வகுப்புவாத மோதல்களை உருவாக்குதல், பகைமை - வெறுப்புப் பரப்புரைகள் ஆகியவற்றின் வாயிலாக, அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதுதான் பி.ஜே.பி.யின் தந்திரமாக உள்ளது. இது ஆர்.எஸ்.எஸ்.இன் திட்டமாகும். இதனுடைய ஒரு பகுதியாகத்தான் மாட்டிறைச்சி விலக்கம் தொடர்பாக இப்போது அவர்கள் நடத்துகின்ற செயல்பாடுகள். மாடுகளை வெட்டுவதன்மீது ஏற்படுத்திய தடை, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும். இவ்வகையான வரம்புமீறலை அனுமதிக்கக்கூடாது.

கூட்டாட்சித் தத்துவங்களுக்கு எதிரானது என்பதைப்போலவே, ஜனநாயக நடைமுறைக்கும் இது எதிரானது. மதச்சார்பின்மைக்கு எதிரான இந்தப் போக்கினை ஒன்றுபட்டு நாம் எதிர்க்கவில்லை யென்றால், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறும். கேரளத்தின் வேலைவாய்ப்பினையும் வணிகத்துறையினையும் பால் உற்பத்தியையும் புதிய சட்டம் கடுமையானரீதியில் எதிர்மறையாகப் பாதிக்கும்.

இந்திய அரசியல் சாசனத்தின் 19ஆம் பிரிவின்படி, தொழில் செய்து வாழ்வதென்பது குடிமகனின் தலையாய மனிதஉரிமையாகும். அது இங்கே மீறப்பட்டிருக்கின்றது. ஓராண்டில் கேரளத்திற்குப் 15 இலட்சம் மாடு, கன்றுகள் வருகின்றன. ஓராண்டிற்கு 6552 கோடி ரூபாய் விலை மதிப்புள்ள 2லு இலட்சம் டன் மாட்டிறைச்சி கேரள மாநிலத்தில் விற்பனையாகின்றது. கேரளத்தில் மனிதனின் சராசரி ஆயுள் கூடியது, இங்குள்ள உணவுமுறையின் தனித்தன்மையாலாகும். இத்தகைய உணவுமுறையை மாற்ற முயற்சி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் மாநில அரசாங்கம் விட்டுக் கொடுக்காத நிலைப்பாட்டை எடுக்கும். இப்போதுள்ள நிலைமை தொடர்வதற்கு மாநில அரசாங்கம் எல்லா வசதிகளையும் செய்துகொடுப்பதோடுகூட, நாடு முழுவதும் இது தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு ஒரே வடிவம் கொடுக்கவும் தவறான போக்கினைத் திருத்திக்கொள்வதற்கான முன்கையெடுப்பையும் கேரளத்திலுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம் தனது தரப்பிலிருந்து உண்டாக்கும்.

கேரள மக்களில் கணிசமான தொகையினர் மாட்டிறைச்சி உண்பவர்கள். 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் மத்தியஅரசின் தவறான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவைப் பற்றியும் அகண்ட பாரதத்தைப் பற்றியும் இடையிடையே பேசக்கூடிய ஆர்.எஸ்.எஸ்., இந்திய தேசத்து மக்களை உணவின் பெயரில் பிரித்துவைக்க முயற்சி செய்கின்ற ஏற்பாடுதான் இது என்பது இந்த வட்டாரத்திலுள்ள பி.ஜே.பி.யின் பழிவாங்கும் நடவடிக்கையிலிருந்து தெரியவருகின்றது. தேசத்தின் பொதுநலத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மத்தியஅரசு கைக்கொண்டுள்ளது. மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றின்மீது எங்களுக்கு அக்கறையில்லை என்ற நிலையில்தான் அவர்களுடைய போக்கு இருக்கின்றது. மத்தியஅரசின் இந்த அறிவிப்பு, தேசத்தில் ஆர்.எஸ்.எஸ்.இன் செயல்திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதிதான் என்பது, மறைத்துவைக்க முடியாத பொருளாகிவிட்டது. பசுவதையின் பெயரில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தி லேயே ஹிந்து மகாசபை ஆரம்பித்த விரோதச் செயல்களை ஏற்று நடத்திய சங்கம்தான் ஆர்.எஸ்.எஸ்.

பல்வேறு மதங்களும் பல்வேறு பண்பாடுகளுமுள்ள தேசம்தான் இந்தியா. பன்முகத்தன்மைதான் இந்திய ஒருமைப்பாட்டின் தனித்தன்மை. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையும் அதுதான். இதனைத் தகர்க்கின்ற நடவடிக்கைகள்தான் மத்திய அரசாங்கத்திடமிருந்து உருவாகின்றன என்பது மிகவும் தீவிரமான சூழ்நிலை யாகும். இறைச்சியை உண்பவர்கள் ஏதேனுமொரு தனிப்பட்ட மதப்பிரிவைச் சார்ந்தவர்கள் அல்லர். வரலாற்றுக் காலந்தொட்டே மனிதர்கள் மாமிச உணவை உண்டு வந்திருக்கின்றனர். அவற்றையெல்லாம் புறக்கணிப்பதும் மாட்டிறைச்சி உண்பதை அனுமதிக்கக் கூடாது என்று வற்புறுத்துவதன் வழி, மக்களுடைய உணவு உண்பதற்கான உரிமையின்மீது மட்டுமல்ல; நாட்டினுடைய வரலாற்றின்மீதுகூட, நரேந்திர மோடியின் அரசாங்கம் கைவைத்திருக்கின்றது. இத்தகைய அநாகரீகமான நடவடிக்கைகளுக்கு எதிராகத் தேசம் முழுவதும் மக்களின் கோபம் உயர்ந்தெழ வேண்டும் என்பது இந்தியாவையும் இங்குள்ள ஜனநாயகத்தையும் மதிக்கின்ற எல்லாருடைய கடமையு மாகும். அதை நினைவூட்டுவதற்கும் தடைக்கு எதிராக வேண்டுகோள் விடுப்பதற்கும் பிற மாநில முதலமைச்சர் களுக்குக் கேரளம் கடிதம் அனுப்பியது.

மாடு கன்றுகளைக் கொல்வதைத் தடைசெய்தும் இறைச்சி விற்பனையை கட்டுப்படுத்தியும் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக, மாநில அரசுகளின் கருத்து களைக் கேட்கவும், அதனைக் கருத்திற்கொள்ளவும் மத்திய அரசாங்கம் தயாராக இருந்திருக்கவேண்டும். கூட்டாட்சி முறையில் இத்தகைய விஷயங்களில் மாநில அரசாங்கங்களின் நம்பிக்கையைப் பெறவேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

நேற்றுவரை, பசுவினைக் கொல்வதன் பெயரில் தான், ஸங் பரிவார் அமைப்பு அக்கிரமங்களையும் கலகங்களையும் அழிச்சாட்டியங்களையும் அவிழ்த்து விட்டதென்றால், இன்று இதிலிருந்து விடுபட்ட காளை, எருமை, ஒட்டகம் முதலான விலங்குகளுக்கும் பாதகமாக்கும் வகையில் புதிய செயல்பாடுகள் அரங்கேறி வருகின்றன என்பதும் கவனத்திற்குரியது. நாட்டில், கோடிக்கணக்கான மக்கள் உணவுத்தேவைக்காக இவ்வகை விலங்குகளைக் கொல்வதுண்டு. ஏழைகள் மற்றும் சாதாரண மக்களுடைய முக்கிய சத்துணவு இறைச்சிதான். இதன் காரணமாகத்தான் இது ஏழைகளுக்கு எதிரான அத்துமீறலாகிறது. மணிக்கு இருவர் என்ற விகிதத்தில் இந்திய நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். விவசாயத்தொழில் நசிந்துபோனதால்தான் இப்படி நடக்கின்றது. இந்த நிலைமை இன்னும் மோசமாகப்போகிறது. விவசாயத் தொழிலுக்கும் பயன்படுத்தமுடியாத மாடுகளைப் பேணும்படி நிர்ப்பந்திப்பதனால் மாடுகளிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தில் 40 விழுக்காட்டினை விவசாயிகள் இழப்பதுடன், சாகின்ற வரையில் அவற்றைப் பேணவேண்டிய பெரும் செலவு அவர்கள் முதுகில் விழவும் செய்கின்றது. மாட்டுச்சந்தைகள் செயல்படுவது விவசாயிகள் விற்பதற்கும் சாதாரண வியாபாரிகள் வாங்குவதற்குமான இடம் என்ற நிலையில்தான். அவற்றை இல்லாமல் செய்து அதற்குப்பதிலாகப் பெரும்பண்ணை முதலாளிகளுக்கும் மொத்த இறைச்சி வணிகர்களுக்கும் வசதி செய்து கொடுப்பதுதான் புதிய செயல்பாடு என்பது தீவிரமான பிரச்சினையாகும்.

இன்று மாடு கன்றுகளுக்குத் தடையென்றால், நாளை மீன் உண்பதற்கும் தடை கொண்டு வரலாம். மாட்டிறைச்சி விலங்கின் மூலம் இலட்சக்கணக்கான ஆட்கள் வேலையில்லாது போவார்கள். தோல் தொழிலுக்கான மூலப்பொருட்கள் கிடைக்காமல் போகும். ஏழைகள் முழுக்கப் பாதிக்கப்படுவார். இது எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் அமைதியான வாழ்க்கை தகர்க்கப்படும். மாடுகன்றுகளைக் கொண்டு போவோருக்கு எதிராக ஸங் பரிவார் அமைப்பினர் கேரளம் உட்பட வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அதைத் தடைசெய்வதற்குப் பதிலாக மாடு கன்றுகளைக் கொல்வதை விலக்கியதிலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாடு ஆர்.எஸ்.எஸ்.இன் கையில்தான் உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. ஆட்டுக்கறி உண்ட முகம்மது அக்லாக்கினை பசுவதை செய்தவனாக்கி அடித்துக் கொன்ற அரசியலுக்குத்தான் இவர்கள் அரசு முறைப்படுத்தப்பட்ட பரிவட்டம் கட்டுகிறார்கள்.

1960இல் இயற்றப்பட்ட மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்ட விதிகள் விசித்திர மானவை என்பது ஒற்றைப் பார்வையிலேயே புலனாகும். இந்த விதிகளின் பின்னால் மாநிலங்களுடைய சட்டம் இயற்றும் முறையின் அதிகாரங்களைக் கவர்ந்தெடுத்தல் என்கிற ஆசைவெறிதான் இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் 19 (1) (பி) பிரிவின்படி தொழில் செய்யக்கூடிய மனிதவுரிமை மீறப்படுவதன் மூலம் வலிந்து திணிக்கப் பட்ட இக்கட்டுப்பாடுகள் அரசியல் சாசனரீதியாக நிலைத்து நிற்கமுடியாது என்பதுதான் இதனுடைய சட்ட அம்சம். உணவைத் தேர்ந்தெடுக்கக்கூடிய தனிமனிதனின் அடிப்படைச் சுதந்திரத்தையும் இது மீறுகின்றது. மாநிலங்களுடைய சமூக - பொருளாதார - பண்பாட்டு நிலைமைகளுக்கு ஏற்ற சட்ட உருவாக்கம் செய்ததைத் தான் அனுமதிக்க வேண்டும். நலம் பயக்கும் நம்முடைய உணவுமுறையை மாற்ற முயற்சிக்கும் எந்த ஒரு சக்தியையும் அனுமதிக்க முடியாது. நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை டெல்லியிலிருந்தோ, நாக்பூரிலிருந்தோ சொல்லித் தெரிந்துகொள்ள அவசியமில்லை.

1960இல் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தான் இந்த ஆண்டு மே 21ஆம் நாள் மத்திய அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது. மாட்டுச்சந்தை யினுடைய செயல்பாட்டைக் கட்டுப்படுத்துதல் என்பதுதான் இச்சட்டவிதிகளின் முதன்மை நோக்கமாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், பயன்பாட்டில் மாடு கன்றுகளை வெட்டுவதைத் தடைசெய்கின்ற அம்சங்கள் தான் சட்டவிதிகளில் உள்ளடங்கியிருக்கின்றன. இது தொடர்பாக எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கும் இன்று வரை ஸங் பரிவார் பதில் சொல்லவில்லை.

மிருகவதைத் தடுப்புச் சட்டத்தைப் பின்பற்றி மாட்டுச்சந்தைகளைக் கட்டுப்படுத்துகின்ற சட்ட விதிகளை இயற்றுவதற்கு மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை. ஒரு சட்டத்தின் கீழ் விதிகளை உருவாக்கும்போது முக்கியமான மூன்று நடைமுறை களைப் பின்பற்ற வேண்டும்.  1)  விதிகள் சட்டத்தின் செயல்நோக்கக் குறிக்கோள்களை அடைவதாக இருக்க வேண்டும். 2) சட்டத்தின் அதிகார ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ள விஷயங்களைப் பற்றி சட்டத்தின் எல்லைக்குள் இருந்துகொண்டு மட்டுமே விதிகளை உருவாக்க வேண்டும். 3) அதுமட்டுமல்லாமல் எல்லா சட்டங்களையும் ஒன்றுபோல பாவிக்கக்கூடியது தான் அரசியல் சாசனம். இதில் சொல்லப்பட்டுள்ள மனித உரிமைகளை மீறக்கூடிய சட்டங்களுக்கு நியாயப் படுத்துதல் இல்லை என்பதுதான் அடிப்படைத் தத்துவம். இம்மூன்று தத்துவங்களின் வாயிலாக பிரகடனப்படுத்தப்பட்ட உரிமை மீறல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் காணமுடியும்.

மாடு கன்றுகளை வெட்டுதல் என்ற விஷயம் பாராளுமன்ற சட்ட அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல. அரசியல் சாசனத்தின் ஏழாம் அட்டவணையில்  மாநிலப்பட்டியலில் (பட்டியல்-2) பதினைந்தாம் பிரிவில் மாடு கன்றுகளின் பாதுகாப்பும் நோய்கள் தடுப்பும் உட்படுத்தப்பட்டிருக்கிறது. சில மாநிலங்கள் பசுவதையைத் தடைசெய்து சட்டம் ஏற்படுத்தி யிருந்தாலும் பல மாநிலங்களிலும் பசுவதை தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.

பாராளுமன்றத்தின் சட்ட அதிகாரத்திற்கு உட்படாத மாநிலங்களின் சட்டசபைகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் கொடுத்துள்ள விஷயத்தில் மத்திய அரசாங்கத்தின் சட்டங்களின் கீழுள்ள விதிகளின் வழி அத்துமீறக்கூடிய முயற்சிதான் புதிய அறிவிப்பின் வாயிலாக நடத்தியிருக்கிறார்கள். அரசியல் சாசன நடைமுறைகளை மீறி மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் மரபில் குடிமகனின் தொழில், வியாபார சுதந்திரத் திற்கான மனிதவுரிமையை அழித்தொழிப்பதுதான் இங்கு செய்யப்பட்டுள்ளது.

மனிதன் உணவிற்காக விலங்குகளைக் கொல்வது மிருகவதைத் தடுப்புச் சட்டத்திலுள்ள 11(3) (E)-பிரிவின்படி அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். அவ்வாறு செய்யும்போது, விலங்குகளுக்குத் தேவையில்லாத வேதனைகளோ, துன்பங்களோ ஏற்படுத்தக்கூடாது என்பதுதான் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்துவதற்கு 2001 ஆம் ஆண்டில் விதிகளை உருவாக்கியிருக்கின்றனர். அதனால், இப்போதைய சட்டவிதிகளுக்கு இவற்றோடு எந்த வொரு தொடர்புமில்லை.

மனிதன் நீங்கலாக எல்லா உயிரினங்களையும் உட்கொள்ளுகின்ற விரிந்த பார்வையும் அதனை யட்டியுள்ள வரையறுப்பும் சட்டத்தில் (2) (எ) பிரிவில் ‘விலங்கு’ (Animal) என்ற வார்த்தைக்குச் சொல்லப்பட்டுள்ளது. ஏதோ சில விலங்குகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை வெட்டுவதற்காக விற்கக் கூடாது என்று சட்டவிதிகள் வழியாக நிர்ப்பந்திப்பது சட்டத்தின் செயல் நோக்கங்களுக்கு எதிரானது.

சட்டத்திற்கு விரோதமான ஏராளமான நடைமுறை களைப் புதிய அறிவிப்பில் உட்படுத்தியிருக்கிறார்கள். மாடுகன்றுகளை விவசாயத் தேவைகளுக்கல்லாது விற்கக்கூடாது, மூக்கணாங்கயிறு போடக்கூடாது. ஆறு மாதத்திற்குள் விற்கக்கூடாது, கசாப்புக்கடைகளுக்கு விற்கக்கூடாது, இளங்கன்றுகளைச் சந்தைக்குக் கொண்டு வரக்கூடாது முதலிய நடைமுறைகள் முற்றிலும் சட்டவிரோதமானவை. மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காது எடுத்த இம்முடிவு, கூட்டாட்சித் தத்துவத்தின் விலைமதிப்பறியாதது மோடி அரசாங்கம் என்பதற்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும்.

விவசாயத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தக் கூடியது என்று ஆதாரங்கள் வழி நிரூபித்தாலே இனிமேல் மாடு கன்றுகளை விற்கவும் வாங்கவும் முடியும். இது விவசாய - வீட்டுத்தேவைகளுக்கு மாடுகன்றுகளைப் பயன்படுத்துபவர்களுக்குப் பேரிடியாகும். விவசாயிகளில் மிகக்குறைந்த விழுக்காட்டினர் மட்டுமே இப்படிப்பட்ட ஆதாரங்களைக் காட்ட முடியும் பலகோடி மக்களின் வாழ்க்கையும், வாழ்வதற்கான வழியையும் தடைசெய்து தான் இந்தத் தீர்மானம்.

மாவட்ட அளவில் விலங்கு விற்பனைக் குழுக்களும் மேற்பார்வைக் குழுக்களும் உருவாக்கப்படுமென்று அறிவிப்பு தெரிவிக்கின்றது. மாட்டு வியாபாரிகளுக்கும் மாடுகளைக் கொண்டு போகின்றவர்களுக்கும் எதிராக அடக்குமுறை செய்கின்ற பசுப் பாதுகாப்பு அமைப்புகள் இந்தக் குழுக்களின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளுமோ என்பதுதான் ஐயம். ரம்ஜான் நோன்பு ஆரம்பிப்பதற்கு முதல்நாள் மாட்டு விற்பனைக்குக் கட்டுப்பாடு கொண்டுவந்ததைச் சில சமுதாயங்கள் மீது ஏவப்பட்ட தாக்குதலாகவே கருத முடிகின்றது.

சிறுபான்மை மதத்தினர் மட்டுமல்லாது, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் இறைச்சியை உண்கின்றனர். புதிய தீர்மானம் இந்தியாவில் தோல் தொழில்களுக்கு மூலப்பொருட்கள் கிடைக்காமல் செய்யும். இந்தியாவில் தோல் தொழிலில் 25 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் தலித்துகள். விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட இவர்களின் வாழ்க்கையையும் வாழ்க்கை வழிமுறையினையும் இத்தீர்மானம் கடுமையாகப் பாதிக்கும். உலகச் சந்தையில் இறைச்சி ஏற்று மதியில் இந்தியாவிற்கு முக்கிய இடமுண்டு. தடையால் இந்த ஏற்றுமதியையும் அதன் வழி கிடைக்கும் அந்நிய செலவாணியையும் பாதிக்கும். கேரள இறைச்சி உற்பத்திப் பொருட்கள் நிறுவனம் (Kerala Meat Products of India) உட்பட்ட இந்த அரங்கத்திலுள்ள அரசுத்துறை சார்ந்த இறைச்சியைப் பதப்படுத்தும் தொழிற்சாலை களையும் இத்தீர்மானம் தகர்க்கும்.

கேரளத்தில் பெரும்பான்மையான மக்கள் இறைச்சியை உண்பவர்களாகத் தென்னிந்திய மாநிலங் களிலும், வடஇந்திய மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இதே நிலைதான்.  அதனால், மாநில அரசுகளோடு கலந்தாலோசித்து மட்டுமே இத்தகைய தீர்மானங்களை எடுக்க முடியும். மாநில அரசுகளின் நம்பிக்கையைப் பெறாமல் எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்குப் பேரிடியாகும். இடது ஜனநாயக முன்னணி கேரளத்தை ஆளுகின்ற போது, ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பிய உணவை உண்ணமுடியும். அதற்கான உறுதியான நடவடிக்கை களை அரசாங்கம் எடுக்கும். இதற்கு எல்லா திசை களிலிருந்தும் கிடைக்கின்ற ஆதரவு மகிழ்ச்சியைத் தருகின்றது.

நன்றி:

‘சிந்த’ மலையாள மாத இதழ் ஜுன் 2017

மலையாள மூலம் : பிணராய் விஜயன்

தமிழில் : பா.ஆனந்தகுமார்

Pin It