யாழ்ப்பாணத்தில் உருத்திராட்சக் கொட்டை, திருநீற்றுப் பட்டையுடன் 19ஆம் நூற்றாண்டில் வெளியான ஒரு திருவள்ளுவர் படத்தைக் காட்டி, திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று தமிழகத்தில் பாஜக/ ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது.
யாழ்ப்பாணத்தில் பார்ப்பனர்கள் குறைவு. சைவ வேளாளர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகம் அவ்வளவுதான்.
சைவ வேளாளர்களால் அவர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட அந்த வள்ளுவர் படம் தமிழகம் உள்பட பரந்துபட்ட அளவில் வடிவமைக்கப்பட்டது அன்று. அது யாழ்ப்பாணத்துக்கு மட்டுமே உரியது.
அதனால்தான் 1959ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசால் வேணுகோபால சர்மா மூலமாக ஒரு வள்ளுவர் படம் உருவாக்கப்பட்டு அது அஞ்சல் தலையாக வெளியிடப்பட்டது.
இந்த வள்ளுவர் படம் உருவாகத் துணை நின்றவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், அன்றைய முதல்வர் பக்தவச்சலம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர்.
அண்மைக் காலம் வரையில் அந்தப் படம்தான் எந்தவிதச் சாதி, மத அடையாளமும் இல்லாமல் வெள்ளை உடையுடன் இருந்தது.
தருண் விஜய் திருக்குறள் பற்றி தமிழ்நாட்டில் பேசிய மேடைகளில் கூட வள்ளுவர் உடை வெள்ளையாகத்தான் இருந்தது.
ஆனால், இப்பொழுது ஹெச்.ராஜா, நாராயணன், ராகவன் போன்ற இந்துத்துவச் சிந்தனையாளர்கள் திருவள்ளுவர் இந்துக் கடவுள் பெயர்களைத் திருக்குறளில் சொல்லியிருக்கிறார், அவர் ஓர் இந்து என்று காவி உடையை பொருத்துகிறார்கள்.
‘‘இந்திரனே சாலும் கரி’’ என்று இந்திரனை வள்ளுவர் சொல்லும்பொழுது, ஒழுக்கம் குன்றிய ஒருவனுக்கு இந்திரனே சான்றாவான் என்று இந்திரனின் செயலை வைத்து அவனை இழிவாகச் சொல்கிறார்.
‘‘பரந்து கெடுக உலகியற்றி யான்’’ என்று சொல்லுமிடத்தில், இந்த உலகில் ஒருவன் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவனைப் படைத்தவன் (உலகத்தை படைத்தவன்) என்று சொல்லப்படுபவன் பரந்துபட அழிந்து விடுவான் என்று வள்ளுவர் சொல்கிறார். இங்கே உலகைப் படைத்தவன் என்று சொல்பவனையும் பழித்துப் பேசுகிறார்.
இவையெல்லாம் இறைவனுக்கு எதிராகச் சொல்லப் பட்டிருப்பதினால், திருவள்ளுவர் எப்படி இந்துவாக இருக்க முடியும். பாஜக/ ஆர்.எஸ்.எஸ் என்ன முயன்றாலும் தமிழ்நாட்டில் அவர்கள் காலூன்றத் திருவள்ளுவர் உதவ மாட்டார்.
‘‘திருக்குறள் எனும் கடலை, ஒரு சிமிழுக்குள் அடைக்க முயற்சிக்காதீர்’’ என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகளை நினைவு படுத்துவோம்.