1914இல் 9, 10, 11ஆவது வகுப்புகளிலும் தமிழைப் பயிற்று மொழியாக்கும் முயற்சி தொடங்கியது. பாரதியார் போன்றவர்கள் தமிழ் பயிற்று மொழியாக வேண்டும் என வற்புறுத்தினர். சட்டசபையில் இது தொடர்பாகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, தோற்கடிக்கப்பட்டது. காரணம்:
1. மக்கள் மத்தியில் ஆதரவில்லை.
2. போதிய பாடநூல்கள், கலைச்சொற்கள் இல்லை.
3. பல்வேறு தாய்மொழிகளைக் கொண்ட மாணவர்கள் படிக்கிறார்கள்.
4. தாய்மொழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை.
இன்று சொல்லப்படும் இதே காரணங்கள்தான் 100 ஆண்டுகளுக்கு முன்னும் சொல்லப்பட்டன என்பது விந்தையாக உள்ளது. 1915இல் நடத்தப்பட்ட ஒரு கணிப்பின்படி, தாய்மொழிவழிப் படிக்கும் மாணவனை விட ஆங்கிலம் வழிப்படிக்கும் மாணவன் திறமை குறைவானவன் என்பது கண்டறியப்பட்டது. எனவே, தாய்மொழிவழிக் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. ஆங்கிலம் இரண்டாவது மொழியாக, ஆனால் கட்டாய மொழியாக இருந்தது.
1917இல் கல்கத்தா பல்கலைக்கழகக் கமிஷன் தாய்மொழியைப் பயிற்று மொழியாக உயர்நிலைக் கல்விக்குப் பரிந்துரைத்தது. கணிதமும் ஆங்கிலமும் மட்டும் ஆங்கில வழி. விடைகள் ஆங்கிலத்திலோ, தாய்மொழியிலோ இருக்கலாம். அரசும் இதற்கு ஆதரவு தந்தது. ஆனால் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை.சட்டசபையில் சத்தியமூர்த்தி 1924இல் எஸ்.எஸ்.எல்.சி வரை தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். கல்வி இயக்குநர் இதற்கு ஆதரவு தெரிவித்தார். ஆயினும், இரு மொழியும் பயிற்று மொழியாகலாம் என்றும், பயிற்று மொழியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தரலாம் என்றும் கூறினார்.
இந்தக் காலகட்டத்தில் ஊ.சா.வேங்கடராம ஐயர் ‘தாய்மொழியை வளர்த்தல்’என்ற நூலை 1922இல் வெளியிட்டு தமிழ்வழிக் கல்வியின் அவசியத்தை வற்புறுத்தினார். ‘கல்விப் பயிற்சிக்குரிய தாய்மொழி’ என்ற தலைப்பில் வே.இராதா கிருஷ்ணப்பிள்ளை ஒரு கட்டுரை எழுதி, ‘பாடமொழியாகத் தமிழ் ஆகுமானால் பாடநூற்கள் தாமே வரும், பாடநூற்கள் இல்லை என்பதை தடையாகக் கூறிப் பயிற்று மொழியாகத் தமிழ் வருவதைத் தடுத்தல் கூடாது’ என்றார்.
1925இல் அரசு அனுப்பிய சுற்றறிக்கை ஆங்கிலம் அல்லது தாய்மொழி பயிற்றுமொழியாக இருக்கலாம் என்றும், விடையை எந்த மொழியிலும் எழுதலாம் என்றும் கூறியது.
1930இல் தமிழகத்தில் இருந்த 300 பள்ளிகளில் 55 பள்ளிகளே 4, 5, 6 வது படிவங்களில் (9, 10, 11ஆவது வகுப்பு) தாய்மொழி வழிக் கற்பித்தன. இக்காலக் கட்டத்திற்குப் பிறகே முதன்முதலாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் தமிழில் எழுதப்பட்டது.
பொதுமக்களிடம் தமிழுக்கு ஆதரவு தேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 6-8-1933 இல் துறையூரில் நடைபெற்ற தஞ்சை - திருச்சி மாவட்டத் தமிழ்ப் புலவர் மாநாட்டுத் திறப்புரையில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தமிழ்வழிக் கல்வி பற்றி வற்புறுத்தியதோடு, பிறமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் அவசியம் என்றும், அதன் மூலம் பாடநூற்கள் இல்லாத குறைதீரும் என்றும் கூறினார்.
1933 டிசம்பர் 27இல் சென்னை பச்சையப்பன் கலாசாலையில் தமிழ் அன்பர் மாநாடு கூடியது. அதற்கு முன் டிசம்பர் 21 அன்று ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. 2200 புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. 70 வெளியீட்டாளர்களும், 150 நூலாசிரியர்களும் புத்தகங்களை அனுப்பியிருந்தனர். இலக்கண இலக்கியப் பகுதியில் 550 நூல்கள் இடம் பெற, சாஸ்திரப் பகுதியில் 325 நூல்கள் இடம் பெற்றன. (சென்னைப் புத்தகாலயப் பிரச்சார சங்க வெளியீடு, 1934) கண்காட்சியைத் திறந்து வைத்த ரைட் ஆனரபின் சீனிவாச சாஸ்திரி, “எந்த விஷயத்தையும் தமிழ்ப் பாஷை மூலமாகவே தெரிந்து கொள்ளும்படியான புஸ்தகங்கள் தமிழில் வெளிவர வேண்டும். தமிழ் அன்பர் மாநாடு இம்முயற்சியைத் தொடங்கவேண்டும். இதுவே என் பிரார்த்தனை” என்று குறிப்பிட்டார்.
சத்தியமூர்த்தி கல்வி அமைச்சரிடம் கோரிக்கை
தமிழ் அன்பர் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் அன்றைய சென்னை மாநிலக் கல்வி அமைச்சர் திவான்பகதூர் குமாரசாமி ரெட்டியார் ஆவார். அவரைத் தலைமை ஏற்குமாறு வழிமொழிந்த எஸ்.சத்தியமூர்த்தி தனது உரையில், “ஸ்ரீமான் ரெட்டியார் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் செய்துகொள்கிறேன். எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சைக்கு இங்கிலீசைத் தவிர மற்ற பாடங்களைத் தமிழ் மூலமாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற உத்தரவை அவர் போட வேண்டும். அவர் மனம் வைத்தால் அதைச் செய்யலாம். அந்த உபகாரம் என்றும் மறவாத உபகாரமாக இருக்கும்,” என்றார்.
குமாரசாமி ரெட்டியாருடைய தலைமை உரை ஒரு முக்கியமான செய்தியைக் கோடிட்டுக் காட்டுகிறது. கல்வி இலாகா அதிகாரிகள் தாய்மொழிக் கல்விக்கு விதிகளைத் தளர்த்தி அனுமதித்தாலும், பொதுமக்கள் தயாராக இல்லை என்பதே அது. அவரது உரையின் பகுதி:
“தாய்ப் பாஷை மூலம் எல்லாப் பாடங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டுமென்பதை நம்முடைய மஹா ஜனங்கள் அனுபவத்தில் கொண்டுவர வேண்டும். இதை நான் சென்ற வருஷம் யூனிவர்சிட்டியில் பட்டமளிப்பு விழாப் பிரசங்கத்தில் சொல்லியிருக்கிறேன். நான் என்னுடைய பேனாவை நாட்டி ஒரு வரி எழுதினால் இதைச் செய்து விடலாம் என்று என்னுடைய நண்பர் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் சொன்னார். நான் அப்படிச் செய்வது சாத்தியமாயிருந்தால் முன்பே செய்திருப்பேன். கல்வி இலாகா அதிகாரிகளும் அவர்கள் விதிகளும் இடங்கொடுத்தாலும் பொது ஜனங்களுடைய மனம் அதற்கிடம் கொடுக்கவில்லை. மாணவர்களுக்கு மனதிருந்தால் இதைச் சாதித்துக் கொள்ளலாம். பொது ஜனங்கள் மனம் இன்னும் மாறவில்லை. இங்கிலீஷ் மோகம் குறையவில்லை.”
இங்கிலீஷ் மோகம் கடந்த 55 ஆண்டுகளில் இன்னும் வளர்ந்திருக்கிறதே தவிரக் குறையவில்லை என்பதே யதார்த்த நிலையாகும். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம்: ‘தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி வரை எல்லாப் பாடங்களையும் கட்டாயமாகத் தமிழில் சுற்றுக் கொடுக்க வேண்டும்‘ என வேண்டுகிறது; மற்றொரு தீர்மானம், தற்கால விஞ்ஞான சாஸ்திர கலைகள் அனைத்தையும் தமிழ் மக்கள் ‘தம் தாய்மொழி வழியாகவே தெரிந்துகொள்ளுவது அவசியம். ஆதலால் சாதாரண மக்களும் மாணவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் அக்கலை நூல்கள் தமிழில் வெளிவர வேண்டும்‘ எனக் கூறுகிறது. மூன்றானது தீர்மானம் கலைச்சொல் பற்றியது.
“தமிழில் தக்க சொற்கள் இல்லாத இடத்து விஞ்ஞான சாஸ்திரம் முதலியனவற்றின் பரிபாஷைச் சொற்களையும் உலக வழக்கில் பொதுமக்களிடையே பெரிதும் பயின்று வரும் பிறமொழிச் சொற்களையும் இயன்ற வரையில் மொழி பெயர்க்காமலே தமிழில் இணைத்துக் கொள்வது உத்தமம்.”
இவ்வகையான முயற்சிகளின் பயனாக 1938இல் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழியே பயிற்றுமொழி எனத் தீர்மானிக்கப்பட்டது. 394 பள்ளிகளில் தாய்மொழி வழிக்கல்வி நடைபெற்றது என 1942ஆம் ஆண்டுக் கல்வி அறிக்கை கூறுகிறது.
வார்தா திட்டம்
காந்தியடிகள் 1937ஆம் ஆண்டில் ஹரிஜன் பத்திரிகையில் தாய்மொழிக் கல்வியை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இதுவே ஒரு திட்டமாக வார்தாவில் 1937இல் கூடிய கல்வி மாநாடு ஒப்புக்கொண்டது. இதில் உள்ள மூன்று திட்டத்தில் தாய்மொழியில் கல்வி புகட்டல் என்பது ஒரு முக்கிய அம்சமாகும். டாக்டர் ஜாகீர் உசேன் தலைமையில் அமைந்த குழுவினரால் இத்திட்டம் ஆராயப்பட்டு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இத்திட்டமே மும்மொழித் திட்டத்திற்கு வழி வகுத்தது. ஆதாரக் கல்விக் கொள்கையின்படி எல்லாக் குழந்தைகளும் 7 ஆண்டுகள் ஆரம்பக் கல்வி அளிக்க வேண்டும். கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டுமென்று இதில் வரையறுக்கப்பட்டுச் சொல்லப்பட்டது.
இத்திட்டம் வடக்கிலும் தெற்கிலும் 1937-1939 வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற மாநிலங்களில் நடைமுறைக்கு வந்தது. 1939இல் கவர்னர் ஆட்சியில் இத்திட்டம் கைவிடப்பட்டு, 1947இல் விடுதலைக்குப் பின் திரும்பவும் இது நடைமுறைக்கு வந்தது. பிறகு கைவிடப்பட்டது.
உயர்நிலைப் பள்ளிகளில் பயிற்றுமொழி விவாதம்
சூரிய நாராயணராவ் பந்துலு என்ற உறுப்பினர் உயர்நிலைப் பள்ளிகளில் (IV, V, VI பாரங்கள்) மொழியல்லாத மற்ற அனைத்துப் பாடங்களும் வட்டார மொழிகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, முதல்முறையாக 20.11.1917ஆம் நாள் எழுப்பினார். இவருடைய கோரிக்கை, பள்ளிகளில் பயிற்றுமொழித் திட்டத்தை மூன்றாவது கட்டத்தை நோக்கி நகர்த்தியது. இதே காலகட்டத்தில் சென்னையில் கூடிய உ.நி.பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மாநாடு வட்டார மொழிகளில் சில பாடங்கள் உட்பட உ.நி.பள்ளிகளில் வட்டாரமொழிகளிலேயே பயிற்றுவிக்கலாம் எனப் பரிந்துரை செய்தது.
வெங்கடரத்தினம் குழு
1921ஆம் ஆண்டில் வட்டாரமொழிகளைப் பயிற்றுமொழியாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்றாவது பாரத்துக்கு மேற்பட்ட வகுப்புகள் அனைத்திலும் (IV, V, VI) வட்டாரமொழிகள் மூலமே அனைத்துப் பாடங்களும் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய சென்னை மாகாண அரசு ஸ்ரீ வெங்கடரத்தினம் நாயுடுவைத் தலைவராகக் கொண்டு உயர்நிலைப் பள்ளிக்கல்வி பற்றி அறிய ஒரு குழுவை நியமித்தது.
குழுவின் பரிந்துரைகள்
பயிற்றுமொழி தொடர்பாக அரசுக்கு, வெங்கடரத்தினம் குழு அளித்த பரிந்துரைகள் பின்வருமாறு:
1. நான்காவது பாரம் முதல் ஆறாவது பாரம் வரையிலான கல்வி அமைப்பில் பயிற்று மொழியாகவும் தேர்வு மொழியாகவும் வட்டார மொழியே அமைய வேண்டும்.
2. ஆங்கிலம் அல்லது வட்டாரமொழிகளைப் பயிற்றுவிக்கவும், தேர்வு எழுதவும் தேர்ந்தெடுக்கும் உரிமை பள்ளியின் மானேஜருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
3. ஆங்கில வழி, வட்டார மொழிவழிக் கல்விக்குச் சரிசமமான நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.
4. பள்ளி இறுதித் தேர்வுக்கான (S.S.L.C.) கேள்வித்தாள்கள் ஆங்கிலத்திலும் வட்டாரமொழிகளிலும் தயாரிக்கப்பட வேண்டும். (G.O.No.239, Law (Education), dated 14.2.1923)
இக்குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
பரிந்துரைகளுக்கு எதிர்ப்பும் ஆதரவும்
அரசின் இம்முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 1921இல் டபிள்யு விஜயராகவ முதலியார் வட்டாரமொழி தவிர மற்ற அனைத்துப் பாடங்களும் ஆங்கில வழியிலே கற்பிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்தார். பயிற்றுமொழித் திட்டத்தினை (IV, V, VI) பாரங்களுக்கு விரிவுபடுத்தவும் ஆங்கிலம் அல்லாத அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வு வட்டார மொழிகளிலேயே நடத்தவேண்டியும் கோரிக்கைகள் (1919 சூரிய நாராயண ராவ் பந்துலு) எழுந்த காலகட்டத்தில் அதற்கு முரணாக விஜயராகவ முதலியாரின் கோரிக்கை பயிற்றுமொழித் திட்டத்திற்குச் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் எதிர்ப்பு இருந்ததை வெளிப்படுத்தும் சான்றாகும். விஜயராகவ முதலியாரின் தீர்மானத்திற்குப் பதில் அளித்த அரசு கல்கத்தா பல்கலைக்கழக ஆணையத்தின் பின்வரும் தீர்மானத்தைச் சுட்டிக் காட்டியது.
தேர்வு மொழியாக ஆங்கிலம், கணிதம் தவிர மற்றவை அனைத்தும் வட்டார மொழிகளிலேயே நடத்தப்பட வேண்டும். கணிதத் தேர்வை வட்டார மொழிகளிலே எழுத அனுமதிக்கலாம். இதனைத் தொடர்ந்து விஜயராகவ முதலியார் பயிற்றுமொழியாக ஆங்கிலமே தொடர வேண்டும் என்ற தன் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றார்.
கட்டாயமாக்கம்: வேண்டுகோள்
இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும் தீவிர காந்தி இயக்க ஆதரவாளராகவும் அறியப்பட்டவர் சத்தியமூர்த்தி. இவர் ஆங்கில மொழிவழிக் கல்வி இந்தியர்களுக்கு எதிரானது என்ற கருத்துடையவர். சத்தியமூர்த்தி அன்றைய சென்னை மாகாணக் கல்வி முறையில் பயிற்றுமொழித் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என 1923ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் வருமாறு:
“ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வட்டார மொழிகள் வழியாக மாகாணத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பயிற்றுமொழித் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு உதவும் வகையில் கல்விவிதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வட்டார மொழிகள் வழியாகப் பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.” (G.O.No.1851, Law (Education), Dated 27.10.1925)
அவர் கொண்டுவந்த தீர்மானத்தை பனகல் அரசர் (ராமராயநிங்கர்) தலைமையிலான நீதிக்கட்சி அரசு பொதுக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி, மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட உயர்கல்வி வாரியங்களிடமும் கருத்துக் கேட்டு அனுப்பக் கோரியது. (Memorandum No. 4759/BI Law (Education),
Dated 12.01.1924)
1924இல் திரு. சத்தியமூர்த்தி மேல் சபையில், “உயர்நிலைப் பள்ளிகளில் வட்டார மொழிகள் கட்டாயப் பயிற்று மொழியாக்கப்பட வேண்டும்,” என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானம் மாவட்ட உயர்நிலைக் கல்வி கழகங்களுக்குக் (District Secondary Education Boards) கருத்துக் கேட்டு அனுப்பப்பட்டது. மாவட்டக் கல்விக் கழகங்கள் இத்தீர்மானத்தின் மீது ஒருமித்த கருத்துக் கொண்டிருக்கவில்லை. கல்வித்துறை இயக்குநர் இக்கருத்துகளோடு தமது குறிப்புகள் சிலவற்றையும் சேர்த்து அரசுக்கு அனுப்பினார். அவற்றில் பின்வரும் செய்திகள் இடம் பெற்றிருந்தன.
1. உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், வட்டார மொழி ஆகிய இரண்டின் வழியேயும் கற்பிப்பது, வட்டார மொழிகளின் படிப்படியான வளர்ச்சிக்கு உதவும். அதேவேளையில் இருக்கின்ற முறையை முழுவதும் மாற்றா வண்ணம் இருக்க இந்த இணக்கமான நிலை பயன்படும்.
2. பயிற்று மொழியைக் கட்டாயமாக்குவதைவிடப் பள்ளி நிருவாகத்தினர், பெற்றோர்களின் விருப்பத்திற்கு விட்டு விடுவதே பயிற்று மொழிச் சிக்கலை எளிதாகத் தீர்ப்பதற்குரிய வழியாகும்.
3. உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலத்திலிருந்து தாய்மொழி வழியாகக் கற்பது படிப்படியாகவே மாற்றம் பெற வேண்டும். இதற்கான தொடக்கத்தை நான்காம் படிவத்தில் தொடங்கி மூன்றாண்டுகளில் சிறிது சிறிதாக மேற்கொள்ள வேண்டும்.
அரசு மேற்குறித்த இயக்குநரின் கருத்தை ஏற்று அவரைச் சென்னைப் பல்கழைக்கழகக் கல்விக் குழுவில் கலந்து கொண்டு இதற்கான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறு பணித்தது.
1925இல் கல்வி இயக்குநர், சென்னைப் பல்கலைக்கழகக் கல்விக் குழுவோடு இணைந்து தயாரித்த திட்டத்தை அரசின் ஒப்புதல் பெற்று பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை மூலம் அனுப்பினார். அந்த அறிக்கையில் பின்வரும் செய்திகள் இடம் பெற்றிருந்தன.
1. பள்ளி நிருவாகங்கள், உயர்நிலைப் பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலத்தையோ வட்டார மொழியையோ தெரிவு செய்து கொள்ளலாம்.
2. ஆயினும் ஆங்கில மொழிக்குரிய பாடவேளை உள்பட பள்ளி நேரத்தில் பாதிநேரம் தாய்மொழி வழிக் கற்பிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.
3. பள்ளிப் பொதுத் தேர்வில், ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், ஈப்ரு, பிரஞ்சு, செருமன் ஆகிய மொழிப் பாடங்களைத் தவிர மற்றவற்றிற்கு வினாத்தாள்கள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, மராத்தி, உருது ஆகிய மொழிகளில் இருக்கும். வடமொழி மற்றும் தாய்மொழி வினாத்தாள் அந்தந்த மொழிகளில் மட்டுமே இருக்கும். அரபு, பெர்சியன் மொழிகளுக்குரிய வினாத்தாள் உருதுவில் மட்டுமே இருக்கும். மாணவர்கள் மொழிப் பாடமல்லாத பிற பாடங்களுக்கும் ஆங்கிலத்திலோ அல்லது அந்த வினாத்தாள் அமைந்துள்ள மொழியிலோ விடையளிக்கலாம்.
சத்தியமூர்த்தியின் தீர்மானம் பற்றிய கருத்துக்கள் பல மாவட்டக் கல்வி வாரியங்களில் விவாதிக்கப்பட்டன. பெரும்பாலான கல்வி வாரியங்கள் சத்தியமூர்த்தியின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன. எனினும், பள்ளியிறுதித் தேர்வுகளில் வட்டாரமொழிகளில் தேர்வு எழுதுவது, கட்டாயப் பயிற்றுமொழித் திட்டம் ஆகியவை குறித்த மாறுபட்ட கருத்துக்களைப் பல மாவட்டக் கல்வி வாரியங்கள் தெரிவித்திருந்தன. அக்கருத்துக்களை அன்றைய பொதுக் கல்வித்துறை இயக்குநர் லிட்டில் ஹாலீயஸ் (Little Halies) அரசுக்குக் கடிதம் எழுதினார், அக்கடிதத்தில், “பயிற்று மொழித் தேர்ந்தெடுப்பு குறித்து சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். நான்காவது பாரம் முதல் ஆறாவது பாரம் வரை உடனடியாக வட்டார மொழிகளைப் பயிற்றுமொழி ஆக்குவதற்குப் பதிலாக முதல் ஆண்டு நான்காவது பாரத்தில் பயிற்றுமொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.” (R.C.No.82-0/24) எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்த ஆண்டுகளில் இத்திட்டத்தை V, VI பாரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என அரசுக்குத் தெரிவித்திருந்தார்.
அவரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அரசு வெங்கடரத்தினம் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கையைத் தயாரித்து சென்னைப் பல்கலைக்கழகக் கல்விக் குழுவுக்கு அனுப்பி அதன் ஆலோசனையை வழங்கக் கேட்டுக் கொண்டது.
உயர்நிலைப் பள்ளிகளில் பயிற்றுமொழி ஆணை (1925)
அரசு செயலர் வெங்கடரத்தினம் குழுவின் பரிந்துரைகளைச் சென்னைப் பல்கலைக்கழகக் கல்விக்குழுவிற்கும் (Academic Council) பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின் குழுவிற்கும் (Council of Affiliated Colleges) அனுப்பினார். அக்குழுக்களில் நடந்த விவாதங்களில் பள்ளிகளில் பயிற்றுமொழியைக் கட்டாயப்படுத்தும் திட்டத்திற்குப் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவில்லை. இருப்பினும் வட்டார மொழிகளைப் பயிற்றுமொழியாக IV, V, VI பாரங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முந்தைய கல்கத்தா பல்கலைக்கழக ஆணையத் தீர்மானத்தின்படி இக்குழுக்கள் ஏற்றுக்கொண்டன. இதனைத் தொடர்ந்து அரசு செயலர் பல்கலைக்கழகக் கல்விக்குழு இணைப்புக் கல்லூரிக் குழுக்களின் கருத்துக்களை அரசுக்குத் தெரிவித்தார். இத் தகவல்களைக் கவனமாகப் பரிசீலனை செய்த அரசு உயர்நிலைப் பள்ளிகளில் (IV, V, VI) பாரங்களில் வட்டார மொழிகளைப் பயிற்றுமொழியாக்கும் அரசு ஆணையை வெளியிட்டது. அந்த அரசாணை வருமாறு:
“உயர்நிலைப் பள்ளிகளில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பாரங்களில் பயிற்றுமொழியாக வட்டாரமொழி அல்லது ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கப் பள்ளிகளின் மேனேஜர்களுக்குச் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. வட்டார மொழிவழிக் கல்விக்கும், ஆங்கிலவழிக் கல்விக்கும் சரிசமமான அளவில் நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் ஆங்கில மொழிப் பயிற்சிக்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.”
“பள்ளியிறுதித் தேர்வுகளின் அனைத்துப் பாடங்களுக்குமான வினாத்தாள்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, மராத்தி, உருதுமொழிகளில் தயாரிக்கப்பட வேண்டும் இதில் மொழிப்பாடங்களான ஆங்கிலம், ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் பாடங்களின் தேர்வுத்தாள்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். சமஸ்கிருதம் மற்றும் வட்டார மொழிகளின் தேர்வுத்தாள்கள் ஆங்கிலத்தில் இருக்கக்கூடாது. அரேபிய மற்றும் பெர்சிய மொழித் தேர்வுத்தாள்கள் உருதுமொழியிலேயே அமைதல் வேண்டும். வட்டார மொழிகளிலும் ஆங்கிலத்திலும் தேர்வுத் தாள்களுக்கு விடை எழுதும் உரிமை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பாரங்களில் வட்டார மொழிகளிலேயே பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் மட்டுமே வட்டார மொழிகளில் தேர்வு எழுதும் உரிமை வழங்கப்பட வேண்டும்.”
“(i) எதிர்வரும் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை (ii) ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு தேர்வுத்தாளையும் எந்த மொழிகளில் எழுதவிருக்கிறார் என்ற விவரங்களை எல்லாக் கல்வி நிலையங்களின் தலைவர்களும் (நிர்வாகிகளும்) பள்ளியிறுதித் தேர்வு வாரியத்தின் செயலருக்கு ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகத் தெரியப்படுத்த வேண்டும். பள்ளியிறுதித் தேர்வுச் சான்றிதழ் ஒவ்வொரு மாணவரும் எந்த மொழியில் பயிற்றுவிக்கப்பட்டார் என்ற விவரமும் எந்த மொழியில் பதில் அளித்தார் என்ற விவரமும் இடம் பெறவேண்டும். (G.O. No. 1851, Law (Education), Dated 27.10.1925)
1925 அக்டோபர் மாதம் அரசு அனுப்பிய சுற்றறிக்கையைத் தொடர்ந்து பள்ளிகள் பயிற்றுமொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
பயிற்றுமொழி ஆணை (1925) செயல்படுத்த வேண்டுகோள்
1926ஆம் ஆண்டு பொதுக்கல்வித்துறை இயக்குநரின் தகவலின்படி மாகாணத்தில் இருந்த 90 பள்ளிகள் பயிற்றுமொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால், அவர் கொடுத்த தகவலில் பயிற்றுமொழித் திட்டத்தில் எந்தப் பாடங்கள் கற்பிக்கப்பட்டன என்பது குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை.
காளீஸ்வரராவ் என்ற உறுப்பினரின் வட்டார மொழிகளில் பயிற்றுமொழித் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு. “அரசின் சுற்றறிக்கை இந்த ஆண்டு முதல்நாள் நடைமுறைக்கு வருகிறது. நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகே அதன் செயல்பாடுகளைப் பொறுத்தே புதிய மாற்றங்களை மேற்கொள்ள முடியும். அடுத்த ஆண்டு முதல் வட்டார மொழிகளையே கட்டாயப் பயிற்றுமொழியாக்க வேண்டுமானால் இப்போது இருக்கிற குறைந்த காலத்தில் போதுமான பாடப்புத்தகங்களை உருவாக்க முடியாது. வட்டாரமொழிகளில் அறிவியலைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் புதிய திட்டம் (வட்டாரமொழி) பயிற்றுமொழி நடைமுறைப்படுத்தும்போது தேவைப்படுவார்கள். அவர்களை ஆசிரியர் பணிக்குப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள பள்ளிகளின் மானேஜர்களிடம் போதுமான நிதியிருக்க வாய்ப்பு இல்லை.”(G.O.No. 974. Law (Education), Dated 16.05.1927) என்ற காரணம் அரசுத்தரப்பில் பதிலாகக் கூறப்பட்டது.
இக்கால கட்டத்தில் விடுதலைப் போராட்ட உணர்வு தமிழகத்தில் வலுப்பெற்றிருந்தது. அதனால் ஆங்கிலம் அந்நியர்களின் மொழி என்ற விரோத உணர்வு பரவியிருந்தது. எனவே ஆங்கிலத்துக்குப் பதிலாக வட்டார மொழிகளை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
1927, 28, 29, 30, 32, 37 ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தித் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன என்றாலும் 1929இல் சத்தியமூர்த்தியும், மல்லையாவும் கொண்டுவந்த தீர்மானத்தில் ஐந்து ஆண்டுகள் காலக்கெடு தரலாம் என்று கூறப்பட்டது. இத்தீர்மானங்களின் மீது நடந்த விவாதங்களில் தாய்மொழிக் கல்விக்கான இன்றியமையாமையும் அக்கல்வியை வழங்குவதில் உள்ள சிக்கல்களும் விரிவாக விளக்கப்பட்டன.
1928-29 கல்வி ஆண்டில் அரசின் பயிற்றுமொழி ஆணையை ஏற்றுக்கொண்டு சென்னை மாகாணத்தில் செயல்பட்டு வந்த ஐம்பத்து ஐந்து (பள்ளிகளில்) உயர்நிலைப் பள்ளிகளின் IV முதல் VI பாரங்களின் வகுப்புகள் வட்டார மொழிகளிலேயே மொழியல்லாத பாடங்களைக் கற்பித்து வந்தன. ஆனால், இதே நேரத்தில் ஆங்கிலவழிக் கல்விக்கு அதிக அளவு ஆதரவு இருந்தது. பயிற்றுமொழியாக ஆங்கில வழியில் கற்ற மாணவர்கள் அவ்வழியிலேயே படிப்பைத் தொடர்ந்தனர். வட்டாரமொழிகளில் IV, V, VI பாரங்களில் பயின்ற மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லும்போது ஆங்கில வழியில் கற்க வேண்டியிருந்தது. எதிர்கால நலன் கருதி பலர் ஆங்கிலவழிக் கல்வியையே தொடர்ந்தனர்.
கட்டாயமாக்கம் - மீண்டும் வேண்டுகோள்
பயிற்றுமொழித் திட்டத்தில் (IV, V, VI) முன்னேற்றமில்லாததை காளீஸ்வரராவ் (05.03.1929), சத்தியமூர்த்தி (20.03.1929), டாக்டர் பி.எஸ்.மல்லப்பா (20.03.1929) ஆகிய உறுப்பினர்கள் அரசுக்குச் சுட்டிக்காட்டினர். அரசுத்தரப்பில் பள்ளி நிர்வாகிகளுக்குப் பயிற்றுமொழித் தேர்ந்தெடுக்கப்படும் உரிமை தரப்பட்டுள்ளதைப் பற்றிய தகவலும், ஆசிரியர்கள், நூல்கள் இல்லாத நிலையும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டன. 1930ஆம் ஆண்டு பயிற்றுமொழி குறித்து மீண்டும் (22.02.1930) உறுப்பினர்கள் பி.செட்டியும், ஜி.ஹரிசர்வோட்டம்மாராவும் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த அரசு 1928-29 காலகட்டத்தில் 55 பள்ளிகள் மட்டுமே விரும்பி பயிற்றுமொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளன என்றது. இதைத் தொடர்ந்து ஹரிசர்வோட்டம்மாராவ் பயிற்றுமொழித் திட்டத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்றார்.
இதற்குப் “பயிற்றுமொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பள்ளிகளிடமே உள்ளது. கட்டாயப்படுத்தி பயிற்றுமொழியாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. அந்த எண்ணம் உருவாகக் காரணம், அதற்கான தேவை எதுவும் எழவில்லை.” (G.O.No. 792, Education, Dated 13.04.1930) என்றவாறு அன்றைய அமைச்சர் சுப்பராயன் பதில் அளித்தார்.
மேற்கண்ட விவாதங்களைப் பார்க்கும் போது அன்றும் இன்றும் ஆங்கிலமோகமே தமிழ் பயிற்று மொழியாக இருக்கத் தடையாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.
இதற்குரிய காரணங்களைப் பின்வருமாறு க.ப. அறவாணன் கூறுகிறார் .“களப்பிரர், பல்லவர் காலம் தொடங்கி (1700 ஆண்டுகள்) அண்மைக் காலம் வரை, தமிழர் சமஸ்கிருதத்தைத் தேவ பாஷை என்று கருத வைக்கப்பட்டனர் ; தம் தமிழ்மொழி ‘நீச பாஷை’ என்று நம்ப வைக்கப்பட்டனர். சமஸ்கிருத மொழிக்குரியோர் தேவர்கள் என்றும் தமிழ்மொழிக்குரியவர்கள் தாம் நீசர்கள் என்றும் இவரே ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர். இந்தத் தேவ நிலையை ஏற்றுக் கொண்ட தமிழர் அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த உருது, தெலுங்கு, மராட்டியம் முதலான மொழிகளுக்கும் தேவத்தன்மை கொடுத்தனர். இந்த இடத்தில், ஆட்சிவழி ஆங்கிலம் குடியேறிய போது அப்படியே அதனையும் எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டனர்; தற்பொழுது அதே இடத்தில் வேறொரு மொழியையும் ஏற்க ஆயத்தமாக இருக்கின்றனர்- சுமைகளைச் சுமந்தே பழக்கப்பட்டுப் போன ஒட்டகத்திற்குச் சிறு சுமையை அகற்றினாலும் பயணம் போகாது என்பது போலவே தமிழர், மொழிச் சுமையை இழக்க ஆயத்தமாக இல்லை. அழுக்கேறி நெடுங்காலம் குளிக்காமல் இருக்கும் ஒருவருக்கு அழுக்கே நோயாகத் தெரிதலைப் போல, தமிழர் உடம்பில், பல்லாண்டுகளாக ஏறிய வேறு வேறு இனப்பண்பாட்டு மேலாண்மைகள் வேறு பிரிக்க முடியாமல் ஒண்டி ஒட்டிக் கொண்டு விட்டன” என்று கூறுகிறார்..
- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.