சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி; உலகம் தழுவிய சிந்தனை யாளர். தம் நாட்டிலிருந்த அடிமைத்தனத்தை மட்டு மின்றி, உலகெங்கும் உள்ள அடிமைத்தனத்தையும் ஒழிக்க விரும்பியவர். உலக முதலாளித்துவத்தை ஒழிக்க மார்க்ஸ், “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றார். சிங்காரவேலர் அடிப்படையில் மார்ச்சியவாதியாக இருந்ததால் அவரது பொது வுடைமை நோக்கும் உலகம் தழுவியதாக இருக்கிறது. ஆதலால், நம் நாட்டிலிருந்த சுரண்டலை மட்டு மின்றி, உலக முழுதும் இருந்த சுரண்டலையும் அவர் அறிந்திருந்தார். எங்கெங்குச் சுரண்டல் நிலை கொண்டிருந்ததோ அவ்விடங்களை (நாடுகள்) எல்லாம் அவர் உற்று நோக்கினார். அச்சுரண்டலைக் கண்டு அவர் வருந்தினார். அது ஒழிய விரும்பினார். இது குறித்துத் தம் எழுத்துகளில் ஆங்காங்கே சில குறிப்புகளைத் தந்துள்ளார். அக்குறிப்புகள் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

singaravelar_401சிங்காரவேலர் தாம் நடத்திய ‘புதுஉலகம்’ இதழில், அரசியல், பொருளியல், தத்துவம், அறிவியல், உளவியல் ஆகியன குறித்து எல்லாம் எழுதியுள்ளார். அவற்றோடு பிறநாடுகளிலுள்ள பொருளாதாரச் சுரண்டலைக் குறித்தும் எழுதியுள்ளார். அவை சுருக்கமாக இருப்பினும் உள்ளடக்கத்தில் பெருக்கம் வாய்ந்தவை. 1936-ஆம் ஆண்டிலேயே கொடும் சுரண்டலுக்கு உட்பட்ட ஜப்பான், பாகு, ஜெர்மனி, சிரியா, வெனிசுலா ஆகிய நாடுகளைப் பற்றி அவர் கவலையோடு எழுதியுள்ளார். அவற்றில் அவர் வெனிசுலாவைப் பற்றி எழுதியிருப்பது அந்நாட்டின் இப்போதைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மிக முக்கியமானது. அந்நாட்டைப் பற்றி அவர் எழுதி யிருப்பதைக் கீழே காணலாம்.

உலகத்திலேயே எண்ணெய் உற்பத்தியில் வெனிசுலா என்னும் தேசம் மூன்றாவதாகும். இங்குதான் பிரபல ஸ்டான்டர்ட் ஆயில் கம்பெனி, ராயல் டச் ஷெல் கம்பெனி ஆகிய இரண்டும் ஏராளமான எண்ணெயை எடுத்துக் கையாளுகின்றன. கடந்த வருஷத்தில் மட்டும் இந்த இரண்டு கம்பெனிகளும் 13,90,000 பேரல்கள் எண்ணெயை எடுத்திருக்கின்றன. இந்த இரண்டு எண்ணெய் கம்பெனி முதலாளிகள் அந்நியர்களாவர். நிர்வாகமும் அவர்களுடையதே. இதன் வரலாற்றைச் சற்று நோக்குவோம்.

வெனிசுலாவை 27 வருடமாக (1908- லிருந்து) ஆண்டு, சர்வாதிகாரியாக ஆன கோமஸ், அந்நிய ஏகாதிபத்தியத்திற்குப் பேருதவி புரிந்து வந்தார். ஏனெனில் 1908-ஆம் வருடத்தில் இவர் சர்வாதிகாரி யாக ஆனதற்கு அவர்கள் உதவி புரிந்ததேயாகும். கோமசுக்கு உதவிபுரிந்த ஏகாதிபத்தியங்கள், கோமசைக் கொண்டே மக்களை வஞ்சித்து, கோமஸ் மூலம் 22,00,00,000 கோடி ஹெக்டர் நிலங்களை ஆதாயமாகப் பெற்றனர்.

- - - - - - சமீபத்தில் இறந்த சர்வாதிகாரி கோமஸ், அவருடைய சொத்தாக 10,00,000,000 ஹெக்டர் கொண்ட எஸ்டேட் நிலத்தையும், தனது சொந்தப் பணமென்று 3,00,000 டாலர்களையும் விட்டுச் சென்றாராம். இது யார் வீட்டு அப்பன் சொத்து? தொழிலாளிகள் உறங்கிக் கிடக்கும் வரை முதலாளி வர்க்கம் “என் சொத்து”, “எனது பணம்” என்று மார்தட்டித்தான் சொல்லும். தொழிலாளர்களே விழிப்படையுங்கள்.”1

வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை இரு ஏகாதிபத்திய அந்நிய கம்பெனிகள் எப்படிச் சுரண்டின என்பதையும் அவை கொள்ளையடிக்கும் சுரண்டல் இலாபத்தில் மிகச் சிறுபகுதியை உள்நாட்டுத் தலை வருக்குப் போட்டு விட்டு அவரைக் கைப்பாவையாக ஆக்கிக் கொண்டதையும், அதன்வழி தொழில் முறையில் (எண்ணெய் எடுப்பதில்) கொள்ளையடிப் பதையும் அத்துடன் திருப்தி கொள்ளாமல், சுரண்டல் ஆதிக்கத்தால் அந்நாட்டு நிலங்களையும் அபகரித்து அவற்றின் இயற்கை வளங்களையும் கொள்ளையடிப் பதையும் மேற்குறித்த குறிப்பால் அறிகிறோம். முதலாளித்துவம் முதலில் ஒருபாதை வழியாக வரும். பின்னர் ஆக்டோபஸ் போன்று அனைத்துப் பாதையையும் தனதாக்கிக் கொள்ளும். இதுதான் முதலாளித்துவத்தின் பிறவிக்குணம்; இதுதான் அதன் பேயாட்டம். தன் சுரண்டலுக்குத் தடை ஏற் படுமாயின் பேயாட்டம் ஆடி அந்நாட்டையே அழிக்கும். இந்தப் பேயாட்டச் சுரண்டலை மனத்தில் கொண்டுதான் அவர் “இது யார் வீட்டு அப்பன் சொத்து?” என வினவுகிறார். சொந்த நாட்டு மக்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகளை அளிக் காமல், பெரும் இலாபத்தைக் கணக்கில்கொண்டே அந்த அரசு செயல்பட்டு உள்ளது. தம் நாட்டுச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதைக் கண்டும், வேலையின்மையைப் பெருக்கும் அரசைக் கண்டும், தொழிலாளர்கள் வீணே காலம் கழிக்கலாமா? என்கிறார். சிங்காரவேலர் இந்த வினாவை அப் போது (1936-இல்) எழுப்பினார். அந்த வினாவுக்கு 1998-இல் தான் விடை கிடைத்தது. விடையளித்தவர் வெனிசுலாவின் இப்போதைய குடியரசுத் தலைவர் சாவோஸ் தான். அதாவது சிங்காரவேலரின் விருப்பம் வெனிசுலாவில் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறி உள்ளது. இது பெரும் காலத்தாழ்வு என்றாலும் இப்போதாவது நிறைவேறி உள்ளதேயென அமைதி கொள்ளலாம்.

வெனிசுலாவில் அப்படி என்ன நிகழ்ந்து விட்டது? அதனையும் நாம் நோக்க வேண்டும் அன்றோ! அந்நிய ஏகாதிபத்தியத்தின் கொள்ளைச் சுரண்டலுக்கு அரை நூற்றாண்டுக் காலத்திற்குப் பின்னரே வெனிசுலாவின் தொழிலாளர்கள் தீர்வு வழி கண்டுள்ளனர். எப்படிக் கண்டனர்? அதனையும் நாம் காணவேண்டும். வெனிசுலாவில் 1998-ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் சாவோஸ் வெற்றி பெற்றுக் குடியரசுத் தலைவரானார். ஆனால், சுரண்டலில் பேரின்பம் கண்ட அந்நிய ஏகாதி பத்தியம் வஞ்சகமாக ஓராண்டிலேயே 1999-இல் அவ்வாட்சியைக் ‘கவிழ்த்தது; எனினும் சாவோஸ் விடவில்லை. ஏகாதிபத்தியத்தின் முகமுடியை நீக்கி, அதன்கொடுமையைப் பரவலாகப் பிரசாரம் செய்து, மீண்டும் 1999-லும் 2006-டிசம்பரிலும் நடந்த பொதுத்தேர்தல்களில் சாவோஸ் வெற்றி பெற்றார், குடியரசுத் தலைவரும் ஆனார். அன்றி லிருந்து அவரே தலைவராக இருந்துவருகிறார். தலைவராக இருப்பது முக்கியம் அன்று; அவர் என்ன செய்தார் என்பதுதான் முக்கியம். அதுவும் எந்தச் சூழ்நிலையில் செய்தார் என்பதுதான் முக்கியம்.

தென்அமெரிக்காவிலுள்ள பெரும்பான்மை யான நாடுகளை அமெரிக்கா சுரண்டிக் கொண் டிருந்தது; தம் சுரண்டலுக்கு ஆபத்துவரும்போது அந்நாட்டுச் சுதந்திரத்தை அமெரிக்கா அழிக்கும்; இல்லையேல் அந்நாட்டு அதிபரைக் கொல்லும். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் மீது படையெடுத்துச் சதாம் உசேனைக் கொன்றதே நற்சான்றாகும். தென் அமெரிக்காவிலுள்ள டொ மினியன் குடியரசை 1962-லும், 1964-இல் பிரேசில் மற்றும் பொலிவியாவிலும், 1966-இல் அர்ஜென் டைனாவிலும் அமெரிக்கா ஆட்சிக் கவிழ்ப்பைச் செய்துள்ளது கருதத்தக்கது. பின்னர் நிகாரகுவாவில் இடதுசாரி அரசாங்கத்தைக் கவிழ்த்ததும், 1973-ஆம் ஆண்டில் சிலியில் அலெண்டேயைச் சுட்டுக் கொன்று அந்நாட்டு ஆட்சியைக் கவிழ்த்ததும், அடுத்து கிரெனடாவில் ஆட்சிக் கவிழ்ப்புச் செய்ததும் மறக்க முடியாதவை. இந்நாடுகளில் அமெரிக் காவின் சி.ஐ.ஏ.வும், இராணுவமும் செய்த கொடுஞ் செயல்கள் எண்ணிறந்தன. நினைக்க நினைக்க அச்சம் தரத்தக்கவை. இச்சூழலில்தான் சாவோஸ் அமெரிக்காவின் இராணுவத்தைக் கண்டு அஞ்சாது, அதற்கு எதிராக மக்களைத் திரட்டித் தேர்தலில் நின்று மூன்று முறை வெற்றி பெற்று முதலாளித் துவத்திற்கு எதிராக சோசலிசத் திட்டங்களை எவ்வித அச்சமுமின்றி அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறார். இதனைப் பல்வேறு நாடுகள் மனம் திறந்து பாராட்டி வருகின்றன.

வெனிசுலா நாட்டின் அரசியல் சட்டம் பல முற்போக்குத் திட்டங்களை வகுத்துள்ளது; பொது வாகத் தம் நாட்டுத் திட்டத்தை சாவோஸ் “21-ஆம் நூற்றாண்டு சோசலிசத் திட்டம்” என்று அறிவித்துள்ளார். அத்திட்டத்திலுள்ள சில முக்கிய கூறு களைக் கீழே காணலாம்.

1.            ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டைப் பெருக்குவது

2.            தனிமனித ஆற்றலை நன்முறையில் வளர்ப்பது

3.            ஒவ்வொரு பெண்ணும் ஆணும் வேற்றுமை நோக்காது ஆளுமையை வளர்க்க உதவுவது.

4.            சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதரும் ஆற்றலுள்ள வராக ஒரு சமூக உயிரியாகவும், அதன் வழி மனிதத் திறமைகள் முழுவளர்ச்சி பெற உறுதி செய்தல்.

5.            ஜனநாயக முறையில் திட்டமிடுதல் மூலமாக சமுதாயத்தின் அனைத்து அடுக்குகளும் பயன் பெறும் முறையில் நிதி ஒதுக்கீடு செய்தல்

6.            கூட்டுறவு வடிவங்களாகிய சுயமேலாண்மை, கூட்டு மேலாண்மை ஆகியவற்றின் வழி உற் பத்தியைப் பெருக்குதல்.

7.            உற்பத்தியானது சமூகத் தேவைகளையும், சமூகத்தின் நோக்கங்களையும் நிறைவு செய்யும் பொருட்டு அமைவது.

8.            சமூக உற்பத்தியானது தொழிலாளர்களால் தீர்மானிக்கப்படல் வேண்டும்.

9.            உற்பத்திக் கருவிகள் சமுதாயத்திற்குச் சொந்த மாக இருத்தல் வேண்டும்.2

இத்திட்டங்களை நோக்கினால் எத்துணை முற்போக்கோடு மக்கள் நலன் கருதித் திட்டங் களை அமைத்துள்ளனர் என்பதை உணரலாம். இத்திட்டங்கள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. வெனிசுலாவில் முதன்முதலில் எண்ணெய் நிறுவனங்களை அரசுடைமையாக ஆக்கினார் சாவோஸ். அரை நூற்றாண்டுக் காலத்திற்கு மேலாக எண்ணெய்க் கிணறுகளில் கொள்ளையடித்த அந்நிய நிறுவனங்களை உறுதியுடன் வெளியேற்றியது, பெருஞ்சாதனையாகும். எண்ணெய்க் கிணறுகளைப் பொதுவுடைமையாக மாற்றியதில் வெனிசுலா அரசுக்கு வருமானம் பெரும் அளவில் பெருகி யுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு பெருகி, அரசுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒருங்கிணைவும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது. எண்ணெய்க் கிணறுகளைப் போல் பற்பல தொழில் நிறுவனங் களையும் பொதுவுடைமையாக்கியுள்ளது. இம் முயற்சி படிப்படியாக முன்னேறிவருகிறது.

வெனிசுலாவில் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் ஓரினோகுயா நிறுவனத்தை சீன நாட்டுத் தொழில் நுட்பத்தோடு இணைந்து அதிக உற்பத்தி செய்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் மட்டும் கூடுதலாக எட்டு லட்சம் செல்போன்களை உற்பத்தி செய்து இலத்தின் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

வெனிசுலாவின் ஒரு பகுதியான ஃபால்கேனில் பல்ப் தொழிற்சாலையை நிறுவி, வியட்நாம் நாட் டோடு தொழிலுறவு வைத்துக் கொண்டு நவீன நுட்பத்தோடு பல்புகளைத் தயாரித்து வருகிறது. அதாவது சாதாரண பல்புகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தில் 20 சதவீதத்தைப் பயன்படுத்தி னாலேயே மற்ற பல்புகளைக் காட்டிலும் ஒளிதரும் பல்புகளாக அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் மின்சார செலவும் குறைகிறது. அதாவது குறைந்த செலவில் நிறைந்த பயன் கிட்டுகிறது. இப்படி மக்கள் நலன் கருதி அரிய திட்டங்களை வெனிசுலா அரசு நிறைவேற்றி வருகிறது. 1998-இல் சாவோஸ் முதன்முதலாகப் பதவியேற்றபோது, விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கினார். 1998-ஆம் ஆண்டில் 762 சங்கங்கள் இருந்தன. 2005-ஆம் ஆண்டிலோ 84000 கூட்டுறவுச் சங்கங்களாகப் பெருகின. இவற்றில் பத்து லட்சம் பேர் உறுப்பினர் களாக உள்ளனர். இச்சங்கங்கள் விவசாய வளர்ச்சிக்குப் பெருந்துணையாக உள்ளன.

வெனிசுலாவில் எண்ணெய் வளம் இருப்பது போல் உணவுப்பொருள் உற்பத்தி போதுமானதாக இல்லை. நாட்டின் தேவைக்கான உணவுப் பொருள் களில் 70 சதவீதம் இறக்குமதி செய்யப்படும் நிலை உள்ளது. இச்சூழலில் புதிய தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்யும் முறையில் அந்நாடு படிப்படி யாக முன்னேறி வருகிறது. விவசாய வளர்ச்சியைத் துரிதப்படுத்த ஆலோசனை நிறுவனங்களை அமைத்துக் கட்டமைப்பு, தேவையான பயிற்சி ஆகியவற்றில் முன்பு எப்போதும் இல்லாத நிலையில் அந்நாட்டரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இந்த வளர்ச்சிக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் துணை நின்று உற்பத்தியைப் பல்லாற்றாலும் பெருக்கி வருகின்றன. எண்ணெய் வளம் உள்ள அரபு நாடு களுக்கு விவசாய வளர்ச்சி இப்போதும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.

அரபு நாடுகளைப் போல் அல்லாமல், வெனிசுலா இதில் ஒரு முன்னேற்றம் காணும் நாடாகவே உள்ளது. வெனிசுலாவில் விளை நிலங்கள் குறைவாக இருப் பினும், அந்நிலங்களில் உணவுப் பொருள்களை நன்கு உற்பத்தி செய்யவும், விவசாயிகளுக்கு உதவவும், சமூக - பொருளாதார இலாக்காவை அமைத்து, சமூக வளர்ச்சி வங்கி மற்றும் வெகுசன பொருளாதார நிறுவனம் ஆகியவற்றின் மூலம் பொருளுதவி செய்து வருகிறது. அந்நாட்டு தேசிய வருமானத்தில் 50 சதவிகிதத்தை விவசாயத்திற்கும், 30 சதவிகிதத்தைத் தொழில்துறை வளர்ச்சிக்கும், சுற்றுலாப் பயிற்சிக்கு 10 சதவிகிதத்தையும் உள்கட்டுமானத்திற்கு 5 சத விகிதத்தையும், சேவைத் துறைக்கு 5 சதவிகிதத் தையும் ஒதுக்கி வருகிறது. இவற்றால் அந்நாட்டின் விவசாய வளர்ச்சி தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறது. இவற்றில் சாவோசின் செயல்திறன் தொலைநோக்கும், உறுதிப்பாடும் வாய்ந்ததாக உள்ளது. தொழிலாளர்கள் எப்போது விழிப்புப் பெறப் போகிறார்கள் என அஞ்சினார் சிங்கார வேலர். சிங்காரவேலரின் அச்சத்தை நம் காலத்தில் சாவோஸ் அகற்றிவிட்டார். சிங்காரவேலர் வெனி சுலாவைப் பற்றி மற்றொரு குறிப்பையும் தத்து உள்ளார். அதுவும் நம் கவனத்திற்கு உரியது.

“இங்குத் (வெனிசுலாவில்) தொழிலாளர்கள் அடக்கி ஒடுக்கி வதைக்கப்படுகிறார்கள். இங்கு எண்ணெய் நிலங்களில் வேலை செய்யும் தொழி லாளிகள், அமெரிக்க எண்ணெய் நிலங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளின் வருவாயில் கால் பங்கை மட்டுமே பெறுகிறார்கள். இங்குத் தொழிலாளியின் வருமான 25 சதம். 1929-ஆம் வருடத்திற்குப் பிறகு வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகம்.

இந்த நாட்டில் வயிற்றுக்கில்லையே என்ற எண்ணெய்த் தொழிலாளர்கள் கூக்குரலானது, இரத்த வெள்ளத்தில் குமிழ் இடுகிறது. கடந்த 35-வருடங்களில் மட்டும் 40,000 வெனிசுலியர்கள் சிறையில் மடிந்திருக்கின்றனர். அது மட்டுமா? 70,000 பேர் உயிர்பிச்சைக்காகத் தங்கள் தேசத்தைத் துறந்து ஓடி மறைந்திருக்கிறார்கள். என்னே முதலாளித்துவ உலகம்!”

வெனிசுலாவின் அக்காலத்திய தொழிலாளர் களின் இழிநிலையை எண்ணிச் சிங்காரவேலர் நைந்து உருகி வருந்தியிருக்கிறார். இக் குறிப்பு, மொரிசியஸ் தீவின் கரும்புத் தோட்டத்தில் தமிழர் களின் கண்ணீரையும் கம்பலையையும் எண்ணிப் பாரதியார் “கரும்புத் தோட்டத்திலே! ஆ! அந்தக் கரும்புத் தோட்டத்திலே! எனத் தொடங்கும் ஏக்கப் பாடலை அன்றோ நினைவுறுத்துகிறது. வெனி சுலாவில் அக்காலத்தில் சிறையில் 40,000 பேர் மடிந்துள்ளனர் என்பதும், 70,000 பேர் தாய் நாட்டை விட்டு உயிர் பிழைப்புக்காகப் பிறநாடு களுக்கு வெளியேறியுள்ளனர் என்பதும் ஓர் அரிய குறிப்பு; நமக்குத் தெரியாத குறிப்பு; மற்ற தலை வர்கள் தராத குறிப்பு. சிங்காரவேலரின் சிந்தனை எத்துணைப் பரந்துவிரிந்த சிந்தனை என்பதையும், அவரது உலக மானுடநேயம் எத்துணைச் சிறந்தது என்பதையும் மேற்குறித்த குறிப்பால் உணரலாம்.

வெனிசுலாவின் அக்காலத்திய தொழிலாளர் நிலையை சாவோசின் இன்றைய அரசு அடியோடு மாற்றி விட்டது. இன்று வெனிசுலாவில் எண்ணெய்க் கிணறுகள் அரசுடைமையாக ஆக்கப்பட்டதாலும், தொழில்துறைகள் பெருகிச் சமூகமயமாக ஆன தாலும், விவசாயம் பெருகியுள்ளதாலும் வேலை யில்லாத் திண்டாட்டம் பெருமளவு குறைந்து விட்டது; தனிநபர் வருவாய் நன்கு பெருகியுள்ளது. வறுமையும், மிடிமையும் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றால் வெனிசுலாவின் குடிமகனிடத்தில் ஒரு புதிய ஒளியும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளன. இவை நாளும் வளர்ந்து வருகின்றன. நாட்டின் பல்வேறு நிறுவனங்களை அரசுடைமையாக ஆக்கியதால், அரசுக்கும், தொழிலாளருக்குமிடையே நல்லுறவும், நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளன.

தொழிலாளர் வேலை உறுதி, தொழிலாளர் பொருளாதார - மருத்துவ நலன், பணிநேரக் குறைப்பு, எதிர்காலச் சேமிப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் வெனிசுலா அரசு திட்டமிட்டுப் பணியாற்றுகிறது. இவற்றால் இலத்தின் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலா முன்னணியில் உள்ளது. தொழிலாளர்களின் கல்வி, அவர்களின் சோசலிசக் கொள்கைப் பிடிப்பு, அவர்களின் சமூக ஒழுங்கு ஆகியவற்றில் அந்நாட்டரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. தொழிலாளர்கள் நல்ல வருமானத்தையும் கல்வியையும் பெற்றால் மட்டும் போதாது. அவன் அவனுக்காக, அவனுடைய குடும்பத்திற்காக வாழ்வதைப் போன்று, பிறருக்காகவும் வாழவேண்டும் என்றும் போதிக்கிறது அந் நாட்டரசு. அதாவது சோசலிசக் கொள்கையில் பிடிப்புக் கொண்ட ஒவ்வொரு மனிதனும் சமத்துவத்தில் பிடிப்புக் கொண்டிருப்பதைப் போன்று சகமனிதனுக்கும் சமூகத் தொடர்பில் உதவ வேண்டும் என்பதை ஓர் உறுதியான கொள் கையாகப் போதிக்கிறது அந்நாடு. “ஒவ்வொரு வரும் பிறருக்காக” என்பதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது.

அந்நாடு, இக் கொள்கையை சோசலிச ஒழுங்கு என்று போதிக்கிறது. இக்கொள்கை இந்நாட்டின் தனிக் கொள்கையாகும். சாவோஸ் தாம் பேசும் கூட்டங்களில் “சோசலிஸ்ட் ஒழுக்கம் நம்மிடம் இல்லாவிட்டால் நாம் சோசலிசத்தைக் கட்டமுடியாது” என்று அடிக்கடி வலியுறுத்துவது சிந்திக்கத்தக்கது. மேலும் சுயநலத்தைக் கைவிடுதல், பணத்தாசை ஒழித்தல் ஆகிய இரண்டும் சோசலிச ஒழுங்கிற்கு அடிப்படையான தேவை என்பதையும் அந்நாடு போதிக்கிறது. இதுவும் மிக முக்கியமான தாகும். பொருளாதார முறையில் மனிதனை மேம் படுத்துவதோடு கலாசார முறையிலும் மேம்படுத்த இது பெரிதும் உதவும். அதாவது முழுமனிதனை உருவாக்க உதவுகிறது. பிறருக்கு உதவவேண்டும் என்னும் உணர்வு தழைக்க வேண்டுமென்றால் சுயநலமும், பணத்தாசையும் ஒழிய வேண்டும். இவற்றை வலியுறுத்துவதாகவே அக்கொள்கை உள்ளது.

“ஒவ்வொருவரும் பிறருக்காக” என்னும் கொள் கையை உள்நாட்டுக் கொள்கையாக மட்டுமன்றி, வெளிநாட்டுக் கொள்கையாகவும் அந்நாடு கடைப் பிடிக்கிறது. எண்ணெய் வளத்தால் பெரும்பொருளை ஈட்டும் வெனிசுலா, ஏனைய இலத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் பொருளுதவி செய்து அந்நாடுகளின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது. குறிப்பாக, அந்நாடு களின் வெளிநாட்டுக்கடன்களை அடைப்பதற்கு வெனிசுலா உதவி வருவது பெரிதும் பாராட்டத் தக்கது.

2005-ஆம் ஆண்டில் கரிபியன் நாடுகளின் வளர்ச்சிக்கு 30,000 கோடி ரூபாயைக் கொடுத்தது. பழைய சோவியத்து யூனியனின் பைலோ ரஷியா உலக வங்கிக்குத் தர வேண்டிய 46 கோடி டாலரை வெனிசுலா கொடுத்துள்ளது. பிரேசிலில் மூடப் பட்ட ப்ளாஸ்டிக் கம்பெனியை மீண்டும் திறக்க வெனிசுலா பொருளுதவி அளித்தது. இதனால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேர்ந்தனர். பொலிவியாவில் பொது மக்களுக்கு நல்ல வசதி கொண்ட மருத்துவமனை திறக்க உதவி செய்தது. நிகாரகுவாவின் விவசாய வளர்ச்சிக்காக நீண்ட காலத் தவணையில் பெருந் தொகையைக் கடனாகக் கொடுத்து உதவியுள்ளது. இவ்வாறு அண்டை நாடுகளுக்கும், வெளிநாடு களுக்கும் இயன்றவரை உதவி வருகிறது.

வெனிசுலா, ஏனைய இலத்தின் அமெரிக்க நாடுகளுக்கு இப்போது உற்ற நண்பனாக, வழி காட்டியாக இருந்து வருகிறது. இந்த நட்பாலும் உறவாலும் தென்அமெரிக்காவிலுள்ள 12 இலத்தின் அமெரிக்க நாடுகளில் 9 நாடுகளில் இடதுசாரி அதிபர்கள், அல்லது இடதுசாரிச் சார்புத் தலை வர்கள் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள், சாவோசோடு இணைந்து அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர்களாகத் துணிவாக வலம் வருகிறார்கள். இந்த நட்பாலும் உறவாலும் தென் அமெரிக்காவில் அமெரிக்க எதிர்ப்பு அணி நன்கு வலிவடைந்து வருகிறது. மேலும் சாவோசின் அரிய யோசனைப்படி இந்நாடுகள், அமெரிக்காவின் மூலதனக் குவிப்புக்கு நுகத்தடியாக இருக்கும் உலக வங்கியை வெளியேற்றி, இலத்தின் அமெரிக்க நாடு களுக்காக ஒரு தனிவங்கியை அமைத்துள்ளன. இதுவொரு வரலாற்றுச் சாதனை. இச்சாதனையை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். உலக நாடுகளுக்கு இலத்தின் அமெரிக்க நாடுகள் ஒரு புதுவழியைக் காட்டியுள்ளன.

வெனிசுலா இப்போது ஆண்-பெண் சமத் துவத்திலும் சிறந்த நாடாக விளங்குகிறது, கல்வி யிலும், வேலைவாய்ப்பிலும் ஆணுக்கு நிகராகப் பெண்கள் பங்கேற்றுவருகின்றனர். குறிப்பாக, இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பெண்கள் அணி செய்கின்றனர். வெனிசுலாவின் தேசிய இராணுவத்தில் (எப்.ஏ.என்.பி) 26 சதவிகிதப் புதிய பெண்பட்டதாரிகள் பல்வேறு பிரிவுகளில் பணி யாற்றுகிறார்கள். இன்னும் பத்து ஆண்டுகளில் 50 சதவிகிதமாகப் பெருக்கும் வகையில் திட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. சாவோஸ் ஆட்சிக்கு முன்னர் இராணுவத்தில் ஒருபெண் கூட இருந்த தில்லை. ஆனால், இப்போது நிலைமை அடியோடு மாறி உள்ளது. எவ்வித வேறுபாடும், பாகுபாடும் இல்லாமல் பெண்கள் இராணுவத்தில் பங்கேற்று வருகின்றனர். கடற்படையில் உயர் அதிகாரிகளாகவும், விமானப் படையில் தலைமை விமானிகளாகவும் பெண்கள் உள்ளனர். மற்றும், நீர்மூழ்கிக் கப்பல் களிலும், பீரங்கிப் படைகளிலும் பெண்கள் துணி வாகப் பங்கேற்று வருகின்றனர். வெனிசுலாவின் தேசிய இராணுவப் படையின் முதல் பெண் அட்மிரலாக இருப்பவர் கார்மென் மெலின்டீஸ் என்பவராவார். பெண்களுக்கு அங்குப் புதிய வாய்ப்புகளும், மதிப்புகளும் கூடிவருகின்றன.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்குப்

பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி”

என்று பாரதியார் கூறியது இந்தியாவில் நிறைவேற வில்லையாயினும் வெனிசுலாவில் நிறைவேறி வருகிறது. “எல்லார்க்கும் எல்லாம்” என்ற இடம் நோக்கிச் செல்கிறது இந்த வையம்” என்று பாரதி தாசன் கூறியதற்கேற்ப இப்போது வெனிசுலா நடை போடுகிறது. வெனிசுலா, சோசலிசத் திட்டத்தை ஒரு புனிதத் திட்டமாகக் கொள்ளாமல், ஆய்வுத் திட்டமாகக் கொண்டு, கால வளர்ச்சிக்கேற்ப, மாற்றங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப அத் திட்டத்தை வளர்த்துச் செல்லவேண்டுமென்று உறுதி காட்டுகிறது. இந்தத் திட்டம் பிற சோசலிச நாடுகளின் தோல்விகளிலிருந்து படிப்பினை பெறும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வெனிசுலா, 21-ஆம் நூற்றாண்டு சோசலிசத் திட்டம் என்று அறிவித்துள்ளது. தம் சொந்த நாட்டில் மட்டுமின்றி, ஏனைய இலத்தின் அமெரிக்க நாடு களிலுள்ள முதலாளித்துவ நுகத்தடியை அகற்றவும் வெனிசுலா முயன்று வருவதைப் பார்க்க இன்று சிங்காரவேலர் இல்லை. வெனிசுலாவின் அன்றைய தொழிலாளர்களை நோக்கி அவர் “தொழிலாளர்களே விழித்து எழுங்கள்” என்றார். வெனிசுலாவின் இப்போதைய தொழிலாளர்கள் விழித்து எழுந்து விட்டனர். அவர்கள் பிற நாடுகளையும் விழித்தெழச் செய்துள்ளனர். அவர்களுக்கு நாம் ஆதரவு காட்டு வோம்.

சான்று நூல்கள்

1.            ம. சிங்காரவேலர் - சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் - தொகுதி - III - பக்- 1715 - 16- 2007- தென்னக ஆய்வு மையம் - இராயப்பேட்டை.

2.            மைக்கேல் லெபோவிட்ஸ் - வெனிசுலாவின் புரட்சிப்பாதை - பக் - 4 - 6 - 2007 - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் - அம்பத்தூர் - சென்னை-600098.

3.            ம. சிங்காரவேலர் - சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் - தொகுதி III - பக் 1714 - 15.

Pin It