நான் அரசியலமைப்பு நிபுணரோ அல்லது சட்ட நிபுணரோ இல்லை, ஆனால் பல்கலைக்கழக மாணவராக இருந்த நாட்களில் நான் பெற்ற அனுபவத்திலிருந்து பேச விரும்புகிறேன்.
ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான மத்திய நிறுவனம் என்று அழைக்கப்படும் கல்வி நிறுவனத்தில் நான் சேர்ந்தேன், அது பின்னர் மத்திய பல்கலைக்கழகமாக மாறியது. அப்படி மத்திய பல்கலைக் கழகமாக அது மாற்றம் பெறும் காலத்தில் நான் அங்கு இருந்தேன். அதே சமயத்தில் தான் இரண்டாம் கட்ட மண்டல் குழு விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. எனவே, மண்டல் விவாதத்துக்கு முந்தைய நாட்களிலும், இட ஒதுக்கீடு விவாதத்தின் போதும், அதற்குப் பிறகும் என்ன நடந்தது என்பதை என்னால் அறிய முடிந்தது.
மண்டல் குழு காலகட்டத்திற்கு முன்பு நான் பல்கலைக் கழகத்தில் இருந்த நாட்களில், Dalit Adivasi Bahujan Minority Students Association (DABMSA) என்ற பெயரில் தலித் ஆதிவாசி பகுஜன் சிறுபான்மை மாணவர் சங்கம் இருந்தது. அந்த அமைப்பு பேருக்கு இருந்ததே தவிர அரசியல் ரீதியாக அதிகம் செயல்படவில்லை, ஏனென்றால் மண்டல் காலத்திற்கு முந்தைய நாட்களில், பல்கலைக்கழகங்களில் உயர் சாதி மாணவர்களின் ஆதிக்கம் இருந்தது. மேலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுகள் இருந்ததால் அங்கும் இங்குமாக ஒரு சில SC, ST மாணவர்களும் இருந்தனர்; மற்றபடி ஆதிக்க சாதி மாணவர்கள் தான் இடங்களை முழுமையாக கைப்பற்றியிருந்தனர்.
மண்டல் இடஒதுக்கீட்டிற்குப் பிறகு, பல OBC மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழையத் தொடங்கினர், பின்னர் DABMSA திடீரென்று ஒரு புதிய ஆற்றலையும் வீரியத்தையும் பெற்றது. DABMSA செயலூக்கம் பெறுவதற்கு முன்பு, அங்கு 'பங்கேற்பாளர்கள் சங்கம்' என்ற மாணவர் சங்கம் இருந்தது. அங்கும் உயர் சாதி மாணவர்களின் ஆதிக்கம் தான். அந்த சங்கத்தில் அங்கம் வகிக்க, நீங்கள் பணம் செலுத்த வேண்டும். வாக்களிக்கவும் பணம் கொடுக்க வேண்டும். மாணவர் சங்கத்தேர்தலில் DABMSA போட்டியிட முடிவு செய்தபோது, இந்த மேட்டுக்குடி மாணவர் சங்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு சிறிய போராட்டத்துக்குப் பின், தேர்தலை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் நடத்த முடிந்தது. ஒரு வகையில், ஒரு நுண்ணிய அளவில், ஜனநாயகத்தின் ஒரு சிறிய மலர்ச்சியை நான் நேரில் கண்டேன். 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் சொத்துடைமை பெற்ற வகுப்பினர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர், பின்னர்தான் அது மற்றவர்க்கும் கிடைத்தது. பல்கலைகழகத்தில் நடந்ததும் அது போன்ற ஒரு சம்பவம் தான்.
இந்தப் பின்னணியில் மண்டல் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்ததும் 50% இடங்கள் SC, ST, OBC மாணவர்களுக்கும், மீதமுள்ள 50% அனைவருக்குமான பொதுப் பிரிவாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது. உடனே, பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சீர்குலைப்பதற்கான வேலைகளும் தொடங்கின. இட ஒதுக்கீட்டைக் குறைப்பதற்கான முதன்மை வழியாக பொதுப் பிரிவை உயர் சாதிப் பிரிவாக கட்டமைக்கத் தொடங்கினார்கள். எனவே, SC, ST, OBC மாணவர்கள் பொதுப் பிரிவு மதிப்பெண்ணை (Cut Off) விட அதிக மதிப்பெண்கள் பெற்றாலும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு பிரிவில்தான் சேர்க்கை வழங்கப்படும் என்ற நிலை இருந்தது. இது முதலில் தெளிவாக புலப்படவில்லை. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுடன் சேர்க்கை பட்டியலும் பொது வெளியில் வெளியிடப்படுவதை உறுதிசெய்ய பல்கலைக்கழக நிர்வாகத்துடன் போராட வேண்டியிருந்தது. இட ஒதுக்கீடு பிரிவு மாணவர்கள் பலர் உண்மையில் பொதுப் பிரிவு மாணவர்களைவிட அதிக மதிப்பெண் பெற்றிருந்தார்கள் என்பதை அப்போது தெரிந்துக் கொண்டோம்.
ஒரு பொதுப்பிரிவு மாணவர் கட் ஆஃப் மதிப்பெண்களை அடித்துப் பிடித்து தொடுகிறார் , ஒரு OBC அல்லது SC, ST மாணவர் 70-80% மதிப்பெண்களைப் பெறுவார் என்று வைத்துக்கொள்வோம், ஆனாலும் அந்த SC, ST மாணவர் இட ஒதுக்கீடு பிரிவு இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டார். தேர்வில் தேர்ச்சி பெற்ற பல OBC, SC, ST மாணவர்களும் ஓரளவு வசதியான சூழ்நிலையில் இருந்து வந்தவர்களாக இருந்தனர். சிலர் நடுத்தர வர்க்க பின்னணியிலிருந்தும், சிலர் அரசு ஊழியர்களின் பிள்ளைகளாகவும் இருந்தனர். வசதி வாய்ப்பற்ற, ஏழைக் கூட்டத்திலிருந்து மாணவர்கள் யாரும் பல்கலைகழகத்தில் சேர்ந்ததாக தெரியவில்லை.
DABMSA குழுவின் முதன்மையான பணியாக இருந்தது, பொதுப்பிரிவு கட் ஆஃபை விட அதிக மதிப்பெண் பெறும் எந்த ஒரு மாணவருக்கும் பொதுப்பிரிவில் இடம் கிடைப்பதை உறுதி செய்வதுதான். இந்த நடவடிக்கை இட ஒதுக்கீட்டுப் பிரிவு இடங்களுக்கான தகுதியும், உரிமையுமுள்ள மேலும் சில மாணவர்களை பல்கலைக்கழகத்துக்குள் அழைத்து வந்தது.
இதன் விளைவாக, பல்கலைக்கழகத்தில் சேரும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏனென்றால் பொதுப்பிரிவு மாணவர்கள் பலர் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பெறுவதை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பொதுப் பிரிவை, உயர்ந்த பிரிவாகவும், ஆதிக்க சாதிகளுக்கான பிரிவாகவும் கட்டமைக்க முனைந்தார்கள்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சிதைப்பதற்கு மேலும் சில வழிகளை கையாண்டார்கள். அதில் ஒன்று, நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், நேர்காணல் கட்டத்தில் இந்த மாணவர்களுக்கு "தகுதி" இல்லை என்று கூறி அனுமதி மறுப்பது. SC, ST, OBC இடங்கள் காலியாக விடப்பட்டு, இந்த காலி இடங்கள் பின்னர் பொதுப் பிரிவாக மாற்றப்பட்டு உயர் சாதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நுட்பமாகப் பார்த்தால், OBC களுக்கு 27% இட ஒதுக்கீடு அல்லது SC, ST மாணவர்களுக்கு 18% இட ஒதுக்கீடு என்று அல்லாமல், உயர்சாதியினருக்குத்தான் 50% இட ஒதுக்கீடு என்பதாக இது முடிகிறது; இது இட ஒதுக்கீடு என்ற கொள்கையையே முற்றிலும் கேலிக்கூத்தாக்குவதாகும், ஏனெனில் ஆதிக்க சாதியினர் மக்கள் தொகையில் அவர்களின் சதவீதத்தை விட அதிக இடங்களைப் பெறுகிறார்கள், மாறாக OBC மற்றும் பிற மாணவர்கள் பெறும் இடங்களோ மக்கள்தொகையில் அவர்களின் சதவீதத்தை விட மிக மிகக் குறைவு.
அந்த நேரத்தில் எங்கள் பல்கலைக்கழகத்தில் மிகவும் வலுவான மாணவர் சங்கம் இருந்ததால் எங்களால் இதைச் செய்ய முடிந்தது. நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம், எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றோம். பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக, DABMSA உண்மையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர் அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஒரு தாழ்த்தப்பட்ட முஸ்லீம் மாணவர், சங்கத்தின் தலைவரானார், மற்ற முக்கியமான இடங்கள் அனைத்தும் தலித் பகுஜன் மாணவர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்த DABMSA பல்கலைக்கழகத்தில் உள்ள தலித்-பகுஜன் ஊழியர் சங்கத்துடன் மிகவும் இயல்பான நட்புறவு கொண்டிருந்தது. அது அவர்களுடன் கலந்தாலோசிக்கவும், சேர்ந்து உத்திகள் வகுக்கவும் உதவியது. வெளிப்படையாக இல்லாவிடினும், பல்கலைக்கழகச் சேர்க்கை குறித்த தரவுகளைப் பகிர்வது போன்ற அவர்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள்.
ஒருவேளை எங்களுக்கு கிடைக்கப்பெற்றது போல ஒரு வலுவான மாணவர் சங்கமும், ஊழியர் சங்கமும் அமைய வாய்ப்பில்லாத பல்கலைக்கழகங்களில் என்ன நடந்திருக்கும்? கண்டிப்பாக அங்கு இட ஒதுக்கீடு திருடப்படும். வலுவான அமைப்புகள் இல்லாத அத்தகைய பல்கலைக்கழகங்களில் நம் தலித் மாணவர்கள் என்ன செய்தால் நமக்குரிய பொதுப்பிரிவு இடங்கள் பறிபோவதை தடுக்க முடியும்? 'சாதியற்றவர்' என்று விண்ணப்பிப்பதன் மூலம் பொதுப் பிரிவிலேயே இடம் ஒதுக்கப்படுமா? அவர்கள் தங்கள் சாதி அடையாளத்தைக் குறிப்பிட்டு விண்ணப்பித்தால், அவர்கள் அந்தந்த சாதி ஒதுக்கீட்டில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 'சாதியற்றவர்' என்று விண்ணப்பித்தால் ஒருவேளை சேர்க்கை தராமலேயே நிராகரிப்படும் அபாயமும் இருக்கிறது. இது ஒரு இக்கட்டான சூழல்தான். அத்தகைய ஆபத்துக்கு வாய்ப்பு இருக்குமானால் முடிந்தவரை ஒரு மாணவர் எப்போதும் சாதி குறிப்பிட்டே விண்ணப்பிப்பார். ஒரு ஆதிக்க சாதி மாணவருக்கோ பொதுப்பிரிவில் இடம்பிடிக்க 'சாதியற்றவர்' என்றெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அவர்கள் பொதுப்பிரிவு என்று அழைக்கப்படுவதற்கான முதன்மைக் காரணம், அவர்கள் முன்னேறிய சாதியினர். மேலும் ஒரு தலித் பகுஜன் மாணவர் சாதியற்றவர் குறிப்பிட்ட மாத்திரத்திலேயே, உடனடியாக தனித்து அடையாளப்படுத்தப்படுவார்.
4-5 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் வந்த ஒரு சினிமாவில் ஹீரோவும் அவனது நண்பர்களும் ஒரு நேர்காணல் தேர்வுக்கு காத்திருப்பார்கள். அவர்கள் தங்களுக்குள் பேசுக்கொள்ளும்போது. திடீரென்று சாதியைப் பற்றி விவாதிக்கத் தொடங்குகிறார்கள், ஒவ்வொருவரும் மற்றவரின் சாதி அடையாளத்தை கேட்டு தெரிந்துக் கொள்கிறார்கள். மற்ற அனைவரும் முன்னேறிய சாதியினர், நம் ஹீரோ ஒரு தலித். ஹீரோவிடம் "உன் சாதி என்ன?" என்று கேட்கப்படும்போது அவர் "எனக்கு சாதியில் நம்பிக்கை இல்லை, நான் சாதியற்றவன்" என்று கூறுகிறார். உடனே அவர்கள் "ஓ, நீங்கள் எஸ்சி" என்று கூறுகிறார்கள். சாதிமறுப்பாளனை தடுமாற்றத்திற்கு உந்துவது இதுதான். நீங்கள் சாதியை உதறி நவீனமாகவும், முற்போக்காகவும் மாற விரும்பினாலும், பின் தொடர்ந்து வந்து உங்கள் சாதி அடையாளத்தை கண்டறிந்து முதுகில் ஏற்றிவிடுகிறார்கள். இந்த சூழலிலிருது தப்பிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது.
சில சட்ட மற்றும் அரசியலமைப்பு சிக்கல்களை சுருக்கமாகத் தொட்டு பேசவேண்டும். உதாரணமாக, கேரளா 50% இட ஒதுக்கீடு ஆணையை கடைபிடித்தாலும், அது OBC களுக்கு 40% இடஒதுக்கீடு அளிக்கிறது. SC, ST மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு போதுமானதா இல்லையா என்று விவாதிக்கலாம், ஆனால் OBC மக்களுக்கான 40% இட ஒதுக்கீடு என்பது மாநிலத்தில் உள்ள அவர்களின் தோராய மக்கள்தொகைக்கு ஏற்ப இருக்கலாம். கேரள அரசு தலித் கிறிஸ்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு தலித் மற்றும் கிறிஸ்தவராக இருந்தால், நீங்கள் OBC ஆகக் குறிக்கப்படுவீர்கள், ஆனால் கேரளாவில் தலித் கிறிஸ்தவர்களுக்கு OBC பிரிவில் 1% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இது மீண்டும் ஒரு ஊசலாட்டம் போல் தெரிகிறது. நீங்கள் ஒரு தலித் மற்றும் கிறிஸ்தவராக இருந்தால், நீங்கள் ஒரு தலித் அல்ல, ஆனால் இன்னும் நீங்கள் OBC பிரிவில் தலித்துகளாக சிறப்பாக அங்கீகரிக்கப்படுவதற்கான வழியை கேரள அரசு கண்டறிந்துள்ளது.
நம் முன்னால் இருக்கும் மற்றுமொரு பிரகாசமான உதாரணம், தமிழ்நாடு 69% இட ஒதுக்கீட்டை வழங்குகிறது, அதில் 50% BC, 18% SC, 1% ST என பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல் கமிஷன் அமலாவதற்கு முன்பே தமிழ்நாடு இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. 50% இல், சுமார் 20%, சீர் மரபினரையும் (DNC) உள்ளடக்கிய MBC களுக்கானது. மீதமுள்ள 30% BC பிரிவினருக்கு, இதில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ் நாட்டின் எஸ்சி இடஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டால் அவர்கள் அருந்ததியர்களுக்கு அதில் 3% உள் ஒதுக்கீடு வழங்குகிறார்கள். தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள் மிக ஒடுக்கப்பட்ட சமூகமாக துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். 50% உச்சவரம்பை உச்ச நீதிமன்றம் விதித்தவுடன், தமிழகத்தில் ஒரு குழப்பம் நிலவியது. எப்படியோ, அப்போதைய ஜெயலலிதா அரசு, நரசிம்மராவ் அரசின் உதவியுடன், இந்த 69% இடஒதுக்கீட்டை சட்டமாக்கி, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணைக்குள் இச் சட்டத்தை இடம்பெறச் செய்தது.
தலித் பகுஜன்களுக்கு, எதுவுமே நிலையற்ற உசலாட்டமாகத்தான் இருக்கிறது. முன்பு விவரித்தபடி, பொதுப் பிரிவில் சேர்வதில் ஒரு ஊசலாட்டம்.
ஒன்பதாவது அட்டவணை கூட ஒரு ஊசலாட்டம்தான். ஒன்பதாவது அட்டவணையின் வரலாற்றைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அது நிலப்பிரபுக்களிடமிருந்து தப்பிக்க ஜவஹர்லால் நேருவால் முதலில் நிறுவப்பட்டது. நிலச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டபோது, அந்தச் சீர்திருத்தங்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார், எனவே அவர் எந்தத் தடையும் இல்லாமல் நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தச் சட்டத்தைப் புகுத்தினார். ஆனால், இந்திரா காந்தி தன் ஆட்சியில், இந்த ஒன்பதாவது அட்டவணையை மிக மோசமான வகையில் பயன்படுத்தி, தனது பேயாட்சி தொடர வழிவகை செய்துகொண்டார்.
எனவே, ஒன்பதாவது அட்டவணை இரட்டை முனைகள் கொண்ட வாள், அது ஒரு கெட்ட விஷயமாகவும் நல்ல விஷயமாகவும் இருக்கலாம். தமிழகம் பின்பற்றும் இட ஒதுக்கீடு முறை தான் ஆகசிறந்தது என்று நான் சொல்லவில்லை. அநேகமாக எல்லா BC சமூகங்களுக்கும் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு கிடைக்கின்றனவா எனத் தெரியவில்லை, அநேகமாக எல்லா SC சாதிகளுக்கும் அங்கு இட ஒதுக்கீடு சரியாக கிடைக்கின்றனவா எனத் தெரியவில்லை. ஆனால் ஒப்பீட்டளவில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இட ஒதுக்கீடு வழங்குவதில் தமிழ் நாட்டின் நிலை முற்போக்கான ஒன்றாகும். 50% அளவுகோலை விரிவுபடுத்தினாலும் அது ஒன்றும் இறுதி தீர்வு அல்ல.
ஜாட்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயற்சிக்கும் ஹரியானா, மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முயற்சிக்கும் மகாராஷ்டிரா, குஜ்ஜார்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முயற்சிக்கும் ராஜஸ்தான், மற்றும் பிற மாநிலங்களில் உயர் சாதியினரை OBC ஆக முயற்சிக்கும் உதாரணங்கள் உள்ளன. இந்த மாநிலங்கள் ஒன்பதாவது அட்டவணையைப் பயன்படுத்த இதை உறுதிசெய்து, இட ஒதுக்கீடு அளவுகோல்களை விரிவுபடுத்தி, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டு முறையையும் சீர்குலைக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் ஒப்பீட்டளவில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் பிரதிநிதித்துவம் சிறப்பாக இருக்கிறது.
EWS இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்த மசோதவைப் பொறுத்த வரையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குறைந்த அளவு எதிர்ப்பைத் தவிர்த்துப்பார்த்தால், பெரிய எதிர்ப்பின்றி, சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை பாதிக்குமா என்பது கேள்வி உள்ளது. அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு 1973 இல் சுவாமி கேசவானந்த பாரதி Vs கேரள மாநிலம் என்ற பிரபல வழக்கில் தெளிவாக கோட்டிட்டு காட்டப்பட்டது. அடிப்படைக் கட்டமைப்பானது பெரும்பாலும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியதாக இருக்கும், இது சமத்துவத்திற்கான உரிமை, சுதந்திரத்திற்கான உரிமை, மதத்தை கடைப்பிடிக்கும் உரிமை போன்றவற்றைக் கொண்டிருக்கும். இவை குடிமக்களின் மறுக்க முடியாத உரிமைகளாகக் கருதப்படும்.
இந்த EWS இட ஒதுக்கீட்டை நாம் நீதிமன்றத்தில் வீழ்த்த வேண்டுமென்றால், அது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதிக்கிறதா என்பதுதான் முதல் கேள்வி. இல்லையெனில், அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கு பாராளுமன்றத்திற்கு வரம்பற்ற உரிமைகள் உள்ளன. எப்படியிருந்தாலும், அடிப்படை கட்டமைப்பு மற்றும் சட்டங்கள் மற்றும் பிற வகையான விஷயங்களைப் பற்றி நாம் முடிவு செய்ய இயலுமா என்ற கேள்விகள் இருந்தாலும், EFLU இல் எனது அனுபவத்தின் அடிப்படையில், அரசியல் உறுதிப்பாடு கொண்ட பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டணியை எந்த சக்தியாலும் முறியடிக்க முடியாது என்று கூற இயலும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் இதுபோன்ற அரசியல்படுத்தப்பட்ட குழுக்களை நிறுவுவதில் நாம் வெற்றி பெற்றால், அதுதான் நாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு மற்ற எதைவிடவும் சரியான நிரந்தர தீர்வாக இருக்கும்.
நன்றி: ”அரிய வகை ஏழைகளுக்கான EWS இடஒதுக்கீடு, அதன் அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம், முற்போக்குத்தன்மை மற்றும் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, பின் தங்கிய முஸ்லிம்கள் (பஸ்மந்தா) மக்கள் சந்திக்கும் பின் விளைவுகள்" எனும் தலைப்பில் 2019 பிப்ரவரி 25 அன்று மும்பை, கோட்டை பகுதியில் உள்ள, மும்பை மராத்தி பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்ற உரையாடல் நிகழ்ச்சியில் ஜேம்ஸ் மைக்கேல் அவர்களின் உரை
தமிழ் மொழியாக்கம்: கீற்று பாஸ்கர்