சிங்காரவேலர் ஒரு பன்மொழி அறிஞர். அவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யன், பாலி ஆகிய மொழிகளைத் தெரிந்தவர். இந்து ஆங்கில நாளிதழ் (THE HINDU) சிங்காரவேலர் மறைந்த பொழுது, அம்மறைவைக் குறித்து இரங்கற் செய்தியில் (13.02.1946) அவரது பன்மொழி அறிவினைக் குறிப்பிட்டிருக்கிறது. அவர் பன்மொழி அறிவோடு தத்துவம், சமயம், பொருளியல், அறிவியல், சமூகவியல், அரசியல் ஆகிய துறைகளிலும் ஆழங்கால் பட்டவர். பன் மொழிப் புலமையும், பல்துறை அறிவும் கொண்டவர் களின் உரைநடை, தெளிவாக இருப்பது சற்று அரிது. உரைநடை இனிமையாக இருப்பது அதனினும் அரிது. சிலரே இவற்றிற்கு விதிவிலக்காக இருப்பர். அவர்களில் சிங்காரவேலர் குறிப்பிடத்தக்கவர். சிங்காரவேலர் தமிழைத் திண்ணைப் பள்ளியில் படித்தவர். பள்ளியிலும், கல்லூரியிலும், ஆங்கில மொழி வழிக் கற்றவர். அப்படிப்பட்டவருக்குத் தாய்மொழியில் தெளிவாக எழுதுவது அரிதினும் அரிதாகும்.  இலக்கியப் புலமை கொண்டோரே உரைநடையில் சிறந்து விளங்குவர். சிங்காரவேலர் தத்துவம் போன்ற துறைகளைப் போல், இலக்கியங்களை அத்துணையளவு கற்றவர் அல்லர். அப்படியிருந்தும், அவரது நடை தெளிந்த நீர்ப்போல் இருக்கிறது. அதுதான் வியப்பு. இந்த வியப்பின் உருவம்தான் அவர்.

எது சிறந்த உரைநடை? தெளிவும் இனிமையும், எளிமையும் கொண்டதே சிறந்த உரைநடை. அந்த உரைநடையிலும் எது எழுதுவோனின் அடை யாளத்தை, முகத்தைக் காட்டுகிறதோ, அதுவே மிகச் சிறந்த உரைநடையாகும். அந்த உரை நடையே சிங்காரவேலரின் உரைநடையாகும். தமிழில் சிலரின் உரைநடையினைப் படித்தவுட னேயே, இந்நடை இவரது உரைநடை என்றே எளிதில் கூறிவிடலாம்.  திரு.வி.க., டாக்டர் மு.வ., வ.சு.ப. மாணிக்கம் ஆகியோரின் உரைநடை அத்தகையதே. மறைமலை அடிகளாரின் நடையும் அவை போன்றதே. ஆனால் அடிகளாரின் நடை மிகுந்த கடுமையும், செறிவும் கொண்டது. புலமையுடையோர்க்கே விளங்கத்தக்கது. எனினும் தெளிவும் உறுதியும் உடையது. இவர்களெல்லாம், இலக்கியத்தில் பெரும் புலமை கொண்டவர்கள். சிறந்த போதகாசிரியர்களாக விளங்கியவர்கள். அவர்கள், சிறப்பாக எழுதுவதில் வியப்பில்லை. ஆனால், சிங்காரவேலர், அவர்களைப் போலத் தமிழ் இலக்கியங்களில் பெரும்புலமை கொண்டவரல்லர். எனினும் மக்களை நன்கு கற்றுத் தெளிந்தவர். இந்த உள்ளத் தெளிவே, அவரது உரைநடைக்கு வலிமை சேர்த்துள்ளது எனலாம்.

“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்

வாக்கினில் ஒளி உண்டாகும்”

என்கிறார் பாரதியார்.

இந்த உள்ளத் துண்மையும், தெளிந்த சிந்தனையும் தான், அவரது உரைநடைக்கு வலுசேர்த்துள்ளது. அவர் மக்கட் சிந்தனை கொண்ட மனிதநேயர். ஆதலின், அவரது மக்கட் சிந்தனை உரைநடைக்கு எளிமை தந்துள்ளது. தெளிவும், எளிமையும், நுட்பமும் கொண்ட உரைநடையே அவரது உரை நடை. இலக்கியங்களைப் பற்றித் தெளிவாகவும், இனிமையாகவும், எளிமையாகவும் எழுதலாம். ஆனால், தத்துவம் போன்ற துறைகளைத் தெளி வாகவும் எளிமையாகவும் எழுதுவது மிக அரிது. சிங்காரவேலர் அரசியலைப் பற்றி மட்டுமன்றி, தத்துவம், அறிவியல் போன்ற துறைகளைப் பற்றியும் அவ்வாறே எழுதினார். இவற்றிற்கெல்லாம், அவர் எப்போதும், அடுத்தடுத்து எதனையும் ஆழமாக, தெளிவாகச் சிந்திக்கும் பழக்கமேயாகும். அவர் “நடையில் நின்றுயர் நாயகனாக” விளங்குவதற்கு இப்பழக்கமே காரணமாகும். அவரது உரைநடை எளிமையும், தெளிவும் கொண்டது போல, தருக்கமும், செறிவும், சுருக்கமும் கொண்டது. இவை அவரது உரைநடைக்குக் கூடுதலான பெருமை சேர்ப்பன. அவரது தத்துவஞான அறிவும், அதற்கு அடிப்படைக் காரணமாகும். பண்டைய உரை யாசிரியர்களாகிய இளம்பூரணர், நச்சினார்க் கினியர், பேராசிரியர், சேனாவரையர், பரிமேலழகர் ஆகியோரின் உரைநடை தருக்கமும், செறிவும், சுருக்கமும் கொண்டு விளங்குவதற்கு அவர்களின் தத்துவப் புலமையே காரணமாகும்.

இங்கு ஓர் எடுத்துக்காட்டிற்காகப் பரிமேலழ கரின் உரையை நோக்கினால் உண்மையை விளங்கிக் கொள்ளலாம்.

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு” - 129

“ஒருவனை, ஒருவன் தீயினாற் சுட்டபுண் மெய்கட் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும். அவ்வாறின்றி வெவ்வுரையுடைய நாவினால் சுட்டவடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.

“ஆறிப்போதலால், தீயினாற் சுட்டதைப் புண்ணென்றும், ஆறாது கிடத்தலால் நாவினாற் சுட்டதனை வடுவென்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதற்றொழிலான் ஒக்குமாயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடி தென்பது போதரும்”1

இவ்விளக்கத்தை நோக்கினால், குறளை அவர் உள்ளவாறு தெளிந்துணர்ந்து, அதனுள் ஆழ்ந் திருக்கும் பொருளை நமக்கு எடுத்துக் காட்டுவதை உணரலாம். அதாவது, தீயினாற் சுட்டதைப் புண் என்றும், நாவினாற் சுட்டதை வடுவென்றும், கூறியதற்குரிய உண்மையை நமக்கு அவர் தெளிவுற விளக்குகிறார். அப்படி விளக்கும் பொழுது, அவரது உரைநடையில், சுருக்கமும், நுட்பமும், தெளிவும் வெளிப்படுகின்றன. அவை நம் அறிவினைக் கூர்மைப் படுத்தி, நம்மை இன்புறுத்துகின்றன. சிங்கார வேலரின் உரைநடையும் அத்தகையதேயாகும்.

சிலரது உரைநடை பகட்டாகவும், ஆடம்பர மாகவும் இருக்கும்; சில வேளைகளில் அழகாகவும் இருக்கும். ஆனால், பொருளும் கூர்மையும் இருக்கா. ஆழமும் இருக்காது; போலியாக இருக்கும். அது தங்கமுலாம் பூசப்பட்டதுபோன்று இருக்கும்; உண்மை இருக்காது. தத்துவச் சிந்தனை கொண் டோரிடம் ஆடம்பரமான வார்த்தைகள் இருக்கா. ஆர்ப்பரிப்பு இருக்காது. நீட்டி உரைப்பது இருக்காது. கலக்கமோ மயக்கமோ அங்குத் தோன்றா. அவர்கள் எதனை எழுதினாலும் அது எளிமையும் தெளிவும் கொண்டதாகவே இருக்கும். சுருக்கமும் ஆழமும் உடையதாக இருக்கும். இவை தான் அவர்களது உரைநடையின் அழகு. இந்த நடையைத்தான் நாம் சிங்காரவேலரின் நடையில் காண்கிறோம். அவரது உரைநடை வாதத் திறமையும், கூர்த் திறனும்,

பிடர் பிடித்து உலுக்கும் தன்மையும் கொண்டது. கார்ல் மார்க்ஸை ஆழமாகப் படித்ததினால், இவருக்கும் அத்திறன் அமைந்துவிட்டதோவென எண்ணத் தோன்றுகிறது. உணர்ச்சிகளை உள்ள வாறு புலப்படுத்துவதும், சொற்களில் ஆழ்ந்த சிந்தனையை ஏற்றி, அவற்றை கூர்ஈட்டியாகப் பயன் படுத்துவதும், அவரது உரைநடையின் தனிச் சிறப்பாகும். சுருங்கக்கூற வேண்டுமாயின் சிங்கார வேலர், அவருடைய பேராசானைப் போன்று, சொற்களில் இயக்கவியல் ஆற்றலைப் புலப்படுத்தி யுள்ளார் எனலாம்.

மார்க்ஸின் உரைநடையைப் பற்றி அவருடைய நண்பர் வில்ஹெல்ம் லீப்க்னெட் குறிப்பிடும் பொழுது “மார்க்ஸின் உரைநடை டாசிட்டசின் கடும் ஆவேசமும், ஜுவெனாலின் அங்கதமும், தாந்தேயின் புனிதமான சீற்றமும் கலந்திருக்கும்”2 என்றார். சிங்காரவேலரின் நடையும் ஆவேசமும், அங்கதமும், சீற்றமும் கொண்டது தான். மார்க்ஸை நாடோறும் அடுத்தடுத்துக் கற்றதனால், இவருக்கும் அவ்வாற்றல் ஏற்பட்டுவிட்டது போலும்! இலக்கி யத்தை இலக்கியமாகப் படைப்பது எளிது. ஆனால், தத்துவ விஞ்ஞான பொருளியல் செய்திகள் அடங்கிய பெருநூலை, ஓர் இலக்கியமாகப் படைப்பது மிக அரிது. மார்க்ஸ் தன் மூலதனம் எனும் பெருநூலை இலக்கியமாகத்தான் படைத்துள்ளார். இதுதான் பெரும் விந்தை. மூலதனம் வெளிவந்த போது, அதன் பொருள் அடக்கத்தை ஏற்கக்கூடாதவர்கள் கூட அதன் உயிரோட்டமான நடையையும், விளக்கும் திறனையும், வியந்து பாராட்டியுள்ளனர். “வறட்சியான பொருளாதார சிந்தனைகளுக்குக் கூட அவர் அசாதாரண அழகை அளித்துள்ளார்” என்று லண்டன் செய்தித்தாள்கள் குறிப்பிட்டு உள்ளன. சிங்காரவேலர் தம் பேராசானைப் போன்று அறிவியல் தத்துவச் செய்திகளுக்கு ஓரளவு இலக்கிய அழகை அளித்தவர் எனலாம்.

சிங்காரவேலர் ஒரு தனியாளுமை கொண்டவர். எடுத்துக்காட்டாக அவரது அரசியல் வாழ்க்கையி லிருந்து அறிவியல் சிந்தனையைப் பிரிக்க முடியாது. அதே போன்று, அறிவியல் சிந்தனையிலிருந்து அரசியல் வாழ்க்கையைப் பிரிக்க முடியாது. இந்தக் கூட்டுச் சேர்க்கை அவரிடம் இருந்ததால் தான், அவர் பெரும் சிந்தனையாளராகவும், அச்சிந்தனை யாளருள் ஒரு சிறந்த விமர்சகராகவும் இருந் துள்ளார். இந்தக் கூட்டுப் பண்புதான் அவரது உரைநடைக்கு ஒரு தனி வலிமையை அளித் துள்ளது.

அவரது அனைத்துக் கட்டுரைகளிலும், அந்த விமர்சன திறத்தைக் காணலாம். அவரது உரை நடையில் அதுதான் எடுப்பாகத் தோன்றுகிறது. ஜடம், ஜடதத்துவம், மரணம், உயிர், பிரபஞ்சமும் நாமும், வேதாந்தமருள், சொல்லின் கொடுமை போன்ற அறிவியல் சார்ந்த கட்டுரைகளில், அந்த எடுப்பான விமர்சனப் பண்பு மிடுக்காகக் காட்சி யளிப்பதை உணரலாம். அவரது சிந்தனையாற்ற லையும், விமர்சனத் திறனையும் ஒரு சேர காண் பதற்கு ஒரு கட்டுரையை நோக்கினால் உண்மையை விளங்கிக் கொள்ளலாம்.

அத்வைதத்தின் விளக்கத்தை அவர் எப்படி மறுக்கிறார் என்பதைச் சற்று நோக்கலாம். அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள். அதாவது பிரம்மமும் உலகமும் வேறுவேறான தல்ல; இரண்டும் ஒன்றுதான். பிரம்மம்தான் நமக்கு உலகமாகக் காட்சியளிக்கிறதென்பர் வேதாந்திகள். அதனை விளக்குவதற்கு ஓர் உதாரணத்தை அவர்கள் எடுத்துக் காட்டுவர். அதாவது, இரவில் கயிற்றைப் பாம்பாகவும் கிளிஞ்சலை வெள்ளியாகவும், தவறாகக் கருதுவது போன்று, பிரம்மத்தை நாம் உலகமாகத் தவறாகக் கருதுகிறோம் என்பர். இதனை அவர் எத்துணை நுட்பமாக நோக்கி எளிமையாக விளக்குகிறார் என்பதை கீழுள்ள விளக்கத்தால் நன்கு உணரலாம்.

“கிளிஞ்சலை வெள்ளி போலும், கயிற்றைப் பாம்பு போலும் பாவித்து நடப்பதைப் போல், பிரம்மத்தை உலக சராசரி பொருள்களாகப் பாவிக்கிறோம் என்பார்கள் வேதாந்திகள். ஆனால், இந்தத் திருஷ்டாந்திர வாதத்தில் (arguments of Analogy) ஒரு பிழை இருக்கிறது. அதாவது பிரம்மம் உலகம் என்ற சொல்லில் அடங்கிய பொருளை யாரும் கண்களால் பார்த்ததில்லை. ஆனால், காட்டும் திருஷ்டாந்திரத்தில் கிளிஞ்சல், வெள்ளி, கயிறு, பாம்பு முதலிய பொருள்களைக் கண்களால் பார்த்து வருகின்றோம். இப்பொருள்களைப் பார்த்திராதவனுக்கு ஒன்றை மற்றொன்றாகப் பார்க்கும் மருள் எழாது. பார்ப்பதில் மருள் ஒன்று மில்லை. கண்களால் மருள் எழுவதில்லை. கண்கள் ஏதோ பொருள் இருப்பதாகக் காட்டுகின்றது.

ஆனால், மருள் எப்படி எழுகிறதென்றால், இவ்விரண்டு வஸ்துக்களையும், பார்த்தவன், ஒன்றை மற்றொன்றாக அர்த்தப்படுத்துகிறான். பார்த்த பொருள், ஏதோ ஒன்று என்று அர்த்தப்படுத்து வதில் மருள் உண்டாகிறது. இரண்டு பொருள் களில் ஒன்றை மட்டும் பார்த்தவனுக்கு, வெள்ளி என்றாகிலும், பாம்பென்றாகிலும் எண்ண முடியாது. பாம்பைப் பார்த்திராதவன், கயிற்றைப் பார்த்து எவ்வாறு பாம்பென்று எண்ணுவான்? நாம் உலகம் ஒன்றைத்தான் பார்க்கிறோம். பார்த்த பொருளைத்தான், ஒன்றை மற்றொன்றாகப் பாவிக்க முடியும். பார்த்திராத பிரம்மத்தை உண்மை யென்று கூறி, பார்க்கும் உலகை மித்தை, மாயை, மருள் என்று கூறுவது குருடன் பார்க்கும் பார்வை யாகும். மலடி மக்களைப் பெற்றுள்ள கதையை ஒக்கும். வேதாந்திகள் தங்கள் வாதத்தில் மறைந் துள்ள வழுவைக் கவனியாமல், வேதாந்தம் பேசுவது விசனிக்கத் தக்கதே.”3

இவ்விளக்கத்தை நோக்கினால், அவரது ஆழ்ந்த சிந்தனையையும், தெளிந்த உரைநடையையும் அடை யாளம் காணலாம். கயிற்றையும், பாம்பையும் பார்த்தவனுக்குத்தான் கயிற்றைப் பார்க்கும்போது பாம்பாகவும், அதே போன்று கிளிஞ்சலையும் வெள்ளியையும் பார்த்தவனுக்குத்தான், கிளிஞ்சலைப் பார்க்கும்போது வெள்ளியாகவும் தோன்றும். ஒன்றை மட்டும் பார்த்தவனுக்கு அவனுக்கு மற்றொரு பொருளாக எண்ணத் தோன்றாது. இது தான் உண்மை. ஆகவே, பிரம்மத்தைக் கண்டிராத ஒருவன், இவ்வுலகத்தை எப்படி பிரம்மாக உணர முடியும் என்கிறார். அவரின் கேள்வி, சரியான கேள்விதானே! இந்த விளக்கத்தை அடுத்து, அவர் மற்றொன்றையும் விளக்கிக் காட்டுகின்றார். அதுவும் மிக முக்கியமானது.

“பார்த்ததைப் பொய்யென்று வழங்கும் வேதாந்த மருளால் (Idealist illusions) உலகில் விளைந்த தீமைகளுக்குக் கணக்கே இல்லை. உலகில் பிறந்து வளர்ந்து வாழவேண்டிய மக்களுக்கு, இவ்வுலகமே பொய்யென்று மனப்பாதகத் தத்துவத்தைப் போதித்து வந்தபடியால், இவ்வுலக சுகவாழ்விற்கு வேண்டியவற்றைத் தேடாமலும், அவற்றிற்கு வழி வகைகளைக் கண்டுபிடிக்காமலும், கற்பனை லோகங்களை நோக்கி, வாழ்நாள் முழுமையும் வருந்தலாயிற்று. மக்கள் கண்ணோட்டம் மேல் உலகின் மேல் வைக்க வைக்க, இவ்வுலக வாழ்விற்கு வேண்டிய அவசியங்களின்மேல் ஆசையில்லாமல் போயிற்று.

இம்மாபெரும் மருளால், இவ்வுலகில் உயிரை இனிது வளர்க்கச் செய்யும் விஞ்ஞானத்தைக் கை விடவும் பழிக்கவும் நேரிட்டது. நமது நாடு விஞ்ஞான ஆராய்ச்சியைக் கைவிட்டதின் முக்கியக் காரணம் என்னவெனில், கற்பனை உலகத்தின் மேல் மக்கள் வைத்துள்ள நோக்கமே காரணமாகும். வாழ வேண்டிய உலகமே பொய்யென்றால், அந்தப் பொய் உலகை ஏன் விசாரித்தறிய வேண்டும்? இந்த மனப்பான்மையை இந்த மருள் வளர்த்தே வந்திருக்கின்றது.”4

உலகத்தை மாயையென பல நூற்றாண்டு களாக வலியுறுத்தி வந்ததால், நம் நாட்டில் ஏற்பட்ட கேடுகளை மேலும் அக்கட்டுரையில் விளக்கிக்கொண்டு போகின்றார். ஆனால், மேலே யுள்ள விளக்கத்தில், அவர் இரு முக்கிய காரணங் களைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்று, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தேடாமல் இருந்தது. மற்றொன்று, விஞ்ஞான ஆராய்ச்சியைக் கைவிட்டது. இவை இரண்டையும் கைவிடுவது மனித வாழ்விற்கு எத்துணை ஆபத்தானது என்பதை கூறவேண்டுவதில்லை. முதல் விளக்கத்தில் அவரின் ஆழ்ந்த சிந்தனையைக் கண்டோம். இரண்டாம் விளக்கத்தில் சமுதாயத்தில் விளைந்த கேடுகளை விமர்சனப் பாங்கில் விளக்குவதில் காண்கிறோம். இரண்டிலும் அவரது உரைநடையின் எளிமை யையும், தெளிவையும் காண்கிறோம். தத்துவத்தை விளக்கும்போதுகூட, அவர் எவ்வளவு அருமை யாக விளக்குகிறார் என்பதை இதன் மூலம் உணரலாம். இவ்விளக்கத்தில் சிக்கலோ நெருடலோ புரியாமையோ சிறிதும் இல்லை. இவை இல்லா மலிருப்பதே சிறந்த கட்டுரையாகும். அவரது உரைநடையில் குளிர்ச்சியும் உண்டு; வெப்பமும் உண்டு; தழுவலும் உண்டு; தாக்குதலும் உண்டு. எது எப்படி இருப்பினும், அக்கட்டுரைகளில் உண்மை, வெளிச்சத்தோடு காட்சியளிக்கும். அவற்றை அக் கட்டுரைகளில் ஆங்காங்கே காணலாம். இப்படிப் பட்ட கட்டுரைகளை வடிப்பவர்களே சிறந்த கட்டுரையாசிரியர் (Man of letters) ஆவர். சிங்கார வேலர் அத்தகையவரே.

மாசும் தூசும் இல்லாத நீரே தூய்மையான நீராகும். அந்தத் தெளிந்த நீரைத்தான் வள்ளுவர் “மணிநீர்” என்று போற்றுவார். அதாவது, மாசு மருவற்று கண்ணாடி போன்று காட்சி அளிப்பதே மணிநீராகும். கட்டுரையும் அப்படித்தான் தெளிந்த நீராகக் காட்சி அளிக்க வேண்டும். அதனால் தான், கம்பர் சிறந்த கவிதையின் பெருமையைச் சுட்டிக்காட்டும்போது, “சான்றோர் கவியெனக் கிடந்த போதாவரியினை வீரர் கண்டார்” என்றார். அதாவது, சான்றோர் கவிதை, கோதாவரி நதியின் தெளிந்த நீரைப் போன்று தெளிவாக இருக்குமாம். உரைநடையும் அப்படித்தான் இருக்க வேண்டும். அத்தகு உரைநடையும் எழுதுபவர்தான் சிங்கார வேலர். அவரது உரைநடை எளிமையும், தெளிவும் கொண்டு இருப்பதுபோல, சுருக்கமும் செறிவும் தருக்கமும் நுட்பமும் கொண்டது. இவைதான், அவரது உரைநடையின் தனிச்சிறப்பு ஆகும். ஆம், அவர் “நடையில் நின்றுயர் நாயகனே” ஆவர்.

சான்று நூல்கள்

1. திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் - பக். 49 - 1964 கழக வெளியீடு - பிராட்வே - சென்னை - 600 001

2. மார்க்ஸ் பிறந்தார் - ஹென்றி வோல்கோவ் - பக் 318 - 1986 முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ

3. தத்துவமும் வாழ்வும் - ம.சிங்காரவேலர் - பக். 26 - 1957 இமய பதிப்பகம் - நாகப்பட்டினம்

4. மு.கு.நூல் - பக். 27-28.

Pin It