கற்பித்தல் என்பது மிகவும் உன்னதமான பணியாகும். கற்பித்தலில் ஒருவரின் பாத்திரம், திறமை மற்றும் ஒரு தனிநபரின் எதிர்காலம் போன்றவை வடிவமைக்கப்படுகிறது. மக்கள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக நினைத்தால், அது எனக்கு மிகப்பெரிய கௌரவமாக இருக்கும் என்கிறார் அக்னி நாயகன் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். இச்சரித்திர நாயகனின் வாக்கிற்கேற்ப அறப் பணியான ஆசிரியப் பணியை மேற்கொண்டவர் எழுத்தாளர் பாமா.

1958-ல் பிறந்து வளர்ந்து கன்னியாஸ்திரியாகிப் பின்னர் அப்பொறுப்பிலிருந்து விலகி ஆசிரியராகப் பணிபுரிபவர். தமிழ்ப் படைப்புலகில் பெண்ணிய இலக்கியவாதி. ‘கிராஸ் வேர்ட் புக் [2000] விருது’ பெற்றவர். இவர் குழந்தைகளை கருப்பொருளாக வைத்து சில கதைகளை படைத்துள்ளார். அவ்வகையில் பல இடங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் பணிபுரிந்து அதன் மூலம் பெற்ற அனுபவங்களின் எதிரொலியாகவே ‘விருட்சங்களாகும் விதைகள்’ எனும் நூலைப் படைத்துள்ளார். தன்னுடைய ஆசிரியப்பணியில் ஏற்பட்ட தனது வகுப்பறை அனுபவங்களையே நூலாக்கித் தந்துள்ளார்.

bama book virutchangalagum vidhaigalஇந்நூலினை முழுமையாகப் படித்து முடித்தவுடன், எனக்குத் தோன்றியது ஒன்று தான்.இது ஒரு அனுபவப் படைப்பல்ல, அவரது நாட்குறிப்புகள் என்று. மலர்விழி (பாமா) எனும் பள்ளி ஆசிரியையின் இரத்தமும் சதையுமான அனுபவம், தன்னிடம் பயிலும் (விதைகளின்) மாணவர்களின் வறுமை, அவர்களின் சமூகப் பின்னணி இவையெல்லாம் பிரதிபலிக்கும் ஒரு பிம்பமே ’விருட்சங்களாகும் விதைகள்’ எனும் படைப்பு.

மனித வாழ்க்கை ஒரு இயந்திர வாழ்க்கை. வகுப்பறையில் மட்டுமே மாணவர்களைச் சந்திக்கும் ஆசிரியர்களுக்கிடையில், அதையும் தாண்டி வாடிய மாணவர்களைக் கண்டு அவர்களைப் பின் தொடர்ந்து அவர்களின் குடிசைக்குச் சென்று அவர்கள் எத்தகைய பொருளாதாரம் மற்றும் கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்கிறார் மலர்விழி. அதன் பிறகு தான் அவருக்குப் புரிகிறது, எல்லா மாணவர்களிடமும் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒரே மாதிரியாக இருத்தல் கூடாது என்பது. அவை மட்டுமல்ல, இன்று இந்தக் குழந்தைகள் நமக்கு என்ன கற்றுக் கொடுக்கப் போகிறார்களோ எனும் மனநிலையோடு பணியாற்றிய ஆசிரிய அனுபவம் இந்நூலில் விரவியுள்ளது.

ஒரு முறை பத்தாம் வகுப்பு ஆங்கில வகுப்பில் “My Mother” என்ற அம்மாவைப் பற்றிய பாட்டு ஒன்றை மலர்விழி நடத்திக் கொண்டிருந்தாள். திடீரென யாரோ அழுகின்ற குரல் கேட்டது. பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு யார் அழுவது என்று பார்த்தாள் மலர்விழி. அனைவரும் சர்மிளா அழுவதாக சொன்னதும் மலர்விழி அவளருகில் சென்று விசாரித்தாள். எங்கள் அம்மா, நீங்கள் கூறியது போல் ரொம்ப பாசமா இருப்பாங்க டீச்சர். எங்கம்மா நெனப்பு வந்துருச்சு டீச்சர். ‘ஓ அம்மாவ நெனச்சு அழுகுறியா? நீ விடுதியில் தங்கிப் படிக்கலையே. வீட்டுல இருந்துதான வர்ற?' சாயங்காலம் போயி உங்கம்மாவப் பாக்கப்போற. இதுக்குப் போயி எதுக்கு அழுகுற சர்மி?' எனக் கேட்கும் தருணத்தில் அவள், எனக்கு அம்மா இல்ல டீச்சர். போன வருசம் எங்கம்மா இறந்துட்டாங்க டீச்சர், என சர்மி கூறியதும், அய்யோ, அம்மாவைப் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசி இந்தப் பிள்ளையின் மனதைப் புண்படுத்தி விட்டோமே எனப் பாடம் நடத்துவதையே நிறுத்திவிட்டு சர்மிக்கு அந்நேரம் மலர்விழி ஒரு தாயாகவே மாறிப் போனாள். அதோடு மட்டும் விட்டுவிடாமல் அவளின் வீட்டிற்குச் சென்று குடும்பச் சூழலைக் கேட்டறிந்து ஆறுதல் கூறுவதோடு விட்டுவிடாமல் தன் தோழியிடம் பேசி சர்மி மற்றும் அவளின் தங்கை பூரணிக்கும் படிப்புக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்ய வேண்டுமென முடிவு செய்து அதன்படி செய்தார்கள். தனிப்பட்ட ஒருவரின் சமூகச் சிக்கல் என்றில்லாமல், மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக மட்டுமில்லாமல்,ஆற்றுப்படுத்தும் குணம் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதை தன் படைப்பின் வழி வெளிக்காட்டுகிறார் மலர்விழி. இந்நாவலின் கட்டமைப்பை கூர்ந்து நோக்கும் பொழுது அனைத்து ஆசிரியர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பாகவே அமைகிறது.

இந்தப் படைப்பில் ஒரு ஆசிரியரின் அனுபவத்தை மட்டும் பார்க்காமல், அந்த ஆசிரியர் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்பில் எடுத்துரைத்த சொல்லோவியமும் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டியவையே. மலர்விழியின் முன்னாள் மாணவியான தமிழரசி என்பவள் தன் ஆசிரியையை சந்தித்த தருணத்தில் அவள் வகுப்பில் நல்லொழுக்க வகுப்பில் கற்றுக் கொடுத்ததை எண்ணிப் பெருமை கொண்டாள். அவை, “நம்ம இந்த உலகத்துல பிறந்ததுக்கு ஒரு அர்த்தம் இருக்குது. ஒரு நோக்கம் இருக்குது. நம்மகிட்ட இருக்கிற திறமைகளை கண்டுபிடித்து வளக்கனும். பெற்றோர்களின் பாசம் தியாகம் அதுலயும் குறிப்பா அம்மாவோட தியாகம், அப்பறமா மனுசங்க எல்லாரும் ஒண்ணுதான்: சாதி, சமயம், படிப்பு, அழகு, அந்தஸ்து இப்பிடி எதையும் வச்சு ஏற்றத்தாழ்வு பாக்கக் கூடாது” என நீங்கள் எங்களுக்கு நல்லொழுக்க வகுப்பில் கற்றுக் கொடுத்ததைச் சொல்லிப் பெருமைப்படுகிறாள் மலர்விழியிடம். சொல்லோவியம் மட்டுமா?இல்லை.ஆசிரியரின் எதார்த்தமான மொழிநடையும் பாராட்டுதற்குரியதாகும். ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் எவ்வாறெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்பதற்கு இது ஒரு சான்று. ஆனால் இன்றோ ஒரு சில பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்பும் இல்லை.அப்படியே இருந்தாலும் பிற துறை ஆசிரியர்கள் நல்லொழுக்க வகுப்பைக் கடனாகப் பெற்றுக் கொள்கின்றனர். பின் மாணவர்களுக்கு எங்கிருந்து வரும் ஒழுக்கம்? இன்றைய மாணவர்கள் ஒரு ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் பாடத்தை மட்டும் கவனிக்கவில்லை. ஆசிரியரின் தோற்றத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். இன்றைய நவீன உலகில் ஒரு சில மாணவர்களின் உடைகளிலிருந்து பழக்கவழக்கங்கள் வரை ஒழுக்கமின்மையே காணப்படுகின்றன.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு. (குறள் 135)

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையில் உயர்வு இல்லை என்கிறார் வள்ளுவர். ஒரு ஆசிரியர் என்பவரின் பழக்கவழக்கம் சீரானதாகவும் ஒழுக்கம் நிறைந்ததாகவும் இருத்தல் வேண்டும்.வாழ்வியல் சிறக்க இலக்கணம் வகுத்தளித்த திருவள்ளுவர், ‘ஒழுக்க நெறியைப் பின்பற்றி சமூகத்தோடு பொருந்தி வாழாதோர் எவ்வளவு கற்றிருப்பினும் அவர்கள் அறிவில்லாதவர்களே’ என்று கூறுகிறார்.

எழுத்தாளர் பாமா அவர்கள் இப்படைப்பில் சமூகத்தில் நடக்கும் சிக்கல்களை மிக இலகுவாகக் கையாண்டுள்ளார். ‘பெண்விடுதலை’ எனும் தலைப்பு கொண்ட நாடகத்தில் பணக்கார மாணவர்கள் ஏழையாக நடிப்பதற்குக் கூட தயாராக இல்லை என்பதை எண்ணி, ஓர் ஏழையாக நடிக்கக் கூட இவர்களுக்குப் பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட மனநிலை கொண்ட இவர்களுக்கு கற்பிப்பதே வீண்தான் என எண்ணி கவலை கொள்கிறாள் மலர்விழி. இந்நிலையை மலர்விழி தன் கணவனிடம் எடுத்துக் கூறும் தருணத்தில் ”ஊரோட ஒத்து வாழுன்னு தான் பெரியவுங்க சொல்லிருக்காக” எனும் பதில் அவளுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்தது.இளஞ்சிறார்களுக்கு எங்கிருந்து வந்தது இத்தகைய பாகுபாடு? என்னைப் பொருத்தவரை இப்பாகுபாடு அவர்கள் மனதில் வேரூன்ற காரணம் ஒரு சில திரைப்படமும்,சில பொது நிகழ்வுகளும் தான் என்பது என் கருத்து.இந்த எண்ணங்களை மாற்றியமைக்கும் பொறுப்பும் உரிமையும் ஆசிரியருக்கு உண்டு.அதனடிப்படையிலே மலர்விழியின் விழிப்புணர்வு மிக்க உரையாடலும் தன்னம்பிக்கை மிகுந்த சொல்லும் மாணவர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவள் மேற்கொண்ட முயற்சியில் வெற்றியும் காண்கிறாள். ஒரு ஆசிரியருக்கு இவ்வுலகில் இதைக்காட்டிலும் வேறு இன்பம் எதுவுமில்லை.

காலம் மாறிக்கொண்டே இருந்தாலும் ஒரு சில எண்ணங்கள் மக்கள் மனதில் மாறாமல் இன்றும் மக்களைவிட்டுப் பிரியாமல் வதைத்துக் கொண்டு தான் உள்ளது. நிஷா என்கிற குழந்தைக்கு பத்தாம் வகுப்புப் படிக்கும் போதே அவளுக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது. படிப்பில் மிகுந்த ஆர்வமுள்ள அப்பெண்ணின் பெற்றோரிடம் பேசித் திருமணத்தைத் தடுத்து அவள் படிப்பைத் தொடர மலர்விழி முயற்சிகள் எடுக்கிறாள். ஆனால் நிஷாவின் அப்பாவோ, “டீச்சர், உங்க வேல எதுவோ அத மட்டும் பாருங்க. இது எங்க குடும்ப விசயம். இதுல நீங்க தலையிடத் தேவை இல்ல. ஏம்பொண்ணுக்கு எப்ப என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். நல்லாச் சொல்லிக்கொடுத்தீங்க.நல்லா மார்க் வாங்கீட்டா. அதுபோதும். நல்ல மாப்பிள வரும்போது உட்டுறக்கூடாது. இவா படுச்சு முடிக்கிற காலத்துல இதுமாதிரி மாப்பிள வரும்னு என்ன நிச்சயம்? காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளணும் டீச்சர். அதுனால இந்த விசயத்துல தலையிடுறத இன்னையோட உட்டுறுங்க” என்று எச்சரித்துவிட்டுப் போகிறார். தன் தோழியிடம் கலந்தாலோசித்து சட்டப்படி இதைத் தடுக்க முயற்சி எடுக்கலாமா என்று யோசிக்கிறாள்.

தலைமையாசிரியரிடம் இருவரும் சென்று பேசுகிறார்கள். அவரோ, “உங்க ரெண்டு பேத்துக்கும் வேற வேல வெட்டி ஒண்ணுமில்லையா?அந்தப் பொண்ணோட அப்பா பெரிய பணக்காரரு. ஊருக்குள்ள மதிப்பும் மரியாதையும் உள்ளவரு. அவரப் போயி போலீசு அது இதுன்னு இழுத்தா என்னாகும்னு தெரியாம வௌயாட்டுத்தனமா பேசுறீங்க. அவரு மகளுக்கு அவரு செய்யுறாரு. நீங்க போயி உங்க வேல எதுவோ அத மட்டும் பாருங்க. தேவையில்லாத விசயத்துல தலையிடாம இருங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது” என்று சத்தம் போட்டு அனுப்புகிறார்.இப்பதில் மலர்விழிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் தலைமையாசிரியரே பொறுப்பற்று பேசும் பொழுது,மேற்கொண்டு அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை.இன்றும் நம் சமூகத்தில் பல நிஷாக்கள் இப்பிரச்சனையை தினந்தோறும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இதற்கு தீர்வு அரசாங்கம் உருவாக்கியுள்ள சட்டம் அல்ல. பெற்றோர்களுக்குத் தேவையான விழிப்புணர்வு.

கற்றல், கற்பித்தல் இவையிரண்டும் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் எளிதானதல்ல. மதுராந்தகம் அருகே சென்னிப் பாக்கம் எனும் ஊரில் அரசு நிதி உதவி பெறும் ஆரம்பப்பள்ளி. கிராமப்புற சிறு குழந்தைகளுக்கு எளிதாகக் கற்பிப்பது என்பது பெரும் சவாலாக இருந்தது மலர்விழிக்கு. அச்சவாலையும் சந்தித்து சாதித்தாள் மலர்விழி. ஆடல், பாடல், விளையாட்டுக்களில் அதீத ஈடுபாடு கொண்ட அவர்களுக்குப் பாடங்களைப் பாடல்களாகவும் கதைகளாகவும் நாடகங்களாகவும் மாற்றியமைத்து இசையமைத்து அபிநயித்துக் கற்றுக் கொடுத்தாள். கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்திய பின் அவர்களாகவே கற்றுக் கொள்ள முன்வந்தனர். அதன் பிறகு மாணவர்களுக்கு கற்றலும் மலர்விழிக்குக் கற்பித்தலும் சந்தோஷமான நிகழ்வுகளாயின எனும் மலர்விழியின் பதிவு அவருக்கு மட்டும் மகிழ்வைத் தரவில்லை.இந்நூலைப் படிப்பவருக்கும் மகிழ்வையும் மற்ற ஆசிரியர்களுக்கு வழிகாட்டி நூலாகவும் அமைந்தது என்பதே உண்மை. அதன் எதிரொலியாக இன்று வலையொலி, முகநூல், புலனம் போன்ற செயலிகளில் ஆசிரியர்கள் புதுமையான நோக்கில் கற்பிக்கும் முறைகளை நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

இதன் காரணமோ? என்னவோ? நம் தமிழக அரசு 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முன்னெடுத்து ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகின்றது. குழந்தைகளுக்காக நாம், நமக்காக குழந்தைகள் எனும் கருத்தை உணர்ந்து ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு முழு நிறைவு பெற்று வருவது வரவேற்கத்தக்கதாகும். ‘விருட்சங்களாகும் விதைகள்’ எனும் பாமா அவர்களின் படைப்பு ஒவ்வொரு ஆசிரியரின் கையில் இருக்க வேண்டிய ஒரு அகராதி.

விருட்சங்களாகும் விதைகள் | பாமா

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | விலை ரூ.250

- முனைவர் செ.கல்பனா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தருமமூர்த்தி இராவ்பகதுர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி, பட்டாபிராம், சென்னை -72