திருவள்ளுவருக்கு இது போதாத காலம்!. அவர் திருக்குறளை எழுதிய போது நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்று எழுதிய தன்னை ஒரு தலித் என்று சாதிய முத்திரைக்குத்தி அவமானப்படுத்துவார்கள் என்று. வள்ளுவரை தலித்  என்று சொல்வதற்கான எதாவது அடிப்படை திருக்குறளில் இருக்கின்றதா? பின்பு எதைவைத்து வள்ளுவர் ஒரு தலித் என்று அந்த கஞ்சா சாமியார்கள் கண்டுபிடித்தார்கள். இதற்கான அடிப்படை வரலாற்றில் இருக்கின்றது. பாரதியை ஏற்றுக்கொண்ட வட நாட்டு இந்துத்துவவாதிகளால் ஏன் வள்ளுவனை ஏற்றுகொள்ள முடியவில்லை என்றால் அங்குதான் பார்ப்பனியம் வேலை செய்கின்றது.

 Thiruvalluvarசங்க இலக்கியத்தை எழுதிய பலபேரின் பெயர்களும் சாதிகளும் வெளிப்படையாக தெரிகின்றது. ஆனால் உலகமே போற்றும் நீதிநூலை எழுதிய அந்த மனிதனின் பெயரும் நமக்குத் தெரியவில்லை, அவரின் சாதியும் நமக்குத் தெரியவில்லை. தன்னுடைய கருத்துக்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் போதும் தன்னைப்பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள  எதுவுமில்லை என்று நினைத்த அந்த மனிதன் அதைப்பற்றி சொல்லாமலேயே சென்றுவிட்டார். சங்க இலக்கியமான புறநானூறு, அகநானூறு போன்றவற்றில் பல மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது. அவர்கள் எந்த ஊரை ஆட்சி செய்தார்கள், அவர்களின் ஆட்சி எப்படி இருந்தது  அவர்களின் கொடைத்தன்மை என்ன என்று பல விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் திருக்குறளில் அப்படி எதுவும் பேசப்படவில்லை. அது அனைவருக்கும் பொதுவாகவே எழுதப்பட்டுள்ளது. மிகப்பெரும் ஒரு பணியை செய்துவிட்டு அதற்கான பெயரையும், புகழையும் உதறித்தள்ளுதல் என்பது மனிதரில் ஒரு பண்பட்ட நிலை ஆகும். அந்த நிலையை இந்துப் பண்பாட்டால் ஒரு போதும் கொடுத்திருக்க முடியாது. அது சமணப் பண்பாட்டில் இருந்து வள்ளுவர் எடுத்துக்கொண்டதாகும்.

 வள்ளுவரின் காலம் சராசரியாக 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. இந்தக் காலப்பகுதி தமிழ்நாட்டில் சமணம், பெளத்தம் போன்ற அவைதிக மதங்கள் கோலோச்சிய காலப்பகுதியாகும். இந்தக் காலப்பகுதியில் தான் தமிழில் நீதி நூல்கள் பெரும் அளவு இயற்றப்பட்டன. ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் போன்றவையும் இயற்றப்பட்டன. அனைத்தும் சமண பெளத்த கருத்துக்களை உள்ளடக்கிய நூல்கள் ஆகும். இந்தக் காலப்பகுதியைத் தான் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன அடிமைகளால் இருண்ட காலம் என சொல்லப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை திருக்குறள் இருண்டகாலத்தில் இயற்றப்பட்ட நூலாகும். அது முழுக்க முழுக்க சமண கருத்துக்களைக் கூறும் நூலாகவே உள்ளது.

  தமிழ்நாட்டில் ஏறக்குறைய 5 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே பார்ப்பனிய மேலாதிக்கமும், சைவ, வைணவ மதங்களின் மேலாதிக்கமும் நடைமுறைக்கு வருகின்றன. அப்போது இயற்றப்பட்ட நூல்களில்தான் சாதிப்பெயர்கள் வெளிப்படையாக குறிப்பிடப்படுகின்றன. நாம் சங்க இலக்கியம் என்ற சொல்லை கவனமாகவே பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. ஏனென்றால் சாதியின் பெயரோ, கடவுளின் பெயரோ வெளிப்படையாக கூறப்படும் அகநானூறு, புறநானூறு போன்றவையும், சாதி ,கடவுள் போன்றவற்றை வெளிப்படையாக கூறாத திருக்குறள் போன்ற நீதி நூல்களும் சங்க இலக்கியம் என்ற ஒரே வகைப்பாட்டிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. நாம் திருக்குறள் போன்ற நீதி நூல்களை சங்க இலக்கியத்திற்கு முற்பட்ட இலக்கியங்கள் என்று சொன்னால் அது தவறாகாது.

  யாகத்தில் குதிரைகளையும், கால்நடைகளையும் பெருமளவு தீயிட்டு கொழுத்திய பார்ப்பன பண்பாட்டிற்கு நேர் எதிரானது வள்ளுவரின் ‘புலால் மறுத்தல்’ என்னும் 26 வது அதிகாரமாகும். பார்ப்பனனுக்கு மட்டுமே கல்வி கற்கும் உரிமை வழங்கப்பட்ட மனுநீதி நாட்டில் அனைவருக்கும் கல்வியை வலியுறுத்திய வள்ளுவரின் 40வது அதிகாரமான ‘கல்வி’ பார்ப்பன பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட சமணம், பெளத்தம் போன்ற அவைதிக மதத்தின் தாக்குதலாகும். அன்று அவை மட்டும் தான் அனைத்து மக்களையும் அரவணைத்து மடப்பள்ளிகளை நிறுவி கல்வி போதித்தன. இன்னும் பார்ப்பனிய விழுமியங்களுக்கு எதிரான பல விடயங்களை நாம் திருக்குறளில் இருந்து எடுத்துக்காட்ட முடியும். அடிப்படையில் திருக்குறள் பார்ப்பன பண்பாட்டிற்கு நேர் எதிரானது என்று நாம் தெரிந்துகொண்டால் போதும்.

 இப்போது தெரிகின்றதா ஏன் கஞ்சா சாமியார்கள் வள்ளுவரை எதிர்க்கின்றார்கள் என்று.திருக்குறள் 80க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்க பட்டுள்ளது. அதனால் கஞ்சா சாமியர்கள் எந்த மொழியைப் பேசுபவர்களாக இருந்தாலும் நிச்சயம் இதைப் படித்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வைதிக கஞ்சா சாமியார்கள் அவைதிக திருக்குறளை எதிர்ப்பது ஒன்றும் வியப்பில்லை. மேலும் அவர்கள் திருவள்ளுவரை தலித் என்று சொல்லுவதிலும் ஒரு அர்த்தம் உண்டு. காரணம் திருக்குறள் கல்வியறிவு மறுக்கப்பட்ட பழங்குடியின மக்களில் இருந்து அவைதிக மதத்தால் கல்வி போதிக்கப்பட்டு அதன் மூலம் இந்த உலகை புரிந்துகொண்ட  அந்த திருவள்ளுவன் என்ற எளிய மனிதனால் அது இயற்றப்பட்டதாகும். திருக்குறள் மட்டும் அல்ல பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் அப்பட்டிப்பட்ட எளிய மனிதர்களால் இயற்றப்பட்டவையே ஆகும். கடவுள்களையும், தேவர்களையும் பற்றி ஆபாச குப்பைகளை எழுதிக்குவித்த பார்ப்பனியத்திடம் இருந்து சகமனிதனை மனிதனாக பார்க்கவும் அவர்களுக்கான ஒழுக்க விழுமியங்களையும் கற்றுக்கொடுத்த இந்த நீதி நூல்கள் முற்றிலும் வேறுபட்டவையாகும். இன்றைய சொல்வழக்கில் அவை தலித்துகளால் எழுதப்பட்டவை என்று நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

   எப்படி பார்ப்பனியத்தை எதிர்த்த புத்தரை பார்ப்பனியம் உள்வாங்கி அதை ஒன்றும் இல்லாமல் செய்ததோ அதே போல அனைத்துப் பார்ப்பன எதிர்ப்பு விழுமியங்களையும் உட்செறித்து அவற்றின் எதிர்ப்புத் தன்மையை ஒன்றும் இல்லாமல் செய்ய துடித்துக்கொண்டு இருக்கின்றது. அம்பேத்கரையும், பகத்சிங்கையும் உள்வாங்க முயன்றுகொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் காலிகள் தற்போது திருவள்ளுவரையும் உள்வாங்க திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக களம் இறக்கப்பட்டவர்தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான பஞ்சஜன்யாவின் ஆசிரியராக இருக்கும் இந்த தருண்விஜய் என்பவர். உலகம் போற்றும் வள்ளுவரை இந்து மதத்தின் குறியீடாக மாற்றுவதன் மூலம் அவரின் பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களை ஒன்றும் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்ற முனைப்போடு ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 மோடி அரசு அம்பேத்கரின் புத்தகங்களை மறு பதிப்பாக கொண்டுவர உள்ளது என்ற அறிவிப்பும் திருவள்ளுவருக்குக் கங்கைக்கரையில் சிலை வைக்கப்படும் என்ற தருண்விஜயின் அறிவிப்பும் வெவ்வேறானது அல்ல. இரண்டும் பார்ப்பன எதிர்ப்புக் கருத்தியல் உடையவர்களை இந்துமதத்தின் ஈடு இணையற்ற சொத்துக்களாக காட்டி அதன் மூலம் மக்கள் மனதில் இந்து பெருமிதத்தை ஏற்படுத்தி பார்ப்பனிய ஆதீக்கத்தை எல்லா காலங்களிலும் வலுவாக நிறுவிக்கொள்ளும் முயற்சியே ஆகும். ஆர்.எஸ்.எஸ் பேர்வழியான தருண்விஜய் இதற்கான முயற்சியில் தான் இருக்கின்றார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. 11/01/ 2015 அன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் திருப்பயணம் தொடக்கவிழாவின் போது கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரையும், வாரணாசியில் பாரதியார் தங்கியிருந்த வீட்டில் இருந்து மண்ணையும் எடுத்துவந்து வள்ளுவரின் பாதத்தில் வைத்து பூஜை செய்திருக்கின்றார்கள். எவ்வளவு பார்ப்பன கொழுப்பு இருந்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட செயலை செய்திருப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்த அனைத்து ஆர்.எஸ்.எஸ் வாணரங்களும் கலந்து கொண்டிருந்தன.வள்ளுவன் இருந்த காலத்தில் இந்துமதம் என்ற நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு மதமே கிடையாது. அப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் அவைதிக திருவள்ளுவருக்குப் பார்ப்பன மதத்தின் புனித நீரான கங்கை நீரையும், பார்பனன் உயர்ந்த சாதி என்ற தீவிரமான கண்ணோட்டம் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பூணூல் போட்டால் பார்ப்பனனைப் போல உயர்ந்த சாதி ஆக்கிவிடலாம் என்ற கீழ்த்தரமான பார்ப்பன சிந்தனையை விதைத்த ‘பார்ப்பன புரட்சியாளன்’ பாரதி தங்கி இருந்த வீட்டில் இருந்து மண்ணையும் எடுத்து வந்து வள்ளுவனை அவமானப்படுத்தி இருப்பார்கள்.

 இவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது, அது வள்ளுவனை இந்து மயமாக்க வேண்டும், அவரை பார்ப்பனர் என்று சொல்லி புலகாங்கிதம் அடையவேண்டும் என்பதுதான். அதற்காக அனைத்துப் பார்ப்பன, பார்ப்பன அடிவருடி சக்திகளும் ஒன்றாக இணைந்து வேலை செய்துகொண்டு இருக்கின்றன. இதை நன்றாக தெரிந்திருந்தும் தங்களுடைய பிழைப்புவாதத்திற்காக வைரமுத்து போன்ற ஆபாச கவிஞர்கள் பார்ப்பன ஆபாசத்துடன் சேர்ந்து கும்மி அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். பார்ப்பன பாரதிக்காக உருகி உருகி ‘கவிராஜன் கதை’ எழுதிய வைரமுத்து அடுத்து தருண்விஜய்க்காக உருகி உருகி ‘காவிராஜன் கதை’ எழுதினாலும் எழுதுவார் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம்.

   பார்ப்பனியத்தின் அனைத்து எதிர்ப்பு கூறுகளையும் தன்னகத்தே கொண்ட வள்ளுவனை பார்ப்பன கடவுளாக்கும் முயற்சிக்குத் தமிழ்நாட்டில் உள்ள சில கேடுகெட்ட இழி பிறவிகளும் துணையாக இருக்கின்றன.  பார்ப்பனியத்தின் புனித குறியீடான கங்கைக்கரையில் வள்ளுவனை வைக்கவேண்டும் என்ற சிந்தனையே பார்ப்பன அடிவருடி தனத்தில் இருந்து பிறப்பதாகும். நேர்மையான மனிதர்கள்  யாரும் இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கமாட்டார்கள். இப்போது வள்ளுவன் அசிங்கப்பட்டது தான் மிச்சம்.

 வள்ளுவனுக்கு சிலை வைப்பதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. தன்னை யார் என்றே அடையாளப்படுதிக்கொள்ள விரும்பாத அந்த மனிதனை தயவு செய்து அவமானப்படுத்தாதீர்கள். வள்ளுவனுக்கு உருவம் கொடுத்து முதலில் அசிங்கப்படுத்தினீர்கள். பின்பு வள்ளுவன் சிலைக்கு பூணூலை போட்டு அசிங்கப்படுத்தினீர்கள். தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் பூணூலை மறைத்து ஒரு சால்வையைப் போட்டு தங்களது ‘பாதையும் தருகிறோம் பாதுகாப்பும் தருகின்றோம்’ என்ற சாணக்கிய அறிவை காட்டிக்கொண்டீர்கள். உங்களால் ஒரு காலத்திலும் வள்ளுவனை கடைபிடிக்க முடியாது. குறைந்த பட்சம் அவரை அவமானப்படுத்தாமலாவது இருக்கலாம்.

 வள்ளுவனை பார்ப்பன மயமாக்கும் இந்தச் சதியைத் தமிழ்நாட்டில் உள்ள பெரியாரிய, மார்க்சிய இயக்கங்கள் தான் கடுமையாக எதிர்க்கவேண்டும். அவர்களுக்குத்தான் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் பொறுப்பு உள்ளது. தமிழகம் எப்போதுமே பெரியாரிய மண்தான் என தருண்விஜய் போன்ற ஆர்.எஸ்.எஸ் தறுதலைகளுக்கு நாம் புரியவைக்க வேண்டும். தமிழகத்தில் எதையாவது செய்து காலுன்ற துடித்துக்கொண்டிருக்கும் காவிக்கூட்டத்திற்குச் சரியான பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.

- செ.கார்கி

Pin It