தமிழர்களுக்கு மொழி உணர்ச்சி அதிகம் என்பதாகப் பிற மொழியினர் கருதுகின்றனர்.

தமிழர்களுக்கு மொழி உணர்வே இல்லை என்பதாகத் தமிழிய உணர்வு சார்ந்த அறிஞர்களும் இயக்கத்தினர்களும் குறைபட்டுக் கொள்கின்றனர். இந்த இரண்டு கருத்துகளிலுமே உண்மை உண்டு என்றாலும் அதில் எது முழு உண்மை என்று அறிவதற்கு முன்பாகத் தமிழர்களுக்கு மொழி உணர்ச்சி தேவையா இல் லையா என்பது குறித்தும் அறிய வேண்டி இருக்கிறது. மொழி என்பதே கருத்துப் பரிமாற்றத்திற்குரிய ஒரு கருவிதான் என்ற அளவில் பேசப்பட்ட கருத்துகள் உண்டு.

ஒரு மொழியில் பிற மொழி கலப்பதை மறுப்பது 'தூய்மைவாதம்'. அது ஒரு மொழி வெறி என்பதான கருத்துகளும் உண்டு,

மொழி என்பது மாந்தனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி என்றளவோடு கருதிட முடியாது. கருவி அல்லது பொருள்களுக்குள் அது படைக்கப்பட்ட தேவையின் உள்ளடக்கம் மட்டுமே இருக்கும்.

ஆனால் மொழி அப்படி அல்லாது குமுகத்தின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் விரிந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. மொழிக்குள் வரலாறு இருக்கிறது. பண்பாடு இருக்கிறது. அறிவியல் இருக்கிறது. அரசியல் -பொருளியல் என அனைத்தும் இருக்கின்றன.

ஒவ்வொரு சொல்லும் அவை அனைத்தையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. ஒரு மொழியில் கலந்து விட்ட பிற மொழிச் சொல் கூட அந்த மொழிக்குரிய மக்களின் வாழ்நிலையை, அடிமை நிலையை, உரிமை நிலையைச் சுட்டிக்காட்டவே செய்யும். அரசு, அரசன்­ எனும் சொற்களின் முந்துநிலைகளில் அரைசு, அரைசன்-எனும் வளர்ச்சி நிலைவழித் தொடக்கக் காலங்களில் அதிகாரம் படைத்தவன்-மக்களை அடக்கி யிருந்த செய்தியைச் சொல்வதைக் காணலாம்.

'அராஜகம்' -எனும் பிறமொழிச் சொல் கொடுமை எனும் பொருளோடு நில்லாது அரசனுக்கு மாறான (அ+ராஜகம்) எனும் சொற்பொருளையும் கொண்டிருப்பதை உணரலாம் அதன் வழி அரசனுக்கு மாறானதே கொடுமையானது என்கிற கருத்தும், அரசனோடு உடன்பட்டிருப்பதே சரி என்றுமான வகையில் வந்தேறி ஆட்சியர்கள் வழி உருவாக்கப்பட்ட அச்சொல் பல வரலாற்று விளக்கங்களையும் தருகிறது. பிறமொழிச் சொற் கலப்பு என்பது பிற மொழியினரின் வந்தேறிய அதிகாரத்தாலும் ஊடுருவலாலுமே இங்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

தமிழில் சொற்கள் இல்லை என்பதற்காகப் பிற மொழிச் சொல்லைக் கடன் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிற வழக்கம் தமிழ் மொழிக்குரியதாக இல்லை.

இந்நிலையில், ஒவ்வெரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வகுப்பின் (வர்க்கத்தின்) அடையாளம் மட்டு மின்றி ஒரு காலத்தின், ஓரிடத்தின், ஒரு குலத்தின், ஓர் இனத்தின் எனப் பல்வேறு நிலைகளை உணரத் தக்க பின்புலங்கள் உள்ளன.

எனவே, மொழி ஒரு கருவியாக மட்டுமின்றி அரசியலை, குமுகவியலை, வாழ்வியலை, பொருளியலை என அனைத்தையும் இணைத்துக் காட்டும் அடை யாளமாகவும் இருப்பதை உணர முடியும். எனவே, மொழி மக்கள் இனத்தின் உணர்வுக்குரியதாக அமை கிறது.

பிறமொழிக் கலப்பென்பது திணிக்கப்படுகிற பிறமொழி அதிகாரத்தை உணர்த்துகிறது. எனவேதான் மொழி உரிமை உணர்ச்சி என்பது திணிக்கப்படுகிற பிற மொழி அதிகாரத்திலிருந்து தற்காத்துக் கொள்ளுகிற ஒரு மக்கள் இனத்திற்கு அடிப்படையாகவும் மாறுகிறது.

தன் தாய்மொழிவழிக் கல்வியை இழக்கிறபொழுது, தன் தாய்மொழி வழி வழிபாடு இழக்கப்படுகிற பொழுது, தன் தாய்மொழி வழி அரசாட்சி இழக்கப்படுகிற பொழுது இழப்புக்குள்ளான மொழிக்காக, அந்த மொழியின மக்கள் உணர்வெழுச்சி கொண்டு போராடுகிறார்கள்.

அப்படியான உணர்வெழுச்சி தன் தாய்மொழி உயர்ந்தது என்கிற காரணத்திற்காக மட்டுமே வருவதன்று. தன் தாய் மொழி உயர்ந்தது அல்லாத எளிய மொழி யாக இருந்தாலும் கூட அத்தகைய உணர்வெழுச்சி வரவே செய்யும்.

தாய்மொழி என்பதை அம்மா - என்கிற பொருளில் தாயின் மொழியாகப் பலரும் கருதக்கூடும். ஆங்கிலத் தில் புலப்படுத்துவது போல் அது தாயின் மொழி என்பதானப் பொருளுடையதாக மட்டுமே தமிழில் இல்லை. தமிழில் தாய்மொழி என்பதற்கு உரிமை மொழி என்கிற உட்பொருள் உள்ளதையும் உணர்தல் வேண்டும். தாய் என்பதற்கே உரிமை உடையவர் ­என்கிற பொருள் உண்டு. தாயம் என்கிற விளையாட்டில் கூட அவ்விளையாட்டில் நுழைந்து விளையாடு வதற்கான உரிமையைப் பெறுவதே 'தாயம்' - என்கிற பெயரில் அமைந்திருப்பதை ஒப்பிட்டு அறியலாம்.

எனவே, ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவருக்கு அந்தத் தாய்மொழியின் உரிமையே அடிப்படையானதேயன்றி அது சிறந்த மொழியா அல்லது சிறப்பற்ற மொழியா என்பது முதன்மையான தில்லை. அந்த வகையில் தமிழர்க்குத் தாய்மொழி தமிழின் மீதான உரிமை முகாமையானது.

அஃதோடு மட்டுமன்றி நம் தாய்மொழி தமிழோ உலக மொழிகளுக்கெல்லாம் மூல மொழியாகவும் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட இலக்கண இலக்கியச் சிறப்புடைய மொழியாகவும் இன்றைய அறிவியல் வளர்ச்சிகளையும் எளிதே உள்வாங்கவும் பெயர்த்து வழங்கிடும் வகையிலும் திறனுடையதாகவும் இருக்கிற வகையில் தமிழர்க்கான தமிழ் மொழிக் காப்புணர்வும், உரிமை மீட்புணர்வும் அதிகமாகவே இருக்க வேண்டியிருக்கிறது.

அந்நிலை, ஒரு பக்கம் இருக்க தமிழர்களின் தாய்மொழி உணர்ச்சி என்பது தமிழ் மொழியின் உரிமை மீட்பு உணர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.. தாங்கள் இழந்துவிட்டிருக்கிற தமிழ் மொழி உரிமைகளை மீட்டுக் கொள்வதற்காக அமைந்திருக்கிறது.

தமிழ் மொழி உரிமை இழப்பு என்பது கல்வி உரிமை வழியாக, வழிபாட்டுரிமை வழியாக, அரசின் அலுவல்கள் பயன்பாட்டுரிமை வழியாக, ஞாய மன்ற நடைமுறைப்படுத்த உரிமைகள் வழியாக -என எல்லா வகையிலும் இருந்து வருகிறது.

உலகின் அனைத்து அறிவியல் வளங்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தும் தமிழைக் கல்வி மொழியாகத் தமிழர்களால் பெற்றிருக்க முடியவில்லை. சமயங்களற்ற அற வாழ்க்கையையும், இயற்கை ஆற்றல்களை வழிபடுகிற நிலை தொடங்கி பின்னர் அவையே சமயக் கருப்பொருள்களாக மாறி சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) எனப் பல சமயங்களாக உருவெடுத்து அவற்றுக்கான பல்லா யிரக்கணக்கான வழிபாட்டுப் பாடல்கள் அமைக்கப் பெற்றிருந்தும் தமிழர்கள் தமிழ் வழி வழிபாடுகளைச் செய்ய இயலவில்லை.

தமிழ்நாட்டின் அரசு அலுவல் மொழியாக முழுமையாகத் தமிழ் நடைமுறைக்கு உள்ளாகவில்லை. தமிழ்நாட்டின் பெருந்தொழில்கள், பெரும்பான்மை அரசு அலுவலகங்கள் எல்லாம் இந்திய அரசின் கட்டுப்பாட்டிலும் பிற பன்னாட்டு முதலைகளிடமும் முடங்கிக் கிடப்பதால் தமிழ் முழுமையான ஆட்சிமொழியாகவில்லை.

தொடர்வண்டித் துறை, அஞ்சல் துறை, வானூர்தி, துறைமுகம், வருமானவரித் துறை, நெடுஞ்சாலைத் துறை, கனிம வளங்கள் துறை, பல்கலைக்கழக உயர் கல்வித் துறை, ஆட்சியர்-காவல் உயர் அதிகாரத்துறை - என நூற்றுக்கு 80விழுக்காட்டுத் துறைகள் அனைத்தும் இந்திய அரசின் கட்டுப் பாட்டில் அடங்கிக் கிடக்கின்ற நிலையில் தமிழ்நாட்டின் அரசு அதிகாரம் இழந்து சில எடுபிடி அதிகாரங்களை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிற நிலைக்குள் மட்டுமே தமிழ் முடங்கிக் கிடக்கிறது.

எஞ்சிய ஒரு சில அதிகாரங்களிலும் அக்கறை செலுத்தித் தமிழையே வழிப்படுத்துகிற முயற்சியைத் தமிழ்நாடு அரசும் முனைப்புடன் செய்திடவில்லை. இப்படியான நிலையில் தமிழ் உணர்ச்சி என்பது தமிழ் இலக்கிய உணர்ச்சியாகவோ, தமிழ்வழிச் சமய உணர்ச்சியாகவோ, தமிழ் உறவாடல் உணர்ச்சி யாகவோ மட்டுமன்றி தமிழைத் தமிழர்களின் வாழ்வியல் நிலைகளில் உள்ள அனைத்துப் பயன்பாடு களுக்குமான வாழ்க்கை மொழியாகக் கொண்டு வருவதற்கும் போராட வேண்டி இருக்கிறது.

தமிழ் உணர்ச்சி என்பது தமிழ் உரிமை உணர்ச்சியாகமாற வேண்டி இருக்கிறது. தமிழ் உரிமை உணர்ச்சி என்பதுதமிழ் மொழி வழியான உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய உணர்ச்சியாகிறது.

அஃதாவது தமிழ் உணர்ச்சி என்பது தமிழர்களின் மொழி உணர்ச்சி என்ற அளவோடு நில்லாமல். தமிழர்களின் உரிமைக்குரிய தமிழ்நாட்டுத் தேசிய உரிமை உணர்ச்சியாகவும் மாறுகிறது. “மொழி என்றால் உடலின் நரம்பு; நம் முத்தமிழ் மொழியோ உயிரின் வரம்பு”- என்ற பாவேந்தரின் கூற்றுப்படி தமிழ் உரிமை தமிழர்க்கான வரம்பை உறுதிப்படுத்தும் உரிமையாக இருக்கிறது. தமிழர்களின் தாய் நிலமான தமிழ்நாடு என்கிற தேசிய அதிகார உரிமைகளை இழந்து இருக்கிற தமிழர்கள், தங்களின் தமிழ்மொழி உரிமைகளை மொழி அளவோடு மட்டும் மீட்டெடுத்து விட முடியாத நிலையில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிற அவல நிலை அறியப்பட வேண்டியதாகிறது.

தமிழின் உணர்ச்சியைத் தமிழ்த் தேசத்தின், தமிழ்நாட்டின் உரிமை உணர்ச்சியாகவே பாவேந்தரும் பாவலரேறுவும் தமிழர்களுக்குப் பயிற்றுவிக்கிறார்கள். தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் படைப்பாளர்கள், ஆய்வாளர்களிடமிருந்து அவர்கள் தனித்துத் தமிழின் உயிர் உரிமை மலர்ச்சிக்குக் குரல் எழுப்பிக் களம் அமைக்கிற இடம் அதுவாகவே இருக்கிறது.

தமிழைக் கல்வி மொழியாக ஆக்க வேண்டும் என்றால்கல்வி உரிமையைத் தமிழ்நாட்டிற்கே முழுமையாக ஆக்குகிற முயற்சி முன்னெடுக்கப்பட்டாக வேண்டி இருக்கிறது. சிபிஎஸ்சி,கேந்திரிய வித்யாலயாக்கள், உயர் கல்வி நிறுவனங்கள்,பல்கலைக்கழக அதிகாரங்கள், உயர்கல்வி உயர் பணிவாய்ப்பு களுக்கான நுழைவுத் தேர்வுகள் என அனைத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளையே அடிமைப்படுத்தி வைத்திருக்கிற கொடுஞ்சூழலில் தமிழ்நாட்டிற்கே முழுமையாகக் கல்வி உரிமையை மீட்டெடுக்காமல் தமிழ் வழிக்கல்வியை முழுமைப்படுத்த இயலாது.

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகள் வழியாக வலியுறுத்தப்படும் தமிழ் வழிக் கல்வியானது, அரைகுறை உரிமைகள் மட்டுமே கொண்ட அதிகாரங்களுக்குட்பட்ட நிலையில் உயர்கல்வி வரை கூடத் தாக்குப் பிடிக்க இயலாமல் தடுமாறுகிறது. எனவே, தமிழ் முழுமையான கல்வி மொழியாகத் தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அமைய வேண்டும் என்றால் கல்விக்கான அதிகாரம் முற்றும் முழுமையாகத் தமிழ் நாட்டு அரசுக்குட்பட்டதாக மீட்கப்பட்டாக வேண்டும்.

தமிழ்நாட்டிற்கே கல்வி உரிமை என்கிற அதிகாரத் தைப் பெறாமல் தமிழ் வழிக் கல்வி என்கிற முழக் கத்தை மட்டும் முன்னிறுத்திப் போராடுவது அரைக் கிணறு தாண்டுகிற முயற்சியே. எனவே, தமிழை மீட்கிற உணர்ச்சி என்பது தமிழ்நாட்டின் உரிமை மீட்பு உணர்ச்சிகளோடு பொருந்தியது.

தமிழ்நாட்டு அதிகாரங்களுக்கான உரிமைகளை மீட்கிற உணர்ச்சி கொள்ளாமல் தமிழ் மொழி உணர்ச்சியை மட்டும் பெற்றிருப்பது தமிழ் மொழியைக் காத்துக் கொள்ளுகிற அனைத்து நிலைகளிலுமான மொழி உரிமைகளை நிலைப்படுத்திக் கொள்ளுகிற உணர்ச்சியாக அமையாது.

அப்படி அமையாத நிலையில் தமிழர்கள் மொழி உணர்ச்சி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது தமிழர்களைத் தமிழ் இலக்கியச் சுவையுடையவர்களாக, தமிழ் மொழிப் பரப்பின் சிறப்புகள் உணரப் பெற்றோராக மாற்றுமேயன்றி தமிழ் மொழி உரிமை மீட்பவர்களாக, தமிழ் மொழி சார்ந்த குமுக அவலங்களை அவற்றின் வழித் தமிழ்நாட்டு உரிமைகளை மீட்பவர்களாக மாற்றி விடாது.

தேசம் என்பது மொழியால் மட்டுமே கட்டப்படுவ தன்று. தேசத்தின் அடையாளக் கூறுகளுள் மொழி முதன்மையானதே ஆயினும் மொழி உணர்வால் மட்டுமே மொழித் தேசத்தின் அதிகார உரிமைகளைத் தட்டி எழுப்பி விடவோ மக்களுக்கு விளக்கப்படுத்தி விடவோ இயலாது.

மொழி சார்ந்த தேசிய வரலாற்றின், பண்பாட்டின், அரசியலின், பொருளியலின் வழிபட்ட அந்தத் தேசத்தின் உரிமை உணர்வுகளைத் தட்டி எழுப்பி மக்களுக்கு விளக்கப்படுத்தியுமே ஒரு தேசத்தின் அனைத்து உரிமைகளையும் மீட்டுப் பெற முடியும்.

எனவே, தமிழ் உணர்ச்சி என்பது தமிழ் மொழியின் உணர்ச்சி என்ற அளவில் மட்டுமின்றி தமிழ்மொழி சார்ந்த தமிழ்த் தேசத்தின் தமிழ்நாட்டின் உரிமை உணர்ச்சியாகவும் உணரப்படவும் பரப்பப்படவும் வேண்டியதாகிறது.

- பொழிலன்

Pin It