சுப்ரபாரதிமணியன் சுமார் அய்ம்பது நூல்கள் எழுதியிருப்பவர். அதில் 13 நாவல்கள் அடங்கும். பயணக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். “மண்புதிது” என்று ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. மற்றும் நூற்றுக் கணக்கான பயணக்கட்டுரைகள் பிரசுரமாகியிருக் கின்றன. அவையெல்லாம் புத்தக வடிவம் கொண்டிருக் கிறதா என்று தெரியவில்லை.

இப்போது என்சிபிஎச் வெளியீடாக “எட்டுத் திக்கும்” என்ற பயணக்கட்டுரை நூல் வெளிவந்திருக்கிறது. அதில் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், வங்காள தேசம், மலேசியா, சிங்கப்பூர்  போன்ற நாடுகளில் கண்டது, இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்குச் சென்ற போது அவர் மனதில் எழுந்ததைப் பிறகு அவற்றைப்பற்றி எழுதியவற்றை தொகுத்ததில் சில கட்டுரைகள் உள்ளன. வெளிநாட்டு அனுபவங்கள் முதல் உள்ளூர் மற்றும் சொந்த கிராம அனுபவங்கள் வரை சில கட்டுரைகளும் இதில் உள்ளன.

வெளிநாட்டுப்பயண அனுபவங்களில் அந்தந்த நாடுகளின் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விசயங்களைப் பற்றி எழுதியுள்ளார். அங்கு சந்தித்த எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களின் இலக்கியப்படைப்புகள் பற்றியும் எழுதியுள்ளார். அரசியல், திரைப்படம் என்று பல விசயங்களை அவை கோடிடுகின்றன.

இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றதைப் பதிவு செய்திருப்பதில் அவ்வப்போதைய இலக்கியச்சமாச்சாரங்கள், புத்தகங்கள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. வெளி மாநிலங்களில் நடைபெற்ற சாகித்ய அகாதமி, கதா விருது கூட்டங்கள் போல் பல சுவாரஸ்யமானவை அவை. காசியின்

கங்கை ஆறு முதல் சென்னை கடற்கரை வரைக்கும் பல இடங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.  திருப்பதி இலக்கிய கூட்டத்தில் உட்கார்ந்து கவிதைகளை மொழிபெயர்த்ததைத் தந்துள்ளார். புளியம்பட்டி போன்ற சின்ன ஊர்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். கம்பம் போன்ற சிறு ஊர்களில் நடக்கும் இலக்கிய பரிசளிப்பு பற்றி எழுதியிருக்கிறார்.

கம்பம் பற்றி எழுதும்போது சுருளி அருவி பற்றி எழுதாமல் இருக்க முடியுமா, அதைப்பற்றியும் எழுதியிருக்கிறார். பகுத்தறிவுப்பார்வையுடன் பக்தி விசயங்களை பல கட்டுரைகளில் கிண்டல் அடித்திருக்கிறார். உலக அளவிலான பல முக்கிய விசயங்களை முன்னிறுத்துகிறார். உதாரணத்திற்கு அகதி நிலை. கல்வி வணிக மயமாக்கலை எதிர்த்த கல்வி யாத்திரைகளைப் பற்றியும் எழுதி கல்வி பற்றி பல கேள்விகளை எழுப்புகிறார். ஓர் இலக்கியவாதியின் யாத்திரை அனுபவங்கள் இவை.  பல யாத்திரைகள் பற்றிய கூட்டுக்கட்டுரை இந்நூல்...

Pin It