இந்திய மக்கள் மீது பாஜக மோடி அரசு மீண்டுமொரு மதவாத ஆயுதத்தை ஏவி விட்டிருக்கிறது. ஜீவகாருண்யம் என்ற பெயரிலே மாட்டிறைச்சி தொடர்பான பாஜகவின் புதிய அரசாணை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாணை அடிப்படையில் கால்நடைச் சார்ந்த விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த புரதச் சத்து கிடைப்பதை தடுக்கும்.
உணவு என்பது தனி நபரின் கலாச்சார உரிமை – இதனை பாஜகவின் அரசானை மறுக்கிறது. நமது அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாழும் உரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்தை (Art 21) இந்த அரசாணை மறுக்கிறது. மேலும் ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப மத மற்றும் சமூக நம்பிக்கைகளுக்கு ஏற்ப உண்ணும் உரிமை உண்டு (Art 25). இந்த அடிப்படை உரிமையை இந்த அரசாணை அடியோடு மறுக்கிறது. அரசியல் சாசனம் உறுதிபடுத்தியுள்ள மற்றொரு அடிப்படை உரிமையான தாம் விரும்பும் இடத்தில் தொழிலை மேற்கொள்வதற்கான உரிமையை (Art 19) இந்த ஆணை தடுக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தாய் சட்டமான விலங்கு வதைச் சட்டம் (PCA ACT 1960) உணவிற்காக விலங்குகள் கொல்லப்படலாம் என்பதை உறுதி செய்திருக்கிற்து. ஆனால், அந்த தாய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அரசானை உணவிற்காக விலங்குகள் கொல்லப்படுவதை அடியோடு தடை செய்கிறது.
நேப்பாளத்திற்கு மதச்சடங்கிற்காக கடத்தப்படும் கால் நடைகளை ஒழுங்குப்படுத்துவதற்கு ஆவனச் செய்யவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால், இந்த ஆணை மாநிலங்களுக்கிடையிலான கால்நடைகள் ஏற்றுமதியை தடுக்கிறது. மேலும், இந்த ஆணையின் மூலமாக கால் நடைச் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ள, கால் நடைகள் சந்தைக்கு எங்கிருந்து பெறப்பட்டன (Traceability) போன்ற கட்டுப்பாடுகள் கார்ப்பரேட் ஏற்றுமதியாளர்களின் தேவைக்கானதாகவே அமைந்துள்ளது
இறுதியாக, கால்நடை பராமரிப்பு மாநில அதிகாரத்தின் கீழ் வருவதாகும். ஆனால் அதனை இந்த அரசாணையின் மூலம் மத்திய அரசு மாநில அதிகாரத்தை தட்டிப் பறிக்கிறது.
ஆகவே, மத்திய அரசின் அரசானை அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள வாழ்வாதாரம், கலாச்சாரம், தொழில் போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்கின்றது. தாய் சட்டத்திற்கு எதிரானது. விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது. மாநில அதிகாரத்தை பறிக்கிறது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை, பெரும்பான்மை மக்களின் உண்ணும் உரிமையை மறுக்கின்றது. அரசியல் சாசனத்திற்கும், சட்டத்திற்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான இந்த மத்திய அரசின் ஆணையை அம்பலப்படுத்துவதும் சனநாயக முறையில் மறுப்பதும் அனைவரது உரிமையும் கடமையுமாகும்.
கேரளம், மேற்கு வங்காளம், புதுச்சேரி போன்ற மாநில முதல்வர்கள் மத்திய அரசின் இந்த மக்கள் விரோத அரசாணையை நிராகரிக்கிறோம் என்றும் அமல்படுத்த மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது பாராட்டத் தக்கது. தமிழக உயர் நீதி மன்றம் மத்திய அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது.
ஆனால் எடப்பாடியின் தலைமையில் உள்ள தமிழக அதிமுக அரசோ மத்திய அரசின் ஆணையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறது! மத்திய அரசுடன் இணைந்து செல்வது என்ற பெயரில் மாநிலத்தின் உரிமைகளை மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்துள்ளது.
இந்திய மக்களின் தலையாய எதிரியான பாஜக தலைமையிலான மோடி அரசு பாசிச மதவாதக் கொள்கையை பரப்பிவருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டை தாரைவார்த்து மதவாத கொடுங்கோலாட்சியை பரந்து பட்ட மக்கள் மீது திணித்து வருகிறது. மோடி அரசு ஒற்றை மொழி, ஒற்றை கல்வி, ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மதம், ஒற்றை தலைவரின் கீழ் ஒற்றை அதிகாரத்தை நிறுவ முயற்சிக்கிறது. இந்த ஒற்றை அதிகாரத்தின் கீழ் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் அணு உலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ட்ரினோ போன்ற நாசகார திட்டங்களை, ஒற்றை வளர்ச்சிப் பாணி திட்டங்களை திணித்து போலி தேசப்பக்தியை கட்டமைக்கிறது.
“ஊழலை ஒழிப்போம், கறுப்புப் பணத்தை ஒழிப்போம், வேலை வாய்ப்பை பெருக்குவோம், விவசாயிகளின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம், ஒளிரும் இந்தியாவை படைப்போம்” என்று ஆட்சிக்கட்டில் ஏறிய பாஜக அரசின் மூன்றாண்டு சாதனைகள் என்ன? இந்திய பிரதமர் உலகம் சுற்றும் வாலிபனாக சுற்றித் திரிந்து நாட்டை விற்பதற்கான நாசகார திட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்!
மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே கொண்டாடப்படுகிறார். தலித் மக்களும், சிறுபான்மையின மக்களும், பெண்களும், விவசாயப் பெருமக்களும் வாழ்க்கை உத்திரவாதம் இன்றி அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
மதவாத சக்திகளிடமிருந்தும், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திலிருந்தும் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் மற்றும் மதச்சார்பற்ற சோசலிச இந்தியாவை படைப்போம் என அரசியல் சாசனம் பிரகடனம் செய்கிறது. ஆனால் அரசியல் சாசனத்தின் இந்த பிரகடனத்தை அடியோடு சீர்குலைக்கும் பாஜகா அரசின் ஆட்சி தூக்கியெறியப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை காப்போம்; தேசத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் பாசிச பாஜகவிற்கு எதிராக அணி திரள வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் மத்திய பாஜகவிற்கு சாமரம் வீசும் அதிமுக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும், சனநாயக சக்திகளும் ஒருங்கிணைவது காலத்தின் தேவை.
பொன் சந்திரன்
கோவை.
9443039630
31.05.2017.
பி.கு: இக்கட்டுரையின் சாரம்சமான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு நன்றி.