றியத்திலேயே இருந்ததில்லை என்பதுடன், அரசின் பல்வேறு புள்ளி விவரங்களின் படி இவர்கள்தான் 80 விழுக்காட்டுக்கு மேலான அளவில் கைப்பற்றியுள்ளனர் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை,

இந்த விவரங்களையெல்லாம் இந்திய ஒன்றிய அளவிலான மிகப்பெரும் விரிந்த களப்பணி மேற் கொண்டு ஆய்ந்து, நுணுகி ஆய்ந்து, விரிவான தருக்க அடிப்படையில் விவாதித்து, நேர்மையான முடிவுகளை எய்தி, அதன் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட விடுதலைக் கான சமூக நீதிக் கோட்பாட்டை வடித்தெடுத்து அரசின் பல்வேறு தளங்களிலும் அதில் அரசுக் கல்வி பணி களில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பங்குபெறச் செய்யும் வகையில் மண்டல் குழு தம் நீண்ட அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளுள் 27 விழுக்காடு ஒதுக்கீடு செய்திட பரிந்துரைத்தது.

மண்டல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படை யில் வி.பி. சிங் அரசு 1990இல் இடஒதுக்கீடு ஆணை பிறப்பித்ததை எதிர்த்து தொடரப்பட்ட (இந்திரா சகானி வழக்கு என அறியப்படுவது) வழக்கின் 27 விழுக்காடு ஒதுக் கீட்டைச் செல்லும் என உச்ச அறமன்றத்தின் 9 பேர் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின் முகப்புரையாக உள்ள பத்துப் பக்கங்களில் மண்டலின் அறிவார்ந்த ஆய்வுகளை மனங்கொண்டு அறமன்றம் அதற்கான நிலைமைகளை விரிவாகவும், தெளிவாகவும் வரையறுத்துச் சொல்லியுள்ளது.

அற மன்றங்களும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளோரும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், பிற தளத்திலுள்ளோரும் மனச் சான்றுடன் அறிவு நாணயத்துடன் திறந்த மனதுடன் படிக்க வேண்டுமென்று சொல்வது சரியல்ல; உள் வாங்க வேண்டும். இவற்றின் பின்னணியில், அடிப்படையில் (அதாவது மண்டலின் மக்கள் பற்றுடனான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அவர் தம் அறிக்கை, அதையொட்டிய வழக்கில் உச்ச அறமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் நீண்ட முகப்புரை) 10 விழுக்காடு ஒதுக்கீடு சட்டம் இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டத்தை மோசடியாகத் (Crstigational of Constitution of India) திருத்தியுள்ளது என்பதை உணர முடியும். எவரொருவரும் இந்த முடிவுக்குத்தான் வரமுடியும். எனவே 10 விழுக்காடு சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது என்ற ஒரே காரணத்திற்காகத் தள்ளுபடி செய்யத்தக்கது. இருப்பினும் இதில் புதைந்துள்ள பல வஞ்சகங்களை நாம் இங்கு விவரித்தாக வேண்டும்.

மேற்சொன்ன வழக்கில் உச்ச அறமன்றம் எந்த நிலையிலும், எந்த வகையிலும் இடஒதுக்கீடு உயர் அளவு 50 விழுக்காட்டுக்குள்தான் இருந்திடல் வேண்டும் எனக் கட்டளை ஆணையிட்டுள்ளது. இதன் அடிப் படையில் அன்றுதொட்டு 1992-இல் நரசிம்மராவ் கொண்டுவந்த 10 விழுக்காடு சட்டத்தை அரசமைப்புச் சட்டத்தின்படி பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது சட்டத்திற்கெதிரானது என்றும் (இதற்காக விதி 15(4), 16(4)-இல் கொண்டு வரப்பட்ட தற்போ தைய திருத்தம் மேற்சொன்ன கூற்றுக்குப் பதிலாக துணை விதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம் கொண்டுவரப்படப் பயன்படுத்தப்பட்டுள்ள விதி 46 பொருத்தமற்றது என்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் மேலே விவாதித்துள்ளோம்) உச்ச அறமன்ற தீர்ப்புப்படி செல்லத்தக்கதல்ல என்றும் அந்தச் சட்டத்தைத் தள்ளுபடி செய்தது. இதேபோன்று பல காலக்கட்டங்களில் பல மாநில அரசுகள் 50 விழுக்காட்டுக்கு அதிகமாக இடஒதுக்கீடு அளித்து இயற்றிய சட்டங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே உச்ச அறமன்றம் அளித்த கட்டளைத் தீர்ப்பு ஒன்றிய அரசின் சட்டத்திற்கொப்பானது எனச் சட்டம் சொல்வதால் அதன்படி தற்போதைய 10 விழுக்காடு சட்டம் செல்லத்தக்கதல்ல என தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

இதேபோன்ற விதிகள் 15(4), 16(4)இல், இவ்விதி களின் 15(1), 15(4), 16(2) துணைவிதிகளின்படி சமயம், இனம், வகுப்பு, பாலினம், பிறந்த இடம் அல்லது இவற்றுள் ஏதாவதொன்றின் காரணமாக ஒரு குடிமக்களைப் பொது நிலையில் வேற்றுமைப்படுத்தி ஒதுக்கப்படக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளவை பிற்படுத்தப்பட்ட குடிமக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கு வதற்குத் தடையாக அமையாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது இதுபோன்ற காரணங்களால் மட்டும் வேறுபடுத்தப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட முடியும். இந்தத் தருக்கத்தின்படி எவ்வகையிலும் எக்காலமும் பொதுப் போட்டித் தொகுப்பில் வரும் வகுப்புகள் மேற்சொன்ன ஏதாவது ஒன்றின் அடிப்படையில் வேற்றுமைப்படுத்தப்பட்டவர்களாக இருந்ததே இல்லை. மேலும் இவற்றுள் ‘நலிந்தவர்’ என்பவர் என்ற கார ணத்தால் மட்டும் ஒருவர் வேற்றுமைப்படுத்தப்படுப வராகக் கருதமுடியாது என்ற அடிப்படையில் ‘நலிந்தவர்’ என்று வகைப்படுத்தி மேற்சொன்ன அய்ந்து பொருள் களுடன் இதுவும் சொல்லப்படவில்லை. எனவே விதி 15 & 16-இன்கீழ் நலிந்தவர்கள் என்ற தன்மையில் இடஒதுக்கீடு வழங்கிட முடியாது. எனவே இந்த 10 விழுக்காடு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

மேலும் 10 விழுக்காடு சட்டத்தின் உள்ளடக்கம் எதன் அடிப்படையில் வகுக்கப்பட்டது என்ற வினாக்கள் எழுகின்றன. ‘நலிந்தவர்’ என்ற சொல் ஆண்டொன் றுக்கு ரூ.8 இலக்கத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள குடும்பத்திலுள்ளவருக்குப் பொருந் தும் என்றுள்ளது. இந்த உச்ச அளவு எந்த ஆய்வின் அடிப்படையில் வகுக்கப்பட்டது? இதற்கென ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா? அடிப்படையில் இந்தக் குடும்ப வருமான அளவு திங்கள், ஆண்டுதோறும் அதிகமாக வும் குறையவும் குடும்பத்தின் சராசரியாக நால்வர் இருப்பதாக கொண்டால் உயர் வருமான வரம்புக்குள் உள்ள வகையில் எவ்வகையிலும் மாற்றம் செய்யப் படுவதற்கும், குடும்ப வருமானத்தை உள்நோக்கத் துடன் தப்பாகக் கணக்கிடவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே இது முறையற்ற வரைமுறை.

அடுத்து இடஒதுக்கீடு அளவு 10 விழுக்காடு என்று வரையறுத்துச்  சொல்கிறது சட்டம். இந்த உச்ச அளவு எதன் அடிப்படையில் வகுக்கப்பட்டது? மேல்தட்டு மக்களான 15 விழுக்காடு மக்களின் பொருளாதார அளவை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுமேற்கொள் ளப்பட்டதா? அந்தப் பொருளாதார உச்ச அளவுக்குள் எவ்வளவு பேர் என்று கணக்கிட்டு மொத்தப் பேரில் இவர்கள் எத்தனை விழுக்காடு என்று கண்டுபிடிக்கப் பட்டதா? அவர்கள் 10 விழுக்காடு அளவுக்கு இருந்தனரா? 10 விழுக்காடு அளவுக்கு அதிகமாக எவ்வளவு விழுக்காட்டளவில் இருந்தனர்? அப்படியெனில் இந்தப் பொருளாதார வரையறைக்குள் வந்த மொத்த மக்களை அடிப்டையாகக் கொண்டு எப்படி இந்த 10 விழுக்காடு அளவு இறுதிசெய்யப்பட்டது? 10 விழுக்காடு சட்டத்தின் குறிக்கோள்கள் என்ற முகப்பில் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படாத நிலையில் இந்த 10 விழுக்காடு வரையறை பொத்தாம் பொதுவாக எட்டப்பட்டுள்ளது என்ற முடிவுக்குத்தான் வரமுடியும். எனவே இந்தச் சட்டம் எவ்வித அடிப்படை ஆதாரத்தின் அடிப்படையிலும் இயற்றப்படாமல் மனம்போன போக்கில் தான்தோன்றித்தனமான வகையில் இந்திய ஒன்றிய அரசால் இயற்றப்பட்டுள்ளது என்பதால் செல்லத்தக்கதல்ல என இது தள்ளுபடி செய்யப்படவேண்டிய சட்டமாகும்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். உச்ச அற மன்றமும், மாநிலங்களிலுள்ள உயர் அறமன்றங்களும் இதுபோன்ற நேர்வுகளில் பல காலக்கட்டங்களில், பல மாநில அரசுகள் இயற்றிய இடஒதுக்கீட்டுச் சட்டங்களை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்துள்ளன. இன்னும் குறிப்பாகத் தமிழகத்தில் மக்கள் தொகையில் 85, 90 விழுக்காடாக உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியல்குல, பழங்குடியினர் அனைவருக்குமாக 69 விழுக்காடு அளவுக்கு மட்டும் சட்டம் இயற்றப்பட்டு அறமன்ற தலையீட்டு வரம்புக்குள் வராத வகையில் அட்ட வணையில் சேர்க்கப்பட்டிருந்தபோதும் அதில் குறுக் கிடுவதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று சொல்லிக்கொண்டு அந்தச் சட்டத்தை எதிர்த்துத் தொடுக் கப்பட்ட வழக்கைச் சென்ற 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச அறமன்றம் நிலுவையில் வைத்துள்ளது.

சரி! அவர்கள் எல்லையை அவர்களே வகுத்துக் கொண்டு அவர்கள் ஆய்வு செய்யட்டும். ஆனால் 10 விழுக்காடு சட்டம் எந்த அறநெறிக்கும் உட்படாதது; எந்த ஆய்வின் அடிப்படையிலும் வகுக்கப்படாதது என்று எவரும் முதல் பார்வையிலேயே (persee) வெளிப்படையாகத் தெரிந்த போதும் உச்ச அறமன்றம் ஆய்வு எடுத்துக் கொள்வதைக் கேள்விக்குள்ளாக்க முடியாது என்றாலும் (ஏனென்றால் அது அறமன்றமல்லவா) குறைந்தளவு ஏற்புத் தன்மையை உறுதிசெய்யும் வரையிலாவது இடைக்கால நிறுத்த ஆணை பிறப்பித்திருக்க வேண்டுமென இயற்கை நியதியின் அடிப்படையிலும் அறநெறிபாற்பட்டும் எவரும் எதிர்பார்ப்பது முறையான தாகும் என்றென்ன வேண்டியுள்ளது. இதுபோன்று பல நெறிமுறைகளை மீறிய, சட்டவரையறைக்குட் படாத பல காரணங்களை 10 விழுக்காடு சட்டத்திற் கெதிராக அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இவையெல்லாம் உயர்குடிகளுக்குப் பொருந்தாது என்ற மனுவின் சனாதனப் பார்ப்பனிய சிந்தைகொண்ட கும்பலின் பிடியிலுள்ள அரசு எங்களுக்கென்று எதுவும் செய்வோம்; அதை மீறி எந்த அரசமைப்பு அலகும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்பது மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள மிகப் பெரும்பான்மைச் சமூகம் மேலும் மேலும் ஒடுக்கப்படுவதைத் தடுத் திடவும் முடியாது என்ற தன்மையின் வெளிப்பாடுதான் இந்த 10 விழுக்காடு சட்டம்; ‘நீட்’ தேர்வு புகுத்தல் என்பதும் இத்தன்மைத்தே. ஒன்றியக் கூட்டாட்சித் தத்துவத்தைக் குலைப்பதே அதன் நோக்கம். இதைப் பின்பு பார்க்கலாம்.

இவ்வாறான அடாவடியான, சட்டப்படியான அடக்கு முறையை அரசு கட்டவிழ்த்து விடுகின்ற தற்போதைய சூழலை 1994க்குமுன்பேயும், பின் 2006-க்குப் பின்னும் மண்டல் பரிந்துரை செயல்பாட்டுக்கு வருகின்ற முந்தைய நிலையை ஒப்பீட்டளவில் விவரித்தால்தான் இந்திய ஒன்றிய அரசுகள் வெகுமக்களான ஒட்டுமொத்த ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் வதைத்து வந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அரசமைப்புச் சட்டம் 1950 சனவரி 26-இல் நடைமுறைக்கு வந்த காலத்திலேயே அண்ணல் அம்பேத்கரின் அரிய உழைப்பின் பயனாய் பட்டியல் குல மக்கள் 1943-லிருந்து 8 விழுக்காடு ஒதுக்கீடு பெற்று வந்தனர். ஆனால் அதற்கு முன்னர் பெரியாரின் இடையறாப் போராட்டத்தின் விளைவால் சென்னை மாகாணப் பகுதியில் 1921இல் வகுப்புவாரி ஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட்டு, இங்கிருந்த உயர் அற மன்றத்தின் குறுக்கீட்டால் 1927 வரை கிடப்பில் போடப் பட்டு பின்பு தான் அப்போதிருந்தே நடைமுறைக்கு வந்தது.

ஆனால் 1950-லிருந்தே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகளின்படி ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய ஒன்றிய அரசிலும், பல் மாநிலங்களில் அரசுப் பணிகளில் இடஒதுக்கீட்டுக் கான உரிமை வழங்கப்பட்டிருந்தும் நடைமுறைப்படுத்திட வேண்டுமென்றே இந்த அரசுகள் முனையவே இல்லை.

இது ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப்பட்டவர் களுக்கு இழைக்கப்பட்ட உரிமை மறுப்பு என்றும் அதைப் பெற்றிட வேண்டுமென பெரியார் வலியுறுத்தி வந்த போதும் அவர் மறைவுக்குப்பின் அவரின் கொள் கைகளை வென்றெடுக்கும் வகையில் பெரியாரின் தத்துவங்களை வரித்துக் கொண்டு தோழர் வே. ஆனைமுத்து மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்து, அவரின் உற்ற தோழர்கள் பெரியாருக்கு அணுக்கமாக விளங்கிய சேலம் சித்தையன் தாதம்பட்டி ராஜு, சீர்காழி மா. முத்துசாமி, ஆ.செ. தங்கவேலு போன்றோரின் துணையுடன் அரசமைப்புச் சட்டம் விதி 16(4) வழங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டை பெற்றுத் தர அரசமைப்புச் சட்டத்தை நுட்பமாக நுணுகி ஆராய்ந்து தக்க வேலைத் திட்டங்களையும் தமிழகம் உள்ளிட்டு ஒன்றியம் முழுமைக்குமாக பரந்துபட்ட பரப்புரை மேற்கொண்டு பீகார் தோழர் இராம் அவதேஷ் சிங்குடன் இணைந்து இடையறாத போராட்டங்கள் நடத்தி மொரார்ஜி தேசாயின் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி தந்து பிற்படுத் தப்பட்டோர் ஆணையம் அமைத்திடச் செய்தார்.

ஆணையத்திற்கு மண்டல் தலைமையேற்று நாடு முழுமையும் ஆய்வு நடத்தி ஓர் இலக்கியம் போன்ற அறிக்கையை 1980-இல் அளித்தார். அதில் அவர், மக்களுள் பிற்படுத்தப்பட்டோர் என்று அடையாளம் காணப் பத்துக்கும் மேற்பட்ட அளவு கோல்களை வகுத்தெடுத்து அவற்றை நிறைவு செய்பவர்கள்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வரையறுத்தார். அவற்றுள் சமூகத்தின் படிப்பறிவு, பொருளாதார நிலை, வாழிடங் களிலிருந்து குடிநீர் கிடைக்கும் தொலைவு, சமூகப் பின்னணியையும் அதன் அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த அளவுகோலின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு கல்வியிலும், பணியிலும் 27 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரை வழங்கினார். இதுமட்டும் இவ்வொடுக்கப்பட்ட சமூகம் மேம்படுவதற்குப் போதாது என்று தொழில்கள் தொடங்குவது, அரசு வீட்டு வசதி செய்துதரக் கட்டப்படும் கட்டடங்கள், ஆலைகள் அமைத்தல் என்பவை போன்ற எல்லா அரசுத் திட்டங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும் பரிந்துரைகள் செய்தார். அந்நிலையில்தான் ஒடுக்கப்பட்டவர்கள் சமூக நீதி பெற்றவர்கள் என்றாகி பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட டைவர் என்றார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஒன்றிய அரசு பணிகளில் வேலை வாய்ப்பு மட்டிலும் எனச் சுருக்கிக் கொண்டது. இது இம் மக்களுக்கு அழைக்கப் பட்ட அநீதியாகும். இருப்பினும் நல்வாய்ப்பாக 1990 இல் வி.பி. சிங் அரசு ஆட்சிக்கு வந்தது. அவர் பணி களில் ஒதுக்கீடு அளிப்பது என்ற ஒரு மண்டல் குழுவின் பரிந்துரையை மட்டும் ஏற்று ஆணைகள் வெளியிடச் செய்தார். (அதன் நேரடி விளைவாக அவர் எதிர்நோக்கியபடி அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.) ஆனால் அதனை எதிர்த்து காவிக் கும்பல் நாடு முழு வதும் கலவரம் ஏற்பட்டுவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அங்கங்கு சிலரைத் தீயிட்டுக் கொலை செய்து சட்டம், ஒழுங்கு பாழ்பட்டது போன்று ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கச் செய்தனர். இதனூடே இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர் அறமன்றத்திலும் சில மாநில உயர் அறமன்றங்களில் வழக்குகள் தொடுத்து அதை நடைமுறைப்படுத்துவதை அரசே நிறுத்தி  வைக்கச் செய்தனர். இந்த வழக்கில் உச்ச அறமன்றம் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை ஏதும் பிறப்பிக்கவில்லை எனினும் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை. 1992 நவம்பர் 16-இல் உச்ச அறமன்ற 27 விழுக்காடு ஒதுக்கீடு செல்லத்தக்கது என்று தீர்ப்பு வழங்கிய போதும் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் பயன்கிட்டாது பொருளாதார அளவு கோல் விதித்தும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லை என்றும், ஒதுக்கிட்டு 50 விழுக்காடு உயர் அளவு விதித்து முடக்கியது.

இதற்கிடையில் நரசிம்மராவ் அரசு பொருளா தாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 விழுக்காடு தனியே ஒதுக்கீடு செய்து ஆணையிட்டது. அதுவும் உச்ச அற மன்றத்திற்கு வழக்காக எடுத்துச்செல்லப்பட்டு அந்த ஆணை செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பின் தான் முதன்முதலில் 1994-இல் ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

முன்பே சொன்னது போல் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதி 16(4)-இன்படி வழங்கிட வேண்டும் என்றிருந்தும் இது நடைமுறைக்கு வந்த 1950-லிருந்து 44 ஆண்டுகளுக்கு நடைமுறைக்கு வராமல் இந்திய அரசுகள் வஞ்சகமாக செயல்பட்டு அரசமைப்பின் அலகுகள் யாவும் ஒடுக்கப் பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அடிப்படையில் எதிரானவர்கள் என்பதை மெய்ப்பித்துவிட்டன. மேலும் இந்துக்களின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தப் பார்ப்பன சனாதனக் காவிக்கும்பல் அந்த இந்துக் களான ஒடுக்கப்பட்ட வெகுமக்களான பிற்படுத்தப்பட்ட மக்கள் இடஒதுக்கீட்டை முடக்கி வைத்துவிட்டனர். உண்மையில் இவர்கள் போலி இந்துக்கள், வெகுமக்க ளான இந்துக்களின் உண்மையான எதிரிகள்.

பணிகளில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது போல் 1951-லிருந்து கல்வியில் இடஒதுக்கீடு உரிமை வழங் கப்பட்டு அது மண்டல் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது. மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும் அதன் ஒத்த கருத்துடைய தோழமை அமைப்புகளும் அரசியல் கட்சிகளின் கூட்டுப் போராட்டத்தின் விளை வால் 2006-இல்தான் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் 27 விழுக்காடு ஒதுக்கீடு எனச் சொல்லி ஒன்றிய அரசு ஆணை வெளியிட்டு அது ஆண்டுக்கு 9 விழுக்காடு அளவில் தரப்பட்டு மூன்றாண்டுகள் கழித்துத் தான் 27 விழுக்காடு ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று வஞ்சகம் இழைத்தது. அத்துடன் நின்றிட வில்லை.

இது நீர்த்துப் போவதற்கு நிதி, ஆசிரியர்கள், அடிப்படைக் கட்டமைப்புகள் போன்றவற்றில் பற்றாக் குறை எனக் கூறி எவ்வளவு தடைகள் ஏற்படுத்திட முடியுமோ அவ்வழிகளில் எல்லாம் ஒன்றிய அரசு புல்லுருவி வேலைகள் செய்து ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்துவதைப் பல ஆண்டுகள் தள்ளிப் போட்டு வருகின்றது. இன்றளவும் பெரும்பாலான ஒன்றிய அரசு பல்கலைக்கழகங்களில், உயர் கல்வி நிலையங்கள் எனச் சொல்லப்படும் அய்.அய்.டி., அய்.அய்.எம்., அய்.அய்.எ°. போன்றவற்றில் 27 விழுக்காடு ஒதுக்கீடு நடைமுறைக்கு வராத அளவுக்கு வஞ்சகமாகச் செயல்பட்டு வருகின்றது. இதனால் ஒன்றிய அரசுப் பணிகளில் வெறும் 5-6 விழுக்காடு அளவிலும், கல்வியில் இன்னும் குறைவாகவும்தான் இடஒதுக்கீட்டுப் பயன் அடைந்துள்ளனர்.

1950, 1951-களிலிருந்தே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகள் 15(4), 16(4)-இல் சமூகம், கல்வி யில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முறையே அரசுப் பணிகள், கல்வியில் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட்டிருந்தும் 44 ஆண்டுகளும், 55 ஆண்டுகளும் ஒதுக்கீட்டுப் பயன்கள் கிடைக்கப் பெறாதவாறு எல்லா வகையான வஞ்சக வழிகளிலும் இந்நிலை ஒன்றிய அரசமைப்பின் அலகுகள் மூன்றும், இன்னும் கொடுமை யாக அச்சு, செய்தி ஊடகங்கள், தொடர்ச்சியாகத் தொய்வின்றி வலுவாக இயங்கி வருகின்றன என்பது கண்கூடு. இந்த மக்கள் இந்தியர்களா இல்லையா? இவர்களில் 85-90 விழுக்காடு இந்துக்கள்தானே. ஆனால் தீவிர இந்துக்கள் வாதம் பேசும் பார்ப்பனியச் சனாதன காவிக் கும்பலான பா.ச.க.வோ, அதே தன்மையில் மென்மைப் போக்கில் செயல்படும் காங்கிரசுக் கட்சியோ, முற்போக்குகள், மதநல்லிணக்கங்கள் பேசும் கூட்டங்கள் மறைமுகமாக மேற்சொன்ன இரு கும்பல் களைப் போன்றுதான் செயல்பட்டு வருகின்றன. அதனால்தான் அரசமைப்புச் சட்ட உரிமையாக உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நெடும் காலத் தாழ்வுக்குப் பின்னும் மிகவும் குறைந்த அளவே நிறைவேற்றப்படப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இந்தக் கயவர்கள் அனைவரும் இந்து நலன் காப்போர் என மனமறிந்து பொய்யுரைப்போர்.

ஆனால் அதே வேளையில் மேற்சொன்ன கூட்டங்கள் அரசாக, இயக்கங்களாக, அமைப்புகளாக, கட்சிகளாக வெவ்வேறு அணியில் இருப்பது போன்று ஒரு போலித் தோற்றத்தைக் காட்டிக் கொண்டு செயல்பாட்டில் மறைமுகமாக ஒருங்கிணைந்து இயற்கை அறன், சட்ட அறன், அரசமைப்புச் சட்ட அறன் என எல்லாவற்றிற்கும் எதிராகக் கொண்டுவந்துள்ள பொதுப் பிரிவினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு எண்ணிப் பார்க்க முடியாத அளவில் எல்லாத் திசைகளிலும் தொய்வில்லாமல் தொடர்ச்சியாகப் பாய்ச்சல் வேகத்தில், வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவது பார்ப்பனிய மயம் இந்திய ஒன்றியச் சமூகத்தை எல்லாத் தளங்களிலும் அரசு அலகுகள் உள்ளிட்டு எவ்வளவு வலுவாக கவ்விக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காணலாம்; உணரலாம்.

பிற்படுத்தப்பட்டோருக்கான அரசுப் பணி, கல்வியில் இடஒதுக்கீடு எல்லா வகையிலும் தீர்வு தரும் என்ற நிலைப்பாட்டை முன்னெடுத்திட இயலாது எனினும் இந்திய ஒன்றிய சமூகத்தின் சமூக நீதிக் கோட்பாட்டை அடைய இது ஒரு முதன்மையான வழி என்பதை உணர்ந்து கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் அதனதன் நலன் கடந்து அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கப் பெறுவதற்கு இன்னும் காலம் தாழாமல் ஒருங்கிணைந்து போராடி ஒரு காலவரைக்குள் பெற்றிட வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட விழைவோம்.

Pin It