எல்லாக் கதவுகளும் திறக்கப்பட்டு விட்டன. இனி யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து தமிழ்நாட்டைத் தனதாக்கிக் கொள்ளலாம் என்னும் நிலை இங்கு உருவாகிக் கொண்டுள்ளது.

அண்மையில் தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் ஐம்பது விழுக்காட்டிற்கும் கூடுதலாகப் பிற மாநிலத்தவர் தேர்வாகியுள்ளனர். என்ன நியாயம் இது?

இதனையும் தாண்டி அடுத்த கொடிய அறிவிப்பு இப்போது வெளிவந்துள்ளது. தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையம் (TNPSC), தமிழக அரசின் நான்காம் நிலை (குரூப் 4) தேர்வுகளை எழுதுவோருக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டால் போதும் என்று கூறியுள்ளது.

இதே  நிலை அடுத்தடுத்து மற்ற பிரிவுகளுக்கும் (Group I, II, III) விரைவில் வரக்கூடும். அப்போது நம் நிலை என்ன ஆகும்? கிராமத்தில் உள்ள மக்களின் நிலை என்ன ஆகும்? மாவட்ட ஆட்சியர் தொடங்கி, கடைநிலை ஊழியர் வரையில் எவருக்கும் தமிழ் தெரியாதெனில், அவர்களுடன் மக்கள் எந்த மொழியில் பேசுவார்கள்?

நம் நாட்டுக்கு வேலைக்கு வருகின்றவர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் தமிழைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், மக்கள் அவர்கள் மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டுமா?

எங்கே போகிறது தமிழகம்?

Pin It