விகிதாசார வகுப்புவாரி இடஒதுக்கீடு கொள்கை குறித்து தோழர் வே.ஆனைமுத்து நெடுங்காலமாக எண்ணற்ற பலப்பல கட்டுரைகளை ஆழமாகவும், விரிவாகவும் ஆய்வு நோக்கில் எழுதி வந்துள்ளதை நாம் அனைவரும் உள்வாங்கியுள்ளோம் என்பதின் அடிப்படையில் இக்கட்டுரைக்கான முன்னுரைப் பகுதியை விட்டுவிட லாம் எனக் கருதுகிறேன். எனவே கட்டுரையின் பொருளுக்குள் நேரிடையாகச் சென்றுவிடலாம். அங்கங்கு தேவைக்கேற்ப விரிவாகப் பேசலாம்.
மேல்சாதியினருள் நலிந்தோருக்குச் சான்றிதழ் (EWS என அறியப்படும்) வழங்கப்படும்போது அந்தச் சான்றிதழில் இது ஒன்றிய அரசுப் பணிகள், கல்விச் சேர்க்கைக்கு என்றும் இது தமிழ்நாட்டுக்குப் பொருந் தாது என்ற குறிப்புடன் தரப்படுகிறது என்றும் அது சான்றிதழ் பெறுவோருக்கு சிக்கல் அளிப்பதாக அமைந்து விடுகின்றது எனச் சொல்லி அக்குறிப்புகள் கூடாது எனச் சென்னை உயர் வழக்கு மன்றத்தில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் முன்முயற்சியால் வழக்குத் தொடரப் பட்டுள்ளது.
இந்த வழக்கின் உள்நோக்கம் தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் கல்விச் சேர்க்கையிலும் பா.ச.க. ஒன்றிய அரசினால் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு (EWS) மேல்சாதி ஏழைகளுக்கும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்ற மறைமுகமான கோரிக்கையை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த வழக்கில் பதில் அளித்துள்ள தமிழக அரசு இந்தச் சட்டம் தற்போது ஒன்றிய அரசு தொடர்பானது மட்டும்தான் என்பதால் அக்குறிப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அது, எவ்வகையிலும் அச்சான்றிதழ் பெறு வோருக்கு இடையூறாக அமையாது என்று சொல்லியுள்ளது.
மேலும் தமிழகத்தில் இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தம் தமிழகத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை என்பதால் அக்குறிப்புரை கட்டாயம் இடம்பெற வேண்டுமென்றும் தமிழக அரசு வலியுறுத்திச் சொல்லியுள்ளது. இதுவுமின்றி இந்தச் சட்டம் செல்லத் தக்கதல்ல என உச்சவழக்கு மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையிலுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது நாம் தமிழ்நாட்டு இடஒதுக்கீட்டுக் கொள் கையின் நீண்ட நெடுங்கால 100 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியின் வெளிச்சத்தில் உயர் வழக்கு மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மேற்சொன்ன வழக்கை விவாதிக்க வேண்டும். நாடு ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெறும் முன்னர் 1920-இல் தமிழகம், கேரளம், கன்னடம், ஆந்திரம், ஒடிசாவின் ஒரு பகுதி யாவையும் இணைத்த சென்னை மாகாணத்தில் (Madras Presidency) முதன்முதலில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு நீதிக்கட்சித் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.
அப்போது அரசுப் பணிகள், கல்வி பார்ப்பனர்கள் உள்ளிட்ட மேல்சாதிக்காரர்களின் முற்றுரிமைக்கானது என்ற தன்மையில் இருந்தன. மேலும் பெரும்பாலான மக்களாக இருந்த ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்தவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருந்த இரங்கத்தக்க நிலையைக் கணக்கிற்கொண்டு பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார், இசுலாமியர், கிறித்துவர், பட்டியல் குலத்தினர் என அனைவரும் பங்குபெறும் வகையில் பணிகள், கல்வி யில் 100 இடங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டு இந்திய ஒன்றிய வரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு மாகாண அரசு இடஒதுக்கீட்டுக்கென ஆணை பிறப்பித்தது.
இருப்பினும் இதற்கு முன்பு ஆங்கிலேயக் குடியேற்ற அரசின் நேரடி ஆட்சிக்குள் வராது மறைமுக ஆட்சியின் கீழிருந்த மைசூர் மன்னர், மராட்டியப் பகுதி சத்ரபதி சாகு மகாராசா ஆகியோரின் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் பிற்படுத் தப்பட்டோருக்கென தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. சென்னை மாகாண இடப்பங்கீடு ஆணை பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் நடைமுறைக்கு வராமல் 1927-இல்தான் நடைமுறைக் குக் கொண்டு வரப்பட்டது.
அக்காலம் தொட்டு நாடு விடுதலையடைந்து அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் சென்னை உயர்வழக்கு மன்றமும், உச்ச வழக்கு மன்றமும் வகுப்புரிமைப் பங்கீட்டுக்குத் தடை விதிக்க முற்பட்டன. ஆனால் பெரியாரின் அதற்கான எதிர்ப்புப் போராட்டத் தால் அரசமைப்புச் சட்டம் முதல் திருத்தத்திற்கு உள் ளாக்கப்பட்டுத் தமிழகத்தில் இடஒதுக்கீடு இடையறாது தொடர்ந்து நிலைத்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்த இடஒதுக்கீட்டால் தகுதி திறமை குறைய நேரிடு மென்ற பார்ப்பனியத்தின் வெற்றுக் கூச்சலும் வாதமும் முறியடிக்கப்பட்டு, அவர்கள் கூச்சல் பொய்யானது; வஞ்சகமானது என்றும் நிறுவப்பட்டது தமிழ்நாட்டில். இந்திய ஒன்றியத்தின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கல்வி, பொருளாதாரம், மக்கள் நலம், மருத்துவம் போன்ற பல துறைகளில் பெரும் மேம்பாடடைந்து தமிழ் நாடு முதல்நிலையில் இருந்து வருகின்றது. குறிப்பாக உயர் கல்வியில் ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களையும் விஞ்சும் வகையில் ஒன்றிய அரசின் 2020 தேசியக் கல்விக் கொள்கையின்படி 2030-க்கான இலக்காகச் சொல்லப்பட்டுள்ள 50 விழுக்காட்டை தமிழ்நாடு ஏற்கெனவே 49.8 விழுக்காடு அளவுக்கு எட்டியுள்ளது.
இன்னும் சிறப்பாகத் தமிழக மருத்துவம் வளர்ந்து வளர்ந்த அய்ரோப்பிய நாடுகளுக்கொப்ப உள்ளது; ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநில மக்களின் மருத்துவ மய்யமாக உருவாகிக் கொண்டி ருக்கின்றது. இவையெல்லாம் இடப்பங்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டதின் நற்பயனாய் தமிழ்நாடு அரச மைப்புச் சட்ட முகவுரையில் சொல்லப்பட்டுள்ள சமூக நீதியைக் காப்பாற்றிப் பாதுகாத்து வருகின்றது.
நாடு விடுதலையடைவதற்குமுன் நீதிக்கட்சி ஆட்சிக் காலம் தொட்டு கல்விப் பணிகளில் நூற்றுக்கு நூறு இடங்களும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்கு உள்ளாகாத வகுப்புகள் அனைத்துக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப சற்றேறக்குறைய விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது.
இது மாகாண அரசுத் துறைகளிலும் சென்னை மாகாணத் தில் இயங்கி வந்த ஆங்கிலேய மய்ய அரசுத் துறைகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பெரியார் சொன்னது போல் நாட்டின் விடுதலை ஒடுக்கப்பட்ட வெகுமக்களுக் கான கறுப்பு நாள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சென்னை மாகாணத்துக்குள் செயல்பட்ட ஒன்றிய அரசுத் துறைகளில் இடப்பங்கீட்டுக் கொள்கை திடுமெனக் கைவிடப்பட்டது. அத்துடன் மாநில அரசுத் துறைகளில் வகுப்புவாரிப் பங்கீட்டுக் கொள்கையும் கைவிடப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகக் குறைந்த அளவில் இடஒதுக்கீடு வழங்குவது என்றாகிவிட்டது.
இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை 1980 வரை யிலும் உச்ச வழக்கு மன்றம் ஏதோ வழக்கொன்றில் இடஒதுக்கீடு அளவு 50 விழுக்காட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டுமென்று கருத்துரைத்ததின் அடிப்படை யில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு அளவு 50 விழுக் காட்டுக்குள்தான் இருந்து வந்தது. முதன்முதலாக கருநாடக மாநிலத்தில் இடஒதுக்கீட்டு வரம்பு அளவு 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 1980-லிருந்து பிற்படுத்தப் பட்டோர், ஆதித் திராவிடர்களுக்கான இடஒதுக்கீடு முறையே 50 விழுக்காடு, 18 விழுக்காடு என மொத்தம் 68 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இது 1989-லிருந்து பழங்குடியினருக்கெனத் தனியே ஒரு விழுக்காடு அளித்து மொத்த இடஒதுக்கீட்டு அளவு 69 விழுக்காடானது.
மண்டல் வழக்குத் தீர்ப்பில் உச்ச வழக்கு மன்றம் இடஒதுக்கீட்டு அளவு 50 விழுக்காட்டு வரம்புக்குள் தான் இருக்க வேண்டுமென கட்டளை ஆணையாகப் பிறப்பித்தது.
இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என அவர்கள் சொன்ன விதிவிலக்கான கீழேயுள்ள இரண்டையும் (1. நெடுங்காலமாக இடஒதுக்கீட்டு அளவு 50 விழுக்காடு வரம்பு இன்றி அதிக அளவில் இருந்து வந்தது. 2. நாட்டில் வெகுதொலைவில் (Farflung areas) உள்ள மாநிலங்கள் (நாகாலந்து, மிசோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில்)) அடியொற்றி அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து அதன் ஒன்பதாம் அட்டவணையின்கீழ் சேர்க்கப்பட்டு வழக்கு மன்றங்களின் வரம்புக் குள் வராத ஒன்றாகத் தமிழ்நாட்டின் 69 விழுக்காட்டு இடஒதுக்கீட்டுக் கொள்கை பாதுகாக்கப்பட்டது. இருப்பினும் உச்ச வழக்கு மன்றம் தனக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி 69 விழுக்காட்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு அதன் விசாரணையை நிலுவையில் வைத்துள்ளது.
சென்ற நிதியாண்டு 2018-19-இன் நான்காம் காலாண்டின் தொடக்கமான 2019 சனவரித் திங்களில் 2019-இல் நடைபெறவிருந்த இந்திய ஒன்றிய மக்களவைப் பொதுத் தேர்தலில் தன் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்ளும் வகையில் பார்ப்பன பாரதியச் சனதாக் கட்சி வஞ்சகமாக, சூழ்ச்சி வலைக்குள் மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட காங்கிரசு, பகுஜன் சமாஜ் கட்சி என பல கட்சிகளை சிக்க வைத்து இடஒதுக் கீட்டுக்குப் பயன் அடையாப் பார்ப்பனச் சாதி உள்ளிட்ட பல மேல்சாதிகளில் உள்ள நலிந்த பிரிவினருக்கெனத் தனியே 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை அளித்திடும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு 103ஆம் சட்டத் திருத்தத்தை 2019 சனவரியில் கொண்டு வந்து வெறும் ஐந்து நாள்களுக்குள் அந்தச் சட்ட முன்வரைவை மக்களவையில், மாநிலங்களவையில் நிறைவேற்றி அமைச்சரவை இசைவு அளித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று அவசர அவசரமாகச் சட்டமாக்கி ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் பணிகள் கல்வியில் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டது.
இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அதன்படி செல்லத்தக்கதல்ல என முன்பே பல கட்டுரை களில் விவாதித்துள்ளோம். கட்டுரையின் பின்பகுதி யில் மேலும் விவாதிப்போம்.
அரசமைப்புச் சட்டத்தில் இதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டுவிட்ட நிலையில் இது இந்திய ஒன்றிய அரசுக்கும், ஒன்றிய நாடுகளான அனைத்து மாநில அரசுகளுக்கும் கட்டாயம் பொருந்தும் என்பதில் அய்யமில்லை என்றே கொள்ளலாம். ஆனால் ஒன்றிய பார்ப்பன பா.ச.க. அள்ளித்தெளித்த அவசர கோலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது போன்று கட்டாயம் எல்லா மாநிலங்களையும் எதிர்பார்ப்பது நல்லறிவின் பாற்பட்டதல்ல என்பதை அனைவரும் உணர்வர். அந்த வகையில் சமூகநீதிக்கு நூற்றாண்டு வரலாறு கொண்ட தமிழகம் தன் நாட்டுக்கு ஏற்கத்தக்க வகையில்தான் பொரளாதாரத்தில் நலிந்த பிரிவினருக் கான (EWS) 10 விழுக்காடு சட்டத்தைக் கடைப்பிடிக்க முடியும்.
ஒன்றியம் முழுமைக்கும் 10 விழுக்காடு அளிப்பது என்பது எதன் அடிப்படையில், எந்த ஆய்வின் அடிப் படையில் என்பது இதுவரை விளக்கப்படவில்லை. உண்மையில் மேல்சாதி மக்களின் மக்கள் தொகை என்ன? அதில் இவர்கள் வரையறுத்துள்ள ஆண்டு வருமான வரம்பு ரூ.8 இலக்கம் உடையவர்களில் தற்போது
* எத்தனை விழுக்காட்டினர் ஒன்றிய அரசுப் பணிகள், கல்வியில் இடம்பெற்றுள்ளனர்?
* அவ்வாறு வாய்ப்புப் பெறாதோரின் விழுக்காடு மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு விழுக்காடு?
* இந்த நலிந்த மேல்சாதி ஏழைகள் மொத்தத்தில் எவ்வளவு பேர், மொத்த மக்கள் தொகையில் எத்தனை விழுக்காடு?
* அந்த விழுக்காட்டை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளவு முடிவு எடுக்கப்பட்டதா?
* இவை ஒவ்வொன்றுக்கும் நாடு முழுக்க முழுமை யான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா?
* அல்லது மாதிரி அடிப்படையில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டதா?
* அல்லது எந்த அடிப்படையுமின்றி, ஆய்வுமின்றி பொத்தாம் பொதுவாக பா.ச.க. பார்ப்பனக் கூட்டத் தின் விருப்பத்திற்கேற்ப முடிவுகள் எட்டப்பட்டதா?
இதையெல்லாம் பற்றி எவர் கேட்டாலும் கேட்கா விட்டாலும் உச்ச வழக்கு மன்றம் இதற்கு முன்னைய காலமெல்லாம் இடஒதுக்கீடு குறித்த வழக்குகளிலெல் லாம் வழக்கு தொடங்கும் போதே அடுக்கடுக்காக வினாக்களை அடுக்கிக் கொண்டே போகும் என்பதை இந்த நாடே அறியும் என்பதால் இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டம் குறித்தும் வினாக் கணைகளைத் தொடுக்கும் என எதிர்பார்ப்பது நியாயம்தானே.
இதுபோன்ற ஒதுக்கீட்டுக்கான மாநில அரசுகளின் சட்டங்களுக்கும் ஆணைகளுக்கும் எதிராகத் தொடுக் கப்பட்ட இதுபோன்ற வழக்குகளிலெல்லாம் இவ்வா றெல்லாம் எடுத்தெடுப்பிலேயே உயர்வழக்கு மன்றங் களும் வினாக்களைத் தொகுத்து வந்துள்ளன. ஆனால் இந்தப் பத்து விழுக்காடு சட்டத்திற்கு எதிராக உயர் வழக்கு மன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளையும் தன் மன்றத்திற்கே மாற்றிக்கொண்டு சென்ற ஒன்றரை ஆண்டுகாலமாகத் தண்ணீருக்குள் போட்ட கல்லுப் போன்று மரண அமைதி காத்துக்கொண்டு வருகிறது உச்சவழக்கு மன்றம் என்பதுதான் நாட்டுக்கே புரியாத புதிராக இருக்கிறது.
ஆனால் உச்ச வழக்கு மன்றமும், சென்னை உயர் வழக்கு மன்றமும் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் மேற்சொன்னது போன்ற தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள் தமிழ்நாட்டு அரசின் மற்றும் மக்களின் மனத்திரையில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. எனவே இதுபோன்ற நிகழ்வில் இதுபோன்ற கேள்விகளுக்கு ஆளாகக் கூடாது தமிழக அரசு எனத் தமிழ்நாட்டு மக்கள் மனமார எதிர்பார்த்துக் கொண்டிருப்பது நியாயம் தானே. எனவே தமிழக அரசும் தற்போது வரை 10 விழுக்காட்டுச் சட்டத் திருத்தத்தை முதல் நிலையில் அலசி ஆய்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.
இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
இந்திய ஒன்றிய நாடு முழுமைக்கும் எப்படியோ 10 விழுக்காடு என்று வரையறுத்துவிட்டது; போகட்டும். இதையெல்லாம் கேள்விக்குள்ளாக்குவது உச்ச நீதி மன்றத்தின் கடமை; பார்க்கலாம். ஆனால் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலத் தேசத்திலும் இடஒதுக்கீடு வரம்புக்குள் வராத பார்ப்பனர் உள்ளிட்ட மேல்சாதியினரின் மக்கள் தொகை வெவ்வேறாக இருக்கும். அதிலும் நலிந்த ஏழை பார்ப்பனர் உள்ளிட்ட மேல்சாதிக்காரர்கள் வெவ்வேறு அளவில்தான் இருப்பர்.
இந்த ஆண்டு வருமான அளவு ரூ.8 இலக்கத்திற்குள்ளாக உள்ள பார்ப்பனர் உள்ள மேல்சாதி ஏழைகளைக் கணக் கெடுப்பது என்பது பெரும் சிக்கலாகத்தான் இருக்கப் போகிறது. இதுபோன்ற மேல்சாதி ஏழைகள் கணக்கிடப் பட்டு அவர்கள் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை விழுக்காட்டினராக உள்ளனர் என்பதையும் கணக்கிட வேண்டும். அந்த விழுக்காடு அளவுக்கு அந்த ஏழைகள், அரசுப் பணிகள் கல்வியில் இடம் பெற்றுள்ளனரா என்பதையும் ஆய்வு செய்து கணக்கிட வேண்டும்.
இப்போது இடஒதுக்கீட்டு வளையத்திற்குள் வராத வகுப்புகளில் (மேல்சாதி) உள்ள ஏழைகளுக்காகத் தனியே 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடுவதற்கு அரசமைப்புச் சட்டம் 103ம் திருத்தம் செய்யப்பட்டு அதை ஒன்றிய அரசும் சில மாநிலங்களும் நடைமுறைப் படுத்தியும் உள்ளன. ஆனால் இச்சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உச்ச வழக்காடு மன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் வழக்கு மன்றத்தால் எடுத்துக்கொள்ளத்தக்கதாக இல்லை என ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
அதை வேறெந்தப் பின்னணியிலும் ஆய்வு செய்வதைவிட உச்ச வழக்கு மன்றம் மண்டல் வழக்கில் 16.11.1992-இல் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பின்னணியில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதுதான் சிறப்பாக அமையும். அதாவது அந்தத் தீர்ப்பை அடிப்படையாக (Bench Mark) எடுத்துக்கொள்வது தேவையில்லாத நெருடல்களைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக அமையும்.
முதலில் இதில் நாம் ஒன்றைச் சரியாகக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்டம் அடிப்படை உரிமைகள் பகுதியில் 15(4), 16(4) பிரிவு களின்கீழ் சமூகத்தில், கல்வியில் பின்தங்கிய பிற்படுத் தப்பட்ட மக்கள் இடஒதுக்கீடு பெற அடிப்படை உரிமை யாக வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில்தான் காலம் கடந்துவிட்ட காகா கலேல்கர் குழுவுக்கு அடுத்து மண்டல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்கிய பரிந்துரைகளில் ஒன்றான பட்டியல் குல, பழங்குடியர் தவிர்த்த இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஒன்றிய அரசுப் பணிகள், கல்வியில் அளிக்கப்பட வேண்டும் என்பதின் அடிப்படையில் 1990இல் ஒன்றிய அரசு அதை நடைமுறைப்படுத்த ஆணை வெளியிட்டது.
அதை எதிர்த்து உச்ச வழக்கு மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உடன் உச்ச வழக்கு மன்றம் இடைக்காலத் தடைவிதித்துவிட்டது. 1950-லிருந்து 1990 வரை அரசமைப்புச் சட்டத்தில் 40 ஆண்டுகளாக இடம் பெற்றிருந்த பிரிவுகளின் அடிப்படையில்தான் அன்றைய அரசு இடஒதுக்கீடு ஆணை பிறப்பித்தது. ஆனால் தடை. சனவரி 2019இல் சனவரி முதல் வாரத்திற்குள் அரசமைப்புச் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தால் செய்யப்பட்டு சனவரி 8 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த 103ஆம் திருத்தச் சட்டப்படி மேல்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு தனியே இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு உடன் ஒன்றிய அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு உச்ச நடுவர் மன்றத்தில் தொடரப்பட்டுவிட்டது. 1990இல் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதற்குத் தடைவிதித்த உச்ச வழக்கு மன்றம் இப்போது அமைதி காத்து எந்த இடைக்காலத்தடை ஆணையும் பிறப்பிக் காமல் சென்ற 1ஙூ ஆண்டுகாலமாக நிலுவையில் வைத்துள்ளது அதன் சிந்தை எத்தன்மையானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். சரி, 1992ஆம் ஆண்டு தீர்ப்பைப் பார்ப்போம்.
அதன் அடிப்படையில்தான் அந்த ஏழை மக்கள் தமிழக அரசுப் பணிகளில், கல்வியில் இடஒதுக்கீடு பெறத் தக்கவர்களா? இல்லையா? என்று முடிவு செய்திட வேண்டும். உண்மையில் இந்த மேல்சாதி ஏழை மக்கள் தொகை தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை விழுக்காட்டினர் இருக்கின்ற னரோ அதற்கும் குறைவான விழுக்காட்டு அளவில் உள்ளனரென்றால் ஏனைய வகுப்புகளுக்கு எந்த விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதோ அதைப் போன்றே இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடஒதுக்கீடு விழுக்காட்டு அளவாக இருக்க வேண்டும்.
மேலும் இக்காலக்கட்டத்தில இந்திய ஒன்றியம் உச்சவழக்கு மன்றக் கட்டளைச் சட்டமான 50 விழுக்காடு வரம்புக்கும் அதிகமாக மேல்சாதி ஏழைகளின் மேல் கழிவிறக்கம் கொண்டு 10 விழுக்காடு அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து இந்திய ஒன்றிய அரசு மொத்த இடஒதுக் கீட்டின் அளவை 60 விழுக்காடாக உயர்த்தியுள்ளதோ, அதேபோன்று தற்போது தமிழ்நாட்டில் 85-90 விழுக்காடு மக்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்பதால் அதற்கும் ஒரு ஆய்வுக் குழுவை தமிழக அரசு அமைத்து இவர்கள் அதிக மக்கள் தொகையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டால் அதற் கேற்றாற்போல் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு அளவை 90 விழுக்காட்டு அளவுக்கு உயர்த்தி வழங்கிடுவதற்கு இடஒதுக்கீட்டுக்கான 50 விழுக்காடு உச்ச வரையறை இடையூறாக அமையாது என்பதை இந்திய ஒன்றிய அரசு வழிகாட்டுதலைக் கடைப்பிடித்து செயல்படுத்திட வேண்டும். இனி நாம் ஒன்றிய அரசின் 10 விழுக் காட்டுச் சட்டம் அடிப்படை இயற்கை அறனுக்கு முரணாகச் செல்லத்தக்கதல்ல என்பதைக் காணலாம்.
உச்ச, உயர் வழக்கு மன்றச் சிந்தையை அங்கு பணிபுரியும் நடுவர்களின் கீழேயுள்ள கருத்துகளை, பேச்சுக்களைக் கவனத்தில் கொண்டால் நாம் புரிந்து கொள்ள முடியும்.
* பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு ஏன்? (1992 இல் மண்டல் வழக்குத் தீர்ப்புதான் இதற்குப் பதில்)
* இவர்களுக்கு எவ்வளவு காலத்திற்குத்தான் இட ஒதுக்கீடு அளிப்பது? (16(4) பிரிவு தெளிவுபடுத்து கிறது - இம்மக்களுக்குப் போதுமான அளவுக்கு அரசுப் பணிகளில் பங்கு கிடைக்கும் வரையில் இடஒதுக்கீடு தொடர வேண்டும்- State shall make any special provision for reservation to backward classes of citizen if in the opinion of the state they are not adequately represented).
* கையூட்டும் இடஒதுக்கீடும் நாட்டின் மிகப்பெரும் இரு கேடுகள். (இடஒதுக்கீட்டுக் கொள்கை கொண்ட தமிழ்நாடு பொருளாதார, சமூக, கல்வி, மருத்துவ வளர்ச்சியின் உச்சத்தில்).
* பார்ப்பனர்கள்தான் சமூகத்தில் சிறப்பானவர்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட வேண்டும்.
(ஆனால் பார்ப்பனர் உள்ளிட்ட மேல்சாதி நலிந்த வருக்கு இடஒதுக்கீடு தரலாம். இன்னும் அதைக் கேள்விக்குள்ளாக்காது உள்ளது உச்ச நடுவர் மன்றம்).
(அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்து அதன் பாதுகாவலர்களாகக் கருதப்படுபவர் சொன்னவை).
1992ஆம் ஆண்டு உச்ச நடுவர் மன்றத் தீர்ப்பில், ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வர்கள் பல நூறு ஆண்டுகளாக வேலையில், கல்வி யில் வேற்றுமைப்படுத்தப்பட்டு பாகுபாட்டுக்குள்ளாக் கப்பட்டு வந்ததால் அதை நேர்படுத்துவதற்கு அவர் களுக்கு இடஒதுக்கீடு வேறுபாடாகவும் பாகுபாடாகவும் அளிக்கப்பட வேண்டும் - the discrimination other backward classes who were subjected over centuries are entitled for reservation on the basis of the same discrimination to set-right the discriminated oppression and suppression.
இங்கு ஒன்றிய வரலாற்றில் எந்தக் காலக்கட்டத்தி லாவது பார்ப்பனர்கள் உள்ளிட்ட மேல்சாதிக்காரர்கள் ஏழைகளும்கூட அரசுக் கல்வியில், வேலையில் வேறுபடுத்தப்பட்டு பாகுபடுத்தப்பட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளானதா? இதர பிற்படுத்தப்பட்டோருள் வளமான பிரிவினராக உள்ளவர்களை இடஒதுக்கீட்டு வளையத் திலிருந்து நீக்கிவிட வேண்டும்; உச்ச வழக்கு மன்றம் சொன்னது.
அதற்குக் காரணமும் சொல்லப்படுகிறது. கல்வியில், சமூகத்தில் பின்தங்கியவராக உள்ள இதர பிற்படுத்தப்பட்டவர் நல்ல உயர் அரசுப் பணி, பொருளாதாரத்தில் உயர்ந்த நிலை அடைந்துவிட்டால் அவருக்குக் கல்வியும் கிடைக்கும்; சமூக நிலையில் அவரின் இழிவு நிலையும் நீங்கிவிடும் என்பதால் அவரை சமூகத்தில், கல்வியில் பிற்படுத்தப்பட்டவராகக் கருத இயலாது. எனவே சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு விடுகின்றார்.
எனவே இவருக்கு இடஒதுக்கீடு பெறத் தகுதியில்லை என அந்த வளமானவரை அந்த வளையத்திலிருந்து நீக்கிட வேண்டியதுதான் என்று உச்ச நடுவர் மன்றம் பொது விதியாக இதர பிற்படுத் தப்பட்டோருள் வளமான பிரிவினரை இடஒதுக்கீட்டு வளையத்திலிருந்து நீக்கிடலாம் என வரையறுத்து விட்டது. எனவே இடஒதுக்கீடு பெற முதன்மையான முன் வரையறை கல்வியில், சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவராக இருத்தல் வேண்டுமென்பது தெளிவாகின்றது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 46-இன்படி நாட்டிலுள்ள நலிவுற்ற மக்களைச் சமூக அநீதியிலிருந்து காப்பாற்ற வும், அரசமைப்புச் சுரண்டலிலிருந்து விடுவிக்கவும் இவர்களுக்கு இங்கு ‘நலிவு’ என்ற சொல் 103ஆம் சட்டத் திருத்தத்தில் சொல்லப்பட்டதுபோல் வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல.
ஆனால் இது மக்களின் சமூக வாழ்நிலையில் அவர்கள் ஒடுக்கப்பட்டு நலிவுறுவதையும் போதிய கல்வி, மருத்துவம் மக்களுக்கு அளிக்கப்படாது அவர்கள் நலிவுறுவதையும், இன்னும் வாழ்க்கைசார் பல கூறுகளில் நலிவுறுதலையும் உள்ள டக்கியதாகத்தான் ‘நலிவுற்ற பிரிவு மக்கள்’ என்ற சொற்றொடர் பிரிவு 46-இல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
மேலும் பொதுவாக நலிவுற்ற மக்கள் என்று சுட்டியது மட்டுமின்றி குறிப்பாய் “பட்டியல்குல, பழங்குடி மக்களின் நலிவு என்ற சொல்லுடன் இணைத்து வலிந்து அழுத்தம் கொடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.” சமூக அநீதியிலிருந்து நலிவுற்ற மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது சமூகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை மட்டும்தான் சுட்டும்.
பார்ப்பனர் உள்ளிட்ட மேல்சாதியினர் வரலாற்றின் எக் காலத்திலும் சமூக அநீதிக்கு உள்ளானவர்கள் அல்லர். ஆனால் பொருளாதார ‘நலிவு’ என்பது அனைத்துச் சமூகப் பிரிவுகளிலும் காணப்படும் பொதுநிலை. அதை நீக்குவதற்கு அம்மக்களுக்குப் பொருளுதவி அளித்து பொருளாதாரச் சுரண்டலிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதனால் பிரிவு 46, நலிவுக்குத் தீர்வு இடஒதுக்கீடு அல்ல என்பது தெளிவு.
அரசமைப்புச் சட்டம் 15(4) மற்றும் 16(4) இரு பிரிவுகளும் சமூகத்தில், கல்வியில் பிற்படுத்தப்பட்ட குடிமக்களைப் பற்றிக் குறிப்பிட்டு அரசுக் கல்வியில், வேலைகளில் அவர்கள் இடஒதுக்கீடு பெற உரிமை பெற்றவர்கள் எனக் கட்டளையிடுகின்றன. ஆனால் பிரிவு 46 மக்களுள் (People) நலிந்த பிரிவினர் என்று தான் சொல்கிறது. குடிமக்களுள் (Citizen) நலிந்த பிரிவினர் என்று குறிப்பிடவில்லை. மக்கள் என்ற சொல் குடிமக்களுடன் குடிமக்களாக இல்லாதவர்களையும் சேர்த்துக் குறிக்கும் பொதுச் சொல்.
குடிமக்களுக்குத் தான் இடஒதுக்கீட்டு உரிமையை 15(4), 16(4) பிரிவு கள் வழங்கியுள்ளது. குடிமக்களாக இல்லாதவர்கள் அந்த உரிமை அற்றவர்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் பா.ச.க. அரசு 46ஆம் பிரிவின் உண்மையான நோக்கத்தைத் திரித்து அதற்கு முரணாக அப்பிரிவையே பயன்படுத்தி அரசமைப்புச் சட்ட 103ஆம் திருத்தம் செய்யப்பட்டுவிட்டது.
அதுமட்டு மல்ல, 46ஆம் பிரிவின் ஒவ்வொரு சொல்லும் திரிக்கப் பட்டுத்தான் இத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே இது அரசமைப்புச் சட்டத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மோசடி. எனவே 103ஆம் சட்டத்திருத்தம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே இது செல்லத்தக்கதல்ல என உச்ச வழக்கு மன்றம் தள்ளுபடி செய்தும் அதன் அடிப்படையில் ஒன்றிய அரசு பிறப்பித்த ஆணையை உடனடியாக தள்ளுபடி செய்தும் விரைவில் தீர்ப்பு அளித்திடும் என நம்பலாம்.
இந்தத் தருக்கத்தை பார்ப்பனர் உள்ளிட்ட மேல்சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு அளித்திட முற்படும் போது முன்னிறுத்த வேண்டும். இவர்கள் எந்த நிலையிலும் கல்வியில், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக நடத்தப் பட்டதாக வரலாறே கிடையாது. மேலும் அவர்கள் கல்வி பெறுவதில் இடையூறே இல்லை. சமூகத்தில் உயர் மதிப்புக்குரியவராகத்தான் உள்ளனர்.
காட்டாக இந்திய ஒன்றியத்தில் 25 விழுக்காடு கல்வி அறிவு அற்றவர்களுள் இவர்களில் இருபாலருள்ளும் ஒருவர் கூட இருக்க வாய்ப்பில்லை. அப்படியெனில் 30 கோடி மக்களுக்கும் மேலாக கல்வி அறிவு அற்றோர் அனை வரும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களான பட்டியல் குலத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோராக மட்டும் இருக்க முடியும். இதுதான் 73 ஆண்டைய விடுதலை பெற்ற இந்திய ஒன்றியத்தின் இழிநிலை.
இதுகுறித்து நாடு வெட்கித் தலைகுனிய வேண்டும். இதற்கும்மேல் ஒடுக்கப்பட்டோருக்கு ஏன் இடஒதுக்கீடு என வினவுபவர் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்கு, வளர்ச்சிக்கு இடையூறானவர் எனத்தான் கொள்ள வேண்டும்.
4.8.2020 அன்று மகாராட்டிரத்தில் அந்நாட்டரசு தம் நாட்டு மக்களுக்கெனத் தனியே 12 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதற்கு எதிரான வழக்கில் இந்த இடஒதுக்கீடு உச்ச வழக்கு மன்றம் விதித்த இடஒதுக்கீட்டு உயர் வரையறை அளவான 50 விழுக் காட்டை மீறுவதாகும் என வாதிடப்பட்டது. அதற்கு 10 விழுக்காட்டு சட்டமும் அந்த உயர் அளவான 50 விழுக்காட்டை மீறுவதாக உள்ளது என்பதை அந்த வழக்கை எடுக்கும் போது உச்ச வழக்கு மன்றம் கருத்தில் கொள்ள வேண்டுமென்று வாதிடப்பட்டது.
அதற்கு 200 மில்லியன் (20 கோடி) மக்களாக உள்ள இவர்களுக்கு இடஒதுக்கீடு தரப்பட வேண்டுமென்றனர். இது எவ்வளவு அப்பட்டமான பொய். அதுவும் உச்ச வழக்கு மன்றத்தில் மனம் கூசாமல் பொய்யுரைக் கின்றனர். மொத்த மேல் வகுப்பினர் 10-12 விழுக் காட்டினர் மட்டுமே. மொத்தத்தில் 15 கோடி மக்கள் மட்டும் இருப்பர். இதில் பெரும்பாலோர் வளமான பிரிவினர். மிகவும் அதிக அளவாக 7-8 கோடிப் பேரே இவர்கள் இருப்பர். இது நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 6 விழுக்காட்டினருக்கு மிகாமல்தான் இருக்க முடியும். இந்த 6 விழுக்காட்டினருக்கும் 10 விழுக்காடு ஒதுக்கீடு என்பது இயற்கை முரண். வன்கொடுமை. அதற்கு இவ்வன் கொடுமை தமிழகத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் ஒரு குழு ஒன்று அமைத்து மேலே குறிப் பிட்ட வினாக்களை எழுப்பி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அடுத்து உடனடியாக 90 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பிக்க வேண்டும். இதே போன்று உச்ச வழக்கு மன்றத்தில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது மேலே சொல்லப்பட் டுள்ள வினாக்களை எழுப்பி அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான உச்ச வழக்கு மன்றக் கட்டளைத் தீர்ப்புக்கு எதிரானது என நிறுவி இந்தக் கேடான சட்டம் செல்லத் தக்கதல்ல என தள்ளுபடி செய்திட ஆவனவெல்லாம் செய்வோம்.
- இரா. பச்சமலை