பூவுலகின் நண்பர்கள் சார்பில் 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 26 இல் சென்னையில் முந்நீர் விழவு என்ற பெயரில் தண்ணீரின் அவசியம் குறித்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அறிஞர்கள் கருத்துரைகளுக்குப் பிறகு இறுதியில் பாரம்பரிய உணவு விருந்து, இயற்கை உணவுத் திருவிழாவாக நடைபெற உள்ளது. சென்ற ஆண்டே ஐந்திணை விழா என்ற பெயரில் இந்த உணவுத் திருவிழா சென்னையில் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய உரையில்,

“நவீன விவசாயம் என்ன செஞ்சுது? விவசாயியையும் மாட்டையும் பிரிச்சுது. மாடு கசாப்புக் கடைக்குப் போவுது; விவசாயி ஏரை விட்டுட்டான்; டிராக்டர் வந்துச்சு; கம்பெனிக்காரன் பெருக்குறான். மாடு கசாப்புக் கடைக்குப் போவுது; விவசாயி மாட்டு வண்டியை விட்டுட்டான்; பெட்ரோலும் டீசலும் இறக்குமதி ஆவுது; கம்பெனிக்காரன் பெருக்குறான். மாடு கசாப்புக் கடைக்குப் போவுது; விவசாயி ஏத்தம் இறைக்கிறதை மறந்துட்டான்; ஆழ்குழாய்க் கிணறு வந்துச்சு; மோட்டாரும் குழாயும் விக்குது; கம்பெனிக்காரன் பெருக்குறான். விவசாயி ஓட்டாண்டி ஆயிட்டான். நவீன விவசாயம் என்ன பண்ணுதுனு இப்பப் புரியுதுங்களா?'' 

என்றார். மேலோட்டமாக கேட்டால் இயற்கை விவசாயம் நினைவுக்கு வருகிறது. கொஞ்சம் கூர்ந்து கவனித்துக் கேட்டால் இராமகோபாலன் தான் நினைவுக்கு வருகிறார். சொல்லும் தகவலுக்குப் பின்னால் இருக்கும் மதவாத – மனுவாத அரசியலை நான் சொல்லவில்லை. சொல்லும் தகவலே தவறு. தமிழ்நாட்டில் எந்த கிராமத்திலும் கசாப்புக்கடைக்கு அனுப்பப்படும் மாடுகள் எவையும் ஏர் உழவோ, வண்டி இழுக்கவோ, ஏற்றம் இறைக்கவோ, பால் கறவைக்காகவோ பயன்பட்டுக் கொண்டிருப்பவை அல்ல. இவை போன்ற எந்த பணிக்கும் இலாயக்கில்லாத மாடுகள் மட்டுமே அடிமாடாகப் போகின்றன. இதனால் ஒரு சாதாரண விவசாயிக்கு இலாபமே தவிர எவ்வகையிலும் நட்டமில்லை. இயற்கை விவசாயத்துக்கு எருவைத் தரும் என்றால்கூட மேலே சொல்லப்பட்டுள்ள வேறு எந்தப் பணிக்காவது பயன்பட்டுக் கொண்டிருந்தால் கூடுதலாக சாணி நமக்கு மிச்சம். இன்றைய சூழலில் மாடு வைத்திருப்பதில் சாணி மட்டுமே இலாபமாக மிச்சமாகிறது. ஆடு, மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராசா என்ற பழமொழியை நாங்கள் அனுபவித்து உணர்ந்தவர்கள். அடிமாட்டுக்கு அனுப்புவதுதான், விவசாயி அடிமாடாகமல் தப்பிப்பதற்கு ஒரேவழி. வயதான, பயனற்ற பசுமாடுகளை அரசாங்கமே கோசாலை வைத்துப் பராமரிக்க வேண்டும் என்ற இராமகோபாலனின் கோரிக்கையைப் போன்று வேளாண் அறிஞர் உரையாற்றியுள்ளார். 

மேலும் ஏர் ஊழவுக்கு கலப்பை வேண்டும். மாட்டு வண்டிக்கு வண்டியும் சக்கரமும் வேண்டும். ஏற்றம் இறைக்க கமலை, சால், பரி, தோல் வேண்டும். நம்மாழ்வார் கூறும் அனைத்தும் இன்றும் வேண்டுமானால் தச்சரும், கொல்லரும் தமது குலத்தொழிலைத் தொடர்ந்து செய்துவர வேண்டும். பரிக்கும் தோலுக்கும் சக்கிலியர் வேண்டும். சக்கிலியர்கள் தம் குலத்தொழிலை தவறாமல் செய்து வர வேண்டும். இப்படி ஒவ்வொரு ஜாதியும் தத்தம் குலத்தொழிலை தவறாமல் செய்து வந்தால் நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் நன்றாகத்தான் நடக்கும். பரிக்கும், தோலுக்கும் போக மிச்சமான மாட்டுத்தோல் பறைக்குப் பயன்படும். அதுவும் பறையர்களுக்குக் குலத்தொழிலை நினைவுபடுத்தும். இன்னும் விதைப்பு எந்திரம், அறுவடை எந்திரம் இவைகள் வராத கிராமங்களில் விதைப்புக்கும், அறுப்புக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே மிகுதியாகச் செல்கின்றனர். கதிரடிக்கும் களத்துமேடுகளில் இன்றும் ஒரு பார்ப்பானைக்கூட பார்க்க முடியாது. இடைநிலைச் சாதிகளையும் அதிகமாகப் பார்க்க முடியாது. 

யாரோ சிலர் இயற்கையாக உண்டு நீண்ட காலம் மற்றவர்களை அடக்கி வாழ – பெரும்பான்மை மக்கள் எதற்காக பள்ளனாக, பறையனாக, சக்கிலியனாக, தச்சனாக, ஆசாரியாக தொடர்ந்து இழிவோடு வாழ வேண்டும்? சக்கிலியன் செருப்புத் தைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பள்ளர்கள் வயலில் கிடந்தே சாகவேண்டும். பறையர்கள் பறையடித்துக் கொண்டும் பறையர்களைவிட உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டிருக்கும் மக்களுக்கு பண்ணை அடிமையாக உழைத்துக் கொண்டும் இருக்க வேண்டும். படிக்கக்கூடாது, வேறு தொழில்களில் இறங்கி பொருளீட்டக் கூடாது என்று மனுசாஸ்திரக் காவலர்களாக வாழ்ந்து வரும் ஆதிக்கஜாதி மக்களுக்கும் இயற்கை விவசாயப் பிரச்சார பீரங்கிகளின் உள்நோக்கத்துக்கும் என்ன வேறுபாடு? 

பழந்தமிழன் இயற்கை விவசாயப் பொருட்களையும் வரகரிசி, சாமை, குதிரைவாலி போன்ற தானியங்களையும் உண்டுவந்ததால் நோயின்றி வாழ்ந்தான் என்றால், அதே பண்டைய தமிழன் ஆயிரக்கணக்கான நோய்களுக்கு எப்படி மருந்தைக் கண்டுபிடித்தான்? ஏன் கண்டு பிடித்தான்? இல்லாத நோய்களுக்கு யாரும் மருந்து கண்டுபிடித்திருக்க முடியாது. இரசாயன விவசாயம் வருவதற்கு முன்பே தோன்றிய நோய்கள்தான் இங்கு ஏராளம். அந்த நோய்களுக்கான சிகிச்சைகளைத்தானே சித்த மருத்துவத்தில் பார்க்கிறோம். எனவே எல்லா நோய்களுக்குமான ஒரே சிகிச்சை இயற்கை விளைபொருட்கள்தான் என ப்ளாட்பார லேகிய வியாபாரிகளைப் போல தவறான பிரச்சாரங்களைச் செய்ய வேண்டாம். 

food_festival_380ஜாதிஅமைப்பு நொறுங்கி விடாமல் தாங்கிப் பிடித்துக் கொள்ளும் இயற்கை விவசாயத்தால் அடித்தட்டு மக்களுக்கு என்ன நன்மை? இயற்கை விளைபொருட்கள் சாதாரண மக்கள் வாங்கும் விலையில் கிடைக்கிறதா? அப்படிக் குறைந்த விலைக்குக் கிடைக்கும் நிலை வந்தால் இப்போது இயற்கைக்காகப் பாடுபடுபவர்கள் தொடர்ந்து பாடுபடுவார்களா? ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் ஏற்றுமதி வாய்ப்புகளையும், பெருநகரங்களில் பெரும் பொருட்செலவில் இயங்கும் வணிக நிறுவனங்கள் தரும் வணிக வாய்ப்புகளையும் நம்பித்தான் இங்கு இயற்கை விவசாயம் பெருமளவில் நடக்கிறது. 

இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒப்பந்தம் போட்டு, அமெரிக்க வேளாண் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண்மையையும் ஒப்படைக்கும் முயற்சியிலும் எம்.எஸ்.சாமிநாதன் என்றொரு பார்ப்பனர் இருக்கிறார். அதை எதிர்க்கும் முயற்சியிலும் பார்ப்பன நலன்களே இருக்கின்றன. சுற்றுச்சூழல் புரட்சியாளர் என்றால் அது எக்ஸ்னோரா வின் எம்.பி. நிர்மல் என்ற பார்ப்பனர் இருக்கிறார். பூவுலகு இதழுக்கு தொடர்ந்து விளம்பரம் அளிப்பது கிருஸ்ணா ஸ்வீட்ஸ். அதாவது, கோவையில் பார்ப்பனருக்கு மட்டுமே தனியாக மின்சாரச் சுடுகாடு அமைத்துள்ள கிருஸ்ணா ஸ்வீட்ஸ். பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் முந்நீர் விழவு நிகழ்வுக்கு மீடியா பார்ட்னர் விகடன் குழுமம். 

அழைப்பிதழில்,

“சங்க கால மன்னர்கள் நீர்நிலைகள் மாசுபடாமல் இருக்க நடத்தியதுதான் முந்நீர் விழவு. இவ்வுலகில் நீரை பாதுகாத்தவர்களின் பெயர்கள் நிலைக்குமென்றும் அவ்வாறு செய்யத் தவறியவர்களின் பெயர்கள் நிலைக்காது என்றும் சொல்கிறார் குடபுலவியனார்”

என விளக்கத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். முதலில் இது ஒரு தவறான விளக்கம். 

நிகழ்ச்சியின் பெயர் முந்நீர் விழவு. அதன் பொருள் என்ன? முந்நீர் என்றால் கடல். விழவு என்றால் விழா. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற சங்ககாலத்துப் பாண்டிய மன்னன் முந்நீர் விழவு என்ற கடல்விழாவை நடத்தியவன். புறநானூற்றில் 9 ஆம் பாடல் இந்த மன்னனைப் பற்றியும், முந்நீர் விழவைப் பற்றியும் தெளிவாகக் குறிப்பிடுகிறது. 

“முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர் பஃறுளி மணலினும் பலவே” 

கடல்விழாவை நடத்திய நெடியோனாகிய மன்னன் பஃறுளி ஆற்று மணலைவிடப் பல்லாண்டு காலம் வாழ்க என நெட்டிமையார் பாடியுள்ளார். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் குறிப்பதே முந்நீர். அவற்றுக்குரிய தெய்வங்களை வணங்குவதே முந்நீர் விழவு என்றும் இதே புறநானூற்றுப் பாடலுக்கு வேறு பொருளும் உண்டு. எதுவாக இருந்தாலும் இதற்கும் 2013 இல் நடக்கும் முந்நீர் விழவுக்கும் என்ன தொடர்பு? அதே மன்னன் தான், 

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணி…

….எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் என” 

பசுக்களும், பசுவைப் போன்ற குணமுடைய பார்ப்பனர்களும், பெண்களும், நோய் உடையோரும் கேளுங்கள். எம் அம்புகள் விரைவாகப் பாய உள்ளன. பாதுகாப்பான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று அறிவுறுத்திப் போர் புரியும் அறநெறியாளனாம். அதே பாடலில் கூறப்பட்டுள்ளது. மேலும், புறநானூற்றில், இந்தப் பாண்டிய மன்னனைப் பற்றியே இன்னொரு பாடலும் உள்ளது. 

“நற்பனுவல் நால்வேதத்து

அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை

நெய்மலி ஆவுதி பொங்கப் பன்மாண்

வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி

யூபம் நட்ட வியன்களம் பலகொள்”

உன்னுடன் போர்புரிந்து அழிந்தவர் எண்ணிக்கை அதிகமா? நான்கு வேதங்களின்படி நீ நடத்திய வேள்விகள், யாகங்கள் அதிகமா? என முடிகிறது பாடல். மிக மிக அதிகமாக யாகங்கள் நடத்தி பார்ப்பனர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்ததால்தான் அந்த மன்னனுக்கு பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பெயரே வந்துள்ளது. அப்படிப்பட்ட சிறந்த பசுநேசனும், பார்ப்பன அடிமையுமாகத் திகழ்ந்த மன்னன் நடத்திய விழாதான் இந்த முந்நீர் விழவு. அவன் நடத்திய கடல்விழாவுக்கும், 2013 இல் தண்ணீருக்காக அக்கறையுடன் கருத்தரங்கு நடத்துவதற்கும் எந்தத் தொடர்புமில்லை. இவ்வுலகில் நீரை பாதுகாத்தவர்களின் பெயர்கள் நிலைக்குமென்றும் அவ்வாறு செய்யத் தவறியவர்களின் பெயர்கள் நிலைக்காது என்றும் குடபுலவியனார் கூறியுள்ளதாக இவர்கள் கூறும் புறநானூற்றின் 18, 19 ஆம் பாடல்களின் வரிகள், 

“முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

பரந்து பட்ட வியன் ஞாலம்

தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:

ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!”... - புறம்.18

 

“இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்

தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து,

மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்.

நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!”... – புறம், 19 

மேற்கண்ட இரண்டு பாடல்களிலும் முந்நீர் என்றும், இமிழ்கடல் என்றும் கடலைத் தான் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் முந்நீர் விழவு என்பது சங்ககால மன்னர்கள் நீர்நிலைகளைப் பாதுகாக்க நடத்திய விழா என எங்கும் பதிவுகள் இல்லை. 

பாரம்பரியமான பெயர், சங்க இலக்கியத்தில் வரும் விழா என்பதற்காக இப்பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும். மற்றபடி வேறெந்தப் பூணூலும் பூவுலகுக்குப் பின்னால் இல்லை என நம்பத்தான் விரும்புகிறோம். ஆனால் அழைப்பிதழின் ஒவ்வொரு வரிகளும், படங்களும் எமது நம்பிக்கைகளைத் தகர்க்கத் தொடங்குகின்றன. 

பாரம்பரிய உணவு விருந்து, இயற்கை உணவுத்திருவிழா என்ற பெயரில் பார்ப்பன – ஆதிக்க ஜாதிகளும் ஏற்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைக்குத்தல் அரிசி, மண்பானை சமையல் என வர்ணாசிரமப் பாரம்பரியத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். பாரம்பரியம் என்ற சொல்லின் பயன்பாடே ஒரு தீண்டாமை வன்கொடுமைக் குற்றம்தான். ஜாதி ஆதிக்கவாதிகளுக்கு அவர்களின் பாரம்பரியமும், இயற்கையோடு இயைந்த கிராம வாழ்க்கையும் பெருமை மிக்கதாகவும், சுகமானதாகவும் இருக்கலாம். ஆனால் கிராமங்களில், வாழும் இடமே தனியாக சேரி என ஒதுக்கப்பட்டு, ஊர்த்தெருக்களில் நடக்க முடியாமல், பொதுக்கோவில்களில் வழிபட முடியாமல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் கூடப் பிடிக்க முடியாமல், செத்த பின்னும் தனிச்சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அனைத்து ஜாதியையும் சேர்ந்த பெண்களுக்கும் உங்கள் இயற்கை - பாரம்பரியக் கனவு எப்படி ஏற்புடையதாக இருக்கும்? 

சென்ற ஆண்டு நடந்த ஐந்திணை விழாவில்கூட மண்பானைகளில் இயற்கை உணவுகளைப் பார்த்தோம். இயற்கை ஆர்வலர்கள் பலரும் சுற்றுச்சூழல் கேட்டிற்கு எதிராக இதுபோல மண்பாண்டங்கள் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். மலம் அள்ளுவது – குப்பை அள்ளுவது – செத்த மாட்டைப் புதைப்பது – சாக்கடைகளைச் சரிசெய்வது – சாக்கடை ஓரங்களில், சேரிகளில் வாழ்வது என இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் சுற்றுச் சூழல் கேட்டிலேயே பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்களே, அவர்களது வாழ்க்கை, சுகாதாரமாக, சூழல் கேடுகளால் பாதிக்காத வண்ணம் வாழ எந்த சுற்றுச்சூழல்காரர்களும் இதுவரை எந்த நடவடிக்கைகைளையும் எடுக்காதது ஏன்? 

மண்பானைகள் பயன்படுத்தப்படும்வரை மண்பாண்டங்கள் செய்யும் குயவர்கள் வேறு தொழிலுக்குப் போக மாட்டார்கள். தற்காலிகமாக அழிந்துவிட்ட குயவர்களின் குலத் தொழில் இந்த பாரம்பரியக் காதலர்களால் மீண்டும் தூசிதட்டப்படுகிறது. மீண்டும் குயவர்களைக் குயவர்களாவே வைத்திருக்கும் முயற்சியே இது. குலத்தொழில்களை விட்டெறிந்து, வேறு தொழில்களில் ஈடுபட்டு, உழைத்து, பொருளாதாரத்தில் ஓரளவு உயர்ந்துவிட்ட தலித் மக்கள்மீது தருமபுரியிலும், பரளிபுதூரிலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நடத்திய தாக்குதல்களுக்கும் இந்த இயற்கை – பாரம்பரிய உணவுக்கூட்டத்தாரின் நடவடிக்கைகளுக்கும் என்ன வேறுபாடு? 

அதைவிடக் கொடுமை என்னவென்றால், இவர்களது பாரம்பரியத்தைக் காட்ட ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு வயதான பெண், ஜாக்கெட் போடும் வயதைக் கடந்த ஒரு மூதாட்டி, உலக்கையும் உரலுமாக, உங்களின் கைக்குத்தலரிசிச் சமையலுக்காக நெல் குத்திக்கொண்டு இருக்கிறார். மற்றொருவர் முறத்தில் புடைத்துக் கொண்டும், நேம்பிக் கொண்டும் இருக்கிறார். முறத்தில் புடைத்துக் கொண்டிருப்பவருக்கு வெள்ளை ரவிக்கை அணிவித்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மனுசாஸ்திரம் பெண்களுக்கு சமையலையும், வீட்டு வேலைகளையும்தான் கடமைகளாகக் கட்டளையிட்டது. அதைத்தான் 2013 ஆம் ஆண்டிலும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வழிமொழிந்து பேசுகிறார். அதே பெண்ணடிமைக் கருத்தை - பார்ப்பன மேலாண்மையை நிறுவும் மனுசாஸ்திரக் கருத்தை, பூவுலகின் நண்பர்களும் மறைமுகமாகத் திணிப்பது ஏன்?  வெள்ளை ரவிக்கையையும் அணிய வைத்திருக்கிறீர்களே- இந்த வெள்ளை ரவிக்கைகள் ஒழிய வேண்டுமென திராவிடர் இயக்கம் பட்டபாடுகளை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். 

இப்போதுதான் பெண்கள் சமையலறைகளை விட்டு வெளியேற நினைக்கிறார்கள். உலக்கையையும், ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும் விட்டு மிக்சிக்கும், கிரைண்டருக்கும் மாறியதற்கே ஒவ்வொரு வீட்டிலும் நடந்த புரட்சிகள், போராட்டங்கள் கொஞ்சமல்ல. ஒரு சிறிய மாற்றம்தான். அதற்கே சுமார் 20 வருடங்கள் கடந்துவிட்டன. தற்போது ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது, வாரத்தில் ஒரு நாளாவது சமையலறையை விட்டு வெளியேறி வருகிறாள். இந்த மாற்றம் பூவுலகிற்கு வேண்டாமா? பாரம்பரியத்தைத் தேடி ஓடினால் கிடைப்பது அடிமைத்தனமாகத்தான் இருக்கும் என்பதற்கு உங்கள் படத்தைவிட வேறு ஆதாரம் இருக்க முடியுமா? கடைசி நேரத்திலாவது அந்தப் படத்தை மாற்றி வெளியிடுவீர்கள் என நம்புகிறோம். இந்த நிகழ்வுக்குத் துணையாய் நிற்கும் பெண்ணியலாளர்கள் சுட்டிக் காட்டுவார்கள் என்றும் நம்புகிறோம். 

இந்த உணவுத் திருவிழாவில் நாட்டுக்கோழிக் குழம்பு கிடைக்குமாம். ஏன் பிராய்லர் கோழி கிடைக்காதா? பிராய்லர் கோழி என்பது கலப்பினக்கோழி. அதனால் கிடைக்காது. கோழியிலேயே கலப்பை ஏற்காதவர்கள் மனிதரிலே எப்படி கலப்பை அனுமதிப்பீர்கள்? இப்போது கிடைப்பதே இவர்கள் கூறும் கருத்துப்படி மிகச் சுத்தமான நாட்டுக்கோழிகள் அல்ல. பாரம்பரியக்காரர்களின் மொழியிலேயே சொல்வதானால் உண்மையான ஜாதிக்கோழிகள் அல்ல. 2000 வருடத்துக்கு முன்பு சங்க இலக்கியக் காலங்களில் வாழ்ந்த கோழி இனங்களா இப்போது கிடைக்கின்றன? எத்தனையோ மரபணுக்கள் கலந்த கோழிகள்தான்  தற்போது நாட்டுக்கோழிகளாகக் கிடைக்கின்றன. பிறகென்ன பிராய்லர் கோழிகளின் மேல் கோபம்? பொறித்த கடல் மீன் கிடைக்குமாம். கடல்மீனில் இன்னும் கலப்பினம் உருவாகவில்லை. பார்ப்பனர்களுக்கும் சிக்கல் இல்லை. அவர்களுக்கு அது கடல்புஷ்பமாயிற்றே. 

திண்ணும் கோழியிலே, உண்ணும் அரிசியிலே, கத்திரிக்காயிலே கலப்புக் கூடாது என்று போராடும் கவுண்டர்களும், தேவர்களும், வன்னியர்களும்தான் திருமணத்திலும் கலப்பு கூடாது என்கின்றனர். தமிழ்நாட்டில் கத்திரிக்காயில் கலப்புகூடாது என போராடிய பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர்கள் டாக்டர் இராமதாசும், அன்புமணியும் தான் கலப்புத் திருமணம் கூடாது எனவும் கூச்சலிடுகின்றனர். நாட்டுக்கோழி, ஜாதிக்கோழி, நாட்டுநாய், ஜாதிநாய் என்று பறவைகளிலும், விலங்குகளிலும் உயர்வு தாழ்வு கற்பித்து வாழும் கிராமத்துப் பண்ணையார்களின் மனப்பாங்கு பூவுலகிற்குத் தேவையா? 

உலக அளவிலான விவசாயச் சந்தையை குறிவைத்து, மான்சான்டோ போன்ற கம்பெனிகள் நடத்தும் வியாபார அடிப்படையிலான மரபணு மாற்ற விதைகளை எதிர்க்க வேண்டும். ஆனால் சென்னையிலேயே செயற்கை இரத்தத்தையே உருவாக்கிவிட்ட இந்த நாளிலும் கலப்போ, மரபணு மாற்றமோ கூடாது, அந்த மரபணு மாற்ற அறிவியலே வேண்டாம் என்ற ரீதியில் பயணிப்பது பார்ப்பனீயம். 

கோழியில் நாட்டுக்கோழிக் குழம்பு கிடைக்கும் என அறிவித்துவிட்டீர்கள். கோழியில் நாட்டுக் கோழிக் குழம்பைப் போல, மாட்டிலும் சுத்தமான, கலப்பில்லாத, நாட்டுப் பசுமாட்டு வறுவல் போட்டிருக்கலாமே? இந்த ஒன்றில் மட்டும் உங்கள் பாரம்பரியத்தைக்கூட நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சங்க இலக்கிய காலத்திற்கு இணையாக இருந்த வேத காலத்திலிருந்து யாகங்களில் சுத்தமான ஜாதி மாடுகளைப் பலியிட்டு, தின்று தீர்த்தவர்கள் தானே பார்ப்பனர்கள்? கிடைக்குமா? மறுஅறிவிப்பு வருமா? இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் எம்மைப் போன்ற தோழர்கள் முயற்சி எடுப்பார்களா? நாட்டுப் பசுமாட்டு வறுவல் உங்கள் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் கிடைக்குமா? கிடைக்குமென்றால் இந்த விழாவை வரவேற்கலாம், பாராட்டலாம், துணை நிற்கலாம். விழவுக்குப் பெயர் வைப்பதில் தொடங்கி, தலைப்புக்கே தவறான விளக்கம் கொடுத்து, பெண்ணடிமைத் தனத்தைப் பாரம்பரியமாகக் காட்டி - ஜாதியையும், மதத்தையும் கட்டிக் காக்கும் மற்றொரு முயற்சியே இந்த முந்நீர் விழவும் பாரம்பரிய உணவுத் திருவிழாவும் என்று புரிந்து கொள்ளும் நிலைக்கு எங்களைத் தள்ள வேண்டாம் என தோழமையுடன் கேட்கிறோம். 

சுயமரியாதை இயக்க மாநாடென்றால் அங்கு பெரியார் தனது தொண்டர்களுக்கு மாட்டுக் கறியையும், பன்றிக் கறியையும்தான் பரிமாறினார். இந்து மாட்டுக்கறியைத் தொடமாட்டான்; இஸ்லாமியன் பன்றிக்கறியைத் தொடமாட்டான். அந்த இரண்டு கறியையும் நாடார்களின் கையால், அதாவது, பார்க்கவே கூடாதென்று அடக்கப்பட்டிருந்த நாடார் கையால் சமைத்து, தொடக்கூடாதென்னு அடக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் கையால் ஆதிக்க ஜாதிகளில் பிறந்தவர்களுக்குப் பரிமாறினர் பெரியார். அதுதான் உணவுப் புரட்சி. அதுதான் உணவுத் திருவிழா. இதுபோன்ற இயற்கை - பாரம்பரியத்துக்கு மாற்றாக திராவிடர் உணவுத் திருவிழாக்களை நடத்த முயற்சியுங்கள்! திராவிடர் இயக்கங்கள் உங்களுக்குத் துணைநிற்கும்! 

- அதிஅசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It