‘தமிழ் வளர்த்த பெரியார்கள்' என்னும் தலைப்பில் இராஜ.சிவ.சாம்பசிவ சர்மா என்னும் தமிழாசிரியர் 1950இல் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். கோடம்பாக்கத்தை மையமாகக் கொண்ட தென்னிந்தியப் பதிப்புக்கழகம் அந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. நூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட அந்தப் புத்தகத்தில் பாண்டித்துரைத் தேவர், இருதாயலய மருதப்பத் தேவர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாத ஐயர், ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள், நமசிவாய முதலியார் ஆகிய ஏழு அறிஞர்களுடைய வாழ்க்கைச் சுருக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவருமே பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான காலத்தில் தமிழின் வளர்ச்சிக்குத் தம்மாலான பங்களிப்பை வழங்கியவர்கள்.
நூலகத்தில் சிறுகதைத் தொகுதிகளைக் கொண்ட அடுக்கில் சார்வாகனுடைய ‘எதுக்குச் சொல்றேன்னா' தொகுதியைத் தேடிக் கொண்டிருந்த போது இந்தப் புத்தகம் கிடைத்தது. இதற்கு முன்பு படித்தவர் யாரோ அடுக்கு மாறி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். புத்தகத்தின் தலைப்பு ஒருவித நம்பிக்கையூட்டியதால் வீட்டுக்கு எடுத்து வந்து படித்தேன்.
ஒரு காலத்தில் தமிழைப் படிப்பது என்பது ஏட்டில் எழுதி வைக்கப்பட்டிருந்த தமிழிலக்கியங்களைத் தேடித் தேடிப் படிப்பதாகவே இருந்தது. ஆழமான மொழியறிவு வசப்பட்ட ஒரு மாணவர், அடுத்த நிலை கல்விக்காக தக்க ஆசிரியரைத் தேடிச் சேர்வது முதல் கட்டம். அந்த ஆசிரியர் தம்மிடம் உள்ள ஏடுகளின் துணையோடு அவர்களுக்கு இலக்கியப் பிரதிகளை விளக்கங்களுடன் கற்பிப்பது இரண்டாவது கட்டம். மாணவர் அந்த ஏடுகளைப் பார்த்து புதிய ஏடுகளில் பிரதியெடுத்து வைத்துக் கொண்டு படித்து மனப்பாடம் செய்ய வேண்டும் என்பது மூன்றாம் கட்டம். படிக்கப்படிக்க பாடலும் பொருளும் அவர் மனத்தில் பதிந்துவிடும். ஓர் ஆசிரியரிடம் உள்ள ஏடுகள் முடிவடைந்த பிறகு, அந்த மாணவர் மேலும் கற்பதற்காக வேறொரு ஆசிரியரைத் தேடிச் செல்லவேண்டும். அது நான்காவது கட்டம். அந்தப் பயணங்களுக்கு முடிவே இல்லை. நல்ல ஆசிரியர்களும் நல்ல வாய்ப்புகளும் கிடைத்தால் வாழ்நாள் முழுதும் கற்றுக்கொண்டே இருக்கலாம். முடித்துவிட்டேன் என்னும் சொல்லுக்கு கல்விக்களத்தில் இடமே இல்லை.இப்படி தேடித்தேடித்தான் அந்தக் காலத்தில் கல்விச் செல்வம் அடையப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்துக்குப் பிறகு அவரே ஆசிரியராக இருந்து இளைய தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் தம் ஆயுட்காலத்தையே செலவழித்து தமிழை அறிந்திருக்கிறார்கள். தமிழையறிய விரும்பும் பிறருக்குக் கற்பித்து வளர்த்திருக்கிறார்கள்.
சேதுபதி அரசரால் அளிக்கப்பட்ட பாலவநத்தம், பாலயம்பட்டி என்னும் சிறு ஜமீன்களுக்குச் சொந்தக்காரராக வாழ்ந்தவர் பொன்னுசாமித் தேவர்.அவருக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர். முதலில் அவருக்கு ஆசிரியராக இருந்தவர் முத்துசாமி ஐயங்கார் என்பவர். அவர் பாண்டித்துரைத் தேவருக்கு தம்மிடம் இருந்த கம்பராமாயண ஏடுகளின் துணையோடு முழுநூலையும் கற்பித்தார். அதற்குப் பிறகு மதுரையில் வாழ்ந்த இராமசாமிப்பிள்ளை என்னும் வித்துவானிடம் சில நூல்களையும் பழனிக்குமாரத் தம்பிரானிடம் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் கற்றுக் கொண்டார் பாண்டித்துரைத் தேவர். எல்லாப் பாடல்களையும் அவர் மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்தார். யாப்பை முழுமையாக அறிந்து சொந்தமாக பாடல்களை இயற்றும் ஆற்றலையும் அவர் பெற்றார். தமிழறிந்த பல புலவர்களை ஆதரித்தார்.
பிற்காலத்தில் இரட்டைப்புலவர்கள் என அழைக்கப்பட்ட ரா.இராகவையங்காரும் மு.ராகவையங்காரும் பாண்டித்துரைத் தேவரின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள். இவர்களில் ரா.இராகவையங்கார் இளமையிலேயே இறந்துவிட, மூத்தவரான மு.இராகவையங்கார் திருவிதாங்கூரில் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றச் சென்று விட்டார்.
1901ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்திருந்தார் பாண்டித்துரைத் தேவர். அப்போது ஓய்வுப் பொழுதில் கம்ப ராமாயணத்தையும் திருக்குறளையும் படிக்கலாம் என்று பாண்டித்துரைத் தேவருக்குத் தோன்றியது. அவர் தங்கியிருந்த இடத்தில் அந்நூல்கள் இல்லை. அதனால் அவற்றை வாங்கி வருவதற்காக நண்பர்களை கடைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மதுரை முழுதும் தேடியும் கூட அவர்களுக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ்நூல் கிடைக்கவில்லையே என நினைத்த பாண்டித்துரைத் தேவருக்கு வருத்தம் மிகுந்தது.
அக்கணத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஒன்றைத் தொடங்கி தமிழிலக்கிய நூல்கள் அனைத்தும் அந்த இடத்தில் கிடைக்கும் வகையில் செய்து தமிழைப் பரப்ப வேண்டும் என்று முடிவெடுத்தார் பாண்டித்துரைத் தேவர். மறுநாள் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது தம் எண்ணத்தை கூட்டத்தாரோடு பகிர்ந்துகொண்டார். அனைவரும் அதைப் பாராட்டி ஆதரவுக் குரல் எழுப்பினர். அடுத்த நாளே, நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கி விட்டது.
பாண்டித்துரைத்தேவர் வடக்கு வெளி வீதியிலிருந்த தம் மாளிகையையே தமிழ்ச்சங்கத்துக்கு அளித்தார். அச்சுக்கூடங்கள் அமைக்கப்பட்டன. செந்தமிழ்க் கலாசாலை என்னும் கல்விக்கூடம் உருவாக்கப்பட்டது. செந்தமிழ் என்னும் பெயரில் ஒரு பத்திரிகையும் தொடங்கப்பட்டது. பல பழைய நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டன. அறிஞர்களால் ஒப்பு நோக்கப்பட்டு அச்சு வடிவத்துக்கு மாற்றப்பட்டன.
தமிழில் பிழைபடப் பேசுவதையும் எழுதுவதையும் கண்டாலே வெறுப்பு கொள்வார் பாண்டித்துரைத்தேவர். பிழைகள் மலிந்த நூலை கையால் தொடக்கூட அவர் கூசுவார். ஒருமுறை ஸ்காட் என்னும் வெள்ளையர் திருக்குறளில் பிழைகள் இருப்பதாகக் கூறி, அப்பிழைகளை எல்லாம் திருத்தி புதிதாக திருக்குறளை அச்சிட்டார். அதற்கு ‘சுகாத்தியர் திருத்திய திருக்குறள்’ என்னும் பெயரைச் சூட்டினார்.ஆனால் அதற்குப் பொதுமக்களிடம் போதிய ஆதரவில்லை. அது அந்த ஆங்கிலேயருக்கு வருத்தத்தை அளித்தது. உடனே அவர் பாண்டித்துரைத் தேவரைச் சென்று சந்தித்து தம் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.ஒரு புத்தகத்தை வாங்கி மேலோட்டமாகப் பார்த்தார். அந்தப் புத்தகத்தை மதிப்பிட அவருக்கு அந்த ஒரு பக்கமே போதுமானதாக இருந்தது. உடனே விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த எல்லாப் புத்தகங்களையும் கொண்டு வருமாறு அவரிடம் சொன்னார். அந்த ஆங்கிலேயரும் அனைத்து நூல்களையும் எடுத்துச் சென்று கொடுத்தார். முன்னூறு ரூபாய் பணத்தைக் கொடுத்து அவற்றை வாங்கிக் கொண்டார் பாண்டித்துரைத் தேவர். ஆங்கிலேயர் மகிழ்ச்சியோடு வெளியேறியதும் பிழையான புத்தகங்கள் பிறர் கைகளில் பட்டுவிடக்கூடாது என்கிற கருத்தின் விளைவாக அப்புத்தகங்களையெல்லாம் குழிதோண்டிப் போட்டு எரித்து விட்டார்.
தமிழ்ப்பற்றுக்கு அப்பால் தேசியப்பற்று கொண்டவராகவும் வாழ்ந்தார் பாண்டித்துரைத்தேவர்.அவர் வாழ்ந்த காலத்தில்தான் சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை அமைக்க வ.உசி. முயற்சி செய்துகொண்டிருந்தார். அவருக்கு பத்து லட்ச ரூபாய் தேவைப்பட்டது. அவர் தம்மைச் சந்திக்க வந்தபோது தம் பங்காக ஒரு லட்சம் ரூபாயை வ.உ.சி.க்கு கொடுத்தார். சில ஆண்டுகளில் நிறுவனம் கலைந்து பொருளிழப்பு ஏற்பட்டபோதும் அதைப்பற்றி அவர் வருத்தப்படவில்லை.
பாண்டித்துரைத்தேவரின் நான்காம் தமிழ்ச் சங்கத்தில் வித்துவானாகப் பணியாற்றியவர்களில் ஒருவர் சண்முகம் பிள்ளை. அவருடைய திறமையையும் புலமையையும் அறிந்து அவரிடம் தமிழ் கற்பதற்காக மாணவனாக வந்து சேர்ந்தவர்தான் நமச்சிவாய முதலியார். வேலூருக்கு அருகிலிருக்கும் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அவர். பதின்மூன்று ஆண்டு காலம் ஆசிரியரின் வீட்டிலேயே தங்கி, தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைக் கற்று தேர்ச்சி பெற்றார். பிராட்வே செயிண்ட் சேவியர் பாடசாலையில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். திருவிளையாடற்புராணம், பெரிய புராணம், பாகவதம், கம்பராமாயணம் ஆகிய அனைத்தையும் மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் உரைநடையில் எழுத வேண்டும் என்னும் ஆவல் அவருக்குள் எழுந்தது. இதற்காகவே ஒரு பத்திரிகையைத் தொடங்கினார் அவர். முதல் கட்டமாக திருவிளையாடற்புராணத்தின் பகுதிகளை உரைநடையில் எழுதி தொடராக வெளியிட்டார். அவருடைய தமிழ்நடையை அனைவரும் பாராட்டினர். வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த முயற்சி என்று பாராட்டினர். ஆனால் இருபத்திரண்டு இதழ்களுக்குப் பிறகு பொருளிழப்பின் காரணமாக இதழ் வெளியீட்டை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது.
அக்காலத்தில் சிறுவர்களின் தகுதி, மனநிலை, விருப்பம் ஆகியவற்றை அறிந்து புத்தகங்கள் எழுதப்படவில்லை. ஒவ்வொருவரும் தம் மேதாவிலாசத்தை அறிவிக்கும் வழியாகவே புத்தகங்களை எழுதி வந்தனர். அந்த எண்ணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, சிறுவர்களுக்கு இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தும் ஆவலோடு புத்தகங்களை எழுதத் தொடங்கினார் முதலியார்.முதன்முதலாக அவர் வாக்கிய இலக்கணம் என்னும் நூலை எழுதி வெளியிட்டார். அக்காலத்தில் மிகச்சிறந்த சிறுவர் நூலாக அது கருதப்பட்டது.அதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை அவர் கல்வி கற்கும் மாணவர்களுக்காக எழுதி வெளியிட்டார். கீழ்வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரைக்கும் ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்றபடி பொருளும் நடையும் அமைய பாடப்புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அதே சமயத்தில் தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, நன்னூல், தணிகைப்புராணம், குறுந்தொகை ஆகியவற்றை பதிப்பித்தார். உரைநடையை வலுப்படுத்த இளமை முதலே கற்பித்தல்தான் சிறந்த வழியென நம்பி, அரிய பாடப் புத்தகங்களை எழுதி, உரைநடை எழுதும் ஆற்றலை பிள்ளைகளிடம் உருவாக்கிய நமச்சிவாய முதலியாரின் தொண்டு போற்றுதலுக்குரியது.
பாண்டித்துரைத்தேவரைப் போலவே தமிழுக்குத் தொண்டாற்றிய மற்றொரு ஆளுமை ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருநெல்வேலியில் பிறந்தவர். அவர் வசித்த இடத்தில் ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடம் இருந்தது.அதில் சேர்ந்து சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் தமிழ்க்கல்வி கற்றார். அவருக்கு ஒன்பது வயது நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவர் தந்தையார் திடீரென மறைந்தார். ஒரு நாடகநூலை எழுதிக் கொண்டிருக்கும்போதே அவர் உயிர் பிரிந்துவிட்டது. ஒன்பது வயதுச் சிறுவனான நாவலர் அப்பிரதியைத் தொடர்ந்து எழுதி முடித்தார். அந்த அளவுக்கு இளமையிலேயே திறமை மிக்கவராக இருந்தார் நாவலர். அவருடைய சகோதரர்கள் அவரை சரவணமுத்துப் புலவர், சேனாதிராய முதலியார் போன்ற ஆசிரியர்களிடம் அனுப்பி இலக்கண இலக்கிய நூல்களை கற்றுக்கொள்ள வைத்தனர். பீட்டர் பார்சிவல் என்னும் பாதிரியாரிடம் ஆங்கிலம் கற்றார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கும் கலையிலும் தேர்ச்சி பெற்றார்.
அவருடைய மொழிப்புலமையை அறிந்த ஆசிரியர் பார்சிவல் பைபிளை தமிழில் மொழிபெயர்க்கும்படி தூண்டினார்.ஆசிரியரின் விருப்பத்துக்கிணங்கி, பைபிளை செம்மையாக மொழிபெயர்த்தார் நாவலர். அக்காலத்தில் சென்னையிலும் பைபிளை மொழிபெயர்க்கும் முயற்சி நடைபெற்று வந்தது.நாவலரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தார் பார்சிவல். அங்கு மொழிபெயர்ப்புக்குழுவினரைச் சந்தித்து நாவலரின் மொழிபெயர்ப்பைக் காட்டினார். மழவை மகாலிங்கையர் என்னும் புலவர் இரு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து நாவலரின் மொழிபெயர்ப்பே சிறப்பாக இருப்பதாக அறிவித்தார்.
பைபிளை மொழிபெயர்த்திருந்தாலும் நாவலர் சிவபக்தியில் சிறந்தவராகவே இருந்தார். சைவ இலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர் அவர். கிறித்துவ மதமாற்றத்தைக் கண்டித்து நூல்களை எழுதினார். சைவப் பிரகாச வித்யாசாலை என்னும் பெயரில் ஒரு பள்ளியைத் தொடங்கி சைவ நூல்களை அனைவருக்கும் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.அப்பாடசாலைக்குத் தேவையான நூல்களை அவரே எழுதி அச்சிட்டு வழங்கினார். பிறகு சிதம்பரத்திலும் இதேபோல ஒரு சாலையைத் தொடங்கினார். தேவார திருவாசகங்களை பண்ணோடு ஓதுதற்கு கற்பித்தார். தமிழ்த்தொண்டும் சைவத்தொண்டும் நாவலருக்கு இரு கண்களாக விளங்கின. இராமலிங்க சுவாமிகள் இயற்றிய திருவருட்பாவை மறுத்து போலி அருட்பா மறுப்பு என்றொரு புத்தகத்தை எழுதி தியாகேச முதலியார் என்னும் பெயரில் வெளியிட்டார் நாவலர்.
நூலாசிரியர் முன்வைத்திருக்கும் ஆளுமைகளில் இலங்கையைச் சேர்ந்த இன்னொருவர் சுவாமி விபுலானந்தர். அவருடைய இயற்பெயர் மயில்வாகனன். அடிப்படையில் இயற்பியல் பாடத்தில் அவர் பட்டம் பெற்றிருந்தபோதும் தமிழில்தான் அவருக்கு அதிகமான ஆர்வம் இருந்தது.இலக்கண இலக்கிய நூல்களில் இயற்கையாகவே நாட்டம் கொண்டிருந்தார். வேதாந்தத்தைப் பரப்பும் பொருட்டு சென்னையிலிருந்து இலங்கைக்குச் சென்ற சுவாமி சர்வானந்தருடைய உரைகளால் கவரப்பட்டு அவருடைய தொண்டராக மாறிவிட்டார் மயில்வாகனன். அதனால் அவரைத் தம்மோடு சென்னைக்கு அழைத்து வந்து ராமகிருஷ்ண மடத்தில் தங்க வைத்துக் கொண்டார் சர்வானந்தர். வேதாந்தக் கல்வியை முறையாகக் கற்கத் தொடங்கினார். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் அருண்மொழிகளையெல்லாம் படிப்படியாக அழகிய செய்யுள் வடிவில் மாற்றி எழுதினார். கர்மயோகம், அனுபூதிப் பேச்சுகள், சம்பாஷணைகள் ஆகிய நூல்கள் மயில்வாகனனின் பெயரில் மடத்துப் பிரசுரங்களாக வெளிவந்தன. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், வேதாந்த கேசரி ஆகிய பத்திரிகைகளை நடத்தும் பொறுப்பு அவரைத் தேடி வந்தது. முற்றும் துறந்த துறவியாக மாறிய பிறகே விபுலானந்தர் என்னும் பெயரைச் சூட்டிக் கொண்டார் மயில்வாகனன்.
சிதம்பரம் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்று அங்கு சென்று இரண்டாண்டுகள் தமிழ்ப்பெரும்புலவராக சேவையாற்றினார்.இலங்கையில் அவர் ஏற்கனவே நிறுவிய பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல வேண்டிய கடமையின் காரணமாக அவர் இந்தியாவை விட்டு இலங்கைக்குச் சென்றார். ஐந்தாண்டுகள் அங்கே சேவையாற்றிய பிறகு அங்கிருந்தே கைலாய யாத்திரைக்குச் சென்றார். இமயமலையைச் சுற்றி வந்த தருணத்தில் இமயஞ்சேர்ந்த காக்கை என்னும் தலைப்பில் அரியதொரு கட்டுரையை எழுதி வெளியிட்டார், பதினான்கு ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு யாழ்நூலை அரங்கேற்றினார். மதங்க சூளாமணி, ஆங்கில வாணி ஆகிய நூல்களை இயற்றினார்.
கடந்த நூற்றாண்டுகளின் இலக்கியச் செயல்பாடுகளை நினைத்தால் மலைப்பாகவே இருக்கிறது. அவர்களுடைய அக்கறையும் உறுதியும் உரங்களென அமைந்து தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றன என்பதில் ஐயமே இல்லை. சிறுசிறு தாவல்களாக அந்த வளர்ச்சி நிகழ்ந்திருக்கிறது. ஓலைச் சுவடிகளில் இருக்கும் தமிழிலக்கியச் செல்வத்தை தக்க ஆசிரியர்களின் உதவியோடு கற்றுத் தேர்ச்சி பெறுதல், அச்சுப்பொறியின் பயன்பாட்டைத் துணையாகக் கொண்டு ஓலைச்சுவடியில் உள்ள இலக்கியப் படைப்புக்கு நூல் வடிவத்தைக் கொடுத்தல், தமிழிலக்கியத்தின் அருமை பெருமைகளை மேடைதோறும் எடுத்துரைத்து நூல்கள் மீது ஆர்வத்தை ஊட்டுதல், படிக்க வைப்பதன் வழியாகவே இலக்கிய அறிமுகத்தை ஏற்படுத்துதல், பாடல்களுக்கான காலம் மங்கி மறைந்து உரைநடைக்கான காலம் தொடங்கி விட்டதை உய்த்துணர்ந்து உரைநடையில் ஈடுபாட்டை வளர்த்தல், அதற்காகவென்றே உரைநடைநூல்களை எழுதி வெளியிடுதல் என அடுத்தடுத்த படிகள் வழியாகவே எல்லா வளர்ச்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன.
கடந்து வந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் முயற்சியாகவே சாம்பசிவ சர்மாவின் நூல் அமைந்திருக்கிறது. தமிழ் வளர்த்த பெரியார்கள் அனைவருமே என்றென்றும் நம் வணக்கத்துக்குரியவர்கள்.
- பாவண்ணன்