(எச்சவியல் நூற்பாக்களை முன்வைத்து)
1. சமுதாயப் படிநிலைகளும் மொழி வேறுபாடும்
தொல்காப்பியர் எச்சவியலில் நான்கு சூத்திரங்களில் சமுதாயப் படிநிலைகளுக்கேற்ப மொழி மாறும் என்ற உண்மையைப் புலப்படுத்துகிறார். அச்சூத்திரங்கள் கீழே தரப்படுகின்றன.
ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும்
இரவில் கிளவி ஆகிடன் உடைத்தே.
அவற்றுள்
ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே.
தாவென் கிளவி ஒப்போன் கூற்றே.
கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே.
மனிதனை ஒரு சமூக விலங்கு என்பார்கள். அவன் எப்போதும் கூடி வாழ்வதையே விரும்புகிறான். அவ்வாறு கூடி வாழ்கையில் மனிதர் களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் தோன்றிவிடுகின்றன. ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் உயர்ந்தவர் என்றும் தாழ்ந்தவர் என்றும், சமமானவர்கள் என்றும் பிரிந்து கிடக்கிறார்கள். செல்வம் படைத்த வர்கள் உயர்ந்தவர்களாகவும், வறுமையில் வாடும் ஏழைகள் தாழ்ந்தவர்களாகவும் கருதிக் கொள்கிறார்கள். வயதில் மூத்தவர் உயர்ந்தவராகவும், வயதில் இளையவர் தாழ்ந்தவராகவும் சில வேளைகளில் கருதப்படக்கூடும். இவ்வாறு உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற படிநிலையை மொழியும் பிரதி பலிக்கக்கூடும்.
நீ, நீங்கள் என்ற இரு முன்னிலைப் பெயர் களின் பயன்பாட்டை எடுத்துக் கொள்வோம். நீ என்பதைச் சிறுவர்களிடமும், நம்மைவிடத் தாழ்ந்த வர்கள் என்று கருதுகிறவர்களிடமும் பயன்படுத்து வோம். தம்பி, நீ போ என்று சொல்வோம். ஒத்த வயதுடைய நண்பர்களிடம் நெருங்கிய நட்பின் காரணமாக ‘நீ’ என்ற முன்னிலைப் பெயரைப் பயன்படுத்துவோம். அதே வேளையில் நம்மை விட உயர்ந்தவர்களிடமும், அதிகாரிகளிடமும் ‘நீங்கள்’ என்ற முன்னிலைப் பெயரையே பயன் படுத்துவோம். ஒருவரின் சமூக அந்தஸ்துக்கேற்ப மொழி மாறுபடும் என்ற உண்மையையே மேற் கண்ட எடுத்துக்காட்டு புலப்படுத்துகிறது.
யாழ்ப்பாணத் தமிழில் வா, போ, கொடு போன்ற ஏவல் வினைகளோடு - அன் விகுதி சேர்த்து வாவன், போவன், கொடன் போன்ற ஏவல் வினைகள் வருவிக்கப்படுகின்றன. ஒருவரைப் பார்த்து வா என்று சொல்வதற்கும் வாவன் என்று சொல்வதற்கும் பொருள் வேறுபாடு உண்டு. வா, போ, கொடு என்று குறிப்பிடும்போது கட்டளைக் குறிப்பு உண்டு. வாவன், போவன், கொடன் என்று கூறும்போது கட்டளைக் குறிப்பு இல்லை (சுசீந்திர ராஜா, 1999: 157-161). வாவன், போவன், கொடன் என்று கூறும்போது ‘குறித்த செயலைச் செய் தாலும் செய்க, செய்யாவிட்டாலும் விடுக’ என்ற பொருளை உணர்த்துகிறது.
இத்தகைய சமுதாயப் படிநிலைகளை மொழி பிரதிபலிக்கும் என்ற உண்மையை ஈ, தா, கொடு ஆகிய மூன்று வினைச் சொற்களை வைத்து தொல்காப்பியர் விவரிக்கிறார். ஈ, தா, கொடு ஆகிய மூன்று வினைகளையும் ‘இரவின் கிளவி’ என்று குறிப்பிடுகிறார். இரத்தல் தன்மையை உணர்த்தும் கிளவிகள் இவை. ஒருவன் மற்றொரு வனிடம் ஒன்றைக் கேட்டுப் பெறுவதற்கு உரிய சொற்களாகும். ஆனால் இம்மூன்று சொற்களையும் ஒருவன் ஒரே ஆளிடம் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் பிழையாகும். சமுதாயத்திலுள்ள மூன்று படிநிலைகளான உயர்ந்தோன், ஒப்போன், தாழ்ந்தோன் ஆகியவற்றிற் கேற்பப் பயன்படுத்த வேண்டும்.
உயர்ந்தோன் - கொடு
ஒப்போன் - தா
தாழ்ந்தோன் - ஈ
நச்சினார்க்கினியம் எடுத்துக்காட்டு:
இவற்கு ஊண் கொடு (உயர்ந்தோன்- தாழ்ந்தவனிடம்)
எனக்குச் சோறு தா (ஒப்போன்- ஒப்போன்
பெருமா! எனக்கொரு பிடிசோறீ! (தாழ்ந்தோன்- உயர்ந்தோனிடம்)
சமுதாயப் படிநிலைகளுக்கு ஏற்ப மொழி வேறுபடும் என்ற சமுதாய மொழியியல் (sociolinguistics)) கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்ட நூற்பாக்கள் இவை என்று கருதலாம்.
2. சமூகச் சூழலுக்கேற்ற மொழி (Language and context)
சமூகச் சூழலுக்கேற்ற மொழியைப் பயன் படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலுக்குப் பொருத்தமான (appropriate) மொழியையே அந்தச் சூழலில் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பொருத்த மில்லாத மொழியைப் பயன்படுத்தினால் அது நகைப்பிற்கிடமாகும். அலுவலகச் சூழலில் அலு வலகம் சார்ந்த சொற்களை மிகுதியாகப் பயன் படுத்துவர். அந்தச் சூழலுக்குப் பொருத்தமானவை அவை. அவற்றையே அங்குப் பயன்படுத்த வேண்டும். அவற்றை வீட்டுச்சூழலில் பயன்படுத்த முடியாது. திருமண வீட்டில் நல்ல விஷயங்களைப் பேசுவதும் மங்கலமாகப் பேசுவதும் பொருத்தமானவை. மங்கலமான சூழ்நிலையில் அமங்கலமாகப் பேசுவது வருத்தத்தை ஏற்படுத்தும். பல்வேறு சமூகச் சூழல்களையும் (social context and situations)) அறிந்து மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற சமுதாய மொழியியல் கோட்பாட்டைத் தொல்காப்பியர் நன்கு அறிந்திருந்தார். தொல் காப்பியர் தரும் இரு நூற்பாக்கள்:
அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் (442)
மறைக்கும் காலை மரீஇயது ஓராஅல் (443)
நல்லோர் அவைக்கண் கூறத்தகாத சொற்கள் உள்ளன. அத்தகைய இடக்கர்ச் சொற்களை மறைத்துத் தகுதியுடைய சொற்களால் கூற வேண்டும். நீண்ட காலமாக மருவி வழங்கிவரும் அச்சொற்களை நீக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். “(நல்லோர்) அவை என்ற ஒரு சமூகச் சூழலையே தொல்காப்பியர் சுட்டியுள்ளார். வேறு சூழல்களைச் சுட்டவில்லை. இதனால் வேறு சமூகச் சூழல்கள் இல்லை என்று பொருள் இல்லை. கூறியதைக் கொண்டு கூறாததைப் புரிந்து கொள்ளுதல் போல நல்லோர் அவை” என்றது மொழி பயன்படுத்தப்படும் சமூகச் சூழல்களைக் குறித்து நின்றது.
சமூகச் சூழலுக்கேற்ப மொழியைப் பொருத்த மாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சமுதாய மொழியியல் கோட்பாட்டை ஆசிரியர் சுட்டு கிறார் என்று கருதலாம்.
3. நில அடிப்படையில் மொழி வேறுபாடுகள் (Language and Geography)
நில அடிப்படையில் மொழியில் காணப்படும் வேறுபாடுகளை ஆய்வு செய்கின்ற இயல் கிளை மொழியியல் (Dialectology) எனப்படும். சமகாலத்தில் மொழியில் காணப்படுகின்ற வேறுபாடுகளைக் கண்டறிந்து விவரிப்பது கிளைமொழியியலின் முக்கிய நோக்கமாகும். கிளை மொழிகளைக் கண்டறிய மொழியியல் அறிஞர்கள் மொழி பாகு பாட்டுக்கோடு (isogloss) என்ற கருத்தினை வலியுறுத்துவர்.
தமிழிலுள்ள கிளைமொழிகளைப் பின்வரு மாறு வகைப்படுத்துவர் (சீனுவாசவர்மா, 1977: 111).
1. வடக்குக் கிளைமொழி
2. கிழக்குக் கிளைமொழி
3. மேற்குக் கிளைமொழி
4. தென்கிளைமொழி
5. இலங்கைத் தமிழ்
ஒவ்வொரு கிளைமொழிகளுக்குள்ளும் உட் கிளை மொழிகள் இருக்கலாம். தென் கிளை மொழியை எடுத்துக் கொண்டால் றகர ஒலியன் அங்குச் சிறப்பாக ஒலிக்கப்படுகின்றது. றகர ஒலியன் இக்கிளைமொழியின் பாகுபாட்டுக் கோடாக விளங்குகிறது. றகரக் கிளைமொழி என்றே இதனை அழைக்கின்றனர்.
சோழ நாட்டில் வழங்கும் பேச்சுத் தமிழை மத்தியக் கிளைமொழி என்று கூறுவர். ழகர ஒலியனே இக்கிளைமொழியின் பாகுபாட்டுக் கோடாக விளங்குகிறது. இன்று ல், ழ், ள் ஆகிய மூன்று ஒலியன்கள் வழங்கும் கிளைமொழி மத்தியக் கிளைமொழி மட்டுமே. இத்தகைய பாகுபாட்டுக் கோடுகளைக் கொண்டு கிளை மொழிகளை வேறுபடுத்துவர்.
தொல்காப்பியர் நில அடிப்படையில் நிலவு கின்ற மொழி வேறுபாடுகளை ஒரு நூற்பாவின் வழி விளக்கியுள்ளார். இச்சூத்திரமும் எச்சவியலில் காணப்படுகின்றது.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச் சொற்கிளவி (400)
செந்தமிழ் வழங்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த நாடுகள் பன்னிரண்டு. அவ்அந் நாடுகளில் வாழும் மக்களுக்கு மட்டுமே பொருள் விளங்குமாறு வழங்கும் சொற்கள் திசைச் சொற்களாகும். திசைச் சொல் என்ற வழக்கு கிளைமொழிகளைக் குறிப்பாக வட்டாரக் கிளைமொழிகளைக் குறிக்கின்றது (சீனிவாசவர்மா, 1977: 103).
கிளைமொழி கிளைமொழி பொதுப் பொருள்வடிவம்
1. தென்பாண்டி நாடு பெற்றம் ஆ, எருமை
2. குட்டநாடு தள்ளை, ஞெள்ளை தாய்
3. குடநாடு அச்சன் தந்தை
4. கட்கா நாடு கையர் வஞ்சர்
5. சீதநாடு எலுவன், இகுளை, ஏடா, தோழிதந்துவை தம்மாமி
6. பூழிநாடு ஞமலி, பாழி நாய், சிறுகுளம்
7. அருவாநாடு செறு வயல், செய்
8. அருவாநாடு கேணி சிறுகுளம்
9. அருவாவடதலை நாடு குட்டை குறுணி (அளவு)
10. அருவாள்வடதலை நாடு எகினம் புளி
11. வேணாடு கிழார் தோட்டம்
12. பாண்டிநாடு செய் செறு
13. மலாடு இகுளை தோழி
14. புனல்நாடு ஆய் தாய்
(சீனுவாசவர்மா, 1977: 107-108)
தொல்காப்பியர் பன்னிரண்டு வட்டார வழக்குகளைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வட்டார வழக்குகளுக்கு மொழி பாகுபாட்டு கோடுகளை வகுக்கும் முயற்சியாக உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டுகள் தந்துள்ளனர். ஒலியனியல், உருபனியல் நிலையில் வழங்கும் வேறுபாடுகள் சுட்டப்பட வில்லை. சொல் நிலையில் வழங்கும் தனிக்கூறுகள் மட்டுமே தெரியவருகின்றன. மொழி வட்டார நிலையில் வேறுபடும் தன்மையுடையது என்ற உண்மையைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார்.
4. உழற்சியின் காரணமாகத்
தோன்றும் வேறுபாடுகள்
பதட்டம் என்ற சொல் பதற்றம் என்றும் உச்சரிக்கப்படுகின்றது. இவ்விரு சொற்களும் ஒரே பொருளைத் தருகின்றன. பொருளில் எந்த வேறு பாடுமில்லை. உச்சரிப்பில்/ எழுத்தில் மட்டுமே வேறுபாடு உள்ளது. இத்தகைய சொற்களில் காணும் வேறுபாட்டை உழற்சி (free variation) என்று கூறுவர். கோவை என்றும் கோர்வை என்றும் எழுதப்படுவதை உழற்சி எனலாம். வாத்தியார் என்ற சொல்லை இரண்டு வகையாக உச்சரிப்பர். Vaadiyaar என்றும் vaattiyaar என்றும் இருவேறு உச்சரிப்புடன் வழங்கப்பெறும் இச் சொற்கள் ஒரே சொல்லே. உச்சரிப்பு வேறுபாடு பொருள் வேறுபாட்டைத் தோற்றுவிக்கவில்லை. எனவே உழற்சி என்று இதனையும் கூறுவர். மொழியில் உழற்சி காணப்படும். இதனைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல் (453)
குறைத்தன ஆயினும் நிறைப்பெயர் இயல (454)
ஒரு சொல்லுக்குத் தலை, இடை, கடை என மூன்று இடம் உண்டு. அம்மூன்றனுள் ஒன்றை எவ்விடத்துக் குறைக்க வேண்டுமோ, அவ்விடத்தை அறிந்து குறைத்துச் சொல்லுதல் வேண்டும்.
தாமரை-மரை (முதற்குறை)
ஓந்தி-ஓதி (இடைக்குறை)
நீலம்-நீல் (கடைக்குறை)
அவ்வாறு குறைக்கப்பட்ட பெயர்கள் முறையே தாமரை, ஓந்தி, நீலம் என்னும் முழுப் பெயர்ப் பொருளைத் தந்தன. பந்தல்-பந்தர், புத்தி-புந்தி போன்ற சொற்களையும் (போலி) கருதிப் பார்க்கலாம்.
செய்யாய்-முன்னிலை வினைச்சொல்
செய்யாய், உண்ணாய், கிடவாய், தாராய் போன்ற வினைச் சொற்கள் முன்னிலை வினை முற்றுக்களாகும். இச்சொற்களிலுள்ள- ஆய் என்னும் விகுதி கெட்டு செய், உண், கிட, தா என்னும் சொற்களாய் நின்று ஏவற் பொருளை உணர்த்தலும் உண்டு. இவற்றையும் உழற்சி வேறுபாடு என்று கூறலாம்.
செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய்என் கிளவி ஆகிடன் உடைத்தே (450)
5. கால அடிப்படையில் தோன்றும் வேறுபாடுகள் (Historical changes)
மொழி காலப்போக்கில் மாறும் தன்மை உடையது. இத்தகைய மாற்றங்கள் சொற்களில் ஏற்படலாம். ஒலியன், உருபன் அமைப்பில் தோன்றலாம். தொடர் அமைப்பிலும் பொருள் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படலாம். கழகம் என்ற சொல்லுக்குப் பழைய பொருள் சூதாடுகின்ற இடம் என்பது. தற்போது கழகம் என்பது ஓர் அமைப்பைக் குறிக்கின்றது. நாற்றம் என்ற சொல் வாசனையைக் குறித்து தற்போது ‘தீயவாசனை’யைக் குறிக்கிறது. காலந்தோறும் மொழியில் தோன்றும் மாற்றங்களை ஏற்றுக் கொள்க என்று தொல் காப்பியர் குறிப்பிடுகிறார்.
கடிசொல் இல்லைக் காலத்துப் படினே (452)
அவ்வக் காலத்திற்கு ஏற்ப சொற்கள் புதிதாகத் தோன்றி வழக்கிற்கு வரும். அப்பொருத்தமான சொற்களை நீக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் சகரத்தை மொழி முதலாகக் கொண்ட சொற்கள் இல்லை. ஆயினும் பின்னர்த் தோன்றிய சம்பு, சட்டி, சண்டை, சமர் என்பவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றைப் போலப் பழங்காலத்தில் வழங்கி இப்போது வழங்காதவற்றை நீக்கிவிடவேண்டும். அவை அழான், புழான் போன்றவை.
இச்சூத்திரத்தின் வாயிலாகக் காலப்போக்கில் மொழியில் மாற்றங்கள் தோற்றம் என்ற உண்மையைக் கூறியுள்ளார். வரலாற்று ரீதியாக மொழியை ஆய்வதற்கு அடிப்படையாக இந்நூற்பா விளங்குகிறது.
கடன்பெறுதல்- சொற்களஞ்சியம் பெருகுதல்
காலந்தோறும் மொழி மாறும் தன்மை யுடைத்து என்பதனை மேலே கண்டோம். இத்தகைய மாற்றத்திற்கு ஒரு முக்கியமான காரணம் மொழித் தொடர்பு (language contact). ஒரு மொழி பிற மொழியோடு தொடர்பு கொள்வதை மொழித் தொடர்பு எனலாம். மொழித் தொடர்பின் காரண மாகப் பிறமொழிச் சொற்கள் அம்மொழியில் புகுந்துவிடும். இதனைக் கடன்பெறுதல் (linguistic borrowing) என்று மொழியியலார் கூறுவர்.
கடன் தரும் மொழியை donor language என்பர். கடன் பெறுதல் எல்லா மொழிகளிலும் இயல்பாக நடைபெறுகின்ற ஒரு மொழிச் செயல்பாடு. கடன் வாங்கிய மொழி அச்சொற்களைத் திருப்பித் தர வேண்டிய அவசியமில்லை. கடன்தரும் மொழியும் அச்சொல்லை இழந்து விடுவதுமில்லை. பொது வாக மொழிகள் தேவை காரணமாகவும், மதிப்பின் காரணமாகவும் கடன் சொற்களைப் பெற்றுக் கையாள்கின்றன. சொற்களை எல்லையற்று, அளவுக் கதிகமாகக் கடன் பெறுவதால் கடன்பெறும் மொழியில் மாற்றங்கள் தோன்றும். ஒலியமைப் பிலும், சொல்லமைப்பிலும் மாற்றங்கள் தோன்றலாம்.
தமிழ் மொழியில் ஸ், ஷ், ஹ், ஜ், க்ஷ் ஆகிய ஐந்து ஒலியன்களும் உபரி ஒலியன்கள் என்பர். இவ்வொலியன்கள் தமிழ் மொழிக்குரியவை அல்ல. இவ்உபரி ஒலியன்கள் தமிழில் வழங்கக் காரணம் என்ன? வடமொழி, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களைக் கையாள்வதால்தான்.
அவ்வாறு பிறமொழிச் சொற்களைப் பயன் படுத்தும்போது தமிழ் மொழியின் ஒலியன் அமைப்பிற்கேற்ப அவற்றைப் பயன்படுத்துவர். விஷம் என்ற சொல்லை விடம் என்றும், பாஷை என்ற சொல்லை பாடை என்றும் மாற்றி வழங்குவர். நிருத்ய என்ற சொல்லை நட்டம் என்று தமிழ்ப் படுத்துவர். இவற்றைச் சொந்த ஒலியமைப்புக் கேற்ப மாற்றுதல் என்பர் (Phonological nativization). வெள்ளம்போல் பிறமொழிக் கூறுகள் நம் மொழிக்குள் வந்துவிடாமல் தடுக்க எடுத்துக் கொண்ட முன்முயற்சிதான். இதனை மொழித் திட்டமிடுதலின்கண் (language planning) வைத்துக் கூறுவர்.
இத்தகைய மொழித் திட்டமிடுதல் குறித்தும் தொல்காப்பியர் எச்சவியலில் குறிப்பிடுகிறார்.
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (40)
வடசொல்லாகிய சொல் வடவெழுத்துக் களின் நீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தான் இயன்ற சொல்லாம். இங்குத் தொல் காப்பியர் வட சொற்களுக்கே விதி வகுத்திருப் பினும் வடமொழி தவிர வேறெந்த மொழியாக இருப்பினும் அச்சொற்களையும் தமிழ் மொழியின் ஒலிச் சீர்மைக்கேற்ப மாற்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கொள்ள வேண்டும்.
6. நடைவேறுபாடுகள் (Stylistic variations)
தமிழ்மொழி இரட்டை வழக்குகளையுடைய மொழி. பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் அதன் இரு வழக்குகளாகும். ‘ஒரு மொழியின் இரு கிளை மொழிகள் ஒரே சமயத்தில் நிரந்தரமாக ஒன்றுக் கொன்று துணையாகவும், தனித்தனி சமூகச் சூழ்நிலைகளில் பயன்படுமானால் அந்த நிலையை இருநிலை வழக்கு (Dialossia) எனலாம் (சீனுவாச வர்மா, 1980: 89). இருநிலை வழக்கு என்ற சொல்லை இரட்டைநிலை வழக்கு என்று கூறுவோம். நீண்ட காலமாக இலக்கியப் பாரம் பரியம் கொண்ட மொழியில், இரட்டை நிலை வழக்கு இருக்கும்.
பெரும்பான்மையான மக்கள் பேச்சுமொழியைப் பேசு, சிறுபான்மை மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கும் நிலையில் இரட்டை வழக்குநிலை தோன்றும். எழுத்து வழக்கும், பேச்சுமொழிக்கும் உள்ள வேறுபாடுகள் அதிகரித்தும், ஒவ்வொரு வகையும் தத்தமக்கெனப் பயன்படும் காலமும், இடமும் வெவ்வேறாக இருக்கும் (சீனுவாசவர்மா, 1980: 90). தற்காலத் தமிழ் மொழி இரட்டை வழக்குகளைக் கொண்டு உள்ளது. எழுத்து வழக்கும் பேச்சு வழக்கும் இவ்விரு வழக்குகளும் சமூகத்தில் இருவேறு சூழ்நிலை களில் பயன்படுத்தப்படுகின்றன. எழுத்து வழக்கு பயன்படும் சூழலில் பேச்சுவழக்கு பயன்படுத்தக் கூடாது. ஒன்று முறையான (formal style) சூழலிலும் மற்றொன்று சாதாரண (informal style) சூழலிலும் பயன்படுத்தப்படும்.
உலக வழக்கும் செய்யுள் வழக்கும்
தொல்காப்பியர் உலக வழக்கு, இலக்கிய வழக்கு ஆகிய இரண்டின் அடிப்படையில் இலக்கணம் கூறுவதாகப் பனம்பாரனார் கூறுகிறார். தொல் காப்பியரும் தம் இலக்கணத்தில் உலக வழக்கை வழங்கில் மருங்கு (22) என்றும், இலக்கிய வழக்கைச் செய்யுள் வழக்கு என்றும் கூறுமிடங்கள் பல (946). “அவர் உலக வழக்கு என்பது, உலகிலுள்ள தரமான பேச்சுவழக்கு-உயர்ந்தவர் வழக்கு- பிழையற்ற நல்ல வழக்காறு ஆகும். கொச்சை மொழி, குறுமொழி, சிதைவுற்ற வழக்கு, பிழைபட்டவை ஆகியவற்றை அவர் உலக வழக்கு என ஏற்கவில்லை” (தமிழண்ணல், 2009: 20).
அவர் இரு வகையான வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கணம் படைத்துள்ளார் என்பது தெளிவு. எச்சவியல் இறுதி நூற்பாவிலும் இருவகை வழக்குகளைச் சுட்டிக்காட்டி சொல்லதி காரத்தை நிறைவு செய்கிறார்.
செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
மெய்பெறக் கிளந்த கிளவி எல்லாம்
பல்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது
சொல்வரைந்து அறியப் பிரித்தனர் காட்டல் (463)
தொல்காப்பியர் எச்சவியலில் பல்வேறு மொழி வேறுபாடுகளை (language variations) விவரிக்கிறார். நில அடிப்படையில் மொழி வேறு படுதல்; சமுதாயப் படிநிலைகளின் அடிப் படையில் மொழி வேறுபடுதல்; நடையியல் அடிப் படையில் மொழி வேறுபடுதல் ஆகியவற்றை விவரிக்கிறார்.
பார்வை நூல்கள்
- அகத்தியலிங்கம், ச., தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம் (2001).
- சீனிவாசவர்மா, கோ., கிளைமொழியியல், அனைத் திந்தியத் தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலைநகர், (1977).
- சீனிவாசவர்மா, கோ., இருமொழியம், அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலைநகர், (1977).
- தமிழண்ணல், தொல்காப்பியர், சாகித்ய அகாடெமி வெளியீடு, புதுதில்லி (2009).
- தொல்காப்பியம் இளம்பூரணம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (1923).
- தொல்காப்பியம்-சொல்லதிகாரம் மூலமும் உரையும், கதிர் பதிப்பகம், திருவையாறு, (2011).
- தொல்காப்பியம்- நச்சினார்க்கினியம், கழக வெளியீடு (1952).