marx and engels 3401848 இல் மார்க்சிய மூலவர்களான மார்க்சு, ஏங்கல்சு ஆகியோரால் எழுதி முன்வைக்கப்பட்ட பொதுமையியக் (கம்யூனிஸ்ட்) கட்சி  அறிக்கையின் இக்காலத் தேவை குறித்து எழுதுவதற்கும் படிப்பதற்கும் குமுக, அரசியல் ஆய்வோடு மட்டுமன்றி உளவியலாகவும் நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அந்தக் குறு நூலை வெளியிடும்போது மார்க்சுக்கு 30 அகவை ஆகியிருந்தது. ஏங்கல்சுக்கு 28 அகவை. அன்றைய குமுக அழுத்தம் அவர்களுக்கு அந்தப் படிப்பினைகளைக் கொடுத்திருந்தது.  குமுகத்தைப்பற்றி அந்த அளவு அக்கறையோடு அவர்கள் ஆய்வு செய்திருந்தனர்.

அந்த அறிக்கை நூல்  எழுதப்படுவதற்கு நான்காண்டுகளுக்கு முன்புதான் இருவரும் அறிமுகமாகிப் பழகத் தொடங்கி இருந்தனர்.

மெய்யியலாளர்கள் உலகை விளக்கப்படுத்துவதற்குப் பல வழிகளைக் கையாண்ட நிலையில் அதை எவ்வாறு மாற்றுவது என்பதையே நோக்கமாகக் கொண்ட அறிஞரான மார்க்சு 'தத்துவத்தின் வறுமை' எனும் தன் முதல் நூலை 1847- இல் வெளியிட்ட பின், 1848- இல் வெளிவந்த அறிக்கையே இந்த நூல்.

1847 நவம்பரில் கூடிய பொதுமையியக் கழகம் (கம்யூனிஸ்ட் லீக்) என்ற தொழிலாளர் நிறுவனத்திற்கான வேலைத்திட்டமாக அக்கழகத்தின் பேராயம் மார்க்சையும் ஏங்கல்சையும் எழுதப் பணித்ததிலிருந்து அவர்களால் எழுதி முன்வைக்கப்பட்ட, "இந்தச் சின்னஞ்சிறு புத்தகம் முழுமையான பல தொகுதிகளுக்கு இணையானது; நாகரிக உலகம் முழுவதிலுமுள்ள நிறுவன அடிப்படையில் அமைந்த, போராடும் பாட்டாளி வகுப்பை(வர்க்கத்தை) இந்த நூலின்உணர்ச்சி இன்றளவும் தூண்டி நடத்துகிறது” -என்று தோழர்  இலெனின் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நூல், 1847 நவம்பர் 29ஆம் நாள் முதல், திசம்பர் 8ஆம் நாள் வரை பத்து நாள்கள் இலண்டனில் நிகழ்ந்த இரண்டாம் பேராயத்தில் நடந்த நீண்ட தருக்கங்களின் இறுதியில் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டு எழுதப்பட்டது.

இந்த அறிக்கையை எழுதியதோடு மட்டுமன்றி அதைத் தொழிலாளர் வகுப்பினரி (வர்க்கத்தினரி)டையே பெரும் பயிற்சிக்காகப் பயன்படும் வகையில் பரப்பவும் செய்தனர். தொழிற்கழகங்களைக் கட்டமைக்குமாறும், பாட்டாளி வகுப்புக்கு அரசியல் கல்வி அளிப்பதில் முனைந்து ஈடுபடுமாறும், பெருந்திரளான பாட்டாளி மக்களின் கட்சிக்கு வேண்டிய அடித்தளங்களை நிறுவுமாறும் மார்க்சும், ஏங்கல்சும் தங்களைப் பின்பற்றுவோரை வலியுறுத்தினர்.

இந்த அறிக்கை எழுதப்பட்டதிலிருந்து அதன் கருத்துகள் முற்றிலும் சரி என நிறுவுவதற்காகக் “கட்சியே புரட்சிவயப்பட்ட திறமையின் சிறந்த பயிற்சிப் பள்ளி” என முன்மொழிந்து, கடுமையாக அவர்கள் உழைக்க வேண்டியிருந்தது.  

செருமனியில், சுவிட்சர்லாந்தில், இங்கிலாந்தில், அமெரிக்காவில் எல்லாம்  பலமுறை இந்த அறிக்கை  அச்சிட்டுப் பரப்பப்பட்டது.

இறுதியாக 1872 - ஆம் ஆண்டில் செருமனியில் வெளியிட்ட பதிப்புக்குத்தான் முதன்முறையாக ஒரு  முகவுரையை மார்க்சும் எங்கல்சும் எழுதினர்.

1848 தொடங்கி 1872 வரை   "இடைப்பட்ட 25 ஆண்டுகளில் நிலைமை எவ்வளவோ மாறி இருந்தபோதிலும்  இந்த அறிக்கையில் வகுக்கப்பட்டுள்ள பொதுவான கோட்பாடுகளை முழுமையாகப் பார்த்தால் அவை என்றும்போல் இன்றும் சரியானவை. இங்கும் அங்குமாகச் சில விளக்கங்களைச் செம்மைப்படுத்தலாம். அறிக்கையே கூறுவதைப்போல, இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கடைப்பிடிக்கும் செய்தி, எந்த இடத்திலும் சரி, எந்தக் காலத்திலும் சரி, அந்தந்தக் காலகட்டத்தின் வரலாற்று வழிபட்ட நிலைமைகளைப் பொறுத்திருக்கிறது" என்று மார்க்சும்,  ஏங்கல்சுமே குறிப்பிட்டிருக்கின்றனர்.

அதன்பிறகு  அறிக்கையின் உருசிய மொழிபெயர்ப்பு (முதல் உருசிய மொழிப் பதிப்பு 1860-70 ஆண்டுகளில் “கோலகல்” என்ற இதழில் வெளிவந்திருந்த போதும்) முழு வெளியீடாக 1882 சனவரி 21 -ஆம் நாளன்று மார்க்சு ஏங்கல்சின் முன்னுரையோடு வெளிவந்தது.

தொடர்ந்த 1883 ஆம் ஆண்டின் மார்ச்சு மாதத்தில், மார்க்சு மறைவுற்றபின் (1883 ஆம் ஆண்டின்  செருமானியப் பதிப்பு, 1888 ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்பு, 1890 ஆண்டின் செருமானியப் பதிப்பு, 1892 ஆம்ஆண்டின் போலீசு - மொழிப் பதிப்பு, 1893ஆம் ஆண்டின் இத்தாலியப்  பதிப்பு -ஆகிய) ஐந்து மொழிபெயர்ப்புப் பதிப்புகளுக்கும் ஏங்கல்சு மட்டுமே முன்னுரை எழுதி வெளியிட்டார்.

ஆக மொத்தத்தில்  அந்த நூலுக்கு எழுதப்பட்ட ஏழு  முன்னுரைகளும் மிகவும் கவனிக்கத் தக்கவை.

முன்னுரைகளை அடுத்து நூல் தொடங்கும் தன்மை மிகவும் ஈர்ப்பானது.

ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. பொதுமையியம் (கம்யூனிசம்) என்ற பூதம்.... - என்று தொடங்கி,

  1. பொதுமையியம்(கம்யூனிசம்) ஒரு தனிப் பெரும் ஆற்றல் என்பதை ஐரோப்பிய ஆற்றல்கள் அனைத்தும் ஏற்கனவே ஏற்று இசைந்து விட்டன.
  2. தம் கருத்துகளையும், தமது இலக்குகளையும், தமது போக்கு களையும் பொதுமையர்கள் (கம்யூனிஸ்டுகள்) வெளிப்படையாக உலகறிய பரப்புரை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது

- என்று தொடங்கும் நூலின் உள்ளடக்கம்:

  • · முதலாளிகளும் பாட்டாளிகளும்,
  • · பாட்டாளிகளும் பொதுமையர்களும்,
  • · குமுகிய இலக்கியமும் பொதுமையிய இலக்கியமும்,
  • · இன்றுள்ள (1800களின் காலங்களில்) பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்பாகப் பொதுமையர்களின் நிலை

- என்பதான தலைப்புகளில்  விரிவான ஆய்வுகளையும், வேலைத் திட்டங்களையும் அந்த அறிக்கை முன்வைத்திருந்தது.

"இதற்கு முன் நடைபெற்ற வரலாற்றடிப்படையிலான இயக்கங்கள் அனைத்தும் சிறுபான்மையோர் பங்கு கொண்ட இயக்கங்களாகவோ, சிறுபான்மையோரின் நலனுக்காக நடந்த இயக்கங்களாகவோதாம் இருந்தன. பாட்டாளி வகுப்பு (வர்க்க) இயக்கமோ மிகப்பெரும்பான்மை யோர் தன்னுணர்வுடன் நடத்தும், மிகப் பெரும்பான்மையோருடைய நலனுக்கான இயக்கம். குமுகத்தின் அடித்தட்டிலுள்ள பாட்டாளிய வகுப்பு, அதன் மேலே சுமத்தப்பட்டுள்ள அதிகார வழியான குமுகத்தின்  அனைத்துத்  தட்டுகளையும்  முழுமையாகத் தூக்கி எறியாமல், தன்னைத்தானே அசைத்துக்  கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவும் முடியாது" - என்று விளக்கப்படுத்திய அறிக்கை பொதுமையர்கள் முனைப்பில் பாட்டாளி வகுப்பு முன்னெடுத்து நடத்தவிருக்கும் புரட்சி வழிப்பட்ட போராட்டத்தை முதலாளிய வகுப்பு என்னென்ன வகையில் எல்லாம் இழித்துரைக்கிறது என்றும், அதற்கு உண்மையான விடை என்ன என்றும் எளிமையாகவும் வலிமையாகவும் விளக்கியது..

  • · மாந்தனுடைய சொந்த உழைப்பினால் விளைவிக்கப்பட்ட சொத்தைத் தனி உடைமையாக்கிக் கொள்ளும் உரிமையைப் பொதுமையர்களாகிய நாங்கள் ஒழிக்க விரும்புவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது..
  • · நாங்கள் தனிப் பண்பையும் உரிமையையும் ஒழிப்பதாக முதலாளிகள் கூறுகின்றனர்!..
  • · நாங்கள் தனி உடைமையை ஒழித்துவிடக் கருத்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கண்டு அவர்கள் நடுங்குகிறார்கள்!..
  • · குடும்ப ஒழிப்பு! இந்தச் சிந்தனையைக் கேட்டவுடன் தீவிரர்களும் சீறி எழுகின்றனர்..
  • · கல்வியை ஆளும் வகுப்பின் செல்வாக்கிலிருந்து மீட்கவே பொதுமையர்(கம்யூனிஸ்டு)கள் முயல்கின்றனர்..
  • · பொதுமக்களாகிய பொதுமையர்(கம்யூனிஸ்டு)கள் பெண்களைப் பொதுவாக்கி விடுவீர்கள் என்று முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீரிடுகிறார்கள்..
  • · தேசங்களையும் தேசிய இனங்களையும் ஒழிக்க விரும்புவதாகப் பொதுமையர்கள் (கம்யூனிஸ்டுகள்) மீது குற்றம்சாட்டப்படுகிறது..

- ஆகிய வகையில் பொதுமையர்கள் (கம்யூனிஸ்டுகள்) மீது சொல்லப்பட்ட அவதூறுகளுக்கெல்லாம் சுருக்கமான தெளிவான விடையைக் கட்சி அறிக்கையின் இரண்டாம் பகுதி தருகிறது.

அவை மட்டுமன்றி, குமுகிய (சோசலிச)க் கோட்பாடுகள் புரட்சி இலக்கு நோக்கிப் பரவத் தொடங்கிய அந்தத் தொடக்கக் காலங்களிலேயே நிலக்கிழமை குமுகியம்(சோசலிசம்), குட்டி முதலாளியக் குமுகியம்(சோசலிசம்), செருமானியக் குமுகியம் அல்லது உண்மைக் குமுகியம், பழமைப் பிடிப்புள்ள குமுகியம் அல்லது முதலாளியக் குமுகியம், திறனாய்வுக் கற்பனைக்  குமுகியமும்- திறனாய்வுப் பொதுமையியமும் - என்றெல்லாம் எந்த வகையில் எல்லாம் திரிபான புரிதல்களும் நடைமுறைகளும் இருந்தன என்பதற்குரிய விளக்கங்கள் தெளிவாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

இறுதியாகத், " தமது கருத்துகளையும் இலக்குகளையும்  மறைத்து வைப்பதைப் பொதுமையர்கள்(கம்யூனிஸ்டுகள்)  இழிவாகக் கருதுகிறார்கள். இன்றைய குமுகாய (சமுதாய) நிலைமைகள் அனைத்தையும் வலுக்கட்டாயமாக வீழ்த்தினால்தான், தமது இலக்குகளை அடைய முடியும் என்று அவர்கள் வெளிப்படையாக அறிவிப்பு செய்கிறார்கள். பொதுமையியப் புரட்சியை நினைத்து ஆளும் வகுப்புகள் நடுங்கட்டும்! பாட்டாளிகளுக்குத் தமது  அடிமைத்தளைகளைத் தவிர இழப்பதற்கு வேறொன்றும் இல்லை, வெல்வதற்கு ஓர் உலகம் இருக்கிறது" - என்று பாட்டாளியப் புரட்சியின் இலக்கின் நோக்கத்தை ஓங்கி ஒலிக்கிறது அறிக்கை. கடைசி வரியாக,  'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!' என்ற முழக்கம் அறிக்கையை அணி செய்கிறது.

அறிக்கையும் தமிழ் மொழிபெயர்ப்புகளும்

1917 உருசியப் புரட்சிக்கு முன்பே 30 மொழிகளிலும், ஆப்சுபர்க் - பேரரசின் கீழ் 55 செருமானியப் பதிப்பு, 34 ஆங்கிலப் பதிப்பு, 26 பிரஞ்சுப் பதிப்பு, 11  இத்தாலியப் பதிப்பு  என்றெல்லாம் 150 பதிப்புகளுக்கும் மேலாகப் பொதுமையியக் கட்சியின்  அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரிட்டிசு  இந்தியாவுக்குள் வங்காள மொழியில் தொடங்கி, தமிழ், உருது, மராட்டி, மலையாளம், தெலுங்கு. குசராத்தி, இந்தி, ஒரியா, பஞ்சாபி  - எனப் பெரும்பான்மை மொழிகளில் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழில் முதன்முதலில் பெரியார் ஈவெரா அவர்களின் முயற்சியால்தான் அறிக்கை தமிழாக்கம் செய்யப்பட்டுச்  ‘சமதர்ம அறிக்கை’ எனும் பெயரில் வெளிவந்தது.

1931 அக்டோபர் 4ஆம் நாள் வெளிவந்த குடியரசு இதழில் பெரியார் அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆனால்,  அந்த அறிக்கையை யார் மொழிபெயர்த்தது என்ற குறிப்பு அந்த இதழில் இல்லை. மேலும் அறிக்கையின் முதல் பகுதி மட்டுமே வெளியிடப்பட்டது. அதன் பிறகு அறிக்கை 1948-இல் இசுமத்  பாட்சாவால் முழுமையாக மொழிபெயர்க் கப்பட்டு “சனசக்தி” இதழில் வெளிவந்தது.

1888 ஆம் ஆண்டின் ஆங்கிலப் பெயர்ப்பு அறிக்கையை அடிப்படை யாகக் கொண்டு 1979 -இல் மாசுக்கோ முன்னேற்றப் பதிப்பகம், தோழர் இரா. கிருசுணையாவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அறிக்கை பல பதிப்புகளாக ஏறத்தாழ ஆறு இலக்கம் படிகள் வெளியிடப் பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு 2007, 2008 களில் சென்னை பாரதி புத்தகாலயத்தாலும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாலும் இலக்குவன், பேரின்பன்  ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இவையன்றி பலரும் அறிக்கையின் மீதான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவற்றின்வழி  மொழிபெயர்ப்புகள் குறித்தும் சிலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

1848 - ஆம் ஆண்டில் வெளிவந்த செருமானியப் பதிப்புக்கும் 1888 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் இடையிலேயே பாட வேறுபாடுகள்  இருப்பதாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

அந்த நிலையில் 1888 ஆம் ஆண்டின் ஆங்கில அறிக்கையிலிருந்து மாசுக்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட தமிழ் மொழிபெயர்ப்புதான் தமிழில் பெரிதும் அறியப்பட்ட நிலையில் அதில் உள்ள சில கருத்துகள் தமிழகப் பொதுமையர்கள் (கம்யூனிஸ்டுகள்)  கவனித்தாக வேண்டியவையாக இருக்கிறது.

அந்த மொழிபெயர்ப்பில் மார்க்சு எங்கெல்சு எழுதிய முன்னுரைகள் முழுமையாய் இணைக்கப்பட்டுள்ளன.

ஆயினும், அறிக்கையின் மொழிநடையில் சமசுக்கிருதச் சொல் லாடல் கலப்பு அதிகமாக இருப்பது தவிர்த்திருக்கப்பட வேண்டியது.

சங்கற்பம், சௌஜன்யம், பிரஷ்டம், பிதிரார்ஜிதம், சந்தேகாஸ்பதமான, அபவித்ர, சர்வரோக, பரோபகாரி, பரிகசிக்கதக்க, பிரேரித்த, புனர்நிர்மான, தஸ்தாவேஜ் - என்கிற வகையில்  நூற்றுக்கணக்கானசொற்கள் தமிழுக்கும் தமிழக வெகுமக்களின் வழக்குக்கும் அப்பாற்பட்ட விளங்காத சமசுக்கிருத சொற்களாக இருப்பதும்,

வாய் வேதாந்த, சாஸ்திர - போன்ற மார்க்சியத்திற்கும் தமிழியத்திற்கும் தொடர்பற்ற ஆரியவயப்படுத்தப்பட்ட  சொற்களாக  இருப்பதும், அப் பொதுமையியக் கட்சி அறிக்கையை முழுமையாக விளங்கிக் கொள்வதில் தடை ஏற்படுத்தக்கூடியவை ஆகிறது.

அதுவும் வாய் வேதாந்த, சாஸ்திர - என்கிற சமசுக்கிருத சொற்களின் பொருள்கள் வேதம், புராணம் ஆகிய தொடர்புடையவையான நிலையில், அவை போன்றதான சொற்களை அவற்றுக்கு முற்றிலும் நேரெதிரான கோட்பாட்டு நூல்களில் பயன்படுத்துவது பெரும் முரணானவை  என்பதை உணர வேண்டும்.

இந்த இடத்தில் வேதாந்த என்ற சொல்  லீவீரீலீ யீணீறீutவீஸீ - என்ற ஆங்கிலச் சொல்லின் பெயர்ப்பு என்றும், அதற்கு (2014 இல்) எசு. வி. இராசதுரை அவர்கள் தம்  மொழிபெயர்ப்பில் 'அலட்டல் பேச்சுகள்' என்று மொழிபெயர்த்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த இடத்தில் மொழிநடை குறித்துத் தோழர் இலெனினின் கண்டிப்பையும் கண்டனத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

“நாம் உருசிய மொழியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். அயல்மொழிச் சொற்களை நம்முடைய மொழியில் தேவையின்றிக் கையாண்டு வருகிறோம். அயல்மொழிச் சொற்களைக் கையாளும்போது அவற்றைத் தவறாகவே கையாண்டு வருகிறோம். உருசிய மொழியில்  nedchoty, nedostatki, probaly - என்னும் அயல் மொழிச் சொற்களை நம்முடைய மொழியில் ஏன் ஆள வேண்டும்” - என்றும்,

“அவ்வாறு செய்கிற (பிறமொழிச் சொற்களைக் கலந்து கையாளுகிற) ஓர் எழுத்தாளரை மன்னிக்கவே முடியாது. அயல் மொழிச் சொற்களைத் தேவையின்றி கையாள்வதன் மீது ஒரு போரைத் தொடுக்கவேண்டிய நேரம் இதுவன்றோ?”

(தொகைநூல்கள் பக்கம் 298)

- என்றுமான தோழர் இலெனினின் கருத்து ஒருபுறம் சிந்திக்க வேண்டியதான நிலையில், மொழிபெயர்ப்பில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு செய்தியையும் இங்குக் காட்ட வேண்டியுள்ளது.

மொழிபெயர்ப்பாளர், தான் கொண்டிருக்கிற கருத்துகள் கோட்பாடுகளில் நின்று மொழிபெயர்க்காமல் படைப்பாளர்களின் கருத்தில் கோட்பாடுகளில் நின்று மொழிபெயர்ப்பதே மிக முகாமையானது.

தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள சில பிறழ்ச்சிகளுள் ஒன்றை இங்குக் கட்டாயம் அறிந்து கொள்ள  வேண்டியுள்ளது.

அறிக்கை வடிவமைக்கப்பட்ட நூலின் முகப்பிலும், பெரும்பாலான மார்க்சிய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ள 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!' என்ற முழக்கம் சரியான வகையில் மொழிபெயர்க்கப்படவில்லை.

1888-இலும், அதன்பிறகும் செய்யப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பில் 'working men of all countries, unite!' என்றும்,  'proletarians of all countries, unite!' - என்றுமே மொழிபெயர்த்திருக்க, அதைத் தமிழில் இரா. கிருசுணையா உலகத் தொழிலாளர்களே  ஒன்று சேருங்கள் -  என்று மொழிபெயர்த்தது  அரசியல் பிழையானது என்று இன்றுவரை எவராலும் சுட்டப்படவில்லை.

உலகிலுள்ள தொழிலாளர்களைப் பொதுப்பட ஒரே அடையாளத்தில் ஒரு சேர அழைத்ததாகவே தமிழின் மொழிபெயர்ப்பு உள்ளது. ஆனால், எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களையும் ஒன்று சேரச்சொல்கிற பொருளுடையதாகவே ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளதைக் கவனிக்க வேண்டும்.

தமிழ் மொழிபெயர்ப்பின் பொருள், பொதுமையியக் கட்சி அறிக்கையினுள் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கே முரணானதாக உள்ளதைக் கவனிக்க வேண்டும்.

இந்த இடத்தில் இரு ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் அறிவோம்..,

" though not substance, yet in form, the struggle of the proletariat with the bourgeoisie in at first a National struggle. The proletariat of each country must, of course, first of all settle matters with its own bourgeoisie. "

- என்றும்,

" In form, though not in content, the struggle of the proletariat against the bourgeoisie is at first a nation one. The proletariat of each country must naturally first settle accounts with its own bourgeoisie."

- என்ற ஆங்கில வரிகளுக்கு இரா கிருசுணையா கீழேயுள்ள மொழிபெயர்ப்பைத் தந்திருக்கிறார்:

"பூர்சுவா வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டமானது முதன்முதலில் உட்பொருளில் இல்லாவிட்டாலும் உருவத்தில் தான், ஒரு தேசியப் போராட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதன்முதலில் தத்தம் நாட்டுப் பூர்சுவா வர்க்கத்துடன்தான் கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டும்"  - என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

 இதில் கவனிக்க வேண்டிய இரண்டு செய்திகளில் முதல் செய்தியை இந்த இடத்தில்  முதலில் பார்ப்போம்:

“முதலாளியத்தை எதிர்த்து உலக அளவில் ஒரே கட்டத்தில் கணக்குத் தீர்க்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிடவில்லை. மாறாக  ஒவ்வொரு நாடும் தத்தம் நாட்டு அளவில்தான் முதலில் கணக்குத்தீர்த்துகொள்ள வேண்டும்”என்பதைத் தெளிவுபடுத்துவதைக் கவனிக்க வேண்டும்.

அப்படிச் சொன்னதன் பின்பும்,  உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற பெயர்ப்பு எந்த அளவில் பிழைபாடான மொழிபெயர்ப்பாக அமைந்துவிடுகிறது என்று எண்ண வேண்டும்.

இந்த இடத்தில் இன்னொரு செய்தியும் கவனிக்கத்தக்கது..

சோசலிஸ்ட், கம்யூனிஸ்டு, பூர்ஷ்வா போன்ற  சொல்லாடல்களுக் கெல்லாம் தமிழும் அல்லாமல் ஆங்கிலமும் அல்லாமல் அப்படியே  பெயர்ப்புகளைச் செய்ததும் அப்பெயர்ப்புகளை இன்று வரை விடாமல் பிடித்துக்கொண்டு வருவதன்வழி, தமிழ்மொழி சொல் வளமற்ற மொழி என்றல்லவா தவறுதலாக உணரப்படும்.

சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் - என்பதற்கு, சோசலிச, கம்யூனிச  என்றெல்லாம் மொழிபெயர்த்ததும் பின்பற்றுவதும் எதற்காக? இசம் - என்ற பின்னொட்டை சமசுக்கிருத்தில் செய்யவேண்டிய தேவை என்ன?

இவை போன்ற மொழிபெயர்ப்புகள் மொழிவழி அக்கறையற்றது என்று மட்டுமன்று குமுக வழி அக்கறையற்றதும்  என்றல்லவா  கருத வேண்டியுள்ளது.

எனவே, தமிழிய உணர்வோடு அதாவது  தமிழ்மொழி, குமுக, அரசியல், பொருளியல் கண்ணோட்டத்தோடும் உழைக்கும் மக்களுக்கு உணரச் செய்யும்  பொறுப்புணர்வோடும் இப் பொதுமையியக் கட்சி அறிக்கை மட்டுமன்று, அக் கோட்பாட்டின் நூல்கள்  அனைத்தும்  மொழிபெயர்க்கப்பட்டாக வேண்டும். அப்போதே அக்கோட்பாடு தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் உரிமைக் கோட்பாடாக மாறும், விளங்கும்.

அறிக்கையின் நிகழ்காலத் தேவை

அறிக்கை முன்வைத்திருக்கும் குமுக அரசியலின் நிகழ்காலத் தேவையை  ஆய்வதும்   இக் காலச் சூழலுக்குகந்த வகையில் பொருத்திப் பார்ப்பதும் மிக முகாமையானது.

அறிக்கையை ஆய்வதும் பொருத்திப் பார்ப்பதும் என்பது நாம் வாழ்கிற குமுகத்தை ஆய்வதும் அதை இந்த அறிக்கையின் பகுப்பாய்வோடு பொருத்திப் பார்ப்பதும் என்ற பொருளைக் கொண்டதாகவே இருக்க முடியும்.

நாம் வாழ்கிற குமுகம் என்பதன் பொருள்,  நாம் வாழக் கட்டாயப் படுத்தப்பட்டுள்ள அரசின் கீழான  குமுகம் என்பதன்று. இங்குள்ள அரசு என்பது வரலாற்று வழிபட்டு வரலாற்றின் இயங்கு நிலை வளர்ச்சியில் அமைந்த ஆண்டை  அதிகார அரசாக இல்லை. மாறாக, வந்தேறிய வல்லரசின் அதிகாரச் சுரண்டல் திமிர் நோக்கத்தில் பல்வேறு மொழித் தேசங்களை அடக்கி அடிமைப்படுத்தி உருவாக்கப்பட்ட விரிவாளுமை கொண்ட அரசு வடிவமாக அமைக்கப்பட்டிருக்கிறது..

 அன்றைக்குப்  பிரிட்டிசு இந்திய அரசு என்கிற பெயரோடு அது உருவாக்கப்பட்டது, பிரிட்டிசு வல்லரசு இங்கு இருக்கிற அதிகார வகுப்புகளிடம் ஆட்சி அதிகாரத்தைக் கையளித்துவிட்டுப் போனபின் இந்தியா என்கிற  பெயரோடு வல்லாளுமை அரசாக அது  உருக்கொண்டிருக்கிறது.

அதற்கு அடிமைப்பட்ட பல்வகைப்பட்ட குமுகங்களை யெல்லாம் சேர்த்து ஒரே குமுகம்,  ஒரே பண்பாடு, ஒரே வாழ்க்கை முறை, ஒரே வரலாறு -  என இந்திய அதிகார வகுப்பு சுட்டிக் காட்டுவதை மார்க்சிய வழிபட்ட பகுப்பாய்வுக்குரியவர்கள்  ஏற்றுக் கொள்ள முடியாது.

அதிகார ஆண்டை வகுப்புகளின் வரலாறே பண்பாடுகளே அடக்கப்பட்ட மக்களின் வரலாறாகப் பண்பாடாக இருந்திட இயலாது.

அதுபோல்தான் அரசு அதிகாரம் செலுத்துகிற தன் அதிகார ஏந்துக்காக வல்லரசால் உருவாக்கப்பட்ட விரிவாக்க ஆளுமை அரசை, நாட்டையெல்லாம் அதற்குள் அடக்கப்பட்ட தேசம் தனக்கான தேசமாக, அரசாக,  நாடாகக்  கருதி ஏற்றுக்கொள்ள முடியாது.

“ஒவ்வொரு தேசத்தின் பாட்டாளி வகுப்பும் முதலில்  தத்தம் தேச முதலாளிய வகுப்புடன்தான் கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டும்’’ எனப்  பொதுமையிய அறிக்கைப் பதிவைக் கவனிக்க வேண்டும்.

அதாவது தேசத்தின் பாட்டாளி வகுப்பு என்கிறது அறிக்கை.

இதன் ஆங்கில பெயர்ப்பை  கவனித்தால்,

"though not a substance, yet inform the struggle of the proletariat with the bourgeoisie at first a National struggle. The proletariat of each country must Of course first of all settle matters with its own bourgeoisie."

- இதற்குரிய மொழிபெயர்ப்பை தோழர் எசு. வி, இராசதுரை அவர்கள் செய்யும் போது,

“பூர்சுவா வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம் தொடக்கத்தில் உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் தேசிய வடிவிலானதாக உள்ளது. ஆகவே இயல்பாகவே ஒவ்வொரு தேசத்தையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் தனது சொந்த பூர்சுவா  வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டியதாகிறது."

- என்று ஆங்கில பெயர்ப்பில் நேஷனல், கண்டிரி - என இரண்டு சொற்களும் படுத்தப்பட்டிருக்கும் போதும், தோழர் எசு வி இராசதுரை அவர்கள் இரண்டையும் தேசம் என்று ஒரே சொல்லில் மொழிபெயர்த்திருக்கிறார். தோழர் இரா. கிருசுணையாவோ ஆங்கிலப் பெயர்ப்பிலுள்ள வகையிலேயே தமிழ் மொழிபெயர்ப்பில் தேசம், நாடு என இரண்டையும் பெயர்த்துள்ளார்.

ஆங்கிலப் பெயர்ப்பில் உள்ளதிலோ தேசமும் நாடும் ஒன்றாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டின் பொருளும் ஒன்றாக முடியாது. தேசம் என்பது அரசு சார்ந்ததாகவும் இருக்கலாம், தனக்கென தனித்த அரசற்ற நிலையிலும் இருக்கலாம். ஆனால் நாடு என்பது அரசைக் கொண்டதாக மட்டுமே இருக்க முடியும்.

1848 ஆம் ஆண்டின் காலங்களில் இரண்டிற்குமான அடையாளம் வேறுபடுகின்ற வகையில் குமுக அமைப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதைய காலம்  அப்படிப்பட்டது அன்று.

தோழர் இரா. கிருசுணையா தமிழில் மொழிபெயர்த்த 1979 ஆம் ஆண்டின் காலத்தில்கூட அவர் தேசம், நாடு என இரண்டின் சொற்களையும் இந்தியாவை அடையாளப்படுத்தி உணர்ந்து கொண்டதாகவே பொருள் உணர்த்துகிறது. இந்தியாவை அரசு சார்ந்த நிலையில் நாடு என்றுகூட சொல்ல முடியுமே அன்றி, தேசம் என்று அடையாளப்படுத்திட முடியாது.

இந்தியாவிற்குள் பல்வேறுபட்ட தேசங்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிற நிலையில், தமிழ்நாட்டின் பாட்டாளி வகுப்பு முதலில் எந்த முதலாளிய வகுப்பை எதிர்த்துக் கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அறிந்து கொள்ளாமல்தான் இன்றுவரை அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

 இந்திய அதிகாரத்திலோ அல்லது தமிழ்த் தேசத்திலோ உள்ள முதலாளிய வகுப்பு எத்தகைய முதலாளிய வகுப்பு, பாட்டாளிய வகுப்பு   என்ன தன்மையில் உள்ளது? பிற வகுப்புகளெல்லாம் என்னென்ன வகுப்புத் தன்மைகள்  கொண்டவையாக உள்ளன என்கிற பகுப்பாய்வுகளைச் செவ்வனே செய்ய முடியாததற்குக் காரணம்,  தன் குமுகம் எது? எந்தக் குமுகத்  தன்மையில் அத்தகைய பகுப்பாய்வுகளைச் செய்வது என்கிற தெளிவு இல்லாததே - என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவைத் தேசம் என்று மதிப்பிட்டு, இந்தியப் பாட்டாளி வகுப்பையெல்லாம் ஒரு சேர ஒருங்கிணைத்துப் பேரெழுச்சி படுத்த வேண்டும் என்கிற முயற்சி இயங்கா நிலை முயற்சியாகவே நீண்ட நெடியகாலத்தை விழுங்கி விட்டதை உணர வேண்டும்.

இங்கு ஏற்பட்ட இருபெரும் அடிப்படைப் பிழைகளில் ஒன்று, இந்தியாவைத் தேசமாகக்  கருதி இந்திய அளவில் பாட்டாளி வகுப்பைத் திரட்டி வகுப்புப் போராட்டத்தைச் செய்வதற்காகத் திட்டமிட்டது. மற்றது, இந்தியாவில் உள்ள தேசிய இனங்களைத் தேச எழுச்சிக்குரிய களங்களாகச் சிலர் அடையாளம் கண்டிருந்தாலும் அவற்றை முழுமையான வகுப்புப் பகுப்பாய்வு செய்து போராட்டங்களில் ஒருங்கிணைக்கிற கண்ணோட்டத்தை இயக்கங்களுக்குள் ஏற்படுத்தாதது.

ஒவ்வொரு தேசத்தின் பாட்டாளி வகுப்பும், அந்தந்த தேசத்தின் சொந்த முதலாளிய வகுப்பின் கணக்கைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் இங்குள்ள தேசங்களின் சொந்த முதலாளியம் என்ன வகையானதாக இருக்கிறது? அது அதிகார வகுப்பாக இருக்கிறதா? அல்லது அது தானே பன்னாட்டு முதலாளிய வகுப்புகளால் நசுக்கப்படுகிறதா? - என்கிற வகுப்புப் பகுப்பாய்வையும் தேசங்களின் பாட்டாளிய வகுப்பு செய்தாக வேண்டும். 

அந்த வகையில் ஒவ்வொரு தேசத்தின் பொதுமையர் (கம்யூனிஸ்டு)களும் அந்த அந்தத் தேசத்தின் வகுப்பு(வர்க்க)ப் பகுப்பாய்வுகளைத் தொடங்கியாக வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள வகுப்புகளின் குமுகப் பகுப்பாய்வைச் செய்வது நம் முன்னுள்ள முதன்மைக் கடமையாகிறது.

ஆங்கிலேய வல்லரசுகள் வருவதற்கு முன்பாகத்  தமிழகக் குமுக அமைப்பு சாதி அதிகாரத்திலான நிலக்கிழமை அமைப்பாகவே இருந்தது. நிலக்கிழமையை வீழ்த்தி முதலாளியம் வளர்வதற்கான சூழ்நிலை இங்கு ஏற்படவில்லை. உழைப்பின் மீத்தம் (உபரி) மூல முதலாக (மூலதனமாக) மாறுகிற சூழல் அமையாமல், சாதி அமைப்பும் பார்ப்பனியச் சார்புடைய  நிலக்கிழமை அமைப்பும் பாழடித்தன. வேள்விகள்(யாகங்கள்), பகட்டான மக்களின் வாழ்க்கை முறைகள் உபரி  என்கிற மிகை உருவாக்கத் திரட்சியைப் பாழடித்தன. சில சாதி மக்கள் மிகை உருவாக்கத்தைச் சேர்ப்பதற்கே நிலக்கிழமை அமைப்புகள் தடை செய்ததோடு, அம் மிகை உருவாக்கங்களை அழித்தன அல்லது சூறையாடின.

இந்நிலையில் வந்தேறிய பன்னாட்டு முதலாளியமே தமிழகத்தில் வளர்ந்தது. தமிழகத்திற்குள் முதலாளிய வளர்ச்சி இயல்பான முதலாளிய வளர்ச்சியாக இல்லாமல் மாறுபட்ட முறையிலேயே வளர்ந்தது.

தமிழ்நாட்டில் வளர்ந்த வந்தேறிய பன்னாட்டு முதலாளியம் இங்கு உள்ள நிலக்கிழமையை இன்னும் சொன்னால் சாதிய நிலக்கிழமையை வீழ்த்திவிட்டு வளராமல்,  அவற்றோடு ஒட்டி உறவு கொண்டே அதிகாரம் செலுத்தி வருகிறது. மேலும் வல்லரசியச் சார்பு நிலையில் தரகுத் தன்மையிலான முதலாளியமாகவே அது  வளர்ந்தது.

இதனால் தேசிய முதலாளிய உருவாக்கங்கள் சிறு(வீத)அளவிலான உருவாக்கங்களாக இருக்கவே செய்கிறது. அது பெரு(வீத)அளவிலான உருவாக்க நிலைக்கு வளர முடியாமல் முடக்கப்படுகிறது.

ஐரோப்பாவில் பொதுவாகக் கட்சிக்கான அறிக்கை உருக்கொள்ளுகிற சூழல் உருவானதுபோல்  இங்குத் தமிழ்நாட்டில் சூழல் உருவாகிறபடி  இத்தேசத்தின் முதலாளியம் வளரத் தடை ஏற்பட்ட  நிலையைக் கண்டோம். அந்நிலையில் வந்தேறிய சுரண்டல் தன்மையிலான பன்னாட்டு முதலாளியம்  தன்னுடைய ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டதுடன் 1858 இல் அவ்வந்தேறிய வணிகக் குழுமத்தின் ஆட்சி  பிரிட்டிசாரின் நேரடி ஆட்சியாகவே  நடக்கத்தொடங்கியது.

அது காலம் தொடங்கி அதனால் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட பிரிட்டிசு இந்திய அரசின் கீழ்த் தமிழகமும் பிறமொழித் தேசங்களும் அந்த அரசுக்கு அடிமை நாடுகளாயின.

அந்த ஆங்கில வல்லரசாட்சிக்கு நேரடியாக  அடிமைப்பட்டிருந்த சூழலிலேயே முடக்கப்பட்டிருந்த தமிழகத் தொழில் வணிக வளர்ச்சி முடக்கத்தால் அவற்றையட்டிய பிற அடக்குமுறைகளால் தமிழர்கள்  ஒரு தேசிய இனமாகவும், தமிழகம் ஒரு தேசமாகவும்  உருக்கொள்ளுகிற நிலை மெல்ல உருவானது.

இந்நிலையில், பிரிட்டிசு இந்திய அதிகாரக் கட்டமைப்பின் கீழ் அடைக்கப்பட்டிருந்த மக்களின் பேரெழுச்சிகளாலும்,  உலக அளவில் ஏற்பட்ட நெருக்கடிகளாலும் வெளியேறும் நிலைக்கு ஆளான பிரித்தானிய ஆங்கில அரசு, இந்திய அதிகாரத் தரகு வகுப்புகளிடம்  ஒப்பந்தம் பேசித் தங்களின் சுரண்டலுக்கு ஏதும் தொல்லை ஏற்படாத வகையில் ஆட்சியைக் கைமாற்றிக் கொடுத்துவிட்டுச் சென்றது. அதை இந்தியத் தரகு அதிகார வகுப்புகள் விடுதலை என்று  அறிவித்துக் கொண்டன.

அன்றைக்கிருந்த இந்தியப் பொதுமையிய (கம்யூனிஸ்ட்)க் கட்சியும் அதை விடுதலை  எனக் கொண்டாடியதுதான் வேடிக்கையானது.

இந்நிலையில் இந்தியா பல தேசிய இனங்களை அடக்கிச் சிறைப்படுத்தி இருக்கிற ஓர் அரசாகத், தன் அதிகாரங்களைப் பலவகையில் இறுக்கப்படுத்திக் கொண்டே இருந்தது, இருக்கிறது. பன்னாட்டு வல்லரசுகளின் காவலனாகவும், தானே ஒரு துணை வல்லரசதிகாரம் செய்யும் அரசாகவும் இருக்கிறது.

இந்தியாவை அனைவருக்குமான தாயகமாகவும் அனைவரையும் இந்தியராகக் கட்டாயப்படுத்தித் திணித்து, அத்தகைய இந்திய தேசத்தைப் பாதுகாப்பதே முதல் கடமை என்றும், அத் தேச ஒற்றுமையை மறுத்துக் கேள்வி எழுப்புபவர்கள் தேசப் பகைவர்கள் என்பதாகவும் கூறி வன்முறையால் அனைத்து மொழித் தேசங்களின் உரிமைகளையும் அடக்கி வைத்திருக்கிறது இந்திய அரசு.

எனவே, பன்னாட்டு முதலீட்டு முதலாளிகளுக்கு அடிமைப்பட்ட நிலையிலேயே தமிழகத்தின் உழைக்கும் மக்கள் நசுக்கப்படுகின்றனர். தமிழகத்தின் தேசிய முதலாளிகள் வகுப்புகளும், பிற அனைத்துவகுப்புகளும் பன்னாட்டு முதலாளியர்களையும், அவர்களுக்குப் பாதுகாவலனாக இருந்து, அரசியல்  உள்ளிட்டு அனைத்து நிலைகளிலும்,  அனைத்து இன மக்களையும் அடிமைப்படுத்திடும் இந்திய அரசையும் எதிர்த்து விரட்டிட கடமைப்பட்டவர்களாகவுமே  உள்ளனர்.

ஆனால், பன்னாட்டு வல்லரசுகளையும், இந்திய அரசையும் விரட்டுவதான  அடிப்படையான பணிகளைத் தமிழகத்தின் தேசிய முதலாளிய வகுப்புகள் உள்ளிட்ட நடுத்தர வகுப்புகளால் `சமரச’மின்றிக் கடந்தகாலங்களில் நிறைவேற்றிட முடியவில்லை. அவையெல்லாம் இந்திய அதிகார  வகுப்புகளுடன் ஏதோ ஒரு வகையில் அடங்கிப்போகிற நிலையிலேயே கூட்டாட்சி, தன்னுரிமை என்கிற பெயரில் இணங்கிப்போய்விட்டன, போய்விடுகின்றன.

இந்தியா முழுமையும் உள்ள தேசிய இனங்கள் யாவும் வல்லரசதிகார வகுப்புகளுடனும், இந்திய அதிகார அரசு வகுப்புகளுடனும்  கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டிய முதல் கடமையை ஆற்ற வேண்டிய நிலையில் இருந்தாலும், ஏற்றத் தாழ்வான பல படிநிலைகளில் ஒவ்வொரு மொழித் தேசமும் இருப்பதால் இந்தியா முழுமையுமான தேசிய இனங்கள் ஒன்றுகூடி ஒரே நேரத்தில் மாற்றத்தைச் செய்யும் சூழலில் இல்லை.

மேலும், ஒவ்வொரு தேசிய இனத்தின் தேச விடுதலைக்கான காரணிகளும் வெவ்வேறு நிலைகளில் இருப்பதால், ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான பொதுமையியக் கட்சியைத் தங்களளவில் கட்டியெழுப்பியே புரட்சிக்காக முனைப்பு கொள்ள வேண்டியுள்ளது.

அவ்வகையில், தமிழகப் பொதுமையர்கள் தமிழக அளவில் பொதுமையியக் கட்சியைக் கட்டுவதும், தமிழகத்திலிருந்து பன்னாட்டு முதலாளியத்திற்கெதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவுமான கணக்கையே முதலில் தீர்க்க வேண்டியுமுள்ளது. அவ்வாறான விடுதலை எழுச்சி தமிழக உழைக்கும் வகுப்பினரின் தலைமை  ஒருங்கிணைப்பில்  தமிழகத் தொழிலாளர் வகுப்பு, உழவர், சிறு முதலாளிகள், புரட்சிக் குணமுள்ள தேசிய முதலாளிகள் உள்ளிட்டஅனைத்து வகுப்புகளையும் ஓரணிப் படுத்தித் திரட்டியே  நடைபெறும்.

அப்படியான புரட்சிதான் தன் முதல் கடமையாக மக்கள் குடி நாயகப் புரட்சி வழியான அரசையே நிறுவும். பன்னாட்டு வல்லரசிய அதிகாரங்களையும், இந்திய அரசு அதிகாரங்களையும் விரட்டி வீழ்த்தித் தமிழக மக்கள் குடியரசை அமைக்கும்..

அத்தகைய புரட்சி, பன்னாட்டு வல்லரசிய அடிமைத்தனங்களி லிருந்தும், இந்தியப் பார்ப்பனிய அதிகார வெறித் தனங்களிலிருந்தும், சாதிய நிலவுடைமை அதிகாரத்தனங்களிலிருந்தும் அவற்றின் கட்டுடைத்து வீழ்த்திவிட்டு, அமைக்கிற மக்கள் குடியாட்சி அரசானது, அதன் தொடர் முனைப்பில் புரட்சிவயக் குமுகிய(சோசலிச)த்தை நோக்கிச் செல்லுகிற வகையிலேயே இலக்குடையதாக இருக்கும். மார்க்சு, எங்கல்சின் பொதுமையிய அறிக்கையிலிருந்தே இதனை விளங்கிக் கொள்ள முடியும்.

“ஒவ்வொரு தேசத்திற்கும், தன்னாட்சியையும் ஒற்றுமையை (ஐக்கியத்தை)யும் மீட்டளிக்காமல், பாட்டாளி வகுப்பின் (வர்க்கத்தின்) அனைத்துலக (சர்வதேச) ஒற்றுமையை உண்டாக்குவதோ, பொது நோக்கங்களுக்காக இந்தத் தேசங்களுக்கிடையே அமைதியான வழிப்பட்ட அறிவார்ந்த ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோ முடியாத செயல்”

அதன்வழி தமிழக அளவிலான பொதுமை நோக்கங்கொண்ட இயக்கங்கள் இந்தியாவில் உள்ள புரட்சி வழிப்பட்ட தேசிய வகுப்புகளோடு மட்டுமன்றி உலக  அளவிலான பொதுமையிய இலக்கு வகுப்புகளையெல்லாம் தோழமை கொண்டதாகவே ஏற்கும். பொதுமை உலகைப்படைக்கும் இலக்கு நோக்கில், தமிழகம் ஒரு பேரங்கமாகவே தன் விடுதலை இலக்கில் செயல்படும்.

அத்தகைய வழிமுயற்சிக்கு உகந்த வகையிலேயே மாரக்சு, ஏங்கல்சால் முன்மொழியப்பட்ட  பொதுமையிய அறிக்கை, தமிழ்த் தேசியத்திற்குப் பொருந்தும் தன்மையில் விளங்கிக் கொள்ளப்படுவதும் முன்னெடுக்கப்படுவதுமாக அமைகிறது.

  • · வெல்லட்டும் பொதுமையியக் கோட்பாடுகள்!
  • · வெல்லட்டும் பொதுமையிய முயற்சிகள்!
  • · வீழட்டும் முதலாளிய வகுப்புகள்!
  • · வீழட்டும் இந்திய அதிகார வெறி அரசமைப்பு!
  • · உருவாகட்டும் தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பு !
  • · உருவாகட்டும் உலகப்பொதுமையியக் குமுகியம்!

- பொழிலன்

Pin It