21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கான துடிப்பான அறிவுச் சமூகத்தை உருவாக்க உதவும் வகையில் இந்தியாவை மையப்படுத்திய கல்விக் கொள்கையை வகுப்பதைத் தனது வழிகாட்டு நெறியாகக் குறிப்பிடுகிறது. ஆனால், சாதிய அடிப்படையில் பெரும்பான்மையான மக்களுக்கு கல்வி மறுத்திட்ட பண்டைய இந்தியக் கல்வி முறையை சிறந்த பாரம்பரியம் கொண்டிருந்ததாக அறிக்கை சிலாகிக்கிறது. வேத காலத்திலேயே, இந்தியர்கள் ஆயகலைகள் அனைத்திலும் சிறந்திருந்ததாகவும், கணிதம், வானவியல், உலோகவியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் உலகிற்கே வழிகாட்டுபவர்களாக இருந்ததாகக் கூறுகிறது. எண் கணிதத்தில் இலட்சம், கோடிக்கு அடுத்ததாக பல அளவீடுகள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மத ரீதியான புரோகிதத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சமஸ்கிருத மொழி யினையும் அதன் மூலம் சமஸ்கிருத இலக்கியங் களைப் படித்து இந்தியக் கலாச்சாரத்தினையும் பண்பாடு மற்றும் மதிப்பீடுகளை இந்திய இளைஞர்கள் பெற வேண்டுமென அறிக்கை கூறுகிறது. இத்தகைய பரிந்துரை மாணவ - மாணவியர் மத்தியில் அறிவியல் கண்ணோட்டத்தினை ஏற்படுத்த உதவாது. மாறாக பிற்போக்கான மனோநிலைக்குத்தான் இளைஞர்களைத் தள்ளும்.

இனி, குழந்தைகள் பள்ளிக்கல்வியில் நான்கு கட்டத்தேர்வுகளை எழுத வேண்டும். 8ஆம் வகுப்பு முடித்த மாணவ/ மாணவியர் தான் விரும்பும் ஏதாவது ஒரு தொழிற்கல்வியைத் தேர்வு செய்துபடிக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட் டுள்ளது. இதனால், பெரும்பான்மையான ஏழை, எளிய மாணவ/மாணவியர் பொதுக்கல்வி பெறும் வாய்ப்பினை இழக்க நேரிடும்.

திருவாளர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்ற 30.05.2019 அன்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், புதிய கல்விக் கொள்கை தொடர்பான கஸ்தூரி ரங்கன் குழுவின் வரைவறிக்கையினை வெளியிட்டு அதன் மீது கருத்து சொல்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் அளித்துள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு தனது அறிக்கையினைக் கடந்த ஆண்டு இறுதியில் (15.12.2018) மத்திய அரசிற்கு அளித்திட்ட போதிலும், அதனை உடனே வெளியிட்டு கருத்துக் கேட்பதற்குப் பதிலாக மத்திய அரசு ஆறு மாதங்கள் ஏன் தாமதப்படுத்தியது என்பது விளங்கவில்லை. 478 பக்கங்கள் கொண்ட அந்த வரைவு அறிக்கை பள்ளிக்கல்வி, உயர்கல்வி, கூடுதல் முக்கியத்துவம் உடைய பகுதிகள் மற்றும் கல்வி முறையில் மாற்றம் என நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற பல மொழி பேசும் மக்கள் உள்ள நாட்டில், தேசிய முக்கியத்துவம் உடைய கல்விக் கொள்கை உருவாக்கும் போது, அனைத்துப் பகுதி மக்களின் கருத்தும் பங்கேற்பும் அவசியம். இந்த அறிக்கை மீது நாடு முழுவதும் ஒரு பரந்த விவாதம் நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்த அறிக்கையை அனைத்து மாநில மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட் டிருக்க வேண்டும். ஆனால், அறிக்கை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் வெளியிடப்பட் டுள்ளது. அனைத்து மாநில மொழிகளிலும் இதனை மொழி பெயர்த்து வெளியிடுவதோடு, அதன் மீது விவாதிக்க போதுமான கால அவகாசம் அளித்திட வேண்டுமென கல்வி யாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே இந்தக் கல்விக் கொள்கை மீது அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து வரை வறிக்கையினை செழுமைப்படுத்திட முடியும்.

புதிய கல்விக்கொள்கை தொடர்பான இவ்வறிக்கை கொள்கை அறிக்கையாக இல்லாமல் ஒரு ‘பிரச்சார முழக்கம்’ போல் இருப்பதாக பல கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். இவ்வறிக்கை யில், சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக எடுத்திட்ட முயற்சிகள் பற்றிய பரிசீலனை ஏதும் இல்லை. இதற்கு முன்னர் வந்த கல்வி தொடர்பான அனைத்துக் குழு அறிக்கைகளிலும், பிரபலமான கல்விக் குழுக்களான பேரா.இராதாகிருஷ்ணன் குழு மற்றும் கோத்தாரி குழுக்கள் பரிந்துரைத்த பல விசயங்கள் (கல்விக்கு 6ரூ நிதி ஒதுக்கீடு; தாய்மொழி வழிக்கல்வி / பொது நிதியில் கல்வி/ அருகமைப்பள்ளி) இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த அறிக்கையில் இவை ஏதும் இடம் பெற வில்லை. பண்டைய இந்தியக் கல்வி முறையையும் பாஸ்கரா, சுஷ்ருதா, ஆரியபட்டா போன்ற அறிஞர்களைப் பற்றி சிலாகித்துப் பேசும் இவ்வறிக்கை, அதிலிருந்து நேரடியாக கல்வி நவீன தாராளமயம் அமலாகத் துவங்கிய 1990 கால கட்டத்திற்குத் தாவி விடுகிறது. 1947-1970 கால கட்டத்தில், இந்தியாவில் கல்வி வளர்ச்சி எண்ணிக்கை அடிப்படையிலும் தரத்தின் அடிப் படையிலும் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியைப் பெற்றது. அதற்கு அடிப்படைக் காரணம் அரசு நிதியில் வழங்கப்பட்ட பொதுக்கல்வியாக இருந்தது. 1970களுக்குப் பிறகு கல்வி பெறுவோர் அதிகரித்த நிலையில், கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்குப் பதிலாக தொடர்ந்து வந்த அரசுகள் தனியார்மயத்தினை ஊக்குவித்தது. அது இன்று முழுமையாக வணிகமயமாகி யுள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கினை இந்த வரை வறிக்கை முற்றிலுமாக தவிர்த்துவிட்டது. இந்தியக் கல்வியை கார்ப்பரேட் மயமாக்கிடப் பரிந்துரைக்கும் இந்த வரைவறிக்கையில், அரசு நிதியில் கல்வியைப் பரிந்துரைத்த இராதா கிருஷ்ணன் மற்றும் கோத்தாரி குழு அறிக்கைகள் பற்றி குறிப்பிடுவது பொருத்தமாக இருக்காது என்று விட்டுவிட்டார்கள் போல.

பள்ளிக்கல்வியும் தொழிற்கல்வியும்

பள்ளிக்கல்வி தொடர்பான இந்த அறிக்கை, கோத்தாரி குழு பரிந்துரைத்து கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள 10+2 கல்வி முறையை 5+3+3+4 என மாற்றி அமைத்துள்ளது. கல்வி பெறும் வயது ஐந்திலிருந்து மூன்றாகக் குறைக்கப்பட்டு முன்பருவப் பள்ளி மூன்று வயதில் துவங்குகிறது. எல்.கே.ஜி/யு.கே.ஜி எனும் பாலர் பள்ளிகள் நடைமுறையில் இருந்தாலும், குழந்தைக்கல்வி தொடர்பான ஆய்வாளர்கள் அதனை எதிர்த்தே வருகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்குகின்ற பின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகளில், குழந்தை களுக்கான கல்வி 6 வயதில் தான் துவங்குகிறது என குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் முன்பருவப் பள்ளி என்பது அதிகம் வணிக மயமாகியுள்ள நிலையில், முன்பருவப் பள்ளிக்கல்வியின் தேவை குறித்த விவாதம் அவசியமாகிறது. இனி, குழந்தைகள் பள்ளிக்கல்வியில் நான்கு கட்டத் தேர்வுகளை எழுத வேண்டும். 8ஆம் வகுப்பு முடித்த மாணவ/ மாணவியர் தான் விரும்பும் ஏதாவது ஒரு தொழிற்கல்வியைத் தேர்வு செய்து படிக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பான்மையான ஏழை, எளிய மாணவ/மாணவியர் பொதுக்கல்வி பெறும் வாய்ப்பினை இழக்க நேரிடும். தொழிற்கல்வி தொடர்பாக அரசின் முந்தைய முன்னெடுப் புக்கள் (தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் சமுதாயக் கல்லூரிகள்) என்னவாயின என்பதை யும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பள்ளிக் கல்வி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பள்ளி வளாகங்கள்

ஒரு ஊர்/கிராமம்/சிறு நகரம் என ஒரு பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்கிய பள்ளி வளாகம் உருவாக்கப்படும் என அறிக்கை கூறுகிறது. அப்பள்ளி வளாகம் கட்டிடம், நூலகம், கழிப்பறை, குடிநீர் வசதி, ஆய்வுக்கூடம், தனித்திறன் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் என அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் ஆசிரியர்களையும் பள்ளிக்கட்டமைப்பு வசதி களையும் அதிகபட்சம் பகிர்ந்து பயன்படுத்தலாம் என அறிக்கை கூறுகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணிசமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்கள் தகுதியுடைய வர்களாக இல்லை. அனைத்துப் பள்ளிகளுக்கும் தகுதியுடைய ஆசிரியர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளைக் கேட்டால், பள்ளிகளை ஒருங் கிணைக்கும் பள்ளி வளாகம் யோசனையை வரை வறிக்கை முன் வைக்கிறது. மேலும் இதற்கான நிதி ஒதுக்கீடு பற்றி அறிக்கையில் ஏதும் இல்லை. அந்தப் பகுதியில் உள்ள பள்ளி வளாக நிர்வாகக் குழு இதற்கான நிதியினை திரட்டும் என அறிக்கை கூறுகிறது. இது நடைமுறை சாத்தியமற்றது. பெற்றோர் ஆசிரியர் அமைப்புகள் என்ற பெயரில் உள்ளூர் அரசியல்வாதி பள்ளி நிர்வாகத்தில் தலையிடு வதையும், பள்ளி வளர்ச்சி நிதி என்ற பெயரில் பெற்றோரிடம் (கட்டாய) கட்டண வசூல் செய்வதையும் நடைமுறையில் பார்க் கிறோம். அனைத்துப் பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதோடு, பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பினை மேம்படுத்திட மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்வதே இதற்குத் தீர்வு. அதன் மூலம் மட்டுமே தரமான கல்வியை உத்தரவாதப்படுத்த முடியும்.

 தாய்மொழி வழிக் கல்வி

இந்த அறிக்கை எட்டு வயதிற்குள்ளான குழந்தை களுக்கு தாய் மொழி தவிர மூன்று மொழிகளைக் கற்றுத் தரப் பரிந்துரைக்கிறது. குழந்தைகள் தாய் மொழியுடன் ஆங்கிலம் கற்கவே சிரமப்படும் நிலையில், கூடுதலாக மூன்று மொழிகள் ஏக காலத்தில் கற்றுக் கொடுப்ப தென்பது கடினமானதும் நடைமுறை சாத்திய மில்லாததாகும். பல நாடுகளில், பள்ளிக்கல்வி முழுவதும் தாய் மொழி மட்டுமே. மேலும், அனைத்துப் பாடங்களும் தாய்மொழி வழியே பயிற்றுவிக்கப்படுகிறது. அது அறிவியல் பூர்வ மானதும் கூட. நம் நாட்டில் தான் இனியும் பயிற்றுமொழி ஆங்கிலமா? தமிழா? என்ற விவாதம் நடைபெறுகிறது. கோத்தாரி குழு உள்ளிட்ட பல்வேறு கல்விக் குழுக்கள் தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தியுள்ளன. ஆச்சர்யம் என்னவென்றால், இந்த வரைவறிக்கை யில் பயிற்றுமொழி பற்றி ஏதும் குறிப்பிடப் படவில்லை.

 உயர்கல்வியில் தலை கீழ் மாற்றம்

இந்த வரைவறிக்கை உயர்கல்வித்துறையில் பெரும் விளைவை ஏற்படுத்தும் மாற்றங்களை முன் மொழிந்துள்ளது. உயர்கல்வியில் பல பிரிவுகளாக உள்ள பொதுக் கல்வி, மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் தொழில் நுட்பம், கல்வியியல் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளும் இனி ஒருங்கிணைக்கப்படவுள்ளது. ஏற்கனவே இதனை நிர்வகித்து வந்த மருத்துவக் கவுன்சில், பார் கவுன்சில், யு.ஜி.சி போன்றவை இனி அந்தந்த துறைகளில் கல்வித் தரத்தினை உத்தரவாதப் படுத்தும் வேலையை மட்டும் செய்யும். உயர்கல்வி முழுமையையும் பிரதம மந்திரி தலை மையில் ராஷ்ட்ரிய ஷிக்ஷா ஆயோக் என்ற 20 பேர் கொண்ட அமைப்பு நிர்வகிக்கும். உயர்கல்வி முழுவதையும் ஒரு குடையின் கீழ் மையப்படுத்தும் முயற்சியாகும் இது. மேலும், இனி எந்த ஒரு உயர்கல்விப் படிப்பில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்படுத்தவுள்ள தேசிய தேர்வு முகமை இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்தும். அனைத்துக் கல்லூரி களுக்கும் தன்னாட்சி வழங்கப்படும். பல்கலைக்கழக இணைவு முறை இனி கிடையாது. அந்தந்தக் கல்லூரிகளே பட்டங்களை வழங்கலாம். கல்லூரிகள் கல்விக் கட்ட ணங்களை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஒரே கல்வி நிறுவன வளாகத்தில் அனைத்துப்பிரிவு உயர் கல்வி படிப்புகளையும் வழங்கலாம். இத்தகைய பரிந்துரைகள் மூலம், உயர்கல்வியை முழுவதுமாக கார்ப்பரேட் மயமாக்கிட ஏதுவாகும். அடுத்த தாக, இந்திய உயர்கல்வியை சர்வதேச உயர்கல்விச் சந்தை யோடு இணைத்திடும் பரிந்துரை ஒன்றையும் இந்த வரை வறிக்கை கூறியுள்ளது. இனி அனைத்து இளநிலைப் பட்டப்படிப்புகளும் ஒரே மாதிரி நான்கு ஆண்டுகள் கொண்டதாக இருக்கும். மேலை நாடுகளில், இளநிலை பட்டப்படிப்பு என்பது 4 ஆண்டுகள். இந்திய உயர்கல்வியை உயர்கல்வி உலகச் சந்தையுடன் இணைப்பதற்கான பரிந்துரை இது. இந்திய மாணவர்கள் பட்டப்படிப்பினை முடிக்க கூடுதல் ஒரு ஆண்டு படிக்க வேண்டும். அவர்களுக்கு இரட்டைப்பட்டம் வழங்கப்படும்.

 மாநில அரசுகளின் உரிமைப் பறிப்பு

இந்திய அரசியல் சாசனப் பிரிவுகளின் படி, கல்வி மத்திய மற்றும் மாநில அரசுகள் பரஸ்பரம் இணைந்து செய லாற்ற வேண்டிய துறையாகும். ஆனால் இந்த அறிக்கையில் உள்ள பல அம்சங்கள் கல்வியை மையப்படுத்தும் போக்கிலேயே உள்ளது. இந்த அறிக்கையை எழுதியவர்கள் அதனை கருத்துக் கேட்பதற்காக பிராந்திய மொழிகளில் வெளியிட வேண்டு மென்று கூட யோசிக்கவில்லை. ஹிந்தி பேசாத மாநி லங்களில் நடைமுறையிலுள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக்கொள்கையை திணித்திட முயற்சி நடக்கிறது. தமிழகத்திலுள்ள பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களை தமிழக அரசு நிறுவி நடத்தி வருகிறது. உயர்கல்வி தொடர்பாக முடிவுகளை மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் நீட் தேர்வு. கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த வரைவறிக்கை மையப்படுத்துதல் என்ற எதிர்த்திசையில் பயணிக்கிறது.

காலாவதியாகும் சமூக நீதிக் கோட்பாடு

இந்த வரைவறிக்கையில், மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் சமூக நீதியைக் காத்திடும் வகையில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இட ஒதுக்கீடு இல்லை யென்றால், பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப் பட்ட மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பிடிப்பது இயலாததாகிவிடும். மேலும் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் கட்டாயமாதலால், பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது மேலும் பாதிக்கும். அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டண நிர்ணயத்தில் தலையிடாது. இதன் காரணமாகவும் பலர் தரமான உயர்கல்வி படிப்பினைப் பெற முடியாத நிலை ஏற்படும். கல்வி நிறுவனங்கள் தாங்கள் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தி லொரு பகுதியை ஏழை எளிய மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை கொடுத்திட அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும், அது பெரும் விளைவு ஏதும் ஏற்படுத்தாது என்பதை எல்லோரும் அறிவர். தேசியக் கல்விக் கொள்கை - 2019 வரைவறிக்கை ஒரு கொள்கை அறிக்கையே அல்ல. கொள்கை அறிக்கை என்பது சுருங்கச் சொல்லிப் புரிய வைப்பது. 20 -30 பக்கங்களில் சொல்ல வேண்டிய கொள்கை அறிக்கையை 476 பக்கங் களில் சொல்லியதன் மூலம் ஆட்சியாளர்கள் மக்களைக் குழப்பியிருக்கிறார்கள். பழைமை வாதக் கருத்தாக்கங்கள், ஆதாரமில்லாத செய்திகள், தவறான வாதங்கள், நிரூபிக்கப்படாத தகவல்கள் போன்றவற்றோடு கல்வியைக் கார்ப்பரேட் மயமாக்குவதற்கான வழிமுறைகளை யும் இந்த வரைவறிக்கை முன்மொழிகிறது. இந்த அறிக்கையின் பல அம்சங்கள் இந்திய அரசின் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களான ஜனநாயகம், சமத்துவம், அறிவியல் கண்ணோட்டம் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதிக்கும் பரிந்துரைகளைக் கொண்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் மீதும் அதன் விழு மியங்கள் மீதும் பற்றுக் கொண்டுள்ள அனைத்துப் பகுதி மக்களும் ஒருமித்து இதனை எதிர்த்து வலுவான குரல் எழுப்பிட வேண்டும்.

(கட்டுரையாளர் : தேசியச் செயலாளர், அய்பெக்டோ)

Pin It