தமிழ்வழிக் கல்வி தமிழ்நாட்டில் விடுதலைக்கு முன்பே கட்டாயமாக்கப்பட்டிருந்தது, ஆங்கிலம் இரண்டாம் மொழியாக ஆறாம் வகுப்புக்கு மேல் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தது. 1941இல் மாணவர்கள் முதலாவதாகத் தமிழ்வழிக்கல்வி பெற்று பள்ளியிறுதித் தேர்வினை எழுதினார்கள்.
பொதுக் கல்வியில் தாய்மொழி வழிக்கல்வி கட்டாயம் என்று ஒரு நிலை இருந்தது, ஆறாம் வகுப்பு முதல் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டது, விடுதலைக்கு முன்பே இங்கே நிலவிய, இந்த நிலை கைநழுவிப் போனது தமிழகத்துக்குப் பெருமையளிப்பதாக இல்லை. தமிழக வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் ஓர் அயல்மொழி ஒரு கட்டாயப் பாடமாக்கி இருபதாம் நூற்றாண்டுக்கு முன் எந்த ஆட்சியும் மக்கள் மீது திணித்ததில்லை, இருபதாம் நூற்றாண்டில் அதிலும் நாம் விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டில் ஓர் அயல்மொழியை ஒரு கட்டாயமாக்கிப் பொதுக் கல்வியிலேயே மக்கள் மீது திணித்திருக்கிறோம். அதே நேரத்தில் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சொந்தமான மொழியைப் புறக்கணித்துவிட்டுக்கூட ஒருவன் பட்டமும், பதவியும் பெற முடியும் என்னும் ஓர் அவல நிலை உருவாகத் தமிழகம் எப்படியோ இடம் கொடுத்து விட்டது.
வடமொழி ஆதிக்க எதிர்ப்புச் சூழலையும், இந்தி ஆதிக்க எதிர்ப்புச் சூழலையும் நன்கு பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர்களே இந்நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் ஆங்கிலப் பற்றாளர்கள் ஆங்கில ஆதிக்கத்திற்கு என்றுமில்லாத அளவுக்கு இங்கே வழிவகுத்து விட்டனர்.
பன்மொழிச் சூழலைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் ஒரு மொழியை மட்டும் மேலே தூக்கி நிறுத்தி ஆதிக்க மொழியாக ஆக்குவது மக்களாட்சிப் பண்புக்கும் பொருந்தாது. ஒரு மொழி, ஆதிக்க மொழி ஆகிவிட்டால் அது மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிப்பதாக ஆகிவிடும். தமிழ்வழிக் கல்விக்கும், ஒரு வகையில் தடையாகத்தான் இருக்கும்.
தமிழ் வழிக்கல்வி என்பது கல்வியாளர்களும், தலைவர்களும், துறை வல்லுநர்களும், ஆட்சியாளர்களும் ஒருங்கிணைந்து முழு மூச்சோடு பாடுபட்டு நிறைவேற்ற வேண்டிய பணி. இந்தப் பணி பல ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். மக்களாட்சியில் மக்கள் மொழியின் வாயிலாக மக்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும். இதுபற்றிய பொறுப்புணர்ச்சி தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். தமிழ்வழிக்கல்வி என்பது தமிழுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையில் ஓர் இன்றியமையாத பகுதி. இதை விடுத்து ஆங்கில வழியில் பயின்றால் உலகம் முழுவதும் வேலை கிடைக்கும் என்று கூறி கானல் நீர்க் கனவுகளை வளர்க்கிறார்கள். இது உண்மையில்லை. ஆங்கில வழியில் படித்தவர்கள் 2 விழுக்காடே வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகிறார்கள். அதிலும் வளர்ந்துள்ள நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகள் சிலவே. அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போக ஆங்கிலம் தேவையில்லை. போகிறவர்களும் அரபி மொழியைக் கற்றுக் கொள்ளப் போவதில்லை. இதுவே உண்மை.
ஒரு நாடு வெளிநாடுகளில் வேலை தேடுவதை அடிப்படைத் திட்டமாக வைத்து தனது கல்விக் கொள்கையோ, பொருளாதாரக் கொள்கையோ வகுத்தால் அந்நாடு முன்னேற்றத்தின் முதல்படியில் கூட ஏற முடியாது.
இது தவிர விஞ்ஞானிகள் அனைவரும் ஆங்கிலேயர் என்பது போன்ற தவறான பார்வையும் உள்ளது. விஞ்ஞானிகள் அவரவர் தாய் மொழியில் கண்டுபிடிப்புகளை எழுதுகிறார்கள். சில சமயங்களில் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகளில் வெளிவரும் ஆய்வுக் கட்டுரைகளில் கட்டுரைச் சுருக்கம் உள்ளது.
இது போலவே பல்கலைப்படிப்புகள் தொழிற்கல்வியில் நூற்கள் இல்லாது படிப்புகளைத் தொடங்க முடியாது என்று சொல்வதும் ஒரு முரட்டுவாதம். இலங்கையில் பள்ளியிலிருந்து பல்கலை வரையிலும் தமிழில் நடைபெற்றது. இது போலவே 100 மொழிகளுக்கு மேல் இருந்த இந்தோனேஷியாவில், இந்தோனேஷியாவின் மொழியான பாஷாவில் பாடங்கள் நடைபெறுகிறது, எழுத்து வடிவங்களே இல்லாத மலாய் மொழியில் கூட பாடங்கள் அனைத்தையும் கற்பித்து மலாயாவில் சாதனை புரிந்து வருகிறது. இவை எல்லாம் விடுத்து தமிழ்நாட்டை நோக்கினால் கூட தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாகப் பொறியியல், மருத்துவம் தொடர்பான பல பாட நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன.
மன மாற்றமும் உள்ள உறுதியும் தேவை
தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும் எனக் கூறும்போது பாடநூற்கள் இல்லை, கலைச் சொற்கள் இல்லை, வேலை கிடைக்காது, வெளிநாடு செல்ல இயலாது என்பன போன்ற தடைகள் எழுப்பப்படுகின்றன. வேலை வாய்ப்பு, வெளிநாட்டு வாய்ப்பு இரண்டும் அரசியல், பொருளாதாரச் சக்திகளோடு தொடர்புடையன. திட்டமிட்ட பொருளாதாரமும் சமுதாய அமைப்பு குறித்த அரசியல் சித்தாந்தமும் நடைமுறைப்படுத்தப்பட்டால் வேலைவாய்ப்பை உருவாக்குதல் எளிது. பல சோசலிச நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு சிக்கலாக இருந்ததே இல்லை. அதே நேரத்தில், பல முதலாளித்துவ நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாகக் குற்றங்கள் பெருகியதையும் பார்த்திருக்கிறோம். அரசியல் பொருளாதாரச் சித்தாந்தம் சமுதாய நலன் கருதியதாக அமையும்போது இந்தப்பிரச்சினை எழ வாய்ப்பில்லை.
ஆங்கிலம் கற்றால் அயல்நாடு செல்லலாம் என்பதும் ஒருவகை மயக்கம் தான். ஆங்கிலம் முதன்மை மொழியாக உள்ள நாடுகளில் வேண்டுமானால் ஆங்கில வழிக் கல்வி உதவக்கூடும். ஜெர்மன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஸ்பெயின் முதலிய நாடுகளில் ஆங்கிலம் உதவப் போவதில்லை. அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்றால்தான் நிலைத்து நிற்க முடியும். ஆங்கிலம் கல்வி மொழியாக இல்லாத நாடுகளுக்குப் பயிலச் செல்லும் நமது மாணவர்கள் அங்குள்ள பயிற்றுமொழியைக் கற்ற பின்னரே படிப்பைத் தொடர முடிகிறது. ஒரு போலிஷ் மாணவன் 4 ஆண்டுகளில் முடிக்கும் படிப்பை ஆங்கிலம் வழிக் கற்ற இந்திய மாணவன் 5 ஆண்டுகளில் முடிக்கிறான். இவற்றில் ஓராண்டு போலிஷ் மொழிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. ஆங்கிலம் கோலோச்சாத சில நாடுகளில் இதுதான் நிலை.
என் தாத்தாவுக்கு தமிழைத் தவிர எம்மொழியும் தெரியாது. அவர் இலங்கையில் 40 ஆண்டுகளாகச் சிறப்பாக வணிகம் செய்தார். நீர்க்கொழும்பு சென்ற பின்தான் சிங்களமும் தேவையான ஆங்கிலமும் கற்றுக் கொண்டார். இலங்கை போவதற்கு முன் ஆங்கிலமும், சிங்களமும் கற்றுக்கொள்ளவில்லை. அங்குப் போனால் கற்றுக்கொண்டு விடலாம் என்ற தன்னம்பிக்கையில் சென்றார், வென்றார். அந்தத் தன்னம்பிக்கை நமக்கு இல்லை.
கடந்த 200 ஆண்டுகளாக ஆங்கிலம் வழிக் கற்ற நம்மவரில் எத்தனை பேர் வெளியிடங்களில் பணி புரிகிறார்கள்? அப்படி பணியாற்றுபவரின் சமூக நிலை என்ன? சமுதாயத்தின் உயர் மட்டத்தில் உள்ள சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளச் சமுதாயம் முழுவதுமே பலி ஆக வேண்டுமா? இத்தனை ஆண்டுகள் ஆங்கிலம் வழிப் படித்தவர்களில் எத்தனை பேர் தேசிய, சர்வதேசியப் புகழ் வாய்ந்த நூல்களை, கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்? வெளிநாடுகளில்/மாநிலங்களில் பணியாற்றும் தமிழர்களின் எண்ணிக்கையும் ஆங்கிலம் வழிக் கற்ற அவர்கள் எழுதியுள்ள ஆங்கில நூல்களின் எண்ணிக்கையும் மிகக்குறைவே. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் எழுதப்பட்ட நூல்களே நமது கல்விக் கூடங்களைக் கட்டுக்குள் வைத்துள்ளன. ஆக நமது ஆங்கில வழிக் கல்வி சிலரது முன்னேற்றத்திற்குப் பயன்பட்டதே தவிர, ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் பயன்படவில்லை என்பதே உண்மை. இந்த உண்மை புரியாததால் சமுதாயத்தின் அடிநிலையில் உள்ளவர்களும் ஆங்கில மோகம் கொண்டு அவதிப்படுகின்றனர்.
தமிழ் மொழி காக்க உறுதி ஏற்போம். ஒவ்வொரு மொழியும் பயிற்று மொழியாகும் போது புதிய துறை சார்ந்த கல்வி அம்மொழிக்குப் புதிய அனுபவமாகவே அமையும்.
பல புதிய துறைகளைத் தமிழில்கொண்டு வரும்போது கலைச் சொற்கள் இன்மை, உலக அளவில் வேலை வாய்ப்பு, உயர்கல்வி தொடர வாய்ப்பின்மை போன்ற பல சிந்தனைகள் மனதில் எழக்கூடும். ஆனால் அத்தனையும் சாத்தியமானதே,
பாட நூல்கள் இல்லை என்ற குறை தாய்மொழி வழிக்கல்விக்குத் தடையாக இருக்க முடியாது. ஏனெனில் அவசியம் இருந்தால் நூற்கள் தானே பெருகும். பாடநூல்கள் அனைத்தும் இருக்கிற மொழிதான் பயிற்று மொழியாக வேண்டுமெனில் உலகிலுள்ள எம்மொழியும் ஆக முடியாது.
உலகில் உள்ள 187 நாடுகளில் ஆட்டிப் படைக்கின்ற வல்லமை கொண்ட நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான் முதலியவை. இங்கிலாந்து அமெரிக்காவைத் தவிர்த்து ஜெர்மனியில் ஜெர்மானிய மொழியே. பிரான்சில் பிரெஞ்சு மட்டுமே. ஜப்பானில் ஜப்பானிய மொழி மட்டுமே. தத்தம் தாய்மொழி வழியில் கற்றுத் தாய்மொழியில் மட்டுமே ஆட்சிமொழி பெற்ற இவர்களே இன்று உலகத்தை ஆட்டிப் படைக்கின்றனர்.
அரசியல், அறிவியல், பொருளியல், தொழில் நுட்ப இயல், கணினி இயல் என்கிற எல்லாத் துறைக் கல்வியையும் அவரவர் தாய்மொழியில் கற்றதனால் தான் அவர்கள் அறிவாளிகளாகக் கண்டுபிடிப்பாளர்களாக உலகத்தை ஆட்டிப் படைப்பவர்களாக உருவாக முடிந்தது. இதுவே நடக்கக் கூடியது. இதுவே சரியானது.
மேலே கண்ட நாடுகளில் தொழில் நுட்ப அறிவுக்கான மேற்படிப்புக்குப் போகிற மற்ற நாட்டினரும் எந்த எந்த நாட்டிற்குப் போகிறார்களோ அந்த அந்த நாட்டுத் தாய் மொழியை ஓராண்டு காலம் கற்றுக் கொண்டு அதன் வழியாகப் பெற்று செயலாற்றுகின்ற அறிவை (working Knowledge) மட்டுமே வைத்துக் கொண்டு அந்தந்த மொழி மூலம் மட்டுமே மேல் படிப்பு, ஆய்வுப்படிப்பு என்பதை ஆங்காங்கே பெறுகிறார்கள்.
ஐரோப்பாவிலுள்ள 20 தனித்தனி நாட்டினரும் அவரவர் தாய்மொழி வழியேதான் எல்லாத் துறைக் கல்வியையும் பெறுகின்றனர். ஆங்காங்கு உள்ள அரசும் மக்களும், கல்வியாளர்களும், ஏடுகளும் மாணவர்களும் இதை அப்படியே ஏற்கின்றனர். தமிழ்வழிக்கல்வி கேட்கிற யாரும் ஆங்கிலத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மொழிப் பயிற்சி வேறு, பயிற்று மொழி வேறு என்பதை நாம் சரியாக உணர்ந்தாக வேண்டும். தமிழ்வழிக்கல்வி எல்லா நிலைகளிலும் பயிற்று மொழியாக இருக்க ஆங்கிலம் 1950ஆம் ஆண்டு பயிற்று மொழித்திட்டத்தைப் போல ஒரு மொழிப்பாடமாக இருக்கலாம்.
அறிவியல் நூல்கள் இல்லாதபோது தமிழில் பயிற்சி எப்படி முடியும்? என்று ஒரு தடையாகப் பேசப்பட்டது. உயர்நிலைப்பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழி ஆக்கிய நிலையில் தரமான நூல்கள் வெளியிடப்பட்டன. ஆகவே தேவை மிகும் போது பயிற்றுமொழியாகத் தமிழை ஆக்கிய பின்னரே இது கை கூடியது. தேவை என்பது ஏற்பட்டால் நூல்கள் தானாகவே எழுதப்பட்டு வெளிவரும். தேவையான பயன்பாட்டிற்கான நூல்கள் இருக்கும் நிலையிலேயே ஒரு மொழி பயிற்று மொழி ஆகவேண்டும் என்று கூறினால் அது அந்த மொழிக்குப் பொருந்தா நிலைப்பாடேயாகும். நம் நாட்டினருக்கு ஆங்கிலேயர் வருகைக்கு முன் அறிவியல் அறிவு கிடையாது என்றும் எல்லாமே மேலை நாட்டிலிருந்தே பெற்று வருகிறோம் என்ற கருத்தும் இன்று பரவலாகப் பேசப்படுகிறது. இது சரியானதல்ல. ஏனெனில் கல்லணை, தஞ்சை பெரியகோயில் கட்டுமானம் போன்ற அறிவியல் திறன் இன்று வரை போற்றப்படுகிறது. இது தவிர தொல்காப்பியர் கூறும் உயிரியல் கோட்பாடுகளும் தமிழரின் அறிவியல் திறத்தை வெளிக்காட்டும் கண்ணாடியாகும்.
தமிழ்ப் பயிற்று மொழியாக்க வேண்டுமெனில் தமிழர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மை, அரசின் சரியான மொழிக்கொள்கை, நூற்றில் ஒருவர் வெளிநாடு செல்வதைப் பார்த்து அனைவருக்கும் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருப்பது நல்லது என்ற தவறான எண்ணம் போன்றவைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நம்பிக்கை நாற்றுகள்
கோவை வேளாண் கல்லூரியில் தமிழ் வழியில் பாடத்திட்டம்.
தமிழ்வழி பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கோவை கல்லூரியில் தமிழ் வழியில் பாடத்திட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நம்மாழ்வார்’ பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் (2021) கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் ஆராய்ச்சியையும், வேளாண் கல்வியையும் மேம்படுத்த நடப்பு 2021-2022ஆம் நிதியாண்டில் 573 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்வழி பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக, தமிழகத்தில் வேளாண்மை,தோட்டக்கலை இளநிலை பாடத்திட்டத்தைத் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் ஒரு வகுப்பு தமிழ்வழியில் பயிற்றுவிக்க இந்த அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கென மாநில அரசு 25 லட்சம் ரூபாய் நிதியை முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.
அரசுப் பணிகளில் 20 விழுக்காடு - தமிழக அரசு அறிவிப்பு
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பட்டயப் படிப்பில் (டிப்ளமா) பயிற்றுமொழியாக ஆங்கிலம் மட்டுமே உள்ளது. முதல்கட்டமாக அடுத்தகல்வி ஆண்டில் ‘சிவில் இன்ஜினீயரிங்’, ‘மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்’ ஆகிய பொறியியல் பட்டயப் படிப்புகள் தமிழ் வழியில் தொடங்கப்படும். படிப்படியாக இதர பட்டயப் படிப்புகளும் தமிழ்வழியில் தொடங்கப்படும் என்பதும் இன்பத்தேன் வந்து காதினில் பாய்வதுபோல் உள்ளது.
இத்துடன் மற்றொரு அறிவிப்பு “தமிழ்வழியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் ஒருங்கிணைந்து வெவ்வேறு பாடப்பிரிவுகளில் முத்தமிழ் அறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டத்தின்படி 100 பாடப்புத்தகங்கள் ரூ.2 கோடி செலவில் தமிழில் மொழிபெயர்க்கப்படும்” என்பது நமக்கு மேலும் மகிழ்ச்சியை அளிப்பதுடன் பல தொழில்நுட்ப படிப்புகள் தமிழில் இதன்
வாயிலாக நடைபெற ஏதுவாக இருக்கக்கூடும் என்று நாம் எதிர்நோக்கலாம். இது தவிர தமிழ்நாடு அரசு சென்னை தண்டையார்பேட்டை புற்றுநோய் மையத்தில் உள்ள 14 ஏக்கர் நிலத்தில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரியை ஆரம்பிக்க ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு நாட உள்ளதாக இருப்பது குறித்த அறிவிப்பும் நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.
- டாக்டர் சு.நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.