இந்தியச் சூழலில் செம்மொழி

2004, அக்டோபர் 12ஆம் நாள் நடுவண் அரசு, தமிழின் ‘செம்மொழி’த் தகுதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட பின்னர் இந்தியச் சூழலில் ‘செம்மொழி’ குறித்த உரையாடல்கள் கவனம்பெறத் தொடங்கியுள்ளன. தமிழ் ஆய்வுத் தளத்திலும் செம்மொழிச் சொல்லாடல் காத்திரமாக நிகழ்த்தப்படுகின்றது.

பல நூற்றாண்டுகள் கடந்த தொன்மை, தனித்து இயங்கும் ஆற்றல், மிக நீண்ட இலக்கிய - இலக்கண வளமை போன்றன ஒரு மொழிக்குரிய செம்மொழித் தகுதிப்பாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. உலக மொழிகளுள் இந்தத் தகுதிப்பாட்டைச் சில மொழிகளே கொண்டுள்ளன. கிரேக்கம், இலத்தின், அரபு, சீனம், ஹீப்ரு, பாரசீகம், தமிழ், சமஸ்கிருதம் முதலான மொழிகள் இந்தத் தகுதிகளைப் பெற்றுச் செம்மொழிகளாக விளங்குகின்றன. கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளையும் செம்மொழிகளாக நமது நடுவண் அரசு அறிவித்துள்ளது. உலகச் செம்மொழிகள் வரிசையில் இந்தியத் துணைக் கண்ட மொழிகளின் எண்ணிக்கை மிகுதியாக இருப்பது மிகவும் கவனத்துக்குரிய ஒன்றாகும்.

நடுவண் அரசு, தமிழுக்கான செம்மொழித் தகுதிக்குரிய அரசாணையை வெளியிட்டபோது (12.10.2004) இந்திய மொழியியல் அறிஞர்களின் பரிந்துரையின்படி செவ்வியல் மொழியென அறிவிக்கப்படுவதற்கு, ஒரு மொழியைக் கருத்தில் கொள்வதற்கு வேண்டிய கீழ்வரும் வரையறைகளை வகுத்திருந்தது.

‘ஆயிரம் ஆண்டுக்கும் மேலான மிகப் பழமையுடைய நூல்கள்/பதிவு பெற்ற வரலாறு, மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உள்ளதாகக் கருதும் இலக்கியம்/நூல்கள், அம்மொழிக்கே உரியதாகவும் மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன் பெறாததுமான இலக்கியப் பாரம்பரியம், செவ்வியல் மொழி என்பதும் அதன் இலக்கியமும் அம்மொழியின் நவீன இலக்கியத்திலிருந்து வேறுபட்டிருக்குமாதலால், ஒரு செவ்வியல் மொழிக்கும் அதன் நவீன வடிவத்திற்கும் அல்லது அதிலிருந்து பிறந்த மொழிகட்கும் இடையே ஒரு தொடர்பின்மை இருக்கக்கூடும்.’

“தமிழ்மொழி மேற்கண்ட தகுதிகளை நிறைவேற்றுவதால் தமிழ் இனிமேல் செவ்வியல் மொழி என வழங்கப்படும்” என்று நடுவண் அரசு செம்மொழி அரசாணையில் குறிப்பிட்டிருந்தது. நான்காவதாக உள்ள வரையறை ‘திருத்தம்’ என்ற அறிவிப்பின் மூலமாகச் செம்மொழித் தகுதியாகப் பிறகு சேர்த்துக்கொள்ளப்பட்டது.

செம்மொழித் தமிழுக்குத் தனியொரு நிறுவனம்

தமிழ்ச் செம்மொழி அறிவிப்பிற்குப் பின்னர் 2005ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்மொழி மேம்பாட்டுக்கான மையத் திட்டம் (Central Plan Scheme for Classical Tamil) நடுவண் அரசால் அமைக்கப்பெற்றது. மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திடம் (CIIL) அத்திட்டம் ஒப்படைக்கப்பட்டு, 2006ஆம் ஆண்டு செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (Centre of Excellence for Classical Tamil) ஏற்படுத்தப்பட்டது. இந்தியச் சூழலில் முதன்முதலாகச் செம்மொழிக்கென்று தனியொரு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது தமிழ் மொழிக்கே ஆகும்.central institute of classical tamilதமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் அமைக்கப்பெற்ற செம்மொழி நிறுவனம் 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயல்பட்டது.

திட்டத்தின் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒன்றினைச் சென்னையில் நிறுவுவதென 2007 ஆகஸ்டு 13 அன்று, புது தில்லியில் நடைபெற்ற நிதிக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, வேண்டிய நிதியும் செம்மொழித் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இக்கூட்ட முடிவால் செம்மொழித் தமிழுக்குத் தன்னாட்சி நிலையுடன்கூடிய ஒரு நிறுவனம் ஏற்படுவதற்கு வாய்ப்பேற்பட்டது.

இதன் பின்னர், 2007 ஆகஸ்டு 18 அன்று அப்போதைய தமிழ்நாடு முதல்வராக விளங்கிய கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அப்போதைய அமைச்சர் திரு. அர்ஜுன் சிங் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கி வைத்தார்.

2007, நவம்பர் 5ஆம் நாள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்குச் சென்னை, சோழிங்கநல்லூர் வட்டம், பெரும்பாக்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடத்தில் 16.586 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசால் ஒதுக்கிடு செய்யப்பட்டது.

2008, மே, 19ஆம் நாள் மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வந்த செம்மொழி நிறுவனம், சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுச் “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” என்ற பெயரில் அமைந்தது. 2008, சூன், 30அன்று சென்னையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத்தை அன்றைய தமிழ்நாட்டு முதல்வராக விளங்கிய கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் திறந்துவைத்தார்.

2009, ஜனவரி 21 அன்று தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் (1975) 27 பிரிவு 10இன் கீழ் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு வழங்கிய இடத்தில் மத்திய அரசின் ரூ. 24,65,47,000/- நிதி ஒதுக்கீட்டில் நான்கு அடுக்குகள் கொண்ட கட்டடப்பணி 2017, மார்ச்சு மாதம் முதல் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழாவினை எதிர்நோக்கி உள்ளது.

வரலாற்று நிலையில் செம்மொழி

மொழியியல் அறிஞர்கள், உலக வழக்கிலிருக்கும் மொழிகளின் சிறப்புகள், தனித்தன்மைகள், அதன் தொன்மைகள் குறித்துப் பன்னோக்கு ஆய்வு முடிவுகளின் வழியாக அறிந்து, அறுதியிட்டு வைத்துள்ளனர். உலக மொழியியல் அறிஞர்கள், தமிழ் மொழியின் சிறப்புகளைப் பல நிலையில், பல காலம் ஆராய்ந்து தெளிந்திருக்கிறார்கள். இதனால், தமிழைச் செம்மொழியாக நடுவண் அரசு அறிவிப்பதற்குரிய பங்களிப்பில் உலகளாவிய மொழியியல் அறிஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாய் இருந்தது.

இந்தியச் சூழலில் செம்மொழி என்பதற்குரிய வரையறைகள் குறித்து விவாதம் இன்னும் நீண்டுகொண்டேதான் இருக்கிறது. இதற்கு விதிவிலக்காகத் தமிழ்நாடு இருந்திருப்பதாக வரலாற்று நிகழ்வுகளின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்ச் சூழலில் நெடுங்காலத்திற்கு முன்னரே செம்மொழி குறித்த மிகத் தெளிவான பார்வையொன்று ஏற்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது. இந்தத் தெளிவிற்கு அடிப்படையாக விளங்கியது, தமிழின் தொன்மையும், அந்தத் தொன்மைக்கு எதிராக வந்த சோதனைகளும் அடிப்படையாக இருந்தன. சோதனை என்பது பிறமொழிகளின் தாக்கம், குறிப்பாக வடமொழித் தாக்கம் என்பதாக இருந்தது.

1903இல் பரிதிமாற் கலைஞர் ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்ற நூலில் ‘செம்மொழி’ என்பதற்குரிய வாதத்தை முன்வைத்துத் “தென்னாட்டின்கட் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றானாராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியேயாம் என்பது நிச்சயம். இவ்வளவுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோடொருங் கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டுயர்தனிச் செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற் போலத் தென்னாட்டுயர் தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடைத்தாம்” என்று பேசியதையும் தமிழ் மொழிக்கு வந்த சோதனைக்கு எதிராக வந்த குரலாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

வடமொழிக்கு இணையாக, அல்லது அதனினும் மேலாகத் தமிழ் மொழியைக் கொண்டு நிலைநிறுத்தும் முயற்சியாகத் தமிழ்ச் ‘செம்மொழி’ என்ற வாதத்தை பரிதிமாற் கலைஞர் முன்வைத்தார். வேறு பல அறிஞர்களும் அப்போது இதே கருத்தை முன்வைத்து எழுதினார்கள்; பல தமிழ் அமைப்புகளும் எழுதின. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கல்விப் புலச் சூழலில் நிலவிய மொழிப்பாடச் சூழல் செம்மொழிச் சொல்லாடலை நிகழ்த்துவதற்கான கூடுதல் வாய்ப்பை வழங்கின.

காலனிய அரசு தமிழை ஒரு வட்டார மொழியாகக் கருதிக் கல்விப் புலச் சூழலில் அதற்கான இடத்தை வகுத்திருந்தது. அந்த வகுப்புமுறையால் தமிழ் ஆசிரியர்களுக்கு, வடமொழி உள்ளிட்ட ஏனைய மொழி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காத நிலையும் இருந்தது. ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. உயர்கல்விப் புலச் சூழலில் தமிழ் மொழிப் புறக்கணிப்பும், ஆசிரியர்களுக்கிடையே நிலவிய ஊதிய ஏற்றத் தாழ்வும் தமிழ் ஆசிரியர்களை வெகுவாகப் பாதித்தது. இதனால் தமிழ் மொழி வடமொழியோடு ஒப்புவைத்து அல்லது மேம்பட வைத்து மதிக்கத்தக்க மொழி என்ற முழக்கம் தமிழாசிரியர்களாலும், தமிழறிஞர்களாலும் முன்வைக்கப்பட்டன.

உயர்கல்வி அளவில் கருவி மொழியாகத் தமிழ் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், ஏனைய கீழைத்தேய மொழிகளான சமஸ்கிருதம், அரேபியம், பாரசீகம் போன்ற மொழிகள் பல்கலைக்கழகத்தில் கருவிமொழிகளாக இருந்தன. காலனிய அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பால் பல தமிழ் அறிஞர்கள் பிற மொழிகளோடு தமிழை ஒப்புநோக்கி ஆராய்ந்து அதன் சிறப்புகளை வெளிப்படுத்தத் தொடங்கினர். பரிதிமாற் கலைஞர் எழுதிய ‘தமிழ் மொழியின் வரலாறு’ எனும் நூல் இந்தப் பின்புலத்தில்தான் எழுதப்பட்டது. இந்த நூலில் தமிழ்ச் ‘செம்மொழி’ என்ற வாதத்தை அவர் மிக விரிவாக முன்வைத்ததற்கும் அதுவே காரணமாக இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புலமைத் தளத்தில் செயல்பட்ட பல தமிழ் அறிஞர்கள் செம்மொழி என்ற கருத்தை வலியுறுத்தி அவரவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளின் வழியே வெளிப்படுத்தினர். பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ்க் கல்வி நிறுவனங்களும் மாநாடுகள் நடத்தித் தீர்மானங்கள் வழியே காலனிய அரசின் கல்விப்புல நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

6, 7, 5. 1918இல் நடைபெற்ற ‘மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபை’ கூட்டத்தில் சமஸ்கிருதம் மொழிப் பாடத்தைப் போன்று பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் தமிழ் மொழிப் பாடமும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 24, 25. 5. 1919இல் ‘கரந்தைத் தமிழ்ச் சங்கமும்’ இவ்வாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

அந்தத் தீர்மானம் ‘தமிழ்மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர்தனிச் செம்மொழியென உறுதிபடப் பலதிறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக்கழகத்தார் தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றித் தமிழ்மொழி, ஓர் உயர்தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக்கொண்டு, இத்தென்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும் கொடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியது.

பல்வேறு அறிஞர்களின், அமைப்புகளின் கோரிக்கைகளைக் காலனிய அரசு தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்தப் போக்கைக் கண்டித்து 21.08.1920இல் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழாவில் “எவ்வளனும் இனிது வாய்ந்துள்ள தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழி வரிசையில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று பலமுறையும், சென்னைப் பல்கலைக்கழகத்தாரை வற்புறுத்தியும், அவர்கள் இன்னும் அவ்வாறு செய்யாமலும், கட்டாயப் பாடமாக ஏற்படுத்தாமலும் இருப்பது பிழையென்று அறிவிப்பதோடு, இனியாவது அவர்கள் தமிழை உயர்தனிச் செம்மொழியாகக் கொள்வதுடன், கட்டாய முறையாகவும், கூடியவரை கல்லூரிகளில் கலை பயில் கருவிமொழியாகவும் கொண்டு, தங்கள் முதல் கடமையைச் செலுத்தும்படி அவர்களை இப்பெருங்கூட்டத்தார் கேட்டுக்கொள்கிறார்கள்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1922இல் நடைபெற்ற பதினோராவது ஆண்டுவிழா, 1923இல் நடைபெற்ற பன்னிரண்டாவது ஆண்டுவிழா, 1938இல் நடைபெற்ற வெள்ளி விழா எனத் தொடர்ந்து தமிழ்ச் செம்மொழி குறித்த தீர்மானத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறைவேற்றிக் காலனிய அரசுக்கு அனுப்பி வந்திருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே தமிழிற்கான ‘செம்மொழி’த் தகுதி குறித்த சமகால குரல்களை நாம் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

பண்டைத் தமிழகத்தில் செம்மொழிச் சொல்லாடல்

தற்காலத்துச் செம்மொழி நிறுவன வளர்ச்சிக்கும், இடைக்காலத்துச் செம்மொழி கோரிக்கைகள் குறித்த நிகழ்வுகளுக்கும் பலநூறு ஆண்டுகளுக்கும் மூத்த முற்காலத் தமிழகத்தில் செம்மொழி என்ற சொல்லாடல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது பெரும் சிறப்புக்குரிய ஒன்றாகும். சங்கப் புலவர் ஒருவர் தாம் இயற்றிய பாட்டொன்றில் ‘செம்மொழி’ என்ற சொல்லைப் புலமைத்துவத்துடன் கையாண்டிருக்கிறார்.

மாமூலனார் எனும் சங்கப் புலவர் தலைவனின் பிரிவுத் துன்பத்தை ஆற்ற இயலாத பெண்ணொருத்திப் பெரிதும் துன்புற்றுத் தோழியிடம் வருந்திக் கூறுவதாகப் பாடிய பாட்டு அகநானூற்றில் அமையப் பெற்றுள்ளது (349). அப் பாடலின் இடையில் நன்னன் என்ற மன்னரின் சிறப்பு கூறவந்த இடத்தில்,

அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை

வரைந்துதாம் பிணித்த தொல்கவின் தொலைய

எவனாய்ந் தனர்கொல் தோழி ஞெமன்ன்

தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி

உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே

உரன்மலி உள்ளமொடு முனைபாழ் ஆக

அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை

சூழாது சுரக்கும் நன்னன்......

என்றோர் குறிப்பைப் புலவர் சுட்டுகின்றார்.

 ‘பொருளின் அளவை அறியும் கருவியாகிய துலாக்கோலை ஒத்த குற்றமற்ற செம்மொழியினை - மெய்ம்மொழியினை உடையவன் நன்னன்’ என்று இதற்கு உரைப்பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதன்வழிச் ‘செம்மொழி’ என்றால் ‘மெய்ம்மொழி’ என்பது சங்கப் புலவரின் கூற்றென்பதை அறியமுடிகிறது. ‘செம்மொழி மாதவர்’ (20:32) என்று சிலப்பதிகாரத்தில் வருவதும் இங்கே எண்ணுதற்குரியது.

தமிழ்மொழி செம்மொழி என்பதற்கு அதன் பழமையும், தொன்மையும் முதன்மைச் சான்றுகளாக விளங்குவதைப் போன்று ‘செம்மொழி’ என்ற சொல்லும் பழமையுடையதாக, தொன்மையுடையதாக இருப்பது தனிச் சிறப்புக்குரிய ஒன்றாகும்.

வரலாற்றுக் காலத்திற்கும் மூத்த தமிழினத்திற்குமுரிய மொழியின் செவ்வியல் தகுதி என்பது தமிழ் மொழியின் தொன்மையோடும், தமிழர்களின் பெருமையோடும் மட்டும் நிற்பதன்று, அது இந்தியப் பண்பாட்டில், இந்திய மொழி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரும் சிறப்புக்குரிய வரலாற்றுத் தகுதியாகவும் கருதத்தக்கது..

- முனைவர் இரா.வெங்கடேசன், இளநிலை ஆராய்ச்சி அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை

Pin It