“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்.” - திருக்குறள்

அறிவியற்கலை வளர்ச்சியுடன் இன்றைய உலகு அடர்ந்து படர்ந்து பின்னிப் பிணைந்து ஒன்றிக் கிடக்கின்றது. அறிவியலைத் தெளிவாக எடுத்துக் கூறவுங் கற்பிக்கவும் ஏற்ற மொழியே, இன்றைய சமுதாயத்துக்கு வேண்டற்பாலது. அண்மைக் காலம் வரை, தமிழ் மொழி இவ்வியல்பைப் பெறும் வாய்ப்புக்குன்றி வளர்ச்சியின்றி நின்றது. மேனாட்டிலே யாதொரு தடங்கலுமின்றி வேகமாக வளரும் அறிவியற் கலையைச் செவ்வனே எடுத்துக்கூறும் வளம்பெற்றுத் தமிழ்மொழி வளர்ச்சியுறல் வேண்டுமாயின், மூன்று முக்கிய துறைகளில் நமது கவனஞ் செலுத்தப்படல் வேண்டும். அவையாவன,

1. கலைச்சொல்லாக்கம் 2. மொழிபெயர்ப்பு 3. விஞ்ஞானத் தமிழ்

இவற்றுள், கலைச்சொல்லாக்கம், மொழி பெயர்ப்பு ஆகிய இரண்டு துறைகளிலும் கிறீன் வைத்தியர் கண்ட அனுபவங்களும், கூறிய கருத்துகளும் இன்றைய சமுதாயம் ஊன்றி கவனித்து உள்ளத்திற் கொள்ள வேண்டியன என்று உறுதியாகக் கூறலாம். முதற்கண், கலைச்சொல்லாக்கம் பற்றிய கருத்துகளைக் கவனிப்போம்.tombகலைச்சொல்லாக்கமும் அதற்கென ஒரு மகாநாடு தேவையா, இல்லையா என்பது பழைய பிரச்சனை. வேற்றுமொழிச் சொற்கள் வந்து சேரும் போது அவற்றைச் சீரணித்துக் கொள்ளல் வேண்டுமென்பது மற்றொரு கருத்தாகும். சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் அறுபதுக்கு மேலான அறிஞர்கள் நான்கு ஆண்டுகளாக முயற்சியெடுத்து ஒன்பது கலைத்துறைகளைச் சேர்ந்த பதினாயிரம் சொற்களைத் தமிழிற் சேர்த்தபொழுது, சிலர் அம்முயற்சியைப் பரிகாசஞ் செய்தனர்! ‘பாஷை உடல்; விசயம் உயிர்’ என்று கூறிய இராஜாஜியும் இம் முயற்சியில் ஈடுபட்டாரேயெனச் சிலர் ஆச்சரியப் பட்டனர்!

பொருளே உயிர் என்பது உண்மை. மொழி, உடல் என்பதும் உண்மை. பொருளைத் தான் மொழியின் மூலம் எடுத்துக் கூறுகிறோம். வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் உயிர் எத்துணை அவசியமோ, உடலும் அத்துணை அவசியந்தான். ஊனமில்லாத உடல் நமக்கு அவசியமில்லை என்று எவருங் கூறத் துணிய மாட்டார்கள். ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவார்’ என்பது திருமந்திரம். இம் மந்திரத்தை வெல்லுந் தந்திரம் எதுவும் தமிழ் வளர்ச்சிக்கு உயிர் அளிக்க மாட்டாது.

தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் விஞ்ஞானங் கற்பித்தல் வேண்டுமென 1955ஆம் ஆண்டிலே இலங்கை அரசினர் தீர்மானித்ததைத் தொடர்ந்து, தன்மொழி அலுவலகத் தமிழ்க் கலைச் சொற்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கலைச் சொற்களை அமைக்குங்கால், தன்மொழி அலுவலகத்தினர் திட்டமான விதிமுறைகள் சிலவற்றைக் கையாளுகின்றனர்.

ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலிருந்து பெயர்ச்சொற்களானவை தமிழோசை சிதையாமல் எடுக்கப்பட்டன. புதிய சொற்களும் இலக்கண விதிகளைத் தழுவியே ஆக்கப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைச் சேர்த்து ஒரு சொல்லாக்கும்போது முதற் பொருள் பிறழா வண்ணம் சொற்கள் சுருக்கப்பட்டன. புதிய சொற்களை ஆக்கும்போது பிற மொழிகளிலிருந்து முதற் கருத்தே மூலமாகக் கொள்ளப்பட்டது. சென்னை அரசினர் வெளியிட்ட சொற்றொகுதியும் வேண்டிய இடத்துப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், கிரந்த எழுத்துக்கள் தவிர்க்கப்பட்டன.

தென்னிந்தியத் தமிழர் மத்தியிலே ஒட்சிகன் வாயுவைக் குறிக்கும் கலைச்சொல், ஆக்ஸிஜன் ஆகும். சென்னை அரசினர் வெளியிட்டுள்ள கலைச் சொற்றொகுதியில் இச்சொல் தரப்பட்டுள்ளது. சென்னையில் அரசினர் வெளியிட்ட கலைச் சொற்றொகுதியோ, இலங்கை முயற்சிக்குப் பதினைந்து ஆண்டுகள் முந்திய தீர்மானத்தைத் தொடாந்து ஆக்கப்பட்டதாகும்.

இந்திய நாட்டின் பல்வேறு மொழிகளிலும் விஞ்ஞானத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் கலைச் சொற்களை அமைப்பதற்கு ஒரு பொதுக் கொள்கையை வகுக்கவென, 1940ஆம் ஆண்டிலே இந்திய அரசினரால் ஒரு பொதுக்குழு நிறுவப்பட்டது. சீரான முறையில் விஞ்ஞான தொழில் நுட்பக் கலைச் சொற்களை அமைப்பதற்குத் தென்னிந்திய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் உப குழு நியமிக்கும்படி இப் பொதுக்குழு ஆலோசனை கூறியது. இக்குழுவில் இலங்கையைச் சார்ந்த விபுலானந்த அடிகளும் ஒருவர் ஆவார். இவ் உப குழுக்களின் தீர்மானப்படி, 1947ஆம் ஆண்டிலே சில கட்டுப்பாடுகளுக்கும் விதிகளுக்கும் அமையத் தமிழ்க் கலைச்சொற்கள் ஆக்கப்பட்டன. ஆங்கிலச் சொல்லின் ஓசை கெடாமல் தமிழ்ப்படுத்துவதோடு வேண்டிய இடத்திற் கிரந்த எழுத்துகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

சொற்களைத் தேவைக்கு ஏற்றவண்ணம் ‘சீரணித்து’க் கொள்ளல் கூடும் என்று விட்டு விடாது, திட்டமான விதிகளை வகுத்து, அவற்றுக்குமையச் சொற்களை அமைத்துக் கோடல் மிக நல்ல முயற்சியேயாம். ஆனால், ஈழத்துக் கலைச்சொற்கள் ஈழ நாட்டிலே மட்டும் பிரயோகிக்கப்படுகின்றன. சென்னை அரசினரின் கலைச் சொற்கள் தமிழகத்திலே மட்டும் பிரயோகிக்கப்படுகின்றன. இரு நாட்டுத் தமிழ் அறிஞர்களும் இணைந்து செயலாற்றும் வாய்ப்பு ஏற்படாத காரணத்தால், கலைச்சொற்களில் ஒருமைப்பாடில்லை. ஆங்கிலப் பதத்தை ஓசை கெடாமற் தமிழுருவம் கொடுப்பதிற்கூட ஒருமைப் பாடில்லை. அரசாங்க ஊழியர்கள் அலுவலகங்களில் இருந்து இந்த ஒருமைப்பாட்டைக் காணுதல் நடைமுறையில் ஏற்படக்கூடியதுமல்ல!

1995 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய முயற்சியில் அறிவியல்-தொழில்நுட்பத் துறைகளில் விரைந்து வளர்ந்து வரும் துறையாகக் கணிப்பொறி அறிவியல் விளங்குகிறது. இதன் முக்கியத்துவம் கருதியும் அதன் பயன்பாடு தமிழ்ச் சமுதாயத்திற்கு முழுவதும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 1994-ஆம் ஆண்டு ஆகஸ்டு 5-6 ஆகிய நாட்களில் “தமிழும் கணிப்பொறியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கத்தின் பயனாகச் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று, தமிழில் கணிப்பொறித் துறைக்கெனக் கலைச்சொல் அகராதி ஒன்றை உருவாக்குவதாகும். இதற்கென வல்லுநர் குழு ஒன்றை, அண்ணா பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் நியமித்தார்.

அகராதி உருவாக்கம்

வல்லுநர் குழு 1995-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. அதில் 12 உறுப்பினர்கள் இருந்தனர். அக்குழுவிற்குத் தலைமை ஏற்கும் பொறுப்பு முனைவர் சீனிவாசனுக்கு அளிக்கப்பட்டது. இக்குழு ஏறக்குறைய மாதம் ஒருமுறை கூடி மூன்றாண்டுகளில் ஒரு அகராதியை உருவாக்கியது. கணிப்பொறி அறிஞர் Donald D.Spencer எழுதியுள்ள The Illustrated Computer Dictionary என்னும் நூலை மூல அகராதியாகக் கொண்டு கலைச்சொல்லாக்கப் பணி முடுக்கிவிடப்பட்டது. கருத்துச் செறிவுள்ள சொற்களைப் போதிய அளவில் உருவாக்கும் வல்லுநர்கள் குழு ஈடுபட்டது. மொழி வல்லுநர்கள் பொன். கோதண்டராமன் (சென்னைப் பல்கலைக் கழகம்), சா. கிருட்டிணமூர்த்தி (தமிழ்ப் பல்கலைக் கழகம்) ஆகியோரின் கருத்துரைகளும் ஏற்றுக்கொள்ளப் பட்டன. கருத்தொற்றுமை அடிப்படையிலும்

இயன்றளவு கலைச் சொற்களில் எளிமை புகுத்தியும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் அகராதி ஒன்று உருவாக்கப்பட்டது. இவ்வகராதியில் 4000-க்கும் மேற்பட்ட கணிப்பொறிச் சொற்கள்இடம்பெற்றுள்ளன. இவற்றுள் பல கூட்டுச் சொற்களாக இருப்பினும் அவை விரைவாகத் தேடுவதற்கு உதவும் நோக்கில் அகராதியில் சேர்க்கப்பட்டன. விளக்கம் தரும் அகராதியாகத் தொடங்கிய பணி, காலத்தின் அருமை கருதி முதற்கட்டமாகக் கலைச்சொற்களை மட்டும் தாங்கி வெளிவந்தது.tamil in srilanka and in tn

இலங்கைப் பதிவு

இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக, இவ்வகராதி மேலும் செழுமைப்படுத்தப்பட்டு ஜூலை, 2000 ஆண்டில் இலங்கை அரசு கரும மொழிகள் ஆணைக் குழுவால் தகவல் தொழில்நுட்பக் கலைச்சொல் அகர முதலி எனப் பெயரிடப்பட்டு வெளிவந்தது. திரு. சு.சிவதாசன் தலைமையில் 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக அது செயல்பட்டது. இவ் விரிவாக்கப்பட்ட அகரமுதலியில் 6000-க்கும் மேற்பட்ட சொற்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு, இலங்கை ஆகிய நாட்டு அறிஞர்களின் கூட்டு முயற்சியினால் வெளிவந்த கலைச்சொல் வெளியீடு என்ற பெருமை இதற்குண்டு.

இக்காலக் கட்டத்திற்குள் அண்ணா பல்கலைக் கழகம் “கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி”யின் திருந்திய பதிப்பை வெளியிட்டது. தமிழ்நாடு, இலங்கை அறிஞர்களுக்கு உடன்பாடு காணாத விடத்தில் சொற்கள் இரண்டு முறைமைகளில் ஒழுங்கமைக்கப்பட்டன. அவை இலங்கை வழக்கு, தமிழ்நாட்டு வழக்கு எனக் குறிக்கப்பட்டன. அகராதியில் இடம்பெற்றுள்ள இத்தகைய சொற்கள் திரட்டப்பட்டு மேலே தரப்பட்டுள்ளன.

சில நோக்கீடுகள்

அடிப்படைக் கலைச்சொற்கள் சிலவற்றில் கருத்தொற்றுமை இல்லாதது தெரிய வருகிறது.

காட்டாக computer என்ற சொல்லுக்குக் “கணிப் பொறி” என்ற சொல்லைத் தமிழ்நாட்டு வழக்காகவும் “கணினி”என்ற சொல்லை இலங்கை வழக்காகவும் காண்கிறோம். கணினி என்ற பயன்பாட்டையும் சிலர் ஆள்வதைப் பார்க்கிறோம். இச்சொல்லில் வரும் ணகர, னகரப் பயன்பாட்டில் எழுத்துப்பிழை நேரும் சாத்தியக்கூறுகள் மிகுதி என்பதால் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அகராதியில் “கணிப்பொறி” என்ற சொல் தெரிவு செய்யப்பட்டது. இதேபோல calculator என்ற சொல்லுக்குக் கணிப்பான், கணிப்பி என்ற இரண்டு வேறுபட்ட கலைச்சொற்கள் படைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இது விரும்பத்தக்கதா? ஒருமைப்பாட்டிற்கான விடிவுகள் என்ன? (சு.சீனிவாசன்.2011.பக் 109)

இலங்கையில் 1955 ஆண்டின் தன்மொழியலுவலகப் பணி

இலங்கை கலைச்சொல்-தூய தமிழே

தமிழகத்தில் வடசொல்ஆங்கிலம் கலந்த நிலையில் புத்தகம் வெளிவந்த காலத்தில் இலங்கையில் நூல்கள் தூய்மையான தமிழில் வெளிவந்தன. தொடக்கத்தில் தூய தமிழ்க் கலைச்சொற்களை இலங்கை மருத்துவர் சின்னத்தம்பி நூல்களில் பார்க்கும் பொழுது சில சமயங்களில் பொருள் மாறுபட்டு எளிமை, இனிமையற்றுக் காணப்படுகிறது. அறிவுப் பரப்பு முதல் நிலையிலும் மொழி உணர்வு இரண்டாம் நிலையிலும் இருந்தன. பிறகு 1932-1937 இல் வெளிவந்த இம்மருத்துவர் நூல்களில் மொழி உணர்வுக்கு முதன்மை தரப்படுகிறது.

இலங்கைக் கலைச்சொல் முயற்சி

1955-இல் இலங்கையில் ‘தன்மொழியலுவலகம்’ ஒன்றை இலங்கை அரசு தொடங்கியது. துறை வாரியான கலைச்சொற்களைப் பகுத்து வெளியிடும் பெரும் பணியை இவ்வலுவலகம் மேற்கொண்டது. 1956-முதல் மேனிலைப் பள்ளிகளில் பெரும் பான்மையான பாடங்களைத் தமிழ், சிங்களம் வழிக் கற்பிக்க வேண்டும் என்னும் முடிவை இலங்கை அரசு மேற்கொண்டது. இலங்கை அரசின் கொள்கைக்கு ஃபிஷ்கிறீன் கலைச்சொல்லாக்க முயற்சிகள் உறுதுணை புரிந்தன. அவ்வகையில் இலங்கை அரசின் வாயிலாக வெளிவந்த கணிதத் துறைப் பட்டியல் குறிப்பிடத்தக்க கலைச் சொல்லாக்க முயற்சியாகும்.

இலங்கை அரசு மொழியலுவலகம்

இலங்கை அரசு மொழியலுவலகம், அரசு நிருவாகப் பதவிப் பெயர்களைத் தமிழில் வெளியிட்டது. இதில் ஏறத்தாழ 3000 கலைச் சொற்கள் இடம் பெற்றன.

இலங்கைக் கலைச்சொல்லாக்கம்

இலங்கையின் முதல் கலைச்சொல்லாக்க முயற்சியில், ஒருமைப்பாடு முதன்மைப்படுத்தப் பட்டது. பல ஆங்கிலச் சொற்களுக்கு எழுத்துப் பெயர்ப்புகள் தரப்பட்டன. ‘scope’ என்னும் சொல்லை ‘காட்டி’ என்னும் பொருளில் கையாண்டனர். Telescope - தொலைக்காட்டி, barascope - பாரங்காட்டி, chromoscope - நிறங்காட்டி எனக் கொண்டனர்.

தமிழ் வழக்கில் ‘scope’ என்பது நோக்கி, காட்டி என்னும் இரு சொற்களிலுமே குறிக்கப்படுகிறது. Telescope - தொலைநோக்கி, Microscope - நுண்ணோக்கி, kalaidosope - பன்னிறங்காட்டி என்பது கருதத்தக்கது.

தமிழ் வழக்கிற்குரிய - பண்பாடு மிக்க மாறுபட்ட, பண்பட்ட நெறியை இலங்கையில் நடைமுறைப் படுத்தப்படும் கலைச்சொற்கள் பின்பற்றியுள்ளன. தமிழகத்தில் ‘Raman Effect’ ‘ராமன் விளைவு’ என்றும், இலங்கையில் ‘ராமர் விளைவு’ என்றும் ‘அர்’ விகுதி பெறுகிறது.

இலங்கைக் கலைச்சொல்லாக்க அறிஞர்கள்

கலைச்சொல்லாக்க நெறிக்கு வித்திட்ட இலங்கை அறிஞர்களாகப் பலர் பட்டியலிடப்பட்டுள்ளனர். பேராசிரியர் க.கணபதி பிள்ளை, க.பொ. இரத்தினம், கி.நடராசர், வ.பொன்னய்யா, த.அரியரத்தினம், அ.வி.மயில்வாகனம், கா.குலரத்தினம், ஆ.பொ.கந்தசாமி, டாக்டர் மோ. தம்பைய்யா, கே.நேசய்யா, தா.வே.அரியநாயகம், சே.தனிநாயகம், செல்வி க.மதியாவரணம், கி.இலட்சுமணன், வே.பேரம்பலம் ஆகியோர் அனைவரும் ஏற்கத்தக்க கலைச் சொல்லாக்கத் தளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் கூட்டு முயற்சியாலும், கடும் உழைப் பாலும் எண்ணற்ற கலைச்சொற்கள் தோற்றம் கண்டன. கலைச்சொற்களின் பண்பும் பயனும் சிதையாவண்ணம், அவற்றைச் செம்மைப்படுத்தி வழங்கும் பணியைத் திறனாய்வாளர்கள் நிகழ்த்தி வருகின்றனர். இவாகள் தரும் கலைச்சொல்லாக்க நெறிகளைப் பின்பற்றிப் பலர் கலைச்சொல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“கலைச்சொற்களை உருவாக்கிவிட்டால் மட்டும் சிக்கல் தீர்ந்துவிட்டதாக எண்ணிவிடலாகாது. இவற்றை வாக்கியங்களில் பொதிந்து நூல்களை எழுதும்போது ஏற்படும் இடர்களைக் களைய வேண்டி வரும். அவற்றிற்குரிய நெறிமுறைகளையும் காணவேண்டும். இங்கு மரபிலக்கணத்திற்கு உட்பட்டு எழுத வேண்டியிருக்கும்பொழுது சில இடர்கள் ஏற்படும். சில சமயம் மரபிலக்கணத்திலிருந்தும் மாறுபட்டும் எழுத வேண்டியிருக்கும். இதற்குரிய நெறிமுறைகளைக் காணவேண்டும்.

இலங்கையில் கலைச்சொல்லாக்க முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வந்தன என்றாலும் அரசு ஆதரவுடன் 1950 ஆம் ஆண்டில்தான் முழு அளவில் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, அரசு சார்பில் வெளியிடப்பட்ட 38 தொகுதிகளில் 7 தொகுதிகள் மருத்துவம் தொடர்பானவை. அவை பின்வருமாறு:

1. உடற்றொழியலும் உடலியலும் (physiology & Hygiene) -1957

2. பிறப்புரிமையியல் குழியவியல் கூர்ப்பு (Genetics-Cytology Evolution) -1965

3. உடற்றொழியலும் உயிரி ரசாயனவியலும் (Physiology & Biochemistry) -1965

4. உடலமைப்பியலும் இழையவியலும் (Anatomy & Histology) -1965

5. மருந்தியல் விஞ்ஞானம் (Pharmacology) -1965

6. நோயியல் (Pathology) -1965

7. பொது உடனலம் (Public Health) -1965 இக்கால கட்டத்தில் பேராசிரியர் சின்னத்தம்பி 1949லிருந்து 1980 வரை இலங்கையில் 5 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். இதில் ஒன்று மொழிபெயர்ப்பு நூலாகும்.

இவற்றில் வட சொற்களுக்குப் பதிலாக நல்ல தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன என்றாலும் நல்ல தமிழில் மொழித் தூய்மை என்ற பொருளில் பேசுவதற்கு அல்லது எழுதுவதற்குக் கூச்சப்படும் சில சொற்களும் இடம்பெற்றுள்ளன.

எ.கா. kidney tray -குண்டிக்காய் தட்டம்

மேலும் கிரந்த எழுத்துக்கள் முற்றிலும் தவிர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

Syring -சிறுங்கி

Jam -யாம்

Jelly -யெல்லி

Paris -பாரிசு

Jappan - யப்பான்

ஆங்கில வார்த்தைகளை ஒலிபெயர்ப்பு செய்கையில் Typhoid காய்ச்சல் என எழுதப் பட்டுள்ளது. இதேபோல் cholera கோதாலி நோய் என்றும், Rabies இரேபிசு என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சிறுநீருக்கு ஊறுநீர் என்றும், plague பிளேக்கு, மகாமாரி என்றும் சொல்லப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாகக் கூற வேண்டுமெனில் கருத்துக்கு முதலிடம் கொடுக்காது மொழிக்கு இவர் முதலிடம் கொடுத்துள்ளார்.

இலங்கை கலைச்சொல்லாக்கக் கோட்பாடு

தமிழ்க்கலைச்சொல் பட்டியல்களின் முதல் தொகுதி “தூய கணிதமும் பிரயோக கணிதமும்” என்ற தலைப்பில் 1956இல் வெளிவந்தது. இத் தொகுதியின் முன்னுரையில் குழுவினர் பயன் படுத்திய கலைச்சொல்லாக்க நெறிகள் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு;

“தன்மொழியலுவலகத்தார் தமிழில் அச்சிட்டு வெளியிட்டிருக்கும் கலைச் சொற்றொகுதிகளில் இதுவே முதலாவதாகும்... ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலிருந்து பெயர்ச் சொற்களானவை தமிழோசை சிதையாமற் தற்பலமாக எடுக்கப்பட்டுள்ளன. புதிய சொற்களும் இலக்கண விதிகளைத் தழுவியேயாக்கப்பட்டன. ஒன்றிற்கு மேற்பட்ட சொற்களைச் சேர்த்து ஒரு சொல்லாக்கும் போது முதற்பொருள் பிறழாவண்ணம் சொற்கள் சுருக்கப்பட்டுள்ளன. புதிய சொற்களையாக்கும் போது பிறமொழிகளிலிருந்து முதற்கருத்தே மூலமாகக் கொள்ளப்பட்டது. சென்னையரசாங்கத்தாரின் சொற்றொகுதியும் பயன்படுத்தப்பட்டது. அத் தொகுதியிலும் பொருத்தமான சொற்கள் எடுத்தாளப் பட்டன. கிரந்தவெழுத்துக்கள் தவிர்க்கப்பட்டன. தக்கத் தமிழ்ச் சொல்லில்லாவிடத்து வடச்சொற் தற்பவமாக எடுத்தாளப்பட்டன. குறியீடுகள் மாற்றமின்றிப் பொருள் விளக்கத்தோடு வழங்கப் பட்டுள்ளன. குறுக்கல்களும் வேண்டிய விடங்களிற் தமிழிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. அ, இ, உ, எ, ஒ என்னும் உயிரெழுத்துக்களும் த, ப, ம, ந, ய, வ என்னும் உயிர்மெய்யெழுத்துக்களுமே புள்ளிகள், உறுப்புக்கள் முதலியவற்றைக் குறிக்க எடுத்தாளப்பட்டுள்ளன.”

தமிழ் மரபு இலக்கணங்கள் போற்றும் சொல் முதல் இறுதி வராத எழுத்துக்கள், மெய்மயக்கங்கள் பற்றிய விதிகள் இலங்கைக் கலைச் சொற்களில் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளன.

சொல் முதல் வராத எழுத்துக்கள்

மரபு இலக்கண விதிகளின்படி சொல்லுக்கு முதலில் வராத எழுத்துகளான ல, ர ஆகியவை களுக்கு முன்பாக இ, உ ஆகிய உயிர் எழுத்துக்களுள் ஒன்றைச் சேர்த்துக் கலைச்சொற்கள் ஆக்கப் பட்டுள்ளன. டகர மெய் மெய்யாக மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

ல Leclanche cell - இலக்களாஞ்சிகலம்

 Ling -இலிங்கு

ர Radiometal - இரேடியோவுலோகம்

Roman Steelyard - உரோமர் துலாக்கோல்

Uranium glass - உரேனியக் கண்ணாடி

‘ட’ வைத் தவிர்க்க, ‘த’ பயன்படுத்தப் பட்டுள்ளது

Tangent -தாஞ்சன்

Dram -திராம்

D-Layer -தீ-அடுக்கு

Tellurium -தெலூரியம்

என்பன தக்கச் சான்றுகளாகும்.

சொல் இறுதி வராத எழுத்துக்கள்

சொல் இறுதியில் வராத மெய்கள் தமிழ் மரபிற்கேற்ப இரட்டித்து முடிக்கப்பட்டுள்ளன. ‘க்’ ‘க்கு’ எனவும், ‘ட்’ ‘ற்று’ எனவும், ‘ட்’ ‘ந்து’ எனவும் இரட்டித்து முடிக்கப் பெற்றுள்ளன.

Parsec -பாசெக்கு

Acetaldehyde - அசற்றலிடிகைட்டு

Azurite - அசுரைற்று என்பன தக்கச் சான்றுகளாகும்.

சந்தி விதிகள்

தூய தமிழ்க் கலைச் சொல்லாக்குநர்களாக அறியப்பட்ட பா.வே.மா., செ.மா.த. சங்கத்தினர் ஆகியோரின் கலைச்சொற்களில் இடம் பெறாத சந்தி விதிகளின் பயன்பாடு, இலங்கைக் கலைச்சொற்களில் இடம் பெற்றுள்ளன.

Radiation induced transition - கதிர்வீசலாற்றூண்டப் பட்ட நிலைமாறல்

Deflection of beam - கற்றையின்றிரும்புகை

Medium of propagation - செலுத்தாலூடகம்

Tr. ansmitting Circuit - செலுத்துஞ்சுற்று

Bicycle Pump - சைக்கிட்பம்பி

Sine series - சைன்றொடர் என சந்தி விதிகளைக் கடைப்பிடித்துள்ளனர்.

மெய்மயக்கங்களும் கிரந்த எழுத்துக்களும்

தமிழ் மரபு இலக்கணத்தில் இல்லாத மெய்ம்மயக்கங்கள் இலங்கைக் கலைச்சொற்களில் இடம்பெறவில்லை. கிரந்த எழுத்துக்களின் பயன்பாடும் இக்கலைச்சொற்களில் அறவே இல்லை.

முன்னொட்டுகளும், பின்னொட்டுகளும்

இலங்கைக் கலைச்சொல்லகராதிகளில் homo, hetro, iso, epi, sub, super, hgynu, hyper, hygro, para ஆகிய முன்னொட்டுகளும் lysis, meter, grape, gram ஆகிய பின்னொட்டுகளும் சீர்மையாகப் பெயர்க்கப்பட்டுள்ளன. இலங்கைக் கலைச் சொற்களில் காணப்படும் இச்சீர்மையைத் தமிழகக் கலைச் சொல்லகராதிகளில் காணமுடியவில்லை என்பதனை இராதா செல்லப்பன் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

இலங்கைக் கலைச்சொல்லாக்க இயல்பு

centre - மையம்

circum centre - சுற்று மையம்

excentre - வெளி மையம்

incentre - உள் மையம்

instantaneous centre - கண மையம்

centre of curvature - வளைவு மையம்

centre of buoyancy - மிதப்பு மையம்

centre of intertia - சடத்துவ மையம்

centre of gravity - புவியீர்ப்பு மையம்

centre of mass - திணிவு மையம் (கலைச்சொற்கள், முதலாம் பகுதி, தூய கணிதமும் பிரயோக கணிதமும், இலங்கை, 1956)

வடிவம்

angle - பி கோணம்

(<) angle-adjacent - பி அடுத்துள்ள கோணம்

(அடு<) alternate - பி ஒன்றுவிட்ட கோணம் (ஒ.வி<)

கலைச்சொல் வெளியீடுகள்

tamil dictionary

கலைச்சொற்கள் மதிப்பீடு

இலங்கைக் கலைச்சொல்லாக்கக் குழுவினரின் கலைச்சொற்களில் காணப்படும் சீர்மை, தமிழ் மொழியில் வெளிவந்த கலைச்சொல் பட்டியல் எதிலும் காணப்படுவதில்லை. மொழி முதல், மொழி இடை, மொழி இறுதியில் வராத எழுத்துக்கள் பற்றிய மரபு இலக்கண விதிகளுக்கு உட்பட்டு கலைச்சொற்களை உருவாக்கியுள்ளனர். இக்குழுவினரின் பட்டியல்களில் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு அறவே இல்லை.

இலங்கைக் கலைச்சொல்லாக்கக் குழுவினரின் கலைச்சொல்லாக்கக் கோட்பாட்டைப் பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்:

உள்நிலையாக்க அடிப்படையில் கலைச் சொல்லாக்கம், மொழிபெயர்ப்புச் சொல்லாக்கம், எழுத்துப் பெயர்ப்புச் சொல்லாக்கம், மரபு இலக்கண விதிகளுக்குட்பட்டு கலைச் சொற்களை உருவாக்குதல்.

- டாக்டர் சு.நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்

Pin It