தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்விக் கொள்கையானது, 1986 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசால் வெளியிடப்பட்டது.
இக்கல்விக் கொள்கையானது மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம் (DPEP), அனைவருக்கும் கல்வி (SSA), கல்விக்கான உாிமை (RTE), தேசியப் பெண்களுக்கான தொடக்கக் கல்வித் திட்டம் (NPEGEL), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி (RMSA), மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த இடைநிலைக் கல்வி (IEDSS IEDSS),முதியோா் கல்வி, அனைவருக்கும் மேனிலைக் கல்வி (RUSA) குறிப்பாகப் பெண்கள், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட கல்வி வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கி நடைமுறைப் படுத்தப்பட்டது.
அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு தாராளமய கொள்கைக்கேற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
ஆனால் தற்போது பதவியேற்றுள்ள மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, சமூக நீதியையும் மாநில சுயாட்சியையும் முற்றிலுமாகப் புறந்தள்ளி தம்முடைய இந்துத்துவா கொள்கைக்கு ஏற்ப ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க முயற்சித்து வருகிறது.
கடந்த முறை கார்ப்பரேட்டுகளின் விருப்பத்திற்கேற்ற கல்வித் திட்டத்தை வடிவமைக்க ஸ்மிருதி இரானியும் பிரகாஷ் ஜவடேகரும் தேவைப்பட்டார்கள். இம்முறை சங்பரிவாரங்கள் விரும்பும் கல்வித் திட்டத்தை செயல்படுத்தவே மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக்கப்பட்டுள்ளார் ரமேஷ் பொக்ரியால்.
மாணவப் பருவத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான ரமேஷ் பொக்ரியால், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்தி வரும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். மேலும் 1991 முதல் 2000 வரை உத்திரப் பிரதேச எம்எல்ஏ-வாகவும், 1997 ஆம் ஆண்டு முதல் கல்யாண் சிங் அமைச்சரவையிலும் அதன் பின்னர் உத்தரகாண்ட் உருவாக்கப்பட்ட பின்னர் 12 துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர். 2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை உத்தரகாண்ட் முதலமைச்சராகவும் இருந்தவர். இவரின் படிப்படியான அரசியல் வளர்ச்சிக்குக் காரணமே ஆர்எஸ்எஸ் சொல்வதை இவர் அப்படியே செய்து முடிப்பவர் என்பதால் தான்.
இந்துத்துவ பின்புலம் கொண்ட ஹரித்வார் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு முதல் எம்பியாக உள்ள இவரைத்தான் மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சராக்கியுள்ளது ஆர்எஸ்எஸ்.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த பொக்ரியால் "விரைவில் நாடு முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஒரு புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்" என்றார்.
அதற்கு மறுநாளே வெளியிடப்பட்ட 477 பக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை உள்ளடக்கியது என்பதால் தானோ என்னவோ கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தனது பரிந்துரையை மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் சமர்ப்பிக்கும் முன்னரே ஆர்எஸ்எஸ் தலைவரிடம் கொடுத்துள்ளது.
இதில் தமிழகத்தை எதிர்நோக்கியுள்ள பேராபத்துகள் சில :
1.இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியைப் பயிற்றுவிக்க வேண்டும். இந்நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் இரு மொழிக் கொள்கைக்கு மாறான மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தியைத் திணிப்பது மட்டுமின்றி அதன் வேரான சமஸ்கிருதத்தையும் ஏற்க வைப்பது.
- பல்கலை மானியக் குழு போன்ற கல்வித் துறை சார்ந்த உயர் அமைப்புகளைக் கலைத்துவிட்டு, தேசியக் கல்வி ஆணையத்தை அமைக்க வேண்டும். தேசியக் கல்வி ஆணையத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, தமிழகக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையிலும் ஆசிரியர் பணி நியமனத்திலும் வடவர்களை உட்புகுத்துவது
- ஆசிரியர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பயிற்சியும், ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தேர்வும் வைக்க வேண்டும். அதன்படியே, ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். தகுதித் தேர்வு என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை வகுப்பினரை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்விலிருந்து விலக்கி வைத்து ஒரு சாராரை உயர் பதவியில் அமர்த்துவது.
- கல்வி நிலையங்களில் தமது சமயத்தைக் கற்க மற்றும் பின்பற்ற மாணவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும்.
இதன் மூலம் சித்தாந்த ரீதியாக பாஜகவை வளர்க்க யோகா வகுப்புகள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ்சின் சாகா வகுப்புகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொடங்குவது, அதன் மூலம் மாணவர்களையும் இளைஞர்களையும் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு மடை மாற்றுவது.
இவை மட்டுமன்றி பெரும்பாலான செயல் திட்டங்களும் பாசிசத்தை மண்ணிலே விதைக்கிற முயற்சியாகவே தெரிகிறது. இவர்களின் திட்டம் பாரதியின் முண்டாசுக்கு மட்டுமல்ல கரும்பலகைக்கும் காவியடித்து முற்றிலுமாக கல்விக் கூடங்களைக் காவிக் கூடாரங்களாக மாற்றுவதே.
ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழிச்சாலை என நம் இயற்கை வளத்தை வேட்டையாடுவது மட்டுமின்றி இப்போது தகுதித் தேர்வு, அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர், புதிய கல்விக் கொள்கை என நம் மனித வளத்தையும் அழிக்கத் துடிக்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல்.
திராவிட இயக்கங்கள் போராடிப் பெற்றுத் தந்த கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அங்கீகாரம் இவற்றை முழுவதுமாக விழுங்க வரும் ஆரிய நச்சுப் பாம்பை அடித்து விரட்ட பெரியார் தடியைக் கையிலெடுப்போம்.
"உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா ".