bookreview suraபொதுவாக புனைவு என்றால் இலக்கிய மொழியில் 'கற்பனைகள்' என்றும், மலிவான மொழியில் சொன்னால் 'பொய்' என்றும் பொருள்படும். 'பொய்யும் புனைசுருட்டும்' என்பது திராவிட மேடை மொழி. புனைவு, அ - புனைவு என்றெல்லாம் இலக்கியச் சொல்லாடல்கள் நம்மிடையே உண்டு.

நமக்குக் கேள்வியெல்லாம் புனைவின்றிய எழுத்துக்கள் என்பது சாத்தியமா? இலக்கியத்தை விடுங்கள். காவல்துறையினரால் உருவாக்கப்படும் முதல் தகவல் அறிக்கையில் இல்லாத புனைவுகளா? ஆக புனைவின்றிய ஒரு எழுத்து என்பது எங்கும் எப்போதும் சாத்தியப்படாது.

புனைவில் பல வகைமாதிரிகள் உண்டு என்றாலும், வரலாற்றுப் புனைவுகள் என்று முன்மொழிந்து கவிஞரும், சிறுகதையாளரும், நாவலாசிரியருமான எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் 'எண்வலிச்சாலை' (வரலாற்றுப் புனைவுகள்) என்கிற நூலொன்றினை எழுதியிருக்கிறார்.

வரலாறு என்றால் என்ன? நம் பொதுப் புத்தியில் வரலாறு என்றால்... அசோகர் சாலைகளில் மரங்கள் நட்டார். குளங்கள் வெட்டினார். முதலாம் பானிபட் போர். இரண்டாம் பானிபட் போர், மூன்றாம் பானிபட் போர், முன்னூறாம் பானிபட் போர், என அரசர்களின் படையெடுப்புகள், அவர் இவர் மீது படையெடுத்து வந்து செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்.

இவர் அவரைச் சூழ்ச்சியால் தோற்கடித்தார். தொடர்ந்து பதினெட்டு முறைகள் படையெடுத்து படையெடுத்துத் தோற்றார். (எமது பள்ளி நாட்களில் தேர்வில் தோற்றுப்போகும் மாணவரைப் பார்த்து பகடியாய்ச் சிரிப்போடு சொல்லப்படும் கதை இது).

உண்மையில் வரலாறு என்பது மன்னர்களின் வாழ்வு, சாவு, போர்கள் பற்றியது மட்டுமன்று. ஒரு சமூகத்தின், மக்கள் குழுக்களின், இனத்தின் அவற்றைச் சுற்றிச் சூழ்ந்துள்ள பிற உலகினோடு அவை கொண்டுள்ள உறவுகள் பற்றியதுமாகும்.

பொதுவாக வரலாறு என்பதே எழுதப்படுவதுதான். இந்த வரலாற்றை எழுதுதல் என்பது, வரலாற்றை எழுதுபவனின் வர்க்கம், இனம், சாதி, மொழி போன்றவைகளை உட்கிடையாகக் கொண்டுதான் தொழிற்படும்.

நமது பணி என்பது வரலாற்றைத் திருத்தி எழுதுவது மட்டுமல்ல. திருத்தமாயும் எழுதுவதுதான். இன்னும் சற்றுக் கூடுதலாய், திருத்தமாய், உண்மையைத் தேடிக் கண்டடைந்து வரலாறு எழுதுதல் என்பதுதான் நம்முன் உள்ள மிகப் பெரிய சவால்.

அவ்வாறு உண்மையைத் தேடிக் கண்டடைவது என்றால், இதுவரை நம்முன் விரித்து வைக்கப்பட்டுள்ள வரலாறுகளை மறு வாசிப்புச் செய்வதுதான். மறு வாசிப்புச் செய்து, கட்டுடைத்து, உண்மைகளை வெளிக்கொண்டு வருவதுதான்.

பெருங்கதையாடல்களை இனம்கண்டு, அதனடியில் அமிழ்ந்து போயிருக்கும் உண்மைகளை வெளிக் கொணர்வதுதான். அதற்கான பயணிப்புப் போக்கில் நாம் சில உண்மைகளின் உண்மைகளைக் கண்டாக வேண்டும்.

வரலாற்றுக்குள்ளிருந்து வரலாற்றையும், உண்மைகளுக்குள்ளிருந்து உண்மைகளையும், தோண்டி எடுத்து வெளிக்கொணர வேண்டியது மக்கள் விடுதலைக்கான படைப்பாளர்களின் பணி ஆகும்.

பொதுவாக இலக்கியப் பனுவல்கள் என்றாலே புனைவுகள்தான் அதன் அடித்தளம். அதன் மீதுதான் எந்த ஒரு இலக்கியப் பனுவலும் கட்டப்படும். இந்தப் புனைவு இடைவெளிக்குள்தான் சாமர்த்தியமாக இந்த உள் நுழைத்தல்கள் சாத்தியப்பட்டு விடுகின்றன அவர்களுக்கு.

எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்கள் தத்தமது வர்க்கச் சார்புடைத்து, ஒரு பட்சமாகக் காணப்படுகின்ற போது, நமக்கான உண்மைத் தரவுகளை எங்கிருந்து எடுப்பது? எடுத்துக் கொள்வது? என்றால், இதுவரை நம்முன் வைக்கப்பட்ட மரபுவழி ஆய்வுகளை, ஆய்வு நெறிகளை, மக்கள் விடுதலைச் சார்புக் கருத்தியல் விழிப்பு நிலைக் கண் கொண்டு நாம் அணுகவேண்டும்.

அடுத்து, ஆய்வுகளுக்குள் அமிழ்ந்துபோய் விடாமல், விழிப்பு நிலையில் நின்று, மார்க்சிய இயங்கியல் ஆய்வுச்செல் நெறிகளோடு, நவீனத்துவ ஆய்வு நெறிகளையும் கைக்கொண்டு, மறுவாசிப்புச் செய்வதும், கட்டுடைப்பதும், பெருங்கதையாடல்களுக்கு எதிராக நமக்கான கதையாடல்களை எதிர் நிறுத்துவதுமான ஆய்வுப்போக்கினைக் கைக்கொள்ள வேண்டும் நாம்.

அப்படியானதொரு நிலைப்பாட்டில் மிக அருமையாக, அழகாக, ஆழமாக இயங்கியிருக்கிறார் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள். 94 பக்கங்கள் கொண்ட இந் நூலில் பத்து படைப்பாக்கங்கள் வரலாற்றுப் புனைவெழுத்துக்களாக நம் முன் விரித்து வைக்கப் பட்டிருக்கின்றன. இவைகள் சிறுகதைகளா? என்றால்... ஆம். சிறுகதைகளுக்கான கூறுகளுடனும் இருக்கின்றன.

கட்டுரைகளா? என்றால்... ஆம் என்கிறபோதிலும்... கட்டுரை என்கிற வடிவத்தினையும் தாண்டி ஒரு தேர்ந்த இலக்கியப் பனுவல்களுக்கான கூறுகளுடனும் இருக்கின்றன.

இப்படியான இருவகைக் கூறுகளுடன் பிசைந்து எழுதப்பட்டிருக்கும் 'எண்வலிச்சாலை' (வரலாற்றுப் புனைவுகள்) என்கிற இந்த நூல், சிறந்த இலக்கியப் பனுவல்கள் தரும் வாசிப்பு உணர்வுகளை நமக்கு ஒருசேரத் தருகிறது.

'கதை முகம்' என்கிற படைப்பாக்கத்தின் மூலம், எடுத்த எடுப்பிலேயே சட்டென்று அற்புதமான அருமையானதொரு பாய்ச்சலை எட்டிவிடுகிறது நூல். தன்னுள் ஆழ்ந்த விமர்சனத்தையும், பகடியையும் ஒருசேரக் கொண்ட சிறப்பான படைப்பாக்கம் இது.

அடுத்த சிறப்பானதொரு படைப்பாக்கம் 'நிறுத்தற்குறி'. வழக்குமன்றத்தில் தீர்ப்பு சொல்லிகளின் முன், கலெக்டர் கைபிசைந்து வாய்பதறிச் சொல்லும் வாக்குமூலங்களின் வழி நம் முன் விரியும் காட்சி, சமீபத்திய ஸ்டெர்லைட் போராட்டக் களங்களும், அந்த அரச பயங்கரவாத துப்பாக்கிச் சூடும் என காட்சிகள் கச்சிதமாக நம்முன் விரிந்து கொண்டே செல்கிறபோது, திடீரென்று மடைமாற்றி... தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் தொழிற்சங்க வரலாற்றின் முன்னத்திப் போராட்டக் களமாகவும், முன்னின்ற வஉசி முதற்கொண்ட தலைவர்களின் முன்னெடுப்பும், கலெக்டர் விஞ்ச்சாகவும் உருமாறி முற்றிலும் வேறொரு வரலாற்றுப் புலமாக மாற்றிக் காட்டுகிறபோது, அதிர்ந்து விடுகிறது நம் வாசிப்பு மனம்.

நிகழை அப்படியே பெயர்த்தெடுத்து நேற்றில் தோய்த்து புதியதொரு வெளிச்சத்தை நம்முன் பாய்ச்சுகிறபோது படைப்பாளரின் படைப்பாக்கத் திறனை உச்சி முகர்ந்து மெச்சிட வைக்கிறது.

அடுத்து ஆகச் சிறந்ததொரு படைப்பாக்கம் 'பசலி'. ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத் துவக்கத்திற்கு சகல ஏற்பாட்டையும் அ முதல் அஃக் வரை ஓடி ஓடி முன்சென்று சகலத்தையும் கச்சிதமாய் ஏற்பாடு செய்து பணியாற்றும் பொறுப்புமிக்க அதிகாரியான தாசில்தார் பஞ்சமர் (இங்கு பஞ்சமன் என்று இன் விகுதி போட்டு எழுத நமக்குக் கூசுகிறது.

படைப்பாளர் காலப் பொருத்தம் கருதி இன் விகுதி போட்டிருந்தாலும், நமக்கு அதையே எழுத வேண்டிய, ஒழுக வேண்டிய தேவையில்லையே. எனவே, இன் விகுதியை விடுத்து இர் விகுதி) எல்லா வேலைகளையும் கனகச்சிதமாக முடித்தாலும் சாதியைக் காரணங்காட்டி அவருக்கு அந்த ஊரிலேயே தங்குவதற்கு இடம் கொடுக்காத சாதி மேலாண்மையை மூளையிலும் உணர்விலும் கொண்ட ஊர் மக்கள் மறுத்துவிட, அவர் குறிப்பிட்ட துவக்க நாள் விழாவிற்கு உரிய நேரத்திற்கு வரவியலாது தாமதமாய் வர, வெள்ளை அதிகாரி கடுஞ்சினங் கொள்ள,

"இங்கே ஐந்தாம் வர்ணத்தவன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் தங்குவதற்கு வீடு தரப்பட மாட்டாது துரை" என்ற உண்மை தெரியவர, 'சாதியைக் காரணங் காட்டி தாசில்தாரை அவமதிப்புச் செய்த இந்த ஊருக்குத் தாலுகா ஆபீஸ் தேவையில்லை' என்று அந்த ஆங்கிலேய கலெக்டர் முடிவுக்கு வந்து உத்தரவிட, ஒட்டப்பிடாரம் தாலுகா ஆபீஸ் கோவில்பட்டிக்கு மாற்றப்பட்ட கதையினை, முந்தைய வரலாற்றைச் சொல்கிறபோது, பெருமிதம் கொண்ட நமது தமிழ் மாந்த மரபின ஓர்மை ஒருகனம் துணுக்குற்று நாணுகிறது. நாறித் தொலைக்கிறது.

அதேசமயம் "நல்லா படி. படிச்சுப் பெரிய இடத்துக்குப் போ. உன்னோட சாதியைப் பார்த்து ஏளனமாப் பேசுனவனெல்லாம் உன்னோட பதவிக்கு முன்னாடி கைகட்டி நிற்பான்" என்கிற போலி வசனங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுவரும் சமீப காலத் திரைப்பட ஆக்கங்களின் முகத்திரையை சமரசமின்றிக் கிழித்தெறிகிறது இப்படைப்பு.

உலகமே போற்றும் கற்றுத் துறைபோகிய அறிவார்ந்த அண்ணல் அம்பேத்கரை இன்னும் சாதியச் சிமிழுக்குள்தானே அடைத்துக் கொண்டிருக்கிறோம் நாம். சாதி ஒழிக்கப்பட்ட சமதர்ம தன்னுரிமைத் தமிழ்த்தேச விடுதலையில்தான் இதுமாதிரியான அவலங்கள் நீங்கும், நீங்கிடும் என்பதே நமது நம்பிக்கை.

முண்டாசுக் கவிஞனின் சொக்கும் வரிகளோடு வெகு நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட 'நின்னைச் சரண்டைந்தேன்' என்கிற ஆக்கம், எமது ஆரம்பகால ரஷ்யச் செவ்விலக்கிய வாசிப்பின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாத செவ்விலக்கிய ஆக்கமாய்ப் 'பருந்து பசி' போன்ற அருமையான ஆக்கங்களும், சிலபல தகவல் பிழைகளைக் கொண்டிருக்கிற 'உதிரக்கோடு'. ஒருமைப் பன்மைப் பிழையோடு கூடிய தலைப்பில், அரைகுறைப் புரிதலான கருத்தியல் கொண்ட 'நாய்கள் இப்படித்தான் பூனை தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டன'.

இன்னும் திருத்தங்களையும், கச்சிதமான எழுத்தாடலையும் கோருகின்ற 'எண்வலிச்சாலை'. வரலாறு என்னை விடுதலை செய்யும் என்று முழங்கியதோடு மட்டுமின்றி, கியூபா மண்ணையும், மக்களையும் வரலாற்றில் விடுதலை செய்ததோடு மட்டுமல்ல. உலகினில் உச்சமான வாழ்நிலையையும் உறுதிப்படுத்திய ஃபிடல் காஸ்ட்ரோ என்கிற 'குருதியில் நனைந்த குருளை' போன்ற உன்னதமான ஆக்கங்களையும் தன்னகத்தே கொண்டது இந்நூல்.

'எண்வழிச்சாலை'யை 'எண்வலிச்சாலை' என்று தலைப்பிட்ட நுட்பம், உரையாடலில்.. எழுத்தாடலில்.. ஆங்காங்கே கவித்துவம் தெறிக்கும் நயம் என்கிற படைப்புச் செய்நேர்த்தியோடு...

கிடைக்கிற அல்லது தாமாக வலிந்து ஏற்படுத்திக் கொள்கிற புனைவு இடைவெளிகளுக்குள் சாமர்த்தியமாக உள் நுழைந்து, தங்கள் ஆதிக்கக் கருத்தியல்களைச் சட்டென்று வெளித் தெரியா வண்ணம்.. வெளிப்பார்வைக்குப் புலப்படா வண்ணம்.. வரலாற்றுத் திரிபுகளை.. திரிப்புகளை.. சாமர்த்தியமாக உள்நுழைத்து விடுகிற ஆதிக்க அரசியல் வரலாற்றெழுதிகளுக்கு மத்தியில், அவர்களது ஆயுதத்தையே பிடுங்கி அவர்களையே சாய்த்துவிடும் சாமர்த்தியமும்.. புனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்வதுமான வலுவான படைப்பாக்கங்களே எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களின் இந்த எண்வலிச்சாலை எனலாம்.

எண்வலிச்சாலை
(வரலாற்றுப் புனைவுகள்)
அண்டனூர் சுரா
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை : ரூ. 80.00

- பாட்டாளி

Pin It