(இந்திய ஒன்றியத்தில் உள்ள 110 கோடி அளவில் உள்ள வெகுமக்களான ஒடுக்கப்பட்ட மக்களான ஏழை, எளிய உழைக்கும் மக்களின் பிழைப்பைச் (வாழ்வை) சீரழிக்கும் ஒன்றிய மாநில அரசுகள்)
“உபரி இலாபத்திலிருந்து அல்ல, மூலதனத்திலிருந்தே, ஆடம்பரங்களிடம் இருந்து அல்ல, அத்தியாவசியங்களிடம் இருந்தே, நமது வருவாய் பெறப்படுகிறது. இது பாவத்தின் - கண்ணீரின் - விளைபொருளாகும்”.
(1873-இல் வெளியான தமது “அடிமைத்தனம்” நூலில் மகாத்மா சோதிராவ் புலே சொன்னார்)
இதே கருத்தைத்தான் பின்னாளில் அம்பேத்கர், ஆங்கிலன்(லேயர்) ஆட்சியின் வரி விதிப்புப் பற்றிய தமது நூலில் பதிவிட்டுள்ளார். இதே தன்மையில் பெரியாரும் ஆங்கிலன்(லேயர்) ஆட்சிக்காலம் தொட்டு நாடு விடுதலை பெற்ற பின்னரும் பின்பற்றப்படும் வரி விதிப்பு முறை பெரும்பாலும் வெகுமக்களின் வாழ்வைக் குலைப்பதாகத்தான் இருந்து வருகின்றது என்று 1930-களிலிருந்தே விரிவாகப் பேசியுள்ளார்.
‘அடிமைத்தனம்’ நூலில் புலே சுட்டும் ஏழை எளிய மக்களின் நாள் கூலி 4 அணா (உருபா 1/4), பெண்களுக்கு அதில் சரிபாதி 2 அணா. ஆனால் ஆங்கிலன் அலுவலகத்தில் பணிபுரிவதற்கு திங்கள் ஊதியம் (அவனுக்கு அது கூலி என ஒலிக்காது) ரூ.600. எனில் நாள் ஊதியம் ரூ.20 (இது விடுமுறை நாள்களுக்கும் ஊதியம் உண்டு), ஆனால் நாள் கூலிக்காரர்களுக்கு வேலை பார்த்தால்தான் கூலி, இதன்படி கணக்கிட்டால் இவ்விரு பிரிவினருக்கும் உரிய சம்பள வேறுபாடு 80 மடங்குக்கும் அதிகம் (அதாவது உருபாவுக்கு நான்கு 1/4 உருபா என்ற அளவில்). இது ஆங்கிலன் தன்குடி யேற்ற நாடான இந்திய ஒன்றியத்தைச் சுரண்டி கொள்ளை கொள்வதற்கு அவனுக்கென வகுத்துக் கொண்ட ஊதிய முறை.
இதையே, அரசுப் பணிகளிலி ருந்த இந்தியர்களுள் 90 விழுக்காட்டிற்குமேல் இருந்த பார்ப்பனர்களும் மேல்சாதிக்காரர்களும் பெற்றுக் கொழுத்து வந்தனர். அதை ஒட்டியே பணிக்கு வந்த ஏனையோரும் இந்தச் சம்பள வேறுபாட்டின் அகல ஆழத்தை அறியாதவர்கள் போல் புலே, அம்பேத்கர், பெரியார் சொன்னது போன்று ஆங்கிலன் போல் ஏழை எளியோரைச் சுரண்டிக் கொள்ளை கொள்வது இன்னும் வன்மத்துடன் தொடர்கிறது.
ஆங்கிலன் போன்றே பார்ப்பனியம் சொல்லும் வன்நெஞ்ச விளக்கம் வேளாண் சார், நெசவுத் தொழில்சார் மக்கள் உழைப்பளித்து, உடல் உழைப்பளித்து நாட்டின் செல்வங்களையும் வளங்களையும் உருவாக்குபவராக இருந்தும் படிப்பு அற்றவர்களாக உள்ளனர் என்பதாகும் (காலகால மாகத் திட்டமிட்டு அவ்வாறு வைக்கப்பட்டுள்ளனர்).
இன்னும் சற்று விரிவாகப் பேசப்பட வேண்டு மென்பதால் மேலும் சில வரிகள். பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கருத்துகளை அடியொற்றி நிலவும் உண் மைகளை வெளிப்படையாகவும், கண்டிப்பாகவும் பதிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். அமைப்புசார் (அரசு, பொது நிறுவனங்கள், வங்கிகள் போன்ற) பணிகளில் உள்ளோரின் சம்பள வேறுபாடு 30 மடங்களவில் உள்ளது என்பதுடன் சமூக அமைப்பு எப்படி படிநிலைகளுடன் குறுக்கும் நெடுக்குமாகப் பிளவுபடுத்தப்பட்டுக் கீழான - மேலானவன், தாழ்ந்தவன் - உயர்ந்தவன் என்ற பாகுபாடுடன் உள்ளது போன்று அரசுப் பணிகளும் இதனினும் கீழான தன்மையில் மெத்தப் படித்தவன், படித்தவன், குறைந்தளவு படித்தவன் படிக்காதவன் என்ற அள வீட்டின்படி 100 வகையான சம்பள விகிதத்துடன் (இதில் நாள் சம்பளம், தொகுப்பு ஊதியம், பகுதி நாள் ஊதியம் போன்றவையும் அடங்கும்) இன்றும் இருந்து வருகிறது.
இவ் இழிநிலைக்கு நாடே வெட்கித் தலை குனிய வேண்டும். இதற்கும் இழிவாக அன்றாட உடல் உழைப்பாளிகளாக ஊர்ப்புறங்களில், நகர்ப் புறங்களிலும் கூட நாளுக்கு ரூ.100, ரூ.200, ரூ.300... என்ற அளவிலேயே கூலி பெற்று வருகின்றனர். ஆனால் முன்னே சொன்னது போல் உயர்படிப்பு, உயர் பணிகளான அனைத்திந்தியப் பணியினர், உயர் உச்ச வழக்குமன்ற நடுவர் எனப் பெரும் திங்கள் சம்பளக்காரர்களாக, திங்களுக்கு மூன்று, மூன்றரை இலக்கம் உருபா என்று பெற்று வருகின்றனர். இவ்விரு பிரிவினருக்கும் உள்ள சம்பள வேறுபாடு மடங்குக்கும் அதிகமாகவே உள்ளது.
இந்த இழிநிலை குறித்து மக்கள் பற்றுடன் அவர்களின் தன்மானத்துடனான பிழைப்பையும் (வாழ்க்கை) வலியுறுத்தும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 - எந்த ஒரு மனிதனின் வாழ்வையும் (தன்மதிப்புடைய கல்வி, உடல்நலன், சம்பளம் உடையது) அவனின் விடுதலை உரிமையையும் சட்டப்படியினா லன்றி பறிக்கப்படக்கூடாது - என்பனயெல்லாம் எண் ணாது சட்டத்தைப் பாதுகாப்போம் என்போரும், சமூகப் பொருளாதாரம், வேளாண் பொருளாதாரம், பொதுப் பொருளாதார வல்லுநர்கள், மனிதப் பற்றியலாளர்கள் உள்ளதாக இந்த இந்திய ஒன்றிய நாட்டை எப்படிச் சொல்ல முடியும்?
டீசல் விலையேற்றத்தை மேலே விவரிக்கப்பட்டுள்ள பின்னணியில் ஆய்வுக்குட்படுத்தினால்தான் அதனால் உண்மையில் எந்த அளவுக்குக் கடுமையாகவும் கொடுமையாகவும் வெகுமக்களான ஏழை எளிய உழைக்கும் மக்கள் வதைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும், அவர்களின் பிழைப்பும் வாழ்வும் எவ்வளவு இரக்கமற்ற, மானுடப் பற்றே அற்ற வகையில் பறிக்கப்பட்டு வறியவர்களாக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர முடியும்.
எரிபொருள்கள் விலையேற்றம் பற்றிப் பேசுவோர், பொத்தாம் பொதுவாகப் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என எல்லாவற்றின் விலையேற்றம் பற்றிப் பேசி, இதைக் கண்டனம் செய்து வருகின்றனர். வியப்பென்னவெனில், பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிகள், அந்தச் சாயலைக் கொண்ட அமைப்புகள், இயக்கங்கள் யாவும் இவ்வாறுதான் சொல்லி வருகின்றன என்பதுதான் உண்மையில் நாட்டிலுள்ள 100 கோடிக்கும் மேலான ஏழை எளிய உழைக்கும் மக்களின் வாழ்வை டீசல் விலையேற்றம் சூறையாடி வருவதைச் சற்றுப் பின்னால் விவாதிப்போம்.
இப்பொருள் குறித்துப் பேசும் போதும் டீசல் உள்ளிட்ட இவையெல்லாம் எந்தெந்த அளவுகளில், எவ்வளவு உற்பத்திச் செலவில் கச்சா எண்ணெயிலிருந்து எவ் வாறு பிரித்தெடுக்கப்படுகின்றன என்பது முதன்மை யான செய்தி. எனினும் இவற்றை இக்கட்டுரையின் தொடர்ச்சியாக அடுத்த கட்டுரையில் விரிவான ஆய்வுக் குட்படுத்தலாமெனக் கருதுகிறேன். இப்போது பெட்ரோல், சமையல் எரிவாயு, விலையேற்றத்தின் விளைவு களை முதலில் கணக்கிடுவோம். இவற்றைச் சம மனநிலையுடன் மனங்கொள்ள வேண்டுவேன்.
இருசக்கர உந்துகள், மகிழுந்துகள், தானிகள் போன்ற வற்றிற்கு பெரும்பாலும் பெட்ரோல் பயன்படுத்தப் படுகிறது. ஒருவர் அல்லது இருவர் ஒரு பெட்ரோல் இருசக்கர உந்து பயன்படுத்துவதில் தனிப்பட்ட இவர் களின் தேவைக்காகவும், வசதிக்காகவும், நலனுக் காகவும் என்ற தன்மையில்தான் உள்ளது. இதனால் இவர்கள் குறுகிய காலப் பயண நேர இடைவெளியில் வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடிகிறது.
ஆனால் இதற்கு மாற்றாகப் பல போக்குவரத்து முறைகள் உள்ளன. பொதுப் பேருந்துகள் (அரசு மற்றும் தனியார்), நகர்ப் புறங்களில் மின்தொடர் வண்டிகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அவர்களின் பொருள் செலவை மட்டுக்குள் வைக்கவும் வாய்ப்புள்ளது. உண்மைநிலை இந்நிலைக்கு முற்றும் மாறாக, தற் பொழுது பொதுப் போக்குவரத்துக் கட்டணம் பெருமளவு உயர்த்தப்பட்டுவிட்டதால் இருசக்கர உந்தைத் தனி யொருவர் பயன்படுத்தினால் எரிபொருள் செலவு குறை வாகவும் இருக்கக்கூடும்.
அதேநேரத்தில் இருசக்கர உந்தில் இருவர் பயணித்தால் பேருந்துப் பயணச் செலவைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் குறைவாகத்தான் இருக்கின்றது. இந்த வகையில் இதுபோன்ற இருசக்கர உந்துகளின் பயணிப்பவர்களின் தனிநலன், தேவை, நிறைவுறும் அதேவேளையில் பொதுச் சாலைகள், தெருக்கள் போன்றவற்றைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தானி, மகிழுந்தில் முழுக் கொள்ளளவில் அதாவது முறையே மூவர் மற்றும் நால்வர். ஐவர் (தத்தம் சொந்த வண்டிகள் அல்லது வாடகை வண்டிகள் எனினும்) பயணித்தால் பயணச் செலவு அளவு அவர்கள் பொதுப் போக்குவரத்து ஊர்திகளைப் பயன்படுத்தும் செலவினைக் காட்டிலும் பெரிதும் அதிகமாக ஆகிவிடாது. அல்லது அச்செலவு இன்றுள்ள பொதுப் போக்குவரத்துப் பயணக் கட்டண அளவுக்கு இணையாகக்கூட ஏன் சற்றுக் குறைவாகக்கூட இருக்க நேரிடலாம். மேலும் இதில் பயண நேரம் பெரிய அளவு குறைந்துவிடும் வாய்ப்பும் கிட்டுகின்றது.
இவ்வகையிலும் பொதுப் போக்குவரத்துச் சாலைகள், தெருக்கள் தனிப்பட்ட தேவைகளுக்கும் நலன்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் கருத்தில் கொள்ளலாம். இவ்வாறு சொல்வதில் தனியொருவருக்கு உரிமையில்லையா என்ற வினா எழும். ஆனால் ஒப்பீட்டளவில் பொதுப் போக்குவரத்து உந்துகளைப் பயன்படுத்துவோர் பயணங்களில் நிகழும் பயணிகள் நெருக்கடி, இன்னல்கள் போன்றவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உண்மையில் அனைத்து மக்களுக்குமான குறிப்பாக வெகுமக்களான எளிய மக்களின் சாலைப்போக்கு வரத்து அரசு பொது உந்துகள் குறிப்பாக அரசு பொது, தனியார் (“பா.ச.க. சாதனை”) தொடர் வண்டிகள். பெரும் அளவுக்கும் அனைவருக்குமான வசதிகளுடன் இயக்கப்படாததாலும் ஆங்கிலன் காலத்துத் தொடர் வண்டிப் பாதைகள் 60000, 65000 கி.மீ. அளவிலேயே இருந்ததைக் காட்டிலும், நாடு விடுதலை பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் வெறும் 20000, 25000 கி.மீ. நீளத்திற்கு மட்டுமே புதிய தொடர் வண்டிப் பாதைகள் அமைத்துப் பெருகிவரும் மக்கள் தொகைக்குச் சற்றும் ஈடுகட்ட முடியாத அளவிலேயே வைத்துக் கொண்டிருப்பதாலும்தான் தனிப்பட்டோர் வண்டிகள் வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, வண்டிகளுக்கான எரிபொரு ளான கச்சா எண்ணெய்த் தேவை அதிகரித்து அவற்றைப் பெருமளவுக்கு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
எனவே இதற்கென பெருநிதி ஒதுக்கப்பட்டு வெகு மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான, நலன்களுக் காக நிதி ஒதுக்கப்படுவதில்லை. ஆனால் உண்மை நிலை வேறாகியுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.
அதாவது ஒன்றிய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பெருக்கி அளப்பெரும் வணிகப் பொருளாக்கி வணிகம் செய்து பெருநிறுவன முதலாளிகள் போல் கொள்ளை இலாபம் ஈட்டப் பயன்படுத்துகின்றதோ என்று எண்ண வேண்டியுள்ளது. மேலும் இதன்மீது கொடும், கொள்ளை வரிவிதிப்பை ஏதுவாக்கி மக்கள் வாழ்வைச் சூறையாடிக் கொண்டு வருகிறது ஒன்றிய அரசு.
பெட்ரோல் இருசக்கர உந்து வண்டி, மகிழுந்து வைத்திருப்போர் மட்டும் அதன் விலையேற்றத்தால் பாதிக்கப்படுவர். உண்மைதான். இந்தப் பாதிப்பின் தாக்கம் தனிப்பட்டோரைப் பொருளாதார அளவில் பாதிக்கும். இருப்பினும் இவர்கள் தனிப்பட்ட வகையில் பலன் பெற்றவர்களாகின்றனர். ஆனால் இந்தப் பாதிப்பு 99 விழுக்காடு அளவுக்கு பிறர்மேல் ஏற்றப்படாது; இறங்காது.
அதாவது விலையேற்றப் பாதிப்பு சங்கிலித் தொடர் போல் பிறர் எவர் மீதும் ஏற்றப்பட வாய்ப்பே இல்லை. தானி வாடகை மகிழுந்து உடைமையாளர்கள், ஓட்டுநர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் பொருளாதார அளவில் பாதிக்கப்படுவர்.
ஆனால் இந்தப் பாதிப்பின் தாக்கம் அவற்றில் பயணிப்போரை மட்டும் ஒரே ஒரு நிலையில் மட்டும் இருக்கும். இதனால் பெட்ரோல் விலையேற்றத்தின் சுமை அடுத்த ஒரு நிலைக்கு மாற்றப்பட்டு இவர்கள் அடையும் பொருளாதாரப் பாதிப்பு மிகச் சிறு அளவே இருக்கக்கூடும்; பெரும்பாலும் இருக்காது. ஆனால் அதேநேரம் பயணிகள் பலன் பெறுகின்றனர்.
இனி, டீசல் விலையேற்றத்தின் விளைவை விவாதிப்போம். இங்கு ஒரு விளக்கத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கச்சா எண்ணெய் இறக்குமதி விலையையும் அதிலிருந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற பத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் உற்பத்தி செயப்படுவதற்கு (Refinery) ஆகும் செலவையும் சேர்த்துத்தான் மேற்சொன்ன ஒவ்வொரு பொருளின் விற்பனை விலையும் கணக்கிடப்பட வேண்டும். காட்டாக, 159 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பீப்பாய் விலை 35 டாலர் அளவில் உள்ளது எனில், பெரும் அளவில் சுத்திகரிக்கப்படுவதற்கான செலவு நிகரளவில் மிகவும் குறைந்த அளவிலேயே ஓரிரண்டு டாலர் வரையிலும் கூட இருக்கலாம்.
ஆக, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் போன்ற எல்லாவற்றிற்கும் மொத்த அடக்க விலை 37 டாலர் மட்டுமே ஆகும். ஆனால் அப்பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி அளவு 100 விழுக்காடு, 200 விழுக்காடு, அதற்கும் மேல் என அதிகமாகி விற்பனை விலை, இந்திய ஒன்றிய அரசின் பொது நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றது.
இந்த வரிவிதிப்பு மன்னராட்சிக் காலத்தில் மக்களைக் கொள்ளையடிப்பது போல் வரிவிதிக்கப்பட்டு, நாட்டுக்கு வருமானம் ஈட்டப்படுவதாகச் சொல்லி ஏழை, எளிய வெகுமக்கள் உள்ளிட்ட அனைத்து நிலை மக்களும் சூறையாடப் படுவது போன்றே இப்போதுள்ள ஒன்றிய அரசு ஒரு கொடுங்கோலன் ஆட்சி போல் இரண்டு, மூன்று இலக்கம் கோடிக்கும் மேலாக இந்த வகையில் மட்டும் வரி வருவாய் ஈட்டி வருகின்றது. தனிமனித முதலாளிகளைப் போன்று ஒன்றிய அரசு கொடுமையான வரியை விதித்து வெகுமக்கள் எல்லையற்ற சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
முதலில், டீசல் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் எவ்வளவு இன்றியமையாப் பங்கு வகித்து, நாட்டின் மூலைமுடுக்கு என எல்லாப் பகுதிகளிலும் உள்ள சிறுபெருஞ்சாலைகள், தொடர்வண்டிப் பாதைகள் என ஒவ்வொரு அசைவிலும் மனித உடலில் உள்ள எல்லா நாளங்களிலும் குருதி ஓடிப் பாய்ந்து சென்று உடல்நலன் பாதுகாக்கப்படுவதில் பெரும் பங்கு வகிப்பது போன்று நாட்டின் நலத்தை.
உயிரைப் பாதுகாத்து வருகின்றது என்பது பேருண்மை. எந்த வடிவத்திலாவது டீசலின் பாதிப்பில்லாத எந்த இயக்கமும் இருக்க முடியாது என்றே சொல்லலாம். வேளாண் விளை பொருள்களான, உணவுப் பொருள்களான தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், பால் பழம், கிழங்கு வகைகள், பல இக்கட்டான வறட்சிக் காலங்களில் தண்ணீர் போன்றவை - துணி மணித் தேவைகளுக்கான பருத்தி, பஞ்சு, அதிலிருந்து உற்பத்தியாகும் பல்வகையான துணி வகைகள், மருத்துவத்திற்கான துணி வகைகள், பெருமளவு தேவைக்குரிய மருந்து வகைகள், வேளாண் இடுபொருள்களான பல்வேறு வகையான உரங்கள், பயன்பாட்டுக்கான பல்வேறு கருவிகள், கட்டடப் பணிகளுக்கான அனைத்துவகைப் பொருள்கள், சிமெண்ட், மணல், செங்கல், இரும்பு எனவும் நாட்டின் இன்றியமையாதத் தேவையான மின்சார உற்பத்திக்குக் கோடி கோடி டன் நிலக்கரி, ஆயிரக்கணக்கான பல்வேறு குறு, சிறு, நடுத்தர, பெரு, மிகப்பெருந் தொழிற்சாலைகளுக்கான பல்வேறு வகையான மூலப்பொருள்கள், அவற்றிலிருந்து உற்பத்தியாகும் ஆயிரக்கணக்கான வகைப் பொருள்கள் - அனைத்து வகை நுகர்வு, துய்தல் பொருள்கள் மற்றும் இருசக்கர மிதிவண்டி, இருசக்கர உந்து வண்டி, தானி மகிழுந்துகள் போன்றவை, என பல இலக்கக் கணக்கானவற்றின் உற்பத்திகளிலும், அவற்றையெல்லாம் நாடு முழுமைக்கும் மொத்தமாகப் பெருமள விலும், சிறு சிறு அளவிலும் எடுத்துச் செல்லுவதில் டீசல்தான் மிக மிக இன்றியமையாத, முதன்மையான இயக்கு ஆற்றலாக உள்ளது என்பதை உணர முடியும்.
மேலே இவ்வளவு நீண்ட பட்டியலை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இதன் அடிப்படை நோக்கம், டீசல் மூலப்பொருளான கச்சா எண் ணெய் விலை, அடுத்தடுத்து விலையேற்றம், அதிலி ருந்து டீசல் உற்பத்திக்கான செலவு, இதன் அடிப்படையில் டீசல் விலை அமைகிறது, இந்த விலையைக் கட்டுக்குள் வைத்தால்தான், மேற்சொன்ன ஆயிரக்கணக்கான பொருள்களின் விலையும் கட்டுக்குள் வைக்கப்பட முடியும். அப்பொழுது தான் பொருள்கள் ஏழை, எளிய வெகுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கும். இல்லை யெனில் அவர்கள் விலையேற்றத்தில் சிக்குண்டு வாழ்வே கேள்விக்குள்ளாகிவிடும் என்பதை உணர்த்தத்தான் மேற்சொன்ன நெடிய பட்டியல் தரப் பட்டுள்ளது.
டீசல் உற்பத்தி விலையேற்றம், அதன்மீது விதிக்கப்படும் அளவிலா வரிவிதிப்பு ஆகியவற்றால் அதன் விற்பனை விலை ஏற்றம் அதன் காரணமாக மேற் சொன்ன பொருள்களின் விலை ஏற்றம் பொருளாதார நிலையில் ஓரளவுக்குத் தன்னிறைவு பெற்றோர், நல்ல நிலையில், இன்னும் வளமான நிலையில் இருப்போரை, பொருளாதார அளவில் சொல்லித் தக்க வகையில் இன்றி ஓரளவுக்கு, ஏன் பாதிப்புக்கே உள்ளாகமலேயே பாதிப்பே இல்லாமற்கூடப் போகலாம்.
இன்னும் குறிப்பாக அவர்களின் செலவினம் துய்த்தல், நுகர்தல்சார் பொருள்களுக்காகத்தான் அதிகம் இருக்கக் கூடும் என்பதால் அவர்கள் அதைப் பாதிப்பாகவே உணராமலும், உணவுப் பொருள்களின் விலையேற்றம் அவர்களின் பெரும் வருமானத்தை ஒப்பிட்டால் அவர்கள் செலவளவில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுத்தாமலும் போகலாம்.
ஆனால் 100 கோடிக்கும் மேலாக உள்ள எழை, எளிய வெகுமக்கள் பொருளாதார நிலையில் மிகவும் அடித்தளத்திலும், அடித்தளத்தில் உள்ளவர்களாக, மிகவும் குறைந்ததளவே நாள், வார, திங்கள் கூலி வாங்குபவர்களாக இருப்பதால் அவர்களுக்கு அடிப்படையான இன்றியமையாத் தேவையான உணவுப் பொருள்கள், காய்கறி, தண்ணீர், பால் போன்றவற்றின் விலைவாசி ஏற்கெனவே அதிகமாக உள்ள நிலையில் மேலும் கடும் வரியுடன் கூடிய டீசல் விற்பனை விலையேற்றத்தின் விளைவால் ஏற்படும் விலையேற்றம் அவர்களின் வாங்கும் திறன் மிகக் குறைந்த அளவே இருந்துவருவதால் அவர்கள் அவற்றை வாங்குவதில் மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடுவதாக இருக்கும்.
எனவே அவர்களின் பிழைப்பை, வாழ்க்கையையே நகர்த்துவதற்கே கடும் இன்னலுக்கும், துன்பத்திற்கும் உள்ளாக்க நேரிட்டுவிடும். இது போன்ற குடும்பத்தில் உள்ள இளம் சிறார், வளர் இளம் பருவத்திலுள்ளோருக்கு வேண்டிய அடிப்படைச் சத்துணவுகூடக் கிடைக்காமற் போக நேரிடும். இவற்றின் ஒட்டுமொத்த திரண்ட விளைவாக உலகின் 98 விழுக் காடு மக்கள்தொகை கொண்ட 173 நாடுகளில் மக்கள் மூலதன அளவுகோலில் (Human Capital Index) இந்திய ஒன்றியம் தாழ்வான நிலையில் 116-ஆம் இடத்தில்தான் உள்ளது.
உண்மையில் இப்பெரும் திரளான மக்களின் உற்பத்திக்கு அளிக்கும் உழைப்பின் திறன் குறைய நேரிட்டு உற்பத்தி அளவும் சரியும் நிலை ஏற்படும். பல்வேறு காரணிகளினால், இந்த முதன்மையான காரணம் உள்ளிட்டு உற்பத்தி இல்லாமல் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (GDP) எப்படி உயரும்? நாட்டின் வளர்ச்சியைக் குறிப்பதாகச் சொல்லப்படும் (GDP) உ.உ.ம. தலைகீழாகக் கவிழ்ந்து எதிர்மறை வீழ்ச்சியடைந்து 29 விழுக்காடு அளவுக்கு 2020-21 காலாண்டில் சரிந்து கிடக்கின்றது.
கொடுங்கோல் ஆட்சியைப் போன்று மக்களைக் கொள்ளையடித்துச் சூறையாடுவதுபோல் டீசல் விலை உலக அளவில் படுபாதாளத்தில் விழுந்துள்ள நிலையில் (159 லிட்டர் அளவு கொண்ட ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சில கிழமைகளுக்கு முன் எதிர்மறையாக இருந்தது. (பொருள், பணம் கொடுத்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய வேண்டியதில்லை. பிற்காலத்தில் பணம் செலுத்திடலாம்)).
இப்போது சற்று உணர்ந்து பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 30 டாலரைச் சுற்றியுள்ள நிலையிலும் டீசல் விற்பனை விலை, டீசல் விலை போன்று 100, 200, 300 விழுக் காடு அளவுக்கு வரிவிதித்து விண்ணை எட்டும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற 9 ஆண்டுகளுக்குமுன் பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் மேலாக இருந்த போது, டீசல் விற்பனை விலை ரூ.30, 40 என்ற அளவிலேயே இருந்து வந்தது உயர்ந்து ரூ.70 அளவிலேயே வைக்கப்பட்டு வந்தது. அதன் விளைவாக உணவுப் பொருள்களின் விலை மட்டுக்குள் வைக்கப்பட்டு எளிய வெகுமக்கள் வாங்கும் அளவிலேயே வைக்கப்பட்டு வந்தது.
ஆனால் ஏழை, எளிய வெகுமக்களான உழைக்கும் மக்களின் வாழ்வைப் பற்றிக் கிஞ்சித்தும் எண்ணாமல், தற்போதைய இந்திய ஒன்றிய பா.ச.க. அரசு கண்மண் தெரியாமல் - மனம் போன போக்கில் டீசல் விற்பனை வரியை விதித்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சியைக் கணக்கில் கொள்ளாமல், டீசல் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.20-30க்குள் வைத்திட வேண்டிய சூழலில் ரூ.85 அளவுக்கு எடுத்துச்சென்று நாங்கள் ரூ.நூறை எட்டுவோம் (Century) என்ற இலக்கு வைத்துக் கொண்டு செயல்படுவதாகத்தான் அறிய முடிகின்றது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திடுவதற் காகத்தான் என்பதுதான்.
நாட்டின் பொருளாதாரம் மந்தமாகி, வரிவருவாய் கிடுகிடு என குறைந்துள்ள நிலையில், நிதிப் பற்றாக் குறையை ஈடுகட்ட 100 கோடிக்கும் அதிகமான மக்களின்மீது கொடும் வரி விதித்து வாட்டி வதைத்து வருகின்றது, இந்த பா.ச.க. அரசு. ஆனால் இந்த இழி நிலையை உருவாக்கிய அரசு, நாட்டிலுள்ள 100 பெருநிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் வைப்புத் தொகையிலிருந்து நெறிமுறைகளையெல்லாம் புறக்கணித்து ரூ.1.76 இலக்கம் கோடி அளித்து அவர்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகக் கொடுத்தது எனச் சொல்கிறது.
இதேபோன்று பெருநிறுவன வரி (Corporate Tax) அளவைக் குறைத்து அவர்களுக்கு ரூ.1.45 இலக்கம் கோடி அளவுக்கு வரிச் சலுகை அளித்துவிட்டது. இந்த இரு செயல்களின் வழியாகப் பெருநிறுவனங்கள் ஊக்கம் பெற்று உற்பத்தியைப் பெருக்குவதற்கு வழியே இல்லை என அறிந்து கொண்டே இலாப அளவு குறையாமல் ஒன்றிய அரசு அவர்களைப் பாதுகாத்துக் கொண்டதுதான் உண்மை.
இவ்வாறெல்லாம் பல பெருநிறுவனங்களின் நலன் களைக் காத்திட ஊதாரித்தனமாகப் பல இலக்கம் கோடி ரூபாய்களை எந்த வரன்முறையுமின்றி அவற்றுக்குக் கொட்டிக் கொடுத்துக் கொண்டு வருவதில், இந்திய அரசுக்கு உள்நோக்கம் இல்லாமலிருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
ஆனால் அதேநேரத்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட ஏழை, எளிய உழைக்கும் வெகுமக்களின் அடிப்படைத் தேவையான பொருள்களின் விலை அதிகமாகும் வகையில் மறைமுகமாகக் கடுமையான வரியை டீசல் விற்பனையில் விதித்து பல இலக்கம் கோடி ரூபாய்களை அவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது போல், பறித்து வருகின்ற இந்த ஒன்றிய பா.ச.க. அரசின் மக்கள் பற்றற்றப் போக்கு வெளிப்படையாகத் தெரிகின்றது.
டீசல் விலை ஏற்றம், டீசல் மீதான வரி விதிப்பு இவை இரண்டும் சேர்த்து டீசல் விற்பனை விலையைத் தீர்மானிக்கிறது. இந்த விற்பனை விலை தொடர் சங்கிலி போல் எல்லாப் பொருள்களின் விற்பனை விலையை அதிகரிப்பதாக அமைகின்றது. டீசல் விற்பனை விலை அதிகரிக்கும் போது, டீசலை நாடு முழுவதற்கும் சரக்கு உந்துகள் மூலமும், சரக்குத் தொடர்வண்டிகள் மூலமும் எடுத்துச் செல்வதற்கு டன்னுக்கு விதிக்கப்படும் கட்டணம் முதல் நிலையில் உயர்த்தப்படுகின்றது.
இக்கட்டணம் உயர்த்தப்படும்போது, எடுத்துச் செல்லப்படும் டீசல் பொது விற்பனைக்கு வருவதற்கு முன்ன தாகவே முதல் விலை ஏற்றம் ஏற்படுகின்றது. அதையும் சேர்த்துத்தான் டீசலின் பொது விற்பனை விலை அமைகின்றது. டீசல் பொது விற்பனை நிலையங்களிலிருந்து அதுவே பல்வேறு பயன்பாடுகளுக்கும், பிற பொருள்கள் உற்பத்திச் செய்வதற்கும் பயன்படுத்துவதில் அப்பொருள்களின் மூலப்பொருள்கள், உழைப்பு, மின்சாரம் போன்ற செலவினங்களுடன்-இந்த டீசல் மீதான விரி விதிப்பினால் ஏற்படும் செலவினமும் அப்பொருள்களின் அடக்க விலையும் அதன் மீதான இலாபமும் சேர்த்துத்தான் விற்பனை விலை அதிகமாகி விடுகின்றது.
இதேபோன்று உணவுப் பொருள்கள் டீசலில் இயங்கும் சரக்கு உந்துகளும், சரக்குத் தொடர் வண்டிகளிலும் எடுத்துச் செல்வதற்கு டீசல் விற்பனை விலை அதிகமானதை அடுத்து அப்பொருள்களின் டன்னுக்கான கட்டணமும் உயரும். அப்போது பொருள்களின் உற்பத்தி விலையுடன் உயர்த்தப்பட்ட கட்டணமும் சேர்த்து மொத்த விற்பனை செய்பவரின் இலாபமும் சேர்த்து விற்பனை விலை கணக்கிடப்பட்டு விற்கப்படும்.
பின் சில்லறை விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்கும் டீசலின் விலையேற்றம் அந்த நிலையிலும் கட்டண உயர்வுக்குக் காரணமாகிப் பொது மக்களுக்குக் கிடைக்கும் போது பொருள்களின் விற்பனை விலை இன்னும் அதிகமாகிவிடும். இவ்வாறு பன்னிலைகளில் பலவாறான விலையேற்றம் உணவுப் பொருள்களின் விற்பனை விலை அதிகரிக்கக் காரணமாகி, எளிய மக்கள் தலையில்தான் வந்துவிடியும். இது உணவுப் பொருளின்றி, வேறு பொருள்களைப் பொறுத்தவரை ஒரு தடவையுடன் முடிவடைவதாக அமையும்.
ஆனால் அரிசி, பருப்பு, காய்கறிகள், பால் போன்றவை அன்றாட அடிப்படைத் தேவைகளாதலால் அன்றாடம் கடும் வரிச்சுமையின் பாதிப்பு, தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இது ஏழை, எளிய, உழைக்கும் மக்களான பல கோடி மக்களின் நாள் கூலியைக் கரையான் போன்று அவர்கள் உணராமலே அரித்து விடுவதால் வறியவர்களாகி வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவர்.
இவ்வாறெல்லாம் எளிய மக்கள் இன்னலுறுவர் என்பதை மனங்கொண்டு, டீசல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டு வந்தது. 1980-களில் டீசல் விலை பெட்ரோல் விலையில் 5-இல் ஒரு பங்கு அளவில்தான் இருந்து வந்தது. சென்ற பத்தாண்டுகளுக்கு முன்னதாகக் கூட ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் பா.ச.க. ஒன்றிய அரசு பெருநிறு வனங்கள், பெரும் முதலாளிகளின் நலமும் இலாபமும் குறையாது பாதுகாத்துக் கொண்டு அவர்களிடமிருந்து நேரடி வரி வருவாயான வருமான வரியை விதிப்பதில் பல சலுகைகளைக் கொடுத்து, அந்த இழப்பையெல் லாம் ஈடுகட்ட வெகுமக்கள் மீது டீசல் மீதான வரி போன்று மறைமுக வரிகளை விதித்து அவர்களை முற்றிலுமாகச் சுரண்டி வருகின்றது.
இந்தப் பார்ப்பன சனாதன பா.ச.க. ஒன்றிய அரசு ஏழை, எளிய, வெகுமக்களான உழைப்பாளி, பாட்டாளி மக்களை பல்வேறு வழிகளில் சுரண்டிக் கொழுத்துக் கொண்டு வருவதைப் பொதுவுடைமைக் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்ட இடதுசாரிகளாகிய நாம் எதிர் கொண்டு, வருகின்ற நிலையில் டீசல் மீது கடும் வரிவிதித்து அதன் விற்பனை விலையை விண்ணை எட்டும் அளவுக்கு பெட்ரோல் விலைக்கு ஒப்ப ரூ.80-க்கும் மேலாக உயர்த்தியுள்ளதை மேலும் உயர்த்த விடாமல் தடுத்து நிறுத்த வேண்டியதுடன், மிகப்பெரும் அளவில் எதிர்வினையாக கீழ்க்காணும் பொருள்களை முன்னிறுத்தி வலுவான போராட்டங்கள் நடத்திட வேண்டும்.
* டீசல் விற்பனை விலையேற்றத்தை எதிர்த்து மட்டும் தனியாகப் போராட வேண்டும்.
* டீசல் விற்பனை விலையை மேலும் உயர்த்திட முனையக் கூடாது என அரசுக்கு நெருக்கடி தர வேண்டும்.
* டீசல் மீது விற்பனை வரி விதிப்பதை உடனடியாக நிறுத்த வழி செய்ய வேண்டும்.
* பெட்ரோல் விற்பனை விலையேற்றத்தைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும், டீசல் விலை யேற்றத்துடன் இணைத்துக் கொள்வது, டீசல் விற்பனை விலையேற்றத்தின் கொடும் விளைவுகளை பின்னுக்குத் தள்ளுவதாக அமைத்துவிடுகின்றதோ என எண்ணத் தோன்றுகிறது.
* ஒரு காலவரையறைக்குள், டீசலை decontrolled priced commodity - யிலிருந்து controlled priced commodity என்று மாற்றப்பட வேண்டும்.
* டீசல் உற்பத்தி அடக்க விலையைக் கட்டுக்குள் வைத்திட வேண்டும்.
* டீசலுக்கு மானியம் அளித்து டீசலின் விற்பனை வரியை படிப்படியாகக் குறைத்திட வேண்டும்.
* உணவுப் பொருள்கள், பால், மருந்து போன்ற வற்றினை எடுத்துச் செல்லும் சரக்கு உந்துகளுக்கு, சரக்குத் தொடர் வண்டிகளுக்குத் தேவையான டீசல் விலையைப் பெருமளவுக்குக் குறைக்க வேண்டும்.
உண்மையில் நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கு முதன்மையான காரணமாக டீசல் விற்பனை விலையேற்றம் என்பதால், அந்தப் பின்னணியில் இந்தச் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும்.
- இரா.பச்சமலை