கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பெரியார் 13.11.1938இல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பேசியதற்காக ஒரு ஆண்டு கடுங் காவல் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும், மறுநாள் 14.11.1938 அன்று பெத்துநாய்க்கன் பேட் டையில் பள்ளியின் முன் பெண்கள் மறியல் செய்வதற்குத் தயாராயிருந்தபோது நடைபெற்றக் கூட்டத்தில் பேசியதற்காக ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் கட்ட வேண்டும் என்றும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி மாதவராவ் 6.12.1938 பிற்பகல் 3.15 மணிக்குத் தீர்ப்பளித்தார்.

பெரியார் எதிர் வழக்காடாமலும், அபராதம் கட்ட மறுத்தும் நீதிமன்றத்தில் தான் செய்ததில் சட்டமீறல் எதுவும் இல்லை என்ற அறிக்கையை மட்டும் படித்துக் கொடுத்துவிட்டு, மூன்றாண்டு கடுங் காவல் தண்டனையை ஏற்றுக்கொண்டு சிறைக்குச் சென்றுவிட்டார்.

பெரியார் அநியாயமாகச் சிறைக்கு அனுப்பப்பட்ட தைக் கண்டித்து மறுநாள் மாலை 6.30 மணிக்கு சென்னைக் கடற்கரையில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 30,000 பேர் கலந்துகொண்டனர்.

கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமை வகித்தார். சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், நீதிக்கட்சியின் துணைத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கலிபுல்லா சாகிப், என்.வி. நடராசன், டி.ஏ.வி. நாதன் உட்பட பலர் முதலமைச்சர் இராசாசியின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டித்துப் பேசினர். கி.ஆ.பெ.விசுவ நாதம் இட்லரைவிட மோசமான கொடுங்கோலர் ஆச்சாரியார் என்று பேசினார்.

முன்னாள் ஹோம் மெம்பரும், முன்னாள் அமைச் சருமான சர். பன்னீர்செல்வம் ஆச்சாரியார் அடக்கு முறையினால் தென்னாட்டுக்கு ஏற்படப்போகும் ஆபத்தைச் சுட்டிக்காட்டினார். அடக்குமுறையினால் ஆள்வோர் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. ஆள்வோருக்கு எதி ராகவே அது திரும்பும் என்று எச்சரித்தார்.

சென்னை மாநிலம் முழுவதும் பெரியார் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன.

8.12.1938 அன்று திருச்சியில் நடைபெற்ற மிகப்பெரிய கூட்டத்தில் பேசிய கி.ஆ.பெ. விசுவநாதம் “ஈ.வெ.ரா. கிரிமினல் குற்றங்கள் எதையும் செய்ய வில்லை. ஆச்சாரியார் ஆட்சியில் ‘தமிழ் வாழ்க’ என்று சொன்னாலே போதும், நீங்கள் சிறை விருந்தி னராக ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள்” என்று பேசினார்.

பெரியாருடைய பிறந்த நாள் விழா 18.12.1938 அன்று தமிழ் நாடு முழுவதும் கொண்டாடும்படி 10.12.1938 விடுதலையில் கி.ஆ.பெ. அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

திருச்சி விசுவநாதம் அறிக்கை

சுயமரியாதை இயக்கத் தலைவரும், தமிழர் இயக்கத் தந்தையும், ஜஸ்டிஸ் கட்சியின் லீடரும், தமிழ்நாட்டுப் பெரியாருமாகிய பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள், டிசம்பர் 18ஆம் தேதி அன்று காங்கிரஸ் ஆட்சியின் சிறைச்சாலையில் தொடங்குகிறது.

இவ்விழாவைப் பெருஞ் சிறப்பாகக் கொண்டாடி, “பெரியார் வாழ்க!” என்று பேரொலி முழக்க வேண்டி யது தமிழ்நாட்டு மக்கள் அனைவருடையவும் கடமை யாகும்.

சென்னை ராஜதானி தலைநகரத்திலிருந்து திரு நெல்வேலி ஜில்லாவின் கடைசிக் கிராமம் வரை உள்ள எல்லா ஊர்களும் இவ்விழாவை நடத்துவதில் பெரும் பங்கு எடுத்துக் கொள்ளுதல் இன்றியமையாத தாகும்.

பெரியார் பிறந்த நாள் கொண்டாட்ட விழாவைக் கீழ்க்கண்டவாறு நடத்தலாம்.

1. பொது ஜனங்களுக்கு 18ஆம் தேதிக்கு முன்பே தகுந்த முறையில் முன் அறிவிப்புச் செய்தல்.

2. 18ஆம் தேதி காலையில் தமிழ்க் கொடி, ஜஸ்டிஸ் கொடிகளை ஆங்காங்கு உயர்த்துதல்.

3. முற்பகல் முழுதும், பொய்ப் பிரச்சாரப் பத்திரிகை களை வாங்கிப் படித்துவரும் நண்பர்களிடம் “விடு தலை”யைப் படிக்க வேண்டிய அவசியத்தை, உண்மையை எடுத்துக் கூறுவதின் மூலம் நன்கு விளக்கிக் காட்டுகிற அரும்பணியைச் செய்து “விடுதலை”யை வளர்த்தல்.

4. பிற்பகலில் பெரியார் அவர்களின் உருவப் படத் துடன் ஊர்வலம் வருதல்.

5. மாலையில் பொதுக்கூட்டம் கூட்டி சொற்பொழிவு நிகழ்த்துதல்.

6. பெரியாரைப் பாராட்டுதல், கட்டாய இந்தியை வெறுத்தல், காங்கிரஸ் கட்சியின் அடக்குமுறை ஆட்சியைக் கண்டித்தல், வேலூர், சென்னை மகாநாடுகளில் கலந்துகொள்ளுதல் ஆகிய தீர்மா னங்களை நிறைவேற்றுதல்.

7. இரவு உணவுக்குப் பின்னும், உறங்குவதற்கு முன்னும் காங்கிரஸ் ஆட்சியின் வகுப்புவாதச் செயலை, வரிக்கொடுமையின் விளைவை, வாக்குறுதிக்கு மாறான செயலை, மகாத்மாவின் அஹிம்சா தர்ம ராம ராஜ்ய தடியடி துப்பாக்கிப் பிரயோக கட்டாய இந்தித் திட்ட சிறைச்சாலை தர்பாரைச் சிறிது நேரம் சிந்தித்து உணர்தல்.

இப்பெருநாளைக் கொண்டாடுவதில் ஜஸ்டிஸ் சங்கங்கள், தமிழர் சங்கங்கள், சுயமரியாதைச் சங்கங்கள், முஸ்லீம் லீக், கிறிஸ்தவ சங்கங்கள், ஆதி திராவிட மகாசபைகள், இளைஞர் சங்கங்கள் ஆகிய அனைத்தும் பெரும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டிக் கொள்ளுகிறேன்.

இவ்வாறு கி.ஆ.பெ.விசுவநாதம் அறிக்கை வெளியிட்டார்.

(விடுதலை 10-12-1938)

பெரியார் தண்டனை -

சட்டசபையில் சரமாரி கேள்விகள்

பன்னீர்செல்வம், பக்தவத்சலம், குமாரராஜா முயற்சி

“பெரியாருக்கு ஏ வகுப்பு”

“மகாநாட்டுத் தலைமை வகிக்க விடுதலை செய்வது பற்றி யோசிக்கப்படும்”

சர்க்கார் பதில்

நேற்று சென்னை சட்டசபையில் பெரியார் ஈ.வெ.ரா. தண்டனை விஷயமாக தோழர் பக்தவத்சலம் நாயுடு (1) ஜார்ஜ்டவுன் மாகாண மாஜிஸ்திரேட்டினால் பெரியார் ஈ.வெ.ரா. தண்டிக்கப்பட்டது. உண்மை தானா? (2) உண்மையானால் என்ன குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டது. (3) அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன? (4) அவருக்கு எந்த வகுப்பு அளிக்கப்பட்டிருக் கிறது என சிறை மந்தியை ஒரு அவசரக் கேள்வி கேட்டார்.

அக்கேள்விக்கு கனம் ராமநாதன் பதிலளித்த தாவது: மாகாண மாஜிஸ்திரேட்டினால் தண்டனையளிக் கப்பட்டது வாஸ்தவமே. இந்து தியாலாஜிக்கல் பள்ளி முன் கட்டுப்பாடாகவும் தொடர்ச்சியாகவும் தொல்லை விளைவிக்கத் தூண்டியதற்காக ஒவ்வொரு குற்றத்துக் கும் ஒரு வருஷக் கடுங்காவல் தண்டனை யும் 1000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாத கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. அவருக்கு ஏ வகுப்பு அளிக்கப்பட்டது.

அப்பால் சரமாரியான உப கேள்விகள் கேட்கப்பட்டன.

ஸர் பன்னீர்செல்வம் : குற்றப் பத்திரிகை வாசகத் தைப் படித்துத்தானா இரண்டாவது கேள்விக்குப் பதிலளிக்கப்பட்டது?

மந்திரி : அவர் தூண்டியதாக குற்றப் பத்திரிகை கூறுகிறது.

குமாரராஜா : அவரே பள்ளிக்கூடம் முன் மறியல் செய்தாரா?

மந்திரி : அவர் தூண்டியதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

ஸர். பன்னீர்செல்வம் : விடுதலை விஷயமாக அவர்அரசியல் கைதியாக மதிக்கப்படுவாரா, சாதாரண கைதியாக மதிக்கப்படுவாரா?

மந்திரி : விடுதலை விஷயம் வேறு; வகுப்பு நிர்ணயம் செய்யும் விஷயம் வேறு. வழக்கின் தராதம்மியங்களைப் பார்த்தே அரசியல் கைதிகளை சர்க்கார் விடுதலை செய்வார்கள். கேட்ட கேள்வி வகுப்பு நிர்ணயத்தைப் பற்றியதே.

ஸர். பன்னீர்செல்வம் : அவருக்கு ஏ-வகுப்பு அளிக்கப்பட்டது எப்போது?

மந்திரி : சமீபத்தில்.

ஸர். பன்னீர்செல்வம் : அது சம்பந்தமாக உத்தர வுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டனவா?

மந்திரி : ஆம்.

ஸர். பன்னீர்செல்வம் : பெரியார் ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது சர்க்காருக்குத் தெரியுமா?

மந்திரி : அதுபற்றிப்பேச என்னைவிட கனம் மெம்பரே அதிக லாயக்குடையவர்.

தலைவர் : அதனாலேயே அவருக்கு ஏ-வகுப்பு அளிக்கப்பட்டிருக்கலாம்.

ஸர். பன்னீர்செல்வம் : பொது ஜனத் தொண்டாற்ற அவருக்கு வசதியளிப்பது பற்றி சர்க்கார் யோசிப்பார்களா?

மந்திரி : அவ்விஷயத்தைப் பற்றி சர்க்கார் யோசிப் பார்களா?

குமாரராஜா : சர்க்காரை எதிர்த்துக் கிளர்ச்சி செய் வதையடக்கும் சர்க்கார் கொள்கைப்படிதான் பெரியார் ஈ.வெ.ரா. தண்டிக்கப்பட்டாரா?

முதன் மந்திரி : அம்மாதிரி கொள்கை எதுவும் சர்க்காருக்கு இல்லை.

குமாரராஜா : கட்டாய இந்தியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ததற்காகத் தானே பெரியார் ஈ.வெ.ரா.வும் ஏனை யோரும் தண்டிக்கப்ப்டடார்கள்?

மந்திரி : பெரியார் ஈ.வெ.ரா. சட்டத்தை மீறினார்.

குமாரராஜா : நான் கேட்ட கேள்வி அரசியல் கிளர்ச் சியைப் பற்றியது?

மந்திரி : இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்வது அனு மதிக்கக் கூடியதே. ஆனால் ஈ.வெ.ரா. சட்டத்தை மீறி னார்; அதனாலேயே அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது.

தலைவர் : சட்டசபை மெம்பர்கள் அறியும் பொருட்டு தாங்கள் குற்றப்பத்திரிகையைப் படித்துக் காட்டலாமே.

முதன் மந்திரி : அவர் செய்த குற்றம் என்ன என்பது தான் கேள்வி. குற்றப்பத்திரிகை இரண்டு பக்கம் கொண்டது.

பக்தவத்சலம் நாயுடு : போலீசார் குற்றப் பத்திரிகை தயார் செய்யும் முன் ஈ.வெ.ரா. மீது வழக்குத் தொடரப்படுவது பற்றி சர்க்காருக்குத் தெரியுமா?

முதன் மந்திரி : இம்மாதிரிக் கேள்விகளுக்கு சர்க் கார் பதிலளிக்கமாட்டார்கள். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் சர்க்காருக்குத் தெரியத்தான் செய்யும்.

கலா வெங்கடராவ் : பெரியார் என்றால் பொருள் என்ன? ஒருவரும் இக்கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.

பெரியார் என்றால் மகாத்மா பட்டம் மாதிரி என ஸர். பன்னீர்செல்வம் அவர் போக்கில் கூறினார்.

அப்பாதுரைப் பிள்ளை : கடுங்காவல் தண்டனை வெறுங்காவல் தண்டனையாக மாற்றப்பட்டிருப்பதினால் அபராதத் தொகையையும் சர்க்கார் குறைப்பார்களா?

முதன் மந்திரி : இந்த விஷயங்கள் எல்லாம் உரிய காலத்து கவனிக்கப்படும். ஆனால் அபராதத் தொகை சர்க்காருக்குக் கிடைக்குமென நான் எண்ணவில்லை.

(விடுதலை 14-12-1938)

தொடரும்