திருவண்ணாமலை மாவட்டம் பெரிய கோளாப்பாடி அரசு மேநிலைப் பள்ளியிலிருந்து, 2006 ஜூனில் பொது மாறுதல் பெற்று அதே மாவட்டம் மெய்யூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்குப் பட்டதாரித் தமிழாசிரியராகப் பணி ஏற்கச் சென்றேன்.

ko jeyavelதலைமையாசிரியர் அறையில் அவருக்குரிய நல்ல நாற்காலியைச் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு வலப்பக்கம் கைத்தாங்கி உடைந்திருந்த ஒரு மர நாற்காலியில் அமர்ந்திருந்தவரிடம் தலையமையாசிரியர் வரலீங்களா? என்று கேட்டேன். நான்தான் தலைமையாசிரியர், என்ன வேலையா வந்தீங்க? சொல்லுங்க என்றார்.

கோளாப்பாடி பல்ளியிலிருந்து இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கேன் என்றேன்.

அப்படியா, ‘ஜாய்னிங் ரிப்போர்ட்’ எழுதிக் கொடுங்க என்றார். எழுதிக் கொடுத்தேன்.

படித்துப் பார்த்துவிட்டுச் சட்டைப் பையிலிருந்து பச்சை மைப் பேனாவை எடுத்தார். ஒரு இடத்தில் ஒற்றுப்பிழை இருந்தது. அதைத் திருத்தினார். என்னை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. சாட்டையால் அடித்தது போலிருந்தது எனக்கு. எழுதி அப்படியே நீட்டி விட்டேன். இன்னொரு முறை படித்துப் பார்த்துவிட்டுக் கொடுத்திருந்தால் அந்தப் பிழையை நானே திருத்தியிருப்பேன். அவருடைய எண்ணம் எனக்குப் புரிந்தது. பிழையில்லாமல் எழுதத் தெரியல. நீயெல்லாம் ஒரு தமிழ் வாத்தியாரா? என்கிற தொனி அது. அதனால்தான் என்னை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. சராசரியாகச் சம்பளம் வாங்கித் தின்னும் ஒருவன் என முடிவு செய்து விட்டார்.

சேர்வதற்கான நடைமுறைகள் முடிந்து, அதே பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் கேட்டேன். அவர் ஏன் தலை மையாசிரியருக்குரிய நாற்காலியில் உட்காராமல் உடைந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்?. அவர் இயல்பில் எளிமையானவர். பந்தா பிடிக்காது. அனாவசியமாகப் பேச மாட்டார். மேலும் பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார மாட்டார். மர நாற்காலியில்தான் உட்காருவார். இன்னும் ஒரு ஆண்டுதான் அவருக்குப் பணிக்காலம் என்ற பதில்வந்தது.

நாலுநாள் கழித்து பத்தாம்வகுப்பு மாணவர்களை அழைத்து, புதுசா வந்திருக்கிற தமிழ் வாத்தியார் எப்படிப் பாடம் நடத்துகிறார்? என்று கேட்டிருக்கிறார். மிகவும் நன்றாக பாடம் நடத்துறார் அய்யா. அதுமட்டுமில்ல. எங்களுக்குத் தேவையான எல்லா பேனா, பென்சில், ஏடுகள் அனைத்தையும் வாங்கி வந்து கொடுத்துவிட்டார். யாருகிட்டயும் காசும் வாங்கல. அதே நேரத்துல செம ஸ்டிக்ட்டு. சொன்ன பாட வேலைகளைச் செய்யலேன்னு வைங்க... உதைக்கும் பஞ்சமே கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படிச் சொன்ன பிறகுதான் என் ஒற்றுப் பிழையே சரியாகியிருக்கிறது. என்மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பிறகு கொஞ்சம் முகம் கொடுத்துப் பேசலானார். அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரின் தந்தை சிந்தனையாளன் இதழின் சந்தாதாரர் போல இருக்கிறது. எனவே நான்தான் வையவன் என்பதும் அதில்நான் கவிதை எழுதுகிறேன் என்பதும் சிலருக்குத் தெரிய வந்தது. ஒரு முறை அனைவர்க்கும் ரெவின்யூ ஸ்டாம்ப் என்ற கவிதையை நான் அதில் எழுதியிருந்தேன். பொதுவாக ஆசிரியர்கள் வேலையைச் சரியாகச் செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம் மட்டும் அனைவர்க்கும் ஒன்றுதான் என்கிற கருத்துடைய நக்கலான கவிதை அது. பாருங்கள் இவரும் ஆசிரியராக இருந்துகொண்டே எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று அதைக் கொண்டுபோய் தலைமையாசிரியரிடம் காட்டியிருக்கிறார்கள்.

‘இது யார் எழுதிய கவிதை?’

“நம்ம தமிழாசிரியர்தான்”

“அவன்பேர் லோகநாதன்தானே?”

“ஆமாம் அய்யா... அவருடைய புனைப்பெயர் வையவன்”

சரி, நம்மகிட்ட லோகநாதன்தான் வேல செய்யறாரு. இதுகுறித்து நம்ம வையவன்கிட்ட பேச முடியாது. பள்ளிக்கூடத்தப் பொறுத்த அளவில நல்லா வேல செய்யுறாரு. எந்தக் குறையும் சொல்ல முடியாது. சரி போங்க பாத்துக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

மாலை 6.00 மணிக்குப் தொலைபேசி வந்தது. நான் தலைமையாசிரியர் ஜெயவேல் பேசறேன் என்று தன் இருப்பிட அடையாளங்களைச் சொல்லி வீட்டிற்கு வரச் சொன்னார். போனேன். வீட்டில் தரையில் கோரைப்பாய் போட்டு உட்கார்ந்திருந்தார். என்னை சோபாவில் உட்காரச் சொன்னர். நானும் அவரோடு பாயில் அமர்ந்தேன்.

நீ யாரு?

லோகநாதன். உங்கள்பள்ளித் தமிழாசிரியர். ஏன் அய்யா அப்படிக் கேக்குறீங்க?

அது தெரியும். வையவன்கிறது யாரு?

அய்யா. அதுவும் நான்தான். லோகம் நாதம் எல்லாம் தமிழா இல்லேங்கிறதால வையவன்னு வச்சுகிட்டேன்.

சிந்தனையாளன் மாத இதழை எடுத்து என் முன்னால் போட்டு, இதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டார்.

எனக்குப் புரிந்து விட்டது. ஏதோ சிக்கல் இருக்கிறது என்று நினைத்தேன். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என்றொரு அமைப்பு. அதன் இலக்கிய அமைப்பு புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றம். கட்சியின் மாநிலச் செயலாளர் அய்யா ஆனைமுத்து. ஆனைமுத்துவின் பணிகளையும் சிறப்புகளையும் எடுத்துச் சொன்னேன். அவர் நடத்தும் கொள்கை ஏடு இது. நான் இந்த அமைப்பில் இருக்கிறேன். இந்த ஏட்டில் எழுதிக்கிறேன். என்றேன்.

இதில் உன் கவிதையையும் தமிழேந்தியின் கவிதையையும் ஆனைமுத்து கட்டுரையையும் படித்தேன். மிக மிகச் சிறப்பு. உன்னைத்தான், உங்களைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் எனக்கு தொடர்ந்து வர வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

அப்பாடா... பெருமூச்சு விட்டுக் கொண்டேன். சந்தாவுக்காக நான் நாயாய் அலைகிற விஷயம் அவருக்குத் தெரியாது. இப்படி உள்ளங்கையில் வந்து ஒரு சந்தா விழுகிறதே எனப் பெருமகிழ்ச்சி அடைந்தேன். அய்யா, ஆண்டுக் கட்டணமாக நூற்றி எண்பது ரூபாய் கொடுத்தால் மாதந் தவறாமல் உங்கள் வீட்டுக்கே அனுப்பி விடுவோம். வாழ்நாள் கட்டணமாக ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றேன்.

கஸ்தூரி ஒரு இரண்டாயிரம் கொண்டா... என்று சொல்லி இரண்டு முகவரிகளைத் தந்து இரண்டு வாழ்நாள் கட்டணமாகக் கொடுத்தார். இனி உங்கள் இயக்கச் செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் எனக்குத் தெரிவி. என் ஆதரவு இனி உங்களுக்கு எப்போதும் உண்டு என்று அன்று சொன்னவர் அதை கடைசிவரை விடாது காத்தார். பெரியார் சிந்தனைகள் இருபது தொகுதிகள் கொண்ட நூலை இரண்டு பெட்டிகள் வாங்கினார். அவ்வாறே ஆனைமுத்துக் கருத்துக் கருவூலம் நூல் பெட்டியையும் வாங்கினார். திருவண்ணாமலையில் நடைபெற்ற எல்லா கூட்டங்களுக்கும் தவறாது வந்து கலந்து கொண்டார். பொங்கல் மலர் உட்பட எல்லா நிகழ்வுகளுக்கும் நன்கொடைகள் வழங்கினார். அவரது துணைவியாரும் மகன் கார்த்திகேயனும் அதே உணர்வு நிலையில் பயணித்தனர். அவரது பணி நிறைவுக்குப் பின் அவரது மனைவி கஸ்தூரி அம்மாவும் அதே மெய்யூர் பள்ளியில் தலைமையாசிரியாகப் பணியாற்றினார்கள். கடைசியாக 2019 சிந்தனியாளன் பொங்கல் மலர் வெளியீட்டிற்கு குடும்பத்துடன் வந்திருந்து அய்யா ஆனைமுத்துவுக்குத் தனிப்பட்ட விதமாக ரூபாய் பத்தாயிரம் வழங்கினார். இத்தனைக்கும் அவர் ஆனைமுத்து அய்யாவுடன் இத்தனை ஆண்டுகளில் மொத்தத்தில் ஒரு மணித்துளிகள் கூடப் பேசியிருக்க மாட்டார்.

செயவேல் அய்யா அவர்களுக்கு தமிழின் மீது ஆழ்ந்த ஈடுபாடு. மொழிக்கும் இனத்திற்கும் வந்துற்ற கேடுகளை எண்ணி மனம் புழுங்குபவர். அவர் தமிழ் படித்தவர் அல்ல. வரலாறும் ஆங்கிலமும் படித்தவர். ஆனால் தன்னைத் தமிழாய் உணர்பவர். சைவத்தில் ஆழ்ந்த பற்று உடையவர். மிகவும் நிதானமாகப் பேசுவார். கலகலவென்று பேசிப் பழகுபவர் அல்ல. அழுத்தமானவர். அவர் பொது மேடைகளில் பேசி நான் பார்தத்தில்லை. நான் நடத்திய கூட்டங்களில் பேசச் சொன்னதற்குக் கூட மறுத்து விட்டார். அவர் செயல் வேல்.

ஒருநாள் என்னை அழைத்து, எவ்வளவோ நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தான் வாங்கும் சம்பளத்திற் குத் தன்னை ஒப்படைத்து கரைத்து வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் எதிர்பார்ப்பது அது அல்ல. ஆசிரியர் என்னும் மாண்புக்கு உரிய ஒரு ஆசிரியரை என்னுடைய பணிக்காலத்திற்குள் பார்க்க வேண்டும் என நினைத்தேன். நானேகூட அப்படியில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் உன்னைப் பார்க்கிறேன். பள்ளிக்கூட வேலையை நூறு விழுக்காடு சரியாகச் செய்வதோடல்லாமல்.... நூல் வாசிப்பது, கவிதைகள் படைப்பது, இயக்கப் பணி, சந்தா சேர்ப்பது, ஏழை மாணவர்களுக்கு முடிந்த அளவு உதவுவது என எதிர்பார்ப்பு இல்லாத உன் தொண்டு என்னைக் கூச வைத்துச் சாட்டையால் அடிக்கிறது. நீ வந்துவிட்டாய். உன்னை என் வாழ்நாளில் சந்திதத்தைப் பெருமையாகக் கருதுகிறேன். எனக்குப் பின்னாலும் ஒரு நல்ல ஆசிரியச் சமூகம் இருக்கிறது என்பதை உன்மூலம் பார்க்கிறேன். நான் நம்பிக்கையோடு போகிறேன் என்றார். அவர் சொன்ன வார்த்தைகள் மிகப் பெரியவை. அதை நான் பாராட்டாக எடுதுத்துக் கொள்ளவில்லை. என்னை மேலும் ஊக்கப்படுத்துவதாக எண்ணிக் கொன்டேன்.

அய்யா, இன்னும் இதுபோல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நம் கண்ணில் படுவதில்லை. அவ்வளவுதான் என்று ஆறுதல் சொன்னேன். அவர் எதிர்பார்க்கும் கல்வி, வேளாண்மை, சுகாதாரம், அரசமைப்பு, சட்டம், உணவு, உணர்வு, உறவு என எதுவுமே இங்கு ஒழுங்கில்லை. இதையெல்லாம் எண்ணி புழுங்கிப் புழுங்கித் துடிப்பார். உண்மையில் அவரிடம் பேசினால் ஒரு நக்சலைட் நினைவுதான் வரும். ஆனால் எல்லாரிடமும் பேசமாட்டார். அந்த உள் அழுத்தமே அவரை நோய்க்குள் தள்ளியது. பத்து நாளாக மூளைச் சாவடைந்திருந்து 08.11.19 அன்று மரணித் திருக்கிறார். எழுபது வயதுதான் ஆகிறது. இன்னும் நிறைய திட்டங்கள் வைத்திருந்தார். மருத்துவமனைக்குப் போவதற்கு இரண்டு நாள்களுக்கு முன் வையவனைப் பார்க்க வேண்டும் என்று மகன் கார்த்தியிடம் சொல்லியிருக்கிறார்.

அவரது எண்ணங்களைப் போற்றுவேன். அய்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் அம்மா கஸ்தூரி செயவேல், கார்த்திகேயன், செல்வி மற்றும் மருமக்கள்களுக்கு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றம் மற்றும் சிந்தனையாளன் ஏடு சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- பாவலர் வையவன்