தமிழ்நாடு அரசிற்கு மே பதினேழு இயக்கம் கோரிக்கை
21 ஜூன் 2021-இல் தமிழ்நாட்டின் புதிய அரசின் சட்டமன்ற பொறுப்பேற்கும் முதல் அமர்வில், ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள கர்நாடகா மேகதாதுவில் கட்டப்போகும் அணையை தடுக்கும் முயற்சி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான தன்னாட்சி பாதுகாப்பு, அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை, ஒன்றிய அரசு பணியிடங்களில், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை, ஈழத்தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை ஆகிய ஒன்றிய அரசை வலியுறுத்தும் அறிவிப்புகள், வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை, 69% இடஒதுக்கீட்டுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட முற்போக்கு முயற்சிகளை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது.
அதே நேரத்தில், ஆளுநரின் இந்த உரையில், தமிழீழத் தமிழர்கள் குறித்த 15-ஆம் குறிப்பு சொல்லுகின்ற ’ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தப்படும்’ எனும் முடிவானது, 08-06-2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தீர்மானம், 27-03-2013 சட்டமன்ற தீர்மானங்கள் ஆகியவற்றிற்கு மாறானதாகவும், புறம்பானதாகவும் அமைந்துள்ளது.
மேலும் இந்த முடிவானது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2019 தேர்தல் அறிக்கை 17-ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள,
“இலங்கைக்கு எதிராக அமெரிக்க அரசால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் இருமுறை ஐ.நா.மனித உரிமை ஆணையத்தால் அண்மைக் காலத்தில் ஏற்கப்பட்டன. எனவே, ஈழமண்ணில் அரங்கேற்றப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் அனைத்தின் மீதும் பாரபட்சமற்ற விசாரணையை உடனடியாக நடத்திட ஐ.நா. அமைப்புகளும், உலகநாடுகளும் ஏற்றுக் கொள்ளூம் வகையில் உறுதியான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள, கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.”,
“இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ்ஈழப் பிரச்சனைக்கு எவ்வித நிலையான அரசியல் தீர்வுகளை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய ஐ.நா.வின் நேரடி கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்த, இந்திய அரசை திமுக வலியுறுத்தும்.”,
மற்றும் 2021-ஆம் ஆண்டு 16-வது சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் ‘ஈழத்தமிழர் நல்வாழ்வு’ தலைப்பின் கீழ் 13-வது வாக்குறுதியாக குறிப்பிடப்பட்டுள்ள,
“இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்துச் சுதந்திரமானதும், நம்பகத் தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.”,
14-வது வாக்குறுதியான,
“இலங்கையின் வடக்குகிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப்போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. சபையின் மேற்பார்வையில், பொதுவாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாக உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.”,
என குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் ’இலங்கை அரசு, ஒருபோதும் நிறைவேற்றவே, செய்திடாத அதிகார பங்கீடு’ பற்றி மட்டுமான ஒன்றிய அரசை வலியுறுத்தும் நிலைப்பாடானது ஆளுநர் உரையினூடாக வெளிப்படுகிறது. இந்த நிலைப்பாடு உங்களது வாக்குறுதியின் கருப்பொருளான பொதுவாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலை குற்றவாளிகள் மீதான சர்வதேச விசாரணையை வெளிப்படுத்துவதாக அமையவில்லை.
இந்த கோரிக்கைகள் உள்ளடக்கப்படும் வகையில் மாற்றியமைக்கபட வேண்டுமென்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். மேலும் தமிழீழத் தமிழர்கள் அதிகாரப்பகிர்விற்காக போராடவில்லை.
மாறாக, தமிழீழ தேசத்திற்காகவே போராடினார்கள் என்பதை கடந்த 40 ஆண்டுகால தி.மு.கவின் மாநாடுகளின் தீர்மானங்களே வெளிப்படுத்தி இருக்கின்றன. மற்றும் தி.மு.கவின் ஒப்புதலோடு ஏகமனதாக கடந்த 2011 மற்றும் 2013 காலங்களில் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட,
‘ஈழத்தமிழர்களுக்கான பொதுவாக்கெடுப்பு’, ’இலங்கை அரசின் மீது சர்வதேச இனப்படுகொலைக்கான விசாரணை’, ’இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை’, என இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
எனவே, தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழீழத் தமிழர்கள் தொடர்பான தமிழ்நாட்டின் (மேற்சொன்ன) நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றிய அரசின் கொள்கை மாற்றத்தினை சாத்தியமாக்கிட வேண்டும். நீண்ட அநீதிக்குள்ளான ஈழத்தமிழர்கள், இன்றளவும் இனப்படுகொலைக்கு உள்ளாகிறார்கள்.
இதை புலப்படுத்தும் வகையில் 21-06-2021-இல் மட்டக்களப்பில் தமிழீழ இளைஞர் சிங்கள இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட செய்தியும் வந்து சேர்ந்திருக்கிறது. இது சமயம், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் இலங்கை அரசிற்கு அளித்து வந்த GSP+ (Generalised Scheme of Preferences) எனும் சலுகைகளை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுத்திருக்கிறது.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் துன்புறுத்துவது தொடர்பாகவும், மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாகவும் தமிழர்களுக்கு நேரடியாக தொடர்பற்ற ஐரோப்பிய ஒன்றியமே இம்முடிவினை துணிந்து மேற்கொள்ளும் காலகட்டத்தில் தமிழர்களின் தாய்நிலமான தமிழ்நாடும் இலங்கை அரசின் மீது நேர்மையான சமரசமற்ற முடிவுகளை இந்திய அளவில் கொண்டுவர போராட வேண்டும்.
இந்நிலை சாத்தியமாகவில்லையெனில், ஆளுநர் உரையின் 34-வது குறிப்பான தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பு, வாழ்வுரிமை, கைது செய்யப்படுதல், கச்சத்தீவு மீட்பு ஆகியவை கானல் நீராகும் என்பதை கடந்த கால வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையில் தமிழ்நாட்டின் முடிவுகள் முக்கியமானவையாகின்றன. வங்கதேசத்தின் மீதான வெளியுறவுக் கொள்கையில் மேற்கு வங்க மக்கள் ஆளுமை செலுத்துவதற்கு இணையாக தமிழ்நாடும் இலங்கை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை உறுதியாக வலியுறுத்தி நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது.
மேற்குவங்க மாநில மக்களின் பங்களிப்பினால் தங்களுக்கென தனிநாடு உருவாக்கிக் கொண்ட வங்கதேசம், இவ்வருடத்தில் 50-ஆம் ஆண்டு விடுதலை தினத்தை கொண்டாடுகிறது. தமிழ்நாடும் இவ்வாறாகவே தமிழீழம் குறித்த நிலைப்பாட்டின் மூலமாக, சனநாயகரீதியில் வலிமையான மாநிலமாக இக்காலகட்டத்தில் மாற வேண்டுமென விரும்புகிறோம்.
எனவே, இந்நிலைப்பாடு தொடர்பாக உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாடு அரசும் தனது முடிவுகளை ஏற்கனவே மேற்கொண்ட கொள்கையின் அடிப்படையில் மாற்றியமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.
2011 தீர்மானம் http://www.assembly.tn.gov.in/debates/pdfdocs/006-080611.pdf
2013 தீர்மானம் http://www.assembly.tn.gov.in/debates/pdfdocs/120-241013.pdf
திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
22 ஜூன் 2021