புத்தருடன் அம்பேத்கர் பெரியார் தம்மை

            புறம்பேசி இழிவுசெய்த கயவர் கூட்டம்

சித்தர்நம் வள்ளுவரை இழிவு செய்து

            சித்தரித்து வருவதுடன் மதம்பி டித்து

கத்துகிறார் சூரியனை நோக்கி இன்று

            கயவர்தாம் மக்கள்போல் இருப்பார் என்று

இத்தரையில் ஈராயிரம் ஆண்டின் முன்னர்

            எடுத்துரைத்த வள்ளுவரை நினைவில் வைப்போம்.

 

கற்சிலையைக் கடவுளென்று நம்பும் கூட்டம்

            கயமையுடன் வள்ளுவரின் சிலையில் அந்த

தற்குறிகள் சாணியுடன் சேற்றைப் பூசி

            தம்பட்டம் அடிக்கின்றார் வெட்கம்! வெட்கம்!

கற்பூர நறுமணத்தை அறியாக் கேடர்

            காவிஉடை வள்ளுவர்க்கு உடுத்தி விட்டு

கற்சிலையைக் கடவுளெனப் பார்ப்ப தாலே

            குறள்தந்த வள்ளுவரைக் காத்து நிற்போம்.

 

திருக்குறளில் சாதியில்லை கோவில் இல்லை.

            தமிழென்ற சொல்லில்லை மதமும் இல்லை

கருத்தோட்ட நதியில்லை நிலமும் இல்லை

            கடவுளில்லை அதனால்தான் உலகம் எங்கும்

பொருந்துகிற பொதுமறையாய் ஓங்கி நின்று

            புரட்சியினை விதைக்கிறது இதனைக் கண்டு

மருட்டுகின்ற மதவாதி எதிர்ப்ப தாலே

            மண்ணில்நாம் குறள்காக்கப் புரட்சி செய்வோம்.

 

உலகத்தில் உருசியாவில் கிரம்ளின் என்னும்

            உலோகத்து மாளிகையில் அழியா வண்ணம்

உலகமதி திருக்குறளைப் பாது காப்பாய்

            உணர்வுடனே அந்நாட்டார் வைத்து உள்ளார்

நலமிக்க எல்லீசர் வெள்ளைக் காரர்

            நம்குறளை முதல்கண்டு அச்சில் ஏற்றி

உலகத்தில் புகழ்பெற்றார் அதனால் அந்த

            உத்தமரைத் தாம்வாழ்த்தி உயர்ந்து நிற்போம்.

 

செல்லுமிடம் மழலைப்போல் குறளைப் பேசி

            சிரிக்கின்ற பிரதமரை நம்ப லாமா?

ஒல்லுகிற வழியெல்லாம் கெடுக்கும் அந்த

            உலுத்துவிழும் ஆட்சியினை நம்ப லாமா?

பல்லுக்குள் நஞ்சுடைய நல்ல பாம்பு

            போலுள்ள ஆட்சியரை நம்ப லாமா?

வெல்லும்நம் தமிழினத்தின் பெருமை பேசி

            வாழ்வாங்கு வள்ளுவத்தைக் காத்து நிற்போம்.

- முத்தரசன், பெரம்பலூர்

Pin It