தமிழகக் கோவில்கள் பற்றி வந்த நூல்களை அவற்றின் உள்ளடக்கம் ‘தரம்’ அமைப்பு, செய்திகளைக் கூறும் முறை போன்ற காரணங்களின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பகுக்கலாம்.

முதல் வகை. கோவில் வழிகாட்டியாக சிறு பிரசுரமாக குறைந்த பக்கம் கொண்ட நூல் வடிவில் இருப்பவை. இவற்றில் கோவில் தல புராணங்கள் முக்கியப்படுத்தப்படும். இந்தக் கோவிலை வழிபடுவதால் கிடைக்கும் பயன்கள், வழிபாட்டு நேரம், நேர்ச்சை, பரிகாரம் எனப் பல விஷயங்கள் இந்த நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வகை நூல்களில் சிலவற்றுக்கு ஆசிரியர் பெயர் இருக்காது. இவற்றை எழுதுபவர்கள் ஆய்வாளர்கள் அல்லர். இவை கோவிலுக்கு வரும் பக்தர்களின் பக்தியை நம்பிக்கையைக் குறிப்பதற்காக இருக்கும்.

ஒருகாலத்தில் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தங்கள் கோவிலுக்குத் தலபுராணம் எழுத வேண்டும் என்று கோவிலைச் சார்ந்தவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதற்காக எழுதிய தலபுராணக் கதையை ஒத்ததுதான் இந்த வகை நூற்களும். இந்த வகை நூல்கள் கோவில் வழிகாட்டிகள் கோவிலைப் பார்க்க வந்தவர்களிடம் கூறும் புனைவுகளை மிகைப்படுத்திக் கூறும். இவை கோவில் நம்பிக்கை சார்ந்து வந்தவர்களுக்கு எழுதப்பட்டவை. இந்த வகை நூல்களில் கோவிலின், பிரமிப்பையும் நம்பிக்கையையும் மிகைப்படுத்துவதைக் காணலாம், கோவிலின் வருமானத்திற்கு உதவ இப்புத்தகம் பயன்படும்.tamilnadu temple 670இரண்டாம் வகை நூல்கள் சோதிடனின் பார்வையில் உருவாக்கப்பட்டவை அல்லது அவர்களின் செல்வாக்குப் பெற்றவை. இந்த வகை நூல்கள் கோவிலைப் பற்றிய வழிகாட்டியாக மட்டுமல்லாமல் ஒருவர் ஜாதகக் கோளாறால் ஏற்பட்ட சிக்கலுக்கு பரிகாரம் கூறும் முகமாகவும் உருவாக்கப்பட்டவை.

இவை பெரும்பாலும் இதழ்கள், பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளின் தொகுப்பாகவும் இருக்கும். இவை பின்னர் விரிவாகப் புனைவுடன் தொகுக்கப்படுவதும் உண்டு. வலைத்தளத்தில் ஒரு குறிப்பிட்ட கோவிலைத் தேடினால் பெரும்பாலும் இந்தப் புத்தகங்களின் சுருக்கத்தைப் போட்டிருக்கிறார்கள். திருநள்ளாறு, திருக்கடையூர் வரலாறு பற்றிய நூல்கள் இந்த வகையில் அடங்கும். இவை ஆய்வு நூல்கள் அல்ல.

மூன்றாவது வகை, பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு மையம் இருக்கும் கல்லூரிகளிலும் தயாராகும் எம்பில்,பிஎச் டி ஆய்வேடுகள். பெரும்பாலும் இந்த வகை ஆய்வுகள் அந்த ஆய்வு மையங்கள் இருக்கும் இடங்களைச் சுற்றி உள்ள கோயில்களைப் பற்றியதாகவே இருக்கும். இந்த ஆய்வேடுகள் பட்டத்திற்காக மட்டுமே எழுதப்பட்டவை. பெரும்பாலும் இவை அச்சில் வருவதில்லை. சில புத்தகமாக வந்துள்ளன. அவையும் மூல வடிவத்திலிருந்து செப்பம் செய்யப்பட்டவை.

இத்தகு ஆய்வுகள் தமிழ்த்துறை, வரலாற்றுத்துறை என்னும் இரண்டு துறைகளிலும் நடக்கும், ஆய்வுகள், இத்தகைய எம்.பில், பிஎச்டி ஆய்வேடுகள் தமிழகத்தில் 400க்கு மேல் இருக்கலாம். இவற்றில் தரமான ஆய்வேடுகள் உண்டு. உதாரணமாக நெல்லையப்பர் கோவில், குற்றாலநாதர் கோவில், சங்கர நாராயணர் கோவில் ஆகியவை பற்றிய ஆய்வுகள். இவற்றில் மிக சாதாரணமான ஆய்வுகளும் உண்டு (கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் குறித்த ஆய்வு).

இந்த ஆய்வேடுகள் கோவிலைக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், ஓலை ஆவணங்கள் தல புராணங்கள் போன்றவற்றை கணக்கில் எடுத்து ஆய்வு மேற்கொண்டாலும் கோவிலுக்கும் சமூகத்திற்குமான உறவைப்பற்றி பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலும் எல்லா கோயில் ஆய்வேடுகளுக்கும் ஒரே மாதிரியான இயல் பகுப்பும் கோவில் சிற்பங்களை விளக்கும் போக்கும் அமைந்திருக்கும்.

நான்காம் பகுப்பில் தொல்லியல் துறை ஆய்வாளர்களும் வரலாற்றுப் பேராசிரியர்களும் எழுதிய நூற்கள் அடங்கும். இந்த வகையில் எழுதியவர்கள் பெரும்பாலோர் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆவர். இத்தகு நூற்கள் முக்கியமானவை. தொல்லியல் துறையினர் வெளியிட்ட நூல்கள் கோவிலின் கல்வெட்டுகள். செப்பேடுகள். ஆவணங்கள் போன்றவற்றை மட்டுமே சான்றாக எடுத்துக் கொள்ளும்.

இத்தகு நூற்களில் கோவிலின் சமூகப் பங்களிப்பு, சமூகங்களின் உறவு, தேவதாசிகளின் நிலை, கோவில் பணியாளர்களின் நிலை போன்றவை மிகக் குறைவாகவே சொல்லப்பட்டிருக்கும் அல்லது மேற்கோளாகவே காட்டப்பட்டிருக்கும். இவை நுட்பமாக விளக்கப்பட்டிருக்காது. இத்தகு நூல்கள் கோவிலின் கட்டுமானம் பற்றி அதிகம் கவனம் செலுத்தும் சிற்பங்களை விவரிப்பதில் பக்கங்களை நகர்த்தும். இது போன்ற நூல்களை எழுதும் போது பெரும்பாலும் சிக்கல்கள் வருவதில்லை. கோவிலின் காலத்தைக் கணிக்கின்ற போது மட்டும்தான் இவர்கள் சிக்கலுக்கு உள்ளாகிறார்கள்.

இவர்கள் அல்லாமல் முனைவர் பட்ட ஆய்வு அல்லது தன்னார்வத்தால் எழுதப்பட்ட நூல்கள் உண்டு. உதாராணமாக சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் (கே.கே.பிள்ளை 1943) காஞ்சி வரதராஜன் கோவில் (கே.வி.ராமன் 1975) கைலாசநாதர் கோவில் (சி.மீனாட்சி 1983) அழகர் கோவில் (தொ.பரமசிவம் 1997) ஆகியன முக்கியமானவை. தன் ஆர்வத்தால் அல்லது வேண்டுகோளால் எழுதப்பட்ட நூல்கள் உண்டு. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் (அ.கா.பெருமாள் 2007) திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் (அ.கா.பெருமாள் 2009) தஞ்சை பெரிய கோவில் (குடவாயில் பாலசுப்பிரமணியம்), தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் (குடவாயில் பாலசுப்பிரமணியம்) தமிழ்நாட்டுக் குடைவரைக் கோவில்கள் (இராசவேலு 2000) என சில நூற்களைச் சொல்ல முடியும்.

இந்த வகைக் கோவிலின் வரலாறு துல்லியமாக எழுதப்பட்டவை. இவற்றில் சில முனைவர் பட்டத்திற்காக எழுதப்பட்டாலும் அது அச்சில் வரும் போது முழுமையான வடிவத்தோடு வெளியிடப்பட்டுள்ளது. இவை முனைவர் பட்டத்திற்கு உரியது என்ற நிலையைத் தாண்டி வெளிவந்தவை. இத்தகு நூல்கள் எண்ணிக்கையில் குறைவு. இது போன்ற நூல்களை வெளியிடும் போது ஏற்படும் சிக்கல்கள் அதிகம்.

தமிழகக் கோவில்கள் பற்றி ஆரம்பகாலத்தில் எழுதியவர்களிலிருந்து (ஜெகதீச அய்யர்) இன்றுவரை உள்ளவர்களிடம் ஏற்பட்ட ஆய்வின் சிக்கல் பொதுவானதல்ல. முந்தைய ஆய்வாளர்களுக்கும் இன்றைய ஆய்வாளர்களுக்கும் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தும் போது ஏற்படும் சிக்கல் காலத்தின் அடிப்படையில் வேறுபடுகிறது.

மானுடவியல், சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல் ஆகிய துறைகளில் ஆய்வு செய்கின்றவர்களுக்கும் இது பொருந்தும். இன்றைய ஆய்வாளர்களுக்கு கோவிலின் சமூகப் பங்களிப்பு, கோவிலுக்கும் ஜாதிகளுக்கும் உள்ள உறவு, தேவதாசிகளின் நிலை, பூசகர்கள் கோவிலுடன் கொண்ட உறவால் சாதிய அடுக்கைப் பேணிய வரலாறு போன்றவற்றைப் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதிலும் எழுதுவதிலும் சிக்கல் உண்டு.

வரலாற்றுப் பேராசிரியர் கே.கே.பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஊரிலுள்ள தாணுமாலயன் கோவிலைப் பற்றி முப்பதுகளின் இறுதியில் செய்தி சேகரிக்க ஆரம்பித்துவிட்டார். இக்காலத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்து 10 ஆண்டுகள்தான் ஆயிருந்தன. என்றாலும் தேவதாசிகள் சிலர் குத்தகைப் பணியாளர்களாக கோவில்களில் வேலை செய்தனர். ஐம்பதுகள் வரை இந்த நிலை தென்குமரி பகுதியில் வழக்கில் இருந்தது. ஆகவே இவர்களிடம் கோவில் தேவதாசிகள் பற்றிய செய்திகளைச் சேகரிப்பது. எளிதான காரியம். கே.கே.பிள்ளை இது போன்ற செய்திகளைச் சேகரித்திருக்கிறார். ஆனால் அந்த செய்திகள் எல்லாவற்றையும் தன் புத்தகத்தில் முழுமையாக சொல்லவில்லை.

தேவதாசி ஒழிப்புக்குப் பின்பு தேவதாசியாகப் பணியாற்றியவர்கள் நாஞ்சில் நாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த விஷயத்தை அவரால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. எழுபதுகளின் ஆரம்பத்தில் தேவதாசி ஒருத்தியை நான் பேட்டி கண்டு செய்தி சேகரித்தபோது நிறைய தகவல்கள் கிடைத்தன. அவர் சொன்ன பல விஷயங்களை கே.கே.பிள்ளை தன் நூலில் சொல்லவில்லை.

நான் தேவதாசிகள் பற்றி சேகரித்த செய்திகளின் அடிப்படையில் ‘உங்கள் நூலகம்' மாத இதழில் இரண்டு கட்டுரைகள் எழுதினேன் (சின்னக்குட்டியும் கச்சவட முக்கும், சின்னக்குட்டி பிடித்த பச்சைப் பாம்பு) நானும் கூட இந்த கட்டுரைகளில் சில விஷயங்களைச் சொல்லாமல் விட்டிருக்கிறேன். கே.கே.பிள்ளை காலத்தில் இருந்ததைவிட என்னுடைய காலத்தில் இது போன்ற விஷயங்களைக் சொல்லுவதில் சிக்கல் அதிகமாகிவிட்டது. அந்தக் கோவிலுக்கும் ஊருக்கும் உள்ள உறவு, கோவில் நிர்வாகிகள் அந்த ஊரையும் அதைச் சுற்றிய குக்கிராமங்களிலும் நிர்வகித்ததனால் வந்த விளைவு என பல விஷயங்களை இன்று சொல்ல முடியாது.

இதுபோன்ற சிக்கல்கள் மற்ற மாவட்டங்களைச் சார்ந்த ஆய்வாளர்களுக்கும் இருந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட கோவில்களில் பணியாற்றிய தேவதாசிகள் தங்களை அங்கேயுள்ள ஒரு பெரிய சாதியினருடன், இணைத்துக்கொண்டனர். இதை நெல்லையப்பர் கோவிலைப் பற்றி எழுதியவர்கள் யாரும் சொல்லவில்லை. இது அவர்களுக்குத் தெரியாத விஷயமும் அல்ல. நெல்லையப்பர் கோவில் தேவ தாசிகளின் நன்கொடை ஈடுபாடு கூட விரிவாக விளக்கப்படவில்லை. இப்படி எத்தனையோ விஷயங்களைச் சொல்லிக்கொண்டு போகமுடியும். ஆய்வாளருக்கு ஏற்படும் சிக்கல்களில் இது முக்கியமான ஒன்று.

ஒரு கோவிலின் விழா சடங்குகள் என்பது பிராமணர்களை மட்டும் சார்ந்ததாக இருக்கவில்லை. கோவில் இருக்கும் ஊரில் உள்ள பல சாதிகளை சார்ந்து அல்லது இணைந்து நடக்கும் காரியங்களாகவும் இருந்தது. இதையெல்லாம் பதிவு செய்வதில் சிக்கல் உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்கள் சிலவற்றில் இருக்கும் ஒடுக்கப்பட்ட ஜாதிகள் பலவற்றுக்கும் அக்கோவிலுக்கும் உள்ள உறவைப் பற்றி நான் நிறையவே சேகரித்தேன். இந்தத் தகவல்களின் அடிப்படையில் ‘இவர்களுக்கு மரியாதை இருந்தது' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை ‘மானுடம்' மும்மாத இதழில் வெளியிட்டு இருந்தேன். இதன் விளைவை சிலரிடமிருந்து நான் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இதுபோன்ற சிக்கல்கள் முக்கியமானவை.

ஒரு கோவிலின் கட்டுமான காலத்தைத் துல்லியமாக கணிப்பது சிக்கலானது. முழு கட்டுமானமும் ஒரே காலத்தில் அரசர் ஒருவரால் கட்டப்படுவதில்லை. பரிவார தெய்வங்களின் கோவில்களும் முக்கியமான மண்டபங்களும் பல்வேறு காலங்களில் கட்டப்படும். கட்டுமானப் பணி என்பது பல காலங்களில் நடப்பது. ஒரு கோவிலின் எல்லாப் பகுதிகளும் ஒரே காலத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசுகளால் உருவாக்கப்பட்டவை. ஒரு ஆய்வாளருக்கு இந்த விஷயத்தை விளக்குவதில் பெரிய சவால் உருவாகும்.

கோவில் கட்டுமானத்தை கல்வெட்டுகளாலும் செப்பேடுகளாலும் மட்டும் கணிக்க முடியாது. தமிழகத்தில் பல கோவில்களில் உள்ள மண்டபங்களில் கட்டியவரின் பெயரோ வேறு அடையாளங்களோ இல்லை. இந்த மண்டபங்களைக் கட்டியவரின் பெயர்கள் காலம் இரண்டையும் தீர்மானிப்பதில் சிக்கல் உண்டு. இதுபோன்ற சமயங்களில் அரசர்களின் கட்டுமானப் பாணியை அடிப்படையாகக் கொண்டு பல்லவர் காலம், சோழர் காலம் என பாகுபடுத்தும் உத்தியைப் பயன்படுத்துகின்றனர்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை முதல் ராஜராஜன் கட்டினாலும் நாயக்கர்கள் மராட்டியர்களின் கட்டுமான செல்வாக்கு கோவிலில் உண்டு. இக்கோவிலின் உள் மண்டபத்தில் சுவர் ஓவியங்கள் முதல் ராஜராஜன் காலத்தில் வரையப்பட்டவை. அவற்றின்மேல் சுண்ணாம்பு பூசப்பட்டு பிற்கால ஓவியங்கள் வரைந்திருப்பது இருபதாம் நூற்றாண்டு ஆரம்பகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல வேறு உதாரணங்களையும் கூறமுடியும். சித்தன்னவாசல் குடைவரை ஓவியத்தை பல்லவர் காலத்தது என்று ஆரம்பகால ஆய்வாளர்கள் பலரும் கூறினார்கள். இது முற்காலப் பாண்டியர் காலம் என அண்மையில் நிறுவப்பட்டுள்ளது.

கருவறை சிற்பங்களையும் பரிவார தெய்வங்களின் சிற்பங்களையும் செப்புப்படிமங்களையும் துல்லியமாக அடையாளம் காண்பதில் சிக்கல் உண்டு. இந்த உருவங்கள் இருக்கும் இடத்திற்கு பிராமணரல்லாத ஆய்வாளர் செல்ல முடியாது. அதனால் இங்கே ஆய்வாளன் பூசகரையே நம்ப வேண்டி இருக்கிறது. பூசகர் சொல்லும் தகவல்களை மட்டும்தான் சேகரிக்க முடியும். தமிழக பூசகர்களில் பலர் சிற்பங்களைப் பற்றி நுட்பமாக அறியாதவர்கள். சாதாரண விவரங்கள் கூடத் தெரியாதவர்களாக உள்ளனர். இதனால் ஆரம்ப காலத்தில் பல தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன.

கோவிலின் எல்லா பகுதிகளிலும் உள்ள எல்லா கல்வெட்டுகளையும் கல்வெட்டுத் துறையினர் படி எடுக்க முடியாத நிலையில் இருந்திருக்கின்றனர். பெரும்பாலும் இது பதிவு செய்யப்படவில்லை. பல கோவில்களாக கருவறை உட்பகுதியில் உள்ள கல்வெட்டுக்கள் இன்னும் எடுக்கப்படவில்லை என்று சொல்கின்றனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அர்த்த மண்டபத் தூண்களில் பித்தளைத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. இதை அகற்றி விட்டு கல்வெட்டைப் படி எடுப்பதற்கு அறநிலையத்துறை கல்வெட்டுத்.துறைக்கு அனுமதி கொடுக்கவில்லை (1969). இச்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த மண்டபத்தைப் பற்றிய தகவல்களை முழுவதுமாக அறிய முடியவில்லை என்கின்றனர். இப்படியான சிக்கல்கள் பற்றி யாரும் பேசுவதும் இல்லை.

சில கோவில்களில் குறிப்பிட்ட மண்டபங்களை, இடித்து அகற்றிவிட்டு அதே மண்டபத்தில் உள்ள கற்களைப் பயன்படுத்தி வேறு மண்டபங்களில் அல்லது கோவில்களைக் கட்டியுள்ளனர். பழைய மண்டபத்திலுள்ள கல்லில் உள்ள கல்வெட்டில் இருக்கும் செய்திகளை வைத்துக்கொண்டு புதிய மண்டபத்தில் கட்டுமான காலத்தை கணிப்பது சிக்கலை உருவாக்கிவிடும். உதாரணம் திருவலஞ்சுழி பள்ளிப்படை கோவில்.

இக்கோவில் பிற்காலச் சோழர் காலத்துக் கட்டுமானம். ஆனால் கல்வெட்டு பல்லவர் காலத்தது. இதற்கு முக்கிய காரணம் சமணர்களின் கட்டுமானக் கோவில் உடைக்கப்பட்டு அந்தக்கல் இந்தக் கோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே கோவில் கட்டுமானக் கல்வெட்டை முழுமையான சான்றாகப் படுத்தும்போது உண்மையை அறிய வேண்டி இருக்கின்றது. இதுபோன்று இதற்கு வேறு சான்றுகளும் உண்டு.

தமிழகத்தில் பெரும் கோவில்களில் நவக்கிரக மண்டபங்கள் நிறுவுவது என்ற காரியம் அண்மைக்காலத்தில் பெருகி விட்டது. இது கோவில் வருமானத்திற்காகச் செய்யப்படுகின்ற ஒரு செயல்பாடு. நவக்கிரக வழிபாடு என்பது நாயக்கர் காலத்திற்குப் பின்னால் ஏற்பட்டது. பெரும்பாலான கோவில்களில் வெளிப்பிரகாரம் முன்பக்கத்தில் நவக்கிரக சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மண்டபமும் நவகிரக மண்டபமும் வேறுபட்ட காலத்தைச் சார்ந்தவை என்பதைப் பிரித்து அறிய வேண்டிய நிலை உள்ளது.

பொதுவாகத் தமிழகக் கோவில்கள் சித்தர்களின் சமாதி என்ற கருத்தாக்கம் உண்டு. அரசர்களின் பள்ளிப்படையாகவும் கோவில்கள் இருப்பதுண்டு. பழனி கோவில் போகரின் சமாதி, கோவை மருதமலை பாம்பாட்டி சித்தரின் உறைவிடம்; சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் பிருங்கி முனிவரின் சமாதி. இது போன்று சொல்லும் சமாதிகளின் பெரும் பட்டியல் உண்டு. உண்மையில் இவை தலபுராணங்கள் உருவான காலத்தில் புனையப்பட்ட கதைகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இது போன்ற கதைகளை வெளிப்படையாகக் கூறுவதில் சிக்கல் உண்டு.

கோவிலைப் பற்றிய செய்திகளை கோவில் தொடர்பானவர்களோ கோவில் இருக்கும் ஊர்க்காரர்களோ துல்லியமாகச் சொல்லுவார்கள் என்பதை நம்ப முடியாது. ஆய்வாளர்களிடமிருந்தே அவர்கள் சிலவற்றை கேட்டுத்தெரிந்து கொள்கின்றார்கள். மரபுவழியான விஷயங்களைச் சொல்லும்போது அவர்களின் சொந்தப் புனைவு அவர்களின் சாதி குடும்பம் தொடர்பான புனைவு அதில் பெருமளவு கலந்து விடுகின்றது. இந்த இடத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டி இருக்கின்றது.

இன்றைய நிலையில் நாட்டார் தெய்வக் கோவில்கள் மேல்நிலையாக்கம் பெற்று பெருநெறிக் கோவிலாக வழிபாடு பெறுவது என்ற சூழ்நிலை பெருகிவிட்டது. ஒரு கோவில் ஒரு காரணத்தால் பரவலாக பிரபலமாக ஆகிவிட்ட பிறகு அது அதன்மூலம் நாட்டார் தெய்வம் என்று கூறுவதில் பெரும் சிக்கல் இருக்கிறது.

நாகர்கோவில் நாகராஜா கோவில். சமணக் கோயில் சந்தேகமில்லை. இதை பலரும் எழுதியிருக்கின்றார்கள். கல்வெட்டுகளும் சிற்பங்களும் இதற்கு சான்று. இப்போது முழுக்கவும் இது இந்து சமயச் சார்புடையதாகி விட்டது. இதைச் சொல்வதில் கூட பெரிய சிக்கல் இல்லை. ஆனால் இந்தக் கோவிலின் மூலம் நாட்டார் தெய்வம் என்று சொல்லுவதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது. நான் இந்தக் கோவிலின் பல இடங்களில் நாட்டார் தெய்வ வழிபாடு இருந்தது என்பதை பல சான்றுகள் மூலம் தேடிக் கண்டு பிடித்தேன். இதை நான் இன்று வெளியிட முடியாது.

கட்டுமான அமைப்பு மட்டுமல்ல, சிற்பங்களை அடையாளம் காண்பதிலும் சிக்கலும் பிரச்சினைகளும் உண்டு. முருகன் என்ற கடவுளின் ஆயுதங்கள் வஜ்­ராயுதமும் சக்தி ஆயுதமும் ஆகும். வேலாயுதம் பிற்காலத்தில் இணைக்கப்பட்டது. இந்திரனுக்கு உரிய ஆயுதங்கள் வஜ்ராயுதமும் சக்தி ஆயுதமும் ஆகும். இங்கு முருகனையும் இந்திரனையும் வேறுபடுத்த சிற்பங்களில் இருக்கும் வாகனத்தை அடையாளங்காண வேண்டும். முருகனுக்கு வாகனம் மயில், இந்திரனுக்கு வாகனம் யானை. சில சமயத்தில் வாகனம் காட்டப்படவில்லை என்றால் இந்தத் தூணில் இருப்பவரை துல்லியமாக இனம் காட்ட முடியாது. இதே தூணில் இருக்கும் இன்னொரு சிற்பத்தைப் பார்த்து அடையாளங் காணலாம்.

சில சிற்பங்களுக்கு வட்டார ரீதியான பின்னணிக் கதைகள் உண்டு. தொடர்பும் உண்டு. இவை தொடர்பான கதைகளை கல்வெட்டுக்களிலோ செப்பேடுகளிலோ காண முடியாது. கோவிலைச் சார்ந்தவர்களிடமும் ஊர் மக்களிடமும்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும்.

உதாரணமாக தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் குறவன் இளவரசியை தூக்கிக் கொண்டு செல்லும் காட்சி அமைந்த சிற்பங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. இந்தக் குறவனை இளவரசன் ஒருவன் துரத்தவும் செய்வான். இதற்குப் பின்னால் வட்டார ரீதியான ஒரு கதையைச் சொல்லுகிறார்கள். இந்தக் கதை இன்றைய குறவர் சமூகத்திற்கு பாதகமானது. அவர்களைக் குற்றவாளியாகவும் சித்திரிக்கும் கதை. இந்தக் கதையின் எல்லா பரிமாணங்களையும் அப்படியே சொல்லவும் முடியாது. இதுபோன்ற சிக்கல்கள் பலப்பல....

- அ.கா.பெருமாள், ஓய்வு பெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It