ananad deltumad 350இழந்த உரிமைகளை இறைஞ்சி மன்றாடியோ அல்லது அவற்றைப் பறித்துக் கொள்பவர்களின் மனச்சான்றுகளுக்கு வேண்டுகோள் விடுத்தோ பெறமுடியாது; இடை விடாத உக்கிரமான போராட்டத்தின் மூலம்தான் அவற்றை ஈட்டமுடியும்.

- டாக்டர். பி. ஆர். அம்பேத்கர்

மகாராஷ்டிரா மாநிலத்தின் கொலாபா மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் மஹத். இந்நகரில் சௌதார் என்ற பெயரில் குளம் ஒன்றுண்டு. இக்குளத்திற்குச் சென்று அதன் நீரைப் பயன்படுத்தும் உரிமை, தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினருக்கு மறுக்கப் பட்டிருந்தது.

இக்குளத்தின் தண்ணீரைப் பயன்படுத்தும் உரிமையை 1924-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாயிலாக மஹத் நகரசபை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கியது. ஆனால் இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. தம் உரிமையை நிலைநாட்டும் முகத்தான் 1927-ஆம் ஆண்டில், அம்பேத்கர் தலைமையில் ஒன்றுதிரண்ட தாழ்த்தப்பட்ட மக்கள், சௌதார் குளத்து நீரைப் பருகினர். ஆனால் இது எளிதான செயலாக அமையவில்லை. இதற்கு ஒரு வரலாறு உண்டு.

இந்திய விடுதலை இயக்கத்தில் நடந்த எத்தனையோ அறப் போராட்டங்களைக் கற்றுக் கொடுக்கும் நம் கல்விப்புல வரலாறுகள், சௌதார் குளத்து நீரை மையமாகக் கொண்ட அறப்போரைக் கண்டு கொண்டதில்லை. இதைத்தான் ‘அமைதியின் சதி’ ((Conspiracy of Silence) என்பர்.

இப்போராட்டம் குறித்து அம்பேத்கர் எழுதிய நீண்ட கட்டுரை ஆங்கிலத்தில் வெளியான அவரது கட்டுரைத் தொகுப்பில் 17-ஆவது தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இதன் தமிழ் வடிவம், டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பின் 35-ஆவது தொகுதியில் 61 பக்க அளவில் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் நிகழ்ந்த முதல் தலித் எழுச்சி குறித்த விரிவான வரலாற்றுப் பதிவு தேவை என்ற நிலையில் இந்நூல் வெளிவந்துள்ளது.

நூலாசிரியர்

இந்நூலாசிரியரான ஆனந்த் டெல்ட்டும்டே எழுத்தாளராக மட்டுமின்றி மனித உரிமைப் போராளி யாகவும் விளங்குபவர். மக்கள் இயக்கம் குறித்த கோட்பாட்டறிஞரும் கூட.

பல ஆய்வுக் கட்டுரைகளும், குறுநூல்களும் எழு தியுள்ள இவர் பதினெட்டுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியரும் ஆவார். மக்கள் நலன் சார்ந்த அறிவாளி என்ற முறையில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பயணித்து உரைகள் ஆற்றி வருகிறார். தற்போது கராக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) தொழில் நிர்வாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

நூலின் அமைப்பு

மஹத் போராட்டத்தின் முக்கியத்துவத்தை நீண்ட முன்னுரையாகக் குறிப்பிடும் இந்நூலின் இரண்டாவது இயல் இந்திய சாதி அமைப்பு மற்றும் தீண்டாமை குறித்தும், இதற்கு எதிராகக் கடந்த காலத்தில் நிகழ்ந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்தும் குறிப் பிடுகிறது. சமூகவியலும், வரலாறும், ஊடாடும் களமாக இவ்வியல் அமைந்துள்ளது. கடந்த காலத்தில் நிகழ்ந்த போராட்டம் ஒன்றின் பதிவாக மட்டுமின்றி தற் போதைய தலித் இயக்கத்துடன் இணைத்தும் ஆராய் கிறது. மஹத் போராட்டத்தின் பின்புலமாக இதைக் கொள்ளலாம்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள ஒரு குறிப்பிடத்தக்க பகுதி தோழர் ஆர்.பி. மோர் எழுதிய குறுநூலை இணைத் துள்ளமை ஆகும். இராமச்சந்திர பாபாஜி மோர் என்ற பெயருடைய இவர் தமது 24-ஆவது வயதில் அம்பேத்கரை சந்தித்து மஹத் ஊரில் ‘தீண்டத் தகாதோர்’ மாநாட்டிற்குத் தலைமை ஏற்க அழைப்பு விடுத்தார்.

அதை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவே 19 மார்ச் 1927-இல் மஹத் நகரில் நடந்த ‘தீண்டத்தகாதோர்’ மாநாடு அம்பேத்கர் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமை உரை இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹத் மாநாட்டை நடத்திய ஆர்.பி.மோர் இது தொடர்பான தன் அனுபவங்களை மராத்திய மொழியில் நீண்ட கட்டுரை யாக எழுதியுள்ளார். இக்கட்டுரை மஹத் நகரில் உள்ள பாபாசாகிப் அம்பேத்கர் கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது. பின்னர் இது சிறுநூலாகவும் வெளிவந்தது என்றாலும் இச்சிறு நூல் மராத்தி வாசகர்களிடம் கூட சரியான முறையில் அறிமுகமாகவில்லை.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணம் என்ற முறையில் இதை அனைவரும் அறியும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்நூலில் இடம் பெறச் செய்துள்ளார். (நூலாசிரியரின் நண்பர் டாக்டர் ஸ்ரீதர் பவர் இம் மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார்) இந்நூலின் அய்ந்தாவது இயலாக முப்பது பக்க அளவில் இச்சிறுநூல் இடம் பெற்றுள்ளது.

சௌதார் குளத்தை தலித்துக்கள் பயன்படுத்தும் உரிமையை முன்வைத்து நடந்த மஹத் மாநாடு குறித்த வரலாற்றுப் பதிவாக இது அமைந்துள்ளது.

அம்பேத்கரின் கல்வித் தகுதிகள் குறித்தும், அவரை முதல்முறையாகச் சந்தித்தது குறித்தும் தம் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடும் எம்.பி.மோர், அம்பேத்கர் குறித்த தம் அவதானிப்பை கட்டுரையின் இறுதிப் பகுதியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: என் அவதானிப்பின்படி டாக்டர் பாபாசாகிப் தீண்டத்தகாத மக்கள் பிரிவின் தலைவர் மட்டு மில்லை. அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த, அனைத்து மொழிகளையும் பேசும் கோடிக் கணக்கான இந்தியர்களின் மாபெரும் தேசியத் தலைவர்.

நூலின் இறுதி இயலான ஆறாவது இயல், கடந்த கால போராட்டம் ஒன்று நிகழ்கால செயல்பாட்டுக்கு உத்வேகம் அளிப்பதை சமத்துவத்திற்கான உலகளாவிய போராட்டங்களுடன் ஒப்பிடுகிறது.

நூலின் பின்இணைப்பாக, மஹத் மாநாட்டுத் தீர்மானங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் என்பன இடம் பெற்றுள்ளன. அத்துடன் மஹத் அறப்போரின் போராளிகள் சிலரின் வாழ்க்கைக் குறிப்புகள் புகைப் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

சாதியும் தீண்டாமையும்

இந்தியச் சாதிகளின் தோற்றம் குறித்தும், தீண்டாமைக் கோட்பாடு குறித்தும் சமூகவியலாளர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். மற்றொரு பக்கம் அடிமைமுறையுடனும் வெள்ளையர் கருப்பர் இனவேற்றுமையுடனும் இந்தியத் தீண்டாமை முறையை ஒப்பிடுகின்றனர்.

இஸ்லாமியர் வருகைக்குப் பின்னரே இந்திய சாதிமுறை இறுக்கமடைந்தது என்ற கருத்தை இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்துகின்றனர்.

மற்றொரு பக்கம் பிராமணரின் சாதிய உயர்வையும், ‘பிராமணர் - சத்ரியர் - வைசியர்’ என்ற மூன்று வருணத் தாருக்கும் ஏவல் செய்யப் பிறந்த சூத்திரர் குறித்தும், புருஷ சூக்தம் கூறுகிறது. மனுஸ்மிருதி நான்காம் வருணத்துக்கு அப்பால் சண்டாளர் என்ற பெயரில் வருண எல்லைக்குள் வராத அவர்ணர் என்ற பிரிவைக் குறிப்பிடுகிறது. இதன் உச்சகட்டமாக, ‘பார்த்தாலே தீட்டு’ என்ற விதியும் உருவாகியது.

புத்தம் சீக்கியம் என்பன சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிராகக் குரல் எழுப்பின. இஸ்லாமும், கிறித்தவமும் தீண்டாமைக்கு எதிராகக் குரல் எழுப்பின. அத்துடன் கிறித்தவமும் பல்வேறு சாதிப்பிரிவினரையும் தம் சமய எல்லைக்குள் கொண்டு வந்தன. காலப் போக்கில் இந்தியக் கிறித்தவம் சாதியை உள்வாங்கிக் கொண்டது என்றாலும் தலித்துக்களுக்குக் கல்வியை வழங்கியது. கிறித்தவம் ஒன்றுதான் தலித்துக்களுக்குக் கல்வி வழங்கும் பணியை ஏற்றுக்கொண்ட அமைப்பு என்று அம்பேத்கர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் உருவான அரசியல் பொருளாதார மாறுதல்களும், இங்கு நிலைபெற்ற காலனிய ஆட்சி முறையும், சாதியத்திற்கும் சாதிய மேலாண்மைக்கும் எதிரான சிந்தனைப்போக்கைத் தோற்றுவித்தன.

இச்செய்திகளை எல்லாம் முதல் இரண்டு இயல் களில் விவரிக்கும் நூலாசிரியர் அம்பேத்கருக்கு முந்தைய தலித் எழுச்சிகளையும் அறிமுகம் செய்கிறார். இனி நூலின் மையச் செய்திக்கு வருவோம்.

பகிஷ்கிரித் ஹித கரணிசபா (1924)

சமூகத்தால் விலக்கி வைக்கப்பட்டோரின் நலனுக்கான சபை என்ற பொருளில், அமைப்பு ஒன்றை நிறுவ அம்பேத்கர் விரும்பினார். 1924 மார்ச் 9-ஆம் நாளன்று இது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இச்சபை தோன்றியது. இதன் நோக்கங் களாகக் குறிப்பிடப்பட்டன வருமாறு:

1.            தாழ்த்தப்பட்ட மக்களிடம் கல்வியைப் பரப்ப மாணவர் விடுதிகளை நிறுவுவது.

2.            பண்பாட்டை வளர்க்கத் துணைபுரிய நூலகங்கள், சமுதாயக் கூடங்கள், வகுப்புகள் அல்லது வாசகர் வட்டங்களை நிறுவுவது.

3.            பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் தொழிற்பள்ளிகளையும் வேளாண் பள்ளி களையும் நிறுவுதல்.

இக்குறிக்கோள்களுடன் கூடிய அமைப்பை நிறுவிய அம்பேத்கர், இயக்கம் ஒன்றை இவ்வமைப்பின் வாயிலாக நடத்தும் வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தார். இச்சூழலில்தான் தொடக்கத்தில் குறிப்பிட்ட ஆர்.பி.மோர் அம்பேத்கரைச் சந்தித்தார். இந்த இடத்தில் மோரைக் குறித்த சில செய்திகளைக் குறிப்பிட வேண்டும்.

தோழர் ஆர்.பி.மோர்

இவருடைய தாத்தா வித்தல் ஜோஷி-ஹேட் என்பவர் டாஸ்கான் என்ற ஊரில் மாடி வீடு ஒன்றைக் கட்டினார். தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த ஒருவரது முதல் முயற்சியாக இது அமைந்தது. இப்பகுதியில் வாழ்ந்த பிராமணர்களிடையே இது பெருத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. சனாதன தர்மத்தை மீறிய செயல் என்று கூறி, இவ்வீடுகட்ட ‘பூமிபூஜைÕ நடத்திய பிராமணப் புரோகிதரை சாதிவிலக்கம் செய்தனர். அத்துடன் ‘காட்டில் திருட்டுத்தனமாக மரம் வெட்டி இவ் வீட்டைக் கட்டினார்’, என்ற பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் மோரின் தந்தையை இரண்டாண்டு சிறைத்தண்டனைக்கு ஆளாக்கினர்.

புத்திக் கூர்மையுள்ள மாணவர் என்ற முறையில் அரசு உதவித் தொகை பெற்று  தம் தொடக்கப் பள்ளிக் கல்வியை மோர் முடித்திருந்தார். ஆனால் தீண்டப் படாத சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதன் அடிப்படையில் மகத் நகரின் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து செய்தித்தாள்களில் அவர் கடிதம் எழுதிய பின்னரே, அப்பள்ளிக்கு அரசு உதவித் தொகை கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தினால் அப்பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது வயது பதினொன்றுதான். அனுமதி கிடைத்த போதிலும் கூட சாதியின் காரணமாக வகுப்பறைக்கு வெளியில் உட்கார வைக்கப்பட்டார்.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் சாதியச் சமுதாயத்தின் மீதான கோப உணர்வினால் தீண்டா மைக்கு எதிரான போராட்ட உணர்வு கொண்ட வரானார். கொங்கன் பகுதியில் தீண்டாமைக்கு ஆட்பட்டிருந்த மஹர் சமூகத்தின் தலைவராக விளங்கினார். இவர்தான் மார்ச் 1927-இல் மஹத் நகரில் நிகழ்ந்த ‘பகிஷ்கார’ மாநாட்டின் முக்கிய அமைப்பாளர்.

பகிஷ்கார மாநாடு

தீண்டத்தகாதோர் என ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் பிரிவினரிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, தம் உரிமைக்காகவும், மேட்டிமை சாதியினரின் ஒடுக்கு முறைக்கு எதிராகவும் போராடச் செய்வது மோரின் நோக்கமாக இருந்தது.

அத்துடன் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் பி.எஸ்.சி. பட்டமும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், கிரேஸ் இன் கல்லூரியில் பார் அட்லா பட்டமும் பெற்று அம்பேத்கர் திரும்பியதைப் பாராட்ட விரும்பினார். இதன் வாயிலாக, தீண்டத்தகாத சமூகப்பிரிவு மாணவர்களிடையே ஒரு தாக்கம் ஏற்படும் என்பதும், இம்மாணவர்களை இழிவுடன் நோக்கும் ஆதிக்கசாதியினருக்கு அவமான உணர்வு ஏற்படும் என்பதும் அவரது நம்பிக்கையாக இருந்தது.

இவ்விருப்பம் ஒருபுறம் இருந்தாலும் ‘போல் தீர்மானம்’ என்றழைக்கப்பட்ட மகாராஷ்டிர சட்ட மன்றத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் ஆர்வம் அவரிடம் மேலோங்கி இருந்தது. ராவ் பகதூர் போல் என்பவர் இதை அறிமுகப்படுத்தியதால் அவரது பெயரால்  இது அழைக்கப்பட்டது. 1907-இல் மெட்ரிக் குலேஷன் தேர்வில் அம்பேத்கர் தேர்ச்சி பெற்றமைக்காக மகர்கள் நடத்திய பாராட்டுவிழாவிற்குத் தலைமை தாங்கியவர் இவர்தான். தீண்டத்தகாத சமூகப்பிரிவைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் அவர்கள் நலனுக்குக் குரல் எழுப்பினார்.

சமூக சீர்திருத்தவாதியான இவர் 1923 ஆகஸ்ட் நான்காம் நாள் மும்பை சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து அதை நிறைவேற்றினார். இதன் படி, பொதுநீர்நிலைகள், கிணறுகள், தர்மசாலைகள் ஆகியனவற்றைப் பயன்படுத்த தீண்டத்தகாத சமூகத் தினரை அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற அரசுக் குரித்தான பள்ளிக்கூடங்கள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் ஆகியனவற்றிலும் இம்மக்கள் பிரிவை அனுமதிக்க வேண்டும்.

இத்தீர்மானத்தை நிறைவேற்றி ஏற்றுக் கொண் டாலும், இதைச் செயல்படுத்துவதில் மும்பை அரசு ஆர்வம் காட்டவில்லை. பொது இடங்களைப் பயன் படுத்த, இம்மக்கள் பிரிவினரை அனுமதிக்காத உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அரசின் நிதிநல்கை கிடையாது என்ற விதிமுறையை 1926-இல் மும்பை அரசு உருவாக்கியது போல் தீர்மானமானது, சாதி எதிர்ப்புச் சீர்திருத்தங் களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உணர்வை மகாராஷ்டிரத்தின் முற்போக்காளர்களிடம் ஏற்படுத்தியது. இதன் முதல் செயல்பாடு கோர்கோன் என்ற கிராமத்தில் வெளிப்பட்டது. சந்தை நிகழும் இக்கிராமத்தைச் சேர்ந்த என்.எம். ஜோஷி என்ற தொழிற்சங்கத் தலைவர் இக் கிராமத்தில் வாழ்ந்த காயஸ்தர் பிராமணர் சாதியினரிடம் முற்போக்குச் சிந்தனையை உருவாக்கினார்.

இவர்கள், இக்கிராமத்தில் வாழ்ந்த தீண்டத்தகாத பிரிவினரை அழைத்து, போல் தீர்மானத்தை, விளக்கி யதுடன் அக்கிராமத்தின் குளத்தையும், கிணறையும் பயன்படுத்தும்படிக் கூறினார். இப்பகுதியின் தீண்டத் தகாத சமூகத்தினரிடையே குறிப்பிடத்தக்க அளவில் கல்வி பரவியிருந்தமையால், இராமச்சந்திர சந்த்தோர்கர் என்பவரது தலைமையில் ஒன்று திரண்டு கிராமக் குளத்தினுள் குதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்கசாதியினர் அவர்களைத் தாக்கினர். காவல் துறையினர் பெயருக்கு வந்து திரும்பினர்.

தாக்குதலுக்கு ஆளானவர்கள் சந்த்தோர்கர் உடன் மும்பை சென்று, ‘மும்பை மகர் சேவா சங்கத்தில்’ இந்நிகழ்வைத் தெரிவித்தனர். சங்கமானது இச் செயலைக் கண்டித்து மும்பை முழுவதும் கூட்டங்கள் நடத்தியதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டியது. தோழர் ஆர்.பி.மோர், சங்கத்தின் சார்பில் இந்நிதியை வழங்கச் சென்றார். பின்னர் தம் சொந்தக் கிராமமான தாஸ்கோனில் இதுபோன்ற செயலுக்குத் தலைமை தாங்க சந்தோர்கரை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

1926 டிசம்பர் 4-ஆம் நாள் இங்குள்ள பொதுக் குளத்திலும் கிணற்றிலும் தீண்டத்தகாதோர் சென்று நீர் அருந்தத் திட்டமிட்டனர். இதனையட்டி நிகழ்ந்த பொதுக்கூட்டத்திற்கு மேட்டிமை சாதியைச் சேர்ந்த அதர்கார் என்ற முற்போக்குச் சிந்தனையாளர் தலைமை வகித்தார். போல் தீர்மானத்தை விளக்கி தோழர் ஆர்.பி.மோர் உரையாற்றினார். அவரது வழிநடத்தலில் சென்ற மக்கள், அக்குளத்தில் இருந்தும் கிணற்றில் இருந்தும் கூட்டாக நீர் அருந்தினர். சாதி இந்துக்களிடம் இருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை.

ஆசிரியரும் முற்போக்காளருமான ராம்ஜி பாபாஜி போத்தார் என்பவர் இதில் கலந்து கொண்டு, இம் மக்களுடன் தண்ணீர் அருந்தினார். இதற்காக மூன்று மாதம் வரை சாதி இந்துக்களின் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானார்.

போல் தீர்மானம் குறித்த விழிப்புணர்வை தீண்டத் தகாத பிரிவு மக்களிடையே ஏற்படுத்துவதில் இப் போராட்டம் பெரும் பங்காற்றியது. வர இருக்கும் மஹத் மாநாடு எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை இம் மக்களுக்கு உணர்த்தி அதில் கலந்து கொள்வதன் அவசியத்தை உணர்த்தி நின்றது.

மஹத் மாநாடு (1927)

1927 மார்ச் 19-ஆம் நாள் நான்கு மணி அளவில் மஹத் மாநாடு அரங்கம் நிரம்பிவிட்டது. மும்பையில் இருந்து வந்த மஹர்களைத் தவிர ஏனைய மஹர்கள் கையில் லத்தியுடன் அமர்ந்திருந்தார்கள். (லத்திக்கம்பு மஹர்களின் சாதி அடையாளம்).

அம்பேத்கர் அரங்கில் நுழைந்தபோது 3000 லத்திகளை  உயர்த்தி வரவேற்றனர். இம்மாநாட்டில்  அம்பேத்கர் ஆற்றிய தலைமை உரை, சமூகவியலும், வரலாறும் இணைந்த ஆழமான ஆய்வுரையாக அமைந்தது.

· கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி வருமுன்னர் கழுத்தில் மண்கலயத்தைக் கட்டிக் கொண்டு, தாம் தீண்டத்தகாதவர் என்பதை வெளிப் படுத்தும் அடையாளமாக, மணிக்கட்டில் கறுப்புக்கயிறு கட்டிக் கொண்டு மஹர்கள் திரிந்த அவலத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

· ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே இம் மக்களது வாழ்வில் முன்னேற்றம் நிகழ்ந்ததை எடுத்துரைத்தார். அவர்கள் உருவாக்கிய இராணுவத்தில் மஹர்களைச் சேர்த்துக் கொண்டதைக் கூறி அது ஏற்படுத்திய மாற்றங் களையும் வெளிப்படுத்தினார். வீரத்திலும், அறிவிலும் தீண்டத்தகாத மக்கள் பிரிவினர் சிறந்தவர்கள் என்பதை வெளிப்படுத்த இது வாய்ப்பாக அமைந்தது என்பதைச் சுட்டிக் காட்டினார்.

·  சுபேதார், ஹமேதார், நவில்தார், தலைமை ஆசிரியர், எழுத்தர்கள் என்ற பதவிகளை இவர்கள் வகிக்கும் வாய்ப்புக் கிட்டியதை எடுத்துரைத்தார்.

·  வேலையாட்களாகப் பணிபுரிந்த ஒரு சமூகம் இராணுவப் பணியின் வாயிலாக பிற சமூகங் களின் மீது அதிகாரம் செலுத்தும் சமூகமாக மாறியதைக் கூறி இந்து சமூக அமைப்பில் இது புரட்சிகரமானதாக அமைந்தது என்று அவதானித்தார்.

· மராத்திய சிப்பாய்களும், பிற சாதியினரும் மஹர்களையும், சம்பர்களையும் தீண்டத் தகாதவர்களாகக் கிராமப்புறங்களில் கருதினர். தமக்குக் கீழ்ப்படியாவிடில் தம்மை அவமதிப் பதாகக் கருதினர். இதே ஆதிக்க சாதியினர், மஹர், சம்பர் வகுப்பைச் சேர்ந்த சுபேதார் களுக்கு சல்யூட் அடித்தனர். தீண்டத்தகாத சாதியினரான மேலதிகாரிகள் தம்மைப் புண் படுத்தும் வகையில் கேள்வி எழுப்பினாலும் தம் தலையை, உயர்த்திப் பார்க்காதிருந்தனர். இத்தகைய தகுதி இதற்குமுன் இம்மக்களுக்குக் கிட்டியதில்லை.

· இவர்களில் 90 விழுக்காடு மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களானார்கள். இதிலும் 50 விழுக் காட்டினர் உயர்கல்வி பெற்றனர். கல்வி யறிவால் ஏற்பட்ட இம்முன்னேற்றம் பெரும் பாலும் இராணுவப் பணியால் ஏற்பட்டது.

· இதன் அடுத்தகட்டமாக அலுவலகப் பணியையும், வேளாண் பணிகளையும் இம்மக்கள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அம்பேத்கர் விளக்கினார். அரசு வேலைவாய்ப்பு தரும் உயர் தகுதியையும் அவர் விரிவாக விளக்கினார்.

· கிராமப்புறங்களில் வீடு வீடாகச் சென்று இரந்துண்டு வாழ்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தினார்.

· மொத்தத்தில் அம்பேத்கரின் தலைமை உரை யானது எழுச்சியூட்டுதலும், வழிகாட்டுதலும் இணைந்த ஒன்றாக அமைந்தது.

· அம்பேத்கரின் உரைநிகழ்ந்த மறுநாள் (20.3.1927) அம்பேத்கர் உள்ளிட்ட தலை வர்கள் ஒரு வீட்டில் சந்தித்து உரையாடி னார்கள். சவுதார்குளத்திற்கு அணிவகுத்துச் சென்று, மஹத் நகராட்சியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது என்ற முடிவு இங்கு எடுக்கப்பட்டது.

· மாநாட்டில் நன்றி உரை தெரிவித்து முடிந்த பின் சித்தரி என்பவர் எழுந்து, ஒரு முக்கிய பணியை நிறைவேற்றாமல் இம்மாநாடு நிறை வடையாது என்றார். மஹத்தில் வாழும் தீண்டத்தகாதோர் குடிதண்ணீருக்காகப் பெருந்துயரை எதிர்கொள்ளுவதாகக் கூறிய அவர் இம்மாநாட்டிற்காக 40 ரூபாய் (அக்கால மதிப்பு) கொடுத்து தண்ணீர் வாங்கியுள்ள தாகக் குறிப்பிட்டார்.

கோவில்களில் நுழையவும் பொதுநீர்நிலைகளில் தண்ணீர் எடுக்கவும், செத்த விலங்குகளை அப்புறப் படுத்துவதில்லை என்றும் நாம் முடிவு செய்துவிட்டால். மறுநாளே நமக்கு உணவு தருவதை நிறுத்திவிடுவார்கள் என்று குறிப்பிட்டார். தனக்கு உரிமையான நீர்நிலை களை அனைத்துச் சாதியினரும் பயன்படுத்தும் உரிமையை, தீர்மானம் ஒன்றின் வாயிலாக மஹத் நகராட்சி வழங்கியுள்ளது. ஆனால் இவ்வுரிமையை தீண்டத்தகாதோர் நிலை நிறுத்தவில்லை. இம்மாநாடு இதை நிலைநிறுத்த இன்று உதவி செய்யும். எனவே மாநாட்டுத் தலைவரின் (அம்பேத்கர்) பின்னால் சௌதார் குளத்தின் நீரைப் பருக அணிவகுத்துச் செல்வோம் என்று கூறிமுடித்தார்.

அவர் இதைக் கூறிமுடித்ததும் மாநாட்டு அரங்கம் உற்சாகமானது. அம்பேத்கரின் பின்னால் நீண்ட அணிவகுப்பு, கட்டுப்பாடுடன் சென்றது. சௌதார் குளத்தை அடைந்ததும், அம்பேத்கர் குளத்தில் இறங்கி, உள்ளங்கையைக் குவித்து தண்ணீரை அள்ளிக்குடித்தார். ‘ஹரஹர மகாதேவா’ என்ற முழக்கம் இட்டபடி ஊர்வலத்தினர்  தண்ணீரைக் குடித்தனர். இதன் பின்னர் மாநாடு முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

மேட்டிமை சாதியின் சூழ்ச்சி

நண்பகல் இரண்டு மணி அளவில் மஹத்தில் உள்ள வீரேஸ்வர் கோவிலின் குரு, தீண்டத்தகாத மக்கள் கோவிலுக்குள் நுழைந்துவிட்டதாகவும் அதைப் பாதுகாக்கும்படியும் கூக்குரல் இட்டபடி தெருக்களில் ஓடியதுடன் கோவிலைப் பாதுகாக்கும்படியும் மக்களை வேண்டினார். இச்செய்தியை பக்கத்துக் கிராமங் களுக்கும் பரப்பி சாதி இந்துக்களை கையில் கம்புகளுடன் திரட்டினார்.

காவல்துறை உயர்அதிகாரி இச்செய்தியுடன் அம்பேத்கரைச் சந்தித்தார். கோவிலில் நுழையும் திட்டம் எதுவும் இல்லை என்று அம்பேத்கர் கூறியதுடன், அம் மக்களிடம் பேசி அமைதிப்படுத்தும்படி வேண்டினார்.

மாநாடு முடிந்து திரும்பிக் கொண்டிருந்த மக்கள், சாதி இந்துக்களால் தாக்கப்பட்டனர். சிலர் மாநாட்டின் சமையல் கூடத்திற்குள் நுழைந்து உணவருந்திக் கொண் டிருந்தோரைத் தாக்கியதுடன் தண்ணீர்ப்பானைகளை உடைத்து உணவையும் பாழாக்கினார். இத்தாக்குதலால் இருபது பேர்வரை ஆபத்தான காயங்களுக்கு ஆளாகினர். மூன்று அல்லது நான்கு பெண்கள் உட்பட அறுபது எழுபது பேர் வரை தாக்குதலினால் காயம் அடைந்தனர்.

புனேயில் இருந்து வந்த, தீண்டத்தகாத மக்களின் தலைவர்கள் பொதுமக்கள் முன்னிலையில்  அவ மரியாதைக்காளாகி, முக்கிய சாலைகளில் இழுத் தெறியப்பட்டார்கள். காம்பிளே என்ற தலைவரின் மனைவி தன் கைக்குழந்தையுடன் அவரைக் காப்பாற்றச் சென்றார். அவரையும், அவரது கைக்குழந்தையையும் கூட தாக்கியவர்கள் விட்டு வைக்கவில்லை. இஸ்லாமி யர்கள் சிலர் உதவிக்கு வந்தமையால் உயிர்ச்சேதம் இல்லாது போயிற்று.

mahad 350அடைக்கலம் கேட்டு ஓடிய  இம்மக்களுக்கு சில ஆதிக்கசாதியினர் புகல் அளித்தனர். ஆயினும் பெரும் பாலோர் விரட்டி அடித்தனர். மஹத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களும் காரியஸ்தர்களும் மஹர்களுக்கு உதவியாய் இருந்தனர்.

மாநாட்டுப் பந்தலுக்குத் திரும்பி வந்தவர்கள், கல் எறிக்கு ஆளானார்கள். காவல்துறையின் பாதுகாப்புடன், மாநாட்டுப் பந்தலுக்கு அழைத்து வரப்பட்டோரும் கூட கல்வீச்சுக்கு ஆளானார்கள். கோபமுற்ற இம்மக்களை அம்பேத்கரும், திப்னிஸ் என்பவரும் அமைதியுறச் செய்தனர்.

கலவரக்காரர்களின் மீது நடவடிக்கை எடுக்காது, கோவில் முன்னால் கூடியிருந்த மக்களைப் பாதுகாக்க காவல்துறை சென்றது. எதிர்காலத்தில் சௌதார் குளத்தை இம்மக்கள் நெருங்காது இருக்கச் செய்யவே இத்தாக்குதல் நிகழ்ந்தது.

அனைத்துப் பிராமணக் குருக்களின் கூட்டம் விஷ்ணுகோவிலில் கூடியது. தீட்டுப்பட்ட சௌதார் குளத்தை தூய்மைப்படுத்தும் ‘சுத்தி’ சடங்கு நிகழ்ந்தது. இது நடந்த முறை வருமாறு:

108 களிமண் பானைகளில் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டது. பாலும் தயிரும் பசு மூத்திரமும் சாணமும் அவற்றில் நிரப்பப் பட்டன. பிராமண அர்ச்சகர்களும், ஏனையோரும் காது செவிடுபட மந்திரங்கள் உச்சரிக்க இந்தப் பானைகள் குளத்தில் அமிழ்த்தப்பட்டன. இதன் பேரில் சாதி இந்துக்கள் பயன்படுத்துவதற்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விட்டதாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

இதைப் படித்தவுடன் இயல்பாக ஒருகேள்வி எழுகிறது. குளத்தை அசுத்தப்படுத்தியது தீண்டத் தகாதவர் என ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களா? அல்லது சாதி இந்துக்களா?

* * *

மற்றொரு பக்கம் குற்றவியல் நீதிபதி உட்பட, உயர்அரசு அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவில்லை. பத்திரிகைகளும், உண்மையை வெளிப்படுத்த விரும்பவில்லை. சமூக சீர்திருத்த வாதிகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டோரும் அமைதி காத்தனர். இதனால் எரிச்சலுற்ற அம்பேத்கர் போலி சீர்திருத்தவாதிகளை விட தீவிர சனாதனிகள் மேலானவர்கள் என்றார். அவரது கருத்துப்படி எதிரி என்ற வகையில் சனாதனிகளை எதிர்கொள்ள முடியும். ஆனால் போலி சீர்திருத்தவாதிகள் நம்பத்தகாதவர்கள்.

* * *

திட்டமிடப்படாது, தீர்மானம் எதுவும் நிறை வேற்றப்படாது சௌதார் குளத்தை மையமாகக் கொண்டு 1927 மார்ச்சில் மஹத்தில் நடந்த இப் போராட்டம் திட்டமிட்ட அறப்போருக்கு வழி வகுத்தது. இதே ஆண்டு டிசம்பர் மாதம் இது வெளிப் பட்டது.

Mahad: Anand Teltumbde (2016) Published by aakar books

(அடுத்த இதழில் தொடரும்)

Pin It